Wednesday, March 3, 2010

Lesson 98: Not this...Not this... ( பிரம்ம சூத்திரம் 3.2.22-30 )

பாடம் 98: நான் அவனில்லை
பாடல் 340-348 (III.2.22-30)

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று பரமன் ஒன்றாகவும் பலவாகவும், அருவமாகவும் உருவமாகவும், உண்மையாகவும் பொய்யாகவும், வரையரைக்கு உட்பட்டவனாகவும் அப்பாற்பட்டவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பதாக கூறுவதன் காரணத்தை விளக்கி நான் யார்என்ற கேள்விக்கு நாம் சாதாரணமாக கொடுக்கும் தவறான பதிலகளை இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.

அசலும் நகலும்

திரைப்படத்தில் ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பது போல் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். தான் ஏற்கும் வேடங்கள் வெறும் கற்பனை உருவங்கள் என்றும் பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வெவ்வேறு வேடங்களில் நடிக்கும் நான், வேடங்களிலிருந்து வேறு பட்டவன் என்றும் அந்த நடிகனுக்கு தெளிவாக தெரியும். ஆனால் வாழ்வில் நாம் ஏற்கும் மகன், கணவன், தந்தை, குடிமகன், மாணவன், பட்டதாரி, தொழிலாளி, மேலாளர் போன்ற பல்வேறு பாத்திரங்களிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று நமக்கு தெரிவதேயில்லை. ஆகவேதான்நான் யார்?’ என்ற கேள்விக்கு நடிகன் பாத்திரத்தின் பெயரைச்சொல்வதுபோல் தவறான பதிலை கொடுத்து வருகிறோம்.

ஒரு நகரத்தில் உள்ள உயிர்காட்சியகம், அருங்காட்சியகம் பொன்ற இடங்களை பார்க்க விரும்பும் வெளிநாட்டு பயணி ஒருவர் சுற்றுலா அலுவலகத்தின் உதவியை நாடினால் அவருக்கு ஒரு வரைபடம் கொடுக்கப்படும். அதில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களும் அவற்றை சென்றடைய சரியான பாதையும் காண்பிக்கபட்டிருக்கும். அந்த வரைபடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்: ‘நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்என்று சுட்டிக்காட்டும் ஒரு அம்புக்குறி.

நாம் தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்று தெரிந்தால்தான் அந்த வரைபடத்தை உபயோகித்து எல்லா இடங்களுக்கும் பயணிக்க முடியும். அது போல நான் யார் என்பதை அறிந்தால் மட்டுமே நாம் ஏற்கும் அனைத்து பாத்திரங்களிலும் திறம்பட செயலாற்ற முடியும்.

தாய் பிறந்தாள்

ஒரு குழந்தை பிறக்கும்பொழுதுதான் தாயும் பிறக்கிறாள். குழந்தைக்கு மட்டும்தான் அவள் தாய். அதே பெண் அவளுடைய தாய்க்கு மகள். தாய், மகள் ஆகியவை ஒரு குறிப்பிட கால கட்டதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரை பொறுத்து மாறும் பொது உண்மை (Relative reality). மாணவர்களே இல்லாத குரு யாரும் இருக்க முடியாது. ஒரே ஒரு மாணவன் இருந்தாலும் அவனை பொறுத்தவரை அவர் குருதான். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் மனித சமுதாயம் பல குழப்பங்களில் ஆழ்ந்து உள்ளது.

ஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க வெவ்வேறு ஒப்பனைகள் செய்துகொள்வான். ஒரு வேடத்தை கலைத்துவிட்டுத்தான் மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வாழ்வில் நாம் பிறந்தது முதல் ஒன்றன் பின் ஒன்றாக பல வேடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு நமது சொந்த முகத்தையே அறியாதவர்களாக குழம்பியிருக்கிறோம்.

இதனாலேயேசாமியார் நடிகையுடன் உல்லாசம்’, ‘போலீஸ்காரர் திருடினார்என்பது போன்ற நடக்கமுடியாத நிகழ்வுகளை நிஜம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரு திருடனால் மட்டுமே திருட முடியும். வேறு யாராலும் திருட முடியாது. போலீஸ்காரன் என்பது அவனது உத்தியோகம். அதே போல்சாமியார்’, ‘நடிகைஎன்பவைகள் வகிக்கும் பாத்திரங்கள். ஒரு ஆணும் பெண்ணும் உல்லாசமாக இருக்கலாம். வேறு யாராலும் அது முடியாது. பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவர் என்பது தெரிந்தால் ஒரு பாத்திரத்தின் செயலை மற்றதன் மேல் ஏற்றி தவறாக புரிந்து கொள்ள மாட்டோம்.

ஒரே நடிகர் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதால் கெட்டவன் செய்த கொலைக்கு நல்லவனை பொறுப்பாளியாக்க முடியாது. நிஜ வாழ்வுக்கும் இது பொருந்தும். போலீஸ், தந்தை, மகன், கணவன் ஆகிய பாத்திரங்களை ஏற்று வாழும் ஒருவன் ஒரு பொருளை திருடினால் அவன் திருடன். திருடனுக்கு ஏற்ற தண்டனையை தரலாமே தவிர திருடியது போலீஸா கணவனா என்ற ஆராய்ச்சி நேரத்தை வீணாக்கும் செயல்.

உபயோகிக்கும் கருவி

கத்தியை உபயோகபடுத்துவன் கொலைகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஒரு மருத்துவனாகவோ, சமையற்காரனாகவோ அல்லது முடிதிருத்துபவனாகவோ இருக்கலாம். அது போல் ஒருவன் தன் உடலை காவல் காக்கவோ அல்லது திருடவோ பயன்படுத்தலாம்.

உடலும் மனமும் நாம் உபயோகிக்கும் கருவிகள். அவற்றை உபயோகித்து நாம் பல பாத்திரங்களின் கடமைகளை செய்கிறோம். நாம் வகிக்கும் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. காவல் காப்பவன் போலீஸ். திருடுபவன் திருடன். ‘போலீஸ்காரன் திருடினான்’, ‘நல்லவன் கொலை செய்தான்என்பது போன்ற தவறான எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.    
கடமையில் முரண்பாடு (Role conflict)

நான் யார், எதற்காக இந்த பாத்திரத்தை ஏற்றுள்ளேன் என்ற கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாத காரணத்தால் நாம் நம் வேலைகளை சரிவர செய்ய முடிவதில்லை. உதாரணமாக வங்கியில் மேலாளர் ஒருவர் தன் மகனின்  படிப்புக்காக வங்கியின் பணத்தை கையாடலாமா என்ற கேள்வியே தவறு என்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. ஏனெனில் வங்கி மேலாளர், நடிகர், போலீஸ்காரர், சாமியார், ஜனாதிபதி, ஆசிரியர் ஆகியோருக்கு மகன் இருக்கவே முடியாது.

பெற்றோருக்கு மட்டும் தான் மகன் இருக்க முடியும். மேலாளர் என்பது வங்கியுடன் உள்ள உறவுமுறை. மேலாளர் பதவியை வகித்து தனது கடமையாக பணத்தை எண்ணும் பொழுது அந்த வேடத்தை கலைக்காமலேயே தந்தை என்ற மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்வதால் இந்த பணத்தை மகனின் கல்விக்காக எடுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.

தந்தை என்பதும் மேலாளர் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இருவேறு பாத்திரங்கள் என்றும், நாம் நமது உடல் மற்றும் மனம் ஆகிய கருவிகளை பயன்படுத்தி இவ்விரு பாத்திரங்களின் கடமைகளையும் செய்கிறோம் என்ற தெளிவும் இருந்தால் எவ்வித குழப்பமும் வராது. இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் நல்லவனாக நடிக்கும்பொழுது கெட்டவனுடைய வசனங்களை குழப்பிக்கொள்வதில்லை. தெளிவாக அந்தந்த பாத்திரத்தினுடைய வசனங்களை பேசி செயல்பாடுகளை சரியாக செய்வதற்கு ஒரே காரணம், மனதில் உள்ள தெளிவுதான். ஆனால் நமக்கு அந்த தெளிவு இருப்பதில்லை. வங்கி மேலாளருக்கு மகன் இருக்கிறானா அல்லது தந்தை மேலாளராக பணிபுரிகிறாரா என்ற இரு தவறான பதில்களிக்கிடையே அலை பாய்ந்து கொண்டிருக்கிறோம். பணத்தை எடுத்தால் வங்கி மேலாளர் என்ற பொறுப்பிலிருந்து தவறியவராகவும் பணத்தை எடுக்காவிட்டால் தந்தையின் கடமையிலிருந்து தவறியவராகவும் நினைக்கிறோம்.

எப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரங்களிலிருந்து நான் வேறானவன் என்ற தெளிவு நமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் நமக்கு நிம்மதி கிடைக்கும். மேலும் நம் எல்லா பொறுப்புகளையும் எவ்வித முரண்பாடோ மனகஷ்டமோ இல்லாமல் செவ்வனே செய்யமுடியும்.   

நல்லவனா கெட்டவனா?

இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் எந்த வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செய்யவேண்டும்? இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதன் படி நடக்கவேண்டுமா அல்லது சத்தியமே வெல்லும் என்பதால் நல்லவன் வேடத்தை சிறப்பாக செய்யவேண்டுமா?

மனதில் குழப்பமில்லாத நடிகர் தம் முழுதிறமையையும் உழைப்பையும் கொடுத்து எது மிகவும் நன்றாக இருக்கிறது என்று யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு  இரு வேடங்களையும் சிறப்பாக செய்வார்.

நான் வங்கியில் வேலை செய்யும் காரணமே என் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பை ஒழுங்காக செய்வதற்காகத்தான். எனவே மேலாளர் என்ற பாத்திரத்தை விட குடும்பத்தலைவர் என்ற பாத்திரம்தான் முக்கியமானது என்று ஒரு சிலர் எண்ணுவார்கள்.
மேலாளர் என்ற பதவியில் இருப்பதால்தான் பணம் கிடைக்கிறது. எனவே அதுதான் மற்ற அனைத்து பாத்திரங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வேலையை சரியாக செய்யவதற்காக வீட்டுக்கே வராமல் அலுவலகத்தில் குடியிருந்தாலும் தவறில்லை என்று மற்றும் பலர் எண்ணுவார்கள்.

இரண்டும் தவறான எண்ணம். நடிகனை நடித்துத்தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்துவதில்லை. ஆனால் நடிகன் என்ற வேலையை ஏற்றுக்கொண்ட பின் முழுஉழைப்பை கொடுத்து நடித்துத்தான் ஆகவேண்டும். அதுபோல நம்மையும் யாரும் உத்தியோகம் செய்துதான் ஆகவேண்டும் என்றோ குடும்பத்தலைவராக பொறுபேற்றுகொள்ள வேண்டும் என்றோ கட்டாயப் படுத்துவதில்லை. வேண்டாமென்றால் எந்த பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஏற்று கொண்ட பாத்திரங்கள் அனைத்தையும் எவ்வித பாகுபாடுமில்லாமல் மிகச்சிறப்பாக செய்யவேண்டியது நமது கடமை.

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் மீது எரிந்து விழக்கூடாது. இப்படி நடப்பதற்கு காரணம் வீடு திரும்பியவுடன் மேலாளர் என்ற வேடத்தை கலைக்காமல் அதன் மேலேயே கணவன், தந்தை போன்ற வேடங்களை போட்டுக்கொள்வதுதான். நமது அனைத்து எண்ணங்களும் ஏதாவது ஒரு பாத்திரத்தை சார்ந்தே இருக்கும். எந்த வேடம் அணிந்திருக்கிறோம் என்ற தெளிவு இருந்தால் எண்ணங்களும் தெளிவாகவே இருக்கும்.  

நாம் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்தும் நமது நன்மைக்காக மட்டும்தான் என்ற தெளிவு நமக்கு ஏற்பட வேண்டும். ந்த தெளிவு ஏற்படும் வரை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேடங்களையும் கழட்டிவிட்டு நம்முடைய சொந்த முகத்துடன் ஒருசிலநேரமாவது இருக்க வேண்டும். ஒரு நாளில் காலை எழுந்தவுடன், உறங்குவதற்கு முன், அலுவலகத்துக்கு செல்லும் முன், திரும்பிய பின் மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு பின் ஆகிய ஐந்து தடவைகள் நாம் நம் சொந்த முகத்துடன் ஒரு சில நிமிடங்களாவது இருந்து பழகவேண்டும்.

நமது சொந்த முகம்: என்றும் ஆனந்தமாக இருக்கும் அறிவுருவம்.

முடிவுரை :

நான் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொண்டிருப்பதால் ஒன்றாகவும் பலவாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு தெரியும் உடலைக்கொண்டு ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும்  நான் எந்த உருவமில்லாத அருவமானவன். நான் மட்டும்தான் உண்மை. நான் ஏற்றுக்கொண்டிருக்கும் அனைத்து பாத்திரங்களும் இன்றிருந்து நாளை இல்லை என்று மாறிக்கொண்டிருக்கும் நிலையற்ற பொய்கள்.

இந்த உண்மைகளை நமக்கு உணர்த்ததான் வாழ்வில் முதுமை வருகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் மேலாளர் என்ற பாத்திரம் மறைந்து விடுகிறது. பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு மகன் என்ற பாத்திரம் முடிந்து விடுகிறது. இதுபோல் ஒவ்வொரு பாத்திரமும் முடிவடையும் பொழுது நான் உண்மையில் யார் என்ற கேள்வி நம் மனதில் எழலாம். இதை தவிர்க்கவே நாம் தொடர்ந்து ஏதாவது வேடம் போட்டுக்கொண்டு இடைவிடாமல் ஏதாவது வேலை செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடரும்வரை நமக்கு நிம்மதி இருக்காது.

நான் பரமன். நான் ஏற்று நடித்து உயிர்கொடுக்கும் பல்வேறு பாத்திரங்கள் என்னுடைய மாயா சக்தியின் வெளிப்பாடு. ஒவ்வொரு பாத்திரத்தின் கடமைகளை திறம்பட செய்வதன் மூலம் என்னுடைய மனம் என்னும் கருவியை கூர்மையுள்ளதாக ஆக்கி அதன் பின் வேதம் படித்து நான் யார் என்பதை தெரிந்து கொண்டு வாழ்வு முழுவதும் குறையில்லா ஆனந்தத்துடன் இருப்பேன் என்று நாம் அனைவரும் பரமனை அறிய ஆசைகொள்ள வேண்டும்.

பயிற்சிக்காக :

1. ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பதற்கும் நாம் பல பாத்திரங்களை ஏற்றுகொள்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

2.’போலீஸ்காரர் திருடினார்என்று சொல்வதில் என்ன தவறு?

3.நாம் பயன்படுத்தும் இரு கருவிகள் யாவை?

4.நாம் ஏற்கும் எல்லா பாத்திரங்களையும் திறம்பட செய்யவேண்டியதன் அவசியமென்ன?

5.நமது சொந்த முகம் என்பது யாது?

சுயசிந்தனைக்காக :

1.நடிப்பது உண்மையாக நடப்பதை விட மேலானது  என்று எப்படி கூறமுடியும்?

2.போலீஸ்காரன் திருடினால் தண்டனை அதிகமா?

3.நாம் வகிக்கும் வெவ்வேறு பாத்திரங்களின் தன்மைகளை ஆய்க.