Thursday, November 25, 2010

Lesson 141: Rituals are not required for the enlightened (Brahma Sutra 3.4.25)

பாடம் 141: மதங்களின் அவசியம்
பாடல் 450 (III.4.25)

உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஏதாவது ஒரு மதத்தை முழுமையாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை விளக்கும் அதேவேளையில் பரமனை அறிந்தவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தையும் இந்த பாடம் நம் முன்வைக்கிறது.

ஒட்டகச்சிவிங்கி பிறந்த சிலநிமிடங்களுக்குள் எழுந்து நின்று நடக்காவிட்டால் காத்துக்கொண்டிருக்கும் கழுதைப்புலிக்கு இரையாகவேண்டும் என்பது அதற்கு தெரியும். எனவேதான் அது ‘இப்பொழுதுதான் நான் பிறந்தேன், சிறிது நேரம் ஓய்வெடுத்தப்பின் உன் பின் நடந்து வருகிறேன்’ என்று அதன் தாயுடன் வாதாடுவதில்லை. இதுபோல் அனைத்து உயிரினங்களுக்கும் தனக்கு நல்லது எது தீமை தருவது எது என்ற அறிவு இயல்பாகவே இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு இந்த அறிவு வளர்ந்தபின் கூட தானாக ஏற்படுவதில்லை.

உதாரணமாக உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவை தேவையான அளவு மட்டும் உட்கொள்ள வேண்டும் என்று மற்ற உயிரினங்களுக்கு யாரும் போதனை செய்யத்தேவையில்லை. மனிதன் மட்டும்தான் நாக்கின் சுவைக்காக உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுகிறான். தனக்கு நல்லது எது என்று தானாகத்தெரிந்துகொள்ளும் திறமை மனிதனுக்கு இல்லையென்ற காரணத்தால் மட்டுமே மதம் மனிதனுக்கு அவசியமாகிறது.

புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு என்றும் குடி குடியைகெடுக்கும் என்றும் எவ்வளவோ பிரச்சாரம் செய்தாலும் ஏன் இவற்றை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதை வேதம் தெளிவாக விளக்குக்கிறது. இந்த விளக்கத்தை படித்து புரிந்துகொள்ளும் தகுதியுள்ளவர்கள் தீயவற்றை தவிர்த்து இன்பமாக வாழ்வார்கள். வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படித்து புரிந்துகொள்ளும் சக்தியற்றவர்களுக்கு இதைச்செய் அதைச்செய்யாதே என்று மதம் போதிக்கிறது. மனிதன் செய்யவேண்டிய கடமைகளையும் தவிர்க்கவேண்டிய பழக்கங்களையும் உலக மதங்கள் பட்டியலிட்டு கூறுகின்றன. வேதத்தை படிக்கும் அளவுக்கு மனம் பக்குவபடும்வரை மனிதன் மதகுருமார்கள் போதிக்கும் நீதி நெறிகளையும் நன்னடத்தைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும்.

விலங்குகளும் மனித இனமும்

தான் என்ற தன்னுணர்வு (self-awareness) விலங்குகளிடம் இல்லாததால் அவை இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. பிறந்தது முதல் இறக்கும் வரை அவற்றின் சுபாவம் (instinct)  அனைத்துச்செயல்களுக்கும் காரணமாய் அமைவதால் இதை செய்யலாமா வேண்டாமா என்ற விவாதம் அவற்றின் மனதில் ஏற்படுவதில்லை. துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ செய்யவேண்டிய செயல்கள் அவற்றின் சுபாவமாக அமைந்துள்ளன. இந்த பாக்கியம் மனிதனுக்கு கிடையாது. துன்பத்தில் வீழாமல் தன்னை காத்துக்கொள்ள அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவனது புத்தி (intelligence) மட்டுமே.

அசுத்தமாயையால் செய்யப்பட்ட காரணத்தால் மனிதனுக்கு தன்னுணர்வு இருந்தாலும் தான் யார் என்ற அறிவு இருப்பதில்லை. எனவே எந்த மனிதனுக்கும் நல்லவை கெட்டவை என்று பகுத்தறியும் புத்தி சரியாக வேலை செய்வது இல்லை. இன்பமாக இருக்க நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற தவறான எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் உள்ளது. துன்பத்தை தவிர்க்க மனிதனுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான புத்தியும் இவ்வாறு தவறாக செயல்படுவதால் மனிதன் தொடர்ந்து மதங்களைச்சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மதம் சார்ந்து தோன்றிய பண்பாடு, கலாச்சாரம், குடும்ப ஆச்சார கட்டுப்பாடு, சமூக நியமங்கள் ஆகியவற்றை பின்பற்றி இப்படித்தான் வாழவேண்டும் என்று பெரியவர்கள் சொல்படி நடப்பது மட்டுமே மனிதனுக்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு செல்வது, தினமும் ஐந்து முறை ஆண்டவனைத்தொழுவது என்பது போன்று அவரவர் குடும்பத்தில் வழிவழியாக வரும் சட்டதிட்டங்களை ஏன் என்று கேள்விகேட்காமல் பின்பற்ற வேண்டும். மேலும் சூதாடுதல், மது அருந்துதல் மற்றும் ஆண்-பெண் ஒருவரை ஒருவர் கவரும் வகையில் உடை அணிதல், சேர்ந்து பழகுதல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வேதத்தை படித்து தான் யார் என்பதை உணர்ந்து கொள்ளும் வரை இதுபோல் மதக்கோட்பாடுகளின் துணை மனித நல்வாழ்வுக்கு மிக அவசியம்.

கைத்தடியின் உதவியில்லாமல் நடக்கும் குருடன் கிழேவிழுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதுபோல் மதங்கள் கூறும் நற்பண்புகள், நன்னடத்தைகள் மற்றும் நீதி நெறிகளை பின்பற்றாத மனிதன், வாழ்வில் துன்பத்தை அடைவது நிச்சயம்.

உலகமும் மனிதனும்

மனிதன் தன்னைச்சுற்றியுள்ள உலகை உணர ஐந்து புலன்களையும் மனதையும் சார்ந்து இருக்கிறான். ஒவ்வொருமனிதனும் தன் விருப்பு-வெறுப்பு என்ற வண்ணக்கண்ணாடி மூலம் உலகைப்பார்ப்பதால்  உள்ளவற்றை உள்ளபடி யாரும் உணர்வதில்லை. எனவேதான் உண்மை எது என்பதில் பல கருத்துவேறுபாடுகள் உள்ளன. இரண்டாயிரம் வருடங்களாக அறிவியலின் துணையுடன் மனிதன் எவ்வளவோ முயற்சிசெய்தும் கூட துன்பத்தை முழுவதும் தவிர்க்க அவனால் முடியவில்லை. தான் தேடுவது ஏற்கனவே தன்னிடம் இருக்கிறது என்ற அறிவை வேதத்திலிருந்து பெறும்வரை இன்பமாக இருப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்ட உலகில் அவன் துன்பம் கலந்த இன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகிறான்.

நாம் இன்பமாக இருக்க உலகை நம் விருப்பப்படி மாற்றும் முயற்சிகளை சற்று ஒத்திப்போட்டுவிட்டு நம் மனம் செயல்படும் விதத்தை முழுதாக அறிந்து கொண்டால் உலகம் எப்படியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நிலையான நிம்மதியுடன் வாழலாம். அதன் பின் மதக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லாமல் உலக இன்பங்களை துன்பம் கலவாமல் அனுபவிக்கலாம்.

இந்த நிலையை மனிதன் அடைவதற்கு உலக மதங்கள் அவன் வாழ்வின் அனைத்துக்கட்டங்களிலும் அவனை வழிநடத்துகின்றன.  

மதம் காட்டும் வழி 1: புலன்களை கட்டுப்படுத்துதல்.

புலன்கள் மூலமாக மட்டுமே அனைத்து அனுபவங்களும் நமக்கு ஏற்படுகின்றன. பிறவிகள் தோறும் ஏற்பட்ட அனுபவங்களால் நம் புலன்கள் இயற்கையாகவே பிடித்ததை நாடவும் பிடிக்காததை தவிர்க்கவும் பழகியுள்ளன. ஆனால் பிடித்தவை நன்மை தருபவையாக இருப்பதில்லை. நம் வாழ்வின் நலன் கருதி பிடிக்காத செயல்களைச்செய்வது அவசியமாகலாம். விருப்பு-வெறுப்பு என்ற அடிப்படையில் அமைந்த பதிவுகளை நன்மை-தீமை என்ற அடிப்படையில் மாற்றியமைக்க மதகட்டுப்பாடுகள் உதவுகின்றன.

உதாரணமாக சபரிமலைக்கு செல்ல மாலைபோட்டு விரதம் ஏற்பவர்கள் நாற்பது நாட்களுக்கு மது, மாது, மாமிசம் ஆகியவற்றை தவிர்த்து தினசரி பூஜை செய்து புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

மதம் காட்டும் வழி 2: மனக்கட்டுப்பாடு

புலன்கள் உலகப்பொருள்களின் பின் அலைவதை கட்டுபடுத்த முடியாமல் அவற்றின்பின் சென்றுகொண்டிருக்கும் மனதிற்கு தியானம், மந்திரம் ஜெபித்தல், பூஜைசெய்தல் போன்ற பயிற்சிகள் மூலம் சக்தியளிப்பது மதம்.  

மதம் காட்டும் வழி 3: பணம் சம்பாதித்தல்

உழைத்து சம்பாதிப்பதை ஒரு முக்கியமான படிக்கட்டாக மதம் மனிதனுக்கு பரிந்துரை செய்கிறது. பரம்பரை சொத்திலிருந்து கிடைக்கும் வட்டி, வாடகை போன்ற வருமானத்தில் வாழ்வதை மதம் கண்டிக்கிறது. மனதை செம்மைபடுத்த உழைப்பு அவசியம். மனம் செம்மைபடுத்தப்படாவிட்டால் வாழ்வில் துன்பத்தை தவிர்க்க முடியாது.

மதம் காட்டும் வழி 4: பணம் செலவழித்து விருப்பம்போல் வாழ்வது

விதவிதமான ஆடை அணிகலன்களை வாங்கவேண்டும், உலகத்தை சுற்றி உல்லாசப்பயணம் செல்ல வேண்டும் என்பது போன்ற பல ஆசைகள் மனிதனுக்கு ஏற்படலாம். இதுபோன்ற நியாயமான ஆசைகளை கடவுளின் பிரசாதமாக கருதித்தான் அனுபவிக்க வேண்டும் என்று வேதம் விதித்துள்ளது.

மதம் காட்டும் வழி 5: பாவபுண்ணியங்கள்

பணம் சம்பாதிப்பதும் அதை செலவழித்து ஆசைகளை நிறைவற்றிக்கொள்வதும் தர்மமான முறையில் செய்யப்படவேண்டும் என்றும் அதர்மமான செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்றும் வேதம் வலியுறுத்துகிறது.

வேதத்தின் முதல் பகுதியில் விவரிக்கப்பட்ட இந்த ஐந்து வழிகளை பின்பற்றி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தால் கூடிய விரைவில் வேதத்தின் இறுதிப்பகுதியை படித்து புரிந்து கொள்ளும் தகுதியை பெறுவோம். விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் செயல் புரிந்து பாவபுண்ணியங்களின் அடிப்படையில் செயல்களின் பலன்களை பெறுவதால் எவ்வளவுதான் முயன்றாலும் நிலையான இன்பமும் நிம்மதியும் கிடைக்காது என்பதை உணர்வோம். எனவே உலகத்தில் உள்ள பொருள்களின் மீதும் மனிதர்கள் மீதும் நமக்கு இருந்து வந்த மோகம் நீங்கும். வேதாந்தத்தை முறையாக படித்து பரமனை அறிந்து முக்தியடைய தீவிர ஆசை பிறக்கும்.

முக்தியடைய மூன்று படிகள்

நான் யார், படைப்பின் இரகசியம் என்ன, படைத்தவன் யார், வாழ்வில் துன்பங்கள் ஏற்படுவதன் அடிப்படைக்காரணம் என்ன, முக்தி என்றால் என்ன மற்றும் முக்தியடையும் வழி எது என்ற ஆறுகருத்துக்களை தெளிவாகவும் தர்க்க அறிவிற்கு ஏற்புடையதாகவும் கூறுவது மதம். முக்தியடையும் வழியை பின்பற்றினால் மற்ற ஐந்து கருத்துக்களையும் புரிந்து கொள்ள தேவையான புத்திக்கூர்மையையும் மனப்பக்குவமும் நமக்கு கிடைக்கும். 

அதன் பின் முக்தியடைய பின்வரும் மூன்று படிகளைத்தாண்ட வேண்டும். 

முதல் படி: கற்றல்

முறையாக வேதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரின் மேற்பார்வையில் தொடர்ந்து வெகுகாலம் சிரத்தையுடன் பயின்றால் வேதாந்தத்தின் மையக்கருத்தான நீயே அது என்பதன் பொருள் புரியும்.  மாணவனுக்கு புரியும்படி சொல்லித்தரும் பொறுப்பு ஆசிரியரைச்சேர்ந்தது. புரியும் வரை கேள்விகள் கேட்பது மாணவனின் கடமை.

இரண்டாம்படி: கசடறக்கற்றல்

நீயே அது என்பது எவ்வாறு உண்மையாயிருக்க முடியும் என்பதை இந்த படியில் மாணவன் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்லிகொடுத்த கருத்துக்களை மனதில் அசைபோட்டு தர்க்கம் மற்றும் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் அவற்றை சோதித்து நீயே அது என்ற கருத்து வெறும் செய்தியாக இல்லாமல் அறிவாக மாற்றிக்கொள்ளும் பொறுப்பு மாணவனைச்சேர்ந்தது. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது மட்டுமே ஆசிரியரின் கடமை.

மூன்றாம்படி: பெற்ற அறிவில் நிலை பெறுதல்

முதல் இருபடிகளை முறையாக கடந்தவுடன் முக்திகிடைக்க வேண்டும். ஆனால் பலர் இவ்வுலகின் நிகழ்வுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு துன்பம் கலவா இன்பத்தை அடைவதில்லை. இதற்கு காரணம் வேதம் கூறும் கருத்துக்கள் புரியவில்லை என்பதாக இருந்தால் மறுபடியும் முதல் படிக்கு சென்று கற்றலை தொடர வேண்டும். அல்லது நீயே அது என்பதில் சந்தேகம் இருந்தால் இரண்டாம் படிக்குச்சென்று குற்றமற்ற அறிவைப்பெறவேண்டும். அதன்பின்னும் முக்தியடையவில்லை என்றால் இந்த மூன்றாம் படியை கடப்பது அவசியம்.

இந்தப்படியில் ஆசிரியரின் பங்கு ஏறக்குறைய ஒன்றுமேயில்லை. மாணவன் தன் சொந்தமுயற்சியால் மட்டுமே இந்த படியை கடக்க வேண்டும். நீயே அது என்பது அறிவாக மாறியபின்னும் முக்தியடையாமல் இருப்பதற்கு ஒரே காரணம் நம் மனம் சரியாக பயிற்றுவிக்கப்படவில்லை என்பதுதான்.

முக்தி என்பது எவ்வித அசாதாரணமான அனுபவம் என்றோ ஒருசில நிமிடங்கள் இருந்து மறையும் கற்பனைத்தோற்றங்களோ அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். வேதாந்தத்தை முறையாக பயின்று தெளிவான அறிவைபெற்ற அனைவராலும் முக்தியடைய முடியும்.

வெகுகாலம் யாரும் குடியிருக்காமல் பாழடைந்த பங்களாவில் குழாயைத்திறந்தால் தண்ணீர் வராது. மேல்தொட்டியில் தண்ணீர் இருந்தாலும் குழாயில் அடைப்பு இருப்பதுதான் அதன் காரணம். அதேபோல் பிறந்தது முதல் சாதாரண மனிதன் என்று நம்மைப்பற்றி நாம் வைத்திருந்த கருத்து நான் பரமன் என்று உணர்ந்த பின்னும் நம்மை உடனே முக்தியடையவிடுவதில்லை. குழாயின் அடைப்பை நீக்குவது போல மனதில் உள்ள தவறான கருத்துக்களை தியானம் மூலம் நாம் அகற்ற வேண்டும். சதாரண தியானம் மற்றும் சிறப்பு தியானம் ஆகிய இரு தியானங்களைச்செய்வதன் மூலம் விரைவில் நாம் முக்தியடையலாம்.

சாதாரண தியானம் செய்ய வேண்டிய அவசியம்

நாம் உலகை எந்த பார்வையில் பார்க்கிறோம் என்பது நம் அறிவைப்பொறுத்தது. உலகம் உண்மை என்ற தவறான அறிவு இருக்கும்வரை அதில் நாம் இன்பத்தை தேடிக்கொண்டிருப்போம். நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகள் நம்மை தொடர்ந்து பாதித்து வரும். உலகம் மாயை என்று உணர்ந்த பின்னும் இதுபோன்ற பாதிப்புகள் உடனே நின்றுவிடுவதில்லை. நான் என்றுமிருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற உண்மையை தியானம் மூலம் ஆழ்மனதில் அழுத்தியபின்தான் உலகத்தை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக பார்க்கத்துவங்குவோம்.

உலக நிகழ்வுகள் என்னும் காற்று நம்முடைய மனம் என்னும் நெருப்புச்சுடரை அலைக்கழிக்கும்பொழுது உலகம் மாயை என்ற அறிவு கண்ணாடி கூடாக சுடரை பாதுகாக்கும். கற்றல் மூலம் பெற்ற ஞானம் என்ற கண்ணாடி கூடு கசடறகற்றல் மூலம் உறுதிபடுத்தப்பட்டு நிலைபெறுதல் என்ற இந்தப்படியில் உறுதியாக பொருத்தப்படும். இதனால் மனதின் அலைபாயும் தன்மை குறையும்.

உலகம் மாயை என்ற அறிவு உலகை எவ்விதத்திலும் மாற்றாது. ஆனால் உலக நிகழ்வுகள் மனதின் நிலையான அமைதியை குலைக்கும் சக்தியை படிப்படியாக இழக்க ஆரம்பிக்கும். பெரிய பிரச்சனைகள் அல்லது நெருக்கடிகள் என்று உலகத்தின் மாறும் நிகழ்வுகளுக்கு நாம் பெயர்கள் கொடுக்கமாட்டோம்.

மகள் பக்கத்துவீட்டுப்பையனுடன் ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தி நம்மை நிலை குலைய வைக்கலாம். உடல் தளர்ந்து மனம் மயங்கி கீழே விழலாம். வாய் சொல்லக்கூடாத வார்த்தைகளை பிதற்றலாம். முக்தியடையும் முதல் இருபடிகளை முறையாக கடந்திருந்தால் இந்த செய்தி நம் உடலையும் வாக்கையும் அவ்வளவாக பாதிக்காது. மனம் சிறிது அலைபாய்ந்தாலும் வெகுசீக்கிரம் ஆகவேண்டிய காரியத்தில் கவனத்தை செலுத்த தயாராகிவிடும்.

‘மாறும் மனம் நானல்ல. மாறாத பரமனே நான்’ என்று மந்திரஜபம் செய்தவர்கள் மனதின் அலைபாயும் தன்மையை பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. வேதம் படிக்காதவனுக்கு கோபம் ஏற்பட்டால் மனம் அமைதியடைந்ததும் தான் கோபபட்டது பற்றி வருத்தம் அடைவான். வேதம் படித்து முடித்தவனுக்கு இந்த வருத்தம் அதிகமாக கூடாது. இவ்வளவு தூரம் நான் வேதம் படித்து என்ன பிரயோஜனம், எனக்கு எப்படி கோபம் வரலாம் என்று மேற்படி துயரம் ஏற்பட்டால் வேதம் படித்தது வீண். மனம் வெளிவுலக நிகழ்வுகளுக்கேற்ப அலைபாயும் தன்மை உள்ளது என்பது புரிந்தால் அதன் நிலை பற்றிய கவலை நம்மிடமிருந்து நீங்கும்.

அதன் பின் மனம் மேலும் அமைதியடையும்.

அகராதியை வழக்கமாக வைக்கும் புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நாம் அமர்ந்து வேலை செய்யும் மேஜைக்கு இடமாற்றம் செய்திருந்தாலும் அதை மறந்து விட்டு பழையபடி அலமாரியில் தேடுவோம். எழுந்து நடக்கும் சிரமம் இல்லாமல் கையை நீட்டி எடுக்கும் தூரத்தில் இருக்கும் அகராதி அங்குதான் இருக்கிறது என்பதை திரும்ப திரும்ப தியானம் செய்து, வேண்டிய பொழுது உடனே அதன் நினைவு வரச்செய்த பின்தான் பழைய இடத்தில் தேடுவதை நிறுத்துவோம்.

அதுபோல வெளியுலகில் இன்பத்தைத்தேடி பழகிவிட்டிருப்பதால் அதை இனிமேல் எங்கும் தேடவேண்டாம், அது என்னுடன் எப்பொழுதும் இருக்கும் என் சுயரூபம் என்று தேவையான சமயத்தில் தோன்ற இந்த கருத்தை சாதாரண தியானமாக சில காலம் செய்து வரவேண்டும்.

உலகம் உண்மை என்றும் தான் ஒரு அற்பமான மனிதன் என்றும் பலகாலம் மனதில் பதிந்திருந்த அறிவு மகள் எங்கே போயிருப்பாள், அவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற கவலையை தரும். இந்த பிரபஞ்சத்திற்கே ஆதாரமான பரமன் நான் என்று தியானம் செய்திருந்தால் இதுபோல் பதறும் நேரம் மிகக்குறையும். கவலை தரும் நிகழ்வுகள் படிப்படியாக குறையும். கவலை ஏற்பட்டாலும் அதன் துன்பம் தரும் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். கவலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்குத்திரும்ப நாம் எடுத்துக்கொள்ளும் நேரமும் குறையும்.

சாதாரண தியானம் செய்யும் விதம்

சாதாரண தியானத்தை ஓரிடத்தில் அமர்ந்து முறையாக செய்யவேண்டிய அவசியமில்லை. எங்கேயும் எப்பொழுதும் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் நான் பரமன் மனிதனல்ல என்பதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் சாதாரண தியானம்.

மாங்காய் ஊறுகாய் செய்தவுடன் அதை எடுத்து சாப்பிடமுடியாது. மாங்காய் சிறிதுகாலம் எண்ணையில் ஊறியபின்தான் உறுகாயாக மாறும். அதுபோல நான் பரமன் என்ற எண்ணம் மனதில் ஊறியபின்தான் நாம் பரமனாக மாறமுடியும்.

மறுபடியும் வேதத்தை படிப்பது, நண்பர்களுடன் அதைப்பற்றி உரையாடுவது, எழுதுவது மற்றும் மற்றவர்களுக்கு போதிப்பது போன்ற செயல்களால் நான் பரமன் என்ற எண்ணத்தை நம் ஆழ்மனதிற்குள் அழுத்தி நான் சாதாரண மனிதன் என்ற தவறான அறிவை அழிக்கவேண்டும்.

ஒரு நல்ல சினிமா படத்தை திரும்ப திரும்ப பார்ப்பது போல வேதாந்தத்தை பல முறை கற்க வேண்டும். முதல் முறை அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசையால் அதை படித்திருப்போம். பல்வேறு உபநிடந்தங்கள், எண்ணிலடங்கா கீதைகள் மற்றும் வேதாந்தத்தை அடிப்படையாக கொண்ட நூல்கள் ஆகியவற்றை திரும்ப படிக்கும்பொழுது இவ்வுலகம் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ள திரைப்படம் என்ற உண்மை மனதில் பதியும்.

சிறப்பு தியானம் செய்ய வேண்டிய அவசியம்

புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய மனம் ஒரு சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களால் உலகின் பின் செல்வதை தவிர்க்க சிறப்பு தியானம் அவசியம்.

சாலையின் இடது புறம் கார் ஓட்டி பழகிவிட்டு வெளி நாடு சென்று வலது புறம் ஓட்டவேண்டிய கட்டாயமேற்படும்பொழுது தொடர்ந்து நமக்கு நாமே அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அது போல நம்  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மனதில் ஆழமாக பதிந்திருந்து தடைபடா நிம்மதிக்கு தடையாய் இருக்கலாம். இந்த பாதிப்பை அகற்ற சிறப்பு தியானம் செய்ய வேண்டும்.

சிறப்பு தியானம் செய்யும் விதம்

அஷ்டாங்க யோகத்தில் விளக்கப்பட்ட விதத்தில் சிறப்பு தியானம் செய்ய வேண்டும். எந்த நிகழ்வுகள் நம் மனதை பாதிக்கின்றனவோ அதன் தொடர்பான ஒரு மந்திரத்தை தியானத்திற்கு உண்டான பொருளாக கொள்ளவேண்டும். உதாரணமாக பிடிக்காத மனிதர்களுடன் தொடர்புகொள்வதை தவிர்க்க முடியாவிட்டால் அவர்களும் பரமன் என்பதை தியானத்தின் மந்திரமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தியானிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் தலைவர் தெளிவான உத்திரவு ஒன்றை போட்டிருந்தாலும் அவருக்கு கீழே வேலை செய்பவர்கள் அனைவரும் உடனே அதற்கு பணிந்து வேலை செய்வதில்லை. பழைய வழக்கப்படி தொடர்ந்து செயல்கள் செய்யப்படுவதை தணிக்கையாளர்கள் கண்டுபிடுத்து தக்க தண்டனை கொடுப்பதன் மூலமாக சிலகாலம் கழித்து அந்த உத்திரவு முழுமையாக அமலுக்கு வரும்.

அது போல இந்த உலகே மாயை என்ற உண்மையை மறந்து நாம் செயலாற்றி அதனால் நாம் துன்பபட நேர்ந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு தியானம் செய்து நம் மனதிற்கு அதன் தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டி புத்தியின் அறிவுப்படி நடக்க அதற்கு கட்டளையிடவேண்டும். இது போன்ற பயிற்சிக்குப்பின் மனம் புத்தியின் கட்டுக்குள் செயல்பட ஆரம்பிக்கும். அதன் பின் இந்த உலகம் நமக்கு துன்பம் ஏற்படுத்தும் சக்தியை முற்றிலும் இழந்து விடும்.

தடையில்லாத பாதுகாப்புடன் குறையாத இன்பத்தையும் நிலையான நிம்மதியையும் அனுபவிக்கத்துவங்கிவிடுவோம். இவ்வாறு மதம் தரும் உதவியை முழுமையாகப்பெற்றபின் அதற்கு நன்றி செலுத்துவதை தவிர அது கூறும் கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியமில்லை.

முடிவுரை :

நடைபயில உதவும் மூன்று சக்கர நடவண்டியைப்போன்றது மதம். தானாக நடக்க இயலாத குழந்தை நடவண்டியை பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் நடக்கும்பொழுது எங்கு செல்கிறது என்பது முக்கியமல்ல. எங்கு சென்றாலும் நடக்க கற்றுக்கொள்கிறது என்பதுதான் முக்கியம். நன்றாக நடக்கத்தெரிந்த பின் அந்த வண்டிக்கு எவ்விதப்பயனும் இல்லை. அது போல புத்தி பக்குவப்பட்டு உண்மையை உணரும் வரை மதம் கூறும் வழியில் பயணிப்பது மட்டுமே மனிதனுக்கு உகந்தது. வேதத்தின் உட்கருத்து புரிந்தபின் மதம் தேவையில்லை.

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று சக்கரங்களை கொண்ட மதம் மனிதர்களின் வாழ்க்கையை வழிநடத்துகின்றன. மனிதன் என்ன செய்கிறான் என்பதைவிட மதம் கூறும் வழியை பின்பற்றுகின்றானா என்பதுதான் முக்கியம். மதம் கூறும் கடமைகள், நன்னடத்தை, நன்னெறி ஆகியவற்றை பின்பற்றி பொருள் ஈட்டுவதும் மனதில் தோன்றும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதும் மனப்பக்குவத்தை கொடுக்கும். அதன் பின் வேதாந்தத்தை படித்து சரியான அறிவைப்பெற்றவுடன் புத்திக்கு குறையில்லா வாழ்வைபெற்றுத்தரும் சக்தி வந்து விடும். அதன்பின் மதத்தின் துணை மனிதனுக்கு தேவையில்லை. நான் பரமன் என்று அறிந்துகொண்ட மனிதன் பரமனாகவே மாறிவிடுவதால் அவன் செய்யவேண்டிய செயல் என்று எதுவுக் கிடையாது. செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் அவனுக்கு கிடையாது. அவனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மட்டுமே அவன் வாழ்க்கை அமையும்.


அவன் மதகோட்பாடுகளை பின்பற்றுவது போல் தோற்றமளிப்பது மற்றவர்களுக்கு வழிகாட்டும்பொருட்டே. மக்கள் மத்தியில் வாழாமல் தனித்து வாழ்ந்தால் அவனுக்கு அந்த அவசியம் கூட இருக்காது. ஏனெனில் விலங்குகள் எவ்வித மதங்களின் துணையில்லாமல் தங்கள் சுபாவப்படி வாழ்வதுபோல் அவனால் துன்பங்களை முழுவதும் தவிர்த்து என்நாளும் இன்பமாக வாழ முடியும்.


பயிற்சிக்காக :

1. மனிதனுக்கு இல்லாத எந்த அறிவு விலங்குகளுக்கு இயல்பாகவே இருக்கிறது?

2. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்று இந்த பாடம் குறிப்பிடும் கருத்துக்கள் யாவை?

3. மதங்களின் அவசியம் என்ன?

4. புலன்களை ஏன் கட்டுப்படுத்தவேண்டும்?

5. மனதை கட்டுப்படுத்த மதம் எவ்வாறு உதவுகிறது?

6. உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன?

7. ஆசைகளை எவ்வாறு அனுபவிக்க வேண்டும்?

8. மதம் என்ற தகுதியை பெற அதில் அடங்கியிருக்க வேண்டிய ஆறு கருத்துக்கள் யாவை?

9. முக்தியடைய கடக்கவேண்டிய மூன்றுபடிகள் யாவை? அவற்றில் ஆசிரியரின் பங்கு என்ன? மூன்றாவது படியின் அவசியம் என்ன?

10. சாதாரண தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

11. சாதாரண தியானம் செய்யும் விதம் யாது?

12. சிறப்பு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

13. சிறப்பு தியானம் செய்யும் விதம் யாது?   

சுயசிந்தனைக்காக :

1. மனதை கட்டுப்படுத்துவதன் அவசியம் என்ன?

2. ஆதி சங்கரர் தத்துவபோதம் என்ற நூலில் விவரித்த நான்கு தகுதிகளை இந்த பாடத்தில் குறிப்பிடப்பட்ட மூன்று தகுதிகளுடன் ஒப்பிடுக.

3. மதக்கோட்பாடுகளின் படி வாழாமல் நேரடியாக வேதாந்தத்தை படித்து முக்தியடைய முடியாதா?

Thursday, November 4, 2010

Lesson 140: Stories reveal the truth (Brahma Sutra 3.4.23-24)

பாடம் 140: கதைகூறும் கடமைகளும் கருத்துக்களும்
பாடல் 448 – 449 (III.4.23-24)

வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்படும் கதைகள் உண்மையாக நடந்தவையா என்று ஆராயாமல் அவற்றின் கருத்தை ஆராய்ந்து உண்மை ஞானத்தை பெறுவது மட்டுமே நமக்கு நன்மை தரும் என்று இந்தப்பாடம் எடுத்துரைக்கிறது.

சடங்குகளை முறைப்படி செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுருத்த அவை சம்பந்தமான கதைகள் கூறப்படுகின்றன. உதாரணமாக வேள்வியின் இறுதியில் கொடுக்கப்படும் தானம் மிக முக்கியமானது என்பதை நசிகேதஸின் கதை மூலம் கடோபநிஷத் கூறுகிறது. உண்மையிலேயே இது நடந்ததா, பத்து வயது பாலகனை அவன் தந்தை எமனுக்கு தானம் செய்தது சரியா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டியவை. கர்மகாண்டத்தில் கூறப்படும் சடங்குகளை எவ்வித பிழையும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதை இந்த கதை வாயிலாக புரிந்து கொள்வது மட்டுமே நம் கடமை.

ஞானகாண்டத்தில் இதே கதைகள் பரமனை புரிந்து கொள்ள உதவும். புராணங்கள் மற்றும் வேதங்களில் இடம் பெறும் அனைத்து கதைகளும் முடிவில் நீயே அது என்ற உண்மையை படிப்படியாக நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. தற்கால கதைகள் போல இவை வெறும் பொழுதுபோக்குக்காக கூறப்படவில்லை. முதலில் சடங்குகளை சரியாக செய்யவும் பின் வேதத்தின் அடிப்படை கருத்தை புரிந்து கொண்டு முக்தியடையவும் இந்த கதைகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

நீயே அது என்பது உண்மையா?

‘நீயே அது’ என்ற வேத வாக்கியத்தில் உள்ள ‘அது’ என்ற சொல்லுக்கு ஆனந்தம், கடவுள் அல்லது பரமன் என்று எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அனைத்து மனிதர்களும் குறையாத இன்பத்தை தேடியலையும்பொழுது வேதம் ஆனந்தம் உன் இயற்கை என்று கூறுகிறது. இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்தால் நானும் கடவுள் என்ற திடுக்கிடும் தகவல் நமக்கு கிடைக்கும். நான் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் முடிவில் நான் பரமன் என்று உணர்ந்து கொண்டு என்றும் இருக்கும் ஆனந்தமயமான பெருவாழ்வை நாம் பெறலாம்.

நானே ஆனந்தமா?

பிடித்த பொருள்கள் அனைத்தும் ஆனந்தம் கொடுக்கின்றன. உனக்கு உன்னை பிடிப்பதால் நீயே ஆனந்தம் என்று தர்க்கத்தின் துணையுடன் வேதம் கூறும் கருத்து சரியாகத்தான் தெரிகிறது. ஆயினும் நானே ஆனந்தம் என்று புரிந்து கொண்ட பின்னும் நான் ஏன் உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசைபட்டு அவற்றின் பின் அலைகிறேன் என்ற கேள்வி எழுகிறது.

வகுப்பில் சகமாணவர்களுடன் சேர்ந்து பாடும் மகன் நன்றாக பாடுகிறானா இல்லையா என்று தந்தையால் கண்டுபிடிக்க முடிவதில்லை. மகன் பாடுவது காதில் விழுந்தாலும் மற்றவர்கள் உடன் பாடுவது மகனின் பாட்டுத்திறத்தை அறிய தடையாய் இருக்கிறது.

இதே போல் நானே ஆனந்தம் என்று தெரிந்தாலும் அதை உறுதியாக தெரிந்து கொள்வதில் ஒருதடை இருக்கிறது. அந்த தடையின் பெயர் அசுத்த மாயை.

பரமனின் சங்கல்பத்தால் ஒளி, சக்தி, பொருள் ஆகிய மூன்று தனிமங்களின் கலவையாக இந்த பிரபஞ்சம் படைக்கபட்டது. சக்தி தனிமம் அதிகமாகவும் ஒளித்தனிமம் குறைவாகவும் கொண்ட அசுத்தமாயையால் செய்யப்பட்டதுதான் நமது மனம். அசுத்த மாயை இரு செயல்களை செய்கிறது. ஒன்று, இருக்கும் பொருளை விளங்காமல் செய்து அதை இல்லை என நம்மை நம்பவைக்கிறது. இரண்டாவதாக இல்லாத பொருளை இருப்பதாக காண்பித்து நம்மை ஏய்க்கிறது.

உதாரணமாக மாலைப்பொழுதின் மயங்கிய ஒளி என்னும் தடை இரு செயல்களை செய்கிறது. ஒன்று, தரையில் கிடக்கும் கயிற்றை நம் கண்களுக்கு மறைத்து அதை இல்லை என்று நம்பவைக்கிறது. அதே சமயம் அங்கு இல்லாத விஷப்பாம்பை இருப்பதாக காட்டி நம்மை பயமுறுத்துகிறது.

அதுபோல நமது மனம் அசுத்தமாயையால் செய்யப்பட்டிருப்பதால் ஆனந்த மயமாக என்றும் இருக்கும் பரமனை இல்லை என்றும் அதே சமயம் இல்லாத உலகத்தை இருப்பதாக காட்டி நமது அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை காரணமாய் இருந்து வருகிறது.

கர்மயோகத்தால் சக்தி தனிமத்தின் ஆதிக்கம் குறைந்து ஒளித்தனிமத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது நம் மனம் இந்த உண்மையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்.

நானே கடவுளா?

நீமட்டும் கடவுள் அல்ல ஆனால் நீயும் கடவுள் என்று வேதம் கூறுவதை புரிந்து கொள்வது மிகவும் கடினமாகத்தோன்றுகிறது. ஏனெனில் சர்வசக்தி படைத்த கடவுளுடன் அற்பனான என்னை ஒப்பிட்டு பார்ப்பதற்கே பயமாய் இருக்கிறது. அப்படியிருக்க இருவரும் ஒன்றே என்று ஒன்று சேர்த்து பார்ப்பது சாத்தியமே இல்லையென நமக்குத்தோன்றும்.

நீயே அது என்ற வாக்கியத்தில் உள்ள இரண்டு சொற்களையும் தனித்தனியே ஆராய்ந்து தர்க்கத்தின் துணையுடன் இவ்விரண்டும் எப்படி ஒன்றாயிருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

10 = 10 என்று ஆசிரியர் நமக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. 8+2=1+4+5 என்று கரும்பலகையில் அவர் எழுதினால் பார்வைக்கு வெவ்வாறாகத்தெரிந்தாலும் சமக்குறியின் இருபுறம் உள்ள எண்களின் கூட்டுத்தொகை ஒன்றே என்பதை அறிய மாணவன் தன் புத்திசாலித்தனத்தை பொறுத்து சிறிது நேர முயற்சிக்கு பின் அறிந்து கொள்வான். அதே போல் வெளிப்பார்வைக்கு வேறுபட்டிருக்கும் என்னையும் கடவுளையும் எவ்வாறு ஒன்று என்று வேதம் கூறுகிறது என்று ஆசிரியரின் துணையுடன் நமது புத்தியை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

‘நீ’ என்று ஆசிரியர் கூறியதும் நம் மனதில் சரியான பொருளான ‘நான்’ என்ற எண்ணம் உதித்தாலும் அந்த நான் என்ற எண்ணத்தின் உண்மையான பொருளை நமது ஐந்து கோசங்கள் மறைத்துக்கொண்டிருப்பதால் நாம் உண்மையை உணர்வதில்லை. ஒரு துணியை பொம்மைமீது போர்த்தி அதை குழந்தையின் பார்வையிலிருந்து மறைப்பது போல் இந்த ஐந்து கோசங்கள் நம் உண்மை உருவை மறைப்பதில்லை. வெள்ளித்திரையில் ஒளிப்பிம்பங்கள் காதலர்கள் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி நம் மனதின் கவனத்தை கவர்ந்து அதை திரை என்று ஒன்று இருப்பதை அறியாதபடி மறைப்பதுபோல் இந்த ஐந்து கோசங்கள் தாம் இருப்பதற்கு ஆதாரமான உண்மையை நம்மிடமிருந்து மறைக்கின்றன.

இதனால் பாதிக்கப்படுவது ஐந்து கோசங்களில் ஒன்றான மனமே தவிர அவற்றின் ஆதாரமான நான் அல்ல. நான் என்ற எண்ணத்துக்கு ஒன்றுக்குமேற்பட்ட கோசங்களை பொருளாக கொள்ளும் வரை நம் வாழ்வில் துன்பங்கள் தொடரும்.

மேகம் தன் இருப்பிற்கு ஆதாரமான சூரியனை நம் பார்வைக்கு அகப்படாமல் செய்தாலும் ஒளியைத்தருவது மேகம் அல்ல என்று நாம் அறிகிறோம். மேலும் மேகத்தை பார்க்க முடிவதால் சூரியனின் இருப்பை அறிந்து கொள்கிறோம். ஆனால் அசுத்த மாயையின் ஆதிக்கம் அதிகமிருப்பதால் நாம் உயிருடன் இருப்பதற்கு உடலும் மனமும் அவசியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் உடலுக்கும் மனதுக்கும் ஆதரமான உணர்வை நாம் கவனிப்பதில்லை.

உண்மையான உணர்வும் பொய்யான உடலும் கலந்து இருக்கும் கலவையை நான் என்ற சொல்லுக்கு பொருளாகக்கொள்ளும் அறியாமையை அகற்றி அறிவு பூர்வமாக உண்மையில் ‘நான் யார்’ என்ற கேள்விக்கு பதில் காணவேண்டும்.

எப்பொழுதும் மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தாலும் நான் என்ற சொல்லின் பொருளுக்குள் அதை சேர்த்துக்கொள்ளாததற்கு காரணம் அது இல்லாவிட்டாலும் நான் இல்லாமல் போய்விடுவதில்லை என்று நமக்கு தெரிந்திருப்பதால்தான். அதேபோல் நம் உடல் இல்லாவிட்டாலும் கனவுகாணும்பொழுது நம்மால் எல்லா காரியங்களையும் செய்யமுடிகிறது. எனவே நான் என்ற சொலின் பொருளில் மூக்குக்கணாடியைப்போல் உடலையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் காணாமல் போய்விடுகிறது. இருந்தும் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்பதால் என் மனமும் நான் அல்ல.

உணர்வு இல்லாமல் நான் எப்பொழுதும் இருப்பதில்லை. எனவே நான் என்பதன் உண்மை பொருள் உணர்வு. என் மனம் உடல் உள்ளிட்ட ஐந்து கோசங்களும் மூக்குக்கண்ணாடியைப்போல இந்த உலக அனுபவங்களை பெற உதவும் கருவிகளே தவிர அவை நான் அல்ல.

நீயே அது என்ற வேதத்தின் போதனையில் சமக்குறிக்கு இந்தப்பக்கம் இருக்கும் சொல்லான நீ என்பதன் பொருள் உணர்வு என்று புரிந்துகொண்டபின் மறுபக்கம் இருக்கும் அது என்ற சொல்லின் பொருளான கடவுளை ஆராயவேண்டும்.

யாருடைய உதவியுமில்லாமல் சுயமாகவே ‘நான்’ என்ற சொல்லுக்கு தவறான பொருளை நாம் அறிந்து வைத்திருந்தோம். கடவுள் என்ற சொல்லுக்கு கடவுளைப்பற்றி அறியாதவர்கள் செய்யும் மதப்பிரச்சாரங்களின் உதவியுடன் தவறான பொருளை கற்பித்து வைத்திருக்கிறோம்.

மாயா சக்தியுடன் கூடிய உணர்வே கடவுள் என்பது வேதம் கூறும் விளக்கம். ஐந்து கோசங்கள், நான் என்பதன் உண்மைப்பொருளை மறைத்திருந்தது போல் வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்ற ஐந்து பூதங்களாலான இந்த பிரபஞ்சம் கடவுளை நம்மிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறது. பிரபஞ்சத்தை பார்க்கும் பொழுது உண்மையில் நாம் கடவுளைத்தான் பார்க்கிறோம். ஏனெனில் பிரபஞ்சம் என்ற மாயையின் ஆதாரமான உணர்வுதான் உண்மையில் கடவுள்.

கல்லூரியின் இருபத்தியைந்தாம் ஆண்டுவிழாவில் நம் பக்கத்தில் பேசாமல் உம் என்று அமர்ந்துள்ள வழுக்கைத்தலையரை ‘இவனை உனக்குத்தெரியவில்லையா’ என்று ஒருவர் அறிமுகபடுத்தியவுடன் இன்முகமும் துடுக்குப்பேச்சுடனும் கூடிய இளைஞன் முகம் நம் மனதில் தோன்றுகிறது. இருவரிடையே எவ்வித ஒற்றுமையும் இல்லாவிட்டாலும் கூட அவனா இவர் என்று ஒரு நொடி ஆச்சரியப்பட்டாலும் சிறிது நேரத்திற்குள் அவருடன் அன்யோன்ய அன்புடன் பழங்கதைகளை பேசி சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

நான் என்ற சொல்லுக்கு மாறும் மனதையும் மடியும் உடலையும் பொருளாக கொள்ளாமல் இவற்றின் ஆதாரமான உணர்வை நான் என்று புரிந்து கொண்டால் நான் எப்படி கடவுளாக இருக்கமுடியும் என்ற கேள்வி மறைந்து ஆஹா இது தெரியாமல் போய்விட்டதே என்ற ஆச்சரியம் தோன்றுகிறது. சமக்குறியின் இருபக்கமும் ஒரேவிடையை அளிப்பதால் கணக்கு போட்டு முடித்த சந்தோஷத்தில் வகுப்பில் கையை உயர்த்துகிறோம்.

நான் பரமன்

‘நான் உண்மையிலேயே அரசனா அல்லது அரசன் போல் கனவு கண்டுகொண்டிருக்கும் பிச்சைக்காரனா?’ என்று ஜனகர் தன் குரு அஷ்டவக்ரரிடம் கேட்டார். அதற்கு அவர் ‘நீர் இரண்டும் அல்ல’ என்று பதில் சொன்னார். கனவில் கனவு எவ்வளவு உண்மை என்று நமக்குத்தோன்றுகிறதோ அதுபோல்தான் நனவும் உண்மையாக நமக்குத்தெரிகிறது. கண்ணுக்குத்தெரிந்து கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலேயே இல்லை என்றும் அது கனவைப்போல் ஒரு மாயை என்றும் புரிந்துகொள்வது சற்று கடினம்தான்.

கனவில் நம்மிடம் ஒருவர் நீ இப்பொழுது கனவுகண்டுகொண்டிருக்கிறாய் என்று சொன்னால் நாம் அவரை நம்பப்போவதில்லை.

ஒரு பொருளை இருக்கிறது என்று நிரூபிக்க அதன் இருப்பை நாம் உணர்வது மட்டும் போதாது. அதை விளக்கவும் வேண்டும். கனவில் பொருள்களின் இருப்பை உணர்ந்தாலும் அவற்றை விளக்க முடியாததால் நம்மால் கனவை மாயை என்று விழித்தெழுந்ததும் நிராகரிக்க முடிகிறது. நம் கனவில் பங்குபெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கனவை உண்மை என்று சத்தியபிரமாணம் செய்தாலும் நாம் கனவு உலகம் உண்மையில் இல்லை என்று முடிவு செய்கிறோம். ஆனால் விழித்தெழுந்ததும் குடிக்கும் பால் உண்மையிலேயே இருக்கிறது என்று நாம் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் ஒத்துக்கொள்வதால் பால் என்றால் என்ன என்பதை விளக்க முயல்வதில்லை. பாலை பார்ப்பதாலும் குடிக்கும்பொழுது அதன் சுவை தெரிவதாலும் அது உண்மையில் இருக்கிறது என்று நம்பிவிட்டால் கனவில் குடிக்கும் பாலையும் உண்மை என ஒத்துக்கொள்ள வேண்டிவரும்.

பால் என்றால் என்ன என்று விளக்க முடிந்தால் மட்டுமே அதை உண்மையில் இருக்கிறது என்று நிரூபணம் ஆகும். வெள்ளையாக இருப்பது பால் என்று அதன் குணங்களின் அடிப்படையிலோ, பசுவிலிருந்து கிடைப்பது பால் என்று மற்றொரு பொருளுடன் அதற்கு இருக்கும் தொடர்பின் அடிப்படையிலோ, தண்ணீர் போல இருப்பது பால் என்று அதில் உள்ளடங்கிய வெவ்வேறு பொருள்களின் அடிப்படையிலோ, உடலுக்கு சக்தி தருவது பால் என்ற அதன் செயல்களின் அடிப்படையிலோ நாம் எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும் அவை முழுமையான விளக்கமாக அமையாது. பின்வரும் மூன்று தோஷங்கள் உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் விளக்கவே முடியாது என்பதை நிரூபிக்கின்றன.

தோஷம் 1: வெள்ளை என்ற குணத்திற்கும் பாலுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் அந்த விளக்கம் முன்னுக்குப்பின் முரணானது.

தோஷம் 2: வெள்ளை என்ற குணம் கொண்ட பால் என்றால் என்ன என்ற கேள்விக்கு மறுபடியும் வெள்ளையானது என்று பதில் சொல்லமுடியாது.

உன் வீடு எங்கே இருக்கிறது? கிருஷ்ணன் வீட்டிற்கு பக்கத்தில்.
கிருஷ்ணன் வீடு எங்கே இருக்கிறது? என் வீட்டிற்கு பக்கத்தில்!

எனவே வெள்ளை என்ற குணத்தை தவிர வேறு ஒரு குணத்தைச்சொன்னால் மட்டுமே பால் என்றால் என்ன என்பதை விளக்க முடியும்.

தோஷம் 3: அந்த இரண்டாவது குணத்துடன் கூடிய பால் என்றால் என்ன என்றால் மூன்றாவது குணத்தை சொல்லவேண்டிவரும்.

உன் வீடு எங்கே இருக்கிறது? கிருஷ்ணன் வீட்டிற்கு பக்கத்தில்.
கிருஷ்ணன் வீடு எங்கே இருக்கிறது? ராமன் வீட்டிற்கு பக்கத்தில்.
ராமன் வீடு எங்கே இருக்கிறது. பரதன் வீட்டிற்கு பக்கத்தில்!

இப்படியே தொடராக எவ்வளவு குணங்களை சொன்னாலும் பால் என்றால் என்ன என்று விளக்கவே முடியாது. இதே போல் பால், பசுவிலிருந்து வந்தது என்றால் பசு எங்கிருந்து வந்தது என்று மறுபடியும் தொடர் கேள்விகள் கேட்டால் எந்தப்பொருளையும் விளக்கவே முடியாது என்பது புரியும். விளக்கமுடியாத பொருள் கனவில் கண்ட பொருள் போல் உண்மையில் இல்லாத பொருள். எனவே இந்த உலகம் இருப்பது போல் தோன்றும் மாயை என்பது நிரூபணம் ஆகிறது.

பரமன் இருக்கின்றானா?

உலகத்துக்கு ஆதாரம் பரமன் என்று வேதம் பரமனை விளக்குகிறது. ஆனால் பரமனுக்கும் உலகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதால் மேற்கொண்டு உலகத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலையிருளில் தோற்றமளிக்கும் பாம்பிற்கும் கயிற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கயிற்றை பாம்பாக பார்ப்பது நம் அறியாமை. அதுபோல் பரமனை உலகமாக பார்ப்பதும் நம் அறியாமை.

உலகம் மாயை  என்றால் பரமன் வெறும் கற்பனை என்று கூறமுடியாது. ஏனெனில் பரமனை பற்றிய விளக்கம் மட்டும் இல்லாமல் நம்மால் பரமனை நேரடியாக உணரவும் முடியும். கண், காது போன்ற ஐந்து புலன்கள் நம்மிடம் இல்லாவிட்டால் உலகம் உடனே மறைந்துவிடும். ஆனால் நான் இருக்கிறேன் என்பதை மிகத்தெளிவாக உணர்வோம். இருக்கும் அந்த நான்தான் பரமன்.

ஆக முழுவதும் விளக்கமுடிவதாலும் இருப்பதை நேரடியாக உணர்வதாலும் பரமன் மட்டுமே உண்மையில் இருக்கிறான். உலகம் இருக்கிறது என்பது கனவில் கனவுலகம் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை. உலகம் இருப்பதாக உணர்கிறோமே தவிர உண்மையில் இல்லை என்பதை தர்க்கபூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிரூபித்தபின் நான் பரமன் என்ற நம் அறிவு உறுதிபடும்.

முடிவுரை :

விழித்தவுடன் கனவுலகம் எவ்வாறு பொய்யாகப்போகிறதோ அதுபோல வேதம் கூறும் நீயே அது என்ற வாக்கியம் புரிந்தவுடன் இந்த உலகம் கனவாகிவிடும். நம் கண்கள் உலகத்தில் உள்ள பொருள்களின் வண்ணத்தையும் வடிவத்தையும் மட்டும் காண்பிக்கின்றனவேயன்றி அவை உண்மையில் இருக்கின்றன என்று நம்மை நம்பச்சொல்லவில்லை. ஒரு மாயாஜாலகண்காட்சியில் அமர்ந்திருக்கும்பொழுது காணும் வினோதகாட்சிகள் எவ்வளவு உண்மையாக நம் கண்ணுக்கு காட்சி அளித்தாலும் அவற்றை நாம் உண்மை என்று நம்புவது இல்லை. ஆனால் தத்ரூபமாக தெரியும் இந்த உலக நிகழ்வுகளை மட்டும் ஆராயாமல் உண்மை என்று ஏற்றுக்கொள்வது அறியாமை. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.

தீர விசாரித்தால் உலகம் இருப்பதுபோல் தெரியும் மாயத்தோற்றம் என்றும் இருப்பது பரமன் என்கிற நான் மட்டும்தான் என்ற உண்மை தெரியவரும்.


பயிற்சிக்காக :

1. வேதத்தில் கதைகள் கூறப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன?

2. நானே ஆனந்தம் என்பதை அறியத்தடையாய் இருப்பது எது?

3. ஒரு பொருள் இருக்கிறது என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும்?   

சுயசிந்தனைக்காக :

1. நம் ஐந்து புலன்கள் நம்மைச்சுற்றி ஒரு உலகம் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை நம் மனதில் ஏற்படுத்திவருகின்றன என்றும் உண்மையில் உலகத்தில் திடப்பொருள் என்று எதுவுமே இல்லை என்றும் கூறும் குவாண்டம் பொறியியல் ஆராய்ச்சிகளின் நிரூபணங்களை ஆராய்க.

2. உண்மையான ஒரு ஆதாரம் இல்லாமல் பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியுமா?