பாடம் 105: ஊரோடு ஒத்துவாழ்
பாடல் 369 (III.3.10)
யாராலும் தனித்திருக்க முடியாது. ஏதாவது ஒருவகையில் உலகத்தை சார்ந்தே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனினும் ஊரோடு ஒத்துவாழ் என்று அறிவுருத்த வேண்டியதன் அவசியத்தையும் எப்படி ஊருடன் ஒத்துவாழ்வது என்ற வழிமுறைகளையும் இந்த பாடம் விளக்குகிறது.
‘ஊருடன் கூடிவாழ்’ என்ற ஔவையாரின் ஆத்திசூடி, நாளடைவில் ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்ற முதுமொழியாக மாறியதுடன் வேதத்தின் கருத்திலிருந்து வேறுபட்டு தவறான பொருளில் மக்களிடையே வழக்கில் இருந்து வருகிறது.
ஊரோடு ஒத்து வாழ் என்றால் என்ன அர்த்தம்?
தவறான அர்த்தம் 1: மந்தையில் ஆடாக வாழ்.
எல்லோரின் வாழ்க்கையும் படிப்பது, வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது, திருமணம் செய்துகொள்வது, பிள்ளைகள் பெற்றுக்கொள்வது என்பது போல் அமைந்திருப்பதால் நாமும் அதுபோல மூன்று வயதானால் பள்ளிக்கு செல்லவேண்டும் முப்பது வயதானால் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது முதல் தவறான அர்த்தம். எல்லோரும் ஒரு வேலையை செய்து கொண்டிருப்பதால் நாமும் அதை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஏன், எதற்கு என்று நமது புத்தியை பயன்படுத்தி கேள்விகள் கேட்கவேண்டும்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று வாழத்துவங்கிய நாம் பின் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வளர்ந்து பிறகு குருவின் கருணையால் அறிவைபெறுகிறோம். அதன் பின் மந்தையில் ஆடாக வாழக்கூடாது.
நமது அறிவின் திறத்தை பயன்படுத்தி நமக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில்தான் நாம் நம் வாழ்க்கைப்பயணத்தை நடத்த வேண்டும்.
தவறான அர்த்தம் 2: மக்களின் பேச்சுக்கு மதிப்பு கொடு.
நாம் இந்த செயலை செய்தால் ஊர் என்ன நினைக்கும் என்று கவலைப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் ஒரு செயலை செய்தால் அதைபற்றி ஊரில் ஒன்பது கருத்துக்கள் நிலவும். புத்தர் தன் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு காட்டுக்கு சென்றது சரியா என்று கேட்டால் ஒவ்வொருவரும் தங்கள் சிற்றறிவை பயன்படுத்தி வெவ்வேறு பதிலை சொல்வார்கள். யார் பேச்சை கேட்பது? மேலும் நாம் எது செய்தாலும் அதை நமக்கு வேண்டியவர்கள் சரியென்றும் வேண்டாதவர்கள் தவறு என்றும் சொல்வார்கள். எனவே நம்மை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கருத்துப்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கூடாது. கருத்துக்களை கேட்பதில் தவறில்லை. கருத்துக்களை கேட்டபின் நமது அறிவுக்கு எது சரியென்று படுகிறதோ அது ஊரின் கருத்துக்கு மாறாக இருந்தாலும் அதைத்தான் நாம் செய்யவேண்டும்.
நமது அறிவுக்கு சரியான வழி புலப்படாவிட்டால் சான்றோரை அணுகி அவரது கருத்தை கேட்கவேண்டும். வயதானவர்கள் எல்லோரும் சான்றோர்கள் அல்ல. வேதத்தை தங்கள் குருவிடமிருந்து படித்து தேர்ந்தவர்களே சான்றோர்கள்.
எனவே ஊருடன் ஒத்துவாழ் என்பதற்கு (சான்றோர்களின் அறிவுரையைத்தவிர) மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பது பொருள் அல்ல.
தவறான அர்த்தம் 3: காலத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும்
எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள், பொய் சொல்கிறார்கள் என்பதற்காக நாமும் அதுபோல் அதர்மமாக வாழக்கூடாது. தர்மம் என்றும் மாறாது. தர்மப்படிதான் நாம் வாழவேண்டும். ஊர் முழுவதும் அதர்மமாக நடந்தால் கூட ஊரோடு ஒத்துவாழக்கூடாது. பிழைக்க தெரியாதவன் என்ற பட்டத்தை ஊர் நமக்கு கொடுத்தாலும் பணம் சம்பாதிப்பதற்காக எவ்வித குறுக்கு வழியிலும் ஈடுபடாமல் நாணயமாகவும் நேர்மையாகவும் வாழ வேண்டும்.
சரியான அர்த்தம் 1: ஊர் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எனவே ஊர் எப்படியிருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொண்டு அதில் எந்த குறையையும் கண்டுபிடிக்க கூடாது. காலம் கெட்டு விட்டது என்றும், கலி முற்றிவிட்டது என்றும் உலகம் போகிற போக்கை கண்டிப்பதோ சலித்து கொள்வதோ கூடாது.
அதே சமயத்தில் உலகத்தில் நிலவும் வறுமை, கல்வியின்மை, அறியாமை, ஆரோக்கியமின்மை ஆகியவற்றை அகற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டாமென்று அர்த்தம் செய்து கொள்ள கூடாது. உலகத்தை பாலும் தேனும் ஓடும் சுவர்க்கபுரியாக மாற்ற நம்மால் என்னென்ன வழிகளில் வேலை செய்யமுடியுமோ அவற்றை செய்வது மிக அவசியம்.
சாணை பிடிக்கும் கல்லை உபயோகபடுத்தி கத்தியை தீட்டி அதை கூர்மை படுத்துவது போல உலகத்தை சீர்திருத்த முயன்று நமது புத்தியை தீட்டி அதை கூர்மை படுத்திக்கொள்ள வேண்டும். உலகம் மாறுகிறதா என்பது முக்கியமல்ல. நமது திறமைகளையும், அறிவின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வளருகிறோமா என்பது தான் முக்கியம். நம்மை நாம் உயர்த்திக்கொள்ள உலகத்தை மாற்றியமைக்க முயல்வதை தவிர வேறு வழியில்லை.
ஊரோடு ஒத்து வாழ் என்றால் ஊரை திருத்த தொடர்ந்து உழைத்து நமது மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது சரியான பொருள்.
சரியான அர்த்தம் 2: ஊருக்கு உதவி செய்
நாடென செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது தவறு. நீ என்ன செய்தாய் அதற்கு என்பதே சரியான சிந்தனை. நம் வளர்ச்சிக்கு தாய், தந்தை, ஆசிரியர்கள், நண்பர்கள், சுற்றத்தார்கள் மற்றும் வெவ்வேறு துறையில் உழைக்கும் பொதுமக்கள் என அனைவரும் காரணம். இந்த நன்றிக்கடனை தீர்ப்பது நமது கடமை.
அமெரிக்க செல்வந்தர் ஒருவர் ஒரு பெரிய தொகையை அன்பளிப்பாக சுவாமி விவேகானந்தர் முன்னிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு விவேகானந்தரின் மறுமொழிக்காக காத்திருந்தபோது தலையை நிமிர்த்தாமலேயே இந்த தொகையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளீர்கள் என்றார் சுவாமிஜி. ஒரு எறும்பு கூட நமது உதவியை எதிர்பார்த்து வாழ்வதில்லை.
மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் நம்மால் முடிந்தவரை உதவி செய்துவிட்டு அந்த வாய்ப்பை நமக்கு கொடுத்ததற்கு அவருக்கு மனதார நன்றி சொல்ல வேண்டும்.
ஊரோடு ஒத்துவாழ் என்றால் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நம்மால் முடிந்த பண உதவியையும் உடல் உழைப்பயும் தானமாக தர வேண்டும் என்று பொருள்.
சரியான அர்த்தம் 3: ஊருடன் உறவு நம் கர்ம வினைப்படிதான் அமையும்
நமது பாவபுண்ணியங்களின் விளைவாக நமக்கு கிடைக்கவேண்டிய அனுபவங்களை பெற்றுத்தரும் விதமாகவே உலகத்துடன் நமக்கு ஏற்படும் தொடர்புகள் அமைகின்றன. காய்கறி நறுக்கும்பொழுது இடது கைவிரல் மேல் கத்தி பட்டு ரத்தம் வந்தால் நாம் கத்தியையோ வலது கரத்தையோ கண்டிப்பதில்லை. நமக்கு யாரேனும் துன்பம் கொடுத்தால் கத்தியைப்போல அவரும் ஒரு உபகரணமாக கடவுளின் கையில் இயங்குகிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் திருப்பி அடிக்காமல் மறு கன்னத்தை காண்பிக்க வேண்டும் என்பதன் பொருள் இதுவே. நம் கன்னத்தில் அடி விழுந்தால் அது நமது பாவத்தின் விளைவு. அதற்கு அடித்தவன் ஒரு நிமித்தமாக பயன்பட்டிருக்கிறான். எனவே அவன் மேல் கோபப்படுவதிலோ திருப்பி அடிப்பதன் மூலம் நமது பாவத்தை அதிகரித்துக்கொள்வதோ தவறு.
ஊரோடு ஒத்து வாழ் என்றால் நமக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு மற்றவர்கள்தான் பொறுப்பு என்று தவறாக எண்ணாமல் எப்பொழுதும் நன்றி உணர்வுடன் எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும்.
ஊரோடு ஒத்து வாழ்வது எப்படி?
சரியான வழி 1: சுயநலத்துடன் செயல்படவேண்டும்
பொதுநலத்திற்காக சுயநலத்தை தியாகம் செய்யவேண்டும் என்பது மிகவும் தவறான பிரச்சாரம். வாழ்வில் எப்பொழுதும் நாம் சுயநலத்துடனேயே எல்லா காரியங்களையும் செய்து வருகிறோம். செய்ய வேண்டும்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும். முதலில் நாம் நன்றாக இருக்க வேண்டும். பின் நம் குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், நாடு என்று இதே வரிசையில்தான் நமது பொருளையும் உழைப்பையும் செலவிடவேண்டும். தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்.
தர்மம் தலை காக்கும். எவ்வளவுதான் பொருள் சேர்த்து வைத்தாலும் கடைசி காலத்தில் நமக்கு துணைவரப்போவது நாம் செய்யும் தர்ம காரியங்கள்தான். ஆகவே நமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட பின் முடிந்தவரை மற்ற ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இதுவும் தன்னலம்தான். நாம் செய்யும் அனைத்து நல்ல காரியங்களாலும் நமக்கு புண்ணியம் சேரும். எனவே முடிந்தவரை நிறைய புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சோமாலியாவில் பட்டினியால் பலபேர் மரணமடைகிறார்கள் என்ற செய்தியை கேட்டு வருத்தபட்டு பிரயோஜனம் எதுவும் இல்லை. நாம் வருத்தப்படுவதால் அவர்களுக்கு சாப்பாடு கிடைத்துவிடப்போவதில்லை. நம்மால் முடிந்தால் அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையளித்து கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்கொள்ளலாம்.
மற்றவர்களை ஏமாற்றியோ துன்புறுத்தியோ நாம் நமது காரியங்களை சாதித்துக்கொள்ள முயல்வது தவறு. ஏனெனில் இது போன்ற பாவங்களுக்கு நமக்கு சரியான தண்டனை கிடைக்கும்.
சரியான வழி 2: சுயகட்டுப்பாட்டுடன் இருக்க பழக வேண்டும்
நமது விருப்பு வெறுப்புகளை நாம் ஜெயிக்க வேண்டும். எனக்கு என்ன பிடிக்குமோ அது கிடைத்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும், இல்லாவிட்டால் நான் துன்பத்தில் மூழ்கிவிடுவேன் என்ற கட்டாயத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். ஊர் எப்படியிருந்தாலும் நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிப்பேன் என்ற நிலையை அடைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கிடைத்ததை விரும்பும் சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு நுழைவுத்தேர்வு எழுதும் பொழுது வாழ்வில் முதல் முறையாக விரும்புவது கிடைக்குமா அல்லது கிடைத்ததை விரும்பவேண்டிய கட்டாயம் ஏற்படுமா என்ற கேள்வி எழும். அதை தொடர்ந்து பிடித்த வேலை கிடைக்குமா என்பது போல் வாழ்வு முழுவதும் எதிர்பார்ப்பில் கழிக்க கூடாது. நமது இன்ப துன்பங்களை ஊர் தீர்மானிக்கும்படி விடாமல் சுய கட்டுப்பாட்டின் மூலம் எது கிடைத்தாலும் இன்பமாக இருக்க கற்றுக்கொள்ள பெற்றோர் தேர்ந்தெடுப்பவரை வாழ்க்கைத்துணைவராக ஏற்றுக்கொள்வது மிக அவசியம்.
மனதுக்கு பிடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை மணம் செய்து கொள்ள கூடாது என்பது வேதம் கூறும் தெளிவான முடிவு. மனதுக்கு பிடித்த காரணத்தால் திருமணம் செய்து கொண்டால் பிறகு பிடிக்காமல் போனால் விவாகரத்து செய்யவேண்டி வரும். நமக்கு இன்று பிடிப்பது என்றும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பத்து வருடங்களுக்கு முன் ரசித்து பார்த்த திரைபடத்தை இப்பொழுது பத்து நிமிடம்கூட பார்க்கமுடிவதில்லை. நாளுக்கு நாள் நாம் வளர்கிறோம். எனவே நமக்கு பிடித்தது பிடிக்காதது ஆகியவை நிச்சயம் மாறும். அதேபோல் நம் வாழ்க்கைதுணையாய் வருபவரும் தொடர்ந்து மாறுவார். எனவே இன்று மிகவும் பிடித்தவராயிருப்பவரை பத்து வருடங்களுக்கு பிறகும் அதே அளவு பிடிக்கும் என்று சொல்லமுடியாது.
எனவே பெற்றோர் பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுத்தவரை மணந்து கொண்டு மரணம் வரை அவருடன் இன்பமாக வாழ முடிவு செய்வது ஊரோடு ஒத்துவாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். நம்முடன் உறவாடுபவர்கள் எப்படியிருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. எனது வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான மக்களிடமும் என்னால் மகிழ்ச்சியாக தொடர்பு கொள்ள முடியும் என்ற திறமையை வெகு விரைவில் நாம் அடைய வேண்டும்.
சாலையில் பயணம் செய்யும் பொழுது நம்முடைய வாகனத்தை மட்டும்தான் நம்மால் கட்டுபடுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் மற்ற எந்த வாகன ஓட்டியின் போக்கையும் நாம் தீர்மானிக்க முடியாது. யார் எப்படி அவர்கள் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாலும் நாம் செல்லவேண்டிய இடத்துக்கு எவ்வித விபத்திலும் சிக்கிகொள்ளாமல் பத்திரமாக சென்றடைவது நம் கையில் மட்டும்தான் இருக்கிறது. எவ்வித சாலைவிதிகளையும் கடைபிடிக்காமல் முரட்டுத்தனமாக வண்டியோட்டுபவர்களை திட்ட துவங்கினால் நமது ரத்த அழுத்ததை அதிகபடுத்திக்கொள்வதை தவிர வேறு ஒரு லாபமுமில்ல.
நாம் யாரையும் திறுத்தவோ மாற்றவோ முடியாது. நமது கட்டுப்பாட்டுக்குட்பட்டு செயல்படும் ஒரே நபர் நாம் மட்டும்தான். நம் மனதை கட்டுபடுத்துவதை விட்டு ஊர் முழுவதையும் மாற்றி அமைப்பேன் என்று முயல்வது அறிவீனம். மற்றவர்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறிது காலத்துக்கு பின் மாறிவிடுவார்கள் என்று அனாவசியமாக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் அனைவரையும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழக்கற்றுக்கொண்டால் ஊரோடு ஒத்து வாழலாம்.
சரியான வழி 3: பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கற்றுக்கொள்ளல்
எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்குத்தேவையான நேரத்தை கொடுத்து முழுமனதுடன் செய்யவேண்டும். விதை விதைத்ததும் பழம் வந்து விட்டதா என்று நிமிர்ந்து தேடகூடாது. செய்த காரியத்தின் பலன் வரும்பொழுது வரட்டும் என்று பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பலன் நாம் எதிர்பார்த்த படி அமையாவிட்டால் ஏமாற்றமோ கோபமோ அடையாமல் அதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
‘அவன் என்னை திட்டினான். நான் பொறுமையாகத்தான் இருந்தேன். அவன் மேலும் மேலும் கடுமையான வார்த்தைகளை பேசியதும் வேறு வழியில்லாமல் அவனை அடித்துவிட்டேன்.’ இதுபோல் நாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் வரை நமக்கு தொடர்ந்து துன்பங்களும் கஷ்டகாலமும் வந்த வண்ணம்தான் இருக்கும். பிடிக்காதவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியே இருக்கவேண்டும். ஆனால் நம் அன்றாட வாழ்வில் வேறு வழியில்லாமல் பிடிக்காத ஒரு சிலரிடம் பழக வேண்டிய கட்டாயம் ஏற்படுவது நமக்கு பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கற்றுத்தருவதற்காகத்தான்.
ஊருடன் ஒத்து வாழ ஊர் எப்படியிருந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு நமது மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும்.
முடிவுரை :
இந்த உலகம் படைக்கபட்டது நமது இன்பத்திற்காக மட்டுமே. பச்சைக்கிளிகள் தோளோடு, பாட்டுக்குயிலோ மனதோடு, பூலோகம் ஆனந்தத்தின் எல்லை, இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை என்பது உண்மையான வார்த்தைகள். ஆனால் இதுபோல் காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆனந்தத்தை அடையாளம் கண்டுகொள்ள முதலில் நமது மனதை திருத்திக்கொள்ள வேண்டும்.
மனம் விரும்புகிறது என்று ஒரு காரியத்தை செய்யாமல் கிடைப்பதை ஏற்றுக்கொண்டு சிறிதுகாலம் வாழ்ந்தால் மனம் செம்மையடைந்து வேதம் கூறும் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகிடைக்கும். அதன் பின் மனம் எதை விரும்புகிறதோ அதை மட்டும் செய்யலாம். வாழ்வு முழுவதும் பிடிக்காததை ஏற்றுக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருப்பது அவசியமில்லை. பயிற்சிக்காலத்தில் ஊருடன் ஒத்து வாழ்வதை ஒழுங்காக கற்றுக்கொண்டால் அதன் பின் நமக்கு துன்பம் தரும் நிகழ்வுகள் என்று எதுவும் வாழ்வில் நிகழாது. நமது உலகம் சொர்க்கலோகமாக மாறிவிடும். நாம் எப்பொழுதும் நமக்கு பிடித்த காரியங்களை மட்டும் தடையில்லாமல் செய்துகொண்டு இன்பமாக வாழலாம்.
நாம் ஒருவர் இன்பமாக இருந்தால் அந்த இன்பம் நமது குடும்பம், சுற்றம், நண்பர்கள் சமூகம் என்று அனைவருக்கும் படிப்படியாக பரவும். எனவே நமக்கும் ஊருக்கும் நன்மை செய்ய நாம் ஊருடன் ஒத்து வாழ வேண்டும்.
பயிற்சிக்காக :
1.ஊரோடு ஒத்து வாழ் என்பதன் மூன்று தவறான அர்த்தங்கள் என்னென்ன?
2 ஊரோடு ஒத்து வாழ் என்பதன் மூன்று சரியான அர்த்தங்கள் என்னென்ன?
3. ஊரோடு ஒத்து வாழ கொடுக்கப்பட்ட மூன்று வழிமுறைகள் யாவை?
சுயசிந்தனைக்காக :
1.சான்றோர் என்பவர் யார் என்று அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து சால் ஊன்றிய தூண் என்ற திருக்குறளின் பொருளை ஆராய்க.
2.தர்மம் எப்படி தலை காக்கும்?