Wednesday, February 8, 2012

Lesson 167: The Knower becomes one with Brahman (Brahmasutra 4.1.19)


பாடம் 167: பரமனை அறிந்தவன் பரமனாகிவிடுவான்
பாடல் 496 (IV.1.19)

வாழும்பொழுது பரமனை அறிந்தவன் இறந்தவுடன் மீண்டும் பிறப்பதில்லை. அவன் பரமனுடன் ஒன்றாகிவிடுகிறான் என்று பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் (4.4.6) குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி ஞானம் எவ்வாறு துன்பங்களிலிருந்து முழு விடுதலையளிக்க உதவுகிறது என்பதை இந்த பாடம் தெளிவுபடுத்துகிறது.

உயிரினங்களுக்கும் ஜடப்பொருள்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெளிவாக அறியாதவர்கள் பற்றுடையோர்கள். அறிவியலால் இந்த அறிவைத்தர முடியாது என்று புரிந்ததும் வேதம் படித்து உயிருடன் உலவ நுண்ணிய உடல் தேவை என்ற அறிவைப்பெற்றவர்கள் முக்திவிழைவோர்கள். உலகில் இருப்பவை அனைத்தும் ஜடப்பொருள்கள் மட்டுமே என்று அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்.

தான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் தனக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்ற உண்மையை உணராதவரை துன்பங்களை முழுதாக தவிர்க்க முடியாது.

கனவில் காணும் கனவு

கனவில் தென்படும் நாற்காலியும் அதில் அமர்ந்துள்ளவரும் மனதில் தோன்றும் எண்ணங்களால் உருவாக்கப்பட்டவை. அதேபோல் ஜடமான மாயாசக்தியால் உருவான பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஜடப்பொருள்களாகத்தான் இருக்க முடியும். ஒளியை பிரதிபலிக்கும் தன்மை இருந்தாலும் கண்ணாடி கல்லைப்போல் ஒரு ஜடப்பொருளே. அதேபோல் பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் தன்மை உள்ள மனமும் மின்சாரத்தைப்போல் ஒரு ஜடம்தான். கனவு கலைந்தவுடன் கண்ணில் தெரியும் உலகம் நிஜம் என்ற எண்ணம் இருக்கும்வரை அதில் உயிரினங்களும் ஜடப்பொருள்களும் இருப்பதாக தோன்றும். காண்பது நிஜமல்ல என்ற ஞானம் ஏற்பட்டவுடன் ஒளி, ஒலி ஆகிய ஜடப்பொருள்களால் மட்டுமே உருவான உலகிலிருந்து துன்பம் முழுதாக மறைந்துவிடும்.

கனவிலிருந்து விடுதலை

இரவில் காணும் கனவு தானாக முடிந்துவிடும். விழித்ததும் தொடரும் கனவை கனவு என்று புரிந்து கொள்ள வேதம் பயின்ற ஆசிரியரின் துணைதேவை. கனவை கனவு என்று புரிந்துகொண்டாலும் அது மரணம் வரைதொடரும். எனினும் உலகம் நமக்கு துன்பத்தை தரும் சக்தியை இழந்துவிடும். முற்றுணர்ந்தோர்கள் வாழ்வை கனவு என்று அறிந்தவர்கள் என்பதால் அதிலிருந்து விடுதலை பெற்றவர்கள்.

வாழ்க்கையின் உண்மைத்தன்மையை ஆராயாத பற்றுடையோர்கள் கனவு மற்றும் நனவு ஆகிய இரண்டிலும் துன்பபடுவார்கள். இவர்களது துன்பம்  மரணத்தில் கூட முடிவதில்லையென்றும் பிறப்பு இறப்பு என்ற மீளாச்சுழலில் அகப்பட்டு ஞானம் பெறும்வரை அலைக்களிக்கப்படுவார்கள் என்றும் வேதம் கூறுகிறது. ஏன் என்ற கேள்வியை கேட்டு வேதம் படித்த ஆசிரியர்களின் உதவியுடன் பதிலை ஆராயும் முக்திவிழைவோர்கள் காரண உடல், நுண்ணிய உடல், பருவுடல் என்ற மூன்று பிரிவுகளையும் அவற்றின் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். தீவிர ஆய்வுக்குப்பின் இவையனைத்தும் மாயை என்ற உண்மையை புரிந்துகொள்ளும்பொழுது முற்றுணர்ந்தோர்களாக மாறி இவர்கள் கனவிலிருந்து விடுதலைபெறுகிறார்கள். காண்பது கனவு என்று அறிந்தபின் இந்த வாழ்வை துன்பம் கலக்காத இன்பத்துடன் மரணம் வரை தொடர்ந்து அனுபவிக்கும் இவர்கள் மரணத்திற்குப்பின் மீண்டும் பிறப்பதில்லை.

துன்பத்திலிருந்து விடுதலை பெற கூரிய பகுத்தறிவு அவசியம். எதற்கு செயல்களை செய்கிறோம் என்ற கேள்வியை கேட்காமல் உழைக்கும் பற்றுடையோர்களும் வேதம் தரும் செய்தியை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும் முக்திவிழைவோர்களும்  உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிவதில்லை. உலகம் உண்டானபொழுது உடன் உருவாகிய வேதம் என்ற அடுக்குப்பெட்டியை குருவின் உதவியுடன் பகுத்தறிவு என்ற சாவிகொத்தில் இருக்கும் சரியான சாவிகளை உபயோகித்து திறந்த ஞானிகள்  துன்பத்திலிருந்து முழுவிடுதலையடைவார்கள்.  

கனவுக்கோட்டையின் திறவுகோல்

இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுதலைபெறத்தேவையான பகுத்தறிவு என்ற திறவுகோல்கள் ஒவ்வொரு மனிதனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாயச்சிறையிலிருந்து முழுவதுமாக வெளியேற நான்கு கதவுகளை திறக்கவேண்டும். வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவதை தவிர்க்க முடியாது என்று பகுத்தறிவை பயன்படுத்தாமல் வாழ்பவர்கள் என்றும் விடுதலை அடைவதில்லை. துன்பத்தை முழுவதுமாக தவிர்க்க முடியும் என்ற உண்மையை சுட்டிக்காட்டவே வாழ்வு துன்பகரமானது என்று புத்தர் போதனை செய்தார் என்று உணர்பவர்கள் தங்கள் பகுத்தறிவை சரியாக  உபயோகித்து அனைத்து கதவுகளையும் திறந்து முக்தியடைவர்.

முதல் கதவு: செய்தல்

ஐந்து புலன்களின் மூலம் உலகின் இருப்பை அறியும் மனிதன் அவற்றின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விரும்புவதை நாடியும் வெறுப்பதை தவிர்க்கவும் பகுத்தறிவை பயன்படுத்தி செயல்களை செய்கிறான். அவன் செய்யும் செயல்கள் அவனது விருப்பு வெறுப்புகளை மேலும் அதிகபடுத்துகின்றன.

இலை தழைகளை உடையாய் உடுத்தியிருந்த காலத்திலிருந்து பருத்தி, பட்டு என படிப்படியாக முன்னேறியபின்னும் கடைகளில் இருக்கும் எண்ணிலடங்கா வண்ண உடைகளில் எதுவும் பிடிக்கவில்லை என்ற நிலை தொடர்ந்து நீடிக்கும் அளவுக்கு மனிதனின் விருப்பு வெறுப்புகளின் நுட்பமும் தாக்கமும் அதிகரித்துள்ளன.

எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வரவேண்டும் என்று வரம் பெற்ற வாலியை போல் உழைப்பில் பாதி புலன்களின் விருப்பு வெறுப்புகளை அதிகரிக்க செலவாகிவிடுகிறது என்பதை உணர்ந்தவுடன் வெளியுலகில் எவ்வளவு செயல்கள் செய்தாலும் துன்பத்திலிருந்து விடுதலை அடைய முடியாது என்ற அறிவு மனிதனுக்கு ஏற்படும். செயல்களை ஏன் செய்கிறேன் என்ற கேள்விக்கு அனுபவத்தின் மூலம் பதிலை அறிந்து கொள்ள முடியாது என்பதை அறிந்தவுடன் வேதத்தை  கற்றல் என்ற அடுத்த கதவை திறக்க மனிதன் முயற்சி செய்வான்.

இரண்டாம் கதவு: கற்றல்

தனக்கும் உலகத்திற்கும் உள்ள உறவு மற்றும் செயலுக்கும் அதனால் விளையும் பலனுக்கும் உள்ள உறவு போன்றவற்றை புரிந்து கொள்ளவே முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தபின் மனிதன் வேதம் தரும் உண்மைகளை அறிந்து கொள்ள தன் பகுத்தறிவை உபயோகப்படுத்துகிறான்.

பாவ புண்ணியங்கள் பதிவாகியிருக்கும் காரண உடல், புத்தி, மனம், புலன்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நுண்ணிய உடல், மறுபிறவி, பிறவிகள்தோறும் அதிகரிக்கும் அறிவாற்றல் மற்றும் செயல் திறன் ஆகியவற்றை அவனுக்கு வேதம் அறிமுகபடுத்துகிறது. புரியாத புதிராக இருந்த வாழ்க்கை புரிய ஆரம்பிக்கிறது. ஏன் வேலை செய்தாலும் பலன் கிடைப்பதில்லை, ஏன் சில சமயம் முயற்சி எதுவும் செய்யாமலேயே தேடிவது கிடைத்துவிடுகிறது, ஏன் இந்த சோக நிகழ்வு ஏற்பட்டது என்பது போன்ற கேள்விகள் அவனை வாட்டுவதில்லை. இதுதான் உலகம், இதில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எவ்வித முரண்பாடுகளும் இல்லாத தெளிவான பாதையை வேதம் காண்பிப்பதால் அதில் முறையுடன் பயணம் செய்தில் ஒரு சிலர் திருப்தியடைந்து விடுகிறார்கள்.

செயல் செய்வதற்கு மட்டும்தான் தனக்கு அதிகாரமிருக்கிறது என்றும் பலனை கொடுப்பது இறைவன் கையில் இருக்கிறது என்றும் வேதம் கூறும் கருத்தை ஏற்றுக்கொண்டு அதர்மங்களை தவிர்த்து புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் அடுத்துவரும் பிறவிகளில் நிச்சயம் முக்தி அடையலாம் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் தொடர்ந்து செயல்களை செய்து இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டு வாழ்வார்கள்.

ஏன் துன்பம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு சரியான பதிலை கொடுத்தால் மட்டும் போதாது என்றும் துன்பத்தை முழுவதும் தவிர்ப்பது எப்படி என்ற கேள்விக்கும் வேதம் பதில் சொல்லியாகவேண்டும் என்றும் தொடர்ந்து வேதத்தை ஆராயும் மனிதர்கள் மட்டுமே இந்தப்பிறவியிலேயே முக்தியடையவேண்டும் என்ற தீவிர ஆசை உடையவர்கள். இவர்களால் மட்டுமே அடுத்த கதவை திறக்க முடியும்.

மூன்றாம் கதவு: கசடற கற்றல்

எவ்வித முரண்பாடும் இல்லை என்பதற்காக உலக நிகழ்வுகளுக்கு வேதம் தரும் விளக்கங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றின் உட்கருத்தை தங்கள் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய முட்படுபவர்கள் இந்த மூன்றாம் நிலையை கடக்க தேவையான திறவுகோலை தேடி எடுப்பார்கள்.

பாவபுண்ணியங்கள் எங்கனம் காரணஉடலில் பதிவாகிறது, அவை எப்பொழுது எவ்வளவு பலனை கொடுக்கும் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது, இறந்த பின் நுண்ணிய உடல் எந்த பாதையில் பயணம் செய்து எவ்வாறு மறுபிறவி எடுக்கிறது என்பது போன்ற ஆராய்ச்சியில் இறங்குபவர்கள் தவறான திறவுகோலால் இந்த கதவை திறக்க முனைபவர்கள். இதுபோன்ற கேள்விகளுக்கு வேதம் சரியான பதில் கொடுக்க தயாராய் இருந்தாலும் இவற்றை அறிந்து கொள்வதால் துன்பங்களை தவிர்க்க முடியாது என்று உணர்பவர்களுக்கு சரியான திறவுகோல் தென்படும்.

செயல்கள் செய்வதால் விருப்பு வெறுப்புகள் வளர்கின்றன என்பது உண்மை. ஆனால் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதும் அவற்றில் எது செயலாக மாறுகிறது என்பதும் என் கட்டுப்பாட்டில் இல்லாதபொழுது என் விருப்பு வெறுப்புகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்கமுடியும் என்று இவர்கள் ஆராய்ந்து செயல் என்பதே ஒரு காட்சிபிழை என்ற முடிவுக்கு வருவார்கள். செயலின் பலன் தானாக கிடைக்கும் என்று முதலில் கூறும் வேதம் அடுத்து செயலை செய்வதும் தானாகத்தான் நடக்கிறது என்று கூறுவதை இவர்கள் புரிந்துகொள்வார்கள்.

வேதம் கூறும் கருத்துக்கள் அனுபவத்திற்கு பொறுத்தமாயும் தர்க்க அறிவுக்கு ஏற்புடையதாகவும் இருந்தாலும் அறிவியல் அறிவால் அவற்றை நிரூபிக்க முடியாது. அதற்கு அவசியமுமில்லை. வேதத்தின் ஒரே குறிக்கோள் மனிதனின் துன்பத்தை முழுவதும் அகற்றுவது என்பது மட்டுமே. எனவே நீதான் பரமன் மற்றும் இவ்வுலகம் மாயை என்ற வேதங்களின் மையக்கருத்தை மட்டும் பகுத்தறிவால் ஆராய்ந்து மாயை என்பதை புரிந்துகொள்ள முடியாது என்று புரிந்துகொள்பவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு முன்னேற தகுதி பெற்றவர்கள்.

நான்காம் கதவு: நிற்றல்

என்ன செயல்கள் செய்கிறோம் என்பது தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்தவுடன் காரண உடலில் பதிவாகியிருந்த அனைத்து கர்மபலன்களும் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவா வரத்தை முற்றுணர்ந்தோர்கள் பெறுவார்கள்.

கூரிய பகுத்தறிவு என்ற திறவுகோலால் மட்டுமே இந்த கதவை திறக்க முடியும். வேதம் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை ஆய்ந்து அதன் மையக்கருத்தை தனதாக்கி கொண்டபின் வேதம் இவர்களுக்கு தேவையில்லை. ஆனால் கனவில் தோன்றிய  புலி பொய் என்றாலும் அது நம்மை பயமுறுத்தி துன்பம் தரும் கனவிலிருந்து விழிப்படைய உதவி செய்ததால் அது நன்றிக்குரியது என்பது போல் துன்பம் தரும் வாழ்வு என்னும் கனவிலிருந்து விழித்தெழ உதவிய வேதமும் போற்றுதலுக்குரியது. காண்பது கனவு என்று கூறும் வேதமும் கனவின் ஒரு பகுதியென்பதால்தான் உலகம் தோன்றியபோது அது உடன் தோன்றியது என்ற கருத்து ஆசிரியர்களால் போதிக்கப்படுகிறது.

அறிவுணர்வாயும் ஆனந்தமயமாயும் என்றும் இருக்கும் பரமன் நான் என்ற அறிவு வேதம் மூலமாக மட்டுமே நமக்கு கிடைக்கப்பேறும். உலகம் மாயை என்பதை எடுத்த எடுப்பிலேயே வேதம் நமக்கு எடுத்துரைத்தாலும் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது பகுத்தறிவு கூர்மையில்லாதால் படிப்படியாக நமக்கு அந்த உண்மையை புரியவைத்தது. செயல்கள் செய்து பலனை அனுபவிப்பவன் என்ற நிலையிலிருப்பவனை ஒன்றும் செய்யாமல் இருக்கும் பரமன் நீ என்று சொன்னால் புரியாது என்ற காரணத்தால் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பை மூன்று உடல்கள், மறுபிறவி, பிறவிகள்தோறும் தொடரும் கர்மபலன் போன்ற கருத்துக்களால் விளக்கி முடிவில் அனைத்தும் மாயை என்ற உண்மையை வேதம் தருகிறது. உண்மையில் இருப்பது நான் மட்டுமே என்றும் இருப்பதுபோல் தோன்றும் இந்த ஜடமான உலகம் மாயை என்றும் புரிந்துகொள்பவர்கள் இந்த பிறவியிலேயே முக்தியடைந்து துன்பம் கலக்காத இன்பவாழ்வு வாழ்வார்கள். பரமனாகவே இருப்பவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது.

முடிவுரை :

ஏற்றிவிட உதவுவது ஏணி. ஏணியிலேயே நின்றுகொண்டு மேலே ஏறாதவர்களுக்கு ஏணியினால் எந்த பயனும் இல்லை. காண்பது கனவு என்ற உண்மையை நமக்கு உணர்த்த பல்வேறு படிகளை கொடுத்து உதவும் வேதம் அந்த படிகளை நாம் கடந்தவுடன் அவை அனைத்தும் பொய்யான கனவைச்சேர்ந்தவை என்று நாம் உணர்வோமென எதிர்பார்க்கிறது. இல்லாத உலகத்தை இருப்பதாக நாம் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இல்லாததை இருப்பதாக வேதம் சொல்கிறது. கண்ணுக்குத்தெரியும் உலகத்தை இல்லை என்று நிரூபிக்க கண்ணுக்குத்தெரியாத கடவுளை நமக்கு அறிமுகப்படுத்தி படிப்படியாக நமது பகுத்தறிவை கூர்மைப்படுத்தி வேதம் நமக்கு உண்மையை புரியவைக்கிறது.

அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடங்காத வேட்கை மனிதனை தொடர்ந்து தேடலில் ஈடுபடுத்தும். அறிவு ஏற்படும் மனம் என்பதே ஒரு ஜடப்பொருள் என்றும் அது இருப்பதுபோல் தோன்றும் மாய உலகத்தின் ஒரு பகுதி என்பதும் புரிந்து விட்டால் மனதின் தேடல் ஒரு முடிவுக்கு வந்துவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி மறைந்துவிடுவதால் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

இந்த விளக்கங்களை புரிந்துகொண்டு அந்த அறிவில் நிலையாய் நிற்கும் முற்றுணர்ந்தோர்கள் வாழ்வின் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். இவர்கள் மரணமடைந்தவுடன் இவர்களது பருவுடல் உலகின் பஞ்சபூதங்களுடனும் நுண்ணியவுடல் கடவுளின் நுண்ணியவுடலுடனும் கலந்து விடுவதால் மறுபடியும் பிறக்காமல் இவர்கள் பரமனாகவே மாறிவிடுகிறார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. நான் பரமன் என்ற வேதத்தின் மையக்கருத்தை தனது கூரிய பகுத்தறிவால் ஆய்ந்து அறிந்துகொண்டவன் துன்பத்திலிருந்து முழுவதும் விடுதலையடைவதால் மீண்டும் பிறப்பதில்லை என்ற கருத்துடன் நான்காவது அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. மனிதனும் அவன் அமர்ந்திருக்கும் நாற்காலியும் எப்படி ஒன்றாக முடியும்?

2. கனவுக்கோட்டையை கடக்க நாம் திறக்க வேண்டிய நான்கு கதவுகள் யாவை?

3. கதவுகளின் திறவுகோல் என்பது யாது?

4. எந்த திறவுகோலை உபயோகிப்பது என்பதை தீர்மானிப்பது யார்?

5. வேதங்களின் ஒரே குறிக்கோள் எது?

6. வேதங்களின் மையக்கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. வேதம் உண்மையை விளக்க கொடுத்த படிக்கட்டுக்கள் யாவை?

2.இந்த படிக்கட்டுக்களின் மூலம் வேதம் தரும் உண்மை என்ன?

3. வேதம் தரும் விளக்கங்களை அறிவதால் ஏற்படும் பயன் என்ன?

4. உலகம் தோன்றியபொழுது உடன் தோன்றியது வேதம் என்பதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் தகவல் என்ன?

5. ஆதிசங்கரர் எழுதிய நிர்வாண சதகம் என்ற பாடலைப்படிக்கவும்.