பாடம் 168:
ஞானி பேச மாட்டான்
பாடல்
497-498
(IV.2.1-2)
ஞானம் ஏற்பட்டவுடன்
முக்திவிழைவோன் மனதளவில் மரணமடைந்து ஞானியாக மாறும்பொழுது முன்போல் அவன் பேசுவதில்லை
என்ற கருத்து இந்த பாடத்தில் விளக்கப்பட்டு இதுபோல் அன்றாட வாழ்வில் ஞானம் தரும் பயன்களை
இந்த நான்காம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி ஆராயத்தொடங்குகிறது.
கூட்டுக்குள்
தவமிருந்த கம்பளிபுளு பட்டுப்பூச்சியாக வெளிவந்து பறப்பதுபோல முக்திவிழைபவன் வேதத்தின்
மையக்கருத்தை கருவாக ஏற்று அதன்மேல் தியானம் செய்தபின் முற்றுணர்ந்தோனாக மலர்ந்து உலகில்
மணம் பரப்புவான். முன்போல் இல்லாமல் அவனது
வாழ்க்கையில் ஏற்படும் பல மாறுதல்களில் முதலாவதாக தோன்றும் மாறுதல் அவனது பேசும் பழக்கம்.
செயல்களை செய்வதற்காகவும் செய்விப்பதற்காகவும் தேவைபடும் பேச்சில் எவ்வித
மாறுதலும் ஞானத்தினால் ஏற்படாது. ஆனால் தனது அறிவை அதிகப்படுத்திக்கொள்ளவும்
மற்றவர்களின் அபிப்பிராயத்தை மாற்றவும் செய்யப்படும் கருத்துப்பரிமாற்றத்தில் முக்தியடைந்த
பின் குறிப்பிடத்தக்க மாறுதல் இருக்கும்.
கருத்துபரிமாற்றம்
ஐம்புலன்கள்
மூலம் பெறும் தகவல்களை அவரவர் அறிவுத்திறன் மற்றும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்
ஆராய்ந்து கருத்துக்களாக மனதில் பதியவைத்து அதன் அடிப்படையில் செயல்படுவதால் மனிதர்களின்
செயல்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. தேனீக்கள் அல்லது
எறும்புகள் போல மக்கள் ஒற்றுமையாக செயல்பட இந்த அபிப்பிராய பேதங்கள் தடையாய் இருப்பதால்
கருத்துபரிமாற்றம் அவசியமாகிறது. இருவரிடையே நடக்கும் கருத்துபரிமாற்றம்
பேசுபவரின் நோக்கத்தைபொறுத்து ஜல்பம், வாதம், விதண்டாவாதம் மற்றும் சம்வாதம் என்று நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
முழு அறிவை அடைந்த முற்றுணர்ந்தோர் முதல் மூன்றுவகை கருத்துப்பரிமாற்றங்களில்
பங்கேற்க மாட்டார்கள்.
முதல் வகை:
ஜல்பம்
எதிர் எதிரான
கருத்துக்கள் கொண்டுள்ள இருவர் தனது கருத்தை மற்றவர் மீது திணிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன்
கருத்துபரிமாற்றம் செய்துகொள்வது ஜல்பம். பட்டிமன்றங்கள்
இதற்கு உதாரணம். கடைசிவரை தான் சொல்வதையே சொல்லிக்கொண்டு சரியான
விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் மற்றவர்களின்
பேச்சை இவர்கள் கவனிப்பார்கள். இருவரிடையே
உள்ள உறவின் அடிப்படையில் ஜல்பம் மூன்றுவிதங்களாக பிரிக்கப்படும்.
முதல்விதம்: அடிமையிடம் ஆணையிடுவது
போல
இரண்டாம்விதம்: நண்பனிடம் ஆலோசனை
சொல்வது போல
மூன்றாம் விதம்: காதலனிடம் தேனொழுகும்
வார்த்தைகளால் பேசுவது போல
பற்றுடையோர்கள் தங்களின் இன்பத்திற்கு உலகை நாடியிருப்பதால்
தன்னுடன் உறவாடும் மனிதர்களை தங்கள் விருப்பபடி இயங்கவைக்க தங்களின் பேசும் திறனை உபயோகிப்பது
அவசியமாகிறது.
இவர்களின் வாழ்க்கையின் வெற்றி தோல்வி பெரும்பாலும் இந்த பேச்சுத்திறனின்
அடிப்படையிலேயே அமைவதாக இவர்கள் நினைப்பார்கள். முடிவில் வேறு
வழியின்றி ஒருவர் மற்றவர் கருத்தை ஏற்றுகொண்டு செயல்பட துவங்கினாலும் மனதின் முழுச்சம்மதம்
இல்லாததால் இந்த ஒத்துழைப்பு வெகுகாலம் தொடர்வதில்லை.
முக்திவிழைவோர்கள்
வேதம் படிக்க ஆரம்பித்ததும் இவ்வளவு நாட்கள் இந்த அறிவை பெறாமல் தாங்கள் வாழ்ந்தது
குறித்து வருந்தி தங்கள் நண்பர்களும் உறவினர்களும் கூட முக்திவிழைவோர்களாக மாறவேண்டும்
என்ற ஆதங்கத்தில் அவர்களுக்கு வேதாந்தத்தின் பெருமையை கூற முட்படுவர்.
முற்றுணர்ந்தோர்கள்
தங்களின் விருப்பப்படி யாரையும் மாற்றவேண்டிய அவசியம் இல்லாதவர்கள்.
மேலும் மனப்பக்குவம் ஏற்பட்டால் மக்கள் தானாக வேதம்
சொல்லும் கருத்தை கேட்க முற்படுவார்கள் என்பதை இவர்கள் அறிவதால்
யாருக்கும் அவர்கள் கேட்காமல் தங்கள் கருத்தை சொல்ல மாட்டார்கள்.
இரண்டாம் வகை:
வாதம்
உண்மையை அறிந்துகொள்ள
வேண்டும் அல்லது நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உண்மையை முழுதும் அறியாத இருவரிடையே
நடக்கும் கருத்து பரிமாற்றம் வாதம். ஒரு குருடன்
மற்றொரு குருடனின் உதவியை நாடினால் இருவரும் கீழேவிழும் வாய்ப்பு இரட்டிப்பாவதுபோல
வாதம் செய்பவர்களின் அறிவு அதிகரிப்பதற்கு பதில் மனக்கலக்கமும்
குழப்பமும்தான் அதிகமாகும்.
உலக நிகழ்வுகளை
சரி அல்லது தவறு என்று பிரிப்பது அவரவர் பார்வையை பொறுத்தது என்பதை உணராதவர்கள் பற்றுடையோர்.
தான் சிந்துவதுபோலன்றி வேறுவிதமாக மூக்கை சிந்துபவர்கள் தவறாக செய்கிறார்கள்
என்பது இவர்களது அபிப்பிராயம். உலக அழகி அழகானவள் என்பது தவறு.
அவள் அழகாக இருப்பதாக பலர் நினைக்கிறார்கள் என்பதுதான் சரி. அழகு என்பது பார்க்கப்படும் பொருளின் குணம் அல்ல. பார்ப்பவர்களின்
மனதில் பதிவாகியுள்ள விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே ஒரு பொருள் அல்லது மனிதரின்
தன்மை தீர்மானிக்கப்படுகிறது. எனவே உண்மையை முழுதும் அறிந்து
கொள்ளாமல் ஒருவருக்கொருவர் வாதம் செய்வதனால் பயன் அதிகமிருக்காது.
செயலை நோக்கமாக
கொண்டு செய்யப்படும் கருத்துபரிமாற்றம் ஜல்பம். அறிவை
நோக்கமாக கொண்டு செய்யப்படுவது வாதம். எனவே பற்றுடையோர்களைவிட
முக்திவிழைவோர்கள் வாதத்தில் அதிகம் ஈடுபடுவர். உண்மை எது என்பதை
வாதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்ற மனப்பக்குவம் ஏற்பட்டபின் முக்திவிழைவோர்கள்
வாதம் செய்வதை நிறுத்திக்கொள்வார்கள்.
தொடர்ந்து மாறும்
உலகம் மாயை என்பதால் எந்த துறையிலும் முடிவான அறிவை யாராலும் அடைய முடியாது.
வேதம் கூறும் முடிவான அறிவை அடைந்தவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுடன்
தொடர்புடைய அறிவை அதிகப்படுத்திக்கொள்ள மற்றவரை குருவாக ஏற்றுக்கொண்டு சம்வாதம் செய்வார்களே
தவிர வாதம் செய்ய மாட்டார்கள்.
மூன்றாம் வகை:
விதண்டாவாதம்.
மற்றவர் என்ன
சொன்னாலும் அதை மறுத்து அவர் சொல்வது தவறு என்று நிருபிக்கவேண்டும் என்ற பிடிவாதத்துடன்
பேசுவது விதண்டாவாதம். சொல்பவர் அடுத்த கட்சியை
சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அவர் என்ன சொன்னாலும் அதை மறுத்து பேசவேண்டும் என்பதை
மரபாககொண்ட சட்ட சபை மற்றும் பாராளுமன்றங்களில் இவ்வகை கருத்துபரிமாற்றங்கள் நடக்கும்.
உண்மை என்ன என்பதைபற்றியோ எது நல்லது என்பதைபற்றியோ எவ்வித அக்கறையும்
இல்லாமல் மற்றவரை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் நடக்கும் விதண்டாவாதங்களின்
ஒரே பயன் நேரத்தை வீணடிப்பது மட்டும்தான்.
ஒருவர் வாதம்
செய்கிறாரா அல்லது விதண்டாவாதம் செய்கிறாரா என்பதை கண்டுபிடிக்க அறிவுக்கூர்மை அவசியம்.
முக்திவிழைவோர்களில் சிலர் தங்கள் அறிவுக்கூர்மையை அதிகபடுத்திக்கொள்ள
வேண்டுமென்றே விதண்டா வாதத்தில் ஈடுபடலாம். எதையும் மறுப்பது
என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. அது ஒரு பழக்கமாகிவிட்டால்
சம்வாதம் செய்வது கடினமாகிவிடும். எனவே விதண்டா வாதம் செய்வதை
முழுவதும் நிறுத்தினால்தான் உண்மையை அறியும் வாய்ப்பு உண்டாகும்.
விதண்டாவதத்திற்கு
சரியான மறுமொழி மௌனம் மட்டுமே.
நான்காம் வகை:
சம்வாதம்
யாரும் யாரையும்
மாற்ற முடியாது. தன்னால் மாற்றக்கூடிய ஒரே ஆள் தான்
மட்டுமே என்பதை உணர்ந்து தனது அறியாமையை அகற்ற மற்றவருடன் உரையாடுவது சம்வாதம்.
தான் முன்னேற தேவையான அறிவை பெறவேண்டும் என்ற தாகத்துடன் ஒருவரும் எவ்வித
சுயநலத்தையும் கருதாமல் அவருக்கு உதவவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மற்றவரும் கருத்துபரிமாற்றம்
செய்துகொள்வது சம்வாதம் என்ற உயர்ந்த வகையைச்சேரும்.
சம்வாதத்தில்
ஒருவர் தன்னை மாணவனாகவும் மற்றவர் தன்னை ஆசிரியனாகவும் கருதுவது மிக அவசியம்.
எனக்குத்தெரிந்ததை நான் சொல்கிறேன், உனக்கு தெரிந்ததை
நான் உன்னிடமிருந்து கற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் நடப்பது வாதம், சம்வாதம் அல்ல. தன்னைவிட மற்றவருக்கு அதிகம் தெரியும்
என்ற நம்பிக்கையுடன் அவரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அறிவை பெறமுடியும்.
உலக அறிவு அனைத்துக்கும் இந்த உண்மை பொருந்தும்.
உண்மையிலேயே
ஆசிரியருக்கு அறிவு இருக்கிறதா என்பது முக்கியமல்ல. அவர் சொல்வது தவறாகவே இருந்தாலும் அதை தவறு என்று அறிந்துகொள்ளும் அளவுக்கு
மாணவனின் அறிவு வளரவேண்டும். எனவே அதுவரை அவரை ஆசிரியராக கருதுவதைத்தவிர
வேறு வழியில்லை. ஆசிரியர் சொல்வதை முழுவதுமாக கேட்டு கேட்ட தகவல்களை
முறையாக ஆராயவேண்டும். அதன் பின் முரணான கருத்துக்களுக்கு ஆசிரியரிடம்
விளக்கங்கள் கேட்டு அறிவை பெற வேண்டும். இந்த நிலையை அடையும்பொழுதுதான்
ஆசிரியர் சொல்வது தவறு என்ற முடிவை மாணவனால் எடுக்கமுடியும். அதன்பின் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு சரியான
அறிவை அடைய வேறு ஆசிரியரை தேடவேண்டும்.
மாணவனுக்கு
அறிவைகொடுக்கும் சக்தி எந்த ஆசிரியருக்கும் கிடையாது.
கிருஷ்ண பரமாத்மாவாலேயே தன்னிடம் மாணவனாக சரணடைந்த அர்ஜுனனை முற்றுணர்ந்தோனாக
மாற்ற முடியவில்லை என்பதிலிருந்து அறிவை பெறுவது மாணவனின் திறனை மட்டுமே பொறுத்துள்ளது
என்பதை அறியலாம். திறமையான மாணவன் யாரிடமிருந்துவேண்டுமானாலும்
கற்றுக்கொள்ளலாம். ஏணியை உபயோகித்து நாம் தான் ஏற வேண்டுமே தவிர
ஏணி நம்மை ஏற்றிவிடாது. அதுபோல் ஆசிரியரின் அறிவை மாணவன்தான்
முயன்று பெற வேண்டும். ஆசிரியர் கேட்டால் மட்டுமே தனது கருத்தை
மாணவன் கூறலாம். சம்வாதங்களில் அறிவு ஒருவழிப்பாதையில் செல்வதால்
ஆசிரியரிடமிருந்து அறிவை பெறுவது மாணவனுக்கு எளிதாகிறது.
ஞானி
பேசுவான்
தொழில் கல்வி
கற்பது,
தொழில் செய்வது, குடும்பத்தை நடத்துவது போன்ற கடமைகளை
ஞானம் பெற்றபின்னும் ஞானி தொடர்ந்து செய்வான். இந்த கடமைகளை நிறைவேற்ற
மற்றவர்களைப்போல் அவன் தொடர்ந்து பேசுவான். ஞானி பேசமாட்டான்
என்பதற்கு ஒருவரின் கருத்தை மாற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆசிரியனாக
சம்வாதம் செய்வதைத்தவிர மற்ற வகை கருத்துபரிமாற்றங்களில் அவன்
ஈடுபடுவதில்லை என்பது மட்டும்தான் பொருள்.
புலன்களும்
கரணங்களும்
ஞானம் பெற்றபின்
ஞானி பேசமாட்டான் என்ற கருத்தை கூறுவது பேச்சுக்கு மட்டுமின்றி மற்ற புலன்களுக்கும்
கரணங்களுக்கும் பொருந்தும் என வேதம் கூறுகிறது. தான்
மட்டும்தான் உண்மையில் இருப்பவன் என்றும் இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும்
அறிந்தபின் வாழ்வில் செய்யவேண்டிய செயல்களோ அடையவேண்டிய பொருள்களோ ஏதுமில்லை என்பதால்
ஞானி தன் புலன்களையும் கரணங்களையும் உபயோகப்படுத்தவேண்டிய அவசியமில்லை.
கண்ணால் காண்பதனைத்தும்
பொய் என்ற அறிவு ஏற்பட்டதும் ஒரு குறிப்பிட்ட காட்சியை காணவேண்டும் என்று ஆசை ஏற்படாது.
மாறும் உலகின் மாறுதல்கள் தொடர்ந்து நடைபெறும் என்ற உண்மையை அறிந்தபின்
மாற்றங்களைப்பற்றிய செய்தி அனாவசியம். சுற்றி நடக்கும் வாழ்க்கையே
நாடகம் என்பதால் தனியாக சினிமா அல்லது தொலைக்காட்சியை பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது.
தங்கள் சுற்றத்தார்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின்
வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை அவர்கள் சந்திக்கும் விதம் அறியாசிறுவர்களின் விளையாட்டு
போல் இருப்பதால் அவர்களுடன் சேர்ந்து விளையாடும் ஆசை ஏற்படாது. அவர்களின் திருப்திக்காக ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் அல்லது பத்தாம் நாள் படையல்
போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அவர்களது நிலைக்கு இறங்கி அவர்களுடன் ஒருவனாக
நடந்து கொள்வதை ஞானி முடிந்தவரை தவிர்த்துவிடுவான்.
சிறுவர்கள்
ஒரு கை குறைகிறது என்ற காரணத்திற்காக பெரியவர் ஒருவரை தங்கள் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டால்
ஆட்டத்தின் விதிகளை பின்பற்றி ஆடுவதை அவர் தன் கடமையாக செய்வாரேயன்றி மற்ற சிறுவர்களைப்போல்
அவர் கேலிபேச்சிலும் சச்சரவுகளிலும் பங்கேற்கமாட்டார்.
அது அவரால் முடியவும் முடியாது. அதேபோல் ஞானி காட்சிக்கு
மற்றவர்களைப்போல் வாழ முயன்றாலும் அவர்களுக்கு ஈடாக அரசியல் பேசுவது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன பொருள்களைப்பற்றி அளவளாவுவது அல்லது சமூகநிகழ்வுகளை
விமரிசிப்பது போன்ற செயல்களை செய்யமாட்டான்.
உடலையும் மனதையும்
ஆரோக்கியமாய் வைத்திருக்க தேவையான செயல்களை மட்டுமே ஞானி செய்வான்.
வாழ்வில் நேரும் அனைத்து அனுபவங்களையும் இது நல்லது அது கெட்டது என்று
பாகுபாடு செய்யாமல் அனுபவிப்பான். வாழ்க்கையே ஒரு சுற்றுலா என்றும்
தான் உலவும் உலகே ஒரு கேளிக்கை மைதானம் என்றும் ஞானி உணர்ந்திருப்பதால் அனுபவங்களைத்தேடி
அலையவேண்டிய அவசியம் அவனுக்கு கிடையாது.
கிடைத்த உணவை
சுவைத்து உண்ணுவான். காதில்விழும் செய்திகளையும்
பாடல்களையும் அனுபவிப்பான். கையில் கிடைத்த புத்தகங்களை படிப்பான்.
கடற்கரையில் உலாவரும்பொழுது பார்க்கும் மனிதர்களின் முகத்தில் தெரியும்
உணர்ச்சி மாற்றங்களின் காரணங்களை கற்பனை செய்து மகிழ்வான். குறையாத
இன்பமுடனும் தடைபெறாத அமைதியுடனும் வாழ இதுதான் வேண்டும் என்று எவ்வித நிர்ப்பந்தமும்
இல்லாததால் கிடைப்பதை அனுபவிப்பதைத்தவிர ஞானியின் புலன்களுக்கும் கரணங்களுக்கும் வேறு
வேலையில்லை.
சாம,
தான, பேத, தண்டம் என்ற நான்கு
வழிகளில் மற்றவர்களை தன் வழிக்கு கொண்டுவரும் முயற்சியை ஞானி தன் சுயநலத்திற்காக செய்யமாட்டான்.
ஆனால் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சரிவர செய்ய இந்த முறைகளை அவன்
தர்மபடி கையாளுவதில் தயக்கம் காட்ட மாட்டான். எனவே ஒருவர் ஞானியா என்பதை அவரது
செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.
முடிவுரை
:
வாழ்வில்
துன்பத்தை அகற்றி என்றும் இன்பமாக வாழும் வழி எது என்ற தேடல் ஞானம் பெற்றதும் ஒரு முடிவுக்கு
வந்துவிடுவதால் ஞானியின் ஐம்புலன்கள் மற்றும் மூன்று கரணங்களின் செயல்பாடுகள் அடங்கிவிடும். நீண்ட பயணத்திற்கு பின் வீடுபேற்றை அடைந்துவிட்டதால்
இனி நிம்மதியாக வாழும் வாய்ப்பு ஞானிக்கு கிடைக்கிறது.
கை
சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க அதை சாக்கடையில் வைத்து அழுக்காக்கி அதன் பின்
கழுவவேண்டும் என்ற அவசியமில்லை. இதை
அறியாமல் நிம்மதியாக இருக்க கடுமையாக உழைத்து அதன்பின் விடுமுறையில் ஓய்வெடுக்க பலர்
முயல்கிறார்கள். இதுபோல் எவ்வித நோக்கமும் இல்லாததால் ஞானியின்
புலன்களும் கரணங்களும் எதையும் தேடி அலைவதில்லை.
பரந்த
உலகத்தில் இன்பத்தை தேடியலையும்பொழுது புலன்களும் கரணங்களும் மனிதனுக்கு தேவைப்படும். இன்பத்தின் உண்மையிருப்படத்தை அறிந்தபின் அவற்றின் தேவை
மறைந்துவிடும்.
நிறுவனத்தின்
தலைவருடன் உரையாட அவருக்கு நிகராக இருப்பவர்கள் குறைவு என்பதால் அவரால் கீழ்மட்டத்தில்
வேலைசெய்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுபோல் யாருடனும் பேச முடியாது. அதுபோல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுபடிகளையும் கடந்து வாழ்வின் உயர்ந்த குறிக்கோளான வீடுபேற்றை
அடைந்த ஞானிகளுடன் உரையாட அவருக்கு நிகராக இருப்பவர்கள் குறைவு. பரமரகசியத்தை உணர்ந்தபின் வாழ்வை ஒரு புதிராக நினைத்து அதில் எந்தப்பாதையில்
எப்படி பயணிக்கவேண்டும் என்பதை அறியாமல் தவிக்கும் மற்றவர்களுடன் அவர்களுக்கு இணையாக
ஞானியால் பேசமுடியாது.
எனவே
ஞானி பேசமாட்டான். அவனது புலன்கள் மற்றும்
கரணங்களின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும்.
பயிற்சிக்காக
:
1. கருத்துபரிமாற்றம்
என்றால் என்ன?
2. அது எத்தனை
வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
3. ஞானி
பேச மாட்டான் என்பதற்கு காரணங்கள் யாவை?
4. ஞானி
பேசுவான் என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?
சுயசிந்தனைக்காக
:
1. தேனீக்கள்
அல்லது எறும்புகளைப்போல் மக்கள் ஏன் ஒன்றுபட்டு செயல்படுவதில்லை?
2. அனைவரிடமும்
கலகலப்பாக பேசுபவன் ஞானம் பெற்றதும் அமைதியானவனாக மாறிவிடுவானா?
3. எந்த
துறையிலும் முழுவதுமான அறிவைப்பெறமுடியாது என்பதை உணரும் காரணத்தால் மட்டுமே
PhD என்ற பட்டம் வழங்கப்படுகிறது என்பதை அதன் பெயர் காரணத்தை ஆராய்ந்து
அறிக.