Wednesday, May 29, 2013

Lesson 186: Nature of happiness of the liberated souls (Brahmasutra 4.4.4)

பாடம் 186: ஞானியின் இன்பங்கள்
பாடல்: 537 (IV.4.4)

ஞானிகள் மற்றவர்களைப்போல் உலக இன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்ற தவறான கருத்தை அகற்றும் வகையில் ஞானியின் இன்பங்களை இந்தப் பாடம் வர்ணனை செய்கிறது.

சாந்தோகிய மந்திரம் (8.12.3) ‘உடலை உதறிவிட்டு சுய உருவில் வெளிப்படும் ஞானி, சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும், பல பெண்கள், வாகனங்கள், உறவுகள் போன்ற இன்பங்களை அனுபவித்து இவ்வுலகில் வளைய வருவான்என்று கூறுகிறது.  மற்றவர்கள் கூட இதுபோல இன்பம் அனுபவிப்பார்கள் என்றாலும் அவர்களது வாழ்வில் துன்பமும் சம அளவில் கலந்து இருக்கும். இன்பம் உலகில் இருந்து கிடைப்பதாக அவர்கள் எண்ணுவதால் உலகில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அவர்கள் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படும்இன்பம் பற்றிய முழுமையான அறிவு ஞானிக்கு இருப்பதால் அவனால் மட்டுமே துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ முடியும்.

இன்பம் என்றால் என்ன?

சர்க்கரையின் இயல்பு இனிப்பு. அதுபோல பரமனின் இயல்பு இன்பம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரமனின் வெளிப்பாடு என்பதால் புவிமேல் இயற்கையினாலே இயங்கும் எழில்வளம் எல்லாம் இன்பமயம்.

சர்க்கரையை நாவினால் சுவைத்தால் மட்டுமே இனிப்பை அனுபவிக்க முடியும். அதுபோல பரமனின் இன்பத்தை அனுபவிக்க மனம் தேவை. மனதைநான்’, ‘எனதுஎன்ற அகங்காரம் ஆக்ரமித்துக்கொண்டு இருக்கும்போது இன்பத்தை அனுபவிக்க முடியாது. ‘இன்பமாக இருக்க எனக்கு இது வேண்டும்என்ற எண்ணம் நம்மை இன்பத்தை அனுபவிக்கவிடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். வேண்டிய பொருள் கிடைத்துவிட்டால் இந்த எண்ணம் மனதில் இருந்து மறைந்து பரமனின் இயல்பான இன்பம் மனதில் பிரதிபலிக்கும்

இன்பம் எனது இயல்புஎன்பதை அறிந்தவர்கள் ஞானிகள். அறியாதவர்கள் அஞ்ஞானிகள். இது மட்டுமே இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபாடு. ‘நான் பரமன்என்பதை ஞானிகள் அறிந்து இருந்தாலும் மற்ற மனிதர்களுடன் உறவாட நான் மனிதன்என்ற அகங்காரம் அவர்கள் மனதிலும் நிறைந்து இருக்கும். எனவே இந்த அகங்காரம் மறையும் நேரங்களில் மட்டுமே ஞானிகளாலும் இன்பத்தை அனுபவிக்க முடியும். மேலும், மனம் செயல்பட உலக உறவு அவசியம் என்பதால் இன்ப அனுபவத்தைப்பெற ஞானிகளுக்கு கூட உலக உறவு அவசியம்.

மற்றவர்கள் உலகில் இன்பத்தை தேடுவதால் அவர்கள் அவ்வப்போது இன்பத்தை அனுபவிப்பார்கள். நானே உலகம் என்பதை ஞானிகள் அறிந்து இருப்பதால் அவர்களால் எப்போது வேண்டுமானாலும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

பொருள்களில் இருந்து இன்பம் வருகிறது என்று மற்றவர்கள் நினைப்பதால் விரும்பிய பொருள்கள் கிடைக்காவிட்டால் அவர்கள் துன்பம் அடைவார்கள். தான் மட்டுமே இன்பத்தின் ஆதாரம் என்று அறிந்த ஞானிகளால் எந்த சூழ்நிலையிலும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

அழகிய ரோஜா மலர் செடியில் பூத்திருப்பதை பார்க்கும்பொழுது ஞானி அதை தன்னில் இருந்து வேறுபட்ட ஒரு பொருளாகப் பார்ப்பதில்லை. தன் மாயா சக்தி எப்படி மலராகக் காட்சி அளிக்கிறது என்ற எண்ணத்தில் மூழ்கி அவன் இன்பத்தை அனுபவிப்பான். மற்றவர்கள் அந்த மலரை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த ஆசை நிறைவேறினால் மட்டுமே இன்பம் அடைவார்கள்.

ஞானிக்கு தானே இந்த உலகம் என்ற அறிவு இருப்பதால் எதையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதில்லை.

புலன் இன்பம்

மனதால் உலகுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. எனவே உலகுடன் உறவாட புலன்கள் அவசியம். புலன்கள் பொருள்களுடன் தொடர்பு கொள்வதால் மட்டுமே மனதில் அனுபவங்கள் ஏற்படும். எனவே, நமது இயல்பான இன்பத்தை அனுபவிக்க புலன்களும் மனதும் அவசியம். இந்த விதி ஞானிகளுக்கும் பொருந்தும்.

ஆழ்ந்த உறக்கம், சமாதி ஆகிய இரண்டு நிலைகளில் மட்டுமே எந்தப் பொருள்களுடனும் தொடர்பு இல்லாமல் நம்மால் இன்பமாக இருக்கமுடியும். ஆனால் இந்த இரண்டு நிலைகளில் மனம் முழுவதுமாக மறைந்துவிடும் என்பதால் நாம் இன்பமாக இருந்தோம்என்பது பிறகுதான் நமக்குத் தெரியவரும்.

எனவே, இன்பத்தை அனுபவிக்க நமக்கு புலன், பொருள், மனம் ஆகிய மூன்று ஜடப்பொருள்கள் அவசியம்.

பல பாத்திரங்களும் பல தட்டுக்களும் இருந்தாலும் ஒரு சில தட்டுக்களை மட்டுமே ஒரு சில பாத்திரங்களுக்கு மூடியாக உபயோகிக்க முடியும். அதுபோல உலகில் பல்வேறு பொருள்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே ஒருவரின் புலன்களுக்கு உகந்ததாக இருக்கும். ஒரு சிலருக்கு உப்புமா பிடித்தமான உணவாகவும் வேறு சிலருக்கு அது பிடிக்காத பொருளாகவும் இருக்கலாம். பிடித்தபொருளை புலன் அனுபவிக்கும்பொழுது அகங்காரம் அகன்று மனம் நிம்மதியாக இருப்பதால் இன்ப அனுபவம் ஏற்படுகிறது.

எனவே, மனிதர்கள் தங்கள் ஐந்து புலன்கள் மூலம் உலகத்துடன் உறவாடும்பொழுது, புலன்களுக்கு பிடித்தமான வகையில்தான் பொருள்கள் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மனதில் இருக்கும். பிடித்ததை பெறவும் பிடிக்காததை தவிர்க்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவார்கள். இந்த முயற்சியில் அவர்களால் எப்போதும் வெற்றி அடைய முடியாது. வெற்றி தோல்விகள் மாறி மாறி ஏற்படும் வகையில்தான் உலகம் படைக்கப்பட்டு உள்ளது. எனவேதான் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படுகிறது.

இந்த உண்மையை ஞானிகள் உணர்ந்திருக்கும் காரணத்தால் தங்களுக்கு பிடித்த பொருள்களை அனுபவிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்காது. பிடிக்காத சூழ்நிலையில் வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டாலும்இது விரைவில் மாறிவிடும்என்ற அறிவு அவர்களிடம் இருப்பதால் அவர்களால் தொடர்ந்து இன்பமாக இருக்க முடியும்.

இன்பத்தின் வகைகள்

உலகத்தில் உள்ள பொருள்களை ஐந்து புலன்கள் மூலம் அனுபவிக்கும்பொழுது மனதில் தோன்றும் இன்ப அனுபவத்தில், வகைகள் ஏதும் இல்லை. இளமையில் அனுபவிக்கும் இன்பம் முதுமையில் அனுபவிக்கும் இன்பத்தில் இருந்து வேறுபட்டதல்ல. அதேபோல் பொருள்களை திருடியவுடன் அந்தத் திருடன் அனுபவிக்கும் இன்பம், திருட்டுப்போன பொருள்களை திரும்பப் பெற்றவன் அனுபவிக்கும் இன்பத்திலிருந்து வேறுபட்டதல்ல. இனிமையான பாடலைக் கேட்கும்பொழுது ஏற்படும் இன்பம், நல்ல புத்தகத்தைப் படிக்கும்பொழுது ஏற்படும் இன்பத்தைப்போன்றதே. இந்த உலகில் கிடைக்கும் இன்பம் சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பத்தில் இருந்து வேறுபட்டதல்ல.

ந்த புலன் மூலமாக, யாருக்கு, எப்போது இன்பம் ஏற்படுகிறது என்பது போன்ற விவரங்களில் மாறுதல் இருக்கலாமே தவிரஇன்பம்என்பதில் எவ்வித வேறுபாடும் கிடையாது.


இன்பத்தின் அளவு

பரமனின் இயல்பான இன்பம் அளவு கடந்தது. ஆனால் மனதின் மூலம் நாம் பெறும் இன்ப அனுபவம் அளவுக்கு உட்பட்டது. விரும்பிய பொருள் இருக்கிறது என்ற அறிவு பிரியம் என்ற முதல் அளவு இன்பத்தைக் கொடுக்கும். அந்தப்பொருளை அடைந்தபின் மோதம் என்ற இரண்டாம் அளவு இன்பம் ஏற்படும். அந்தப்பொருளை அனுபவிக்கும்பொழுது பிரமோதம் என்ற மூன்றாம் அளவு இன்பம் பிறக்கும்.

இதுபோல் வெவ்வேறு அளவு இன்ப அனுபவம் ஏற்படுவதில் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

மனதில் தோன்றும் இன்ப அனுபவம் வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். மாறுவது மனம். எனவே, மனதில் எவ்வளவு காலம் இன்ப அனுபவம் தொடரும் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். வெகு காலம் முயன்று தனது மகள் திருமணத்தை நிச்சயம் செய்த தந்தை அதை நினைத்து பல நாட்கள் இன்பமாக இருப்பார். திருமணம் தொடர்பாக எந்த கஷ்டம் ஏற்பட்டாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் இன்பத்தில் மூழ்கி இருப்பார். அதுபோல ஞானிக்குநான் பரமன்என்ற அறிவு ஏற்பட்ட பின் அதை நினைத்து எப்போதும் இன்பமாக இருப்பான்.


இன்பமும் மனமும்

இன்பம் பரமனின் இயல்பு. அது மாறாதது. நிலையானது. என்றும் இருப்பது.

மனம் மாயை. தொடர்ந்து மாறுவது. விழித்த பின் தோன்றி ஆழ்ந்த உறக்கத்தில் மறைவது.

இன்ப அனுபவம் மனதில் ஏற்படுவது. இன்பம் நிலையானது என்றாலும் இன்ப அனுபவம் நிலையானதாக இருக்க முடியாது. ஏனெனில் மனம் தொடர்ந்து மாறும் இயல்பை உடையது. தொடர்ந்து எரியும் நெருப்புச் சுடர்தான் விளக்கு. தொடர்ந்து மாறும் எண்ணங்கள்தான் மனம். அலைபாயாமல் ஒரே எண்ணத்தில் ஆழ்ந்து இருக்கும்போது இன்ப அனுபவம் ஏற்படுகிறது. ஆனால் மாயையான உலகம் மாறிக்கொண்டே இருப்பதால் ஒரே எண்ணத்தில் வெகுநேரம் மூழ்கி இருக்க முடியாது.

உலகத்தின் இயக்கம் இன்பத்தை ஆதாரமாகக் கொண்டது
. மனதின் நிலை உலகின் மாற்றத்தைப் பொருத்தது. சூழ்நிலைக்கு ஏற்ப மனம் மாறிக்கொண்டே இருக்கும்.

மனம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பவன் அஞ்ஞானி. இந்த எதிர்பார்ப்பு எப்போதும் நிறைவேறாது. எனவேதான் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படுகிறது. மாறுவது மனம் என்பதை அறிந்த ஞானி, தான் இன்ப வடிவானவன் என்ற அறிவில் எப்போதும் நிலைத்து நிற்பான். இன்ப அனுபவங்கள் ஒரு சில நிமிடங்களில் மாறிவிடும். அதேபோல் துன்ப அனுபவங்களும் விரைவில் மாறிவிடும். மாறும் மனம் நான் அல்ல என்பதை அறிந்த ஞானியால் மட்டுமே மாற்றங்களை முழுவதுமாக இரசிக்க முடியும். இதைத்தான்  உலக இன்பங்களை அனுபவித்து இவ்வுலகில் வளைய வருவான்என்று சாந்தோகிய உபநிஷதம் குறிப்பிடுகிறது. மற்றவர்கள் இன்ப அனுபவங்கள் மாறிவிட்டதை நினைத்து துக்கப் படுவார்கள். ஞானிக்கு இந்த துக்கம் அறவே கிடையாது.

மனிதன் இன்பமாக இருக்கும் வேளைகளில் மட்டும்தான் அவனால் புலன் இன்பங்களை அனுபவிக்க முடியும். துன்பத்தில் மூழ்கி இருக்கும்போது தேன் கூட இனிக்காது. ஆனால் ஞானி தான் இன்ப உருவானவன் என்பதை அறிந்து இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அவனால் உலக இன்பங்களை அனுபவிக்க முடியும்.

தானே உலகம் என்ற அறிவு ஏற்பட்டவுடன் உலக இன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பது ஞானியின் இயல்பாக ஆகிவிடும்.


இன்பத்தின் ஊற்று

இன்பம் இருப்பது பரமனிடம் மட்டுமே. பிரபஞ்சம் இந்த இன்பத்தின் வெளிப்பாடு. எனவே, யாரும் துன்பப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த உண்மையை அகங்காரம் மக்களிடம் இருந்து மறைத்துவிடுகிறது. பௌர்ணமி அன்று முழுநிலவாக இருந்தது அமாவாசை அன்று முழுவதும் மறைவது போல விழித்து இருக்கும் நேரங்களில் மனதை முழுதாக ஆக்ரமிக்கும் அகங்காராம் ஆழ்ந்த உறக்கத்தில் அழிந்து விடுகிறது. எனவேதான் ஆழ்ந்த உறக்கத்தில் அனைவரும் ஆனந்தமாக இருக்கின்றனர்.

பரமனின் இன்பம் மனதில் பிரதிபலிக்கும்பொழுது நாம் இன்ப அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இந்தப் பிரதிபலிப்பை பெரும்பாலான நேரங்களில் அகங்காரம் மறைத்துவிடுகிறது. புலன் இன்பங்களில் மூழ்கி தன்னை மறந்த நிலையில் நம்மால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடிகிறது.

உலகே மாயை என்பதால் அகங்காரம் மறைந்து இன்ப அனுபவம் ஏற்பட மற்றவர்களைப்போல் முயற்சி செய்யவேண்டிய அவசியம் ஞானிக்கு இல்லை.  இரண்டு மொழிகளை நன்றாக அறிந்தவன், கேட்பவருக்கு புரியும் மொழியில் சரளமாக பேச தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதுபோலநான் பரமன்’, ‘நான் மனிதன்ஆகிய இரண்டு எண்ணங்களை சரியாக அறிந்த ஞானி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதில் சிரமப்படுவதில்லை. ‘என்னால் அதைச் செய்ய முடியும்என்று அவன் தயங்காமல் கூறினாலும்யாரும் எதையும் செய்வதில்லைஎன்ற அறிவு அவன் மனதில் இருந்து மறைவதில்லை.

வெய்யில் நாளில் ஆற்றுத் தண்ணீரில் நிற்பவனின் மேல் உடம்பு சுடும் அதே வேளையில் கீழ்பகுதி குளிர்ந்து இருப்பது போல உலகில் ஏற்படும் துயரங்களை அனுபவிக்கும் அதே வேளையில் ஞானி இன்பமாக இருப்பான். தான் எதனுடனும் சம்பந்தப்படாமல் இன்பமயமாக இருக்கும் பரமன் என்பதை அவன் உணர்வதுடன் தனது உடலும் மனமும் உலக நிகழ்வுகளுக்கு ஏற்ப மாற்றங்கள் அடையும் என்பதையும் அறிவான். எனவே வாழ்வில் ஏற்படும் இன்ப துன்ப அனுபவங்களை கனவில் ஏற்படும் அனுபவங்களைப்போல தொடர்ந்து இன்பமாக அனுபவிப்பான்.

முடிவுரை :

வெளியில் இருக்கும் பொருள்கள், உள்ளே இருக்கும் மனம் ஆகிய இரண்டும் தனது சுய உருவான இன்பத்தை அனுபவிப்பதற்கான சாதனங்கள் என்பதை ஞானி அறிவான். அவன் இன்பத்திற்காக பொருள்களை நாடுவதில்லை; மனதையும் செம்மைப்படுத்த முயற்சி செய்வதில்லை. கிடைக்கும் பொருள்களை அனுபவித்து அவன் எப்போதும் இன்பமாக இருப்பான்.

பற்றுடையோன் இன்பத்தை வெளி உலகில் தேடுவான். முக்திவிழைவோன் இன்பத்தை அகவுலகில் தேடுவான். ஞானி இன்பத்தைத் தேடுவதில்லை. தானே இன்ப வடிவானவன் என்ற அறிவில் அவன் நிலைத்து இருப்பதால் இன்பத்தைத் தேடும் அவசியம் அவனுக்கு இல்லை.

எதிர்காலத்தில் இன்பமாக இருக்கலாம் என்ற எண்ணமே தற்போது இருக்கும் இன்பத்தை அனுபவிக்கவிடாமல் நம்மைத் தடுக்கிறது. வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் இன்பம் நம்மை விட்டு அகலாது. உலகையும் மனதையும் வேறுமாதிரி மாற்றி அமைக்கவேண்டும் என்ற முயற்சியே துன்பத்திற்கு காரணம்.

மனதிற்குப் பிடித்த பாடலைக் கேட்கும்பொழுது தன்னை மறந்து இன்பமாக இருந்த அனுபவம் அனைவருக்கும் உண்டு. இதற்கு காரணம் பாடலோ மனமோ இல்லை. அகங்காரம் அடங்கிய நிலையில் இருப்பதுதான் இன்ப அனுபவத்துக்குக் காரணம். அகங்காரத்தை அடக்க உலகத்தை துறந்து தனித்து வாழவேண்டிய அவசியம் இல்லை. அல்லது தியானம் மூலம் மனதையே அழித்து சமாதி நிலைக்கு செல்லவேண்டிய கட்டாயமும் இல்லை. அகங்காரம் என்பது பொய்யானது என்ற அறிவு ஞானிக்கு இருப்பதால் அவனால் எப்பொழுதும் தன்னை மறந்து உலகோடு ஒன்றிவாழ்ந்து இன்பத்தை அனுபவிக்க முடியும்.

புலன்கள் மூலம் பொருள்களை அனுபவிக்காமல் நம்மால் ஒரு நொடி கூட வாழ முடியாது. அனுபவங்களை பிடித்தது பிடிக்காதது என்று வகைப்படுத்தாமல் அவற்றுடன் ஒன்றி வாழ்ந்தால் அனைத்து அனுபவங்களும் இன்பமாக மாறிவிடும்.

உலகம், ஐந்து புலன்கள் மூலம் பெறும் அனுபவம், அனுபவங்களைப் பற்றி மனதில் தோன்றும் வர்ணனை ஆகிய அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இவை எதனுடனும் சம்பந்தப்படாமல், இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவன் நான் என்ற அறிவு ஞானிக்கு இருப்பதால் அனைத்து மாற்றங்களுக்கு நடுவிலேயும் அவன் ஆனந்தமாக இருப்பான்.     

பயிற்சிக்காக :
1. இன்பத்தை அனுபவிப்பதில் ஞானி மற்றவர்களிடம் இருந்து எந்த வகையில் வேறுபடுகிறான்?
2. இன்ப அனுபவத்திற்குத் தேவையான மூன்று பொருள்கள் யாவை?
3. இன்பத்தின் வகைகள் எவை?
4. இன்பத்தின் அளவுகள் யாவை?
5. இன்பத்தின் ஊற்று எது?

சுயசிந்தனைக்காக :

1. இன்ப அனுபவத்திற்கும் இன்பத்திற்கும் என்ன வித்தியாசம்?
2. ‘சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். ஞானி அழுதுகொண்டே சிரிப்பான்என்பது உண்மையா?
3.புலன் இன்பங்களை சிற்றின்பம் என்று குறிப்பிட்டால் பேரின்பம் என்பதற்கு பொருள் என்ன?

4. மனதை அழிப்பதற்கும் அகங்காரத்தை அழிப்பதற்கும் என்ன வேறுபாடு