பாடம் 110: தியானத்தின் மூலம் மனத்தூய்மை
பாடல் 378 (III.3.19)
முறையாக வேலை செய்வதற்கு பதில் தியானம் செய்து மனத்தூய்மை அடையலாம் என்று எண்ணுவது தவறு என்ற கருத்தை தியானத்தை பற்றிய சில அடிப்படை உண்மைகளை கொடுத்து இந்த பாடம் விளக்குகிறது.
தியானம் என்றால் என்ன?
ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் முன் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்திப்பது தியானம் இல்லை. அதேபோல் வேலையை சரியாக செய்யவேண்டும் என்று தனக்கு தானே மனதுக்குள் சொல்லிக்கொள்வதும் (auto suggestion) தியானம் அல்ல. தியானம் என்பதை முறைப்படி ஆசிரியரிடம் கற்காமல் நாமாக ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதையும் மனதில் எவ்வித எண்ணங்களும் இல்லாமல் மனதை காலியாக வைத்துக்கொள்ள முயல்வதையும் தவிர்ப்பது நல்லது.
மனதை மனதால் தூய்மை படுத்த செய்யப்படும் செயல் தியானம். பொதுவாக நாம் மனம், வாக்கு, உடல் என்ற மூன்றின் அடிப்படையில் செயல்களை செய்கிறோம். தியானம் செய்யும்பொழுது உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களும் செய்யக்கூடாது. பார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல், பேசுதல், கை கால்களை அசைத்தல் ஆகிய செயல்களை முற்றிலும் தவிர்த்து மனதில் தோன்றும் எண்ணங்களை முறைப்படுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது தியானம்.
தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் எதற்காக தியானம் செய்கிறோம் என்பதை பற்றிய தெளிவு அவசியம். ஓயாமல் வேலை செய்வதால் ஏற்படும் அலுப்பையும் களைப்பையும் நீக்கி கொள்வதற்காக தியானம் செய்வதற்கு பதில் ஒரு குட்டி தூக்கம் போடுவது அதிக பலனை கொடுக்கும்.
தியானம் செய்வதால் நமது செயல்திறன் அதிகமாகும் என்றாலும் செயல்திறனை அதிகபடுத்தும் நோக்கில் மனதை தயார் செய்துகொள்வது தியானம் ஆகாது. பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை தகுதியுடைதாக்கி கொள்ளவும் பெற்ற ஞானம் நிலைபெறவும் செய்யும் செயல்கள் மட்டுமே தியானம் ஆகும்.
எண்ணங்களின் உற்பத்தி
கண், காது, நுகரும் மூக்கு, சுவைக்கும் நாக்கு மற்றும் தொட்டுணரும் தோல் ஆகிய ஐந்து புலன்கள்தான் எண்ணங்கள் உற்பத்தியாகும் இடம். இந்த ஐந்து புலன்கள் சுற்றியிருக்கும் உலகை படம் பிடித்து மனதிற்கு அனுப்ப அங்கு அவை எண்ணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.
பார்த்தல், கேட்டல், நுகருதல், சுவைத்தல், தொட்டுணர்தல் போன்ற செயல்களை செய்யா விட்டால் நம் மனதில் புதிய எண்ணங்கள் எதுவும் தோன்றவே தோன்றாது. ஏற்கனவே நம் சித்தத்தில் பதிந்துள்ள எண்ணங்கள் மட்டும்தான் மனதில் அவ்வப்பொழுது தோன்றி மறையும். ஆலோசனை, சிந்தனை, யோசித்தல், பகல் கனவு காணுதல், பழைய நினைவுகளை அசை போடுதல், நாளை என்ன நடக்குமோ என்று கவலை படுதல் போன்றவை மனதில் நடக்கும் செயல்கள்.
பொதுவாக மனதில் தோன்றும் எண்ணங்களை தீர்மானிப்பது வெளியுலகம். ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்பொழுது அதில் உள்ள கருத்துக்கள் எண்ணங்களாக மனதில் உருவாகிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் சமையலறையிலிருந்து காபியின் மணம் வந்தால் காபி பற்றிய எண்ணம் தோன்றும். உலகில் வாழ இதுபோன்று உலகை பற்றிய எண்ணங்கள் ஏற்படுவது அவசியம். சுற்றியிருக்கும் உலகத்துடன் சம்பந்தபடாமல் எப்பொழுதும் ஏதாவது விநோதமான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டுகொண்டிருந்தால் நாம் பைத்தியம் என்று அர்த்தம். ஐந்து புலன்கள் மூலமாக வெளிஉலகில் இருந்து மட்டுமே அனைத்து எண்ணங்களும் நமக்கு வருகின்றன. தியானம் எவ்வித புதிய எண்ணங்களையோ அறிவையோ உற்பத்தி செய்யாது.
தியானமும் எண்ணஓட்டங்களும்
ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்பொழுது ஐந்து புலன்கள் மூலம் உலகத்தை உணர்வதை தற்காலிகமாக நம்மையறியாமல் நிறுத்திவைப்பது எல்லோரும் சாதரணமாக செய்யும் காரியம். இந்த சமையங்களில் நாம் உடலாலும் வாக்காலும் எவ்வித செயல்களையும் செய்வதில்லையாகையால் இது ஒருவகை தியானம் எனலாம். ஆனால் நான் இப்பொழுது தியானம் செய்யப்போகிறேன் என்று கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தவுடன் மனதில் ஏற்படும் தொடர் எண்ண ஓட்டங்கள் தியானம் ஆகாது.
மனதில் ஏற்படும் எண்ண ஓட்டங்களை வெளியுலகம்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர தியானம் செய்வதன் மூலம் மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக் கொள்ள முடியாது. வெளியுலகிலிருந்து விலகி தியானம் செய்வதற்காக சில நிமிடங்கள்தான் நம்மால் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்த முடியும்.
எண்ணங்களும் செயல்களும்
செயல்களுக்கு அடிப்படை எண்ணம் என்பது எளிமையாக புரியக்கூடிய விஷயம். ஆனால் எண்ணங்களுக்கு அடிப்படை செயல் என்பதை புரிந்து கொள்வது சிறிது கடினம். கோவிலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றினால்தான் கோவிலுக்கு செல்வோம். அடிக்கடி கோவிலுக்கு சென்றால்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். இதுபோல் நம் அனைத்து எண்ணங்களும் நம் செயல்களை ஆதாரமாக கொண்டும் நம் அனைத்து செயல்களும் நம் எண்ணங்களை ஆதாரமாக கொண்டும் இருக்கின்றன.
எனவே செயல்களை செய்ய நமக்கு இருப்பதாக தோன்றும் சுதந்திரம் ஒரு மாயை. என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறோம். என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த சுழற்சியின் ஆரம்பம் நம் சுற்றுபுற சூழ்நிலை. எனவேதான் கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்ற உபதேசத்தை கடைபிடிப்பது அவசியம்.
தியானம் செய்யலாமா?
இதுபோல் நாம் சூழ்நிலையின் கைதியாக இருக்கும்வரை மனதில் உள்ள அழுக்குகள் தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறையாது. இந்த நிலையில் மனதை தூய்மைபடுத்த தியானம் சிறிதும் உதவாது. சாலையிலிருக்கும் புழுதி தொடர்ந்து வீட்டுக்குள் வந்தவண்ணம் கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டை எப்படி பெருக்கி சுத்தம் செய்ய முடியதோ அது போல வாழும் வாழ்க்கையின் தரம் தொடர்ந்து கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது தியானம் மூலம் மனதை தூய்மைபடுத்தவே முடியாது.
மனம் ஒன்றாமல் பணத்திற்காக வேலை செய்வது, அதிக பணம் சம்பாதிப்பதன் மூலம் இன்பத்தை பெறலாம் என்று எண்ணுவது, நம்மிடம் உள்ள பொருள்கள் மீதும் நம்மைச்சேர்ந்த மக்களிடமும் பற்று வைப்பது போன்ற செயல்களை நாம் செய்யும் வரை நமக்கு தியானம் ஒரு பலனையும் தராது.
பதினைந்து நிமிடங்கள் செய்யும் தியானத்தின் வெற்றி, தூங்கும் நேரம் உட்பட்ட எஞ்சியுள்ள இருபத்திநாலேமுக்கால் மணிநேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதை பொறுத்தே அமையும். அலுவலகத்தில் அதிக வேலையிருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் வீட்டில் உள்ள பிரச்சனைகளை மறப்பதற்காகவும் தியானம் செய்ய அமர்ந்தால் தியானம் என்ற பெயரில் தூக்கம் வரலாமே தவிர மனக்கட்டுப்பாட்டையோ அமைதியையோ அடையவே முடியாது.
முடிவுரை :
செயல்கள் மூலமாகத்தான் மனதை தூய்மை படுத்தவேண்டும். மனம்போன போக்கில் வாழ்வை அமைத்துக்கொண்டு நிம்மதிக்கும் இன்பத்திற்கும் தியானம் செய்ய முயல்வது சரியல்ல. தியானம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் மனதை தூய்மை படுத்த அதை ஒரு குறுக்கு வழியாக உபயோகித்தால் நாம் நிச்சயம் தோல்வியடைவோம்.
அஷ்டாங்க யோகம் என்னும் தனது யோக சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் தியானம் செய்வது எப்படி என்று விவரித்திருக்கிறார். அதில் வரும் முதல் கருத்து, செய்யக்கூடாத செயல்களை தவிர்த்து செய்யவேண்டிய செயல்களை செய்யும் வழியில் நம் வாழ்வு முறையை சரிசெய்யவேண்டும் என்பதாகும். இவற்றை முறையாக அறிந்து கொள்ளாமல் தியானம் செய்வது தவறு.
எனவே வேலைகளை முறையாக முழு கவனத்தையும் செலவிடுதல் அவசியம்.
பயிற்சிக்காக :
1. தியானம் என்றால் என்ன?
2.எண்ணங்கள் எவ்வாறு உறுவாகின்றன?
3.எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
4.மனதில் நடக்கும் செயல்கள் யாவை?
5.எவை தியானம் அல்ல?
6.தியானம் மூலம் புதிய அறிவை அடைய முடியுமா?
சுயசிந்தனைக்காக :
1. மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியுமா முடியாதா?
2. ஆழ்ந்து சிந்திப்பதற்கும் தியானத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?
3.கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?