Thursday, May 27, 2010

Lesson 126: Seventh and Eighth steps of AshtangaYoga ( பிரம்ம சூத்திரம் 3.3.40-41 )

பாடம் 126: தியானமும் சமாதியும்
பாடல் 399-400 (III.3.40-41)

அஷ்டாங்க யோகத்தின் கடைசி இரு அங்கங்களான தியானம் மற்றும் சமாதி ஆகிய இரண்டை பற்றிய விளக்கத்துடன் முக்தியை அடைய அஷ்டாங்க யோகம் எவ்வாறு உதவுகிறது என்ற கருத்தையும் இந்த பாடம் விளக்குகிறது.

யோகம் காட்டும் பாதை

யமம் மற்றும் நியமம் என்ற முதல் இரு அங்கங்கள் நம் வாழ்வை எவ்வாறு சரியாக வாழ்வது என்ற கருத்தை பத்துகட்டளைகள் மூலம் தெரிவித்தன. நம் வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைய மனம்போனபடி வாழாமல் செய்யவேண்டிய கடமைகளை செய்தும் செய்ய கூடாதவற்றை தவிர்த்தும் வாழவேண்டும்.

ஆசனம் மற்றும் பிராணாயாமம் ஆகிய அடுத்த இரு அங்கங்கள் தியானம் செய்வதற்கேற்ற உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நமக்கு கொடுக்கின்றன.

மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டுமென்றால் அடிப்படைத்தகுதிகளை ஒருவன் பெற்றிருக்க வேண்டும். அதுபோல முக்தியை அடைய அஷ்டாங்க யோகத்தின் முதல் நான்கு அங்கங்களை கடக்க வேண்டும்.

தகுதியானவர்கள் அனைவருக்கும் கல்லூரியில் இடம் கிடைத்துவிடுவதில்லை. நுழைவுத்தேர்வில் தேறுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பிரத்யாகாரம் மற்றும் தாரணம் ஆகிய அடுத்த இரு அங்கங்கள் வெளியுலகில் உள்ள கவனத்தை உள்நோக்கி திருப்பி தியானத்துக்காக தேர்ந்தெடுத்த பொருளில் நம் மனதை குவிக்க உதவுகின்றன. இந்த கட்டத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே தியானம் மற்றும் சமாதி ஆகிய கடைசி இரு அங்கங்களை முறையாக பயின்று முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கிறது.

தியானம்

ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை மனதுக்குள் தொடர்ந்து ஜெபிப்பதுதான் தியானம். தியானம் செய்வதன் குறிக்கோள் கட்டுப்பாடற்ற மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது. இதற்கு எந்த மந்திரத்தை உபயோகபடுத்துகிறோம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. ஆயினும் அவரவர்களின் இஷ்டதெய்வத்தை புகழ்வது போல் அமையும் மந்திரம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கு தியானம் செய்வதை எளிதாக்கும். கடவுளிடம் அதிக ஈடுபாடு இல்லாதவர்களுக்கு வேதத்தின் சாரமான ‘நான் பரமன்’, ‘நீயே அது’, ‘பேரறிவே பிரம்மம்’ போன்ற மந்திரங்கள் உதவும்.

கண்களை மூடி வேறு எந்த புலன்களுக்கும் எவ்வித வேலையும் இல்லாத சூழ்நிலையில் சுகமாக அமர்ந்து உடல் உறுப்புகள் எதையும் பயன்படுத்தாமல் மனதுக்குள் மந்திரத்தை ஜெபிப்பது தியானம். மற்ற எண்ணங்களை அடக்கி முதல் முறையாக மந்திரத்தின் மீது மனதை குவிப்பது தாரணம். அதற்குபின் அதே மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதில் மட்டுமே மனதை பழக்கபடுத்தி பயில்வது தியானம்.

மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்லும்பொழுது எவ்வளவு முறை சொல்லுகிறோம் என்ற எண்ணிக்கை அனாவசியம். அதில் கவனத்தை செலுத்தகூடாது. அதேபோல் மந்திரத்தின் அர்த்தமும் முக்கியமல்ல. தியானம் செய்யும்பொழுது மந்திரத்தை மனதுக்குள் உச்சரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

மனதில் வேறு எந்த எண்ணங்களும் ஏற்படாமல் மந்திரத்தில் மட்டும் கவனம் செலுத்துவது தாரணம். அதே கவனத்தில் தொடர்ந்து ஆழ்ந்து இருப்பது தியானம். இவ்விதம் தொடர்ந்து அதே கவனத்தில் இருப்பதற்கு எவ்வித பிரயத்தனமும் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் தானாக தியானம் நடப்பது சமாதி.

தியானம் நம் முயற்சியால் செய்யப்படுவது. தியானம் சமாதியில் முடியும்.

சமாதி

எப்பொழுது தியானம் எவ்வித முயற்சியும் இன்றி இயல்பாக நடைபெற ஆரம்பிக்கிறதோ அந்த நிலை சமாதியாகும். அஷ்டாங்க யோகத்தின் முதல் ஏழு அங்கங்களும் நம் முயற்சியால் பயின்று கடக்க வேண்டிய படிகட்டுகள். இந்த பாதையில் படிப்படியாக ஏறி கடைசியில் சேரவேண்டிய இடம்தான் சமாதி.

நான், மந்திரம், என் முயற்சி ஆகிய மூன்றும் சேர்ந்தது தியானம். நான் முயற்சி செய்து தொடர்ந்து மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நிலை மாறி எவ்வித முயற்சியுமின்றி நான் செய்கிறேன் என்ற எண்ணமும் இன்றி தியானம் நடப்பதுதான் சமாதி. நான் உள்ளிட்ட அனைத்து எண்ணங்களின் மறைவு சமாதி.

சக்தியை செலவழித்து பெடலை தொடர்ந்து சுழற்றினால்தான் சைக்கிள் ஓடும். ஆனால் வெகு வேகமாக சிறிதுநேரம் தொடர்ந்து பெடலை சுழற்றிவிட்டு பிறகு ஓய்வு எடுத்துக்கொண்டாலும் சைக்கிள் தானாக எவ்வித முயற்சியும் இல்லாமல் ஓடும். இதுபோல் தொடர்ந்து மந்திரத்தை முயற்சியுடன் ஜெபித்து பழகிவிட்டால் பின் எவ்வித முயற்சியும் இல்லாமல் நாம் சமாதியில் இருக்கத்துவங்குவோம்.

நாம் செய்கிறோம் என்ற எண்ணமின்றி செய்யும் செயலில் முழுவதும் மூழ்குவது சமாதி. கிரிக்கட் போட்டியில் கடைசி ஓவரில் பத்து ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உலகத்தில் நம்மை சுற்றி நிகழும் வேறு எந்த நிகழ்வுகளும் நம்மை பாதிக்காமல் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமும் இல்லாமல் விளையாட்டுடன் ஒன்றி சமாதியான நிலையில் இருப்பதால்தான் வெற்றிபெற்றவுடன் என்னவோ நாமே விளையாடி வென்றது போன்ற சந்தோஷம் ஏற்படுகிறது. இது போல் ஒவ்வொருவரும் தங்கள் தொழிலில் தன்னை மறந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கும்பொழுதும் சமாதியை அடைகிறார்கள். எனவே சமாதி என்ற நிலை நம் அனைவருக்கும் பழக்கமான ஒன்று.

வாழ்வில் வெளியுலக சூழ்நிலைகள் நம்மையறியாமல் நம்மை சமாதி நிலைக்கு எடுத்துச்செல்கின்றன. அஷ்டாங்க யோகம் மூலம் நாம் உள்நோக்கிதிரும்பி மனதின் செயல்பாட்டை கவனித்து அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தி தியானம் செய்வதன் மூலம் சமாதி என்ற நிலையை நம் முயற்சியால் அடைகிறோம்.

பயங்கரமான திகில் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை பார்க்கும்பொழுது திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்ற நினைவு இருக்கும்வரை நாம் பயப்படுவதில்லை. எப்பொழுது படத்துடன் ஒன்றி நாமும் அதில் ஒரு அங்கமாக ஆகிவிடுவோமோ அப்பொழுது நமக்கு உண்மையிலேயே பயம் ஏற்படுகிறது.

பார்ப்பது திரைப்படம் என்ற எண்ணம் இருக்கும் வரை பயம் ஏற்படுவதில்லை. அது போல இவ்வுலகில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் உண்மையில் நடக்கின்றன என்ற நினைவு இருப்பதால்தான் நமக்கு பொறாமை, கோபம், எரிச்சல் போன்ற துக்கம் தரும் உணர்வுகள் தோன்றுகின்றன. அஷ்டாங்க யோகத்தை முறையாக பின்பற்றி சமாதி நிலையை அடைந்த பின் இவ்வுலகம் ஒரு நாடகமேடை என்ற வேதம் கூறும் உண்மை நம் மனதில் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் என்பதால் சூழ்நிலை எப்படியிருந்தாலும் குறைவில்லாத அமைதியுடன் வாழலாம்.

இந்த முக்தி நிலையை அடைய உதவும் படிக்கட்டுதான் அஷ்டாங்க யோகம். தியானம் செய்து சில நேரம் சமாதி என்ற நிலையை அடைந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. எல்லோராலும் வெகுநேரம் சமாதி என்ற நிலையில் இருக்க முடியாது, இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

உலகில் எப்படி இன்பமாக வாழ்வது என்பதை பயில்வதற்காகத்தான் அஷ்டாங்க யோகம் என்ற பாதையில் பயணிக்கிறோமே தவிர தியானத்தின் மூலம் அடையும் சமாதியில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பது நம் வாழ்வின் குறிக்கோள் அல்ல.

நாம் சமாதியில் இருப்பதற்காக இவ்வுலகம் படைக்கப்படவில்லை. உலகத்தில் உள்ள சுகங்களை தொடர்ந்து அனுபவிப்பதே இந்த பிறவியின் நோக்கம். இடையிடையே ஏற்படும் துயரங்களை அவ்வப்பொழுது சமாதியில் ஆழ்வதால் தவிர்க்க முடியாது. சமாதியிலேயே இருக்கவேண்டும் என்ற ஆசை மரணத்திற்குபின் நிச்சயம் நடக்கத்தான் போகிறது. எனவே உயிருடன் இருக்கும்பொழுது வாழ்வின் துயரங்களிலிருந்து தப்பிக்க தியானம் செய்ய முயல்வது அறியாமை.

அலைபாயும் மனது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கபடுவதை மாற்ற தியானம் செய்து மனதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். வேதம் படிப்பதால் கிடைக்கும் ஞானத்தில் நிலை பெற தியானத்தின் முடிவான சமாதி உதவும்.

எண்ணையை ஊற்றும்பொழுது எப்படி அது ஒரே சீராக ஆடாமல் கம்பிபோல் ஒழுகுகிறதோ அதேபோல் நாம் மனதினுள் உச்சரிக்கும் மந்திரம் ஒரே சீராக எவ்வித தடையுமின்றி தானாக தொடர்கிறதோ அப்பொழுது நாம் சமாதி என்ற நிலையை அடைந்துவிட்டோம் என்பது பொருள்.

சமாதி என்ற நிலையில் எவ்வித புதிய அனுபவமோ அறிவோ நமக்கு கிடைக்கும் என்பது தவறான கருத்து என்பதை நாம் மறந்து விடகூடாது. சமாதி அனுபவம் தியானம் செய்யாமலேயே அனைவருக்கும் கிடைக்கும் ஒன்று. அறிவு என்பது நம் ஐந்து புலன்களின் மூலம் மட்டுமே கிடைக்கும். எனவே அதிகபட்சமாக ஓரிரு முறைக்கு மேல் தியானத்தின் மூலம் சமாதியை அடைய வேண்டியதில்லை.

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம். ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்தபின் அடையும் சமாதி, வாழ்வு முழுதும் ‘நான் பரமன்’ என்ற அறிவில் நிலைபெற உதவும். எனவே முக்தியடைந்த பின் தொடர்ந்து தியானம் செய்யவேண்டிய அவசியமில்லை.

முடிவுரை :

'புலி உன்னை துரத்தினால் நீ என்ன செய்வாய்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும்பொழுது இது ஒரு கற்பனை என்பது நமக்கு தெரிந்திருப்பதால் பயம் ஏற்படாது. ஆனால் கனவில் புலி நம்மை துரத்தினால் அது வெறும் எண்ண ஓட்டம் என்பது தெரியாமல் நிஜமாகவே புலியை பார்த்த பயம் ஏற்பட்டு உடல் வேர்த்து விடும்.

இதுபோல ‘நான் பரமன்’ என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து தியானம் செய்கிறோம் என்ற எண்ணம் மறைந்தவுடன் நான் பரமன் என்ற உண்மை மட்டும் நிலைபெற்றுவிடும்.

வேதத்தை முறையாக படிக்கவேண்டும் என்ற படியை சரியாக கடந்து தியானம் செய்து சமாதியை அடைந்திருந்தோமானால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் நாம் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தியானம் என்பது சமாதிக்கு வழிவகுக்கும். சமாதி முக்தியை நிலைநாட்டும்.

சிறுகுழந்தையுடன் விளையாடும்பொழுது நாம் வயதானவர்கள் என்பதை நமக்கு நாமே ஞாபகபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாம் குழந்தையுடன் விளையாடுவதற்காக நம்மையும் குழந்தையின் நிலைக்கு தாழ்த்திக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறப்பதில்லை. அதுபோல தியானம் செய்து பழகியபின் உலக வாழ்வில் ஈடுபடும்பொழுது நான் பரமன், இப்பொழுது மனித உடலுடன் உலகில் உறவாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நமக்கு நாமே ஞாபகபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அஷ்டாங்க யோகத்தின் மூலம் முக்தியடைந்தபின் உலகம் ஒரு நாடகமேடை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பதால் குறையாத இன்பமும் நிரந்தரமான அமைதியும் நம்மை விட்டு விலகுவதேயில்லை.

பயிற்சிக்காக :

1. யோகம் காட்டும் பாதையை விளக்குக.

2. தியானம் என்றால் என்ன?

3. சமாதி என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. சமாதி என்ற நிலையை தியானத்தின் மூலம் அடைவது அவசியமா?

2. ஒரு நாளில் எவ்வளவு நேரம் தியானம் செய்யவேண்டும்?

3. ஒரு நாளில் எவ்வளவு நேரம் சமாதியில் இருக்கவேண்டும்?

4. சமாதியை இருவழிகளில் அடையலாம். அவை யாவை?

Monday, May 24, 2010

Lesson 125: Fifth and Sixth steps of AshtangaYoga ( பிரம்ம சூத்திரம் 3.3.39 )

பாடம் 125: பிரத்யாகாரமும் தாரணமும்
பாடல் 398 (III.3.39)

அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது அங்கமான பிரத்யாகாரம் என்னும் புலன் கட்டுப்பாட்டு முறைகளையும் ஆறாவது அங்கமான தாரணம் என்னும் மனகட்டுப்பாட்டு முறைகளையும்  இந்த பாடம் விவரிக்கிறது.

பிரத்யாகாரம்

ஒலியை செவி மூலம் உணர்வதால் ஒலியை எழுப்பும் ஒரு பொருள் உலகில் இருக்கிறது என்று நாம் உணருகிறோம். இதுபோல உலகின் ஒவ்வொரு அம்சத்தையும்  நமது ஐந்து புலன்கள் நமக்கு அறிவிப்பதால் மட்டுமே உலகம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. ஐந்து புலன்களில் ஒன்று கூட வேலைசெய்யாவிட்டால் இந்த பிரபஞ்சம் நம்மை பொறுத்தவரை மறைந்து விடும்.

ஐந்து புலன்கள் மூலம் உலகத்தில் உள்ள பொருள்களை நாம் அனுபவிப்பதற்காக மட்டுமே உலகம் படைக்கபட்டுள்ளது. இஸ்திரி பெட்டியை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் கையை சுட்டுக்கொள்வதைப்போல நாம் நம் ஐந்து புலன்களை எப்படி உபயோகிப்பது என்று முறையாக கற்றுக்கொள்ளாமல் உலகத்தில் எப்பொழுதும் இன்பமாக வாழாமல் அடிக்கடி துன்பபட்டுகொண்டு இருக்கிறோம். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதை அனுபவிக்க நமது ஐந்து புலன்களை கட்டுபடுத்தி முதலில் பழகிக்கொள்ள வேண்டும். புலி பதுங்குவது பாய்வதற்காக. அதுபோல ஞானத்தை அடைந்த பின் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் உலகில் உள்ள சுகத்தையெல்லாம் அனுபவிக்க முதலில் பிரத்யாகாரம் என்ற புலனடக்கம் அவசியம். ஆமை தன் தலையையும் நான்கு கால்களையும் உள்ளிழுத்து கொள்வதுபோல் நம் ஐந்து புலன்களையும் அடக்கிக்கொள்வது பிரத்யாகாராம்.

தாரணம்

தியானம் என்பது மனதை உள்நோக்கி திருப்பும் முயற்சி. வெளியில் உள்ள பொருள்கள் தொடர்பான அனுபவங்களை தரும் நமது ஐந்து புலன்களை அடக்கி முழுமையாக கட்டுபடுத்தினாலும் ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களின் பலனாக நம் மனதில் சேர்த்துவைத்துள்ள எண்ணங்கள் நம்மை தொடர்ந்து அலைக்கழித்து தியானத்தில் நம் கவனத்தை செலுத்தமுடியாமல் தடை செய்யும். எனவே மனதை உள்நோக்கித்திருப்பி தியானத்திற்காக தேர்ந்தெடுத்த கருத்தின்மீது மனதை ஒருமுகபடுத்தும் பயிற்சிதான் தாரணம். எனவே தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் தாரணம் அவசியமாகிறது. 

யாரும் இல்லாத தனியறையில் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும் என்ற குருவின் ஆலோசனையை புறக்கணித்து ஆற்றங்கரையில் அமர்ந்து ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா’ என்று கண்களை திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தான் ஒரு இளைஞன். ஆற்றில் தண்ணீர் எடுக்க வந்த இளம் பெண்ணின் வருகை அவன் கவனத்தை கவர்ந்ததால் அவன் நாராயணனை மறந்துவிட்டு அந்த பாவையை பற்றிய தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அடுத்தநாள் கண்களை இறுக மூடி ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது ஜல்ஜலெனும் சலங்கையொலி அவன் கவனத்தை கவர்ந்து அவனையறியாமல் அவன் கண்கள் தண்ணிரெடுக்க வந்த அந்த கன்னியின்பின் சென்றுவிட்டது. மூன்றாவது நாள் முன்னேற்பாடாக காதில் பஞ்சை அடைத்துகொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தாலும் மன்னனை மயக்கும் மல்லிகைப்பூமணம் அவன் தியானத்தை கலைத்து அந்த மங்கையின் பின் அவன் மனதை செல்லவைத்தது. குருவின் ஆலோசனையை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தநாளும் தியானம் செய்ய ஆற்றங்கரைக்கு சென்ற அவன் மேலதிகபாதுகாப்பாக தனக்குமுன் நிறைய மல்லிகை மலர்களை வைத்துகொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தான். ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா……இந்நேரம் அந்தப்பெண் குடத்துடன் இங்கு வந்திருப்பாள்…’ என்ற நினைவு மனதில் ஏற்பட மறுபடியும் அவன் நாராயணனை மறந்து விட்டான்.

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணம் ஆகிய ஆறு படிகளை முறைப்படி கடக்காமல் தியானம் செய்ய ஆரம்பிக்கும் அனைவருக்கும் இதே நிலைதான். தியானம் செய்ய ஆரம்பித்ததும் சிறிது நேரத்தில் அவர்களது நினைவு வெளியுலகில் பவனிவர ஆரம்பித்துவிடும். எவ்வளவு முறை தனக்குத்தானே ஆணையிட்டு மனதை அடக்கினாலும் அது நிற்காமல் ஓடும். 

எனவே முறைப்படி செய்யவேண்டிய கடமைகளை செய்து, செய்யத்தகாதவற்றை தவிர்த்து, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்துடன் புலன்களை கட்டுபடுத்திய பின் தாரணம் என்ற முழுகவனத்தையும் ஒரே பொருள்மேல் செலுத்தும் பயிற்சியையும் செய்தபின்தான் தியானம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

பிரத்யாகாரம் செய்யும் முறை

தியானம் எப்படி செய்வது என்பதை ஆசிரியரிடம் பயிலும்பொழுது மட்டுமே மற்றவர்களுடன் கூட்டாக அமரலாம். பயிற்சி முடிந்த பின் தியானத்தை தனியாகத்தான் செய்யவேண்டும். மேலும் வீட்டில் உள்ள ஒரு நபரிடம் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தியானம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய ஐந்து புலன்களை தேரை இழுக்கும் ஐந்து குதிரைகளுடன் ஒப்பிடலாம். முரட்டு குதிரைகளை பயிற்றுவிக்காமல் அவற்றை தேரில் பூட்டினால் தேர்பாகனால் அவற்றை கட்டுபடுத்தி தேரை செலுத்த முடியாது. அதுபோல் தினசரி வாழ்வில் ஐம்புலன்களை கட்டுபடுத்தி முறையாக பயிற்றுவிக்காமல் தியானம் என்ற பயிற்சியில் நம்மால் ஈடுபட முடியாது.

மெய்: உடலை ஆசனம் மற்றும் பிராணாயாமம் போன்ற பயிற்சிகளால் ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் எவ்வித தவறான செயலிலும் ஈடுபடுத்தாமல் முழுக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

வாய்: நாம் பேசுகிற வார்த்தைகள் யாருக்கும் துன்பத்தை தராதவண்ணமும், உண்மையாகவும், இனிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். என்னையறியாமல் தவறாக பேசிவிட்டேன் என்று நாமே வருத்தபடுவதை தவிர்க்க இந்த நான்கு சோதனைகளில் தேறும் வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும்.

அதேபோல் சுவையாக இருக்கும் உணவை சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற நிலையை மாற்றி உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை மட்டும் உண்ண வேண்டும். பசியெடுத்தபின்தான் சாப்பிட வேண்டும். இருகைகளை சேர்த்து பிச்சை எடுப்பதுபோல் வைத்தால் கைகளில் எவ்வளவு உணவு நிறைகிறதோ அந்த அளவு மட்டும் தான் சாப்பிடவேண்டும். உண்டு முடித்த பின் வயிற்றில் பாதி அளவு உணவும் கால்பகுதி தண்ணிரும் எஞ்சியிருக்கும் கால்பகுதி வெற்றிடமுமாக இருந்தால்தான் உண்ட உணவை சரியாக ஜீரணிக்க முடியும்.

மதுபானங்கள் போன்ற போதைதரும் பொருள்கள் அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஜடத்தனிம உணவை முற்றிலும் தவிர்த்து ஒளித்தனிமம் அதிகமாக உள்ள உணவு வகைகளை மட்டும் உண்ண வேண்டும்.  

உணவை இறைவனுக்கு படைத்தபின் அதை பிரசாதமாகத்தான் நாம்  உண்ணவேண்டும். பசிக்கிறது என்றோ சுவைக்க ஆசையாக இருக்கிறது என்றோ புலன்களை கட்டுபடுத்தாமல் உணவை உண்ணகூடாது. பூஜை முடிந்ததும் சிறிது உணவை காக்கைக்கு இட்டு அது உண்டபின்தான் நாம் உண்ண வேண்டும்.

கண்: ஆபாசமான படங்களையோ வன்முறையை தூண்டும் காட்சிகளையோ பார்க்காமல் கண்களை நல்லவற்றை மட்டும் பார்க்க பயன்படுத்தவேண்டும்.

செவி: தீய சொற்களை கேட்பதை தவிர்த்து கடவுளின் கல்யாண குணங்களை பாடும் இனிமையான பாடல்களையும் சான்றோர்களது உரைகளை மட்டுமே கேட்க செவிகளை பயிற்றுவிக்க வேண்டும்.

மூக்கு: வாசனை திரவியங்களை உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தாரணம் செய்யும் முறை

எப்பொழுதும் நண்பர்கள் வீடு, கடற்கரை, சினிமா தியேட்டர் என்று ஊர் சுற்றிவிட்டு தூங்குவதற்கு மட்டும் வீட்டுக்கு வரும் இளவட்டங்களை வீட்டில் அடைத்து வைப்பதைவிட விழித்திருக்கும் நேரமெல்லாம் வெளியுலகில் மட்டுமே உலாவிகொண்டிருக்கும் மனதை உள்நோக்கி திருப்புவது கடினம்.

உடமைகள், கடமைகள், உறவுகள் மற்றும் செயல்பாடுகள் ஆகிய நான்கையும் துறந்து மனதுக்கு வெளியுலகத்தின் மேல் இருக்கும் நாட்டத்தை முதலில் குறைக்க வேண்டும். அதற்குபின் தியானம் செய்யும் கருத்தின்மேல் மனதைகுவிக்க தேவையான பயிற்சிகளை ஆரம்பிக்கவேண்டும்.

உடமைகள்: தானம் செய்ய ஆரம்பித்து பொருள்மிகபடையாமை என்ற கட்டளையை பின்பற்றாமல் மனதை கட்டுப்படுத்துவது கடினம். பொருள் படைத்தவர்கள் தியானம் செய்யும் நேரத்திலாவது மனதளவில் அனைத்து பொருள்களையும் துறக்கவேண்டும். தியானம் செய்யும் இருபது நிமிடங்களுக்குள் நமது சொத்துக்களை அழியாமல் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனிடம் கொடுத்துவிட வேண்டும். கோவிலுக்கு வெளியே கழட்டிவிட்ட செருப்பு தியானம் செய்து முடிக்கும்வரை காணாமல் போகாமல் இருக்குமா என்ற எண்ணம் தோன்றினால் தியானம் செய்ய முடியாது. கடவுள்தான் நம் உடல் உட்பட்ட அனைத்து சொத்துக்களுக்கும் உரிமையாளன் என்றும் அவற்றை தற்காலிகமாக அனுபவிக்க அவன் நம்மை அனுமதித்துள்ளான் என்றும் நாம் உணர வேண்டும்.

கடமைகள்: இல்லறப்பொறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு துறவு வாழ்வில் நுழைந்தவர்களுக்குத்தான் கடமைகள் எதுவும் இருக்காது. நமது உத்தரவுகளை எதிர்பார்த்து வாசலில் யாரேனும் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தால் நம்மால் தியானம் செய்யமுடியாது.

உறவுகள்: மேலதிகாரி, பக்கத்துவீட்டுக்காரர், ஆட்டோ ஓட்டுனர் போன்றவர்களுடன் சண்டை போட்டுவிட்டு அமைதியாக தியானம் செய்ய முடியாது. அனைத்து மனிதர்களுடன் நாம் தொடர்ந்து உறவாடுவதால்  நம் மனதில் பதியவைக்கப்பட்டுள்ள நினைவுகள் நம் தியானத்துக்கு தடையாய் இல்லாமல் இருக்க அனைத்து உறவுகளையும் மனதளவில் துறந்து விடவேண்டும்.

செயல்பாடுகள்: அடுப்பில் வைத்த குக்கரை இருபது நிமிடம் கழித்து இறக்கவேண்டும், அதுவரை தியானம் செய்யலாம் என்பது முடியாது. ஏனெனில் மனம் செய்யவேண்டிய வேலையில்தான் குறியாக இருக்கும். இல்வாழ் பருவத்தில் இருக்கும்வரை ஏதாவது செய்து முடிக்கமுடியாத காரியங்கள் இருந்து கொண்டேயிருக்கும். எனவேதான் துறவுநிலையில்தான் தியானபயிற்சியை துவங்க வேண்டுமென வேதம் விதித்துள்ளது.

மனம் குவிதல்:

மனதை ஒருமுகபடுத்தி ஒரு குறிப்பிட்ட காரியத்தில் ஈடுபடுத்துவது எல்லோராலும் மிக எளிதாக செய்யகூடிய ஒரு செயல். ஆனால் இவ்வாறு ஒரு செயலில் கவனத்தை செலுத்த அந்த செயலை செய்யவேண்டிய அவசியம் என்ன என்றும் அந்த செயலை செய்வதால் ஏற்படும் பலன் என்ன என்ற தெளிவும் மிக அவசியம்.

உதாரணமாக வீட்டில் எவ்வளவு கலாட்டா நடந்துகொண்டிருந்தாலும் உலகத்தையே மறந்து ஒரு சிறுவன் கம்ப்யூட்டருடன் தான் விளையாடும் கால்பந்தாட்டத்தில் தன் முழுகவனத்தை செலுத்திக்கொண்டிருப்பான். அவன் கையில் புத்தகத்தை திணித்து பரிட்சைக்கு படிக்கசொன்னால் கவனம் சிதறாமல் மனதுக்குள் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருப்பான். படிப்பில் விருப்பம் இல்லாமலும் படிப்பதால் கிடைக்கும் பயன் என்ன என்பதில் தெளிவும் இல்லாதவரை அதில் மனதை ஒருமுகபடுத்தும் திறன் அவனுக்கு வராது.

அதேபோல் தியானம் செய்வதில் இருக்கும் சுகம் மற்றும் தியானம் செய்வதால் விளையகூடிய பயன் ஆகியவற்றில் தெளிவில்லாமல் தாரணம் நடக்காது.    

முடிவுரை :

முதலில் ஐந்து புலன்களும் மனதும் வெளியுலக சஞ்சாரம் செய்வதை நிறுத்தி பின் இரண்டாவதாக தியானம் செய்ய தேர்ந்தெடுத்த கருத்தில் மனதை குவியசெய்தபின்தான்  தியானம் செய்ய ஆரம்பிக்கமுடியும். ஐம்புலன்களை பிரத்யாகாரம் என்ற புலன் கட்டுப்பாட்டு பயிற்சிகளாலும் மனதை தாரணம் என்னும் மனகட்டுப்பாட்டு பயிற்சியின் மூலமும் தேவையான அளவு பயிற்றுவித்தபின் நாம் தியானம் செய்ய தொடங்கலாம்.

பயிற்சிக்காக :

1. பிரத்யாகாரம் என்றால் என்ன?

2. தாரணம் என்றால் என்ன?

3. பேசும் நாக்கை கட்டுபடுத்த நாம் எந்த நான்கு சோதனைகளை செய்தபின் பேச வேண்டும்?

4. உண்ணும் நாவை கட்டுபடுத்த நாம் செய்யவேண்டியவை யாவை?

5. தாரணம் செய்ய நாம் செய்ய வேண்டிய ஐந்து பயிற்சிகளை எந்த அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்?

சுயசிந்தனைக்காக :

1. ஐம்பது வயதுக்கு குறைவானவர்கள் தியானம் செய்யகூடாதா?

2. தியானம் செய்வதற்கு முன் கடக்க வேண்டிய ஆறு அங்கங்களை முறைப்படி கடக்காமல் பலர் தியானம் செய்கிறார்கள். இவர்களின் செயல் தவறா?

3. கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் தியானம் செய்யலாமா?

Tuesday, May 18, 2010

Lesson 124: Third and Fourth steps of AshtangaYoga ( பிரம்ம சூத்திரம் 3.3.38 )

பாடம் 124: ஆசனமும் பிராணாயாமும்
பாடல் 397 (III.3.38)

அஷ்டாங்க யோகத்தின் மூன்று மற்றும் நான்காவது அங்கங்களாக ஆசனமும் பிராணாயாமமும் யோகத்தை அடைய படிக்கட்டுக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பற்றி பரவலாக நிலவிவரும் தவறான கருத்துக்களை விலக்கி வேதத்தின் பார்வையில் இவை எவ்வளவு தூரம் உபயோகமானவை என்ற விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

யோகாசனம்

யோகா என்ற சொல் ஆங்கில அகராதியில் இடம்பிடித்திருந்தாலும் அதன் பொருள் உலகில் உள்ள பெரும்பான்மை மக்களால் தவறாக புரிந்து கொள்ளபட்டுள்ளது. யோகா என்ற சொல்லால் பலர் குறிப்பிடுவது அஷ்டாங்க யோகத்தின் மூன்றாவது அங்கமான ஆசனபயிற்சியை மட்டும்தான். முட்டிவலியிலிருந்து விடுதலை பெற யோகா உதவுமா என்ற கேள்வியை கேட்பதற்கு முன் யோகா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

யோகா என்பது வாழ்வின் துயரங்களிலிருந்து நமக்கு முற்றிலும் விடுதலை வழங்க வல்லது. யோகா என்பதன் சரியான பொருள் ‘ஒன்றுதல்’. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்று புரிந்துகொள்ள நமக்கு உதவுவதுதான் யோகாவின் குறிக்கோள். நான் பரமன் என்பதை அறிந்து கொண்டு என்றும் குறையாத ஆனந்தத்துடன் வாழ உதவும் யோகாவை முட்டிவலிக்கு பயன்படுத்துவதா வேண்டாமா என்று ஆராய்வதை சுகமாக தூங்க பென்ஸ் கார் உதவுமா என்று கேட்பதற்கு ஒப்பிடலாம். உடலை ஆராக்கியமாக வைத்திருப்பதற்கும் நோய்களை தீர்ப்பதற்கும் நவீன உலகில் இருக்கும் பல வழிகளுடன் முக்தியடைய சாதனமாக வேதத்தால் கொடுக்கப்பட்ட யோகாசனத்தை ஒப்பிட கூடாது.

யோகத்தை அடைய எப்படி அமரவேண்டும் எது போன்ற உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் என்று விளக்கும் யோகாசனத்தை வெறும் உடற்பயிற்சி கலையாக பலர் நினைக்கிறார்கள். படுக்கை அறையில் இருக்கும் மெத்தையை பென்ஸ் காருடன் ஒப்பிட்டு காரை இழிவு படுத்துவதுபோல மருத்துவ உலகின் முன்னேற்றங்களுடன் யோகாசனத்தை ஒப்பிட்டு அதன் மதிப்பை இவர்கள் குறைக்கிறார்கள்.

பிராணாயாமம்

அன்னமயகோசம் மற்றும் மனோமயகோசம் ஆகிய இரண்டிற்கும் பாலமாக இருப்பது பிராணமயகோசம். பிராணனை கட்டுபடுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் வளர்த்துக்கொள்ளலாம்.  மூச்சுக்காற்றை உள்ளிழுத்து, தக்கவைத்து பின் வெளிவிடும் நேரத்தை முறைப்படி கட்டுபடுத்தும் பயிற்சி பிராணாயாமம்.

யோகாசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய மூன்று பயிற்சிகள் மட்டுமே நம்மை பரமனுடன் ஐக்கியமாக்கும் சமாதி என்ற நிலைக்கு கொண்டு செல்லும் என்பது போன்ற தவறான பிரச்சாரங்களை நம்பி ஏராளமான மக்கள் தங்கள் நேரத்தையும் பொருளையும் வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று, ‘எவனொருவன் இந்த மெய்ப்பொருளை உணர்ந்து கொள்கிறானோ அவன் இந்த உலகை வென்றவனாவான்’ என்று கூறுகிறது. இதை தவறாக புரிந்து கொண்டு யோகாசனம், பிராணாயாமம் போன்றவற்றை செய்வதன் மூலம் அமானுஷ்ய சக்திகளை பெறலாம் என்று பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

எனவே யோகாசனம் பிராணாயாமம் ஆகியவற்றை செய்வதன் நோக்கத்தை புரிந்து கொண்டு இவற்றை அளவாக செய்ய வேண்டும்.

அளவு

எல்லோருக்கும் இருப்பது ஒரே மாதிரி உடல் என்றாலும் உண்ணும் உணவு, செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றை பொருத்து உடல் திறன் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. அன்றாட வாழ்வில் செய்யவேண்டிய அனைத்து வேலைகளை செய்ய முடியும் அளவுக்கு உடலில் சக்தி, திறன் மற்றும் ஆரோக்கியம் இருந்தால் போறும். அவ்வாறின்றி உடலை வில்லாக வளைத்து சர்க்கஸில் வித்தைகாட்டும் பெண் செய்யும் சாகசங்களை முறியடிக்கவேண்டும் என்று எல்லோரும் முயற்சி செய்யகூடாது. அவரவர் தேவைக்கு அதிகமாக யாரும் யோகாசனம் செய்ய முயற்சிக்க கூடாது.    

பிராணாயாமமும் ஆசனபயிற்சியைப்போல நம் தேவைக்கு ஏற்ற அளவு மட்டுமே செய்யவேண்டும். நம் உடலையும் மனதையும் முறையாக பயிற்றுவிப்பதன் மூலம் நம்மால் அடையகூடிய சக்திக்கு ஒரு எல்லையே இல்லை. இந்த அளவில்லா சக்தியை அடைய முயற்சிப்பது மிகவும் தவறு. ஏனெனில் இது போன்ற முயற்சிகள் நம்மை வாழ்வின் குறிக்கோளான முக்தியிலிருந்து நம்மை தடம் மாற்றிவிடும்.

எனவே யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகிய மூன்றையும் செய்து பயிலுவதற்கு ஒரு வாரத்தில் அதிகபட்சமாக ஆறு மணிநேரத்திற்கு மேல் செலவிட கூடாது.

முடிவுரை :

மெய்யை உணர நமக்கு கிடைத்துள்ள கருவி என்பதால் மரணத்தில் மறைந்துவிடும் இந்த மனித உடலுக்கு ‘மெய்’ என்று ஆன்றோர் பெயரிட்டுள்ளனர். மெய்யை உணர இந்த உடலை நாம் பயன்படுத்தும்பொருட்டு இதை ஆரோக்கியமாகவும் வலிமைபொருந்தியதாகவும் வைத்துக்கொள்வது அவசியம். இதற்காகத்தான் ஆசனம் மற்றும் பிராணாயாமம் ஆகிய இரு படிகளை அஷ்டாங்கயோகம் வழங்கியுள்ளது. எனவே இவற்றை முக்தியடையும் சாதனங்களாக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

பயிற்சிக்காக :

1. யோகாசனம் என்றால் என்ன?

2. பிராணாயாமம் என்றால் என்ன?

3. யோகா என்ற சொல்லின் சரியான பொருள் என்ன?

4. யோகாசனம் மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றை எந்த அளவு செய்யவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் விளக்கப்பட்ட கிரியா யோகம் என்பதற்கும் பரவலாக மக்களிடையே பிரபலபடுத்தபட்டிருக்கும் கிரியா யோகம் என்பதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.

2. குண்டலினி சக்தியை பெற்று மனித குலத்தின் உயர்வுக்கு அந்த சக்தியை பயன்படுத்துவதில் என்ன தவறு?

3. யோகாசனம் மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றை செய்யாமலேயே முக்தியடைய முடியாதா?

4. யோகத்தை அடைய செயல் செய்ய வேண்டுமா அல்லது பரமன் யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டுமா?

5. சக்கரங்கள், நாடி, குண்டலினி, கிரியா யோகம், சமாதி போன்ற உத்திகளை கையாண்டு அதன்மூலம் வாழ்வில் வெற்றிபெற்றவர்கள் யார் யார்?

Thursday, May 13, 2010

Lesson 123: Five more commandments ( பிரம்ம சூத்திரம் 3.3.37 )

பாடம் 123: செய்யவேண்டியவை
பாடல் 396 (III.3.37)

அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கத்தில் கொடுக்கப்பட்ட செய்யத்தகாத ஐந்து கட்டளைகளின் தொடர்ச்சியாக இரண்டாவது அங்கத்தில் உள்ள மேலும் ஐந்து கட்டளைகளை செய்யவேண்டியவைகளாக விவரித்த பின் இந்த பத்து கட்டளைகளை கடைபிடிக்கும் விதத்தை இந்த பாடம் விளக்குகிறது.

ஆறாம் கட்டளை – தூய்மையாக இருத்தல்

அகத்தூய்மை புறத்தூய்மை என்று தூய்மை இரு வகைப்படும். அகத்தூய்மை என்பது பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்களை தவிர்த்து மனதை அன்பு, தயை, கருணை ஆகிய நற்குணங்களுடன் வைத்திருத்தல். புறத்தூய்மை என்பது உடலை மட்டுமில்லாமல் நாம் இருக்கும் இடத்தையும் தூய்மையாய் வைத்திருப்பது. மேலும் வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ள அனைத்து பொருள்களையும் ஒரு ஒழுங்குடனும் முறையுடனும் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பொருள்களுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி ஒவ்வொருமுறை உபயோகபடுத்தியபின் அந்த இடத்திலேயே அதை திருப்பி வைக்கவேண்டும்.

புறத்தூய்மை நம் உடல் ஆரோக்கியத்திற்கும் அகத்தூய்மை நம் மனதின் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.  

ஏழாம் கட்டளை – திருப்தியுடன் இருத்தல்

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழி சோம்பேறிகளை உருவாக்கும் என்று நினைப்பது தவறு. ஆன்மீகப்பாதையில் முன்னேற திறமையும் அறிவுகூர்மையும் மிக அவசியம். இவற்றை வளர்த்துக்கொள்ள அதிக உழைப்பு தேவை. போதும் என்பது நாம் செய்யும் வேலையின் அளவை குறிப்பது அல்ல.

பொருளாதார வாழ்வில் வெற்றி பெறும் சக்தியுள்ளவர்களால் மட்டும்தான் ஆன்மீக பயணத்தில் வெற்றியடைய முடியும். எனவே இன்னும் அதிகபணம் சம்பாதிக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்று கடுமையாக உழைப்பது மிக அவசியம். போதும் என்ற திருப்தி இவற்றில் ஏற்பட கூடாது.

திருப்தியுடன் இருத்தல் என்ற இந்த கட்டளை நம் தேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு, உடை மற்றும் உறையுள் ஆகிய அடிப்படைத்தேவைகளை கூட ஆடம்பரப்பொருளாக நினைக்கும் மனோபாவம் நமக்கு வேண்டும். வடையிருந்தால் மட்டும்தான் இட்லி சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் கிடைத்ததில் திருப்தியடைய வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கவாய்த்தால் மட்டும் போதும்,  காபி வேண்டும் என்ற கட்டாயமில்லை என்கிற மனபக்குவம் வேண்டும்.

சம்பளம் அதிகமாக அதிகமாக தேவைகளையும் அதிகமாக்கிகொண்டு எப்பொழுதும் பற்றாகுறையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சம்பாதிக்க முயலும் அதே வேளையில் தேவைகளை குறைக்கவும் முயலவேண்டும்.

உலகில் பிறந்து வளர்ந்து நாம் இப்பொழுது இருக்கும் நிலையை அடைவதற்கு நம் பெற்றோர்கள் முதற்கொண்டு சமூகத்தில் உள்ள பலரும் நமக்கு உதவியாய் இருந்திருக்கிறார்கள். எனவே நம் உழைப்பால் உற்பத்தி திறனை அதிகரித்து மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் நாம் பட்ட கடனை அடைக்க வேண்டும்.

எட்டாம் கட்டளை – தவம் செய்தல்

தூய்மையாய் இருப்பது ஆரோக்கியத்திற்காக. தவம் செய்வது நமது உடல் மற்றும் மனதின் உறுதியை வளர்த்துக்கொள்வதற்காக. தவம் நமது சகிப்புத்தன்மையை அதிகரித்து ஆன்மீக பயணத்தின் எல்லையான பரமனை பற்றிய ஞானத்தை அடைய தேவையான உடல்வலிமையையும் மனவலிமையையும் கொடுக்கும்.

ஒன்பதாம் கட்டளை – ஆன்மீக நூல்களை படித்தல்   

வாழ்வை எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டி புத்தகமான வேதத்தை முறையாக படிக்க வேண்டும். தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட சமஸ்கிருத வரிகளை அர்த்தம் புரியாமல் படிக்கவேண்டும் என்று இந்த கட்டளைக்கு அர்த்தம் அல்ல. அறிவியல், கணிதம் போன்றவற்றை படித்து புரிந்துகொள்வதுபோல் வேதத்தையும் ஒரு ஆசிரியரின் துணையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.

பத்தாம் கட்டளை – இறைவனிடம் சரணடைதல்

நான் என்ற சொல்லின் பொருளாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நம்முடைய அகங்காரம் எந்த ஒரு செயலையும் செய்ய சக்தியற்றது. இந்த உண்மையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். இதை புரிந்து கொள்ளாவிட்டால் பரமன் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது. எனவே நாம் கடவுளிடம் சரணடைதல் அவசியம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை ஏற்றுகொண்டு கடவுளை தினம் பிரார்த்தித்து வந்தால் நாம் ஆன்மீகப்பாதையில் வேகமாக பயணிக்கலாம்.

அளவுகோல்

வேதம் இந்த பத்துகட்டளைகளை அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக விதித்திருந்தாலும் இவற்றை நாம் எந்த அளவு பின்பற்றுகிறோம் என்பதை அளக்க உதவும் அளவுகோல் ஆளுக்கு ஆள் வேறுபடும். உதாரணமாக பிறன்மனை விழையாமை என்ற கட்டளையை சரியாக பின்பற்றவேண்டுமென்றால் தெருவில் நடக்கும்பொழுது அழகான ஒருவர் எதிரில் வந்தால் அவர் முகத்தை பார்க்காமல் தலையை குனிந்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். பிச்சையிடும் பெண்மணியின் கை அழகாயிருக்கிறது என்ற எண்ணம் ஒரு துறவி மனதில் எழுந்தால் அவர் இந்த கட்டளையை மீறியவராவார். இதுபோல அளக்க ஆரம்பித்தால் எந்த ஒரு கட்டளையையும் யாராலும் பின்பற்ற முடியாது.

எல்லோரையும் கண்டனம் செய்து யாரையுமே முக்தியடைய விடாமல் தடுப்பது இந்த பத்து கட்டளைகளை கொடுத்த வேதத்தின் நோக்கமல்ல. எவ்வளவு தூரம் இந்த பத்து கட்டளைகளை பின்பற்றுகிறோம் என்பது அவரவர் மனபக்குவத்தை பொறுத்து மாறுபடும்.

உண்மையை நிலை நாட்ட மனைவியை கொல்ல துணியும் அளவுக்கு அரிச்சந்திரனிடம்  இருந்த மனோதிடத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க கூடாது. உதாரணமாக ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஒருவர் சொன்னால் அதை மறுக்கும் அளவுக்கு நம்மிடம் தைரியம் இருக்கலாம். ஆனால் அந்த தவறான காரியத்தை செய்யாவிட்டால் நம் குடும்பத்தில் உள்ள ஒருவரை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தினால் நமது நிலை என்ன? ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எனவே இந்த பத்து கட்டளைகளையும் முழுதாக பின்பற்ற யாராலும் முடியாது. அவரவர் தன் திறனுக்கு ஏற்ப இவற்றை பின்பற்றவேண்டும்.

பளுதூக்கும் பயில்வான் என்று பெயர் வாங்க இவ்வளவு கிலோ எடையை தூக்கவேண்டும் என்று எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. இரண்டுகிலோ அரிசியை சிரமபட்டு தூக்கும் தந்தையை அவரது மூன்று வயது பாலகன் ‘மிகுந்த சக்தி வாய்ந்தவர்’ என்று எண்ணுவதில் தவறில்லை. எவ்வளவு எடையை தூக்க முடியும் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒவ்வொருவரும் தங்கள் சக்தியை அதிகபடுத்த தற்பொழுது தூக்கும் எடையை விட சிறிது அதிகம் தூக்க முயல வேண்டும். நூறு கிலோ எடையை தூக்கும் சக்தி உள்ளவர் நூற்றிபத்து கிலோ தூக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடலை கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி கூடத்தில் நாம் அனைவரும் அன்றாடம் செய்யவேண்டிய பயிற்சிகளை எப்படி நாளுக்கு நாள் அதிகபடுத்த முயல்கிறோமோ அதுபோல மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேதம் விதித்துள்ள இந்த பத்து கட்டளைகளையும் முடிந்த அளவு பின்பற்ற வேண்டும்.

என்னால் முடிந்தது பத்துகிலோதான் என்று நூறுகிலோ தூக்கும் சக்தியுள்ளவர் தினமும் பத்து கிலோ எடையை மட்டும் தூக்கி பயிற்சிசெய்வாரெனில் அதனால் நஷ்டமடையபோவது அவரைத்தவிர வேறு யாருமல்ல. அதுபோல் பொய்யாமை, பொருள் மிகப்படையாமை போன்ற இந்த பத்து கட்டளைகளை என்னால் இவ்வளவுதான் முடியும் என்று உண்மையாக முயற்சிசெய்யாமல் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்கள் ஆன்மீக பயணத்தில் முன்னேற மாட்டார்கள்.

தேவையான காலம்

காசிக்கு சென்று கங்கையில் நீராடவேண்டும், இமையமலையை தாண்டி கயிலாயித்தின் மானசரோவரில் நீராட வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை வேதம் நமக்கு விதிக்கவில்ல. இது போன்ற செயல்களை செய்ய நமக்கு வெகுகாலம் ஆகலாம். ஆனால் வேதம் விதித்துள்ள இந்த பத்து கட்டளைகளை செய்துமுடிப்பதற்கு நமக்கு ஒரு நாள் போதும். என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டபின் மனதில் உறுதியுடன்  அவற்றை கடைபிடிக்க முயற்சி செய்ய ஆரம்பித்தால் போதும். 

இந்த பத்துகட்டளைகளை பின்பற்றுவது நம் வாழ்வின் குறிக்கோள் அல்ல. யாரையும் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் வராது என்று வேதம் எந்த உறுதிமொழியையும் கொடுக்கவில்லை.  என்றும் இன்பமாக வாழ இன்னும் நாம் கடக்க வேண்டிய படிகள் நிறைய இருக்கின்றன. எனவே நம் வாழ்வு முழுவதையும் இந்த பத்து கட்டளைகளை பின்பற்றுவதிலேயே செலவழித்துவிடக்கூடாது.

எப்பொழுது நாம் பரமனை முழுதுமாக அறிந்து கொள்கிறோமோ அப்பொழுது வேதம் நமக்கு இந்த பத்து கட்டளைகளை பின்பற்றவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கொடுத்துவிடும்.

எனவே இந்த பத்துகட்டளைகள் என்னென்ன என்பதையும் அவற்றை நமக்கு வேதம் விதித்திருப்பதன் காரணத்தையும் ஆசிரியரிடம் முறையாக கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடக்க உறுதி பூண்ட அடுத்த நொடியிலிருந்து நாம் அஷ்டாங்க யோகத்தின் அடுத்த படிக்கு செல்ல தயாராகிவிடுவோம்.

பாவமன்னிப்பு

மன்னிக்க முடியாத தவறுகள் எதுவும் கிடையாது. ஏனெனில் நமது குற்றங்களை மன்னிக்க வேண்டியது நாம்தான். பாதையில் செல்பவன் வழுக்கி விழுந்துவிட்டால் மறுபடி பயணத்தை தொடரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. விழுந்தபின் எழுவதுதான் முக்கியம். அதுபோல இந்த பத்து கட்டளைகளை நாம் பின்பற்றும்பொழுது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அந்த தவறை திருத்திக்கொண்டு நமது ஆன்மீக பயணத்தை தொடரவேண்டும். அதை விடுத்து நான் பொய் சொல்லிவிட்டேன், அதனால் நான் பாவி, எனக்கு மன்னிப்பே கிடையாது என்று நாமே தீர்மானித்து விட்டால் நம்மை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கும் கிடையாது.

என்னால்தான் அனைத்து செயல்களும் நடக்கின்றன என்ற அகங்காரம் எவ்வளவு தவறோ அதே அளவு தாழ்வுமனப்பான்மையும் தவறு. என்னால் இந்த பிறவியில் முக்தியடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் குருவின் பாதங்களை சரணடைந்து அவர் சொல்படி செயல் படவேண்டும். உன்னால் முடியும் தம்பி என்று அவர் கூறினால் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு ஆன்மீக பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவது நமது கடமை.

எவ்வித கவலையும் இல்லாமல் நிம்மதியுடனும் இன்பத்துடனும் வாழ்வதற்காகவே இந்த உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டுள்ளது. துன்பம் என்பது நம் அறியாமையால் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது. எனவே வேதம் காட்டும் ஆன்மீகப்பாதையில் பயணித்து விரைவில் நாம் முக்தியடைய வேண்டும்.

முடிவுரை :

தியானம் என்பது மனதால் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சி. எனவே தியானம் செய்ய பயன்படுத்தும் மனதை திடபடுத்திக்கொள்ள வேதம் நமக்கு பத்து கட்டளைகளை இட்டுள்ளது. செய்ய கூடாத ஐந்து கட்டளைகளை முடிந்தவரை தவிர்த்தும் செய்யவேண்டிய ஐந்து கட்டளைகளை முடிந்தவரை செய்தும் நாம் நம் மனதை தயார் செய்துகொண்டு அஷ்டாங்க அங்கத்தின் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க வேண்டும்.

‘முடிந்தவரை’ என்ற சொல் மிகமுக்கியமானது. எவ்வளவு முடியும் என்பது மனதின் பக்குவத்தை பொறுத்து மனிதருக்கு மனிதர் மாறுபடும். நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ளாமல் முடிந்தவரை இந்த பத்துகட்டளைகளை பின்பற்றி ஆன்மீக பயணத்தில் முன்னேற ஆரம்பித்தால் விரைவில் நாம் முக்தியடைந்து விடலாம்.

பயிற்சிக்காக :

1. செய்யவேண்டிய ஐந்து கட்டளைகள் நம் ஆன்மீக பயணத்தில் எவ்வாறு நமக்கு உதவுகின்றன?

2. அளவுகோல் பற்றி கூறப்பட்ட கருத்து என்ன?

3. பத்து கட்டளைகளை செய்ய எவ்வளவு காலம் ஆகும்?

4. பத்து கட்டளைகளை பின்பற்ற தவறுபவர்களின் நிலை என்ன?

சுயசிந்தனைக்காக :

1. தொடர்ந்து பொய் சொல்லும் ஒருவர் முக்தியடைய வாய்ப்பு உள்ளதா?

2. இல்வாழ்பருவத்திற்குண்டான கடமைகளையும் இந்த பத்து கட்டளைகளையும் ஒப்பிட்டு ஆராயவும்.