Thursday, March 11, 2010

Lesson 101: Karma Yoga ( பிரம்ம சூத்திரம் 3.3.1-4 )

பாடம் 101: கருமமும் கர்மயோகமும்
பாடல் 360-363 (III.3.1-4)

செயல், கருமம், கர்மயோகம் ஆகியவற்றின் விளக்கங்களை கொடுப்பதுடன் நமது வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைய முதல் படியாக நாம் செய்யவேண்டியது என்ன என்ற அறிவுரையையும் இந்த பாடம் வழங்குகிறது.

செயல்

உயிரினங்களும் ஜடப்பொருள்களும் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது அதன் இயற்கை தன்மை. இந்த மாற்றங்களுக்கு ஒரு நோக்கத்தை கற்பிக்கும்பொழுது அவை செயல்கள்ஆகின்றன.

பூமி தன் அச்சில் சுழலுவதால் இரவும் பகலும் ஏற்படுகின்றனஎன்று இயற்கையான ஒரு நிகழ்வின் காரண காரியத்தை ஆராயும்பொழுது அது ஒரு செயலாக காட்சியளிக்கிறது.

இது போல் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களில் சிலவற்றை செயல்களாக நாம் கருதுகிறோம். எனவேசெயல்என்பது மனிதனின் பார்வையில் மட்டும் தெரியும் இயற்கையின் மாற்றங்கள்.

கருமம்

பாவ புண்ணியங்களை கொடுக்கும் செயல்களுக்கு கருமம் என்று பெயர்.

புலி மானை கொன்று தின்றது. இதை ஒரு செயல் என்று நாம் நினைத்தாலும் இது கருமம் ஆகாது. ஏனெனில் மனிதனால் மட்டுமே பாவ புண்ணியங்களை கொடுக்கும் செயல்களை செய்ய முடியும். மனிதன் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் துணையுடன் செய்யும் அனைத்து செயல்களும் கருமங்கள் ஆகும்.

மனம்: ஒருவரை மனதுக்குள் திட்டுவது, காழ்ப்புணர்ச்சியுடன் பொறாமை கொள்வது, அவர் அழிந்து போகவேண்டும் என எண்ணுவது போன்றவை பாவத்தை கொடுக்ககூடிய கர்மங்கள். எல்லோரும் சுகமாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது புண்ணியத்தை கொடுக்கும் கருமம்.

மொழி: மற்றவர்களது மனம் நோகும்படி பேசுவது பாவத்தை கொடுக்கும். கேட்பது, படிப்பது, எழுதுவது ஆகியவை நமது எண்ணங்களுக்கு தூண்டுகோலாய் அமைவதால் தீயசெய்திகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும். நமக்கு சம்பந்தம் இல்லாத இருவர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டிக்கொள்வதை நாம் கேட்பதும், தொலைகாட்சி தொடர்களில் வரும் மாமியார் மருமகள் சண்டைகளை பார்ப்பதும் தீய கருமங்களை  ஊக்குவிக்கும் செயல்களாகும்.

மெய்: உடலால் செய்யப்படும் அனைத்து செயல்களும் மற்றவர்களுக்கு துன்பம் தருகிறதா அல்லது இன்பம் தருகிறதா என்பதை பொறுத்து நமக்கு பாவ புண்ணியங்களை தரும். ஆழ்ந்த உறக்கம் தவிர மற்ற எல்லா செயல்களும் கருமங்கள் ஆகும். செய்யவேண்டிய ஒரு செயலை செய்யாமல் சும்மா இருப்பது கூட ஒரு கருமம் ஆகும்.

எல்லோரிடமும் அன்பாக பழகுதல், விலங்குகளையும் தாவரங்களையும் பாதுகாத்தல், இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழலை மதித்து நடத்தல், பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தல், விருந்தினர்களை உபசரித்தல், சக ஊழியர்கள், அண்டைவீட்டார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவுதல், ஏழைகளுக்கு உணவு தருதல் மற்றும் கல்வி கற்பித்தல், புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை ஆகியவற்றுடன் மற்றவர்களுக்கு இனிமையாக நடத்தல் ஆகியவை போன்ற மற்றவர்களுக்கு நன்மையும் இனிமையும் தரக்கூடிய அனைத்து செயல்களும் புண்ணியம் தரும் நல்ல கருமங்கள் ஆகும்.

திருடுவது, பொருள்களை கையாடுவது, வன்முறையில் ஈடுபடுவது, வன்முறையை தூண்டுவது அல்லது துணைபோவது, கொலை செய்வது, பொய் கூறுதல் மற்றும் உண்மை சொல்லாமல் இருத்தல் மூலம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது, மற்றவர்களுடைய தனிமையை அவர்களது விருப்பத்திற்கு மாறாக குலைப்பது, அளவுக்கு மீறி சொத்து சேர்ப்பது, ஏழைகளின் வறுமையை ஆதாயமாக கொண்டு அவர்களிடம் அதிகப்படி வேலை வாங்கி உரிய ஊதியம் கொடுக்காமல் இருத்தல், பெரியோர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை பாவம் தரும் கருமங்கள் ஆகும்.

வேலை

சுயநலத்திற்காக உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்படும் அனைத்து செயல்களும் வேலை என்ற தொகுப்பில் அடங்கும். பணம், பெயர், புகழ் போன்றவற்றை சம்பாதிப்பது, சமையல் செய்து வீட்டை நிர்வகிப்பது, தனது மன நிம்மதிக்காக சமூக சேவையில் ஈடுபடுவது ஆகியவை வேலைகள் ஆகும். பொழுதுபோக்கிற்காக செய்யப்படும் எந்த செயல்களும் வேலை ஆகாது.

எல்லா வேலைகளும் கருமங்கள்தான். ஆனால் எல்லா கருமங்களும் வேலைகள் அல்ல. பொதுவாக யாருக்காக வேலை செய்கிறோம் என்பது முக்கியம். ஆண்டவன் உலகத்தின் முதலாளி, அவனுக்கு நான் ஒரு தொழிலாளி என்பது இங்கு ஒத்துவராது. ஒரு செயலை வேலையாக மாற்ற யாருக்கு கீழ் வேலை செய்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு அவர்களது அனைத்து வாடிக்கையாளர்களும் எஜமானர்கள்.

செயலின் பயன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றால் அது வேலை ஆகாது. வேலை வழங்குனரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் மட்டுமே அது வேலை ஆகும். பிடிக்காத ஒரு சில செயல்களை கூட நம் வேலையின் ஒரு பகுதியாக செய்ய வேண்டியிருக்கலாம்.

வேலையில் விருப்பம்

வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை. எந்த ஒரு வேலையையும் ஏற்றுக்கொள்ளுமுன் அதை நாமாக விரும்பித்தான் ஏற்றுக்கொள்கிறோம் என்ற உள்ளத்தெளிவு முக்கியம். மற்றவர்களின் கட்டாயத்தின் பெயரில் ஒரு வேலையை செய்ய ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தால் முதலில் அந்த வேலையை மனப்பூர்வமாக விரும்ப கற்றுக்கொள்ளப்போகிறேன் என்ற உறுதியுடன்தான்  வேலை செய்யத்தொடங்க வேண்டும். சிலகாலம் முயற்சி செய்தபின்னும் அந்த வேலை மனதுக்கு பிடிக்காவிட்டால் வேலையிலிருந்து விலகிவிட வேண்டும். விருப்பமில்லாமல் தொடர்ந்து வேலை செய்வதை விட பிச்சையெடுத்து சாப்பிடுவது மேல்.

வேலை செய்வதன் அவசியம்

பொருளாதார அடிப்படையில் வாழ்வில் முன்னேற வேலை செய்வது அவசியம். மேலும் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் வேலை செய்ய வேண்டும். என்றும் குறையாத இன்பத்துடன் வாழ அவசியமான மனத்திண்மையையும் அறிவு கூர்மையையும் வேலை செய்வதன் மூலம் மட்டும்தான் பெற முடியும். எனவே சோம்பலை முற்றிலும் தவிர்த்து எறும்பு போல் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது அவசியம். ஓய்வுக்காக நண்பர்களுடன் அளவளாவுவது, புத்தகங்களை படிப்பது, தோட்ட வேலை செய்வது போன்ற உபயோகமான பொழுதுபோக்கு செயல்களை செய்யலாம்.

கர்மயோகம்

பலனை எதிர்பாராமல் செய்யப்படும் வேலைகள் கர்மயோகம் ஆகும். எல்லா கருமங்களையும் கர்மயோகமாக செய்யமுடியாது. செய்யும் வேலைகளை மட்டுமே வேதம் படித்த ஆசிரியரின் துணையுடன் கர்ம யோகமாக மாற்றமுடியும். முக்தியை அடைய கர்மயோகம் அவசியம். கர்மயோகம் செய்ய செய்யும் வேலையை மனதின் முழுஈடுபாட்டுடனும் முழுத்திறமையுடனும் செய்யவேண்டும்.

முடிவுரை :

செயல் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. அனைத்து செயல்களும் நமக்கு பாவ புண்ணியங்களை சேர்க்கும் கருமங்கள் ஆகும். மீண்டும் மீண்டும் பிறந்து கர்மபலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது. நல்ல காரியங்கள் மட்டும் செய்து எப்பொழுதும் சுகமாக வாழ்வேன் என்பதும் ஒரு செயலும் செய்யாமல் சேர்த்து வைத்துள்ள பாவபுண்ணியங்களை அனுபவித்து தீர்த்துவிடுவேன் என்பதும் நடைமுறையில் சாத்தியமில்லை. ஒருவருக்கு நாம் நல்லது செய்தால் அது மற்றொருவருக்கு மனவருத்தத்தை தருகிறது. இது போல் நாம் விரும்பாமலேயே நமது செயல்களினால் பலருக்கு துன்பம் தருகிறோம். எனவே புண்ணியம் சம்பாதிக்கும் பொழுது கூடவே பாவமும் ஏற்படுகிறது.

ஆகவேதான் அனைவரது வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வருகின்றன.

இன்பமாக இருக்கும் அதே வேளையில் எதிர்காலம் ஏதோ ஒரு துன்பத்தை கொடுக்கும் என்ற பயம் நம்மை தடையில்லாத நிம்மதியுடன் வாழவிடுவதில்லை.

எனவே கர்மபலன்களை முற்றிலும் தவிர்த்து முக்தியடைவதுதான் சிறந்த வழி.

முக்தியடைய வேதத்தை முறையாக ஆசிரியரிடம் பயின்று பரமன் யார் என்பதை ஐயமின்றி தெரிந்து கொள்ள வேண்டும். கற்பது புரிய வேண்டுமென்றால் நாம் சில காலம் கர்மயோகம் செய்து மனத்தூய்மையை பெற வேண்டும்.

கர்மயோகம் செய்ய ஏதாவது வேலை செய்வது அவசியம். பின் அதே வேலையை கர்மயோகமாக மாற்றி மனத்தூய்மையை அடையலாம்.

எனவே முதல் படியாக நாம் நமக்கு பிடித்த வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது கிடைத்த வேலையை விரும்பிச்செய்யவேண்டும். ஏற்றுக்கொண்ட வேலையை விருப்பு வெறுப்பின்றி திறம்பட செய்வதன் மூலம் நாளுக்கு நாள் நமது மன வளர்ச்சியை அதிகபடுத்தி கொள்ள வேண்டும்.

முடிந்தவரை நற்செயல்களை செய்து தீய செயல்களை தவிர்ப்பதன் மூலம் வாழ்வின் இறுதி குறிக்கோளை விரைவில் அடையும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. செயல் என்றால் என்ன?

2. கருமம் என்றால் என்ன?

3.கர்மயோகம் என்றால் என்ன?

4.கர்மயோகத்தின் அவசியம் என்ன?

5.வேலை என்றால் என்ன?

6.வேலை செய்வதன் அவசியம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1.வாழ்வின் இறுதிகுறிக்கோள் என்ன? அதை அடைந்த பின் வாழ்வு எப்படியிருக்கும்?

2.வேலையின் ஒருபகுதியாக அதர்மமான காரியத்தை செய்யலாமா?

3.நமக்கு பிடிக்காத செயல்களை செய்யும்படி கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வது?