Thursday, March 18, 2010

Lesson 104: It is appropriate to specialize ( பிரம்ம சூத்திரம் 3.3.9 )

பாடம் 104: செய்வன திருந்தச்செய்
பாடல் 368 (III.3.9)

என்ன வேலை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டிய அவசியத்தை விளக்குவதுடன் ஒரு வேலையை எப்படி சரியாக செய்வது என்ற செய்முறை விளக்கத்தையும் இந்த பாடம் அளிக்கிறது.

சரியாக செய்வது என்றால் என்ன?

பலனை வைத்து செயல்முறையின் தரத்தை முடிவு செய்ய கூடாது. எல்லா வேலைகளும் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துத்தான் செய்யப்படுகின்றன என்றாலும் அந்த வேலை எப்படி செய்யப்பட்டது என்பதை பொறுத்துத்தான் அது சரியாக செய்யப்பட்டதா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி உடல்நலம் பெற்று தேர்ந்தால் மருத்துவர் சிறப்பாக வேலை செய்தார் என்றும் அவ்வாறில்லாமல் நோயாளி இறந்துவிட்டால் மருத்துவர் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூற முடியாது.

செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்யவேண்டும் என சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம் என்பது தவறான கருத்து. செய்வனவற்றை சிறப்பாக செய்வது எப்படி என்பதை புரிந்து கொள்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாமே தவிர புரிந்துகொண்ட பின் நடைமுறையில் அதை கடைபிடிப்பது மிகவும் எளிது.

சரியாக செய்வது என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் உலகின் தன்மை பற்றிய ஐந்து உண்மைகளை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.

முதல் உண்மை: குற்றமில்லாத பூர்ணத்துவம் (flawless perfection) அடையவே முடியாத ஒன்று.   எந்த வேலையையும் இன்னும் நன்றாக செய்வதற்கு வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இந்த வாய்ப்பை வழங்குவதற்காகவே யாராலும் எப்பொழுதும் எல்லா வேலைகளையும் மிகச்சரியாக செய்யமுடியாதபடி கடவுள் இவ்வுலகை படைத்திருக்கிறார்.

இரண்டாம் உண்மை: உலகில் சாதிக்கவேண்டியது என்று ஒன்றுமேயில்லை. நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதனால் உலகத்திற்கு எவ்வித நன்மையோ தீமையோ ஏற்படுவதில்லை. சாப்பாட்டு இலைமீது ஒரு எறும்பு வந்து வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் அல்லது கொஞ்சம்கூட சாப்பிடாமல் சென்றுவிட்டாலோ நமக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. அது போல இந்த உலகத்தின் தொடர்ந்த இயக்கத்தில் தனிமனிதனின் செயல்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

மூன்றாம் உண்மை: வேலை செய்வது மற்றவர்களின் அங்கீகாரத்தையோ பாராட்டையோ பெறுவதற்காக அன்று. சமூகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டுவிட்டால் நாம் செய்வதையெல்லாம் எல்லோரும் கொண்டாடுவார்கள். எழுத்தாளர் சுஜாதா தான் வண்ணான் கணக்கை எழுதினால் அதை பிரசூரிக்ககூட பத்திரிக்கைகள் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாம் எவ்வளவுதான் நன்றாக வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கவும் நிறைய பேர் இருப்பார்கள்.

நான்காம் உண்மை: வேலையை செய்யத்துவங்குவதற்கு முன் குற்றமில்லா பூர்ணத்துவத்தை அடைய வேண்டுமென்றும், தனது உழைப்பால் வேலை வழங்குனர், வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் போன்ற அனைவருக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்றும் எல்லோரும் மிக நன்றாக செய்தாய் என்று பாராட்டும்படி வேலை செய்யவேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பது அவசியம்.  எப்படியும் நல்ல பெயர் வாங்கமுடியாது, எனவே எப்படி செய்தால் என்ன என்பது போன்ற அலட்சியத்தோடு செய்யப்படும் எந்த வேலையும் சிறப்பாக செய்த வேலையாகாது. முடியாது என்பதால் முயற்சி செய்யகூடாது என்று அர்த்தமில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற காரணத்தாலேயே எவ்வளவு முயன்றாலும் புதியதோர் உலகத்தை செய்யவே முடியாதபடி கடவுள் அனைத்தையும் படைத்திருக்கிறார்.

ஐந்தாம் உண்மை: வேலை சிறப்பாக செய்யப்பட்டதா இல்லையா என்பதை அவரவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

செய்வதை சிறப்பாக செய்யும் விதம்

முதல் படி : வேலையின் நோக்கம்

நாம் செய்யும் வேலையின் மூலம் நாம் சாதிக்க நினைப்பது என்ன என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு தெளிவுக்கு வர வேண்டும். மேலே சொல்லப்பட்ட நான்காம் உண்மையில் பொதுவாக விவரிக்கபட்ட எதிர்பார்ப்பை ஒவ்வொருவரும் தங்களது வேலைக்கேற்ற குறிப்பிட்ட நோக்கங்களாக ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளை மிகவும் குறைந்த செலவில் விரைவில் முழுவதும் குணப்படுத்துவது அல்லது நல்ல இனிமையான மருத்துவர் என்று எல்லோரும் புகழும்படி சிகிச்சையளிப்பது என்பது போன்று தான் வேலை செய்வதன் நோக்கம் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் படி: செயல் பட்டியல் (To Do List)

நமது வேலையின் நோக்கத்தை நிறைவேற்ற இன்று செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் இந்த பட்டியலை சரிபார்த்து இன்று இந்த அத்தனை செயல்களையும் செய்து முடிப்பேன் என்று மனதுக்குள் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும். இரவு படுக்க போகுமுன் எவ்வளவு செயல்களை செய்து முடித்தோம் என்பதை சரிபார்த்து மறுநாளுக்கு உண்டான பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

செயல் பட்டியல் எழுதும் விதம்

1. செயலினால் எதிர்பார்க்கும் பலனை எழுதக்கூடாது. செய்ய வேண்டிய செயலை மட்டுமே எழுதவேண்டும். உதாரணமாக வீடுவீடாக போய் ஒரு பொருளை விற்பவர் எவ்வளவு பொருள்களை விற்பேன் என்று எழுதக்கூடாது. எவ்வளவு வீடுகளுக்கு போய் பொருள்களை பற்றி பேசுவேன் என்பதை மட்டுமே எழுத வேண்டும். எவ்வளவு வீடுகளுக்கு செல்ல வேண்டுமென்பது முதல் படியில் கூறப்பட்ட வேலையின் நோக்கத்தை பொறுத்தது.

ஒரு வேலை செய்வதன் மூலம் என்ன பலனை எதிர்பார்க்கிறோமோ அந்த பலனை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மட்டும்தான் இங்கு பட்டியலிடவேண்டும்.

2. அளவிடகூடிய செயல்களை மட்டுமே பட்டியலில் எழுதவேண்டும். உதாரணமாக விற்க வேண்டிய பொருள்களை பற்றி திறமையாகவும் நன்றாகவும் பேசுவேன் என்று எழுதாமல் பத்து வீடுகளுக்கு சென்று பொருள் பற்றி பேசுவேன் என்று மட்டும் எழுதவேண்டும். ஏனெனில் நாள் முடிந்ததும் பத்து வீடுகளுக்கு சென்றோமா இல்லையா என்பதை அளவிடுவது போல் நன்றாக பேசினேனா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது.

3. செயல்களின் எண்ணிக்கை நமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற அளவில் இருக்க வேண்டும். செய்ய முடியாத அளவு அதிகமாகவோ எளிதாக செய்து முடித்துவிடக்கூடியதாகவோ இருக்க கூடாது.

4. சுதந்திரமாக செய்யக்கூடிய செயல்களை மட்டுமே எழுத வேண்டும். எழுதப்பட்ட வேலைகளை செய்ய நமக்கு எவ்வித கட்டுப்பாடும் இருக்க கூடாது.  நமக்கு கீழே வேலை செய்பவர்களைத்தவிர வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாத செயல்களை மட்டுமே செயல் பட்டியலில் எழுத வேண்டும்.  

5. தினசரி கடமைகளை பட்டியலில் எழுதக்கூடாது. அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களை நாம் சரியாக செய்யாமல் இருந்தால் மட்டும் அவற்றை பட்டியலில் எழுதவேண்டும். முடிந்தவரை பட்டியலில் உள்ள செயல்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

6. யாருக்கு கீழ் வேலை பார்க்கிறோமோ அவரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். முடிந்தவரை பட்டியலில் இடம்பெறாத செயல்களை செய்யக்கூடாது. ஒரு நாளில் எவ்வளவு செயல்களை செய்தோம் என்பதை விட எவ்வளவு செயல்களை செய்வேன் என்று காலையில் உறுதியெடுத்தோமோ அவற்றை செய்து முடித்தோமா என்பதுதான் முக்கியம். இரண்டு செயல்களை செய்வதாக தீர்மானித்து அதை செய்வது பட்டியலில் இல்லாத நான்கு செயல்களை செய்வதை விட சிறந்தது.

மூன்றாம் படி: சுய ஆய்வு

தினமும் வேலையை முடித்து வீட்டுக்கு திரும்புமுன் பட்டியலில் உள்ள செயல்களை செய்து விட்டோமா என்றும் செய்யா விட்டால் அதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும். நம்மிடம் தவறு ஏதேனும் இருந்தால் அதை திருத்திக்கொள்ள தேவையான செயல்களை அடுத்த நாள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உதாரணமாக ஒரு மாணவன் தேர்வில் எவ்வளவு சதவிகிதம் மதிப்பெண் பெறவேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின் அந்த குறிக்கோளை அடைய எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியரின் துணையுடன் முடிவு செய்யவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் அந்த ஒரு மணிநேரத்தை படிப்பதில் செலவிட்டோமா இல்லையா என்பது மட்டும்தான் முக்கியமே தவிர தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் வந்தது என்பதை பற்றி கவலைபடக்கூடாது. ஒருவேளை எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால் படிக்கும் விதத்தை எப்படி மாற்றி அமைப்பது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற சீர்திருத்தங்களை செய்வது மட்டும்தான் அவன் பொறுப்பு.

நான்காம் படி: சுய திருப்தி

நாம் நினைத்தபடி வேலை செய்தால் மட்டும் போதும். ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், நான்என்று தினமும் மனதுக்குள் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வது அவசியம். நாம் வேலை செய்வது நமது மனம் செம்மையாக வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக மட்டும்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

முடிவுரை :

செய்வனவற்றை சிறப்பாக செய்வதன் மூலமாக மட்டும்தான் வேலை பார்ப்பதன் பயனை அடைய முடியும். வேலையில் முழு ஈடுபாட்டுடன் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்வது நமக்கு சேரவேண்டிய அனைத்து நன்மைகளையும் நம்மிடம் கொண்டு சேர்க்கும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதும், அவற்றை செய்வதும், சரியாக செய்தோமா என்று சோதித்து சான்றிதழ் வழங்குவது ஆகிய அனைத்து பொறுப்புகளும் நம்மையே சார்ந்தது. நமக்கு கொடுக்கபட்ட எந்த வேலையையும் இது என் வேலை என்று மனதார ஏற்றுக்கொள்ளாமல் செய்ய ஆரம்பிக்க கூடாது.

சில சமயங்களில் நமது முழுதிருப்தியுடன் வேலை செய்திருந்தாலும் அதன் பலன் எதிர்பார்த்த விதமாக அமையாது. நமது மேலாளர் மற்றவர்கள் செய்த தவறுக்கு நம்மை காரணமாக கருதி கண்டிக்கலாம். எது எப்படியானாலும் கடைசி தீர்ப்பு சொல்ல வேண்டியது நமது மனசாட்சிமட்டுமே. நம் மனசாட்சிப்படி நாம் சரியாக செய்தால் மட்டும் போதும். உலகமே அதை தவறு என்று சொன்னாலும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை

ஆனால் யார் நம் வேலையில் தவறு கண்டுபிடித்தாலும் அல்லது இன்னும் சரியாக செய்ய ஆலோசனை சொன்னாலும் அதை ஆர்வத்துடன் கேட்க வேண்டும். சென்றதை பற்றிய குற்ற உணர்வு மட்டும்தான் தவிர்க்கபட வேண்டியதே தவிர வருவதை சரியாக செய்ய நமது தகுதியை உயர்த்திகொள்வது மிக அவசியம். எனவே எப்பொழுதும் இப்பொழுது செய்வதை விட இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்க வேண்டும்

நமது வாழ்வின் தரத்துக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்ற பொறுப்புணர்வுடன், செய்யும் செயல்களை செவ்வனே செய்வது முக்தியை நோக்கி நாம் எடுக்கும் முதல் படி.


பயிற்சிக்காக :

1.வேலையை சரியாக செய்வது என்றால் என்ன?

2.உலகின் தன்மை பற்றி கூறப்பட்ட ஐந்து உண்மைகள் யாவை?

3.செய்வதை சிறப்பாக செய்யும் விதம் பற்றி கூறப்பட்ட நான்கு படிகள் யாவை?

4.செயல் பட்டியல் எழுதும் விதம் குறித்து கூறபட்ட ஆறு கருத்துகள் யாவை?

5.வேலையை தவறாக செய்தால் குற்ற உணர்வு அவசியமா?

சுயசிந்தனைக்காக :

1. யார் எப்படிபோனால் நமக்கென்ன என்று செயல் பட்டியலில் உள்ள வேலைகளை மட்டும் செய்வதுதான் வேலையை சிறப்பாக செய்வதா?

2.நோயாளி மரணமடைந்து விட்டால் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தது என்று தானே அர்த்தம்?