Wednesday, May 12, 2010

Lesson 122: Five commandments ( பிரம்ம சூத்திரம் 3.3.35-36 )

பாடம் 122: செய்யத்தகாதவை
பாடல் 394-395 (III.3.35-36)

தியானம் செய்யத்துவங்குமுன் நம்மை நாம் தயார்படுத்திகொள்வது எப்படி என்று வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முறைபடுத்தி யோகசூத்திரம் என்ற நூலில் பதஞ்சலி விளக்கியுள்ளார். அதில் உள்ள எட்டு அங்கங்களின் முதல் அங்கத்தில் கூறப்பட்ட தவிர்க்கபடவேண்டிய ஐந்து கருத்துக்களை இந்த பாடம் விவரிக்கிறது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

தியானம் செய்ய அமைதியான மனம் வேண்டும். அதர்மமான செயல்களை செய்துகொண்டு அதே வேளையில் மனஅமைதியை பெற தியானம் செய்வது எந்த பலனையும் தராது.

பொய்சொல்வது, திருடுவது போன்ற அதர்மமான செயல்கள் செய்யத்தகாதவை என்று அனைவருக்கும் தெரியும். எனவேதான் இது போன்ற செயல்களை செய்பவர்கள் இவற்றை யாருக்கும் தெரியாமல் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். திருடியது யாருக்கும் தெரியாவிட்டால் கூட அவர்களுடைய மனம் அவர்களை நிம்மதியாக இருக்கவிடாது. ஒரு குற்ற உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அதர்மமாக நடப்பவர்களிடம் இருக்கும். இந்த மனநிலையுடன் தியானம் செய்வதோ ஆன்மீகப்பாதையில் முன்னேறுவதோ நடக்காது.

ஒரு சிலருக்கு தொடர்ந்து தவறான செயல்களை செய்து பழக்கப்பட்டுவிட்டதால் மனம் உறுத்தாமல் மரத்துப்போயிருக்கும். செய்த தவறுகளுக்கு தண்டனை பெற்று மனம் திருந்தியபின்தான் இவர்களுக்கு தியானம் செய்யும் தகுதி ஏற்படும்.

எனவே முதலில் வாழ்வை தர்மமான முறையில் வாழ்கிறோம் என்று நம் மனதில் உறுதி ஏற்படவேண்டும். இதற்காக நாம் தர்மமாக வாழ்வது மிக அவசியம்.

தியானம் என்பது மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி.  கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியாது என்பது போல ஆகாரகட்டுப்பாட்டையும் வாக்கு கட்டுப்பாட்டையும் செய்யமுடியாதவனுக்கு மனதை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிசெய்யவே அருகதை கிடையாது.

ஒரு பொருள் திடம், திரவம் மற்றும் வாயு என்ற மூன்று நிலையில் இருக்கலாம். பொதுவாக திடப்பொருளை கட்டுப்படுத்துவது திரவத்தை கட்டுபடுத்துவதை விட எளிதாக இருக்கும். வாயுவை கட்டுபடுத்துவதுதான் மிகவும் கடினமான செயல். அதுபோல செயல், வாக்கு, எண்ணம் என்ற மூன்றில் எண்ணத்தை கட்டுபடுத்துவதுதான் மிக கடினம். முதலில் உடலால் செய்யும் செயல்களையும் இரண்டாவது கட்டத்தில் வாயால் பேசும் சொற்களையும் கட்டுபடுத்த கற்றுக்கொண்டு அதன் பின் எண்ணத்தை கட்டுபடுத்தும் தியானபயிற்சியில் ஈடுபட ஆரம்பிக்கவேண்டும்.

இவ்வாறு படிப்படியாக நம்மை தயார் செய்து கொள்ள வேதம் பின்வரும் ஐந்து கட்டளைகளை நமக்கு விதித்திருக்கிறது.

முதல் கட்டளை – இன்னா செய்யாமை

செயலினாலோ வாக்கினாலோ எந்த ஒரு உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படுத்தகூடாது என்பது இந்த கட்டளையின் பொருள். தன்னை தானே துன்புறுத்திக்கொள்வதையும் சுற்றுபுறசூழலை மாசுபடுத்துவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உண்மையை கூறினால் சிலருக்கு மனவருத்தம் ஏற்படவாய்ப்பு இருந்தால் முடிந்தவரை அந்த உண்மையை கூறாமல் மௌனமாக இருக்க வேண்டும்.

சக்திதனிமத்தின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக அசைவ உணவை தவிர்க்கவேண்டுமே தவிர உயிர்களுக்கு துன்பம் ஏற்படுமென்பதால் சைவ உணவை மட்டும் உண்ண வேண்டும் என்பது சரியல்ல. அசைவ உணவு உண்பது தியானத்திற்கோ முக்திக்கோ தடையாகாது.

நமக்கு ஒருவர் தீங்கு இழைத்தாலும் பதிலுக்கு அவரை துன்புறுத்த துணிவது தவறு. நமக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்கு காரணம் நமது வினைப்பயன் மட்டுமே. எனவே நாம் வேறு யாரையும் மனதாலும் வெறுக்க கூடாது.

இரண்டாம் கட்டளை - பொய்யாமை

சுயலாபத்திற்காக மற்றவர்களை ஏமாற்றும் நோக்கில் நாம் கூறும் அனைத்து வார்த்தைகளும் பொய் ஆகும். எது பொய் என்பது அவரவர் மனதிற்கு தெளிவாக தெரியும். பொய்யை பொய்யல்ல என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதும் தவறு.

பொய் என்பது வாயினால் சொல்லும் வார்த்தைகள் மட்டுமல்ல. நம் எண்ணத்தாலும் செயலாலும் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக செய்யும் அனைத்து செயல்களும் பொய் என்பதன் விளக்கத்தில் அடங்கும்.

நம் எண்ணங்கள் அனைத்தும் சரியானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால சரியான எண்ணங்களை செயல்படுத்துவதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது நமது கடமை. நம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் எப்பொழுதும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். நம் மனதில் உண்மை என்று நாமே நம்பாத விஷயங்களை பேசுவதும், பேசுவதற்கு மாறான செயல்களில் ஈடுபடுவதும் இந்த இரண்டாம் கட்டளையை மீறும் செயல்களாகும்.

நாம் உண்மையானவர்கள் என நம் மனதிற்கு தெளிவாக தெரிய வேண்டும்.

ஆனால் சுயநலகலப்பில்லாமல் மற்றவர்களின் நலன்கருதி பொய்பேச நேரிட்டால் அதில் தவறு இல்லை. நம்மையறியாமல் சில சமயங்களில் பொய்பேசிவிட்டால் அதை தவறு என்று ஒத்துக்கொண்டு கடவுளிடம் பாவமன்னிப்பு கோருதல் அவசியம். நம் மனதிற்கு சரியா தவறா என்று உறுதியாக தெரியாத சந்தர்ப்பங்களை வேதம் படித்த ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து முடிவில் அவர்கள் தரும் ஆலோசனையை பின்பற்றி நடக்க வேண்டும்.

மூன்றாம் கட்டளை - திருடாமை

மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களது பொருள்களை எடுத்துக்கொள்வது, நம்மிடம் வேலைசெய்பவர்களுக்கு குறைவாக கூலிகொடுப்பது, வாங்கிய பொருள்களின் மதிப்பை கடைக்காரர் குறைவாக கணக்கிட்டால் அதை சுட்டிக்காட்டாமல் இருப்பது போன்றவை திருட்டு ஆகும்.

அன்பளிப்பாக கிடைப்பது, பொது இடங்களைல் கண்டெடுப்பது ஆகியவை திருடுவதாகாது எனினும் இதுபோல நம் உழைப்பு இல்லாமல் கிடைத்த பொருள்களை சேர்த்து வைக்காமல்  நல்ல காரியங்களுக்காக விரைவில் செலவழித்துவிட வேண்டும்.

நான்காம் கட்டளை – பொருள் மிக படையாமை    

தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்க கூடாது. அடுத்த வேளை உணவுக்கு என்ன வழி என்று கவலைப்படுவதை தவிர்க்கும் அளவுக்கு பணம் அவசியம். ஆனால் பணத்தை எப்படி காப்பது என்று கவலைப்படும் அளவுக்கு பணத்தை சேர்க்க கூடாது. ஒரு வைரநகையை வாங்கும்பொழுது அது தொலைந்துபோய்விட்டால் ‘போனால் போகிறது’ என்று விட்டுவிடும் மனபக்குவம் இருக்கிறதா என்பதை ஆராயவேண்டும். பணத்தின் மீது பற்று இருக்கும்வரை தியானம் செய்ய முடியாது. எனவே பொருளின்மேல் பற்று இல்லாமல் இருக்க பழக வேண்டும்.

ஐந்தாம் கட்டளை – பிறன்மனை விழையாமை

தவறான ஆண்-பெண் தொடர்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மணமாவதற்கு முன் உடல் உறவில் ஆசைப்படுவதும், மணமானபின் மற்றவருடன் உறவாடுவதும் ஆன்மீகப்பாதையில் பெரிய தடைகற்கள்.

முடிவுரை :

வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைய பரமனை பற்றிய அறிவை அடைய வேண்டும். இதற்கு ஆசிரியரிடமிருந்து வேதத்தை முறைப்படி பயிலவேண்டும். படிக்கும் கருத்துக்கள் அறிவாக மாற தியானம் அவசியம். தியானம் செய்ய நம்மை தயார்படுத்திக்கொள்ளும் முதல் படியாக நாம் இன்னா செய்யாமை, பொய்யாமை, திருடாமை, பொருள் மிகப்படையாமை மற்றும் பிறன்மனை விழையாமை என்ற ஐந்து கட்டளைகளை வாழ்வில் பின்பற்றவேண்டும்.

பயிற்சிக்காக :

1. செய்யகூடாத ஐந்து கட்டளைகள் யாவை?

2. இவற்றை செய்யகூடாது என்று வேதம் விதித்திருப்பதன் காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. இன்னா செய்யாமை, வாய்மை, கள்ளாமை, பிறனில் விழையாமை  என்ற அதிகாரங்களில் உள்ள குறள்களை புரிந்துகொள்க.

2. நிறைய பொருள் சேர்த்து வைத்திருக்கும் பணக்காரர்கள் தியானம் செய்ய முடியாதா?