Thursday, March 25, 2010

Lesson 107: Self is higher than anything else ( பிரம்ம சூத்திரம் 3.3.14-15 )

பாடம் 107: உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு
பாடல் 373-374 (III.3.14-15)

கதோபநிஷத மந்திரம் ஒன்று தன்னை சரியாக அறிந்து கொண்டவன் மரணத்தை வெல்லுவான் என்று கூறுகிறது. நம்முடைய உடைமைகளை விவரித்து அவற்றின் தரத்திற்கு நாம் மட்டும்தான் பொறுப்பு என்ற வேதத்தின் கருத்தை விளக்குவதன் மூலம் நமது பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை இந்த பாடம் அறிவுறுத்துகிறது.

நம்முடைய உடைமைகள் யாவை?

உடல், மனம், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், சேர்த்து வைத்துள்ள பாவ புண்ணியங்கள், பல பிறவிகளில் உழைத்து அதன் மூலம் சேர்த்த அறியும் திறன், விருப்பு வெறுப்புகள், பிறந்தது முதல் செயல்களை செய்து சேர்த்அறிவு மற்றும் செயல்படும் திறன் உள்ளிட்ட நமது ஆளுமை (personality) ஆகியவை நம்முடைய நிரந்தர உடைமைகள். இவையனைத்தும் பிறவிகள்தோறும் நம்முடன் வரும். இவற்றை மூலதனமாக வைத்து இந்த பிறவியில் நாம் சம்பாதித்த பணம், பொருள், புகழ் போன்றவை நமது தற்கால உடைமைகள்.

நம் உடல் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வளர்ந்து மூப்படையும் தன்மையுடையது என்பதால் உடலைச்சார்ந்துள்ள வலிமை, திறமை ஆகியவை வயதானவுடன் குறையத்துவங்கும். எனவே மரணத்தில் இவ்வுடலை விட்டுவிட்டு அடுத்த பிறவிக்கு உண்டான உடலை நமது புண்ணியத்தின் அடிப்படையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த பேற்றோருக்கு பிறப்போம் என்பதும் எவ்வளவு ஆரோக்கியத்துடனும் பிறப்போம் என்பதும் நமது பாவ புண்ணியத்தால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. விருப்பு வெறுப்புகளுடன் கூடிய மனம், அறிவுடன் கூடிய புத்தி, திறனுடன் கூடிய ஐந்து புலன்கள் மற்றும் ஆற்றலுடன் கூடிய ஐந்து கரணங்கள் ஆகியவையும் பிறவிகள் தோறும் நம்முடன் வருகின்றன.

எனவே நமது நிரந்தர உடைமைகளின் தற்போதைய நிலைமைக்கு நாம் மட்டுமே காரணம். என் சக்கரை வியாதிக்கு அப்பாவும் முன்கோபத்திற்கு அம்மாவும் காரணம் என்று நம்முடைய நிலைக்கு யாரையும் பழிசொல்ல கூடாது. எது எப்படி இருக்கிறதோ அதற்கு நாம் மட்டுமே காரணம்.

நமது தற்கால உடைமைகள் அனைத்தும் இந்த பிறவியில் நமது செயல்பாட்டால் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. இவற்றிற்கும் வேறு யாரும் காரணமல்ல.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 1 : பெற்றோர்கள் காரணமல்ல

நம் பெற்றோரை தேர்ந்தெடுத்ததே நாம்தான் என்பதால் நம் உடலில் உள்ள நிறை குறைகளுக்கு மரபணுக்கள் (genetics) காரணம் என்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் செய்த பாவ புண்ணியங்களுக்கு பொறுப்பேற்று கொண்டு இந்த பிறவியில் முடிந்த அளவு தர்மகாரியங்கள் செய்து மற்றவர்களை சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 2 : வளர்க்கப்பட்ட விதம் காரணமல்ல

பெற்றோர்கள் நமது ஆளுமைக்கு காரணம் என்றால் நம்முடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பதற்கு காரணம் என்ன? அதே பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடையே இருக்கும் ஏறுக்கு மாறான முரண்பாடுகள் நாம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நமது பெற்றோர்கள் துளியளவு கூட பொறுப்பல்ல என்பதை தெள்ளத்தெளிவாக காண்பிக்கின்றன.

சிறு வயதில் என் தந்தை கூறிய இந்த வாசகம்தான் என் வெற்றிக்கு காரணம் என்று வாழ்வில் வெற்றியடைந்த ஒரு சிலர் கூறுவதை கேட்டிருக்கலாம். இது முற்றிலும் தவறான  கருத்து. ஒரு தந்தையோ தாயோ தம் மக்களின் நல்வாழ்விற்காக ஆயிரம் உபதேசங்கள் செய்திருப்பார்கள். அவற்றில் ஏதோ ஒன்றிரண்டை மனதில் பதிய வைத்து பின்பற்ற முடிவு செய்தது நாம்தான். எனவே பெற்றோர்கள் வளர்ப்பு எப்படியிருந்தாலும் அது ஒருவரது வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 3 : ஆசிரியர் காரணமல்ல

உலகத்தில் உள்ள எந்த ஆசிரியருக்கும் அறிவை வழங்கும் திறன் கிடையவே கிடையாது. ஒரு வேளை ஒரு ஆசிரியருக்கு இந்த திறமை இருக்குமேயானால் அவர் விரும்பியவர்களுக்கெல்லாம் அவரால் அறிவை கொடுக்க முடிந்திருக்கும். நாற்பது மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் பாடம் நடத்த மட்டுமே அவரால் முடியும். அவரின் வார்த்தைகளை அறிவாக மாற்றும் திறன் மாணவர்களுக்கு மட்டும்தான் உண்டு. படகிற்கு யாரையும் கரைசேர்க்கும் திறமை கிடையாது. படகை பயன் படுத்தி யார் வேண்டுமானாலும் நதியை கடக்கலாம். அது போல ஆசிரியரை பயன்படுத்தி அறிவை அடைவது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

இந்த ஆசிரியர் மிகத்திறமையாக சொல்லிக்கொடுக்கிறார் என்று கூட சொல்ல முடியாது. எப்படி சொல்லிக்கொடுத்தால் புரியும் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபடும். ஆசிரியரும் ஒரு மனிதர்தான். அவர் தனக்கு தெரிந்த வகையில் சொல்லிக்கொடுக்கிறார். அந்த முறை ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு ஏற்புடைய விதத்தில் இருந்தால் அவன் புரிந்து கொள்கிறான். எனவே  நன்றாக சொல்லிக்கொடுப்பது என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது புரிந்து கொள்ளும் மாணவன் மட்டுமே.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 4 : நண்பர்கள் காரணமல்ல

உன் நண்பர்களை பற்றிச்சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன்என்ற கூற்று மிகவும் உண்மை. ஏனெனில் நமது நண்பர்களை நாம்தான் தீர்மானிக்கிறோம். இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல் நாம் இப்படியிருப்பதால் இது போன்ற நண்பர்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறார்களே தவிர நண்பர்கள் நம் நிலமைக்கு காரணம் அல்ல. நமது விருப்பு வெறுப்புகள் நம்முடன் பிறந்தவை. எனவே நமக்கு பிடித்தவர்களை நண்பர்களாக நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து வளர்த்து கொண்ட பழக்கவழக்கங்கள் நண்பர்களை சார்ந்து இருப்பதில்லை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 5 : பெரியவர்கள் காரணமல்ல

அலுவலகத்தில் உடன் உழைப்பவர்களோ அல்லது நமது முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களோ நமது நிலைக்கு காரணம் அல்ல. நமது திறமை மற்றும் நமது பாவ புண்ணியங்கள் மட்டுமே நமது பொருளாதார வளர்ச்சிக்கு காரணம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 6 : கிரகங்கள் காரணமல்ல

நான் இப்பொழுது கஷ்டபடுவதற்கு சனி கிரகம் காரணம் என்றோ பண வரவுக்கு குரு பெயர்ச்சி காரணம் என்றோ கூறுவது முட்டாள்தனம். ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனமாகும் என்றால் சூரியன் எப்பொழுது மறையும் என்பதை கடிகாரம் முடிவுசெய்வதாக அர்த்தம் செய்து கொள்ள கூடாது. ஜாதகம், ஜோசியம், எண் சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவை அனைத்தும் கடிகாரத்தைப்போல நமக்கு நன்மை தீமைகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் கருவிகளே தவிர நமது நிலையை தீர்மானிப்பவை அல்ல. நமக்கு நல்ல காலமா அல்லது கெட்டகாலமா என்பதை முடிவு செய்வது நமது செயல்களால் விளைந்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.

ஜோதிடர் நமக்கு கஷ்டகாலம் என்பதை ஜாதகத்தை பார்த்து சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கஷ்டகாலம் என்பதால்தான் நாம் அவரிடம் செல்கிறோம். அவர் நமது கஷ்டகாலத்தை நீக்குவதற்காக மூன்று சினிமா பார், ஊட்டிக்கு உல்லாச பயணம் சென்று வா என்பது போன்ற இன்பகரமான பரிகாரங்களை சொல்வதில்லை. ஏற்கனவே படும் கஷ்டம் போதாதென்று அவர் கூறும் பரிகாரங்களை வேறு செய்யவேண்டும். மூன்று நாட்களில் ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது மருத்துவர் கொடுத்த மருந்தினாலா அல்லது அதை சாப்பிடாமல் விட்டிருந்தாலும் சரியாகியிருக்குமா என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க முடியாதோ அது போல நம் கஷ்டகாலம் முடிந்ததற்கு பரிகாரம் செய்ததுதான் காரணம் என்று  சொல்லவே முடியாது. பரிகாரம் செய்ததே நமது கஷ்டகாலத்தின் ஒரு பகுதிதான்.  எனவே நமது கஷ்டகாலத்துக்கு கிரகங்களை குறை சொல்வது பொறுப்பற்ற தன்மை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 7 : கடவுள் காரணமல்ல

கடவுளுக்கு நமது கஷ்டத்தை போக்கும் சக்தி கிடையாது. சம்பளத்தை பட்டுவாடா செய்யும் கணக்கருக்கு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரம் கிடையாது. அது போல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றிக்கு சேரவேண்டிய பாவ புண்ணியங்களின் விளைவுகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் கடவுளுக்கு பாரபட்சத்துடன் செயல்படும் அதிகாரம் கிடையாது.

இதனால் கடவுளை பிரார்த்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூற முடியாது. நாம் அனுபவிக்க வேண்டிய துன்பம் எவ்விதத்திலும் குறையாவிட்டாலும் கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் முறையிடுவதால் நமது மனதின் பாரம் குறைந்து சிறிது அமைதி ஏற்பட்டு துன்பத்தை எதிர்நோக்கும் சக்தி அதிகரிக்கும்.

எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது துன்பங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும். இப்பொழுது நமக்கு நடப்பது நல்ல காலமா அல்லது கெட்ட காலமா என்பதை தீர்மானிப்பது நமது முந்தய செயல்கள். அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வில் முன்னேறுகிறோம் என்பது நமது மனத்திண்மையையும் திறமையையும் பொறுத்து உள்ளது. எனவே நமது தற்போதைய நிலைக்கு நாம் மட்டுமே காரணமே தவிர கடவுள் காரணமல்ல.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 8 : சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமல்ல

தற்செயலாக நடந்தது என்றோ விபத்து என்றோ நம் வாழ்வில் எதுவும் எப்பொழுதும் நடப்பதில்லை. அறியாமை காரணமாக நாம் இது போன்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்கிறோம். நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் நாம்தான். அதன் மூலம் அதிக அறிவை பெற்று வாழ்வில் முன்னேறுவதும் நாம்தான்.

நம் வாழ்வுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

முடிவுரை :

நம் வாழ்வுக்கு நாம் முழுப்பொறுப்பேற்று கொள்வது அவசியம்.  அதாவது நாம் இன்று இந்த நிலையில் இருக்க நூறு சதவிகிதம் நாம் மட்டுமே காரணம் என்றும் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடவுள் போன்றோரின் பங்கு பூஜ்யம் என்றும் உணர்ந்து கொண்டால்தான் இனி நம் வாழ்வு இன்பமாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாம் முறையாக செய்வோம். இல்லையெனில் கிரகங்களின் போக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்து காலத்தை விரயம் செய்து கொண்டு இருப்போம்.

தம் வாழ்வுக்கு முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்து உழைத்து தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டு தகுந்த ஆசிரியரின் துணையுடன் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை அறிந்து கொண்டு மரணத்தை வெல்லுவார்கள்.

பயிற்சிக்காக :

1. நம் உடைமைகள் எந்த அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

2.மற்றவர்கள் என் வாழ்வுக்கு பொறுப்பல்ல என்பதை விவரித்த எட்டு தலைப்புகள் யாவை?

3. நம் உடைமைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1.மரணத்தை எப்படி வெல்ல முடியும்?

2.என்றும் இன்பமாக இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த பகுதியில் கொடுக்கபட்ட பாடங்களில் இருந்து ஒரு பட்டியல் தயாரிக்கவும்.