Thursday, February 23, 2012

Lesson 169: The function of mind is merged in Prana (Brahmasutram 4.2.3)


பாடம் 169: ஞானியின் மனம் அடங்கிவிடும்
பாடல் 499 (IV.2.3)

நான் பூரணமானவன் என்ற அறிவு மனதின் நிறைவின்மையை மாற்றிவிடுவதால் ஞானியின் மனம் தேடல்களில் ஈடுபடாமல் நமது அடிப்படை தன்மையான ஆனந்தத்தில் திளைத்து அடங்கியிருக்கும் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.

உணர்வுடன் கூடிய மனதை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்ற தவறான அறிவுடன் வெளியுலகில் உழைக்கும் பற்றுடையோர்களின் முயற்சி தோல்வியில்தான் முடியும். சரிபாதியாக பிரித்து தருகிறேன் என்று இதில் ஒரு கடி அதில் ஒரு கடி என்று அப்பம் முழுவதையும் குரங்கு சாப்பிட்டுவிட்டதால் ஏமாந்த பூனைகளைப்போல ஆனந்தமாக இருக்க அமைதியை தொலைப்பதும் அமைதியாக இருந்தால் ஆனந்தத்தை தேட முயல்வதுமாக தொடர்ந்து போராடி இவர்கள் வாழ்வில் ஏமாற்றமடைவார்கள்.

மனது உணர்வுடன் கூடியதல்ல என்றும் அது வெறும் ஜடப்பொருள் என்றும் அறிபவர் முக்திவிழைவோர்கள். ஆனந்தத்தையும் அமைதியையும் வெளிஉலகில் தேடுவதை நிறுத்திவிட்டு தான் உணர்வு மயமான பரமன் என்பதை அறிந்தால் மனதில் இன்பவெள்ளம் கரைபுரண்டோடும் என்ற எதிர்பார்ப்புடன் வேதத்தை இவர்கள் தொடர்ந்து படிப்பார்கள். ஒரு சிலர் நான் பரமன் என்ற அறிவை மனதில் நிலை நிறுத்துவதால் குறையாத மகிழ்ச்சியும் தடையில்லாத நிம்மதியும் ஏற்படும் என்று தியானம் செய்வார்கள். உணர்வுமயமான நான் வேறு ஜடமான மனம் வேறு என்ற அறிவு மனதில் நிலைபெறும்வரை இவர்களது தேடல் தொடரும்.

புறவுலகில் அமைதியை தேடும் பற்றுடையோர்களும் அகவுலகில் ஆனந்தத்தை தேடும் முக்திவிழைவோர்களும் மனதின் தன்மையை அறிவதில்லை. மாறும் உலகின் மாற்றங்களை பிரதிபலிக்கும் மனம் மாறித்தான் ஆகவேண்டுமென்றும் மனதின் மாற்றம் மாறாத தன்னை பாதிப்பதில்லையென்றும் முற்றுணர்ந்தோர்கள் அறிவதால் தங்கள் மனதின் நிலையைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே இவர்களது மனம் தனது மாற்றங்களை இயல்பாக ஏற்று அமைதியடையும்.

வேற்றுமையில் ஒற்றுமை

பத்து வருடங்களுக்கு முன் தன்னிடம் பயின்று பட்டம் பெற்ற பழைய மாணவர்கள் சிலரை பேராசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். வந்த மாணவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு பெரிய குவளையில் தேனீரும் வெள்ளி, பீங்கான், கண்ணாடி என்று பலவகைப்பட்ட கோப்பைகளையும் கொண்டுவந்து தங்களுக்கு தேவையான தேனீரை அவரவர் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

விலையுயர்ந்த கோப்பைகளும் பார்வைக்கு அழகான கோப்பைகளும் முதலில் எடுக்கப்பட்டுவிட்டதால் கைப்பிடி உடைந்தும் பழையதாகவும் காணப்பட்ட சில கோப்பைகள் கடைசிவரை எஞ்சியிருந்தன. ஒவ்வொருவரின் கவனமும் மற்றவர் கையில் இருக்கும் கோப்பைகள் மீது இருந்தனவே தவிர தான் பருகும் தேனீரில் இல்லை. கோப்பைகள்தான் வேறுபட்டவையே தவிர பருகும் தேனீரில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை உணராதவர்கள் தன்னுடைய கோப்பையை விட மற்றவரது கோப்பை நன்றாக இருப்பதை கண்டு பொறாமைகொண்டார்கள். ஒரு சிலர் சிறந்த கோப்பையை தேர்ந்தெடுத்த பெருமையுடன் மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்து தேனீரை சுவைக்கத்தவறினார்கள்.

கோப்பையின் உதவியில்லாமல் தேனீரை பருக முடியாது. ஆனால் தேனீரைவிட கோப்பைதான் முக்கியமானது என்ற மனப்பக்குவமின்மை மாணவர்களிடம் பரவலாக காணப்படுவதை அவர்களின் உரையாடல் சுட்டிக்காட்டியது.  படித்த படிப்பு ஒன்றாக இருந்தாலும் தங்களது பதவி, வருமானம், குடும்பம், செல்வாக்கு போன்றவற்றை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு தான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர்ந்திருக்கலாம் என்ற ஏக்கம் அனைவரையும் பாதித்தது. தேனீரை உற்பத்தி செய்யும் திறன் கோப்பைக்கு கிடையாது. அது போல இன்பத்தை தரும் தகுதி வாழ்வின் வசதிகளுக்கு கிடையாது என்பதை யாரும் உணரவில்லை.   

நெய்தான் தொன்னைக்கு ஆதாரம். வேறுபட்ட மனங்களுக்கு ஒன்றான உணர்வே ஆதாரம் என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் அமைதியாயிருக்கும்.

ஒற்றுமையில் வேற்றுமை

பேராசிரியர் மாணவர்களுக்கு வழங்கியது தேனீர் மட்டுமே. குடித்துமுடித்தவுடன் கீழேவைத்துவிட்டுதான் வீட்டுக்கு போகப்போகிறோம் என்பதை மறந்து கோப்பை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் அறியாமைதான் மாணவர்களின் துன்பத்திற்கு காரணம்.

அனைவரது தேனீரும் ஒரே தன்மை வாய்ந்தது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது ஒரே தன்மைவாய்ந்த இன்பம் மட்டுமே. கோப்பையின் தன்மையை பொறுத்து தேனீரின் தரம் மாறாது. வாழ்க்கையின் தரம் இன்பத்தின் அளவை நிர்ணயிக்காது.

அனைவருக்கும் பொதுவான தேனீரை பருக அவரவருக்கு தனித்தனியே கோப்பை தேவை. அதுபோல அனைவருக்கும் பொதுவான இன்பத்தை அனுபவிக்க மனமும் உடலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தற்காலிகமாக கிடைக்கப்பட்டவை. கோப்பையின் மீது கவனம் செலுத்தி பருகும் தேனீரின் சுவையை அனுபவிக்க தவறும் மாணவர்கள் போல பணம், பதவி, சுற்றம், நட்பு போன்றவற்றை நாடி இன்பத்தை அனுபவிக்க பற்றுடையோர்கள் தவறிவிடுகிறார்கள். ஆளுக்கு ஆள் வேறுபடுவது மட்டுமின்றி ஒருவரின் மனமே காலையில் இருப்பதுபோல் மாலையில் இல்லாமல் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். மாறுவது மனம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அது நிலையான அமைதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாறுபவர்கள் முக்திவிழைவோர்கள்.

தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளாமல் இன்பமாக இருக்கும்பொழுது இருந்த அதே மனநிலை எப்பொழுதும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்காமல் வாழும் முற்றுணர்ந்தோன் கோப்பையின் மீது கவனம் செலுத்தாமல் தேனீரை அனுபவிப்பவனைப்போல தனது இயல்பான இன்பத்தில் திளைத்து மனதின் மாற்றங்களை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வான். ஒன்றான உணர்வு வேறான பொருள்களாகவும் மாறும் மனமாகவும் தோன்றுவதால்தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது என்பதை இவன் அறிவான்.

படைப்பின் இரகசியம்

உலகிலிருந்து வேறுபட்ட தனிமனிதன் நான் என்று எண்ணும் பற்றுடையோர்கள் வாழ்வை ஒரு போராட்டமாகவும் மற்றவர்களை சகபோட்டியாளர்களுமாகவும்  கருதுவதால்தான் அவர்களால் நிம்மதியாக வாழ முடிவதில்லை.

ஒன்றான பரமனே பலவாக காட்சியளிக்கிறான் என்று அறிந்த முக்திவிழைவோன் படைப்பின் ஒருபகுதியான தனது மனம் மட்டும் மாறாமல் இன்பமாக இருக்க வேண்டும் என்று போராடுவதால் அமைதியை அடைய முடிவதில்லை.

உலகில் படைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஒன்றிலிருந்து ஒன்று வெகுவாக வேறுபட்டவை. நமக்கு கிடைத்தது போன்ற ஒரு மனமும் உடலும் வேறு யாருக்கும் எப்பொழுதும் கிடைக்காது. கிடைத்தற்கரிய இவ்விருபொருள்களை தற்காலிகமாக பெற்ற நாம் அவற்றை வேறு மாதிரி மாற்றியமைக்க முயற்சி செய்து நேரத்தை வீணடிக்காமல் அவற்றில் ஏற்படும் மாற்றங்களை அனுபவிப்பது புத்திசாலித்தனம்.

வெள்ளிகோப்பை பார்க்க நன்றாக இருக்கிறது என்று மண்கோப்பையை வைத்திருப்பவனும் மண்கோப்பையில் தேனீர் அதிக சுவையாய் இருக்கும் என்று தன் கையை சுடும் வெள்ளிக்கோப்பையை வைத்திருப்பவனும் நினைப்பது போல மற்றவர்களிடம் இருப்பது தன்னிடம் இல்லாததுதான் தன் நிறைவின்மைக்கு காரணம் என்று எண்ணி வருந்துபவர்கள், அனைவரிடமும் இருப்பது ஒரே தேனீர் என்பதை அறிவதில்லை.  அனைவரும் அனுபவிப்பது அவரவர்களின் உண்மை இயல்பான இன்பத்தைமட்டுமே என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் வெளியுலக தோற்றங்களையும் மாற்றங்களையும் கண்டு மயங்காது.

மாறாத பரமன் மாற்றங்களுடனும் ஏற்ற இறக்கங்களுடனும் காட்சியளிப்பது படைப்பின் இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் அதை அனுபவிக்கும் மனதின் தொடர்ந்த மாற்றங்களையும் மாற்ற முயலாமல் ஏற்றுக்கொண்டு வாழ்வை தொடர்ந்து அனுபவிப்பார்கள். உலகில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி எல்லோரும் எல்லாமும் பெற்று என்றும் இன்பமுடன் வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தவறு.

நிலையானதும் நிலையற்றதும்

மரணத்தில் உணர்வுடன் கூடிய மனம் உடலைவிட்டுபிரிவதால் உடல் நான் அல்ல என்றும் மனம் தான் நான் என்றும் நினைப்பவர்கள் பற்றுடையோர்கள். ஜடமான மனம் பரமனை பிரதிபலிப்பதால் உணர்வுடன் கூடியதாக தெரிகிறது என்று அறியும் முக்திவிழைவோர்கள் நிலையற்ற மனம் பரமனின் நிலையான தன்மையை அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிலையான உணர்வு மட்டுமே உண்மையில் இருக்கிறது என்றும் மனம் இருப்பதுபோல் தோன்றும் உலகின் ஒரு பகுதி என்றும் அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் இன்பத்தில் ஆழ்ந்திருக்கும்.

கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவருக்கும் பொதுவான தேனீர் ஒன்றுதான் என்பதை உணராததைப்போல வேறுபட்ட தோற்றங்களை கவனித்து ஒன்றான உணர்வுதான் பலவாக காணப்படுகிறது என்பதை கவனிக்க தவறுவதால் மாற்றங்களை மற்றவர்களால் அனுபவிக்கமுடிவதில்லை.

ஒளிபரப்பு எதுவும் இல்லாதபொழுது தொலைக்காட்சியில் தெரியும் கருப்பு வெள்ளை கலந்த புள்ளிகளின் நடனத்தில் ஒரு உருவத்தை கற்பனை செய்து கொள்வதைப்போல் அணுத்துகள்களின் ஆட்டத்தில் உலகத்தின் இயக்கத்தை பார்ப்பவர்கள் அறியாத மனிதர்கள். தினமும் அரை மணிநேரம் பார்க்கும் தொலைக்காட்சி நாடகத்தின் பாத்திரங்கள் நாள்முழுவதும் வாழ்வதாக நம்பும் இவர்களுக்கு நிஜவாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் கற்பனை வடிவங்கள் என்பதை நம்புவது கடினம்.

மனப்பக்குவம் ஏற்பட்டபின் ஆசிரியரின் துணையுடன் தன் அறிவுகூர்மையால் வேதத்தை ஆய்ந்து அறியும் முக்திவிழைவோர்கள் கூட நான் பரமன் என்பதை வெறும் புத்தக அறிவாக ஏற்றுக்கொண்டிருப்பதால் தங்கள் மனம் கலக்கமடையும் தருணங்களில் நிலையான நிம்மதி எப்பொழுது ஏற்படும் என்ற ஏக்கத்துடன் வாழ்நாளை கழிப்பார்கள்.

வார்த்தைக்கும் மனதுக்கும் எட்டாத உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் தான் மாறும் மாயை என்பதை உணர்ந்து அடங்கிவிடும்.

முடிவுரை :

தான் உடலும் மனதும் கொண்ட மனிதன் என்ற அறிவுடன் செயல்படும் வரை நிறைவின்மையை தவிர்க்க முடியாது. பரந்த உலகில் ஒரு சிலகாலம் வாழும் அற்பனாக தன்னை கருதும் மக்கள் தங்களின் குறையை நிறைவு செய்ய எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறமாட்டார்கள். இவர்களின் உடலும் மனமும் இருப்பதாக தோன்றும் மாயையின் ஒருபகுதி என்பதால் வெளியுலக மாற்றங்கள் மற்றும் மனதின் மாற்றங்கள் இவர்களுக்கு நிறைவைத்தராது. நிறைவைபெற செய்யும் முயற்சி இவர்களின் அறியாமையை அகற்றாது. ஆசிரியரின் அடிபணிந்து வேதம் படிப்பதன் மூலம் அறியாமையை முழுவதும் அகற்றிய முற்றுணர்ந்தோர்கள் மற்ற மனிதர்களைப்போல பின்வரும் ஐந்து தவறுகளை செய்வதில்லை.

முதல் தவறு: மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தவறுவது.

இரண்டாம் தவறு: மனதை மாற்றி அதை என்றும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முயற்சி செய்வது.

மூன்றாம் தவறு: மனம் எவ்வளவுதான் மாறினாலும் போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படாது என்பதை உணராதிருத்தல்.

நான்காம் தவறு: மாறுதல்தான் படைப்பின் இரகசியம் என்பதை அறியாமல் மாறாத இன்பத்தை மாறும் மனதில் எதிர்பார்ப்பது.

ஐந்தாம் தவறு: மனது நம் விருப்பபடி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உலகையோ மனதையோ மாற்ற முயற்சி செய்வது

அறிவுருவாகவும் ஆனந்தமயமாகவும் மாறாமல் என்றும் இருப்பவன் நான் என்ற ஞானத்தில் நிலைத்து நிற்பதால் ஞானியின் மனம் நிலத்தை சந்திக்கும் இடத்தில் அலைகளாக ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலைப்போல் அமைதியுடன் அடங்கியிருக்கும்.

பயிற்சிக்காக :

1. குரங்கு அப்பத்தை பிரித்த கதையின் மூலம் ஆனந்தத்திற்கும் அமைதிக்கும் உள்ள உறவு எப்படி விளக்கப்பட்டது?

2. பற்றுடையோனின் தேடலுக்கும் முற்றுணர்ந்தோனின் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

3. ஒற்றுமையில் வேற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

4. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

5. படைப்பின் இரகசியம் என்ன?

6. ஞானியைத்தவிர மற்றவர்கள் செய்யும் ஐந்து தவறுகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஞானியின் மனம் அடங்கிவிடுவதால் அவனை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?

2.தேடல்கள் நின்றுவிடுவதால் ஞானியின் வாழ்வின் குறிக்கோள் எதுவாக இருக்கும்?

3.அலைகளின் ஆரவாரத்துடன் கூடிய கடலை அமைதியானது என்று எப்படி வர்ணிக்க முடியும்?

Wednesday, February 15, 2012

Lesson 168: The function of speech will merge into mind (Brahmasutra 4.2.1-2)


பாடம் 168: ஞானி பேச மாட்டான்
பாடல் 497-498 (IV.2.1-2)

ஞானம் ஏற்பட்டவுடன் முக்திவிழைவோன் மனதளவில் மரணமடைந்து ஞானியாக மாறும்பொழுது முன்போல் அவன் பேசுவதில்லை என்ற கருத்து இந்த பாடத்தில் விளக்கப்பட்டு இதுபோல் அன்றாட வாழ்வில் ஞானம் தரும் பயன்களை இந்த நான்காம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி ஆராயத்தொடங்குகிறது.

கூட்டுக்குள் தவமிருந்த கம்பளிபுளு பட்டுப்பூச்சியாக வெளிவந்து பறப்பதுபோல முக்திவிழைபவன் வேதத்தின் மையக்கருத்தை கருவாக ஏற்று அதன்மேல் தியானம் செய்தபின் முற்றுணர்ந்தோனாக மலர்ந்து உலகில் மணம் பரப்புவான். முன்போல் இல்லாமல் அவனது வாழ்க்கையில் ஏற்படும் பல மாறுதல்களில் முதலாவதாக தோன்றும் மாறுதல் அவனது பேசும் பழக்கம். செயல்களை செய்வதற்காகவும் செய்விப்பதற்காகவும் தேவைபடும் பேச்சில் எவ்வித மாறுதலும் ஞானத்தினால் ஏற்படாது. ஆனால் தனது அறிவை அதிகப்படுத்திக்கொள்ளவும் மற்றவர்களின் அபிப்பிராயத்தை மாற்றவும் செய்யப்படும் கருத்துப்பரிமாற்றத்தில் முக்தியடைந்த பின் குறிப்பிடத்தக்க மாறுதல் இருக்கும்.

கருத்துபரிமாற்றம்

ஐம்புலன்கள் மூலம் பெறும் தகவல்களை அவரவர் அறிவுத்திறன் மற்றும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஆராய்ந்து கருத்துக்களாக மனதில் பதியவைத்து அதன் அடிப்படையில் செயல்படுவதால் மனிதர்களின் செயல்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. தேனீக்கள் அல்லது எறும்புகள் போல மக்கள் ஒற்றுமையாக செயல்பட இந்த அபிப்பிராய பேதங்கள் தடையாய் இருப்பதால் கருத்துபரிமாற்றம் அவசியமாகிறது. இருவரிடையே நடக்கும் கருத்துபரிமாற்றம் பேசுபவரின் நோக்கத்தைபொறுத்து ஜல்பம், வாதம், விதண்டாவாதம் மற்றும் சம்வாதம் என்று நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. முழு அறிவை அடைந்த முற்றுணர்ந்தோர் முதல் மூன்றுவகை கருத்துப்பரிமாற்றங்களில் பங்கேற்க மாட்டார்கள்.   

முதல் வகை: ஜல்பம்

எதிர் எதிரான கருத்துக்கள் கொண்டுள்ள இருவர் தனது கருத்தை மற்றவர் மீது திணிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் கருத்துபரிமாற்றம் செய்துகொள்வது ஜல்பம். பட்டிமன்றங்கள் இதற்கு உதாரணம். கடைசிவரை தான் சொல்வதையே சொல்லிக்கொண்டு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் மற்றவர்களின் பேச்சை இவர்கள் கவனிப்பார்கள். இருவரிடையே உள்ள உறவின் அடிப்படையில் ஜல்பம் மூன்றுவிதங்களாக பிரிக்கப்படும்.

முதல்விதம்: அடிமையிடம் ஆணையிடுவது போல
இரண்டாம்விதம்: நண்பனிடம் ஆலோசனை சொல்வது போல
மூன்றாம் விதம்: காதலனிடம் தேனொழுகும் வார்த்தைகளால் பேசுவது போல

பற்றுடையோர்கள் தங்களின் இன்பத்திற்கு உலகை நாடியிருப்பதால் தன்னுடன் உறவாடும் மனிதர்களை தங்கள் விருப்பபடி இயங்கவைக்க தங்களின் பேசும் திறனை உபயோகிப்பது அவசியமாகிறது. இவர்களின் வாழ்க்கையின் வெற்றி தோல்வி பெரும்பாலும் இந்த பேச்சுத்திறனின் அடிப்படையிலேயே அமைவதாக இவர்கள் நினைப்பார்கள். முடிவில் வேறு வழியின்றி ஒருவர் மற்றவர் கருத்தை ஏற்றுகொண்டு செயல்பட துவங்கினாலும் மனதின் முழுச்சம்மதம் இல்லாததால் இந்த ஒத்துழைப்பு வெகுகாலம் தொடர்வதில்லை.

முக்திவிழைவோர்கள் வேதம் படிக்க ஆரம்பித்ததும் இவ்வளவு நாட்கள் இந்த அறிவை பெறாமல் தாங்கள் வாழ்ந்தது குறித்து வருந்தி தங்கள் நண்பர்களும் உறவினர்களும் கூட முக்திவிழைவோர்களாக மாறவேண்டும் என்ற ஆதங்கத்தில் அவர்களுக்கு வேதாந்தத்தின் பெருமையை கூற முட்படுவர்.

முற்றுணர்ந்தோர்கள் தங்களின் விருப்பப்படி யாரையும் மாற்றவேண்டிய அவசியம் இல்லாதவர்கள். மேலும் மனப்பக்குவம் ஏற்பட்டால் மக்கள் தானாக வேதம் சொல்லும் கருத்தை கேட்க முற்படுவார்கள் என்பதை இவர்கள் அறிவதால் யாருக்கும் அவர்கள் கேட்காமல் தங்கள் கருத்தை சொல்ல மாட்டார்கள்.

இரண்டாம் வகை: வாதம்

உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் அல்லது நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உண்மையை முழுதும் அறியாத இருவரிடையே நடக்கும் கருத்து பரிமாற்றம் வாதம். ஒரு குருடன் மற்றொரு குருடனின் உதவியை நாடினால் இருவரும் கீழேவிழும் வாய்ப்பு இரட்டிப்பாவதுபோல வாதம் செய்பவர்களின் அறிவு அதிகரிப்பதற்கு பதில் மனக்கலக்கமும் குழப்பமும்தான் அதிகமாகும்.

உலக நிகழ்வுகளை சரி அல்லது தவறு என்று பிரிப்பது அவரவர் பார்வையை பொறுத்தது என்பதை உணராதவர்கள் பற்றுடையோர். தான் சிந்துவதுபோலன்றி வேறுவிதமாக மூக்கை சிந்துபவர்கள் தவறாக செய்கிறார்கள் என்பது இவர்களது அபிப்பிராயம். உலக அழகி அழகானவள் என்பது தவறு. அவள் அழகாக இருப்பதாக பலர் நினைக்கிறார்கள் என்பதுதான் சரி. அழகு என்பது பார்க்கப்படும் பொருளின் குணம் அல்ல. பார்ப்பவர்களின் மனதில் பதிவாகியுள்ள விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே ஒரு பொருள் அல்லது மனிதரின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. எனவே உண்மையை முழுதும் அறிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் வாதம் செய்வதனால் பயன் அதிகமிருக்காது.

செயலை நோக்கமாக கொண்டு செய்யப்படும் கருத்துபரிமாற்றம் ஜல்பம். அறிவை நோக்கமாக கொண்டு செய்யப்படுவது வாதம். எனவே பற்றுடையோர்களைவிட முக்திவிழைவோர்கள் வாதத்தில் அதிகம் ஈடுபடுவர். உண்மை எது என்பதை வாதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்ற மனப்பக்குவம் ஏற்பட்டபின் முக்திவிழைவோர்கள் வாதம் செய்வதை நிறுத்திக்கொள்வார்கள்.

தொடர்ந்து மாறும் உலகம் மாயை என்பதால் எந்த துறையிலும் முடிவான அறிவை யாராலும் அடைய முடியாது. வேதம் கூறும் முடிவான அறிவை அடைந்தவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுடன் தொடர்புடைய அறிவை அதிகப்படுத்திக்கொள்ள மற்றவரை குருவாக ஏற்றுக்கொண்டு சம்வாதம் செய்வார்களே தவிர வாதம் செய்ய மாட்டார்கள்.  

மூன்றாம் வகை: விதண்டாவாதம்.

மற்றவர் என்ன சொன்னாலும் அதை மறுத்து அவர் சொல்வது தவறு என்று நிருபிக்கவேண்டும் என்ற பிடிவாதத்துடன் பேசுவது விதண்டாவாதம். சொல்பவர் அடுத்த கட்சியை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அவர் என்ன சொன்னாலும் அதை மறுத்து பேசவேண்டும் என்பதை மரபாககொண்ட சட்ட சபை மற்றும் பாராளுமன்றங்களில் இவ்வகை கருத்துபரிமாற்றங்கள் நடக்கும். உண்மை என்ன என்பதைபற்றியோ எது நல்லது என்பதைபற்றியோ எவ்வித அக்கறையும் இல்லாமல் மற்றவரை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் நடக்கும் விதண்டாவாதங்களின் ஒரே பயன் நேரத்தை வீணடிப்பது மட்டும்தான்.

ஒருவர் வாதம் செய்கிறாரா அல்லது விதண்டாவாதம் செய்கிறாரா என்பதை கண்டுபிடிக்க அறிவுக்கூர்மை அவசியம். முக்திவிழைவோர்களில் சிலர் தங்கள் அறிவுக்கூர்மையை அதிகபடுத்திக்கொள்ள வேண்டுமென்றே விதண்டா வாதத்தில் ஈடுபடலாம். எதையும் மறுப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. அது ஒரு பழக்கமாகிவிட்டால் சம்வாதம் செய்வது கடினமாகிவிடும். எனவே விதண்டா வாதம் செய்வதை முழுவதும் நிறுத்தினால்தான் உண்மையை அறியும் வாய்ப்பு உண்டாகும்.
விதண்டாவதத்திற்கு சரியான மறுமொழி மௌனம் மட்டுமே.

நான்காம் வகை: சம்வாதம்

யாரும் யாரையும் மாற்ற முடியாது. தன்னால் மாற்றக்கூடிய ஒரே ஆள் தான் மட்டுமே என்பதை உணர்ந்து தனது அறியாமையை அகற்ற மற்றவருடன் உரையாடுவது சம்வாதம். தான் முன்னேற தேவையான அறிவை பெறவேண்டும் என்ற தாகத்துடன் ஒருவரும் எவ்வித சுயநலத்தையும் கருதாமல் அவருக்கு உதவவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மற்றவரும் கருத்துபரிமாற்றம் செய்துகொள்வது சம்வாதம் என்ற உயர்ந்த வகையைச்சேரும்.

சம்வாதத்தில் ஒருவர் தன்னை மாணவனாகவும் மற்றவர் தன்னை ஆசிரியனாகவும் கருதுவது மிக அவசியம். எனக்குத்தெரிந்ததை நான் சொல்கிறேன், உனக்கு தெரிந்ததை நான் உன்னிடமிருந்து கற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் நடப்பது வாதம், சம்வாதம் அல்ல. தன்னைவிட மற்றவருக்கு அதிகம் தெரியும் என்ற நம்பிக்கையுடன் அவரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அறிவை பெறமுடியும். உலக அறிவு அனைத்துக்கும் இந்த உண்மை பொருந்தும்.    

உண்மையிலேயே ஆசிரியருக்கு அறிவு இருக்கிறதா என்பது முக்கியமல்ல. அவர் சொல்வது தவறாகவே இருந்தாலும் அதை தவறு என்று அறிந்துகொள்ளும் அளவுக்கு மாணவனின் அறிவு வளரவேண்டும். எனவே அதுவரை அவரை ஆசிரியராக கருதுவதைத்தவிர வேறு வழியில்லை. ஆசிரியர் சொல்வதை முழுவதுமாக கேட்டு கேட்ட தகவல்களை முறையாக ஆராயவேண்டும். அதன் பின் முரணான கருத்துக்களுக்கு ஆசிரியரிடம் விளக்கங்கள் கேட்டு அறிவை பெற வேண்டும். இந்த நிலையை அடையும்பொழுதுதான் ஆசிரியர் சொல்வது தவறு என்ற முடிவை மாணவனால் எடுக்கமுடியும். அதன்பின் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு சரியான அறிவை அடைய வேறு ஆசிரியரை தேடவேண்டும்.

மாணவனுக்கு அறிவைகொடுக்கும் சக்தி எந்த ஆசிரியருக்கும் கிடையாது. கிருஷ்ண பரமாத்மாவாலேயே தன்னிடம் மாணவனாக சரணடைந்த அர்ஜுனனை முற்றுணர்ந்தோனாக மாற்ற முடியவில்லை என்பதிலிருந்து அறிவை பெறுவது மாணவனின் திறனை மட்டுமே பொறுத்துள்ளது என்பதை அறியலாம். திறமையான மாணவன் யாரிடமிருந்துவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஏணியை உபயோகித்து நாம் தான் ஏற வேண்டுமே தவிர ஏணி நம்மை ஏற்றிவிடாது. அதுபோல் ஆசிரியரின் அறிவை மாணவன்தான் முயன்று பெற வேண்டும். ஆசிரியர் கேட்டால் மட்டுமே தனது கருத்தை மாணவன் கூறலாம். சம்வாதங்களில் அறிவு ஒருவழிப்பாதையில் செல்வதால் ஆசிரியரிடமிருந்து அறிவை பெறுவது மாணவனுக்கு எளிதாகிறது.

ஞானி பேசுவான்

தொழில் கல்வி கற்பது, தொழில் செய்வது, குடும்பத்தை நடத்துவது போன்ற கடமைகளை ஞானம் பெற்றபின்னும் ஞானி தொடர்ந்து செய்வான். இந்த கடமைகளை நிறைவேற்ற மற்றவர்களைப்போல் அவன் தொடர்ந்து பேசுவான். ஞானி பேசமாட்டான் என்பதற்கு ஒருவரின் கருத்தை மாற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆசிரியனாக சம்வாதம் செய்வதைத்தவிர மற்ற வகை கருத்துபரிமாற்றங்களில் அவன் ஈடுபடுவதில்லை என்பது மட்டும்தான் பொருள்.

புலன்களும் கரணங்களும்

ஞானம் பெற்றபின் ஞானி பேசமாட்டான் என்ற கருத்தை கூறுவது பேச்சுக்கு மட்டுமின்றி மற்ற புலன்களுக்கும் கரணங்களுக்கும் பொருந்தும் என வேதம் கூறுகிறது. தான் மட்டும்தான் உண்மையில் இருப்பவன் என்றும் இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும் அறிந்தபின் வாழ்வில் செய்யவேண்டிய செயல்களோ அடையவேண்டிய பொருள்களோ ஏதுமில்லை என்பதால் ஞானி தன் புலன்களையும் கரணங்களையும் உபயோகப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

கண்ணால் காண்பதனைத்தும் பொய் என்ற அறிவு ஏற்பட்டதும் ஒரு குறிப்பிட்ட காட்சியை காணவேண்டும் என்று ஆசை ஏற்படாது. மாறும் உலகின் மாறுதல்கள் தொடர்ந்து நடைபெறும் என்ற உண்மையை அறிந்தபின் மாற்றங்களைப்பற்றிய செய்தி அனாவசியம். சுற்றி நடக்கும் வாழ்க்கையே நாடகம் என்பதால் தனியாக சினிமா அல்லது தொலைக்காட்சியை பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது. தங்கள் சுற்றத்தார்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை அவர்கள் சந்திக்கும் விதம் அறியாசிறுவர்களின் விளையாட்டு போல் இருப்பதால் அவர்களுடன் சேர்ந்து விளையாடும் ஆசை ஏற்படாது. அவர்களின் திருப்திக்காக ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் அல்லது பத்தாம் நாள் படையல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அவர்களது நிலைக்கு இறங்கி அவர்களுடன் ஒருவனாக நடந்து கொள்வதை ஞானி முடிந்தவரை தவிர்த்துவிடுவான்.

சிறுவர்கள் ஒரு கை குறைகிறது என்ற காரணத்திற்காக பெரியவர் ஒருவரை தங்கள் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டால் ஆட்டத்தின் விதிகளை பின்பற்றி ஆடுவதை அவர் தன் கடமையாக செய்வாரேயன்றி மற்ற சிறுவர்களைப்போல் அவர் கேலிபேச்சிலும் சச்சரவுகளிலும் பங்கேற்கமாட்டார். அது அவரால் முடியவும் முடியாது. அதேபோல் ஞானி காட்சிக்கு மற்றவர்களைப்போல் வாழ முயன்றாலும் அவர்களுக்கு ஈடாக அரசியல் பேசுவது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன பொருள்களைப்பற்றி அளவளாவுவது அல்லது சமூகநிகழ்வுகளை விமரிசிப்பது போன்ற செயல்களை செய்யமாட்டான்.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாய் வைத்திருக்க தேவையான செயல்களை மட்டுமே ஞானி செய்வான். வாழ்வில் நேரும் அனைத்து அனுபவங்களையும் இது நல்லது அது கெட்டது என்று பாகுபாடு செய்யாமல் அனுபவிப்பான். வாழ்க்கையே ஒரு சுற்றுலா என்றும் தான் உலவும் உலகே ஒரு கேளிக்கை மைதானம் என்றும் ஞானி உணர்ந்திருப்பதால் அனுபவங்களைத்தேடி அலையவேண்டிய அவசியம் அவனுக்கு கிடையாது

கிடைத்த உணவை சுவைத்து உண்ணுவான். காதில்விழும் செய்திகளையும் பாடல்களையும் அனுபவிப்பான். கையில் கிடைத்த புத்தகங்களை படிப்பான். கடற்கரையில் உலாவரும்பொழுது பார்க்கும் மனிதர்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்களின் காரணங்களை கற்பனை செய்து மகிழ்வான். குறையாத இன்பமுடனும் தடைபெறாத அமைதியுடனும் வாழ இதுதான் வேண்டும் என்று எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாததால் கிடைப்பதை அனுபவிப்பதைத்தவிர ஞானியின் புலன்களுக்கும் கரணங்களுக்கும் வேறு வேலையில்லை.

சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளில் மற்றவர்களை தன் வழிக்கு கொண்டுவரும் முயற்சியை ஞானி தன் சுயநலத்திற்காக செய்யமாட்டான். ஆனால் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சரிவர செய்ய இந்த முறைகளை அவன் தர்மபடி கையாளுவதில் தயக்கம் காட்ட மாட்டான். எனவே ஒருவர் ஞானியா என்பதை அவரது செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.

முடிவுரை :

வாழ்வில் துன்பத்தை அகற்றி என்றும் இன்பமாக வாழும் வழி எது என்ற தேடல் ஞானம் பெற்றதும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவதால் ஞானியின் ஐம்புலன்கள் மற்றும் மூன்று கரணங்களின் செயல்பாடுகள் அடங்கிவிடும். நீண்ட பயணத்திற்கு பின் வீடுபேற்றை அடைந்துவிட்டதால் இனி நிம்மதியாக வாழும் வாய்ப்பு ஞானிக்கு கிடைக்கிறது.

கை சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க அதை சாக்கடையில் வைத்து அழுக்காக்கி அதன் பின் கழுவவேண்டும் என்ற அவசியமில்லை. இதை அறியாமல் நிம்மதியாக இருக்க கடுமையாக உழைத்து அதன்பின் விடுமுறையில் ஓய்வெடுக்க பலர் முயல்கிறார்கள். இதுபோல் எவ்வித நோக்கமும் இல்லாததால் ஞானியின் புலன்களும் கரணங்களும் எதையும் தேடி அலைவதில்லை.

பரந்த உலகத்தில் இன்பத்தை தேடியலையும்பொழுது புலன்களும் கரணங்களும்  மனிதனுக்கு தேவைப்படும். இன்பத்தின் உண்மையிருப்படத்தை அறிந்தபின் அவற்றின் தேவை மறைந்துவிடும்.

நிறுவனத்தின் தலைவருடன் உரையாட அவருக்கு நிகராக இருப்பவர்கள் குறைவு என்பதால் அவரால் கீழ்மட்டத்தில் வேலைசெய்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுபோல் யாருடனும் பேச முடியாது. அதுபோல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுபடிகளையும் கடந்து வாழ்வின் உயர்ந்த குறிக்கோளான வீடுபேற்றை அடைந்த ஞானிகளுடன் உரையாட அவருக்கு நிகராக இருப்பவர்கள் குறைவு. பரமரகசியத்தை உணர்ந்தபின் வாழ்வை ஒரு புதிராக நினைத்து அதில் எந்தப்பாதையில் எப்படி பயணிக்கவேண்டும் என்பதை அறியாமல் தவிக்கும் மற்றவர்களுடன் அவர்களுக்கு இணையாக ஞானியால் பேசமுடியாது.

எனவே ஞானி பேசமாட்டான். அவனது புலன்கள் மற்றும் கரணங்களின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும்.

பயிற்சிக்காக :

1. கருத்துபரிமாற்றம் என்றால் என்ன?

2. அது எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

3. ஞானி பேச மாட்டான் என்பதற்கு காரணங்கள் யாவை?

4. ஞானி பேசுவான் என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. தேனீக்கள் அல்லது எறும்புகளைப்போல் மக்கள் ஏன் ஒன்றுபட்டு செயல்படுவதில்லை?

2. அனைவரிடமும் கலகலப்பாக பேசுபவன் ஞானம் பெற்றதும் அமைதியானவனாக மாறிவிடுவானா?

3. எந்த துறையிலும் முழுவதுமான அறிவைப்பெறமுடியாது என்பதை உணரும் காரணத்தால் மட்டுமே PhD என்ற பட்டம் வழங்கப்படுகிறது என்பதை அதன் பெயர் காரணத்தை ஆராய்ந்து அறிக.


Wednesday, February 8, 2012

Lesson 167: The Knower becomes one with Brahman (Brahmasutra 4.1.19)


பாடம் 167: பரமனை அறிந்தவன் பரமனாகிவிடுவான்
பாடல் 496 (IV.1.19)

வாழும்பொழுது பரமனை அறிந்தவன் இறந்தவுடன் மீண்டும் பிறப்பதில்லை. அவன் பரமனுடன் ஒன்றாகிவிடுகிறான் என்று பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் (4.4.6) குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி ஞானம் எவ்வாறு துன்பங்களிலிருந்து முழு விடுதலையளிக்க உதவுகிறது என்பதை இந்த பாடம் தெளிவுபடுத்துகிறது.

உயிரினங்களுக்கும் ஜடப்பொருள்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெளிவாக அறியாதவர்கள் பற்றுடையோர்கள். அறிவியலால் இந்த அறிவைத்தர முடியாது என்று புரிந்ததும் வேதம் படித்து உயிருடன் உலவ நுண்ணிய உடல் தேவை என்ற அறிவைப்பெற்றவர்கள் முக்திவிழைவோர்கள். உலகில் இருப்பவை அனைத்தும் ஜடப்பொருள்கள் மட்டுமே என்று அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்.

தான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் தனக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்ற உண்மையை உணராதவரை துன்பங்களை முழுதாக தவிர்க்க முடியாது.

கனவில் காணும் கனவு

கனவில் தென்படும் நாற்காலியும் அதில் அமர்ந்துள்ளவரும் மனதில் தோன்றும் எண்ணங்களால் உருவாக்கப்பட்டவை. அதேபோல் ஜடமான மாயாசக்தியால் உருவான பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஜடப்பொருள்களாகத்தான் இருக்க முடியும். ஒளியை பிரதிபலிக்கும் தன்மை இருந்தாலும் கண்ணாடி கல்லைப்போல் ஒரு ஜடப்பொருளே. அதேபோல் பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் தன்மை உள்ள மனமும் மின்சாரத்தைப்போல் ஒரு ஜடம்தான். கனவு கலைந்தவுடன் கண்ணில் தெரியும் உலகம் நிஜம் என்ற எண்ணம் இருக்கும்வரை அதில் உயிரினங்களும் ஜடப்பொருள்களும் இருப்பதாக தோன்றும். காண்பது நிஜமல்ல என்ற ஞானம் ஏற்பட்டவுடன் ஒளி, ஒலி ஆகிய ஜடப்பொருள்களால் மட்டுமே உருவான உலகிலிருந்து துன்பம் முழுதாக மறைந்துவிடும்.

கனவிலிருந்து விடுதலை

இரவில் காணும் கனவு தானாக முடிந்துவிடும். விழித்ததும் தொடரும் கனவை கனவு என்று புரிந்து கொள்ள வேதம் பயின்ற ஆசிரியரின் துணைதேவை. கனவை கனவு என்று புரிந்துகொண்டாலும் அது மரணம் வரைதொடரும். எனினும் உலகம் நமக்கு துன்பத்தை தரும் சக்தியை இழந்துவிடும். முற்றுணர்ந்தோர்கள் வாழ்வை கனவு என்று அறிந்தவர்கள் என்பதால் அதிலிருந்து விடுதலை பெற்றவர்கள்.

வாழ்க்கையின் உண்மைத்தன்மையை ஆராயாத பற்றுடையோர்கள் கனவு மற்றும் நனவு ஆகிய இரண்டிலும் துன்பபடுவார்கள். இவர்களது துன்பம்  மரணத்தில் கூட முடிவதில்லையென்றும் பிறப்பு இறப்பு என்ற மீளாச்சுழலில் அகப்பட்டு ஞானம் பெறும்வரை அலைக்களிக்கப்படுவார்கள் என்றும் வேதம் கூறுகிறது. ஏன் என்ற கேள்வியை கேட்டு வேதம் படித்த ஆசிரியர்களின் உதவியுடன் பதிலை ஆராயும் முக்திவிழைவோர்கள் காரண உடல், நுண்ணிய உடல், பருவுடல் என்ற மூன்று பிரிவுகளையும் அவற்றின் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். தீவிர ஆய்வுக்குப்பின் இவையனைத்தும் மாயை என்ற உண்மையை புரிந்துகொள்ளும்பொழுது முற்றுணர்ந்தோர்களாக மாறி இவர்கள் கனவிலிருந்து விடுதலைபெறுகிறார்கள். காண்பது கனவு என்று அறிந்தபின் இந்த வாழ்வை துன்பம் கலக்காத இன்பத்துடன் மரணம் வரை தொடர்ந்து அனுபவிக்கும் இவர்கள் மரணத்திற்குப்பின் மீண்டும் பிறப்பதில்லை.

துன்பத்திலிருந்து விடுதலை பெற கூரிய பகுத்தறிவு அவசியம். எதற்கு செயல்களை செய்கிறோம் என்ற கேள்வியை கேட்காமல் உழைக்கும் பற்றுடையோர்களும் வேதம் தரும் செய்தியை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும் முக்திவிழைவோர்களும்  உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிவதில்லை. உலகம் உண்டானபொழுது உடன் உருவாகிய வேதம் என்ற அடுக்குப்பெட்டியை குருவின் உதவியுடன் பகுத்தறிவு என்ற சாவிகொத்தில் இருக்கும் சரியான சாவிகளை உபயோகித்து திறந்த ஞானிகள்  துன்பத்திலிருந்து முழுவிடுதலையடைவார்கள்.  

கனவுக்கோட்டையின் திறவுகோல்

இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுதலைபெறத்தேவையான பகுத்தறிவு என்ற திறவுகோல்கள் ஒவ்வொரு மனிதனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாயச்சிறையிலிருந்து முழுவதுமாக வெளியேற நான்கு கதவுகளை திறக்கவேண்டும். வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவதை தவிர்க்க முடியாது என்று பகுத்தறிவை பயன்படுத்தாமல் வாழ்பவர்கள் என்றும் விடுதலை அடைவதில்லை. துன்பத்தை முழுவதுமாக தவிர்க்க முடியும் என்ற உண்மையை சுட்டிக்காட்டவே வாழ்வு துன்பகரமானது என்று புத்தர் போதனை செய்தார் என்று உணர்பவர்கள் தங்கள் பகுத்தறிவை சரியாக  உபயோகித்து அனைத்து கதவுகளையும் திறந்து முக்தியடைவர்.

முதல் கதவு: செய்தல்

ஐந்து புலன்களின் மூலம் உலகின் இருப்பை அறியும் மனிதன் அவற்றின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விரும்புவதை நாடியும் வெறுப்பதை தவிர்க்கவும் பகுத்தறிவை பயன்படுத்தி செயல்களை செய்கிறான். அவன் செய்யும் செயல்கள் அவனது விருப்பு வெறுப்புகளை மேலும் அதிகபடுத்துகின்றன.

இலை தழைகளை உடையாய் உடுத்தியிருந்த காலத்திலிருந்து பருத்தி, பட்டு என படிப்படியாக முன்னேறியபின்னும் கடைகளில் இருக்கும் எண்ணிலடங்கா வண்ண உடைகளில் எதுவும் பிடிக்கவில்லை என்ற நிலை தொடர்ந்து நீடிக்கும் அளவுக்கு மனிதனின் விருப்பு வெறுப்புகளின் நுட்பமும் தாக்கமும் அதிகரித்துள்ளன.

எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வரவேண்டும் என்று வரம் பெற்ற வாலியை போல் உழைப்பில் பாதி புலன்களின் விருப்பு வெறுப்புகளை அதிகரிக்க செலவாகிவிடுகிறது என்பதை உணர்ந்தவுடன் வெளியுலகில் எவ்வளவு செயல்கள் செய்தாலும் துன்பத்திலிருந்து விடுதலை அடைய முடியாது என்ற அறிவு மனிதனுக்கு ஏற்படும். செயல்களை ஏன் செய்கிறேன் என்ற கேள்விக்கு அனுபவத்தின் மூலம் பதிலை அறிந்து கொள்ள முடியாது என்பதை அறிந்தவுடன் வேதத்தை  கற்றல் என்ற அடுத்த கதவை திறக்க மனிதன் முயற்சி செய்வான்.

இரண்டாம் கதவு: கற்றல்

தனக்கும் உலகத்திற்கும் உள்ள உறவு மற்றும் செயலுக்கும் அதனால் விளையும் பலனுக்கும் உள்ள உறவு போன்றவற்றை புரிந்து கொள்ளவே முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தபின் மனிதன் வேதம் தரும் உண்மைகளை அறிந்து கொள்ள தன் பகுத்தறிவை உபயோகப்படுத்துகிறான்.

பாவ புண்ணியங்கள் பதிவாகியிருக்கும் காரண உடல், புத்தி, மனம், புலன்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நுண்ணிய உடல், மறுபிறவி, பிறவிகள்தோறும் அதிகரிக்கும் அறிவாற்றல் மற்றும் செயல் திறன் ஆகியவற்றை அவனுக்கு வேதம் அறிமுகபடுத்துகிறது. புரியாத புதிராக இருந்த வாழ்க்கை புரிய ஆரம்பிக்கிறது. ஏன் வேலை செய்தாலும் பலன் கிடைப்பதில்லை, ஏன் சில சமயம் முயற்சி எதுவும் செய்யாமலேயே தேடிவது கிடைத்துவிடுகிறது, ஏன் இந்த சோக நிகழ்வு ஏற்பட்டது என்பது போன்ற கேள்விகள் அவனை வாட்டுவதில்லை. இதுதான் உலகம், இதில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எவ்வித முரண்பாடுகளும் இல்லாத தெளிவான பாதையை வேதம் காண்பிப்பதால் அதில் முறையுடன் பயணம் செய்தில் ஒரு சிலர் திருப்தியடைந்து விடுகிறார்கள்.

செயல் செய்வதற்கு மட்டும்தான் தனக்கு அதிகாரமிருக்கிறது என்றும் பலனை கொடுப்பது இறைவன் கையில் இருக்கிறது என்றும் வேதம் கூறும் கருத்தை ஏற்றுக்கொண்டு அதர்மங்களை தவிர்த்து புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் அடுத்துவரும் பிறவிகளில் நிச்சயம் முக்தி அடையலாம் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் தொடர்ந்து செயல்களை செய்து இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டு வாழ்வார்கள்.

ஏன் துன்பம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு சரியான பதிலை கொடுத்தால் மட்டும் போதாது என்றும் துன்பத்தை முழுவதும் தவிர்ப்பது எப்படி என்ற கேள்விக்கும் வேதம் பதில் சொல்லியாகவேண்டும் என்றும் தொடர்ந்து வேதத்தை ஆராயும் மனிதர்கள் மட்டுமே இந்தப்பிறவியிலேயே முக்தியடையவேண்டும் என்ற தீவிர ஆசை உடையவர்கள். இவர்களால் மட்டுமே அடுத்த கதவை திறக்க முடியும்.

மூன்றாம் கதவு: கசடற கற்றல்

எவ்வித முரண்பாடும் இல்லை என்பதற்காக உலக நிகழ்வுகளுக்கு வேதம் தரும் விளக்கங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றின் உட்கருத்தை தங்கள் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய முட்படுபவர்கள் இந்த மூன்றாம் நிலையை கடக்க தேவையான திறவுகோலை தேடி எடுப்பார்கள்.

பாவபுண்ணியங்கள் எங்கனம் காரணஉடலில் பதிவாகிறது, அவை எப்பொழுது எவ்வளவு பலனை கொடுக்கும் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது, இறந்த பின் நுண்ணிய உடல் எந்த பாதையில் பயணம் செய்து எவ்வாறு மறுபிறவி எடுக்கிறது என்பது போன்ற ஆராய்ச்சியில் இறங்குபவர்கள் தவறான திறவுகோலால் இந்த கதவை திறக்க முனைபவர்கள். இதுபோன்ற கேள்விகளுக்கு வேதம் சரியான பதில் கொடுக்க தயாராய் இருந்தாலும் இவற்றை அறிந்து கொள்வதால் துன்பங்களை தவிர்க்க முடியாது என்று உணர்பவர்களுக்கு சரியான திறவுகோல் தென்படும்.

செயல்கள் செய்வதால் விருப்பு வெறுப்புகள் வளர்கின்றன என்பது உண்மை. ஆனால் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதும் அவற்றில் எது செயலாக மாறுகிறது என்பதும் என் கட்டுப்பாட்டில் இல்லாதபொழுது என் விருப்பு வெறுப்புகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்கமுடியும் என்று இவர்கள் ஆராய்ந்து செயல் என்பதே ஒரு காட்சிபிழை என்ற முடிவுக்கு வருவார்கள். செயலின் பலன் தானாக கிடைக்கும் என்று முதலில் கூறும் வேதம் அடுத்து செயலை செய்வதும் தானாகத்தான் நடக்கிறது என்று கூறுவதை இவர்கள் புரிந்துகொள்வார்கள்.

வேதம் கூறும் கருத்துக்கள் அனுபவத்திற்கு பொறுத்தமாயும் தர்க்க அறிவுக்கு ஏற்புடையதாகவும் இருந்தாலும் அறிவியல் அறிவால் அவற்றை நிரூபிக்க முடியாது. அதற்கு அவசியமுமில்லை. வேதத்தின் ஒரே குறிக்கோள் மனிதனின் துன்பத்தை முழுவதும் அகற்றுவது என்பது மட்டுமே. எனவே நீதான் பரமன் மற்றும் இவ்வுலகம் மாயை என்ற வேதங்களின் மையக்கருத்தை மட்டும் பகுத்தறிவால் ஆராய்ந்து மாயை என்பதை புரிந்துகொள்ள முடியாது என்று புரிந்துகொள்பவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு முன்னேற தகுதி பெற்றவர்கள்.

நான்காம் கதவு: நிற்றல்

என்ன செயல்கள் செய்கிறோம் என்பது தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்தவுடன் காரண உடலில் பதிவாகியிருந்த அனைத்து கர்மபலன்களும் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவா வரத்தை முற்றுணர்ந்தோர்கள் பெறுவார்கள்.

கூரிய பகுத்தறிவு என்ற திறவுகோலால் மட்டுமே இந்த கதவை திறக்க முடியும். வேதம் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை ஆய்ந்து அதன் மையக்கருத்தை தனதாக்கி கொண்டபின் வேதம் இவர்களுக்கு தேவையில்லை. ஆனால் கனவில் தோன்றிய  புலி பொய் என்றாலும் அது நம்மை பயமுறுத்தி துன்பம் தரும் கனவிலிருந்து விழிப்படைய உதவி செய்ததால் அது நன்றிக்குரியது என்பது போல் துன்பம் தரும் வாழ்வு என்னும் கனவிலிருந்து விழித்தெழ உதவிய வேதமும் போற்றுதலுக்குரியது. காண்பது கனவு என்று கூறும் வேதமும் கனவின் ஒரு பகுதியென்பதால்தான் உலகம் தோன்றியபோது அது உடன் தோன்றியது என்ற கருத்து ஆசிரியர்களால் போதிக்கப்படுகிறது.

அறிவுணர்வாயும் ஆனந்தமயமாயும் என்றும் இருக்கும் பரமன் நான் என்ற அறிவு வேதம் மூலமாக மட்டுமே நமக்கு கிடைக்கப்பேறும். உலகம் மாயை என்பதை எடுத்த எடுப்பிலேயே வேதம் நமக்கு எடுத்துரைத்தாலும் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது பகுத்தறிவு கூர்மையில்லாதால் படிப்படியாக நமக்கு அந்த உண்மையை புரியவைத்தது. செயல்கள் செய்து பலனை அனுபவிப்பவன் என்ற நிலையிலிருப்பவனை ஒன்றும் செய்யாமல் இருக்கும் பரமன் நீ என்று சொன்னால் புரியாது என்ற காரணத்தால் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பை மூன்று உடல்கள், மறுபிறவி, பிறவிகள்தோறும் தொடரும் கர்மபலன் போன்ற கருத்துக்களால் விளக்கி முடிவில் அனைத்தும் மாயை என்ற உண்மையை வேதம் தருகிறது. உண்மையில் இருப்பது நான் மட்டுமே என்றும் இருப்பதுபோல் தோன்றும் இந்த ஜடமான உலகம் மாயை என்றும் புரிந்துகொள்பவர்கள் இந்த பிறவியிலேயே முக்தியடைந்து துன்பம் கலக்காத இன்பவாழ்வு வாழ்வார்கள். பரமனாகவே இருப்பவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது.

முடிவுரை :

ஏற்றிவிட உதவுவது ஏணி. ஏணியிலேயே நின்றுகொண்டு மேலே ஏறாதவர்களுக்கு ஏணியினால் எந்த பயனும் இல்லை. காண்பது கனவு என்ற உண்மையை நமக்கு உணர்த்த பல்வேறு படிகளை கொடுத்து உதவும் வேதம் அந்த படிகளை நாம் கடந்தவுடன் அவை அனைத்தும் பொய்யான கனவைச்சேர்ந்தவை என்று நாம் உணர்வோமென எதிர்பார்க்கிறது. இல்லாத உலகத்தை இருப்பதாக நாம் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இல்லாததை இருப்பதாக வேதம் சொல்கிறது. கண்ணுக்குத்தெரியும் உலகத்தை இல்லை என்று நிரூபிக்க கண்ணுக்குத்தெரியாத கடவுளை நமக்கு அறிமுகப்படுத்தி படிப்படியாக நமது பகுத்தறிவை கூர்மைப்படுத்தி வேதம் நமக்கு உண்மையை புரியவைக்கிறது.

அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடங்காத வேட்கை மனிதனை தொடர்ந்து தேடலில் ஈடுபடுத்தும். அறிவு ஏற்படும் மனம் என்பதே ஒரு ஜடப்பொருள் என்றும் அது இருப்பதுபோல் தோன்றும் மாய உலகத்தின் ஒரு பகுதி என்பதும் புரிந்து விட்டால் மனதின் தேடல் ஒரு முடிவுக்கு வந்துவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி மறைந்துவிடுவதால் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

இந்த விளக்கங்களை புரிந்துகொண்டு அந்த அறிவில் நிலையாய் நிற்கும் முற்றுணர்ந்தோர்கள் வாழ்வின் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். இவர்கள் மரணமடைந்தவுடன் இவர்களது பருவுடல் உலகின் பஞ்சபூதங்களுடனும் நுண்ணியவுடல் கடவுளின் நுண்ணியவுடலுடனும் கலந்து விடுவதால் மறுபடியும் பிறக்காமல் இவர்கள் பரமனாகவே மாறிவிடுகிறார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. நான் பரமன் என்ற வேதத்தின் மையக்கருத்தை தனது கூரிய பகுத்தறிவால் ஆய்ந்து அறிந்துகொண்டவன் துன்பத்திலிருந்து முழுவதும் விடுதலையடைவதால் மீண்டும் பிறப்பதில்லை என்ற கருத்துடன் நான்காவது அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. மனிதனும் அவன் அமர்ந்திருக்கும் நாற்காலியும் எப்படி ஒன்றாக முடியும்?

2. கனவுக்கோட்டையை கடக்க நாம் திறக்க வேண்டிய நான்கு கதவுகள் யாவை?

3. கதவுகளின் திறவுகோல் என்பது யாது?

4. எந்த திறவுகோலை உபயோகிப்பது என்பதை தீர்மானிப்பது யார்?

5. வேதங்களின் ஒரே குறிக்கோள் எது?

6. வேதங்களின் மையக்கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. வேதம் உண்மையை விளக்க கொடுத்த படிக்கட்டுக்கள் யாவை?

2.இந்த படிக்கட்டுக்களின் மூலம் வேதம் தரும் உண்மை என்ன?

3. வேதம் தரும் விளக்கங்களை அறிவதால் ஏற்படும் பயன் என்ன?

4. உலகம் தோன்றியபொழுது உடன் தோன்றியது வேதம் என்பதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் தகவல் என்ன?

5. ஆதிசங்கரர் எழுதிய நிர்வாண சதகம் என்ற பாடலைப்படிக்கவும்.