Tuesday, April 20, 2010

Lesson 115: Discarding all duties to the world ( பிரம்ம சூத்திரம் 3.3.26 )

பாடம் 115: துறவு இன்பத்துக்காக
பாடல் 385 (III.3.26)

வாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலை பற்றிய விளக்கங்களை கொடுத்து நம் அனைவரது வாழ்வின் இறுதியான நோக்கமான முக்தியை அடைய நாம் செய்யவேண்டிய செயல்களை இந்த பாடம் நினைவு படுத்துகிறது.

வேதம் காட்டும் பாதை

எந்நாளும் இன்பமாக அனுபவிப்பதற்காகவே உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான மக்கள் இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் பரமனை பற்றிய தெளிவான அறிவு ஏற்படாததுதான். எனவே வேதம் மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என வாழ்வை நான்காக பிரித்து பரமனை அறிய தேவையான மனபக்குவத்தை அடைய பாதை வகுத்துள்ளது. இந்த பாதையில் முறையாக பயணம் செய்தால் முடிவில் பரமனை அறிந்து துன்பம் கலவா இன்ப வாழ்க்கையை அடையலாம்.

வாழ்வில் துன்பத்திற்கு காரணம்

பொருள்களின் மீது நமக்கு இருக்கும் பற்றுதான் நம் துன்பத்திற்கு காரணம். ‘உன்னோடு சேர்ந்து வாழ்ந்தால் என் வாழ்வு இன்பமாக இருக்கும்என்ற எண்ணத்தில் தவறு இல்லை. ஆனால் நீ இல்லாமல் என்னால் இன்பமாக வாழ முடியாதுஎன்ற தவறான அறிவு நம்மை பொருள்களின் மீதும் மனிதர்கள் மீதும் பற்றுதல் வைக்க காரணமாயிருக்கிறது. இந்த பற்றுதலைத்தான் அன்பு என்றும் காதல் என்றும் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதனுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறோமோ அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அது இருந்தால் இன்பம் இல்லையென்றால் துன்பம்என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த பற்று நம்மை நிச்சயம் துன்பத்தில் ஆழ்த்தும்.

பற்றுதல் ஏன் துன்பத்தை தருகிறது?

உலகத்தில் உள்ள பொருள்களிலிருந்து நமக்கு கிடைக்கும் இன்பமும் துன்பமும் சம அளவாக இருப்பதற்கு பற்றுதான் காரணம். வேண்டியது கிடைத்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டால் அது தொலைந்தவுடன் அதே அளவு துயரம் ஏற்படும். பணம், பதவி, பொன், பொருள், புகழ், பெயர், பெருமை, செல்வாக்கு, குடும்பம், நட்பு, சுற்றம், வேலை என நாம் எவற்றின் மீது பற்றுதல் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பவை.  இன்றிருப்பது நாளை இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அனுபவிக்க கூடிய மனநிலையோ உடல்வலுவோ நம்மிடம் இருக்காது. எனவே பற்று இருக்கும்வரை இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை தவிர்க்க முடியாது.

துறவு என்றால் என்ன?

பற்றை துறப்பது துறவு. மாணவப்பருவத்தில் முறையாக வேதத்தை படித்து நான் பரமன், என் பொழுதுபோக்கிற்காக என்னை ஆதாரமாக கொண்டு காட்சியளிக்கும் இந்த உலகம் உண்மையானது அல்ல என்ற அறிவை அடைந்திருந்தால் உலகத்தில் இருக்கும் பொருள்களிடமும் மனிதர்களிடமும் எவ்வித பற்றும் ஏற்படாது. ஆனால் பெரும்பாலோர் இந்த அறிவைப்பெறாமலேயே உலகம்தான் இன்பமான வாழ்வின் ஆதாரம் என்ற தவறான அறிவுடன் இல்வாழ்வை தொடங்கி விடுகிறார்கள். எனவே இந்த தவறான அறிவு வலுபெற்று பற்றுதல் அதிகமாகிறது.

உலகத்தில் பற்று இருக்கும்வரை வேதத்தை படிக்க ஆசை வராது. எனவே தானம், தவம் போன்ற கடமைகளை விதித்து இந்த பற்றினை மெது மெதுவாக தியாகம் செய்ய வேதம் வழிவகுக்கிறது. உலகத்தின் மீதுள்ள பற்றை குறைத்து கடவுளின் மீதுள்ள பற்றை அதிகபடுத்தி வேதத்தை முறையாக படிக்க அனைத்து நேரத்தையும் முயற்சியையும் செலவிடும் நிலை துறவு நிலை ஆகும். இன்பத்தை துறப்பது துறவு நிலை அல்ல. துன்பம் கலவா இன்பத்தை அடைய வேதம் படிக்க வேண்டும். துறவு நிலை இதற்கு உதவும் ஒரு சூழ்நிலையை நமக்கு தருகிறது.

துறவு நிலையின் ஆரம்பமும் முடிவும்

வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலையில் உள்ளவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் படிப்படியாக தானம் செய்துவிட்டு என்னுடையது என்று எதுவுமேயில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் துறவு நிலையில் நுழைகிறார்கள். மரணம்தான் துறவு நிலையின் முடிவு.

இரண்டு வகையான துறவு

புத்தக அறிவை மட்டும் பெற்று ஒருவன் மருத்துவனாக முடியாது. படித்து முடித்த பின் குறைந்தது ஒரு வருடம் மருத்துவனாக வேலை செய்தபின்தான் மருத்துவன் என்ற பட்டம் கிடைக்கும். இந்த ஒருவருட பயிற்சி காலத்தில் கிடைக்கும் அனுபவம் ஒருவனை முழுதகுதிவாய்ந்த மருத்துவனாக மாற்றுகிறது.

எப்படி மருத்துவன் என்ற பட்டத்தை பெறுவதற்கு மருத்துவனாக வேலை செய்யவேண்டுமோ அதுபோல துறவியாக ஆவதற்கு பொருள், சுற்றம் ஆகிய அனைத்தையும் துறந்து துறவியாக வேண்டும்.

உண்மையான துறவிக்கு மனதளவில் எவ்வித பற்றும் கிடையாது. மனதில் உள்ள பற்றுதலை குறைக்க பொருள்களை தானம் செய்து ஐம்புலன்களை அடக்கி தவம் செய்து துறவியாக செயல்படவேண்டும். அப்பொழுதுதான் மாறும் உலகின் மேல் உள்ள கவனத்தை மாறா பரமனை அறிந்து கொள்ள உபயோகபடுத்த முடியும்.

துறவு நிலையில் செய்யவேண்டிய கடமைகள்  

உண்மையான துறவிக்கு ஒரு கடமையும் இல்லை. பயிற்சிகாலத்தில் இருக்கும் துறவிகள் பொருளீட்ட எவ்வித வேலையும் செய்யாமல் கடவுளை ஆராதிப்பது, தியானம் செய்வது, வேதம் ஓதுதல் என்று தங்கள் மனப்பக்குவத்திற்கேற்ற ஆன்மிக செயல்களை மட்டும் செய்யலாம். மக்கள் சேவையிலும் ஈடுபடலாம். கிடைத்ததை உண்டு, எவ்வித போகப்பொருளுக்கும் ஆசை படாமல், எளிய வாழ்வை வாழ்வது பயிற்சிகாலத்தில் இருக்கும் துறவிகளின் கடமை.

இளமையில் துறவு

மாணவப்பருவம் முடியுமுன் வேதத்தை பயின்று முடிக்காதவர்கள் பொதுவாக உலக இன்பங்களால் கவரப்பட்டு இல்வாழ் பருவத்தை தொடங்கிவிடுவார்கள். ஒரு சிலர் தங்களின் அறிவுத்திறன் மூலமும் மற்றவர்களின் வாழ்க்கையை ஊன்றி கவனித்ததன் விளைவாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு மேற்கொண்டு பரமனை அறிந்து கொள்ள வேதத்தை முறையாக படிக்கும் முயற்சியை தொடர்வார்கள். இதுபோல துறவியாவதற்கு பெற்றோரின் சம்மதம் அவசியம்.

இளவயதில் துறவியானவர்களின் ஒரே கடமை வேதத்தை பயில்வதும் சொல்லித் தருதலும்தான். இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்ற இளஞர்களின் சேவையை நாடுவது போல இளமையில் துறவி மேற்கொள்பவர்களை ஆதரித்து காப்பதும் சமூகத்தின் கடமை. ஏனெனில் பகைவர்கள் உள்ளே புகுந்துவிடாமல் படைவீரர்கள் நாட்டை காப்பது போல் வாழ்வில் துன்பம் ஏற்படாமல் காக்கும் வழியை படிப்பதற்கும் பரப்புவதற்கும் வயதில் இளய துறவிகளால் மட்டும்தான் முடியும். உலகத்தில் இன்பம் இல்லை என்பதை அனுபவத்தால்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லாதவர்கள் தங்களின் தவவலிமையால் இளமையில் துறவு ஏற்று வெகு விரைவில் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் பணியை செய்வது மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியம்.

முடிவுரை :

வாழ்வு அட்டவணையில் படிப்படியாக முன்னேறி அனைவரும் ஒரு நாள் துறவியாகிவிடுவார்கள். துறவு நிலையில் வாழாவிட்டாலும் மரணப்படுக்கையில் இருக்கும் தருணங்களில் விருப்பம் இல்லாவிட்டாலும் அனைத்தையும் துறந்துதான் ஆக வேண்டும். இந்த துன்பத்தை தவிர்க்க நாமாகவே வயதானபின் அனைத்தையும் துறந்து துறவு நிலையில் வாழ்ந்தால் மரணத்தை நோக்கி அஞ்சவேண்டிய அவசியமில்லை.  

துறவு நிலை என்பது பரமனை அறிந்து இன்பமாக வாழ பயிற்சி மேற்கொள்ளும் காலம். உலகத்தின் மீதுள்ள பற்றை மனதளவில் துறந்து இல்வாழ் பருவத்தில் இருந்து கொண்டே வேதத்தை படிக்க நேரத்தை செலவிடலாம். ஜனகன் அரசனாக செயல் புரிந்து கொண்டிருக்கும் பொழுதே ஞானத்தை அடைந்ததால் ஓய்வு நிலையையோ துறவு நிலையையோ எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. பொருள்களையும் உறவுகளையும் மனதளவில் துறக்கும் சக்தியில்லாதவர்களுக்காக வேதம் துறவு நிலையை உபதேசம் செய்துள்ளது.

பயிற்சிக்காக :

1. எதை துறப்பது துறவு?

2.துறவு மேற்கொள்ளுவது எதற்காக?

3.வாழ்வில் துன்பம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

4.இருவகை துறவிகள் யாவர்?

5.இளமையில் துறவியாவதன் அவசியமென்ன?

6.துறவிகளின் கடமைகள் என்ன?

7.துறவு நிலையின் ஆரம்பமும் முடிவும் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. துறவிகள் காவியுடை அணிவதன் அவசியமென்ன?

2.உண்மையான துறவியை அடையாளம் காண்பது எப்படி?

3.துறவிகள் அனைத்து வசதிகள் கொண்ட ஆசிரமத்தை அமைத்துகொண்டு வாழ்வின் சுகபோகங்களை அனுபவிக்கலாமா?