Sunday, May 2, 2010

Lesson 119: Perfected beings on divine mission ( பிரம்ம சூத்திரம் 3.3.32 )

பாடம் 119: இறைவனின் அவதாரம்
பாடல் 391 (III.3.32)

முக்தியடைந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்பது பொதுவான உண்மையென்றாலும் கடவுளின் பிரதிநிதியாக அவர்கள் இந்த பூமியில் அவ்வப்பொழுது அவதரிப்பது உண்டு என்று வேதம் கூறும் கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

அவதாரம் என்பது யார்?

ஒருவர் வேறொருவராக தோன்றுவதை அவதாரம் என்றால் மறுபிறவியில் வேறு ஒரு உடலில் தோன்றும் அனைத்து உயிரினங்களையும் அவதாரம் என்று அழைக்க நேரிடும். மனித உருவில் வரும் கடவுள் என்ற பொருள் கூட நம் அனைவருக்கும் பொருந்தும். முக்தியடைந்தபின் மீண்டும் மனிதனாக பிறப்பவர்கள் மட்டுமே அவதாரம் என்ற பெயருக்கு தகுதியானவர்கள்.

பொதுவாக ‘நான் பரமன்’ என்ற அறிவுடன் யாரும் பிறப்பதில்லை. இந்த உலகில் இன்பத்தை தேடி வைசியன், சத்திரியன், பிராமணன் என்று படிப்படியாக உயர்ந்து கடைசியில் வேதம் படித்தபின்தான் ‘நான் பரமன்’ என்கிற  ஞானம் கிடைக்கிறது. இந்த ஞானத்தை பெற்றவர்களுக்கு பொதுவாக மறுபிறவி கிடையாது. ஆனால் வெகு அபூர்வமாக கடவுளின் காரியங்களை பூமியில் நடத்திகொடுக்க இவர்களில் ஒரு சிலர் மறுபிறவி எடுப்பதுண்டு. பிறக்கும்பொழுதே நான் பரமன்என்ற அறிவுடன்  இவர்கள் பிறப்பதால் இவர்களை அவதாரம் என்று அழைக்கிறோம்.

ஒரே சமயத்தில் பல அவதாரங்கள் இந்த பூமியில் நடமாடலாம். இந்த பரந்த உலகின் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேசங்களில் உள்ள மக்களை சரியான வழியில் நடத்த பல அவதாரங்கள் தோன்றிக்கொண்டு இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையை அதிகரித்து அனைவரையும் வேதம் கூறிய பாதைக்கு திருப்புவதுதான் இவர்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகும்.

அவதாரத்தின் அவசியம்

எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் அதிகமாகிறதோ அப்பொழுது தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியுள்ளான். கடவுள் நம்பிக்கை குறைவாக இருப்பதே அதர்மம் அதிகமாவதற்கு முக்கிய காரணம். எனவே மக்களிடையே கடவுள் நம்பிக்கையை வளர்த்து உலகில் தர்மத்தை தழைத்தோங்கசெய்ய அவதாரங்கள் தேவைப்படுகிறார்கள்.

அவதாரங்களும் கடவுளின் தூதர்களும்

உலகத்தின் போக்கை மாற்றியமைக்க அவதாரங்கள் சாதாரணமாக தேவைப்படுவதில்லை. வேதத்தை தங்கள் தவவலிமையால் கேட்டு வழங்கிய முனிவர்கள், பத்து கட்டளைகளை கடவுளிடமிருந்து பெற்ற மோஸஸ், அல்லாவின் அருள்வாக்கான குரானை வழங்கிய முகம்மது போன்றவர்கள் மூலம் கடவுள் தன் உபதேசங்களை மனிதர்களுக்கு தருவது வழக்கம். மேலும் இந்த உபதேசங்களை சரியாக புரிந்து கொண்டு ஞானத்தை பெற்ற பலர் கடவுளின் தூதர்களாக செயல்பட்டு மக்களை நல்வழியில் நடத்திச்செல்லலாம். ஆனால் கடவுளின் செய்தியை புரிந்து கொள்வதற்கோ ஞானிகளின் உபதேசங்களை கேட்கும் அளவிற்கோ அனைத்து மக்களுக்கும் அறிவுத்திறன் இருப்பதில்லை.

பெரும்பான்மையான மக்களை கவர்ந்து கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை பரவலாக ஏற்படுத்தும் சக்தி அவதாரங்களுக்கு மட்டுமே இருப்பதால் ஒரு சில ஞானிகள் அவதாரமாக பிறந்து கடவுளின் பெருமையை நிலைநாட்டுகிறார்கள்.

உதாரணமாக புத்தர், திருவள்ளுவர், விவேகானந்தர், அரவிந்தர் போன்ற ஞானிகள் வெவ்வேறு காலகட்டங்களில்  மக்களை நல்வழிபடுத்த தங்கள் வாழ்வை அர்பணித்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஸ்ரீ கிருஷ்ணன், ஏசுநாதர், சாய் பாபா போன்று அதிசயங்கள் செய்து காட்டும் திறமையுள்ள  அவதாரங்களின் தேவையும் அவ்வப்பொழுது ஏற்படுகிறது. கடவுள் யார் என்பதை ஞானிகளின் போதனைகள் மூலம் அறிந்து கொள்வதைவிட கடவுள் இருக்கிறார் என்பதை அவதாரங்களின் மகிமைகளை பார்த்து நம்புவதையே பலரும் விரும்புகிறார்கள்.

அவதாரங்களை அடையாளம் காண்பது எப்படி?

பார்வைக்கு சாதாரண மனிதர்களை போல் தோன்றும் அவதாரங்கள் தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள பொதுவாக செய்யும் செயல்கள்:



1. பிறப்பில் சிறப்பு: பிறப்பைபற்றிய ரகசியம் இவர்களது பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருத்தல், அசாதாராண முறையில் கர்ப்பம் தரித்தல், பிறந்தவுடன் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றுவது போன்ற தெய்வீக செயல்கள் நடத்தல் போன்றவை அவதாரங்களின் வருகையை நமக்கு சுட்டிகாட்டும் குறியீடுகள்.

2. விளையும் பயிர் முளையிலே தெரியும்: அவதாரங்களின் சிறுவயதில் அவர்களை அறியாமல் பல அற்புத செயல்களை நடத்தியிருப்பார்கள்.

3. பயிற்சியின்றி சாதனை புரிதல்: முறையான பயிற்சி எதுவும் செய்யாமல் மற்றவர்களால் செய்யமுடியாத பல காரியங்களை இவர்கள் சிரமமின்றி செய்து முடிப்பார்கள்.

4. குருவின்றி ஞானம்: யாரிடமும் சீடனாக சேர்ந்து வேதத்தை பயிலாமல் அதில் உள்ள உண்மைகளை தெளிவாக இவர்கள் அறிந்திருப்பார்கள். வேதத்தை முறைப்படி படித்து முக்தியடைந்த பலர் பெற்ற அதே ஞானத்தை இவர்கள் எவ்வித பிரயத்தனமும் இல்லாமல் பெற்றிருப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் திறனும் கொண்டிருப்பார்கள்.

5. அதிசயங்கள்: மக்களின் கஷ்டங்களை அமானுஷ்ய முறையில் தீர்த்து வைப்பது, குணபடுத்தமுடியாது என்று வைத்தியர்களால் முடிவுசெய்யப்பட்ட வியாதிகளை குணபடுத்துவது, இறந்தவர்களை மீண்டும் உயிர்பிப்பது போன்ற பல அதிசயங்களை இவர்கள் நிகழ்த்தும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.


1.     வேதத்தின் ஆழ்ந்த மெய்ப்பொருளை உணர்ந்து அதன் வழியில் மக்களை நடத்திச்செல்வது அவதாரங்களின் மிக முக்கிய கடமை.

அவதாரங்களின் மேல் நம்பிக்கை

ஒருவர் உண்மையிலேயே கடவுளின் அவதாரமா இல்லையா என்பதை பற்றிய விவாதம் அவசியமில்லாதது. உதாரணமாக ஏசுநாதரை கடவுளின் அவதாரமாக ஒரு சிலர் நினைத்தபொழுது பலர் அதை மறுத்து அவரை சிலுவையில் அறைந்தனர். இன்றுவரை ஏசுவை நம்பியவர்கள் ஒரு புறமும் நம்பாதவர்கள் மறுபுறமும் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.  

அவதாரத்தின் மகிமை மக்களின் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டது. ஏசுநாதரை நம்புபவர்களுக்கு அவர் அவதாரம். இதுவும் கடவுள் நம்பிக்கையை போன்றதுதான். கடவுள் இருக்கிறார் என்பதை எப்படி யாராலும் நிரூபிக்க முடியாதோ அதேபோல் கடவுள் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியாது. எனவே ஒருவரை அவதாரம் என்று நம்புவதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவையில்லை.  அதேபோல் மற்றவர்களது நம்பிக்கையை குலைக்க முயல்வதும் தேவையற்றது.

அறியும் திறன் உள்ளவர்களும் இல்லாதவர்களும்

கடவுள் இருக்கிறாரா இல்லையா, அவர் இருந்தால் எங்கே இருக்கிறார், அவர் எப்படியிருப்பார் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதிலை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறியும் திறன் உள்ளவர்களுக்கு அவதாரங்களால் எவ்வித பயனும் இல்லை. ஒருவர் அவதாரமா இல்லையா என்பதை ஆராய வேண்டிய அவசியமோ ஆர்வமோ இவர்களுக்கு கிடையாது. ஏனெனில் தேவைபட்டால் இவர்களுக்கு வழிகாட்ட முக்தியடைந்த ஞானிகள் நிறைய பேர் உலகில் இருக்கிறார்கள்.

இத்தகைய அறிவுத்திறன் இல்லாதவர்களுக்கு ‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை மேலும் வலுபடுத்திக்கொள்ள அவதாரங்களின் வருகை அவசியம். ‘கடவுள் இல்லை’ என்பவர்களின் வாழ்வில் ஒரு சில அற்புதங்கள் நிகழ்த்த பட்டால் அவர்களும் அவதாரங்களின் மூலம் கடவுளை தொழ ஆரம்பித்துவிடுவார்கள்.

அவதாரங்களின் இரு மகிமைகள்

அற்புதங்களை நிகழ்த்தும் திறன் மற்றும் பூரண ஞானம் ஆகிய இரு மகிமைகள் பொதுவாக அனைத்து அவதாரங்களுக்கும் இருக்கும். இவ்விரண்டில் பூரண ஞானம்தான்  அவதாரத்தின் அடிப்படை தகுதி. வேதம் கூறும் உண்மைகளை பூரணமாக அறியாதவர்கள் அவதாரங்கள் அல்ல. அற்புதங்களை நிகழ்த்தும் திறன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் பொதுமக்கள் அற்புதங்கள் நிகழ்த்தாதவர்களை அவதாரங்கள் என ஏற்றுக்கொள்வதில்லை. உதாரணமாக ஸ்ரீ ராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய இருவரும் அவதாரங்கள் என்றாலும் எவ்வித அதிசயங்களும் நிகழ்த்தாமல் சாதாரண மனிதன் போல் வாழ்ந்த ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை மட்டுமே அவதாரம் என்று மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மேலும் அவதாரங்களின் பூரண ஞானம் சாதாரண மக்களின் அறிவுக்கு பிடிபடுவதில்லை என்பதால் அவர்கள் அற்புதத்தை மட்டுமே நாடுகிறார்கள். உதாரணமாக ஏசுநாதர் தினமும் உபதேசங்கள் நடத்தினார். துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னார். ஆனால் அங்கு கூடிய கூட்டம் அவர் எப்பொழுது பேசி முடிப்பார் என்று காத்திருந்து பின் அவர் அருகில் சென்று தங்கள் குறைகளை நிவர்த்திக்க ஆசீர்வாதம் வாங்குவதையே முக்கியமாக கருதினர். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவரை நாடி அதை உடனடியாக தீர்ப்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம், வாழ்வில் பிரச்சனைகளே இல்லாமல் என்றும் இன்பமாய் வாழ அவர் கூறிய அறிவுரைகளை புரிந்துகொள்வதில் இல்லை.

ஒருவேளை ஏசுநாதர் அற்புதங்கள் மூலம் மக்களின் குறைகளை நிவர்த்திக்காமல் உபதேசங்களை மட்டும் செய்திருந்தாரேயானால் அவரை மக்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளாமல் சாக்கிரடீஸ் பிளேட்டோ என்பது போன்ற தத்துவவாதிகளின் வரிசையில் சேர்த்திருப்பார்கள்.

மனிதர்களின் வளர்ச்சி

அனைத்து உயிரினங்களும் கடவுளின் அவதாரங்கள்தான். ஆனால் மனிதனுக்கு மட்டும்தான் ‘நான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனிபட்டவன்’ என்ற தன்னுணர்வு (self-awareness) உள்ளது. அனைத்து மனிதர்களுக்கும் தன்னுணர்வு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு நான் யார் என்ற சரியான தன்னறிவு (self-knowledge) இருப்பதில்லை. மனப்பக்குவமும் அறிவுத்திறனும் உள்ளவர்கள் ஆசிரியரின் துணையுடன் வேதத்தை படித்து இந்த தன்னறிவை பெற்று முக்தியடைவார்கள். அனைத்து உயிரினங்களும் தொடர்ந்து பிறவிகளெடுத்து மனிதனாக அவதரித்து முடிவில் ஞானத்தைபெற்று முக்தியடைவார்கள். முக்தியடைந்தவர்களில் ஒரு சிலர் கடவுளின் ஆணைப்படி மீண்டும் பிறந்து மற்றவர்களின் வளர்ச்சிக்கு துணை செய்வார்கள்.

சாதாரண மனிதர்களும் அவதாரங்களும்

அவதாரங்கள் பாவ புண்ணியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றவர்கள். எனவே பொதுமக்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிக்க பிறப்பதுபோல் அவதாரங்கள் பிறப்பதில்லை.

அனைத்து மக்களுக்கும் குறையாத இன்பத்தை அடைவதுதான் வாழ்வின் இறுதி குறிக்கோள். இந்த குறிக்கோளை அவதாரங்கள் தங்கள் சென்ற பிறவியிலேயே அடைந்து விட்டாதால் இந்த பிறப்பில் இவர்களுக்கு எவ்வித ஆசையும் கிடையாது.

ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களினால்தான் அவதாரங்களின் உடலும் செய்யபட்டிருக்கும் என்பது உண்மையானாலும் இவர்கள் இந்த மூன்று தனிமங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட மாட்டார்கள்.

முடிவுரை :

ஆண்டவனின் அருள்கட்டளையை நிறைவேற்ற முக்தியடைந்தவர்களில் ஒரு சிலர் மரணத்திற்கு பின் மீண்டும் அவதாரங்களாக பிறந்து உபதேசங்கள் மூலமும் அற்புதங்கள் மூலமும் பொதுமக்களை ஆன்மீக பாதையில் வழிநடத்துகிறார்கள்.

பகுத்தறிவாளர்கள் தங்கள் அறிவை அவதாரங்களின் அற்புதங்களை ஏமாற்று வேலை என்று நிரூபிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்த்து அவதாரங்களின் உபதேசங்களை ஆராய பயன்படுத்த வேண்டும். அவதாரங்களின் அடியார்களை முட்டாள்கள் என்பதை நிரூபிக்க தங்கள் அறிவை செலவிடுவதால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. மேலும் அற்புதங்களை மறுப்பதன் மூலம் கடவுளின் மேலும் வேதத்தின் மேலும் நம்பிக்கை குறைவதால் இவர்கள் முக்தியடையும் வாய்ப்பு குறைகிறது. எனவே இவர்களது அறிவு இவர்களுக்கு இன்பமான வாழ்வை பெற்றுத்தர உதவுவதில்லை.

அறிவுத்திறன் குறைவாக உள்ள மக்கள் யார் மந்திரஜாலங்கள் செய்தாலும் அவர்களை கடவுளாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை. மேலும் இதுபோன்ற செயல்கள் கடவுள் நம்பிக்கையை அதிகரித்து அவர்களை தர்மத்தின் வழியில் செலுத்துகிறது. யார் மீது நம்பிக்கை என்பது முக்கியமல்ல. நம்பிக்கை என்பதுதான் முக்கியம். மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவர்களை சரியான பாதையில் செலுத்தி கூடிய விரைவில் அவர்கள் முக்தியடைய வழிவகுக்கும்.

அறிவுடையவர்கள் அவதாரங்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலமும் மற்றவர்கள் அவதாரங்களின் மேலுள்ள நம்பிக்கையினால் தர்மமாக நடப்பதன் மூலமும் இந்த பிறவியிலேயே அனைவருக்கும் முக்தியடையும் வாய்ப்பை வழங்குவதுதான் இறைவன் அவதாரங்களை அனுப்பிவைப்பதன் நோக்கம்.

பயிற்சிக்காக :

1.  அவதாரம் என்பது யார்?

2. அவதாரத்தின் அவசியமென்ன?

3. ஞானிகளால் செய்யமுடியாத செயல் என்ன?

4. அவதாரங்களை அடையாளம் காண்பது எப்படி?

5. மக்களை எந்த இருபிரிவாக பிரிக்கலாம்?

6. அவதாரங்கள் எவ்வாறு மக்களுக்கு உதவுகின்றனர்?




7. சாதாரண மக்களுக்கும் அவதாரங்களுக்கும் உள்ள மூன்று வித்தியாசங்கள் என்ன?


சுயசிந்தனைக்காக :

1. தியானம் செய்வதன் மூலம் அற்புதங்கள் செய்யும் சக்தியை பெற முடியுமா?

2. அவதாரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களுக்கும் அதிக வட்டி தருவதாக கூறி மக்களை மோசடிசெய்யும் நிதிநிறுவனங்கள நடத்துபவர்களுக்கும் என்ன வேற்றுமை?

3. அஷ்டமஹா சித்தி என்றால் என்ன?

4. அவதாரங்களின் செயல்களுக்கு பாவ புண்ணியங்கள் உண்டா? இருந்தால் அவை யாரைச்சேரும்?