Wednesday, January 25, 2012

Lesson 165: Obligatory works should not be given up (Brahma Sutra 4.1.16-17)


பாடம் 165: ஞானி தன் கடமைகளை தொடரவேண்டும்
பாடல் 493 – 494 (IV.1.16-17)


வாழ்வை நான்கு கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகளை கொடுத்துள்ள வேதம், மனிதர்கள் ஞானம் பெற்றபின்னும் இந்த கடமைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்று சொல்வதன் நோக்கத்தை இந்த பாடம் தெளிவு படுத்துகிறது.

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஞானிக்கு இருப்பதால் வருவது வரட்டும் என்று தன் கடமைகளை செய்யாமல் சோம்பியிருக்க மாட்டான். ஞானி என்பவன் சுகவாழ்வை துறந்து பிச்சைக்காரனைப்போல் இருக்க வேண்டும் என்ற மற்றவர்களின் எதிர்பார்ப்பை தவறு என்று சுட்டிக்காட்டவே வேதம் ஞானிகளுக்கும் கடமைகள் உண்டு என்று எடுத்துரைக்கிறது.

இன்பத்தின் உண்மையான இருப்பிடத்தை அறிந்துகொண்டபின் உலகில் அதை ஞானி தேடமாட்டான். எனினும் அவன் தொடர்ந்து உழைத்து பெரிய வீடு, சொகுசான வாகனம், பல பணியாளர்கள், உலகம் முழுவதும் உல்லாசபயணம் என வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வதை ஞானம் தடைசெய்யாது. இதுபோன்ற வசதிகள் இல்லாமல் போனால் என்ன ஆகும் என்ற கவலையில்லாமல் செல்வம் இருக்கும்வரை அனுபவிக்கும் திறன் ஞானிகளுக்கு மட்டுமே உண்டு. எனவே ஞானம் பெற்றபின் கடமைகளை தொடர்ந்து செய்யவேண்டும் என்று வேதம் பரிந்துரை செய்யாவிட்டாலும், ஞானி தன் இயல்புகளுக்கேற்ற செயல்களை தர்மமான முறையில் செய்வதை நிறுத்திக்கொள்ள மாட்டான்.

வசதியாக வாழ பணம், துன்பகலப்பில்லாத இன்பத்துடன் வாழ ஞானம் ஆகிய இரண்டும் அனைவருக்கும் தேவை. பணத்தால் இன்பத்தை வாங்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் வேதம் படித்து ஞானம் பெற முயல்வதுபோல் ஞானத்தால் வசதிகளை வாங்க முடியாது என்பதை உணர்ந்த ஞானி தொடர்ந்து தன் கடமைகளை செய்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்வான்.

கடமைகளை செய்ய காரணம்

1. ஞானம் பெற்றபின்னும் கடமைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வேதம் கட்டளையிட்டிருப்பதன் காரணத்தை அறிந்த ஞானிகள் வாழ்வில் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் பாத்திரங்களின் கடமைகளை சரிவரசெய்ய முயற்சிப்பார்கள்.

2. இன்பதுன்பங்களை சரியான வகையில் ஏற்றுக்கொள்ள உதவும் ஞானத்தை அடைந்தபின் உலகவிவகாரங்களில் சம்பந்தப்படாமல் ஒதுங்கிவாழ்வதில் பயன் எதுவும் இல்லை. எனவே பெற்ற ஞானத்தின் பலனை முழுவதும் அனுபவிக்க ஞானிகள் தொடர்ந்து தங்கள் கடமைகளை செய்வார்கள்.

3. வேதம் தரும் ஞானத்தின் பலனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க அவர்களைப்போல் உலகவாழ்வில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக ஞானிகள் வாழ்வது அவசியம்.

4. ஞானியின் மனதில் தோன்றும் ஆசைகள் துன்பத்திற்கு வழிவகுக்காது எனினும் அவன் தொடர்ந்து கடமைகளை செய்ய அவை தூண்டுகோலாய் அமையும்.

5. மேற்படிப்புக்காக வேலையை விடுவதைப்போல ஞானம் பெறுவதற்காக ஒரு சிலகாலம் உலக வாழ்விலிருந்து ஒதுங்கி துறவறம் மேற்கொள்வது தவறு அல்ல. ஆனால் படித்துமுடித்ததும் மறுபடி வேலைசெய்யத்துவங்குவது போல ஞானம் பெற்றதும் மறுபடி கடமைகளை தொடரவேண்டும்.

6. உடலும் மனமும் தொடர்ந்த மாற்றத்திற்குட்பட்டவை என்றறிந்த ஞானிகள் கடமைகளை செய்யாமலிருக்க இயலாது என்று அறிவர். ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய தனிமங்களின் சேர்க்கை விகிதப்படி மனமும் உடலும் செயல்படுவது அவசியம் என்பதால் ஞானிகள் தொடர்ந்து தங்கள் கடமைகளை செய்வார்கள்.

7. உயிருடன் இருக்கும் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து கடமைகளை செய்வது அவசியம்.

கடமைகளை செய்யும் விதம்

1. பற்றுடையோர்கள் பலனை எதிர்பார்த்து கடமைகளை செய்வார்கள். முக்திவிழைவோர்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமைகளை செய்வதனால் மனம் பக்குவமடையும் என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளை செய்வார்கள். ஞானிகள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் கடமைகளை செய்வார்கள்.

2. திறமையுடனும் சுறுசுறுப்பாகவும் கடமைகளை செய்வதன் மூலம் பலன்களை விரைவில் அடைந்துவிடலாம் என்று மற்றவர்களைப்போல் அவசரப்படாமல் தன் இயல்புக்கு ஏற்ற விதத்தில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனோபாவத்துடன் ஞானிகள் தங்கள் கடமைகளை செய்வார்கள்.

3. கடமைகளை சரிவரச்செய்ய முயல்வது மட்டுமே கடமை செய்வதன் பலன் என்று அறிந்த ஞானிகள் செய்த செயல்களை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று வருந்த மாட்டார்கள்.

4. எவ்வித பலனையும் எதிர்பார்த்து ஞானி செயல்செய்வதில்லை என்பதால் யாருக்கும் எவ்விதத்திலும் துன்பம் தரும் செயல்களை ஞானி செய்யமாட்டான்.

5. தன் கடமைகளை செய்வதால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும் என்றாலும் அவர்களது துன்பத்தை குறைக்க அவன் முயல்வானே தவிர தன் கடமைகளை ஞானி சரியாகச்செய்யாமல் விட்டுவிடமாட்டான்.

6. வாழ்க்கை வெறும் கனவு என்றாலும் மரணம்வரை இந்த கனவு தொடரும் என்று உணர்ந்த ஞானி சமூகத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு சாதாரண மனிதன் போல் தன் கடமைகளை செய்வான்.

7. தன் முயற்சியில் தோல்வியுற்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் ஞானிக்கு இருக்காது என்பதால் மிகப்பெரிய சமூகநலத்திட்டங்களை ஏற்று நடத்த அவன் தயங்குவதில்லை.

கடமைகளை செய்வதன் பலன்

1. ஞானியின் பார்வையில் செயல்கள், கடமைகள் மற்றும் பலன்கள் ஆகியவை வெறும் கற்பனைகளே. ஆயினும் அவன் தன் கடமைகளை சரியாக செய்வதாக காட்டிக்கொள்வதனால் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள அங்கத்தினனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறான்.

2. ஞானம் பெற்றபின் ஞானி தொடர்ந்து கடமைகளை செய்து பணம் சேர்ப்பது சமூக நலனுக்கு பெரிதும் பயன்படும். கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் போன்ற சமூகத்தேவைகளை பூர்த்திசெய்யும் விதத்திலேயே ஞானியின் செல்வம் பெரும்பாலும் செலவழிக்கப்படும்.

3. உலகப்பொருள்களை துன்பம் கலவாத இன்பத்துடன் அனுபவிக்க உதவுவதே ஞானத்தின் நோக்கம். கடமைகளை செய்வதன் மூலம்தான் உலக இன்பங்களை பெறமுடியும் என்பதால் ஞானத்தின் பலனை முழுவதும் அனுபவிக்க பெரிய குடும்பம், நண்பர்கள் மற்றும் செல்வசெழிப்பு ஆகியவை மிகவும் அவசியம்.

4. மற்றவர்களை சார்ந்திராமல் தன் திறமைகளை கடமைகளாக வெளிப்படுத்தி ஞானி தன் உடல் மற்றும் மனதின் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளுவான்.

5. பலனில் பற்றில்லாததால் இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும் துணிவுடன் செயல்படும் ஞானியைப்போல் தாங்களும் மாறவேண்டும் என்ற முயற்சி பற்றுடையோர்களை நல்வழிப்படுத்த உதவும்.

6. கடமையுணர்வுடன் ஞானி செயல்படுவதை பார்க்கும் முக்திவிழைவோர்கள் உலக வாழ்விலிருந்து ஒதுங்காமலேயே ஞானம் பெறமுடியும் என்ற நம்பிக்கையை பெறுவார்கள்.

7. ஞானி குருவாக தனது கடமைகளை செய்தால் மட்டுமே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வேதம் தரும் வழிமுறைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.  

முடிவுரை :

காண்பது கனவு என்று தெரிந்தாலும் கனவு முடியும்வரை கடமைகளை செய்யாமல் இருக்க முடியாது என்பதை ஞானி அறிந்திருப்பதால் ஞானம் பெற்றபின்னும் அவன் தொடர்ந்து தன் கடமைகளை செய்வான். உலகில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் ஆதாரம் எது என தெளிவாக அறிந்துள்ள ஞானி இவ்வுலகம் படைக்கபட்டதன் நோக்கத்தை பூர்த்திசெய்யும் விதத்தில் தன் கடமைகளை முறையாக செய்வான். தான் உறவாடும் ஒவ்வொரு மனிதரும் அடிப்படையில் தன்னிடமிருந்து வேறுபட்டவரல்ல என்பதை அறிந்த ஞானி இந்த உண்மையை மற்றவர்களுக்கும் உணர்த்தும் விதத்தில் தன் கடமைகளை செய்வான்.

வண்டுகளை ஈர்த்து மகரந்தசேர்க்கை மூலம் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் மலர் மணம் வீசுகிறது என்று முடிவுசெய்வது அறியாமை. மணம் தருவது மல்லிகையின் இயற்கை. மலர்வதற்கு முன்பேயே செடியிலிருந்து அதை பிரித்துவிட்டாலும் அது தன் மணம் தரும் கடமையை செய்யாமல் விடுவதில்லை. அதுபோல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் தன்மைகேற்ற செயல்படுவது அவற்றின் இயற்கை. உலகமே மாயை என்ற உண்மையை உணர்ந்து விட்டால்கூட இந்த இயற்கை நியதி மாறிவிடாது. எனவே ஞானி தன் கடமைகளை செய்வது தடைபடாது. ஞானம் பெற்றுவிட்டால் கடமைகளை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்ற அஞ்ஞானிகளின் கருத்தை மாற்றவே வேதம் ஞானிகள் ஞானம் பெற்றபின்னும் தங்கள் கடமைகளை தொடர்ந்து செய்யவேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

தான் செயல்களை செய்வதாக நினைப்பவன் பற்றுடையோன். செயல்கள் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு என்று எண்ணுபவன் முக்திவிழைவோன். இதுபோன்ற எவ்வித குழப்பமும் இல்லாமல் தனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கடமைகளை தொடர்ந்து செய்பவன் முற்றுணர்ந்தோன்.
 
பயிற்சிக்காக :

1. இன்பமாகவும் வசதியாகவும் வாழ தேவையானவை என்னென்ன?

2. ஞானி கடமைகளை செய்ய காரணங்கள் யாவை?

3. ஞானி கடமைகளை செய்யும் விதம் எவ்வாறு இருக்கும்?

4. ஞானி கடமைகளை செய்வதால் விளையும் பயன்கள் யாவை?

5. மலரின் மணம் பற்றிய உதாரணத்தால் விளக்கப்பட்ட கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. துறவு மேற்கொண்ட பின் ஞானம் பெற்றால் மறுபடியும் இல்வாழ்பருவத்திற்கு திரும்பலாமா?

2. அதிகமான பணம் சம்பாதிக்க செய்யும் முயற்சி நிம்மதியான வாழ்வுக்கு தடையாக இருக்குமா?

Friday, December 23, 2011

Lesson 164: Remnant of karma does not end on gaining knowledge (Brahmasutra 4.1.15)


பாடம் 164: ப்ராரப்த கர்மம் அழிவதில்லை
பாடல் 492 (IV.1.15)

பலபிறவிகளில் சேர்த்துவைத்த சஞ்சித கர்மபலன்கள் மற்றும் இந்தப்பிறவியில் சேர்க்கும் ஆகாமிகர்மபலன்கள் ஆகிய இரண்டும் ஞானம் பெற்ற மறுகணம் முழுவதும் அழிந்துவிடும் என்று கூறும் வேதம் ப்ராரப்த கர்மபலன்கள் மட்டும் ஞானத்தால் அழியாது என்று கூறுவதன் பொருளை இந்தப்பாடம் ஆராய்கிறது.

ஞானம் பெற்றதும் பாவபுண்ணியங்கள் அழிவதற்கான காரணங்கள் அனைத்தும் ப்ராரப்த கர்மங்களுக்கும் பொருந்தும் என்பதால் அவையும் அழியவேண்டும் என்று தர்க்கத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்பது தவறு. தர்க்கத்தை அறிவியல் அல்லது வேதம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை சாராமல் தனித்து பயன்படுத்தினால் அதற்கு வறட்டு தர்க்கம் என்று பெயர். வறட்டு தர்க்கத்தால் எதையும் தீர்மானிக்க முடியாது. கர்மபலன்கள் என்ற கருத்து வேதத்தில் மட்டுமே விளக்கப்படுவதால் ப்ராரப்த கர்மம் ஞானம் பெற்றவுடன் அழியாது என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள தர்க்கத்தை உபயோகபடுத்தவேண்டுமே தவிர மறுக்க உபயோகபடுத்தகூடாது.

வில்லிலிருந்து விடுபட்ட அம்பு இலக்கில் பாய்வதை தடுக்க முடியாது. அது போல இவ்வுலகில் மனிதனாக பிறக்க காரணமான ப்ராரப்த கர்மங்கள் பலனை கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் அவற்றை திடீரென்று அழித்துவிடமுடியாது. எனவே மற்ற மனிதர்களைப்போல ஞானியும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்ற வேதம் தரும் விளக்கம் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒத்துப்போகிறது. இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள்கூட புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதை நாம் அறிகிறோம்.

ப்ராரப்த கர்மத்தின் பலனாகத்தான் ஒரு ஞானி மனிதனாக பிறந்து வளர்ந்து முடிவில் ஞானத்தை அடைகிறான் என்பதால் ஞானம் சஞ்சித ஆகாமி கர்ம பலன்களை அழிப்பதுபோல ப்ராரப்த கர்மத்தை அழிப்பதில்லை. ஒருவேளை ப்ராரப்த கர்மமும் ஞானம் பெற்றவுடன் மறைந்துவிட்டால் ஞானிகள் தொடர்ந்து உயிரோடிருக்க முடியாது. வேதம் படிப்பது தற்கொலை செய்துகொள்வதுபோல் என்றால் யாரும் ஞானம் பெற முயற்சிக்க மாட்டார்கள். மேலும் ஞானம் பெற்றவர்கள் இல்லையென்றால் ஆசிரியர்களே இருக்கமாட்டார்கள். எனவேதான் ப்ராரப்த கர்மம் ஞானம் பெற்றவுடன் அழிவதில்லை.

ப்ராரப்த கர்மம் என்பது சஞ்சித கர்மங்களின் ஒருபகுதி என்பதால் அதுவும் ஞானம் பெற்றவுடன் அழியத்தான் வேண்டும். ஆனால்  அது ஏற்கனவே பலன்களை கொடுக்க ஆரம்பித்துவிட்ட காரணத்தால் மின்சார இணைப்பை துண்டித்தபின்னும் சிலகாலம் தொடர்ந்து சுழலும் மின்விசிறிபோல சிறிது காலம் செயல்பட்டு பின் முற்றுணர்ந்தோர்களின் மரணத்தில் முழுதும் அழியும். எனவே ஞானத்தால் கர்மம் அனைத்தும் அழியும் என்ற வேதத்தின் கருத்து பொய்ப்பதில்லை.

ஞானியும் மனிதனே

ஞானி என்பவன் தான் யார் என்று அறிந்த ஒரு சாதாரண மனிதன். தொடர்ந்து ஓடும் ஆறு நிலையாக இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். அது போல் மனிதனின் உடலும் மனமும் தொடர்ந்து மாறி ஆரோக்கியமாக இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த இயற்கையான மாற்றத்தின் ஒருபகுதியாக ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று ஆகிய இரண்டும் உடலுக்குள் கலந்து அதை உயிருடன் வைத்திருக்க உதவும் அதே வேளையில் பல்வேறு நோய்கள் ஏற்படவும் அவை காரணமாயிருக்கின்றன. மேலும் செயல்கள் செய்யும்பொழுது ஏதாவது விபத்து ஏற்பட்டு உடல் காயப்படலாம். நோய்கள், விபத்து ஆகியவை தவிர வயதாகும் காரணத்தால் உடலில் இயலாமை ஆகிய துன்பங்கள் மனிதர்கள் அனைவரையும் பாதிக்கும். ஞானிகள் இதற்கு விதிவிலக்கல்ல.

ஐம்புலன்கள் மூலம் உலகைபற்றிய எண்ணங்கள் மனதில் ஏற்படும்பொழுது அவை பல்வேறு வகையான உணர்ச்சிகளாக மாறுவதை தவிர்க்க முடியாது. அன்பும் பாசமும் சிலசமயங்களில் எரிச்சல் அல்லது கோபமாக மாறலாம். இதுபோன்று மனதில் ஏற்படும் துன்பங்களையும் முழுவதுமாக யாராலும் தவிர்க்க முடியாது.

சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள முயல்வதுபோல சரியான அறிவு மற்றும் தியானம் மூலம் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயலலாம். ஆனால் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வயதாகும் காரணத்தால் நமக்கு முழுவெற்றி கிடைக்காது. புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பழைய கருத்துக்களை உதறித்தள்ளும் சக்தி மனதிற்கு இருக்காது. புதுமையாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற இளமை துடிப்பு வயதானபின் குறைந்து மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

துன்பங்களுக்கு காரணம்

உடலின் உபாதைகளையும் மனதின் சோகங்களையும் இயற்கையின் மாற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்காமல் பிரச்சனைகள் என்று கருதி அவற்றை முழுவதுமாக நீக்க நினைத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடியும். உடல் பருமன் அதிகரித்தல் அல்லது அடிக்கடி கோபம் ஏற்படுதல் என்பது போன்ற மாற்றங்களை தவிர்க்க தேவையான செயல்களை செய்வது தவறு அல்ல. ஆனால் என்றேனும் ஒருநாள் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பு தவறு.

உடலும் மனமும் மாற்றங்களுக்கு உட்பட்ட மாயை என்றும் மாறாத பரமன் நான் என்றும் அறியாமல் இருப்பதே துன்பங்களுக்கு ஒரே காரணம். இந்த அறிவு ஏற்பட்டதும் பிரச்சனைகளை துன்பம் என்று கருதாமல் இயற்கையின் மாற்றங்கள் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும். வெறும் கயிற்றை பார்த்து பாம்பு என பயந்தது குறித்து வெட்கம் ஏற்படுவதுபோல மாற்றங்களை துன்பங்கள் என நினைத்து வாழ்வில் துன்பங்களே இருக்க கூடாது என்று முயற்சி செய்த அனுபவம் நமக்கு வெட்கத்தை ஏற்படுத்தும். மாற்றங்கள்தான் படைப்பின் இயல்பு என்றும் மாற்றங்கள் என்றால் ஏற்ற இறக்கங்கள் என்றும் அறிந்தபின் வேதம் இந்த ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் ப்ராரப்த கர்மம் என்று கூறும் விளக்கம் நமக்கு அனாவசியம். எனவே ஞானம் பெற்றவுடன்  ப்ராரப்த கர்மபலன்கள் அழிவதில்லை என்றாலும் ப்ராரப்த கர்மம் என்று ஒன்று இருக்கிறது என்ற நினைவே மனதில் இருக்காது. ஞானம் பெறாத மற்றவர்கள் ஞானிக்கும் துன்பம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி ஞானமே தேவையல்லை என்று வாதாடுவதை தடுப்பதற்காகவே ப்ராரப்தம் என்ற கருத்தை அறிமுகபடுத்தி ஞானிகள் வாழ்வில் ஏற்படும் துன்பமான நிகழ்வுகளுக்கு வேதம் விளக்கம் தருகிறது.

துன்பங்களிலிருந்து விடுதலை

உடலும் மனமும் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை உணர்ந்த ஞானி அவற்றிற்கு ஏற்படும் துன்பங்களை மட்டும் உண்மை என்று கருத வாய்ப்பில்லை. எனவே பற்றுடையோர்களும் முக்திவிழைவோர்களும் மட்டும் துன்பங்களிலிருந்து விடுதலை வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். கனவில் ஏற்படும் பசியை தீர்க்க கனவுலகில் உணவை தேடுவதுபோல உலக துன்பங்களை தீர்க்க ஓடியாடி வேலை செய்வது அனைவருக்கும் பொது என்றாலும் முற்றுணர்ந்தோர் மட்டும் இவற்றை துன்பம் என்று கருதாமல் தேவையான செயல்களை செய்வார்கள்.

செயலும் துன்பமும்

மலைப்பாதையில் பயணம் செய்யும் வாகனம் தொடர்ந்து நகர்வதை பாதையின் சாய்மானத்தைப்பொறுத்து ஏறுகிறது அல்லது இறங்குகிறது என்று குறிப்பிடுவது போல பிரபஞ்சத்தின் தொடர்ந்த மாற்றத்திற்கு காரணகாரியங்களை கற்பித்து மக்கள் இன்பத்தை நாடியும் துன்பத்தை தவிர்க்கவும் செயல்கள் செய்கிறார்கள் என்ற கற்பனை அனைவரது மனதிலும் நிலவுகிறது. ஞானம் பெற்றபின் காரண காரியம் என்பது கற்பனை என்று புரிந்துவிடுவதால் தொடரும் மாற்றங்களுக்கு செயல்கள் என்ற பெயர் வைக்கவேண்டிய அவசியம் ஞானிகளுக்கு இல்லை. உடலே கற்பனை என்பதால் அதில் ஏற்படும் நோயை கற்பனையான மருத்துவம் மூலம் குணபடுத்த ஞானிகள் செய்யும் முயற்சி பொய்யான செயல்களாகும். நோய் குணமடைந்தாலும் ஆகாவிட்டாலும் செயல்கள் தொடரும் என்பதை உணர்ந்த ஞானிகள் துன்பபடுவதில்லை. ஆனால் பற்றுடையோர்களின் பார்வையில் செயல்களும் அவற்றின் பலன்களும் உண்மையாக தெரிவதால் ஞானிகளின் துன்பத்திற்கு ப்ராரப்த கர்மம் காரணம் என்ற விளக்கம் தேவைபடுகிறது.

முக்திவிழைவோர்கள் இல்லாத துன்பத்திலிருந்து முழுவதும் விடுபடுவதில்லை. ஏனெனில் ப்ராரப்த கர்மம் உண்மையென்றும் அதன் பலனை அனுபவிக்காமல் தப்பிக்கமுடியாது என்றும் பலகாலம் நம்பிசெயல்பட்ட காரணத்தால் அவை பொய் என்று தெரிந்தபின்னும் துன்பங்கள் மறைவதில்லை. பல வருடங்கள் தன்னிடம் உழைத்த ஒரு வேலைக்காரனை திருடன் என்று தவறாக குற்றம்சாற்றிவிட்டால் உண்மை தெரிந்ததும் மனதில் ஏற்படும் குற்றவுணர்வை தவிர்க்க முடியாது. உண்மை தெரிவதற்கு எவ்வளவு காலமானது என்பதை பொறுத்து குற்ற உணர்வு மனதில் குடியிருக்கும் காலமும் அதிகமாகும். அதுபோல எவ்வளவு காலம் ப்ராரப்த கர்மம் நம் துன்பங்களுக்கு காரணம் என்று தவறாக நினைத்து கொண்டிருந்தோம் என்பதை பொறுத்து நாம் செயல்கள் எதையும் செய்வதேயில்லை என்ற உண்மை மனதில் நிலைக்க காலமாகும். கயிற்றில் பாம்பை பார்த்து பயந்ததால் ஏற்பட்ட உடல் நடுக்கம் அது கயிறு என்று தெரிந்த மறுகணம் நின்றுவிடுவதில்லை. அது போல ப்ராரப்த காரணம் நமது துன்பங்களுக்கு காரணமல்ல என்று தெரிந்ததும் துன்பங்கள் மறைவதற்கு சிலகாலம் ஆகலாம். போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னும் திடீரென்று பட்டாசு வெடித்தால் துப்பாக்கியால் எதிரி சுடுகிறான் என்ற பயம் மக்களிடையே தொடர்வதுபோல் ஞானம் ஏற்பட்ட பின்னும் ஒருசிலகாலம் உலக மாற்றங்கள் முக்திவிழைவோர்களுக்கு துன்பத்தை தரலாம்.

முடிவுரை :

காண்பது கனவுதானே என்று கண்ணில் பட்ட பெண்மேல் கைவைத்து விட முடியாது. அப்படி கை வைத்தால் அதன் விளைவுகளை சந்திக்க தயாராய் இருக்க வேண்டும். கனவு போலன்றி இவ்வுலக நிகழ்வுகள் அனைத்தும் ஒரு விதிமுறையை பின்பற்றி மனிதன்தான் செயல்கள் செய்து அதன் பலனை அனுபவிக்கிறான் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த பிரபஞ்சம் என்னைச்சார்ந்து இருக்கிறது என்றாலும் எதையும் கட்டுபடுத்தும் சக்தியோ உலக நிகழ்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியோ எனக்கு கிடையாது. எதனுடனும் சம்பந்தபடாமல் நடக்கும் நாடகத்தை பார்க்க மட்டுமே முடியுமே தவிர என் உடலையும் மனதையும் பயன்படுத்தி நான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் செயல்பாடுகளைகூட என்னால் தீர்மானிக்க முடியாது. நான் உருவாக்கிய உலகில் வந்து போகும் பாத்திரங்களில் ஒன்றான என் உடல் உலகிலிருந்து வேறுபட்டு தனிசுதந்திரத்துடன் இயங்குகிறது என்ற தவறான எண்ணம் என் மனதிலிருந்து அகன்றதும் மனதில் தோன்றும் துன்ப உணர்வுகள் என்னை பாதிக்காது என்ற அறிவு ஏற்படும். இந்த அறிவு ஏற்படும் வரை துன்பத்திற்கு காரணம் என்ன என்ற தேடலும் துன்பத்தை அகற்றும் வழி என்ன என்ற தேடலும் எண்ணஓட்டங்களாக மனதை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும்.

என்றும் இருப்பது நான் மட்டும்தான். இடம், காலம், பொருள் ஆகிய மூன்றும் என்னை ஆதாரமாககொண்டு இருப்பதுபோல் தோன்றும் ஒளி-ஒலிகாட்சி. இந்த காட்சியில் தனித்தனி மனிதர்களையும், செயல்களையும் கற்பனை செய்துகொண்டு துன்பபடுபவர்களுக்கு கர்மபலன்கள் என்ற கருத்தை வேதம் உபதேசிக்கிறது. ஞானம் பெற்றபின்னும் ப்ராரப்த கர்மபலன்கள் அழியாது என்பதால் வாழ்வின் ஏற்றஇறக்கங்கள் ஞானியை பாதிக்கும் என்ற கருத்தையும் கூறுகிறது. ஆனால் காண்பவன், காணப்படும் பொருள், காட்சி ஆகிய மூன்றும் ஒன்றுதான் என்றறிந்த முற்றுணர்ந்தோர்கள் எப்பொழுதும் துன்பபடுவதில்லை.


பயிற்சிக்காக :

1. வறட்டு தர்க்கம் என்றால் என்ன?

2. ஞானம் ஏற்பட்டதும் ப்ராரப்த கர்மம் அழியாமல் இருப்பதன் காரணங்கள் யாவை?

3. உடலின் ஆரோக்கிய குறைவுக்கு என்ன காரணம் என்றும் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்குக.

4. மனதின் ஆரோக்கிய குறைவுக்கு என்ன காரணம் என்றும் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்குக.

5. துன்பங்களுக்கு காரணம் என்ன?

6. துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

7. செயலுக்கும் துன்பத்திற்கும் உள்ள உறவு என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஞானிக்கு ப்ராரப்த கர்மம் உண்டா?

2. உலகம் ஒரு ஒளி-ஒலி காட்சி என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் சோதனைகள் நிரூபணம் செய்திருப்பதை ஆராய்க.

3. பாடம் 88ல் கர்மவினைகளை பற்றி கொடுக்கப்பட்ட அறிமுகத்தையும் பாடம் 146ல் உள்ள விளக்கங்களையும் மீண்டும் படிக்கவும்.

Monday, December 12, 2011

Lesson 163: Causeless Happiness (Brahma Sutra 4.1.14)


பாடம் 163: ஆனந்தமாக இருக்க புண்ணியம் அவசியமில்லை
பாடல் 491 (IV.1.14)

ஞானம் பெற்றபின் கர்மபலன்கள் அழிந்துவிடும் என்பதால் பாவங்களின் பலன்கள் மட்டுமின்றி புண்ணியங்களின் பலன்களையும் அனுபவிக்க முடியாது. ஆயினும் முற்றுணர்ந்தோன் தொடர்ந்து ஆனந்தமாக இருப்பதன் காரணத்தை இந்த பாடம் ஆராய்கிறது.

இனிப்புப்பண்டம் வடிவம், வண்ணம், தன்மை, செய்முறை போன்றவற்றின் அடிப்படையில் வேறுபட்டாலும் தித்திக்கும். அதுபோல அறிவு, குணம், செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டாலும் அனைவருக்கும் ஆதாரமான பரமன் ஆனந்தமயமானவன் என்பதால் அனைவரது இயல்பு நிலையும் இன்பமே. எனவேதான் கோபம், எரிச்சல், பயம் போன்ற துன்ப உணர்வுகள் மனதில் ஏற்படும்பொழுது அவற்றை அகற்றி கூடிய விரைவில் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அனைவரும் விரும்புவர்.

ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிய நிலையில் ஆனந்தமாக இருக்கும் நாம் கனவு காண ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றும் எண்ண ஓட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து துன்பப்படுகிறோம். இந்த எண்ண ஓட்டங்களின் தன்மை விழித்தபின் கூட சிறிதும் மாறுபடுவதில்லை. கனவிற்குள் காணும் மற்றொரு கனவுதான் நிஜம்.

நான் என்னும் உணர்வின் அதிர்வுகளை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான நம் மனம்  ஆழ்ந்த உறக்கத்தின்பொழுது மட்டும் முழுவதும் அடங்கிவிடுகிறது. எனவே நாம் எண்ணங்கள் ஏதுமின்றி அமைதியாயும் இன்பமாகவும் இடம், பொருள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டு எவ்வித மாற்றமுமின்றி இருக்கிறோம். இன்பம் நமது இயல்பு என்பதால் அப்படியே இருந்துவிடாமல் ஒரு உலகத்தை கனவிலும் நனவிலும் நாம் உற்பத்தி செய்கிறோம். இவ்வாறு உலகை உருவாக்குவது நான் என்பது உருவாக்கப்பட்ட மனதிற்கு தெரியாததால் அது எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று உலகம் முழுவது தேடிதிரிந்து கொண்டு இருக்கிறது. உண்மையை அறிந்து கொள்ளும் பக்குவம் வரும் வரை புண்ணியங்கள் செய்வதனால் அமைதியையும் இன்பத்தையும் அடையலாம் என்று அறிவுறுத்தும் வேதம் ஞானம் ஏற்பட்டவுடன் புண்ணியங்களை அழித்துவிடுகிறது.

துன்பங்களிலிருந்து விடுதலை

பிறருக்கு துன்பம் தரும்வகையில் நம் செயல்கள் அமைந்தால் நம்மால் நிம்மதியாக வாழமுடியாது. யாரையாவது திட்டினால் அவர் வருத்தப்படுகிறாரோ இல்லையோ நாம் வருத்தப்படுவது நிச்சயம். நாம் வருத்தப்படாமல் இருக்க வேண்டுமானால் யார் மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள கூடாது. அதே போல் மற்றவருக்கு ஒரு உதவியை செய்தால் அதனால் அவருக்கு நன்மை ஏற்படுகிறதோ இல்லையோ நாம் இன்பமடைவது நிச்சயம். எனவே துன்பத்தை தவிர்த்து இன்பமாயிருக்க பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை செய்ய   வேண்டுமென்று பற்றுடையோருக்கு வேதம் வழிகாட்டுகிறது.

இந்த வழியில் நடந்தபின் கூட முழுவதுமாக துன்பத்தை தவிர்க்க முடியவில்லை என்ற நிலையில் செய்த புண்ணியங்களின் பலனாக மரணத்திற்குப்பின் சுவர்க்கம் போன்ற உயர்லோகங்களில் பிறவியெடுக்கலாம் என்ற நம்பிக்கையை வேதம் வளர்க்கிறது. தேவையான மனப்பக்குவம் ஏற்பட்டபின் பற்றுடையோர்கள் இது போன்ற உலகங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பி வேதம் படிக்கும்பொழுது  முக்திவிழைவோர்களாக மாறுவார்கள்.

அதன்பின் தன் மனம் உடல் உட்பட்ட இந்த உலகமே உண்மையில் இல்லை என்ற அறிந்தபின் செய்த பாவபுண்ணியங்களிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற்று நிம்மதியாக வாழ்வார்கள்.

நம் செயல்களுக்கு காரணம்

ஒரு சிலர் புன்முறுவலுடன் மற்றவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யும் சுபாவம் உள்ளவர்களாகவும் வேறு சிலர் இயற்கையிலேயே சிடுமூஞ்சியாக எது செய்தாலும் மற்றவர்களுக்கு துன்பம் தரும் வகையில் நடந்துகொள்வதற்கும் ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகியவற்றின் கலப்பு விகிதம்தான் காரணம் என்று வேதம் விளக்கம் தருகிறது.  கடிப்பதற்கு கடினமாக இருக்கும் மைசூர்பாக்கு ஏன் குலோப்ஜாமூனை போல மென்மையாக இல்லை என்று கேள்விகேட்பதில் பயனில்லை. சர்க்கரையை அப்படியே சாப்பிடாமல் அதனுடன் வெவ்வேறு பொருள்களை கலந்து பல்வேறு இனிப்பு பண்டங்களாக மாற்றி அதன்பின் உண்பது போல அடிப்படையில் ஆனந்த மயமான பரமன் தனிமங்களின் மாற்றத்திற்கேற்ப பாவபுண்ணியங்கள் இரண்டையும் செய்யும்படியான உயிரினங்களாக உருமாறியுள்ளது.

எவ்வித வேறுபாடும் இல்லாமல் இயந்திரம் போல் மனிதர்கள் இயங்கி அதர்மத்தை தவிர்த்து தர்மமாக வாழ வேண்டும் என்பது படைப்பின் நோக்கம் அல்ல. மனிதருக்கு மனிதர் மாறுபடுவது மட்டுமின்றி ஒவ்வொரு மனிதனும் காலையில் ஒரு மாதிரியும் மாலையில் வேறுமாதிரியும் செயல்படும் வகையில்தான் ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய தனிமங்களின் கலவைவிகிதம் மாறுபடுகிறது. இந்த மாற்றம் ஏற்படுத்தும் இன்ப துன்பங்கள் மனிதனை நான் ஏன் துன்பபடுகிறேன் என்ற சுய ஆராய்ச்சியில் ஈடுபடவைக்கிறது.

தானியிங்கி வாகனத்தில் அமர்ந்து எவ்வித வேலையும் செய்யாமல் பயணம் செல்வது வாழ்க்கையின் நோக்கமல்ல. சாலையில் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்லும் பொறுப்பு இருக்கும் ஓட்டுனர் போல வாழ்வில் சந்திக்கும் மற்ற மனிதர்கள் வெவ்வேறு விதத்தில் செயல்பட்டாலும் அவர்களுடன் சரியாக உறவாடும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. எல்லோரும் நல்லவராக இருந்துவிட்டால் யாராலும் தான் யார் என்ற அறிவைப்பெற முடியாது. மற்றவர்கள் முறைதவறி நடந்தாலும் தன்னை கட்டுபடுத்தி சரியாக அவர்களுடன் உறவாட வைக்கும் முயற்சி நமது மனதை பக்குவபடுத்தி உண்மையை அறிந்துகொள்ளும் நிலைக்கு உயர்த்தும்.

காரணகாரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதனுக்கு அவன் செய்யும் செயல்களின் பலன் அவன் எதிர்பார்த்ததுபோல் இருக்காது என்பதை உணர்த்தவே பாவபுண்ணியங்களின் பலன் எப்பொழுது ஒருவனை வந்துசேரும் என்பதை மனிதன் புரிந்துகொள்ளவே முடியாது என்று வேதம் கூறுகிறது. எனவே இந்தப்பலனை பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்கள் செய்ய ஆரம்பித்தாலும் செயல்களை செய்யும்பொழுது பலனைப்பற்றிய எதிர்பார்ப்பை தியாகம் செய்யவேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. இதன்படி நடப்பவர்கள் கூடியவிரைவில் காரணகாரியம் என்பதே தோற்றப்பிழை என்று அறிந்து கொள்வார்கள். செயலுக்கும் பலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த பின் செயல் செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் செயல் செய்யாமல் இருக்க முடிவதில்லை என்பதை உணரும்பொழுது செயல் மற்றும் பலன் ஆகிய இரண்டும் நமது கற்பனை என்று தெரியவரும். எனவே ஆனந்தமயமானவன் நான் என்று அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நாம் விழித்துக்கொண்டபிறகு நான் அனைத்து செயல்களுக்கும் பலன்களுக்கும் ஆதாரமானவன் என்ற அறிவுடன் செயல்படுவதால் துன்பங்கள் முழுவதும் அழிந்துவிடும்.

விருப்பு வெறுப்புகள்

நாம் எந்த செயலையும் செய்பவன் அல்ல என்ற அறிவு ஏற்பட்டபின் நமது விருப்பு வெறுப்புகள் மறைந்துவிடாது. ஒவ்வொரு மனிதனையும் செய்ய உபயோகித்த மூன்று தனிமங்களின் விகிதத்திற்கு ஏற்ப செயல்பாடுகளும் அதனால் ஏற்படும் விருப்பு வெறுப்புகளும் மாறுபடும். விருப்பு வெறுப்புகள் ஆசைகளாக மாறி நமது செயல்களுக்கு காரணமாய் அமைவது ஞானம் ஏற்பட்டபின்கூட தொடரும். ஏனெனில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களில் காரணகாரியம் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இல்லாத உலகை இருப்பதாக மனித மனங்களை நம்பவைக்க முடியும்.

உலக இயக்கம் என்ற ஒளிகாட்சிக்கு ஒத்துபோவதுபோல் நமது மனதில் ஒலிகாட்சி நடந்தால்தான் வாழ்வு சுவையாயிருக்கும். கதைபுத்தகத்தில் உள்ள பக்கங்களை முன்பின் மாற்றிவைத்து படித்தால் ஒன்றும் புரியாது. எனவேதான் செயல்கள், விருப்புவெறுப்புகள், ஆசைகள், மீண்டும் செயல்கள் என தர்க்கத்திற்கு பொருந்தி வரும் ஒரு காரணகாரியத்தை சித்தரிப்பதன் மூலம் இல்லாத உலகத்தை இருக்கிறது என்று மாயை நம்மை நம்பவைக்கிறது.

உலகம் ஒரு மாயை என்ற அறிவு ஏற்பட்டபின் நமது விருப்புவெறுப்புகள், ஆசைகள் மற்றும் செயல்கள் வேறுமாதிரி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு நமக்கு இருக்காது. ஆசைகள் நிறைவேறாவிட்டால் மனதில் எவ்வித துன்பமும் ஏற்படாது. எனவே முற்றுணர்ந்தோர்களின் மனதில் தோன்றும் விருப்பு வெறுப்புகள் அவர்களுக்கு துன்பத்தை கொடுப்பதில்லை.

ஆசைகள்

ஆசை நிறைவேறினால்தான் இன்பம் என்ற கட்டாயம் இருந்தால்தான் மனிதன் மற்றவர்களை துன்புறுத்தும் செயல்களை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இல்லாத காரணகாரியத்தை இருப்பதாக நம்பவைக்க மனதில் தோன்றும் எண்ண ஒலிதான் ஆசை என்றுணர்ந்தவர்களின் செயல்கள் மற்றவர்களை துன்புறுத்தாது. ஆனந்தம் மனிதனின் இயல்பு என்பதால் ஆசைகளை நிறைவேற தன் இயல்புக்கு மாறாக செயல்பட வேண்டிய அவசியம் முற்றுணர்ந்தோர்களுக்கு இருக்காது. ஆசைகளின் தோற்றம், அவை நிறைவேற செய்யும் செயல்கள் மற்றும் செயல்களின் பலன்கள் ஆகிய அனைத்தையும் அவர்கள் ஆனந்தமாக அனுபவிப்பார்கள்.

நம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுபார்த்தால் ஆசைகள் பற்றிய ஒரு முக்கியமான உண்மை நமக்கு தெரியவரும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு தோன்றிய பற்பல ஆசைகளில் சில நிறைவேறியிருந்தாலும் முடிவில் நாம் பூரணதிருப்தியை அடைந்ததே இல்லை. எனவே ஒரு ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் நமது மனநிலையில் எஞ்சியிருப்பது அதிருப்தி மட்டுமே. ஆசை நிறைவேறிய சிறிது காலத்திற்குள் மற்றொரு ஆசை அந்த இடத்தில் அமர்ந்து நம்மை ஆட்டிவைக்கிறது. நம் மனதில் ஆசை ஏற்படுவதையோ அதை நிறைவேற நாம் செய்யும் செயல்களையோ தவிர்க்க முடியாது. ஆனால் ஆசை நிறைவேறினால் நிலைத்து நிற்கும் அமைதிகிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு என்பது நமது அனுபவத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். எனவே பலன் மீது கவனம் செலுத்தாமல் செயல் செய்தால் எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம்.

மனதில் ஏற்படும் ஆசை, அது நிறைவேற செய்யும் செயல், செயல்களின் பலன் ஆகிய அனைத்தும் நமது வசமின்றி தானே நிகழும் மாற்றங்களின் ஒரு பகுதி என்பதை அறிந்தவர்கள் எப்பொழுதும் குறையாத இன்பத்துடன் வாழ்வார்கள். இந்த சுழற்சியை புரிந்துகொள்ளாதவர்கள் தங்கள் ஆசையை நிறைவேற்ற செய்யும் செயல்கள் அந்த ஆசையை மேலும் வளர்த்து முடிவில்லா பிறப்பு இறப்பு என்ற சுழலில் மாட்டிக்கொண்டு துன்பத்திலிருந்து மீளும் வழியை அறியமாட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே ஆசைகளை நிறைவேற்ற செயல் செய்வதைவிட எதற்காக இந்த சுழலில் அகப்பட்டு திணறுகிறோம் என்ற அறிவை அடைவது மிக முக்கியம். நான் உருவாக்கிய மாயதோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களில் மனதில் ஏற்படும் ஆசைகளும் ஒரு பகுதி என்ற அறிவு இந்த சுழலிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும்.

பிறவிச்சக்கரம்

பிறத்தல், வளர்தல் மற்றும் மடிதல் என்று வாழ்க்கை முடிவில்லாமல் சுழலும் என்ற உண்மையை விழித்தல், எண்ணங்களுடன் இருத்தல் மற்றும் தூங்குதல் என்ற தினசரி அனுபவம் நமக்கு விளக்குகிறது. விழித்திருக்கும்பொழுது இருக்கும் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் மறைந்துவிட்டாலும் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்ற உண்மை மடிந்தபின் கூட மாறாது. எனெனில் என்றும் மாறாமல் இருக்கும் நான் வெவ்வேறு உயிரினங்களாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருப்பேன். தனிமனிதன் இருக்கிறான் என்பதே கற்பனையென்பதால் மரணமும் கற்பனையே.

கையில் உள்ள விரல்கள் ஒவ்வொன்றும் தான் தனிப்பட்டவன் என்று தவறாக எண்ணுவது போல ஒவ்வொரு மனிதனும் தான் தனியானவன் என்று கருதுவதால் மரணபயம் அனைவருக்கும் இருக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்கள் பத்து விரல்களின் இயக்கத்தை தீர்மானிக்கின்றன என்பது தவறான அறிவு. அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமான என் மாயா சக்தியின் நடனத்தில் சிறுவிரலின் அசைவும் ஒரு அங்கம்.

சிறுவயதில் இருந்த உடல் மறைந்து வயோதிக உடலை அடைந்தபின்னும் நான் மாறுவதில்லை என்ற உண்மை மரணத்திற்குபின் மனம் மறைந்துவிடுவதால் மாறிவிடாது. பல்வேறு உயிரினங்களின் இயக்கமாக நான் தொடர்ந்து இருப்பேன்.

பிறப்பும் இறப்பும்

கடலில் கலக்கவேண்டும் என்ற ஆவலுடன் பல்வேறு ஆறுகள் பயணம் செய்து முடிவில் கடலில் கலந்தபின் தங்கள் பெயர்களையும் தனியான நதிகள் என்ற வடிவங்களையும் இழந்து கடல் என்று அழைக்கப்படுவது போல முக்தியடைய வேண்டும் என்ற ஆவலுடன் பரமனை நோக்கி பயணிக்கும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் முடிவில் தங்கள் தனிப்பட்ட பெயரையும் வடிவத்தையும் இழந்து பரமன் என்ற பெயரினால் மட்டுமே அழைக்கப்படுகின்றன என்று பிரஸ்ன உபநிஷத் மந்திரம் ஒன்று (6.5) பிறப்பு இறப்பு பற்றிய உண்மையை விளக்குகிறது.

ஆறு என்பது ஒரு குறிப்பிட்ட நீள அகலங்களோடு ஓடும் நீர். மனிதன் என்பவன் ஒரு குறிப்பிட்ட வடிவமுடன் சிலகாலம் வாழும் பரமன். கடலிலிருந்து தோன்றி மழை, நீரூற்று, உபநதி, ஆறு என்று பல பெயர்களைபெற்று முடிவில் கடலில் கலப்பதால் அழிவது நீர் அல்ல. வெறும் பெயர்கள் மட்டும் மாறுகின்றனவே தவிர மறைதல் என்பது நீருக்கு கிடையாது. அதுபோல பரமனிடமிருந்து தோன்றி பாலகன், குமாரன், வாலிபன், வயோதிகன் என பெயர்களில் மாற்றமேற்படுகிறதே தவிர மரணம் என்பது பரமனுக்கு கிடையாது.

தான் நீர் என்பதை உணராமல் ஆறு என்று நினைக்கும்வரைதான் தான் சிறியவன் அற்பமானவன் என்பதுபோன்ற வருத்தங்கள் இருக்கும். அது போல தான் பரமன் என்று உணராமல் மனிதன் என்று நினைக்கும்வரைதான் மரணபயம், தாழ்வு மனப்பான்மை, கவலை, தனிமை போன்ற துயரங்கள் மனதை வருத்தும். உண்மையை உணர்ந்தபின் நான் நிரந்தரமானவன் என்ற நிம்மதி பிறக்கும்.  

ஆறு தொடர்ந்து கடலில் கலந்தாலும் அதற்கு மரணம் என்பதில்லை. அதுபோல உயிரினங்கள் தொடர்ந்து மடிந்தாலும் அவை நிரந்தரமானவை. ஆறு முழுவதும் வற்றிவிட்டாலும் மறுபடி மழையால் உருவாக்கப்படும். பிரளயத்தில் அனைத்து உயிரினங்களும் அழிந்துவிட்டாலும் மாயாசக்தியால் அவை மறுபடியும் உயிர்ப்பிக்கப்படும்.

வாழ்க்கைச்சக்கரம்

வண்டிச்சக்கரத்தின் விளிம்பு தொடர்ந்து சுழல்வதுபோல வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் சக்கரத்தின் ஆதாரமான அச்சு அசையாமல் இருப்பதுபோல எல்லா மாற்றங்களுக்கும் ஆதாரமான நான் மாற்றமடைவதில்லை. சுழற்சிக்கு ஆதாரமான சக்கரத்தின் ஆரங்கள் போல கர்மபலன், மறுபிறவி போன்ற நியதிகள் வாழ்க்கை சக்கரத்தை சுழற்ற உதவுகின்றன. மாற்றங்களை மட்டும் கவனிப்பவர்களுக்கு இந்த நியதிகள் உண்மையானவை. மாற்றங்கள் மற்றும் மாறாத பரமன் ஆகிய இரண்டையும் கவனிக்கும் முக்திவிழைவோர்கள் மாறும் உலகம் மாறாத பரமனின் வெளிப்பாடு என்பதை உணர்ந்ததும் முற்றுணர்ந்தோர்களாகிறார்கள். இவர்களது வாழ்க்கைச்சக்கரம் முன்போல சுழன்றுகொண்டிருந்தாலும் நிலையானவன் நான் என்ற அறிவு நிரந்தர அமைதியையும் குன்றாத இன்பத்தையும் தரும். எனவே இன்பத்துக்கு புண்ணியம் காரணம் என்ற விளக்கம் இவர்களுக்கு அவசியமில்லை.

காரணமில்லா இன்பம்

வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கு பாவபுண்ணியங்கள் காரணம் என்ற விளக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்வில் இன்பதுன்பங்கள் மாறிமாறி ஏற்படும். காரண காரியம் என்ற விளக்கம் அனாவசியம் என்றுணர்ந்தபின் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இன்பம் மாறாது. இந்த பரந்த பிரபஞ்சத்தில் வாழும் அற்பமான மனிதன் நான் என்ற தவறான அறிவு மறைந்து இந்தப்பிரபஞ்சத்தை உருவாக்கி அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பவன் நான் என்ற உண்மை தெரிந்தபின் நம் இயல்பான இன்பத்தை பாதிக்கும் சக்தி நமது மனதிற்கு இருக்காது.

மரணபயம் நீங்கிவிட்டால் மற்றபயங்கள் மறைந்துவிடும். அனைத்து மனிதர்களும் நான் என்று அறிவதால் தனிமை இருக்காது. செயல்கள் எதையும் செய்வதைல்லை என்பதால் குற்ற உணர்வு ஏற்படாது. எனவே புண்ணியங்கள் முழுவதும் அழிந்து விட்டாலும் இன்பமாக இருப்பதில் எவ்வித மாற்றமும் இருக்காது.

முடிவுரை :

இன்பம் உலகில் இருக்கிறது என்ற தவறான அறிவுடன் செயல்படும்வரைதான் புண்ணியங்கள் நமது இன்பத்திற்கு காரணம் என்ற நம்பிக்கை அவசியம். உலக இயக்கத்திலிருந்து தனிப்பட்டவன் நான் என்ற எண்ணம் மறைந்ததும் எவ்வித காரணமும் இல்லாமல் இன்பமாயிருக்கலாம். இன்பம் நமது இயல்பு என்பதால் அதை அனுபவிக்க தடைகள் எதுவும் இருக்கமுடியாது.

ஒரு விபத்தில் நம் வீடு முழுவதும் எரிந்துவிட்டால் நாம் செய்த பாவம்தான் இதற்கு காரணமென்றும் விபத்தில் உயிரழக்காமல் தப்பித்ததற்கு புண்ணியம் காரணம் என்றும் நினைப்பவன் முக்திவிழைவோன். பக்கத்துவீட்டுக்காரன்தான் தீ வைத்து விட்டான் என்று எண்ணி பழிவாங்க திட்டமிடுபவன் பற்றுடையோன். இது உண்மையாக இருந்தால் கூட தீவைத்தவனும் என் கற்பனையால் என்னை ஆதாரமாக கொண்டு உருவானவன் என்றறிந்த முற்றுணர்ந்தோன் எவ்வித கவலையுமின்றி வாழ்வின் ஏற்ற இறக்கங்களை இன்பத்துடன் அனுபவிப்பான்.

இன்பமாக இருக்க இதுவேண்டும் என்ற ஆசை எதுவுமில்லாததால் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, கோபம், போட்டி, பொறாமை, பேராசை, பயம், கருமித்தனம், கெட்ட எண்ணம் போன்ற துன்பம் தரும் உணர்ச்சிகள் எதற்கும் ஆட்படாமல் எல்லோருடனும் அன்பாகவும் கருணையுடனும் இவர்களால் பழகமுடியும்.

ஓட்டப்பந்தயத்தின் துவக்கத்திலிருந்தே எல்லோர் கையிலும் வெற்றிக்கோப்பை இருக்கிறது என்பதையறியாமல் சகவீரர்கள் மேல் காழ்ப்புணர்ச்சியுடன் சிரமபட்டு ஓடுபவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்காமல் அவர்கள் மேல் பரிதாபத்துடன் அவர்கள் தேடி ஓடும் இன்பத்தின் உண்மை இருப்பிடத்தை அவர்களுக்கு கற்று கொடுக்கும் ஆவலுடன் இருப்பவர்கள் முற்றுணர்ந்தோர்கள். இலக்கை நோக்கி ஓடும் அவசியமில்லாமல் மற்றவர்களுடன் அவர்களுடைய வேகத்தில் ஓடுவது போன்ற தோற்றத்தை தரும் முற்றுணர்ந்தோர்கள் ஏற்கனவே தாங்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்பதை அறிந்தவர்கள் என்பதால் மற்றவர்களுக்கு உண்மையை உணர்த்த முடியவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டார்கள். இல்லாத உலகை இருப்பதுபோல் இவ்வளவு தத்ரூபமாக சித்தரித்திருக்கும் தனது மாயா சக்தியின் திறனை நினைத்து வியந்து வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தமாய் கழிப்பார்கள்.

பயிற்சிக்காக :

1. இன்பம் நம் இயல்பு நிலை என்பதை நிரூபிக்கவும்.

2. துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேதம் காட்டும் எளிமையான வழி என்ன?

3. மனிதனின் செயல்கள் வேறுபடுவதற்கு காரணம் என்ன?

4. நமது ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் முடிவு ஒன்றுதான் என்பது உண்மையா?

5. ஆறு-கடல் உவமானத்தின் மூலம் வேதம் கூறும் கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. கனவிற்கும் நனவிற்கும் உள்ள வித்தியாசங்கள் நமது இன்பதுன்பங்களை நிர்ணயம் செய்யும் சக்தி உள்ளவையா?

2. முற்றுணர்ந்தோர்கள் செய்யும் பாவபுண்ணியங்களின் பலன் யாருக்கும் கிடைக்காதா?

3. இல்லாத உலகம் இருப்பதுபோல் தோன்றுகிறது என்பது வேதத்தின் கற்பனையா அல்லது அறிவியல் நிரூபணத்துடன் கூடிய உண்மையா?

Monday, December 5, 2011

Lesson 162: Knowledge sets one free (Brahmasutram 4.1.13)


பாடம் 162: பாவபுண்ணியங்களிலிருந்து முழுவிடுதலை
பாடல் 490 (IV.1.13)

தாமரையிலையில் தண்ணீர் ஒட்டாததைப்போல நான் பரமன் என்று அறிந்தவனை பாவம் ஒட்டாது என்று சாந்தோக்கிய மந்திரம் (IV.14.3) கூறுவதன் உள்ளர்த்தத்தை இந்த பாடம் ஆழமாக ஆராய்கிறது.

வேதம் தரும் அறிவு

அறிவு மற்றும் செயல்படும் திறன் ஆகிய இரண்டின் அடிப்படையில் உலகமக்கள் பெரிதும் வேறுபடுகிறார்கள் என்றாலும் துன்பம் கலவா இன்பத்தை அடைவது என்ற ஒரே குறிக்கோளுடன்தான் அனைவரும் செயல்படுகிறார்கள். இந்த ஒரே குறிக்கோளை அடைய அவரவரின் நிலைக்கு ஏற்ப வேதம் வழிகாட்டுகிறது.

உலகம்தான் தன் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்ற அறிவுடன் துன்பத்தை தவிர்க்க செயல்படுபவர்கள் பற்றுடையோர். எவ்வளவோ முயன்றும் துன்பத்தை தவிர்க்கமுடியாததற்கு காரணம் சென்ற பிறவிகளில் செய்த பாவம் என்று வேதம் சமாதானம் சொல்கிறது. மற்ற உயிரினங்களுக்கு துன்பம் கொடுப்பது பாவம் என்றும் உதவி செய்வது புண்ணியம் என்றும் பாவபுண்ணியங்களுக்கு வேதம் தரும் விளக்கங்களை எவ்வித கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்கள் பாவங்களை தவிர்த்து நல்வழியில் செயல்பட்டு அடுத்து வரும் பிறவிகளில் முக்தியடைவது நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாக வாழ்வார்கள்.

வேதம் கூறும் பாவம் புண்ணியம் போன்ற கருத்துக்களை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாமல் அறிவினால் ஆராய ஆரம்பிப்பவர்கள் முக்திவிழைவோர்கள். தனது துன்பத்திற்கு மற்றவர்கள் காரணம் என்ற தவறான அறிவை நீக்க சஞ்சித கர்மம், ஆகாமி கர்மம் போன்ற கருத்துக்களை வேதம் அவர்களுக்கு விளக்கி தனது துன்பத்திற்கு தான் மட்டும்தான் காரணம் என்று அவர்களை உணரவைக்கிறது. நான்தான் என் துன்பத்திற்கு காரணம் என்றால் துன்பங்களிலிருந்து முழுமையாக என்னால் விடுதலை பெறமுடியும் என்ற முயற்சி அவர்களை படிப்படியாக முற்றுணர்ந்தோர்களாக மாற்றும். அதன்பின் அவர்களை  பாவபுண்ணியங்கள் பற்றாது. அதுவரை சேர்த்துவைத்த சஞ்சித கர்மம் முழுவதும் அழிவதுடன் ஆகாமி கர்மமும் அவர்களை பாதிக்காது என்று வேதம் கூறுகிறது. எனவே அவர்கள் பிறவிச்சுழலிலிருந்து விடுபட்டு முக்தியடைவார்கள்.

வேதம் தரும் விளக்கம்

உலகம் ஒரு புரியாத புதிர் என்பதை உணராதவர்கள் அனைத்து காரியங்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் செயல்படுவார்கள். இது இதனால் நடந்தது என்ற விளக்கம் கொடுக்கமுடியாதபொழுது கர்மபலன், மறுபிறவி என்ற கருத்துக்களை வேதம் அறிமுகப்படுத்துகிறது. பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு இருந்தாலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இக்கருத்துக்களை உண்மையாக்குகிறது. எந்த முரண்பாடும் இல்லாமல் தர்க்க அறிவிற்கு பொருந்திய இக்கருத்துக்கள் மக்களை முக்தியை நோக்கிய சரியான பாதையில் பயணிக்கவைக்கிறது.

உலகை புரிந்துகொள்ள முடியாது என்று எடுத்த எடுப்பிலேயே சொல்வதற்குபதில் எந்த செயல் எப்பொழுது பலன் அளிக்கும் என்பதை மட்டும் மனிதனால் உணர்ந்து கொள்ள முடியாது என்று வேதம் கூறுகிறது. இதை ஏற்றுக்கொண்டால் கடவுள், எண்ணிலடங்கா பிறவிகள், பாவபுண்ணியம், சுவர்க்கம், நரகம் போன்ற வேதம் கூறும் காரண காரியங்கள் உலகை புரிந்துகொண்டது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. தர்க்கத்தின் அடிப்படையில் யாராலும் தகர்க்க முடியாத இந்த விளக்கங்கள் புத்திகூர்மையுள்ள மனிதர்களையும் கடவுள் நம்பிக்கையுடன் செயல் படவைக்கின்றன.

உலகை புரிந்துகொள்ள முடியாது என்றும் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் எதுவும் எல்லை என்றும் புரிந்துகொள்பவர்கள் முற்றுணர்ந்தோர்கள். கனவில் நாம் எதிர்கொள்ளும் குடிகாரன் ஏன் அந்தப்பழக்கத்துக்கு அடிமையானான் என்றோ அவன் முக்தியடைய வாய்ப்பு இருக்கிறதா என்றோ நாம் கவலைப்படுவதில்லை. அதுபோல விருப்பு வெறுப்புகள் பிறவிதோறும் நம்மை தொடர்கின்றன, செய்த பாவபுண்ணியங்களின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் அனாவசியம் என்று அறிபவர்கள் முற்றுணர்ந்தோர். துன்பம் என்பதே கற்பனை என்பதால் முக்தியென்பதும் கற்பனையே என்பதை இவர்கள் அறிந்திருப்பதால் பாவபுண்ணியங்கள் இவர்களை சிறிதும் பாதிக்காது. ஒரு சிறு படகு பெரிய கடலை கடக்க உதவுவது போல நான்தான் இந்த உலகின் ஆதாரம் என்ற அறிவு எண்ணிலடங்கா பிறவிகளில் சேர்த்து வைத்த பாவங்களின் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து இவர்களை விடிவிக்கும். மேலும் இந்த பிறவியில் செய்த மற்றும் செய்யும் பாவங்களும் இவர்களை பாதிக்காது.

அனுபவித்து தீர்க்கமுடியாது

எண்ணற்ற பிறவிகளில் சேர்த்து வைத்த அளவற்ற பாவபுண்ணியங்களை நம்மால் அனுபவித்து தீர்க்கவே முடியாது. மேலும் அவற்றை அனுபவிக்கும்பொழுது புதிய செயல்கள் செய்து மேலும் பாவபுண்ணியங்களை சேர்த்துக்கொள்வதையும் தவிர்க்க முடியாது. எனவே ஞானத்தினால் மட்டுமே முக்தியடைய முடியும்.

மறுபிறவி, பாவபுண்ணியங்கள் ஆகியவை உள்ளன என்று நமக்கு தெரிவித்த அதே  வேதம் ஞானம் பெற்ற மறுகணம் இவற்றிலிருந்து விடுதலையடையலாம் என்று கூறுவதால் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். செய்த பாவங்களுக்கு தண்டனை பெறாமல் தப்பிப்பது எப்படி நியாயம் என்பது போன்ற தர்க்க விவாதம் இங்கு உதவாது. எவ்வளவுதான் பாவ காரியங்கள் செய்து இருந்தாலும் ஞானம் பெற்றவுடன் முக்தியடைவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 

செய்பவனின் முடிவு

செயல் செய்தவன் செயலின் பலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று வேதம் கூறுவது செயல் செய்து உலகை மாற்ற முயலும் பற்றுணர்ந்தோர்கள் அல்லது செயல்கள் மூலம் மனதை மாற்ற முயலும் முக்திவிழைவோர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும். தான் செயல் செய்பவன் அல்ல என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களை பாவம் பற்றாது. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் நான் செயல்களை செய்பவன் என்ற அகங்காரம் இல்லாமல் செயல்படுவதால் அவை பாவபுண்ணியங்களை சேர்த்துகொள்வதில்லை என்று வேதம் கூறுகிறது. அதுபோல இவ்வுலகிலிருந்து வேறுபட்டு தனியாக இயங்கும் மனிதனாக தன்னை கருதாதவர்கள் பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

செயல்களின் முடிவு

பதினான்கு உலகங்களில் இங்குமட்டும்தான் செயல்கள் செய்யப்படுவதாக மக்கள் நினைப்பதால் இதுமட்டும்தான் கர்ம பூமியென்றும் வேதம் கூறுகிறது. தொடர்ந்து நடக்கும் ஒலி-ஒளி காட்சியில் ஏற்படும் மாற்றங்களை செயல்கள் என்று தவறாக நினைப்பவர்களுக்கு மட்டுமே கர்மபலன் என்ற காரண காரிய விளக்கம் அவசியமாகிறது. செயல்களே இல்லை என்று உணர்ந்தவுடன் அவற்றின் பலன்கள் மறைந்துவிடும். கர்மபலன்கள் மறைந்துவிட்ட காரணத்தால் மறுபடி பிறக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

காலத்தின் முடிவு

காலம் நமது கற்பனை என்பதால் சென்ற காலத்தில் செய்த செயல்களின் பலனை வருங்காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்ற சட்டம் நமக்கு பொருந்தாது. யார் மூன்று காலங்கள் இருப்பது உண்மை என்று நம்புகிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி உண்மை. இந்தப்பிறவியே பொய் என்பதை அறிந்தவர்களுக்கு நிச்சயம் மறுபிறவி கிடையாது. 

இடைவெளியின் முடிவு

வெண்திரையில் காட்டப்படும் வண்டி எவ்வளவு வேகமாக போனாலும் திரைக்கு வெளியே செல்ல முடியாது. முருகன் மூன்றுமுறை உலகை சுற்றிவருவதற்குள் அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்ற உண்மையை கூறி ஞானப்பழத்தை வென்ற விநாயகனைப்போல இவ்வுலகம் இருப்பது எனது எண்ணத்தில் மட்டும்தான் என்றுணர்ந்தவர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை.

கற்பனை கதை

செய்த குற்றத்திற்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பை கேட்டவுடன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டால் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல உலகம் என்ற மாயையின் பிடியிலிருந்து விழித்துக்கொண்ட முற்றுணர்ந்தோர்கள் எவ்வித தண்டனையையும் அனுபவிப்பதில்லை.  

முடிவுரை :

நான் உருவாக்கிய உலகில் உலாவரும் அற்பமான மனிதர்களில் ஒருவரை நான் என்று தவறாக நம்பும்வரை செயல்கள் செய்வதாகவும் அவற்றின் பலன்களை அனுபவிப்பதாகவும் ஏற்படும் தோற்றத்தை தவிர்க்கமுடியாது. இருப்பது நான் மட்டுமே. பல்வேறு உயிரினங்களை தோற்றுவித்த எனது மாயா சக்தி  அவை ஒரு இடத்தில் பிறந்து சில காலம் வளர்ந்து பிறகு மறைவதாகவும் சித்தரித்துள்ளது. எண்ணிலடங்கா இவ்வுயிரினங்கள் பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்தில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறந்து இவ்வுலகில் இன்ப துன்பங்களை அனுபவிப்பதாக காட்டப்படும் இந்த நாடகத்தின் சூத்திரதாரி நான் என்ற அறிவைப்பெறும் மனிதர்கள் பாவபுண்ணியங்களிலிருந்து விடுதலையடைகிறார்கள்.

பயிற்சிக்காக :

1. பற்றுடையோரின் பார்வையில் பாவபுண்ணியங்களை விவரிக்கவும்.

2. முக்திவிழைவோர்கள் பாவபுண்ணியங்களை ஏற்றுக்கொள்ளும் விதம் யாது?

3. முற்றுணர்ந்தோர்களை பாவபுண்ணியங்கள் ஏன் பாதிப்பதில்லை?

சுயசிந்தனைக்காக :

1. நான் தூங்கும்பொழுது உலகம் இருப்பதில்லையா?

2. முற்றுணர்ந்தோர்கள் பாவம் செய்வார்களா? 


3. அம்மையப்பனை சுற்றிவந்தால் உலகை சுற்றிவந்ததற்கு சமம் என்று விநாயகன் கூறுவதை ஏற்று நாம் நம் தாய் தந்தையரை சுற்றிவந்தால் ஞானப்பழம் கிடைக்குமா?