பாடம் 190:
ஞானியின் சக்தி
பாடல்:
548-549 (IV.4.15-16)
ஞானம் பெற்றவுடன்
ஞானிக்கு தெய்வீக சக்திகள் ஏதும் கிடைக்காது என்றாலும்,
மற்றவர்களை ஒப்பிட்டால், உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை
எதிர்கொள்வதில், அவனுக்கு மிகப்பெரிய சக்தி கிடைக்கும் என்ற கருத்தை
தத்தாத்ரேயர் எழுதிய அவதூத கீதையின் வரிகள் மூலம் இந்தப்பாடம் தருகிறது.
1.1 கடவுளின் அருள் மூலம் ‘நான் பரமன்’ என்ற ஞானத்தைப் பெறும் ஞானிகள் எதற்கும் பயப்பட மாட்டார்கள்.
1.6 அனைவரது ஆத்மாவாக விளங்கும் அந்தக் கடவுள்தான் நான் என்பதில் எனக்கு சிறிதும்
சந்தேகம் இல்லை. நான் புனிதமானவன்; கறை
படியாத வானத்தைப் போல நான் இயற்கையாகவே குற்றமற்றவன்.
1.7 இன்ப துன்பங்கள் யாருக்கு எப்படி ஏற்படுகின்றன என்பது பிளக்க முடியாத,
அழிக்கமுடியாத, அளவற்ற அறிவு உருவான எனக்குத் தெரியவில்லை.
1.8 மனம், மொழி, மெய்யால் நான் எதுவும்
செய்வது கிடையாது. எனவே, அவை நல்ல செயல்களா தீய செயல்களா
என்ற கேள்விக்கே இடம் இல்லை. புலன்களுக்கு புலப்படாத புனிதமான அறிவின் அமிர்தம் நான்.
1.11 ஓ, சக்தி வாய்ந்தவனே, எப்போதும்
ஒளிமயமாக இருக்கும் உன்னை காலமும் இடமும் எப்படி கட்டுப்படுத்த முடியும்?
1.15 பிரிவதும் சேர்வதும் யாருக்கும் கிடையாது. நீ,
நான், இந்தப் பிரபஞ்சம் ஆகிய அனைத்தும் உண்மையில்
ஒன்றான பரமன் மட்டுமே.
1.51 தண்ணீரை தண்ணீருடன் கலந்தபின் எப்படி எந்த வித்தியாசமும் தெரியாதோ அதுபோல எனக்கும்
இந்த உலகத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
2.5 பிறப்பு-இறப்பு ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு எதிலிருந்தும்
வேறுபடாமல் எப்போதும் அமைதியாக இருக்கும் நான்தான் அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமானவன்.
2.39 தன்னை அறிந்த ஞானி எதையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவனை எந்த வித சட்ட திட்டங்களும் பாதிப்பது இல்லை.
3.9 கர்ம பலன்கள் அனைத்தையும் அழிக்கும் நெருப்பு நான். வாழ்வின்
துயரங்கள் அனைத்தையும் அழிக்கும் நெருப்பு நான். வினைகளுக்கும்
துயரங்களுக்கும் அப்பாற்பட்ட எனக்கு உடல் கிடையாது. வானத்தைப்போன்ற
வடிவமற்ற அறிவு உருவானவன் நான்.
3.10 பாவங்களை எரிக்கும் நெருப்பு நான். குணங்களை எரிக்கும்
நெருப்பு நான். பாவங்களுக்கும் குணங்களுக்கும் அப்பாற்பட்ட எனக்கு
பந்தங்கள் எதும் கிடையாது. வானத்தைப்போன்று அனைத்தையும் உள்ளடக்கிய
ஒருமித்த அறிவு உருவானவன் நான்.
3.14 உலகில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுவது நான் அல்ல. துயரங்கள் ஏற்படுத்தும் மனச்சோர்வால் பாதிக்கப்படுவது நான் அல்ல. புண்ணியத்தின் விளைவாக ஏற்படும் மன அமைதியும் என்னைச் சேர்ந்தது அல்ல.
வானத்தைப் போன்று எதனுடனும் சம்பந்தப்படாமல் என்றும் இருக்கும் அறிவு
உருவானவன் நான்.
3.26 எதுவுமே செய்யாமல் அனைத்தையும் செய்யும் திறன் படைத்தவன் நான். பந்தத்துக்கும் துறவுக்கும் அப்பாற்பட்ட ஆனந்தமயமானவன் நான். பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டு நிரந்தரமாக
இருக்கும் அளவற்றவன் நான். வானத்தைப் போன்று முழுமையாக இருக்கும்
அறிவு உருவானவன் நான்.
4.20 நான் அறியாதவனும் அல்ல. அறிந்தவனும் அல்ல. நான் மௌனமாக இருப்பதில்லை. பேசிக்கொண்டும் இருப்பதில்லை.
என்னால் எப்படி விவாதங்களில் பங்கேற்க முடியும். அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுபட்ட எனக்கு உருவம் கிடையாது.
5.31 இந்தப் பிரபஞ்சம் ஒரு கானல் நீரைப்போன்ற மாயை என்று வேதங்கள் கூறுகின்றன.
நான் உண்மையில் இருக்கிறேன் என்று நாம் அனைவரும் உணர்கிறோம்.
எனவே இருத்தலை இயல்பாகக்கொண்ட நானே இந்த பிரபஞ்சத்துக்கு ஆதாரம்.
6.22 நீ, நான் என்ற பிரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை.
இனம், மொழி, குடும்பம் போன்றவற்றின்
அடிப்படையில் மக்களைப் பிரிப்பது தவறு. இருப்பதெல்லாம் நான் மட்டுமே.
எனவே என்னால் உன்னை என்ன சொல்லி அழைக்க முடியும்.?
7.2 வாழ்வில் எதையும் அடைய வேண்டும் என்ற இலட்சியமோ, அடையக்
கூடாது என்ற பிடிவாதமோ இல்லாதவன் ஞானி. சரி-தவறு என்ற இருமைக்கு அப்பாற்பட்ட திறமைசாலி அவன். அவனால்
எந்த உரையாடல்களிலோ அபிப்ராயபேதங்களிலோ பங்கேற்க முடியாது.
8.1 பல வேறு திவ்யஸ்தலங்களுக்கு புனித யாத்திரை சென்று எங்கும் நிறைந்து இருக்கும்
உன்னை அவமரியாதை செய்தேன். தியானம் செய்வதன் மூலம் அமைதியைத்
தேடி மனதின் ஆதாரமாக எப்போதும் இருக்கும் உணர்வுமயமான உன்னை அவமரியாதை செய்தேன்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உன்னை துதிப்பாடல்கள் பாடி அவமரியாதை செய்தேன்.
இந்த மூன்று பாவங்கள் செய்த என்னை நீ மன்னித்துவிடு.
8.10. இந்தப்பாடல் வரிகளைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
தன்னை அறிந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
முடிவுரை
:
ஞானி மிகுந்த சக்திமான்.
வாழ்வு என்ற புயல்காற்றினால் பாதிக்கப்படாத இமயமலை அவன். உலகத்தைச் சரியான கண்ணோட்டத்தில்
பார்க்க அவனுக்கு மட்டுமே தெரியும். எனவே மற்றவர்களை விட அவனால் சிறப்பாக வாழ முடியும்.
கனவில் நமது வீடு குடிசையாக
மாறிவிட்டால் அது குறித்து நாம் வருத்தப்படப் போவதில்லை. அது போல சூரியனின்
கதிர்கள் குளிர்ந்து விட்டாலோ, சந்திரன் சுட ஆரம்பித்துவிட்டாலோ,
நெருப்பு கீழ்நோக்கி எரிந்தாலோ, தண்ணீர் மேல்நோக்கி
பாய்ந்தாலோ அனைத்தும் மாயை என்று அறிந்த ஞானி ஆச்சரியப்படமாட்டான்.
ஓடும்
நீரில் பிரதிபலிக்கும் சூரியன் நகர்வது போல் தெரியும். அதேபோல் மாறும் உலகில் மாறாத பரமன் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் சிக்கிகொண்டது போல் தோற்றம் அளிக்கும். இதை அறிந்த
ஞானி தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்ற அறிவுடன் செயலாற்றிக் கொண்டு இருப்பான்.
ஐந்து புலன்கள்
அனுபவிக்கும் மாயையான உலகம் தனது ஆனந்தமயமான உருவத்தின் பிரதிபலிப்பு என்பதை ஞானி அறிவான்.
பார்ப்பவை அனைத்தும் பரமன் என்ற அறிவு அவனிடம்
இருப்பதால் அவனுக்கு யார் மீதும் வெறுப்பு ஏற்படாது. அனைத்து நிகழ்வுகளும் பரமனின்
மாயாசக்தியின் விளைவு என்றும் அவன் அறிவதால் எது எப்படி ஆனாலும் அதனால் பாதிப்பு அடையாமல்
இன்பமாக இருக்கும் சக்தி உடையவன் ஞானி.
பயிற்சிக்காக
:
1. ஞானியின்
சக்திக்கு காரணம் என்ன?
சுயசிந்தனைக்காக
:
1. தத்தாத்ரேயர்
எழுதிய அவதூத கீதையை படிக்கவும்.