Monday, November 26, 2012

Lesson 179: Light is the only path to Brahmaloka (Brahma Sutra 4.3.1)


பாடம் 179: ஞானியின் பார்வை ஏசு கிருஸ்து
பாடல் 518 (IV.3.1)

“கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்” என்று கூறிய ஏசு கிருஸ்துவின் பார்வையில், உலகம், கடவுள், மனிதன், துன்பத்திற்கு காரணம், துன்பத்திலிருந்து விடுதலை அடையும் வழி,  விடுதலை அடைந்தபின் அமையும் வாழ்வு ஆகிய ஆறு கருத்துக்களை இந்தப்பாடம் தருகிறது.

சூரியனை நோக்கிப்பயணம் செய்யும் ஒரு விண்வெளிக்கலத்தில் இருந்து ஒரு கோடி கிலோமீட்டருக்கு ஒரு தடவை சூரியனைப் புகைப்படம் எடுத்துப் பார்த்தால் சூரியனின் அளவு வேறுபட்டிருக்கும். தூரத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சூரியன் அருகில் இருந்து எடுத்த படத்தில் இருப்பதை விட மிகச்சிறிய அளவில் இருக்கும். ஆனால் அனைத்துப்படங்களும் காண்பிப்பது சூரியனையே.

அதுபோல ஆன்மிகப்பயணத்தின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் காணும் கடவுள், பயணத்தை முடித்த ஞானிகள் காணும் கடவுளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தாலும் அனைவரின் பார்வையில் தென்படுவதும் கடவுளே. புகைப்படத்தில் இருப்பதுதான் சூரியன் என்ற அறிவுடன் இருப்பவர்கள் எது சரியான புகைப்படம் என்று விவாதிப்பதுப்போல் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடவுள்தான் உண்மையானவர் என்று சாதிப்பார்கள். சரியான அறிவை அடையும் தகுதி அனைவருக்கும் இருப்பதில்லை. உண்மையான கடவுளை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க முயன்ற ஏசுவை பெரும்பான்மையான மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

தான் முழுவதுமாக அறிந்த கடவுளை ஏசு, மற்றவர்களுக்கு அவரவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்துவைத்தார். கடவுள் சுவர்க்கத்தில் இருப்பதாகவும் அவரைத் துதித்தால் ஆனந்த வாழ்வை அடையலாம் என்றும் அவர் பற்றுடையோர்களுக்கு கூறினார்.  உனக்குள் இருக்கும் கடவுளே உன்னை வழிநடத்துகிறார் என்று அவர் கடவுளை அறிந்து கொள்ளும் தகுதியை அடைந்த முக்திவிழைவோர்களுக்கு கூறினார்.  இந்த உண்மைப்புரியாமல் முன்னுக்குப்பின் முரணாக பேசி கடவுளை அவமதிக்கிறார் என்ற குற்றத்தை அவர் மேல் அரசு சுமத்தியது.
உலகம்

உலகம் என்பது என்ன என்ற கேள்விக்கு ஒவ்வொரு மனிதனின் பதிலும் வேறுபடும். ஒவ்வொருவரும் தங்கள் ஐந்து புலன்கள் மூலம் சேகரிக்கும் வேறுபட்ட தகவல்களை அறிவின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு விதத்தில் பாகுபாடு செய்து புரிந்துகொள்வதுதான் இதற்குக் காரணம். தான் புரிந்துகொண்ட கருத்துதான் உண்மை என்ற பிடிவாதத்துடன் இருக்காமல் ஏசுநாதர் காட்டிய பாதையில் பயணித்து அவரின் வாய்மொழிகளின் முடிவான அறிவைப் பெற்ற பின்புதான் உலகத்தைப் பற்றிய சரியான அறிவு ஏற்படும்.

புலன்களின் மூலம் பெறும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே அனைத்து அறிவும் ஏற்படும். அனுமானம் (புகையைப் பார்த்து நெருப்பை அறிவது), உபமானம் (தெரிந்த பசுவை வைத்து தெரியாத குதிரையை அறிவது), அர்த்தாபத்தி (ஈரமான சாலையைப் பார்த்து மழை பெய்திருக்க வேண்டும் என்று அறிவது), அனுபலப்தி (காலியான பெட்டியைப் பார்த்து பணம் காணாமல் போனதை அறிவது), சப்தம்   (படித்து அல்லது கேட்டு அறிவது) ஆகிய ஐந்து விதங்களில் நேரடியாக அனுபவித்து அறிய இயலாத பொருட்களைப்பற்றிய அறிவு ஏற்படும். இவையும் ஆளுக்கு ஆள் வேறுபடும்.

தான் அறிவது மட்டும்தான் சரி என்பது பற்றுடையோர்களின் அறிவு. இருக்கும் ஒரே உலகம் வேறுபட்டு காணப்படுகிறது என்ற அறிவு முக்தி விழைவோர்களுக்கு இருக்கும். தனது கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல் தனது பாதையில் முன்னேறினால் உலகம் ஒரு மாயை என்று அறியலாம். முடிவான உண்மை ஒன்றுதான் என்பதால் அதை அறிந்தபின் எவ்வித மாறுபாடோ முரண்பாடோ இவ்வுலகில் தென்படாது. வெறும் வார்த்தைகளால் உலகம் உருவானது என்ற கருத்தைத்தான் ஆதியாகமத்திலே யோவான் 1:1 வசனம் ‘ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது’ குறிக்கிறது. மாயா சக்தியுடன் கூடிய பரமன் என்ற இறைவன்தான் இந்த உலகமாக நமக்கு காட்சி அளிக்கிறான். இதை அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர். 

கடவுள்

நானும் கடவுளும் ஒன்றுதான் என்பதை யோவான் வசனம் 10:30 கூறுகிறது. இது ஏசு நாதருக்கு மட்டுமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். முதலில் ஏசு நாதரை மட்டும் கடவுளாக வழிபட்டு மனப்பக்குவம் பெற்றபின்தான் இந்த உண்மையை அறிய முடியும் என்பதை  நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருப்பதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்என்ற யோவான் வசனம் 14:20 கூறுகிறது. மேலும் மத்தேயு வசனம் 5:8 ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்என்று கூறுகிறது.

மிக அதிக பக்கங்கள் உடைய ஒரு புத்தகத்தை படித்து அதன் மையக்கருத்தை ஓரிரு வாக்கியங்களில் அறிந்து கொள்ள பின்வரும் ஆறு சோதனைகளை செய்ய வேண்டும். முகவுரையும் முடிவுரையும் அந்த கருத்தை நிச்சயம் விளக்கியிருக்க வேண்டும். புத்தகம் முழுவதும் அந்த கருத்து அடிக்கடி சொல்லப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கருத்தை உண்மை என்று நிறுவ நிறைய முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கருத்தை அறிந்துகொள்வதனால் ஏற்படும் பலன்களின் பட்டியல் தரப்பட்டிருக்க வேண்டும். அந்தக்கருத்து தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். கடைசியில் அந்தக்கருத்து மற்றவற்றை விட உயர்ந்தது என்று புகழப்பட்டிருக்க வேண்டும்.

ஏசுவின் போதனைகள் அவரால் எழுதப்பட்ட ஒரே புத்தகமாக இல்லாமல் அவரது சீடர்களின் குறிப்புகளின் தொகுப்பாக அமைந்திருப்பதால் பரமன் ஒருவனே இவ்வுலகமாக காட்சி அளிக்கிறான் என்ற மையக்கருத்து மற்ற கருத்துக்களுடன் கலந்துவிட்டது. ஐந்து புலன்களுக்கு மட்டுமே தென்படும் இந்த உலகம் ஒரு ஒளி-ஒலி காட்சி. இந்த காட்சிக்கு ஆதாரமாக இருக்கும் பரிசுத்த ஆவியை அறிந்து கொண்டால் உலகமே கடவுள் என்ற உண்மை புலப்படும். நாம் வாழ்வில் எப்போதும் கடவுளையே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
மனிதன்

உலகமே கடவுள் என்பதால் பரமன் என்கிற பரிசுத்த ஆவியை அறிய உலகப் பயணம் மேற்கொள்ளத் தேவை இல்லை. தான் யார் என்று அறிந்தாலே போதும். இறைவனை பிதாவாகவும் மனிதனை பிள்ளையாகவும் சித்தரித்து, இந்த உருவங்களுக்கு ஆதாரமாக இருப்பது பரிசுத்த ஆவி மட்டுமே என்று ஏசுநாதர் விளக்கியுள்ளார். இந்த உண்மையை அறியாமல் தான் உலகில் இருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன் என்ற கற்பனை கதையை பாவி என்று ஏசு குறிப்பிடுகிறார்.

மனிதனின் வாழ்க்கை

தேன் எடுக்க மரத்தின் மீது ஏறிய மனிதன் புலியிடம் இருந்து தப்ப கீழே இருந்த பாழுங்கிணறு ஒன்றில் குதித்தான். அவன் பற்றிக்கொண்டிருந்த வேரை ஒரு எலி கடித்து அறுத்துக்கொண்டிருந்தது. அந்த எலியை நோக்கி நகரும் பாம்பு இவன் கை அருகே இருந்தது. மேலே ஏறினால் புலி காத்துக்கொண்டிருக்கிறது. கீழே விழுந்தால் பாறைகளில் அடிபட்டு இறப்பது உறுதி. தேன் கூட்டை கலைத்து விட்டிருந்ததால் தேனீக்கள் அவனை கொட்டத்துவங்கின. இந்த நிலையில் ஒரு துளி தேன் மேலிருந்து தற்செயலாக அவன் வாய்க்குள் விழுந்தது

பாழுங்கிணற்றில் உயிருக்கு உசலாடும் மனிதன் தன் நாக்கில் விழுந்த ஒரு துளி தேனை இரசித்து சுவைப்பது போல் நான் என்ற கற்பனைக்கதையின் பிடியில் வாழ்க்கை முழுவதும் துன்பப்படும் மனிதர்கள் எப்போதேனும் தன்னை மறந்த நிலையில் மட்டும் சிலக்கணங்கள் ஆனந்த அனுபவங்களை பெறுகிறார்கள். நான் என்ற கற்பனைக்கதையை ஆதாரமாக நினைத்து வாழ்வது துன்பம். பாவியாக இருக்கும் வரை இந்த துன்பத்தை மாற்றமுடியாது. தான் கடவுள் என்று அறியாத அனைவரும் பாவிகள்தான் என்பதையும் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதையும் ஏசு எடுத்துகூறினார். இந்த உலகம் வெறும் வார்த்தையால் ஆனது என்பதை அறிந்தவர்கள் உடலை தான் என்று நினைப்பதில்லை என்பதால் அவர்கள் அனைவரும் மரணத்தை வெல்வார்கள். (யோவான் 1:12-13)      

துன்பங்களுக்கு காரணம்

பாவியாக இருப்பது மட்டுமே துன்பங்களுக்கு காரணம். எவ்வித செயலையும் செய்ய இயலாத இந்த நான் என்ற கற்பனைக்கதை உலக பாரம் அனைத்தையும் சுமப்பதாக நினைப்பது அறியாமை. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் என்று ஏசு அழைக்கிறார். அனைவரது துன்பங்களையும் தான் சிலுவையை தூக்கி ஏற்றுக்கொண்டு விட்டதால் மக்கள் நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழலாம் என்று அவர் கூறுகிறார்.

துன்பங்களை நீக்க வழி

நான் என்ற கற்பனைக்கதையை உண்மை என்று நம்பும் பாவியாக இல்லாமல் இறைவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதன் மூலம் துன்பங்களிலிருந்து முழுதாக நாம் விடுதலை பெறலாம். யோவான் வசனம் 8:32 ‘சத்தியத்தை அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்என்று கூறுகிறது.

உன்னுடையது என்று இருக்கும் அனைத்தையும் துறந்து என்னை பின்பற்று. நான் உனக்கு சுவர்க்கத்தைக் காட்டுகிறேன் என்றார் ஏசு (மத்தேயு 19:21). இருப்பதனைத்தும் இறைவனது என்பதை அறியாமல் உனது எனது என்று சொந்தம் கொண்டாடும் வரை துன்பத்தை அகற்ற முடியாது.

அருந்ததி நட்சத்திரத்தை சுட்டிக்காட்ட, அதன் பக்கத்தில் இருக்கும் சற்று அதிக ஒளியுள்ள ஒரு நட்சத்திரத்தைக் காட்டி, அதைப்பார்க்கும் அளவுக்கு கண் பார்வை குவிந்த பின் அருந்ததியை காட்டித்தருவது போல கண்ணுக்குத்தெரியாத கடவுளைக் காட்டித் தர அருகில் இருக்கும் தன்னைக் காட்டி தன்னை கடவுளின் மகனாக அறிமுகம் செய்துகொண்டார். அதன்பின் அனைவரும் தனது சகோதரர்கள் (எபிரேயர் 2.11) என்பதனால் கடவுளின் உருவமே என்பதை ஏசு எடுத்துரைத்தார். தான் பாவி என்பதை முதலில் ஏற்றுக்கொண்டு அதன் பின் ஏன் நான் பாவியாக இருக்கிறேன் என்பதை அறிய ஆசை படுபவர்கள் மட்டுமே உண்மையை அறியும் தகுதி உடையவர்கள்.

பாவி எனப்படுபவன் தன் மனதினுள் உருவாகியிருக்கும் கற்பனைக்கதை என்பதை அறிந்தவுடன் உள்ளே இருந்து அனைவரையும் உயிர்ப்பிக்கும் பரிசுத்த ஆவி நிரந்தரமானது என்பதை அறியமுடியும். மாறும் தன்மையுள்ள உடலையும் மனதையும் நான் என்று அறிபவர்கள் இந்த வாழ்வை தொலைத்து விடுவது உறுதி. இவற்றை விடுத்து இறைவனைச் சரணடைபவர்கள் மரணத்தை வென்று நிரந்தரமாக வாழ்வார்கள் என்ற கருத்தைத்தான்யாரெல்லாம் தங்கள் வாழ்வை எனக்கு அர்ப்பணம் செய்கிறார்களோ அவர்கள் நிரந்தரமான வாழ்வை அடைவார்கள் என்ற வசனம் (மத்தேயு 16:25) குறிப்பிடுகிறது. மேலும் இந்த உலக வாழ்க்கையைத்தான் சுவர்க்க வாழ்வாக மாற்றிக்கொள்ள வேண்டுமே அன்றி வேறு ஒரு சுவர்க்கம் இல்லை என்பதை ஏசு எடுத்துக்கூறுகிறார். லூக்கா 17.20-21 வசனங்களில் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குளே இருக்கிறதே என்ற உண்மையை அவர் தருகிறார்.

நாள் முழுவதும் வானத்தின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதன் ஆதாரமான ஆகாயம் வண்ணம் ஏதும் இன்றி மாறாமல் தொடர்ந்து இருப்பது போல் தொடர்ந்து மாறும் உடல்களின் ஆதாரமாக மாறாமல் இருப்பது பரிசுத்த ஆவிநான் என்ற கற்பனைக்கதையின் பிடியில் இருந்து விடுபட்டு பரிசுத்த ஆவி நான் என்று உணர்ந்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் உடனடியாக விடுதலை கிடைக்கும். பாவிகளின் எண்ணங்கள் தான் ஒரு தனி மனிதன் என்ற கற்பனையின் அடிப்படையில் உருவானது என்பதால் துன்பங்களுக்கு வழிவகுக்கும். அவ்வாறில்லாமல் ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்கு உரியவைகளை சிந்திக்கிறார்கள் (ரோமர் 8.5).

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். உண்மையை அறிந்தவர்கள் ஒன்றான இறைவனை பிளவு செய்வதில்லை. நீ வேறு நான் வேறு என்று பேதம் செய்பவர்கள் உண்மையை அறியாதவர்கள். துன்பங்களுக்கு காரணமான அறியாமையை அகற்றி உள்ளதை உள்ளவாறு அறியும் அறிவுத்திறனை அடைவது மட்டுமே துன்பங்களை நீக்கும் வழி.

இன்பவாழ்வு

பரமனை அறிவதே நித்ய ஜீவன்(யோவான் 17.3). பாவியான கற்பனைக்கதை நான் அல்ல என்று உணர்ந்த அதேக் கணத்தில் நாம் மரணத்தை வென்று விடுவோம். (கொரிந்தியர் 15.51-57, யோவான் 11.26).

வாழ்வில் துன்பங்கள் என்பது கற்பனையே. அந்த கற்பனையை நான் என்று நினைத்து பாரம் சுமந்து கொண்டிருந்த நாம் நமக்காக அனைத்து செயல்களையும் செய்யும் கர்த்தரை அறிந்து கொண்டவுடன் பாவங்களில் இருந்து விடுபட்டு இன்ப வாழ்வை நித்தியமாய் அனுபவிப்போம்.  

முடிவுரை :

கல்லைக்கண்டால் நாயைக்காணோம். நாயைக்கண்டால் கல்லைக்காணோம். கல்லினால் செய்யப்பட்ட நாயின் சிலையைப் பார்ப்பவர்களின் நிலை இதுதான். இதுபோல உலகத்தைமட்டும் பார்ப்பவர்கள் கண்களுக்கு உலகமாக காட்சி அளிக்கும் கடவுள் தென்படுவதில்லை.

உண்மையை எடுத்து உரைத்த ஏசுவின் வார்த்தைகளை அவரவர்கள் தங்கள் அறிவுத்திறத்துக்கு ஏற்றாற்போல் புரிந்து கொள்வதால் அனைவராலும் உண்மையை முழுமையாக உணர முடிவதில்லை. ஆனாலும் ஏசு காண்பித்த வழியில் பயணம் செய்பவர்கள் கூடியவிரைவில் மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள்.

பயிற்சிக்காக :

1. மக்களுக்கு அறிவு ஏற்படுவது எப்படி?

2. ஒரு புத்தகத்தின் மையக்கருத்தை அறிந்து கொள்ள நாம் செய்ய வேண்டிய ஐந்து சோதனைகள் யாவை?

3. பரிசுத்த ஆவி, தந்தை, மகன் ஆகிய மூவருக்கிடையே உள்ள உறவு என்ன?

4. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதற்கு பொருள் என்ன?

5. கல்லைக்கண்டால் நாயைக் காணோம் என்பதற்கு பொருள் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஐந்து புலன்களை உபயோகிக்காமல், பாடத்தில் விவரிக்கப்பட்ட ஐந்து வழிகளில் மட்டுமே ஏதேனும் அறிவைப் பெற முடியுமா?

2. பைபிள் என்ற நூலை ஆதாரமாக கொண்டு பல மதப்பிரிவுகள் இருப்பதற்கு காரணம் என்ன?

3. விவேகானந்தர் ஏசு கிருஸ்துவைப்பற்றி எழுதிய கருத்துக்களை படிக்கவும்.


4. பைபிள் வசனங்களை http://www.wordproject.org/tm/index.htm ல் படிக்கவும்.