Tuesday, March 30, 2010

Lesson 109: Purity in action ( பிரம்ம சூத்திரம் 3.3.18 )

பாடம் 109: வேலையின் நோக்கம் மனத்தூய்மை
பாடல் 377 (III.3.18)

வேலை செய்வதன் உள்நோக்கம் நமது மனதை தூய்மை படுத்துவது என்ற கருத்தை விளக்கி வேலை செய்யும் பொழுது அவசரம் இருக்க கூடாது என்று இந்த பாடம் உபதேசிக்கிறது.

மனதில் உள்ள அழுக்கு

அழுக்காறு, அகந்தை,அதிருப்தி, அருவருப்பு, அசூயைஆணவம், ஆத்திரம், இறுமாப்பு, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், கவலை,  கலக்கம், கர்வம்,கோபம்குரோதம்குற்ற உணர்வுசந்தேகம்சஞ்சலம்தவிப்பு, தற்பெருமை, துன்பம், துக்கம், துயரம்,  பயம், பகைமை, பழிவாங்கும் உணர்வு, பொறாமை, பேராசை, வருத்தம், விரக்தி, விரோதம், வெட்கம் போன்றவை மனதில் உள்ள அழுக்குகள். இந்த அழுக்குகளுக்கு அடிப்படை காரணம் நமது ஆசைகள். நமக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தால் மேற்குறிப்பிட்ட எந்த அழுக்குகளும் மனதில் தோன்றாது.

ஆனால் மனதில் தோன்றும் ஆசைகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆசைகள் தோன்ற காரணமான விருப்பு வெறுப்புகளின் பிடியிலிருந்து முதலில் நமது மனதை விடுவிக்க வேண்டும்.

சாதரணமாக நம் செயல்கள் அனைத்தும் நமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் அமைகிறது. எனக்கு இது பிடித்திருக்கிறது, எனவே செய்கிறேன். எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் செய்யவில்லை. இதுபோல் விருப்பு வெறுப்புகளின் பிடியில் தொடர்ந்து செயல் பட்டால் அவை மேலும் பலம் பெற்று நம்மை அடிமைபடுத்திவிடும். முதல் சிகரெட்டை பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் இருக்கலாம் என்று இளைஞனுக்கு இருந்த சுதந்திரம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டதும் பறிபோய்விடும்.

மனதில் உள்ள அழுக்குகளை தூய்மை படுத்த வேலை செய்வது அவசியம்.  

வேலைக்கும் மனத்தூய்மைக்கும் உள்ள உறவு

ஒரு வேலையை இப்படித்தான் செய்யவேண்டும் என்று ஒரு முறை இருக்கும். நம் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் அந்த முறையை பின்பற்றினால் நாளடைவில் மனம் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபடும். இதனால் நமக்கு எது பிடிக்குமோ அதில் ஆசை கொள்ளாமல் எது நல்லதோ அதில் ஆசைகொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தெருவில் குப்பை போடக்கூடாதுஎன்று சொன்னால் யாரும் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள். ஆனால் ஏன் தெருவில் குப்பை போடகூடாது என்ற கேள்விக்கு சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொள்ள வேண்டும் என்று வாயளவில் பதில் சொன்னாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லா இடமும் தூய்மையாய் இருப்பதால் அங்கு குப்பை போடகூடாது என்று சொன்னால் நியாயமிருக்கிறது, இங்கு ஏற்கனவே குப்பைத்தொட்டி போல் இருக்கும் தெருவில் நான் ஒரு காகிதத்தை தூக்கி போட்டால் என்ன என்று மனதளவில் நினைத்துக்கொண்டு யாரும் பார்க்காதபோது தொடர்ந்து குப்பைகளை பொது இடங்களில் தூக்கி எறிந்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது என்பதற்குமனதை தூய்மைபடுத்தஎன்பதுதான் சரியான பதில். தெருவில் நாம் குப்பை போட்டாலும் போடாவிட்டாலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தெருவில் குப்பை போடக்கூடாது என்ற சுயகட்டுபாடு நமது மனதை தூய்மை படுத்த பெரிதும் உதவும்.

இதுபோல எல்லா செயல்களையும்  செய்ய வேண்டிய முறைப்படி செய்வது நம் மனதை விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுவிக்கும். அவ்வாறில்லாமல் மனம் போனபடி நடப்பது நமக்கு மட்டும்தான் நஷ்டம். அதனால் மற்றவர்களுக்கோ சூழ்நிலைக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை.

வேலையில் வேகம்

சுறுசுறுப்பாக வேலை செய்வது மிக முக்கியம். ஆனால் அவசரமாக வேலை செய்வது தவறு. ஒரு வேலையை முறைப்படி திருத்தமாக செய்ய ஆகும் நேரத்தை செலவிட்டு கவனமாக வேலையில் ஈடுபாட்டுடன் செயல்களை செய்யவேண்டும். வேலையை அனுபவித்து செய்வது வேலை செய்து முடிப்பதை விட முக்கியமானது.

ஆனால் எல்லோரும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதில் தான் குறியாய் இருப்பார்கள். இதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம்: படித்து முடித்தால் விளையாடப்போகலாம் என்று மனதில் விளையாட்டை பற்றி நினைத்துக்கொண்டு கையில் உள்ள புத்தகத்தின் பக்கங்களை வேகமாக புரட்டிகொண்டிருக்கும் சிறுவனைப்போல பணம் சம்பாதிப்பதற்காக பலரும் வேலை செய்து கொண்டிருத்தல்.

இரண்டாம் காரணம்: பணத்தை கொடுத்து நிம்மதியை வாங்க முடியாது என்ற உண்மையை உணராமல் பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்தல்.

வேலை செய்வதன் முக்கிய நோக்கம் மனத்தூய்மை என்பதையும் பணம், புகழ் போன்றவை வேலை செய்வதால் கிடைக்கும் துணை பொருள்கள் (by-products) என்பதையும் புரிந்து கொண்டவர்கள் அவசரம் ஏதுமில்லாமல் அதே சமயத்தில் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் திறம்பட வேலை செய்வார்கள்.

வேலை செய்வதன் முதல் காரணம்: அக சீர்திருத்தம்

சுறுசுறுப்பாகவும், முழு திறமையை உபயோகித்தும், ஈடுபாட்டுடனும் வேலையை செய்யவேண்டிய முறைப்படி சரியாக செய்வதன் மூலம் நமது மனதில் உள்ள அழுக்குகளை படிப்படியாக நீக்கி மனத்தூய்மை பெறலாம். இதுதான் வேலை செய்வதன் முக்கியமான நோக்கம் என்பது புரிந்தால் வேலை செய்யும்பொழுது பொதுவாக காணப்படும் அவசரம் மறையும்.

வேலை செய்வதன் உப காரணம்புற உலக சீர்திருத்தம்

வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. வேகமாக வேலை செய்தால் முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படும் என்பது உண்மை. ஆனால் உண்மையிலேயே இது முன்னேற்றமா என்பது சிந்திக்கப்படவேண்டிய விஷயம்.

காந்தி காலத்தில் இங்கிலாந்திற்கு செல்ல பதினைந்து நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது பதினைந்து மணிநேரத்தில் லண்டன் சென்று விடலாம். இந்த முன்னேற்றத்தினால் யாருக்கும் எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்பவர்கள் கூட நேரம் போதவில்லை என்று அவசர அவசரமாக அருங்காட்சியகத்துக்குள் நடக்கிறார்கள்.

ஆறு மாதங்களில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை ஒரே வாரத்தில் கட்டுவது மற்றும் பத்து பேர் செய்யும் வேலையை கணிப்பொறி உதவியுடன் ஒரே ஆள் செய்வது  போன்ற மாற்றங்கள் புறவுலகை வேகமாக மாற்றி வருகின்றன. ஆனால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன் அதே விகிதத்தில் அதிகரிப்பதில்லை (Law of diminishing returns).  சொல்லப்போனால் ஒவ்வொரு முன்னற்றமும் வாழ்வில் நெருக்கடியையும் மனஉளைச்சலையும் அதிக படுத்துகின்றன. பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வதற்கு பதில் இருசக்கர வாகனம் வாங்கி இருபது நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்தாலும் முன்னை விட தற்பொழுது நேரம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது. மாட்டு வண்டி வேகத்தில் வாழ்க்கை நகர்ந்தபோது ஓய்வெடுக்க கிடைத்த நேரம் மோட்டர் கார் யுகத்தில் கிடைப்பதில்லை.

காலம் பொன் போன்றது என்றால் நமக்கு கிடைத்த வாழ்நாட்களை இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்று பொருள். ஆனால் காலத்தை விரயம் செய்யாமல் நிறைய உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இதை தவறாக புரிந்து கொண்டு மக்கள் ஓயாமல் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மரத்தினடியே நிம்மதியாக உட்கார்ந்திருந்த விவசாயியிடம் நீ ஏன் இன்னொரு போகம் விளைவிக்க கூடாது என்று கேட்டதற்கு அவன் இருக்கும் உணவு எனக்கு போதும் இன்னும் விளைத்து என்ன செய்ய என்று பதிலளித்தான். இன்னும் விளைத்து அதிகப்படியாக கிடைத்த நெல்லை விற்று பணமாக்கி சேர்த்து வைத்து இன்னும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி பெரிய பணக்காரனாகி பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்று அவனுக்கு உபதேசம் செய்தால் அவன் நான் இப்பொழுதே நிம்மதியாகத்தான் இருக்கிறேன், எதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டால் நம்மால் எவ்வித மறுமொழியும் சொல்ல முடியாது.

விரைவில் வேலைகளை செய்து முடிப்பதால் எவ்வித பயனும் இல்லை.

புற உலக முன்னேற்றமும்  அக உலக சீர்திருத்தமும்

வேலை செய்வதால் நமது மனம் செம்மையாகிறது. இரண்டு அடி குழி வெட்டிய பின் அதை பழையபடி மூடு என்று சொன்னால் உழைப்பை வீணடிப்பதுபோல் தோன்றும். உண்மையில் மனதை தூய்மை படுத்தவே வேலை செய்கிறோம். வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கவனிப்பது அனாவசியம். ஏனெனில் அந்த முன்னேற்றம் நம் நிம்மதிக்கும் இன்பத்திற்கும் எவ்வகையிலும் துணை செய்வதில்லை.

கிடைத்த ஒரே ஊசிப்பட்டாசை ஒரேயடியாக கொளுத்தாமல் அதை பிரித்து ஒவ்வொரு வெடியையும் தனித்தனியாக கையில் பிடித்து கொளுத்தி தீபாவளியை கொண்டாடும் ஏழை சிறுவனையும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கின பட்டாசுகளை பத்து நிமிடத்தில் கொளுத்தி முடித்துவிட்டு நாள் முழுவதும்போர் அடிக்கிறதுஎன்று புகார் செய்யும் பணக்கார சிறுவனையும் ஒப்பிட்டால் அவசரபடும் தவறை நாம் செய்யமாட்டோம்.

பூமியை நாம் காப்பாற்ற வேண்டிய தாயாக கருதாமல் கொள்ளையடிக்கபட வேண்டிய பகைவனின் சொத்தாக கருதி இயற்கை வளங்களை தொடர்ந்து சூறையாடி வருவதன் காரணம் நாம் எதற்கு வேலை செய்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் காரணம்.   

பத்து பேர் செய்யும் வேலையை ஒருவன் செய்வதால் உற்பத்தி திறன் மிக அதிகமாகிவிட்டது என்று மகிழும் அதே நேரத்தில் பத்து பேருக்கு பதில் ஒரே ஒருவனின் மனம் மட்டும்தான் தூய்மையடைய வாய்ப்பு கிடைத்தது என்ற உண்மையையும் உணர வேண்டும்.

வேலை செய்து அதன் பலனை அனுபவிப்பதற்கு பதில் வேலை செய்வதையே இனிமையான அனுபவமாக செய்தால் மனம் தூய்மைப்படும் அதே நேரத்தில் வாழ்க்கைத்தரமும் தேவையான அளவு உயரும். இதனால்தான் நெசவாலைகளுக்கு பதில் கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தவேண்டும் என்று காந்தி மகான் முயன்றார். தொழில் துறையில் உண்மையான முன்னேற்றம் அவரவர்களால் தங்கள் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதற்கு துணை செய்வதாய் இருக்க வேண்டும். உதாரணமாக கைத்தறியில் உருவாகும் துணியின் தரம் ஆலைகளில் செய்யப்படும் துணியின் தரத்தைவிட நன்றாக இருக்கும் வகையில் கைத்தறியை வடிவமைப்பதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம்.

முடிவுரை :

அவசரமில்லாமல் சுறுசுறுப்பாக ஒரு வேலையை செய்வது அவசியம். போக வேண்டிய இடத்தை சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்று காரை வேகமாக ஒட்டுவது அவசரம். ‘நான் ஒரு ரவுண்டு போய்வருகிறேன்என்று தந்தையின் காரை மகன் எடுத்துக்கொண்டு அவரைவிட வேகமாக கார் ஓட்டினாலும் அதில் அவசரம் எதுவும் இல்லை. கார் செல்லும் வேகத்தை அனுபவிப்பவனுக்கு சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோமே என்ற வருத்தம் கூட இருக்கும். அதுபோல வேலையை எப்பொழுது முடிப்போம் என்று நினைத்து செய்தால் அது அவசரம். வெகுவேகமாக வேலையை அனுபவித்து செய்தால் அது சுறுசுறுப்பு.

கஷ்டபட்டு வேலை செய்வது பிறகு சந்தோஷமாய் இருப்பதற்காக என்ற எண்ணம் தவறானது. நம் வாழ்வில் பெரும்பகுதியை வேலை செய்வதற்காகத்தான் செலவிடுகிறோம். எனவே சந்தோஷமாக வேலை செய்தாலே போதும்.

பயிற்சிக்காக :

1. மனதில் உள்ள அழுக்குகளாக குறிப்பிடப்பட்டவை யாவை?

2.விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும்?

3.ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது?

4.சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கும் அவசரமாக செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

5.வேலையில் வேகமிருந்தால் அதன் விளைவுகள் யாவை?

6.உண்மையான விஞ்ஞான முன்னேற்றம் யாது?

7.இந்த பாடத்திலிருந்து கிடைத்த முக்கியமான கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. விருப்பமானதை செய்தால்தானே சந்தோஷம்? வெறுக்கும் வேலைகளை செய்வதால் என்ன பலன்?

2. ஹோமம் வளர்க்கும்பொழுது நெய் ஊற்றுவதற்கு பதில் டால்டா ஊற்றலாமா?

3.ஒரு பூஜை செய்யும்பொழுது இப்படித்தான் செய்யவேண்டும் என்று வெவ்வேறு சம்பிரதாயங்கள் இருந்தால் எதை பின்பற்றுவது?

4. சிங்கபூர் போன்ற நகரங்களில் எல்லோரும் நகரை சுத்தமாக வைத்திருப்பதால் அவர்கள் மனமும் தூய்மையாகிவிட்டதா?

5. பொருளாதார முன்னேற்றம் அவசியம் இல்லையா?