பாடம் 118: அனைவருக்கும் சமவாய்ப்பு
பாடல் 390 (III.3.31)
மக்கள் ஒருவருக்கொருவர் வெகுவாய் வேறுபட்டாலும் அனைவரும் இன்பமாக வாழ வழி வகுக்கும் வகையில் நான்கு பிரிவுகள் கொண்ட சமுதாய அமைப்பையும் நான்கு கட்டங்கள் கொண்ட வாழ்வு அட்டவணையையும் வேதம் அருளியுள்ளது என்ற கருத்தை கூறி நாம் அனைவரும் வேதம் கூறும் வழியில் நடந்து கூடியவிரைவில் முக்தியடைய முயல வேண்டும் என இந்த பாடம் கூறுகிறது.
மனிதன் மூன்று தனிமங்களின் கலவை
ஒளி (சத்வம்), சக்தி (ரஜஸ்), ஜடம் (தமஸ்) ஆகிய மூன்று தனிமங்களின் கலவையாகத்தான் அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டுள்ளன. இந்த தனிமங்களின் விகிதம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். மேலும் ஒரு நாளில் நேரத்தை பொறுத்து விடியற்காலையில் ஒளியின் அளவு அதிகமாகவும் முற்பகலில் சக்தியின் அளவு அதிகமாகவும் இரவில் ஜடத்தின் அளவு அதிகமாகவும் இந்த விகிதம் ஒரே மனிதனுக்குள் தொடர்ந்து மாறுபட்டுகொண்டிருக்கும்.
எந்த ஒரு தனிமமும் தனித்து இருக்காது. எப்பொழுதும் மூன்று தனிமங்களும் சேர்ந்து ஒரு கலவையாகவே இயங்கும். ஒளி மற்ற இரு தனிமங்களைவிட சிறந்தது. ஜடம் நமக்கு அவசியமான ஒரு தனிமம் என்றாலும் இதன் அளவை நாம் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வின் தரம் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தாலேயே தீர்மானிக்கபடும். ஒளியின் அளவு அதிகமானால் நம் வாழ்வு அதிக நிம்மதியாகவும் இன்பமாகவும் இருக்கும். இதனாலேயே புத்தர், ஏசு போன்ற முக்தியடைந்த மனிதர்களின் தலையை சுற்றி ஒரு ஒளிவட்டம் வரையும் பழக்கம் ஏற்பட்டது. நாம் நம் ஒளியின் அளவை கிரில்லியன் புகைப்படம் எடுத்து அறிந்து கொள்ளலாம். இது (Aura imaging) நம்மிடம் உள்ள ஒளியின் அளவை அளக்க மட்டுமே உதவும். வேதம் கூறும் பாதையில் நடந்து நமது சுயமுயற்சியால்தான் ஒளியின் அளவை அதிகபடுத்திக்கொள்ள முடியும்.
சமுதாய பிரிவில் தமக்கேற்ற சரியான பிரிவை தேர்ந்தெடுத்து வாழ்வு அட்டவணையில் கூறப்பட்ட கடமைகளை முறையாக செய்து அனைத்து மனிதர்களும் இந்த விகிதத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு கடைசியில் இந்த மூன்று தனிமங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும்.
நான்கு வகை மனிதர்கள்
தங்கத்துடன் கலக்கபட்டுள்ள மற்ற உலோகங்களின் அளவை வைத்து நகைகளை தரம் பிரிப்பது போல ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்கள் கலக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
வகை/ தனிமம் | ஒளி | சக்தி | ஜடம் |
பிராமணர்கள் | 60 | 30 | 10 |
சத்திரியர்கள் | 30 | 60 | 10 |
வைசியர்கள் | 10 | 60 | 30 |
சூத்திரர்கள் | 5 | 25 | 70 |
மேலே குறிப்பிட்ட விகித அளவுகள் எந்த வகை மனிதர்களிடம் எந்த தனிமம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் என்பதை விளக்குவதற்காக கொடுக்கபட்டவை. ஓய்வெடுக்கும்பொழுது இருக்கும் இரத்த அழுத்தம் வேலை செய்யும்பொழுது அதிகரிப்பது போல இந்த அளவுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே நகைகளில் இருக்கும் உலோக கலவைகளின் விகிதத்தை நிர்ணயிப்பதுபோல் ஒரு மனிதனுக்குள் இருக்கும் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை எண்கள் மூலமாக நிர்ணயிக்க முடியாது.
மூன்று தனிமங்களும் மனிதனை ஏதாவது ஒரு வகையில் பந்தபடுத்தி இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வை வாழும்படி செய்யும் குணம் உள்ளவை. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டுமென்றால் இந்த மூன்று தனிமங்களின் பிடியிலிருந்தும் நாம் முழுதாக விடுபடவேண்டும். படிப்படியாக இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை மாற்றி பிராமணனாக மாறி பரமனை அறிந்து கொண்டால் பிறகு வீடுபேறு பெற்று இன்பமாக வாழலாம்.
மனிதனின் முன்னேற்றம்
ஒளித்தனிமத்தின் விகிதத்தை அதிகரித்து பிராமணனாக மாற ஒவ்வொரு மனிதரும் தங்கள் தற்போதைய நிலைக்கேற்றவாறு முயற்சி செய்ய வேண்டும். உண்ணும் உணவு, செய்யும் செயல்கள், பழகும் மனிதர்கள் மற்றும் படிக்கும் நூல்கள் இவற்றை சரியானபடி மாற்றினால் அனைவரும் முன்னேறி முக்தி அடையலாம்.
சூத்திரர்கள் செய்யவேண்டிய செயல்கள்
தாங்களாக முயன்று முன்னேறும் திறனோ அறிவோ சூத்திரர்களுக்கு கிடையாது. எனவே ஜடத்தின் வீரியத்தை குறைத்து சக்தி தனிமத்தின் விகிதத்தை அதிகபடுத்தி இவர்களை வைசியர்களாக மாற்ற இவர்களது நண்பர்களோ குடும்பத்தை சேர்ந்த மற்ற பிரிவினரோ இவர்களை பின்வரும் செயல்களை செய்விக்க வேண்டும்.
1. ஜடத்தனிம ஆகாரத்தை குறைத்து சக்தி தனிமம் அதிகமுள்ள உணவை உண்ண வேண்டும்.
2. மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை மெதுமெதுவாக விட்டுவிட வேண்டும்.
3. முடிந்தவரை சூத்திரர்களுடன் பழகாமல் வைசியர்களுடன் மட்டுமே பழகவேண்டும். உதாரணமாக தம் குடும்பத்தில் யார் உழைத்து பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் பழகவேண்டும். யார் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து நேரத்தை வீணடிக்க கூடாது.
4. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதைகளை கேட்கவேண்டும்.
5. உழைப்பின் மூலம் ஏழை பணக்காரானாக உயருதல், காசேதான் கடவுள் போன்ற கருத்துக்களை தரும் திரைப்படங்களை பார்க்கவேண்டும்.
6. தினமும் நிறைய நேரம் எதாவது வேலை செய்ய வேண்டும்.
வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையை அதிகபடுத்தி அதற்காக உழைக்க ஆரம்பித்தால் விரைவில் வைசியனாக மாறிவிடலாம்.
வைசியர்கள் செய்யவேண்டிய செயல்கள்
இவர்களிடம் சத்திரியர்களுக்கு சமமான சக்தியிருந்தாலும் போதிய ஒளிதனிமத்தின் துணையில்லாததால் சுயநலத்திற்காகவே இவர்கள் செயல் செய்கிறார்கள். ஜடத்தின் அளவை குறைத்து ஒளியின் அளவை அதிகரித்து கூடிய விரைவில் சத்திரியர்களாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.
1. சூத்திரர்கள் போல வேலை செய்யக்கூடாது. வசியர்களின் வேலைகளை விட்டு சத்திரியர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.
2. அதிக நேரத்தை இறைவனுக்காக செலவிட வேண்டும். தனக்கு என்ற பார்வையிலிருந்து விலகி இறைவனுக்கு என்று முன்னேறி பின் பொதுநலம் என்ற சத்திரியர்களின் குறிக்கோளை எட்ட வேண்டும்.
3. ஜடத்தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.
4. காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து ஆன்மிக நூல்களை படிக்க வேண்டும்.
5. வைசியர்களுடன் பழகுவதை குறைத்துக்கொண்டு சத்திரியர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.
6. புலன் இன்பங்களை அனுபவிப்பதை குறைத்துக்கொண்டு கர்னாடக இசை கேட்டல், சிறுகதை அல்லது நாவல்களை படித்தல், ஓவியம் வரைதல் போன்ற மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடலாம்.
7. அதர்மத்தையும் முற்றிலும் தவிர்த்து விருப்பு வெறுப்புகளுக்கு வசப்படாமல் கடமைகளை தர்மமான முறையில் நிறைவேற்ற வேண்டும்.
சூத்திரர்கள் வேலை செய்ய ஆரம்பித்து வைசியர்களாக வளர்ந்த பின் சுயநலத்திற்காக அல்லாமல் பொதுநலத்திற்காக உழைக்கும் சத்திரியர்களாக உயர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதற்காக செயல்களை சுயநலம் இல்லாமல் செய்வதுபோல பாசாங்கு செய்தாலும் பரவாயில்லை. நாளடைவில் இந்த பாசாங்கு இயல்பாக மாறி வைசியனை உண்மையிலேயே சத்திரியனாக மாற்றிவிடும்.
சத்திரியர்கள் செய்யவேண்டிய செயல்கள்
தன் குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார்கள், சமுதாயம் ஆகிய அனைத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைப்பவர்கள் சத்திரியர்கள். உலகத்தை மாற்ற வேண்டும் என்ற தவறான அறிவிலிருந்து தன்னை மாற்ற வேண்டும் என்ற சரியான அறிவை பெற்று பிராமணனாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.
1. வைசியர்கள் போல் வேலை செய்வதை தவிர்த்து சத்திரியர்களின் வேலைகளை குறைத்துக்கொண்டு பிராமணர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.
2. இறைவனை வழிபடும் நேரத்தை குறைத்துக்கொண்டு தான் யார், இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியை அதிகரிக்க வேண்டும்.
3. சக்திதனிம ஆகாரத்தை குறைத்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.
4. சத்திரியர்களுடன் பழகுவதை குறைத்துக்கொண்டு பிராமணர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.
5. அறிஞர்களின் எண்ணங்கள், சுயமுன்னேற்றம் பற்றி சமயங்கள் கூறும் கருத்து ஆகியவற்றை விளக்கும் புத்தகங்களை படிக்கவேண்டும்
6. மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களை குறைத்துக்கொண்டு அறிவு சம்பந்தபட்ட தத்துவ நூல்களை படிப்பதிலும் வானவியல், ஜோதிடம், போன்ற அறிவியல் துறைகளில் ஈடுபாடு கொள்ளவேண்டும்.
7. புலன்கள் மனதின் கட்டுப்பாட்டிலும் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.
வைசியர்களாக பணம் சம்பாதித்தபின்னும் சத்திரியர்களாக பதவி, புகழ் ஆகியவற்றை அடைந்த பின்னும் நிரந்தரமான அமைதி கிடைக்காததால் அதை மேலும் வெளி உலகத்தில் தேடி பயன் இல்லை என்பதை உணர்ந்தால் அடுத்த நிலையான பிராமணனாக உயர்ந்து வேதத்தை பயில துவங்கலாம்.
பிராமணர்கள் செய்யவேண்டிய செயல்கள்
ஒளித்தனிமம் முதலிடத்திலும் சக்தி தனிமம் இரண்டாம் இடத்திலும் பெரும்பாலான நேரங்களில் இருந்தால் அவர்கள் பிராமணர்கள். இவர்களும் ஏற்ற தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி ஆகிய வாழ்வின் இருமைகளிடையே சிக்கி தவிப்பவர்கள்தான். முக்தியடையவேண்டுமானால் மூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்தும் விடுபடும் ஞானத்தை அடையவேண்டும். இதற்காக இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.
1. செயல்களை குறைத்துக்கொண்டு வேதம் படிப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும். வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அவசியமான வேலைகளை மட்டும் செய்யலாம்.
2. ஆத்மஞானத்தை அடைவது என்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக கொண்டு குரு காட்டும் பாதையில் கடுமையாக உழைக்க வேண்டும்.
3. சக்தி தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.
4. தர்ம அதர்ம பாகுபாடுகளை கடந்து பரமன் மட்டும் உண்மை இந்த உலகம் பொய் என்ற விவேகத்தை அடையவேண்டும்.
5. வேதம், ஆசிரியர், இறை வழிபாடு, தியானம் போன்றவை பரமனை அறிந்து கொள்ள தேவையான சாதனங்கள். இவற்றின் மீது பற்றுகொண்டு தொடர்ந்து வேதத்தை படிப்பதனாலோ இறைவழிபாட்டில் ஈடுபடுவதாலோ சடங்குகளை பின்பற்றுவதாலோ முக்தியடைய முடியாது.
6. செயல்களின் மீதுள்ள பற்றை சத்திரியன் துறந்து அறிவின் மீது பற்று கொண்டு பிராமணான பின் அறிவின் மீதுள்ள பற்றையும் துறந்து முக்தி அடையவேண்டும்.
இறுதித்தேர்வில் தேறாவிட்டால் பன்னிரண்டு வருடம் பள்ளியில் படித்ததன் பலன் கிடைக்காது. அது போல வைசியன், சத்திரியன் என்று படிப்படியாக வளர்ந்து பிராமணனான பின் முக்தி பெறாவிடில் அது வரை செய்த முயற்சி வீணாகிவிடும்.
எனவே அனைத்து பிராமணர்களும் விரைவில் முக்திபெற முழு முயற்சியுடன் முயல வேண்டும்.
முடிவுரை :
பிறப்பின் அடிப்படையில் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரும் இந்த பிறவியிலேயே முக்தி அடைவதற்கு சம வாய்ப்பு வேதத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜாதியின் அடிப்படையில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு செய்ய முடியாது. அனைவரும் வாழ்வு அட்டவணையின் மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை ஆகிய நான்கு கட்டங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்து தங்களை படிப்படியாக பிராமணனாக உயர்த்திக்கொள்ள வேண்டும். பின் வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைவது எளிது.
மூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்து விடுதலை பெற்று முக்தியடைந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இறக்கும்பொழுது இன்னும் நிறைய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வைசியர்களும் உலகத்தை திருத்த இன்னும் உழைக்க வேண்டும் என்று சத்திரியர்களும் வேதத்தை இன்னும் ஆழமாக படிக்கவேண்டும் என்று பிராமணர்களும் ஆசை கொண்டிருந்தார்களேயானால் மறுபடியும் பிறந்து இவர்கள் அனைவரும் தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியை தொடர்வர். வேதத்தில் பரமன் யார் என்று விளக்கப்பட்ட உண்மையை அறிந்து ஞானம் பெற்று இந்தப்பிறவியிலேயே பிறவிச்சுழலிலிருந்து விடுதலை பெற நாம் அனைவரும் முயல வேண்டும்.
நாம் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் எந்த ஜாதியினரின் வேலையை செய்பவராக இருந்தாலும் குணத்தின் அடிப்படையில் நாம் இப்பொழுது வைசியனாகவோ சத்திரியனாகவோ இருந்தாலும் நம் சுயமுயற்சியால் வேதம் வகுத்த பாதையில் பயணித்து பிராமணனாக மாறி இந்த பிறவியிலேயே முக்தியடைந்து விடலாம்.
பயிற்சிக்காக :
1. மனிதர்கள் எதன் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்?
2. சூத்திரர்கள் வைசியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?
3. வைசியர்கள் சத்திரியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?
4. சத்திரியர்கள் பிராமணர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?
5. பிராமணர்கள் முக்தியடைய செய்யவேண்டிய செயல்கள் யாவை?
6.மனிதர்களின் முன்னேற்றத்திற்கு செய்யவேண்டிய செயல்களின் அடிப்படையாக கூறப்பட்ட நான்கு செயல்கள் யாவை?
சுயசிந்தனைக்காக :
1. பிராமணர்களைத்தவிர வேறு யாரும் முக்தியடைய முடியாதா?
2. அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாடத்தின் தலைப்பிற்கு என்ன பொருள்?
3. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா என்று மனைவி கணவனை அதிக பணம் சம்பாதிக்கும்படி தொடர்ந்து தூண்டுவது சரியா?
4. தீவிரவாதம், அரசியலில் ஊழல் புரிதல், திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த பிரிவினை சேர்ந்தவர்கள்? இவர்கள் முக்தியடைய வாய்ப்பு உள்ளதா?
5. செயல்களை குறைத்து வாழ்வின் அடிப்படை தேவைகளுக்காக உழைக்கும் பிராமணனுக்கும் தேவைகளை அதிகபடுத்திக்கொள்ளாமல் சோம்பியிருக்கும் சூத்திரனுக்கும் என்ன வித்தியாசம்?