Tuesday, January 31, 2012

Lesson 166: Sacrificial works not combined with knowledge (Brahmasutra 4.1.18)


பாடம் 166: சமூக சேவையும் ஞானமும்
பாடல் 495 (IV.1.18)

ஞானம் பெறுவதற்கு முன்பேயே ஞானிகளைப்போல் தன் குடும்பம், நண்பர்கள் மற்றுமின்றி சுற்றியுள்ள அனைத்து மனிதர்களின் நலனுக்காக தன் வாழ்நாட்களை செலவழிப்பவர்கள் வாழ்க்கைப்பயணத்தின் உச்சகட்டத்தில் இருப்பினும் ஞானம் பெற்றால்தான் முக்தியடைய முடியும் என்ற கருத்தை இந்த பாடம் சித்தரிக்கிறது.

அனைத்து மனிதர்களுக்கும் இந்த வாழ்வில் அடைய வேண்டியது ஒன்று உள்ளது என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும். தன் குறையை நிறைவு செய்ய எவ்வளவோ முயன்றாலும் இந்த திருப்தியின்மை அகலாது. முறையாக வேதத்தை பயின்று முக்தியடைந்தால் மட்டுமே இந்த தேடல் ஒரு முடிவுக்கு வரும். தான் முழுமையானவன் என்பதை உணர்ந்தபின் ஞானி மற்றவர்களுக்கு உதவும் வகையில் தன் கடமைகளை செய்வான். ஞானம் பெறாதவர்களின் தேடல்கூட  அவர்களை சுயநலமற்ற சமூகசேவர்களாக முன்னேற்றலாம். ஆனால் அவர்களுக்கு அதில் திருப்தி ஏற்படாது. மற்றவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாத பணக்காரர்களை ஒப்பிடும்பொழுது சமூகசேவை செய்பவர்கள் தங்களை உயர்ந்தவர்களாக கருதிக்கொள்ளலாமேதவிர எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கடமைகளை செய்யும் ஞானிபோல அவர்களாலும் செயல்பட முடியாது.

மனிதனின் தேடல் அவனை செயல் படவைக்கிறது. செயல் செய்வதனால் அவனது அறிவு வளர்கிறது. பள்ளி மாணவன் ஒவ்வொரு வகுப்பாக முன்னேறுவது போல வாழ்க்கைப்பயணத்தில் மனிதன் படிப்படியாக முன்னேறி சமூக சேவை என்ற கடைசி படியை அடைகிறான். தான் செய்யும் சேவைகளின் பலன் தன்னை சம்சார சுழலிலிருந்து விடுவிக்கும் என்ற தவறான எதிர்பார்ப்புடன் அவனது தேடல் மரணம் வரை தொடரும். எவ்வித தேடலும் இல்லாமல் தன் கடமைகளை செய்துகொண்டு இனிமையாக வாழ்ந்தால் மேலும் சிறப்பாக சமூக சேவை செய்ய முடியும் என்பதால் வேதம் தரும் ஞானம் அனைவருக்கும் அவசியம்.

முதல் தேடல்: உணவு, உடை, உறையுள்

அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்துவிட்டால் தன் குறைகள் தீர்ந்துவிடும் என்ற ஏக்கத்துடன் உழைக்கும்பொழுது வருமானத்துடன் செலவுகளும் வளர்வதை மக்கள் கவனிப்பதில்லை. ஆடம்பரத்திற்கும் அடிப்படைத்தேவைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளும் முன் பலரின் வாழ்வு முடிந்து விடுகிறது.

செயல்கள் செய்வதால் தொடர்ந்து இவர்களது அறிவும் செயல்திறனும் அதிகரித்தாலும் இவர்களில் பலருக்கு பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் தகுதி ஏற்படுவதில்லை. எனவே குடிப்பழக்கம், சூதாட்டம் போன்ற தவறான பாதையில் இவர்களின் தேடல் தொடரும்.

அறிவும் திறனும் உள்ள மற்றும் சிலர் எப்படியாவது வாழ்வில் முன்னேறிவிட வேண்டுமென்ற துடிப்புடன் திருட்டு, கொள்ளை, கொலை, ஏமாற்றுதல், அரசியல் ஆகிய அதர்மமான வழியில் தங்கள் தேடலை தொடருவார்கள்.

நீதி, நேர்மை, நியாயம் போன்றவைகளுக்கு கட்டுப்பட்டு தர்மமான முறையில் உழைப்பவர்கள் தேவையான அறிவையும் செயல்திறனையும் அடைந்தபின் வாழ்க்கைப்பயணத்தின் அடுத்த படிக்கட்டுக்கு முன்னேறுவார்கள்.   

இரண்டாம் தேடல்: சுயமுன்னேற்றம் (அறிவு, ஆற்றல்,ஆளுமை)

தேவைகள் ஓரளவு தீர்ந்தபின் மேலும் சிறப்பாக உழைப்பதனால் தன் அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகியவை வளரும் என்ற எதிர்பார்ப்புடன் இவர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள். செயற்கரிய செயல்களை செய்வதனால் தங்கள் தேடல் முடிந்துவிடும் என்ற தவறான எண்ணத்துடன் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில்துறையில் தனக்கு நிகரானவர் எவரும் இல்லை என்ற அளவுக்கு தனது தகுதியை உயர்த்திக்கொள்ள இவர்கள் முயல்வார்கள். ஆனால் தகுதி எவ்வளவுதான் உயன்றாலும் தேடல் ஒரு முடிவுக்கு வராது என்பதை இவர்கள் உணரும்பொழுது அடுத்த படிக்கு முன்னேறுவார்கள்.

மூன்றாம் தேடல்: சுயமுன்னேற்றம் (பட்டம், பதவி, புகழ்)

வல்லவனாக இருந்தால் மட்டும் உலகம் தன்னை கவனிக்காது என்று தன்னை நல்லவனாகவும் காட்டிக்கொள்ள பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகசேவை செய்ய பணத்தையும் நேரத்தையும் செலவளிக்க ஆரம்பிப்பார்கள். தான் சிறந்தவன் என்பது தனக்கு மட்டும் தெரிவதால் நிறைவு ஏற்படவில்லை என்பதால் உன்னைப்போல் ஒருவன் இவ்வுலகில் இல்லை என்று மற்றவர்கள் தன் சிறப்பை ஆமோதித்தால்தான் நிறைவு ஏற்படும் என்ற எண்ணத்தில் பட்டம், பதவி, புகழ் ஆகியவற்றை இவர்கள் தேடத்துவங்குவர்.

அகில உலகத்திற்கே அதிபதி என்ற நிலையை அடைந்தாலும் திருப்தி ஏற்படாது என்பதை அறியும் வரை இவர்களின் இந்த முயற்சி தொடரும். மேலும் தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து இறங்கிவிடக்கூடாதே என்ற பயம் இவர்களின் தேடலின் தீவிரத்தை அதிகப்படுத்திவிடும். இளமையில் இருந்த செயல் வேகம் குறைந்து தேடலின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்க முடியாதபோது இவர்களில் ஒரு சிலர் பழைய பெருமையை பாடும் காலி பெருங்காய பாத்திரமாக தங்கள் முதுமையை சலிப்புடன் கழிப்பார்கள். உலகத்தின் அங்கீகாரம் தங்கள் தேடலை நிறைவு செய்யாது என்று உணர்ந்தவர்கள் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள்.

நான்காம் தேடல்: சமூக சேவை

மற்ற இடங்களில் தேடி கிடைக்காததால் தன்னலமற்ற சமூகசேவைதான் உண்மையான இன்பத்தையும் திருப்தியையும் கொடுக்கும் என்ற தவறான எதிர்பார்ப்புடன் மனிதனின் தேடல் இந்த கடைசிகட்டத்தில் தொடரும்இயன்றவரை தங்களின் ஆற்றலையும் பணபலத்தையும் பயன்படுத்தி இந்த உலகத்தில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்று இவர்கள் செய்யும் முயற்சி கடலில் கரைத்த புளியைப்போல காணாமல் போகும். ஆயினும் சுயநலம் ஏதுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல் படுவதால் இவர்களின் செயல்பாடுகள் ஞானியின் செயல்களை ஒத்திருக்கும்.

ஒரு ஒப்பீடு

தான் முழுமையானவன் என்பதை உணராதவன் என்ற ஒரே ஒரு வித்தியாசத்தை தவிர சமூகசேவை செய்பவன் ஞானியிடமிருந்து வேறு எவ்விதத்திலும் வேறுபடுவதில்லை. இருவரும் தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து தங்களால் இயன்றவரை மற்றவர்களின் துன்பத்தை அகற்றி இன்பத்தை அளிக்கும் நோக்கில் தங்கள் கடமைகளை செய்வார்கள்.

இன்பமாக இருக்க ஞானி எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை என்றாலும் அவன் தனது கடமைகளை தொடர்ந்து செய்வான். சமூக சேவை செய்யாவிட்டால் இன்பமாக இருக்கமுடியாது என்ற உந்துதலின் அடிப்படையிலேயே மற்றவர்கள் தங்கள் கடமைகளை செய்வார்கள்.

தான் செய்யும் சமூக சேவையால் புண்ணியத்தை சேர்த்து அதன் பயனாக பிறவிச்சுழலிலிருந்து விடுதலைபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல் செய்பவன் அஞ்ஞானி. வீடுபேற்றை அடைந்துவிட்ட திருப்தியுடன் சமூக சேவை செய்பவன் ஞானி.

என்றேனும் ஒரு நாள் உலகில் உள்ள அனைவரும் துன்பத்திலிருந்து முழுவதும் விடுபட்டு இன்பமாக வாழும் வகையில் கல்வி, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுபவன் அஞ்ஞானி. இதுபோல் நடக்க வாய்ப்பேயில்லை என்பதை அறிந்திருந்தாலும் தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவும் வகையில் தன் கடமைகளை ஞானி செய்வான்.

மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை உலகம் அனைத்து துறைகளிலும் வெகுவாக முன்னேறியுள்ளது என்பது உண்மையென்றாலும் இந்த மாற்றங்கள் துன்பத்தை அகற்றி இன்பமாக வாழ மனிதனுக்கு எள்ளளவேனும் ஏன் உதவவில்லை என்பதை ஞானி மட்டுமே அறிவான்இரண்டாயிரம் வருடங்களில் ஏற்படாத சீர்திருத்தம் தன்னுடைய முயற்சியால் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையுடன் செயல்படுபவன் படைப்பின் இரகசியத்தை அறியாத அஞ்ஞானி.

தான் செய்யும் உதவிக்கு பிரதிபலனாக நன்றி என்ற ஒரு வார்த்தையை கூட ஞானி எதிர்பார்ப்பதில்லை. மேலும் உதவிபெற்றவர்கள் அந்த உதவியை சரியாக பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும் ஞானி வருந்துவதில்லை. தான் செய்யும் சமூக சேவை ஒரு சில மனிதர்களின் தேடல்களைகூட முழுமையாக முடிவுக்கு கொண்டுவரும் சக்தியற்றது என்பதை ஞானி அறிவான். மற்றவர்கள் தாங்கள் செய்யும் சமூக சேவையின் பலன் என்ன என்பதை ஆண்டுதோறும் தொழிலில் வரவுசெலவு கணக்கு பார்ப்பதுபோல் அளக்க முயற்சிசெய்வதுடன் மற்ற சமூக சேவை நிறுவனங்களுடன் தங்களை ஒப்பிட்டு இன்னும் சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் தங்கள் தேடலை தொடர்வார்கள்.

தேடலின் முடிவு

வாழ்க்கையை ஒரு பந்தயமாக கருதி எல்லோரும் ஓடுவதால் தானும் அவர்களுடன் சேர்ந்து ஓட ஆரம்பிப்பவர்களில் பலர் எதற்காக ஓடுகிறோம் என்று அறிந்து கொள்ளாமலேயே முதுமையை அடைந்துவிடுவார்கள். இவர்களின் தேடல் அடுத்த பிறவியிலும் தொடரும்.

மகாத்மா காந்தி போன்ற சாதனையாளர்களாலேயே தங்களின் குறையை தீர்த்து பூரணதிருப்தியுடன் வாழும் நிலையை அடைய முடியவில்லை என்பதை வரலாறு மற்றும் புராணங்களை படித்து அறிந்து கொள்பவர்கள் தங்களின் தேடல் உலகை மாற்றியமைக்க முயல்வதால் முடிவுக்கு வராது என்பதை உணர்வார்கள்.

இருக்கமான காலணிகளை ஒரு ஆறு மணிநேரம் அணிந்து அதன்பின் அவற்றை கழட்டும்பொழுது ஏற்படும் ஒருசிலநிமிட இன்பத்திற்காக தினமும் பாதங்களை நோகடிப்பவன் போல ஏதாவது ஒரு குறிக்கோளை முன்வைத்து அதை அடைந்தால்தான் நிம்மதி என்று வாழ்நாள்முழுவதும் பலர் துன்பபடுகிறார்கள்.

மாணவப்பருவத்தில் உலகை மாற்றியமைக்கும் திறனை பெற தேவையான தொழில் கல்வியுடன் வேதம் தரும் வாழ்க்கை கல்வியையும் கற்பவர்கள் தங்கள் தேடல் அறியாமையின் விளைவு என்பதை உணர்வார்கள். பூரணமானவன் நான் என்பதை உணர்ந்தால் மட்டுமே மனிதனின் தேடல் முடிவுக்கு வரும்.

முடிவுரை :

வெற்றிக்கோப்பையை கையில் ஏந்திக்கொண்டு மற்றபவர்களுடன் சேர்ந்து ஓடுபவன் ஞானி. ஓட்டப்பந்தையத்தின் இறுதியில் வெற்றிபெற்றால்மட்டுமே அது கிடைக்கும் என்ற எண்ணத்துடன் ஓடுபவர்கள் ஞானியின் கையில் இருக்கும் வெற்றிக்கோப்பையை அடையாளம் கண்டுகொள்வதில்லைவெற்றிபெற்றபின் ஓடத்தேவையில்லை என்ற தவறான அறிவே இதற்கு காரணம்.

தடைபடாத நிம்மதியும் குறையாத இன்பமும் தங்கள் இயற்கை நிலை என்பதை அறியும் வரை இவற்றைத்தான் தேடுகிறோம் என்பதை மக்கள் அறிவதில்லை. உலகை மாற்றியமைப்பதன் மூலம் நிம்மதியை அடையலாம் என்று இல்லாத இடத்தில் இன்பத்தை தேடத்துவங்குபவர்களில் பலர் எவ்வளவு முயன்றும் தங்கள் தேடல் முடிவுக்கு வராததால் வாழ்க்கையில் விரக்தியும் சலிப்புமடைந்து காந்தியை போல தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள்

ஒரு சிலர் தாங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக சரியான ஆசிரியரிடம் வேதம் பயின்று வாழ்வில் வெற்றியடைகிறார்கள். அதன் பின் முழுவேகத்துடன் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கிறார்கள். இலக்கு எதனையும் அடைய வேண்டிய கட்டாயம் இல்லாததால் இவர்களுடன் ஓடுபவர்கள் விழுந்துவிட்டால் கை கொடுத்து காப்பாற்ற தயங்குவதில்லை. தனக்குபின் ஓடிவருபவர்கள் தடுக்கிவிழாவண்ணம் வழியிலிருக்கும் தடைகற்களை அகற்றுவதும் தனது கடமை என்பதை இவர்கள் அறிந்திருப்பார்கள்

எவ்வளவுதான் உதவிசெய்தாலும் மற்றவர்களின் சோகம் தீரவில்லை என்பதை நினைத்து இவர்கள் சிறிதும் மனம் வருந்த மாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வது மட்டும்தான் தங்கள் கடமை என்றும் தாங்கள் உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் உலகம் இப்பொழுது இருப்பதுபோல் எப்பொழுதும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் மாறிக்கொண்டு இருக்கும் என்பதை இவர்கள் உணர்வார்கள். இந்த அறிவு இல்லையெனினும் வெளிப்பார்வைக்கு ஞானியைப்போல செயல்படும் சமுகசேவகர்கள் உலகின் ஏற்ற இறக்கங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.

பயிற்சிக்காக :

1. மனிதனின் தேடலுக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு?

2. வாழ்க்கைப்பயணத்தில் விளக்கப்பட்ட நான்கு படிகள் யாவை?

3. மக்களின் தேடலுக்கு அடிப்படை காரணம் என்ன?

4. இந்த தேடல் எப்படி முடிவுக்கு வரும்?

5. சமூக சேவை செய்பவருக்கும் ஞானிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

6. ஞானி சமுக சேவை செய்யும் விதத்திற்கும் அஞ்ஞானி சமுக சேவை செய்யும் விதத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

7. முதியவர்களில் பலர் விரக்தியுடனும் சலிப்புடனும் வாழ்வதற்குகாரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. சமூக சேவை செய்வதன் மூலம் பிறவிச்சுழலிலிருந்து மீள முடியுமா?

2.ஆடம்பரத்திற்கும் அடிப்படை தேவைகளுக்கும் என்ன வித்தியாசம்?

3. படைப்பின் இரகசியம் என்ன?

4. ராமராஜ்யம், பொற்காலம் என்று வரலாற்று பாடங்களில் படித்ததுபோன்ற நல்லுலகம் ஒன்று எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பேயில்லையா?

5. கலீல் கிப்ரான் எழுதிய முற்றுணர்ந்தோன் (The Prophet) என்ற நூலைப்படிக்கவும்.