பாடம் 103: வேலைகள் வேறுபட்டவை
பாடல் 365-367 (III.3.6-8)
அடிப்படையில் அனைத்து வேலைகளும் ஒன்றே என்றாலும் பலவிதமான மனிதர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வேலையை தேர்ந்தெடுக்க உதவி செய்யும் நோக்கில் வேலைகளிடையே உள்ள வேறுபாடுகளை இந்த பாடம் ஆராய்கிறது.
அனைத்து விமானங்களும் பறப்பதற்கு உதவுகின்றன என்ற அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு மற்றும் வருகை என்ற அட்டவணையை பார்க்கும்பொழுது எண்ணிக்கையிலடங்கா வெவ்வேறு விமான சேவைகள் இருப்பது தெரியும். ஒவ்வொரு பயணியும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல விரும்புகிறார் என்ற நோக்கில் விமானங்கள் வேறு பட்டவை. அதேபோல் அனைத்து வேலைகளும் அனைத்து மக்களின் ஒரே குறிக்கோளான முக்தியை அடைய உதவும் படிகட்டுகளாய் உதவுகின்றன என்றாலும் மக்களின் தரத்திற்கேற்ப வேலைகள் வேறுபடுகின்றன.
தனித்திறமை
சுற்றியிருக்கும் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். மனிதர்கள் தொழிற்சாலையில் செய்யப்படும் பொருட்களைப்போல் எல்லாவிதத்திலும் ஒரே மாதிரியிருப்பதில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் நமது கல்வி நிறுவனங்களால் மாணவர்களை எல்லா விதத்திலும் ஒத்த மருத்துவர்களாகவோ பொறியாளர்களாகவோ மாற்ற முடியாது.
ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையை மேலும் வளர்த்துகொள்ள வாய்ப்புகளை கொடுக்கும் வேலையை செய்யவேண்டும்.
தனித்திறமையை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது. எந்த வேலையை விரும்பிச்செய்கிறோமோ, எந்த வேலையை நன்றாக செய்வதற்கு மற்றவர்களை விட நமக்கு எளிதாக இருக்கிறதோ அதில் நம் தனித்திறமையை காணலாம்.
எந்த வேலை அதிகம் பணம் சம்பாதிக்க உதவும் என்ற பார்வையில் வேலையை தேர்ந்தெடுக்காமல் எந்த வேலையில் நமது தனிதிறமையை மேலும் வளர்க்க முடியும் என்ற அடிப்படையில் சரியான வேலையை தெரிந்தெடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் அதிக சம்பளம் கிடைத்தாலும் பிடிக்காத வேலையில் வளர்ச்சியிருக்காது. பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தால் நம் தனித்திறமை மூலம் மற்றவர்களை விட அந்த வேலையை சிறப்பாக செய்பவோம். எனவே விரைவில் பதவி உயர்வு பெற்று நாளடைவில் வேறு எந்த வேலையிலும் கிடைக்க முடியாத அளவு பணமும் புகழும் நம்மை வந்து சேர வாய்ப்பு உள்ளது.
எனவே ஒவ்வொருவரது தனிபட்ட மனப்பாங்கு (attitude) மற்றும் தனித்திறமைக்கு (core competence) ஏற்ற வேலை என்ற நோக்கில் வேலைகள் வேறுபடுகின்றன.
தகுதி
அறிவுத்திறன் (intelligence) மற்றும் செயல்பாட்டுதிறன் (capability) ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபடும். எல்லோரும் தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும். செய்யும் வேலை மிகவும் சுலபமாகவோ அல்லது மிகவும் கஷ்டமாகவோ இருக்க கூடாது. இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சித்தால் செய்துவிடலாம் என்ற நிலை தொடர்ந்து இருக்க வேண்டும். வேலை செய்ய செய்ய நமது தகுதி அதிகமாகும். தகுதி அதிகமானவுடன் அதற்கேற்ற வேலையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடலை கட்டுகோப்புடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து எடை தூக்கும் பயிற்சி செய்யும்பொழுது நமது சக்திக்கேற்றவாறு எடையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இரண்டு கிலோ எடையை எளிதாக தூக்க முடிகிறது என்று அதற்குமேல் எடை தூக்கிபயிலாவிட்டால் பயிற்சிக்கூடத்தில் சேர்ந்ததில் பயன் இல்லை.
வேலை செய்யும் இடம் மனதை செம்மையாக்கும் மனப்பயிற்சிக்கூடம். வேலை செய்யாமல் சோம்பித்திருந்தால் மனம் தன் ஆரோக்கியத்தை இழந்து விடும். எனவே வேலை செய்வது அவசியம். இரண்டு கிலோ எடையை தினமும் தூக்குவது போல் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாமல் செய்தவேலையையே செய்வதில் எவ்வித பயனும் இல்லை. முடிந்தவரை அதிகபொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வேலையை திறம்பட செய்ய முயல வேண்டும்.
தரம்
பணக்காரர்கள் எல்லாம் இன்பமாக இருப்பதில்லை. ஏழைகள் கூட இன்பமாக இருக்கிறார்கள். இதிலிருந்து பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நிரூபணம் ஆகிறது. பணம் இருந்தால் இன்பமாக இருக்க முடியாது அல்லது பணம் இருந்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்பது போன்ற கருத்துக்கள் தவறு என்றும் தெளிவாக தெரிகிறது.
பணம் வாழ்வின் பொருளாதார தரத்தை அதிகபடுத்தும். நல்ல வேலை செய்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். கார், பங்களா என்று சொத்து சேர்த்து வசதியாக வாழலாம். அவ்வப்பொழுது இன்பமாகவும் நினைத்தது நடக்காதபோது வருத்தப்பட்டுக்கொண்டும் வாழலாம். எப்பொழுதும் இன்பமாக வாழவேண்டுமென்றால் ஒரு குருவிடம் சரணடைந்து வேதத்தை முறையாக படிப்பதை தவிர வேறு வழியில்லை.
வாழ்வில் வசதி வேண்டுமா அல்லது என்றும் தொடரும் இன்பம் வேண்டுமா என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் புத்திசாலிகளுக்கு கிடையாது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று அவர்கள் பணம் சம்பாதித்துகொண்டே கர்மயோகம் செய்து தங்களை வேதம் படிக்க தயார் செய்து கொள்வார்கள். முதலில் போதுமான பணம் சம்பாதித்துவிட்டு பிறகு ஆன்மீக வாழ்வில் இறங்குவோம் என்றோ வேதத்தை படித்து முடித்துவிட்டு பின் பொருள் சம்பாதிக்க தொடங்குவோம் என்றோ முடிவுசெய்வது தவறு.
வேதம் படிப்பது ஒரு முழுநேர வேலையல்ல. உலக சுகங்களை உல்லாசமாக அனுபவித்துக்கொண்டு சொந்த வீட்டின் வசதிகளுடன் வேதம் படிப்பதற்காக ஒரு சில மணிநேரம் ஒதுக்கினால் போதும். எனவே வசதி மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் நமது புத்தி கூர்மையால் ஒரேநேரத்தில் அடையலாம்.
பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு வேதம் படிக்க நேரம் ஒதுக்காதவர்கள் தங்களது குறிக்கோளான முக்தியை அடைய மாட்டார்கள். வேதம் படிப்பதற்காக வேலை எதுவும் செய்யாதவர்கள் வறுமையில் வாடுவார்கள்.
உணவு, உடை, உறையுள் போன்ற வாழ்வின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக கிடைத்த வேலையை செய்யும் கட்டாயம் பலருக்கு இருக்கலாம். அவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்து கொள்வதற்காகவும் தகுதிக்கு ஏற்ற வேலை செய்வதற்காகவும் தகுந்த பொழுதுபோக்கையோ அல்லது பகுதிநேர அடிப்படையில் பிடித்த வேலையையோ செய்ய முயல வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் நிச்சயம் தங்கள் சுயமுன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மேற்படிப்பு படிப்பதோ பகுதி நேர வேலை செய்வதோ அவசியம். சித்திரம் வரைதல், கைவேலை செய்தல், அக்கம்பக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல், கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ளுதல், சொல்லிக்கொடுத்தல் போன்ற உபயோகமான வேலைகள் மூலம் மனதை பண்படுத்த வேண்டும்.
உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சமசீராக அமைவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் செய்யும் வேலைகளிலிருந்து பணம் சம்பாதிப்பதைதவிர ஆத்ம திருப்தியும் கிடைக்க வேண்டும். ஆத்ம திருப்தி என்றால் தனித்திறமையை வளர்த்துக்கொள்தல் மற்றும் தகுதிக்கு ஏற்ற வேலை செய்தல் என்பது பொருள்.
எனவே தனித்திறமை, தகுதி மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுவாக வேறுபடுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமக்கேற்ற வேலையை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
முடிவுரை :
தொழில் நுட்ப வசதிகளும் பொருளாதார வளர்ச்சிகளும் பற்பல வேலைகளை செய்யும் வாய்ப்பை மக்களுக்கு தருகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
வாழ்வில் முன்னேற்றம் என்பது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதின் அடிப்படையில் கணக்கிடப்படுவதல்ல. மனம் எவ்வளவு செம்மையடைகிறது என்பதை பொறுத்தே வாழ்வில் உண்மையான முன்னேற்றம் அமையும். குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே மனதை செம்மையாக்க முடியும். மனது செம்மையானால் பணம் சம்பாதிப்பது எளிது. இல்லையென்றால் பணத்தை சரியாக செலவு செய்யக்கூட தெரியாது.
அனைத்து வேலைகளின் குறிக்கோள் மனதை செம்மைபடுத்தி அதன் மூலம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திகொள்வதுடன் நிலையான அமைதியை பெறுவதுதான். வெறும் பணம் மாத்திரம் இந்த அமைதியையும் நிம்மதியையும் நமக்கு தராது. எனவே முடிந்த வரை வெவ்வேறு வேலைகள் செய்து நமது மனதை தொடர்ந்து செம்மை படுத்திக்கொள்ள வேண்டும்.
செய்யும் வேலையை ஆர்வத்துடன் செய்தல், தனது முழுத்திறமையையும் உபயோகித்து சிறப்பாக செய்தல், வேலையில் மனம் ஒன்றியிருத்தல், புத்தியின் கூர்மையை அதிகபடுத்தும் வகையில் அதிகபொறுப்புகளை ஏற்று கொள்ளுதல் ஆகியவை மனதை செம்மை படுத்தும் வழிகளாகும். அதே சமயத்தில் இது போன்ற முயற்சிகள் அதிக பணமும் புகழும் பெற்றுத்தரும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.
மனம் செம்மையானால் பணம் சம்பாதிக்க செய்யும் வேலையை கர்மயோகமாக மாற்றி மனப்பக்குவத்தை பெற முடியும். மனப்பக்குவமும் புத்திக்கூர்மையும் நம்மை ஆன்மீக பாதையில் வேகமாக அழைத்துச்செல்ல வல்லவை. எனவே விரைவில் பரமனை அறிந்து குறையில்லாத இன்பத்தை நாம் அடைவோம்.
அதிக பணம் சம்பாதிப்பதுடன் எப்பொழுதும் நிம்மதியாக இருக்கவும் நாம் கற்றுக்கோண்டால் வாழ்வு இனிமையாக அமையும்.
பயிற்சிக்காக :
1.வேலைகள் ஒன்றுபட்டவையா வேறுபட்டவையா?
2.நம்முடைய தனித்திறமையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?
3.தனித்திறமையை வளர்த்துக்கொள்வதால் என்ன லாபம்?
4.தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுப்பதன் அவசியமென்ன?
5.வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வது எப்படி?
சுயசிந்தனைக்காக :
1. முனிவர்கள் முற்றும் துறக்கவேண்டிய காரணம் என்ன?
2.வேதம் படிப்பது மிக எளிதான காரியமா?
3.எந்த வேலையும் செய்யாமல் முழுநேரத்தையும் வேதம் பயில்வதன் மூலம் குறைவில்லாத ஆனந்தத்தை அடையமுடியாதா?
4.நிறைய பணம் சம்பாதித்து கோவிலில் நடக்கும் நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்து புண்ணியம் சம்பாதிப்பதன் மூலம் முக்தியடைய முடியாதா?
5.முக்தியடைய வேலை செய்வது முக்கியமா கடவுள் பக்தி முக்கியமா?