Thursday, May 6, 2010

Lesson 121: Purpose of meditation ( பிரம்ம சூத்திரம் 3.3.34 )

பாடம் 121: தியானம் செய்வதன் நோக்கம்
பாடல் 393 (III.3.34)

பரமனை அறிந்து கொள்வதற்காக நம் மனதை தயார்படுத்திக்கொள்ள மட்டுமே தியானம் என்ற பயிற்சியை வேதம் நமக்கு உபதேசம் செய்திருக்கிறது என்ற உண்மையையும் அதைத்தவிர மற்ற நோக்கங்களுக்காக தியானம் செய்வதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்த பாடம் ஆராய்கிறது.

ஈயும் தேனியும்

தியானம் செய்வதற்கு முன் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தை ஈ மற்றும் தேனியின் உதாரணத்தை கொடுத்து பகவான் சத்தியசாய் பாபா விளக்குகிறார். இனிப்பு கடையில் இருக்கும் பால்கோவா, ஜிலேபி போன்ற இனிப்பு வகைகளின் மேல் மொய்க்கும் ஈ அடுத்தகணம் அருகில் உள்ள சாக்கடையில் இருக்கும் கழிவுகளின் மீதும் அமரும். ஆனால் சுவையான தேனை அருந்தும் தேனி மலர்களைத்தவிர வேறு எதையும் நாடாது. எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்ற அறிவில்லாத ஈ போல உலக சுகங்களை அனுபவிப்பதற்கும் ஆன்மீக அனுபவத்தை தேடுவதற்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் ஆண்டவனின் பாதங்களை அடைய வேண்டும் என்று  சிறிது நேரம் தியானம் செய்து விட்டு அடுத்த நிமிடம் லாட்டரியில் லட்ச ரூபாய் கிடைக்கவேண்டும் என்று ஆசை படுவார்கள். இது போன்ற மனோநிலையுடன் தியானம் செய்வது முற்றிலும் தவறு.

உலகம் நமக்கு இன்பத்தை கொடுக்க அருகதையற்றது என்ற அறிவு ஏற்பட்டபின் தான் ஒரு மனிதர் தியானம் என்கிற பயிற்சியை ஆரம்பிக்கலாம். மனதின் அலைபாயும் தன்மைக்கு முக்கிய காரணமே உலக அனுபவங்களில் மாறி மாறி அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்தான். எனவே மனம் உலக சுகங்களை நாடும் வரை தியானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஐம்பெரும் வேள்விகள், தானம் மற்றும் தவம் ஆகிய பயிற்சிகளை முறையாக செய்தபின் உலகத்தின்மேல் உள்ள பற்று குறைய ஆரம்பிக்கும். அதற்குபின் தியானம் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம்.

வடைமாலை

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக சுவையான வடை கிடைக்கும் என்று நினைப்பதை விட மன அமைதியை அதிகபடுத்திகொள்ளலாம் அல்லது இரத்த அழுத்தத்தை குறைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற காரணங்களுக்காக தியானம் செய்ய நினைப்பது தவறு. ஏனெனில் வடைக்காக கோவிலுக்கு சென்றாலும் போனால் போகிறது என்று சாமியை கும்பிட்டு சிறிது புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் பணம், புகழ், பதவி ஆகியவற்றிற்காக தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டால் பரமனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விடும்.

கோவிலுக்கு சென்றால் பிரசாதம் கிடைக்கும். ஆனால் பிரசாதம் சாப்பிடுவதற்காக கோவிலுக்கு செல்வது தவறு. அதுபோல தியானம் செய்தால் உடலளவிலும் மனதளவிலும் பல பலன்கள் கிடைக்கும். ஆனால் இந்த பலன்களுக்காக தியானம் செய்வது தவறு. தியானம் செய்வதன் ஒரே நோக்கம் பரமனை அறிந்துகொள்ள தேவையான அறிவை ஆசிரியரிடமிருந்து பெற மனதை தயார் செய்து கொள்வது மட்டுமே.

உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் யோகாசனமும் மன ஆரோக்கியத்திற்காக செய்யும் பிராணாயாமமும் தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு நம்மை தயார் செய்ய உதவும் படிக்கட்டுகள். ஆனால் இவற்றை மட்டும் செய்து கொண்டு செக்கு மாடு போல் இலக்கை நோக்கி பயணிக்காமல் பலர் வாழ்வில் தேக்கம் அடைந்துள்ளனர்.

ஓட்டை பானை

மனம் ஒரு ஓட்டை பானை. நிறைய உணவை உண்டு வயிற்று பசியை தீர்த்துவிடலாம். ஆனால் மனதின் பசியை தீர்க்கவே முடியாது. எவ்வளவுதான் பொன், பொருள், பணம், பதவி போன்றவை கிடைத்தாலும் போதும் என்ற நிறைவு மனதிற்கு வரவே வராது. எனவேதான் குறையொன்றும் இல்லை என்று வாயளவில் சொல்பவர்கள் கூட தொடர்ந்து கோவிலுக்கு சென்று கடவுளிடம் ஏதாவது கோரிக்கைகளை வைத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடவுளால் கூட மனித மனதின் ஆசையை முழுதாக தீர்த்து திருப்தியை அளிக்க முடியாது.

இதற்கு காரணம் மனம் ஒரு ஓட்டை பானை. இந்த ஓட்டையை அடைக்காமல் வேதம் படிக்க ஆரம்பித்தால் அதுவும் மற்ற துறைகளின் அறிவைப்போல் அகந்தையை மட்டும் உண்டாக்குமே தவிர முக்தியை கொடுக்காது. எனவே வேதத்தை முறையாக படிக்க ஆரம்பிக்குமுன் தியானம் செய்து மனதில் உள்ள ஓட்டையை அடைக்க வேண்டும். தியானம் என்பது மனதை பண்படுத்தி பரமனை பற்றிய சரியான அறிவை ஏற்றுக்கொள்ள தகுதியான பாத்திரமாக அதை மாற்றும் சாதனம். கர்மயோகம் மூலம் உடலையும் வாக்கையும் பரமனை அடைய தயார் செய்தபின் தியானம் மூலம் மனதை சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இதுதான் தியானம் செய்வதன் முக்கிய நோக்கம்.

தியானத்தின் தவறான நோக்கம் – 1 : அஷ்ட மகா சித்தி

வெண்டைக்காயை வெட்டுவதற்காக கத்தியை தீட்ட ஆரம்பித்தோம் என்பதை மறந்து விட்டு ஒரே வெட்டில் தலையை துண்டிக்கும் அளவுக்கு தொடர்ந்து கத்தியை தீட்டினால் சமையல் செய்து சாப்பிடுவதற்கு பதில் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்லும் வாய்ப்புதான் அதிகம். தியானம் செய்வது ஆசிரியரிடம் சென்று பரமனை பற்றி படிக்க என்பது தெரியாமல் தொடர்ந்து தியானம் செய்து அணிமா, மகிமா போன்ற அஷ்ட மகா சித்திகளை பெற முயன்றால் உலக பந்தத்தில் கட்டுண்டு இந்த பிறவியில் முக்தி பெறும் வாய்ப்பை தவற விட்டுவிடுவோம். கத்தியை போல மனம் ஒரு ஆயுதம். அதை வேண்டிய அளவுக்கு மேல் கூர்மைப்படுத்த முயல்வது நமக்கு நன்மையை தராது.

தியானத்தின் தவறான நோக்கம் – 2 : அமானுஷ்ய அனுபவங்கள்

கார் ஓட்ட ஆரம்பிக்குமுன் எந்த இடத்தை அடைந்ததும் காரின் வேகத்தை குறைத்து மெள்ள செல்ல ஆரம்பிக்க வேண்டும் என்றும் எப்பொழுது காரை நிறுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளாமல் கார் ஓட்டும் சுகத்தில் ஆழ்ந்து விசைகாட்டும் முள் நூற்றி இருபது கிலோமீட்டருக்கு கீழ் குறையாமல் இருக்கும்படி கார் ஓட்டினால் சேர வேண்டிய இடத்தை தவறவிடுவது மட்டுமல்லாமல்  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்ல வேண்டி வரும்.

தியானம் செய்யத்துவங்குமுன் மனதை மிகவும் கூர்மைபடுத்தினால் வரக்கூடிய தீமைகளை தெரிந்துகொண்டு அதிகமான தியானபயிற்சியில் ஈடுபடகூடாது. தியானம் செய்யும் பொழுது வினோதமான அனுபவங்கள் ஏற்படலாம். அவை நம்மை வழிதடுமாறச்செய்யும். வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை மறக்க தியானம் ஒரு போதைபொருள் போல மாறி நம் வாழ்வை அழித்துவிடும். எனவே தியான அனுபவங்கள் தற்காலிகமானது என்பதை அறிந்து அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தியானத்தின் தவறான நோக்கம் – 3 : பரமானந்தத்தை அடைவது

தியானம் செய்வதன் மூலம் இறைவனுடன் ஒன்று கலக்க முடியும் அல்லது ஆத்ம அனுபவத்தை பெற முடியும் என்பது போன்றவை தவறான கருத்துக்கள். தியானத்தின் மூலம் நமக்கு எவ்வித புதிய அறிவும் கிடைக்காது. நிச்சயம் தியானம் நமக்கு முக்தியை தராது. வேதத்தை பயில தியானம் ஒரு படிக்கட்டு மட்டுமே.

உழைப்பும் தியானமும்

பணம், பதவி, புகழ் போன்றவற்றில் ஆசைபட்டு அவற்றை அடைய கடுமையாக உழைப்பது ஆன்மீக பயணத்தில் முதல் படிக்கட்டு. இதை செய்யாமல் இரும்பை தங்கமாக்குவது, நினைத்த இடத்துக்கு நினைத்தவுடன் செல்வது போன்ற சக்திகளை தியானம் செய்வதன் மூலம் பெற நினைப்பது தவறு.

மரம் ஏறி மாங்காய் பறிப்பதால் உடல் வலு அதிகமாகும். அப்படியின்றி மந்திரத்தால் மாங்காயை கீழே விழவைத்தால் மாங்காய் மட்டும்தான் கிடைக்கும். அது போல வாழ்வில் முன்னேற்றமடைய உண்மையாக உழைத்தால் மனபக்குவம் கிடைக்கும். தியானம் செய்து பல சக்திகளை பெற்று உலகப்புகழை அடைந்தாலும் வாழ்வில் இன்பத்தை விட துன்பம்தான் அதிகமாகும். மேலும் ஏன் மனதில் குறை இருந்துகொண்டேயிருக்கிறது என்று ஆராயும் மனப்பக்குவமும் இருக்காது.    

முடிவுரை :

முறைப்படி தியானம் செய்யும்பொழுது உடலளவிலும் மனதளவிலும் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். இந்த நன்மைகளை பெறுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து தியானம் செய்து அதன் உண்மையான நோக்கத்தை அடைய வேண்டும்.

தீவிரமாக தியானம் செய்ய ஆரம்பித்தால் அது நமக்கு பல வினோதமான அனுபவங்களை கொடுக்க ஆரம்பிக்கும். மேலும் தியானம் செய்வதன் மூலம் பல அமானுஷ்ய சக்திகளை பெற முடியும். ஆனால் இவற்றை நாம் தவிர்க்க வேண்டும். எனவே வேண்டிய அளவுக்குமேல் தியானம் செய்யகூடாது.

தியானம் செய்வதன் ஒரே நோக்கம் ஞானயோகம் செய்து பரமனைபற்றிய அறிவைப்பெற மனதை தகுதி படுத்திக்கொள்வதற்காக என்பதை மறக்க கூடாது.   

பயிற்சிக்காக :

1. தியானம் செய்வதன் நோக்கம் என்ன?

2. தியானம் செய்வதனால் கிடைக்கும் பலன்கள் யாவை?

3. தியானம் எந்த மூன்று தவறான நோக்கங்களுடன் செய்ய கூடாது?

4. ஈ – தேனி உதாரணத்தின் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?

5. வடை மாலை உதாரணத்தின் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?

6. தியானம் செய்து பணம், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க முயல்வதில் என்ன தவறு?

சுயசிந்தனைக்காக :

1. அஷ்டமா சித்திகளை அடைந்தவர்கள் யாரேனும் உலகில் இருக்கிறார்களா?

2. தியானம் சொல்லித்தருவதற்காக பணம் வசூலிக்கலாமா?

3. தியானம் செய்வதன் மூலம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற அறிவும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் வந்துவிடுமா?

4.தியானம் செய்பவர்கள் தியானம் செய்யாதவர்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள்?

5. பதஞ்சலி எழுதிய அஷ்டாங்க யோகம் என்ற நூலில் தியானம் பற்றி கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆய்க.