பாடம் 165:
ஞானி தன் கடமைகளை தொடரவேண்டும்
பாடல்
493
– 494 (IV.1.16-17)
வாழ்வை நான்கு கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகளை கொடுத்துள்ள வேதம், மனிதர்கள் ஞானம் பெற்றபின்னும் இந்த கடமைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்று சொல்வதன் நோக்கத்தை இந்த பாடம் தெளிவு படுத்துகிறது.
வாழ்வின் ஏற்ற
இறக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஞானிக்கு இருப்பதால் வருவது வரட்டும் என்று
தன் கடமைகளை செய்யாமல் சோம்பியிருக்க மாட்டான். ஞானி
என்பவன் சுகவாழ்வை துறந்து பிச்சைக்காரனைப்போல் இருக்க வேண்டும் என்ற மற்றவர்களின்
எதிர்பார்ப்பை தவறு என்று சுட்டிக்காட்டவே வேதம் ஞானிகளுக்கும் கடமைகள் உண்டு என்று
எடுத்துரைக்கிறது.
இன்பத்தின்
உண்மையான இருப்பிடத்தை அறிந்துகொண்டபின் உலகில் அதை ஞானி தேடமாட்டான்.
எனினும் அவன் தொடர்ந்து உழைத்து பெரிய வீடு, சொகுசான
வாகனம், பல பணியாளர்கள், உலகம் முழுவதும்
உல்லாசபயணம் என வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வதை ஞானம் தடைசெய்யாது. இதுபோன்ற வசதிகள் இல்லாமல் போனால் என்ன ஆகும் என்ற கவலையில்லாமல் செல்வம் இருக்கும்வரை
அனுபவிக்கும் திறன் ஞானிகளுக்கு மட்டுமே உண்டு. எனவே ஞானம் பெற்றபின்
கடமைகளை தொடர்ந்து செய்யவேண்டும் என்று வேதம் பரிந்துரை செய்யாவிட்டாலும், ஞானி தன் இயல்புகளுக்கேற்ற செயல்களை தர்மமான முறையில் செய்வதை நிறுத்திக்கொள்ள
மாட்டான்.
வசதியாக வாழ
பணம்,
துன்பகலப்பில்லாத இன்பத்துடன் வாழ ஞானம் ஆகிய இரண்டும் அனைவருக்கும்
தேவை. பணத்தால் இன்பத்தை வாங்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள்
வேதம் படித்து ஞானம் பெற முயல்வதுபோல் ஞானத்தால் வசதிகளை வாங்க முடியாது என்பதை உணர்ந்த
ஞானி தொடர்ந்து தன் கடமைகளை செய்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்வான்.
கடமைகளை
செய்ய காரணம்
1.
ஞானம் பெற்றபின்னும் கடமைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வேதம் கட்டளையிட்டிருப்பதன்
காரணத்தை அறிந்த ஞானிகள் வாழ்வில் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் பாத்திரங்களின் கடமைகளை
சரிவரசெய்ய முயற்சிப்பார்கள்.
2.
இன்பதுன்பங்களை சரியான வகையில் ஏற்றுக்கொள்ள உதவும் ஞானத்தை அடைந்தபின்
உலகவிவகாரங்களில் சம்பந்தப்படாமல் ஒதுங்கிவாழ்வதில் பயன் எதுவும் இல்லை. எனவே பெற்ற ஞானத்தின் பலனை முழுவதும் அனுபவிக்க ஞானிகள் தொடர்ந்து தங்கள் கடமைகளை
செய்வார்கள்.
3.
வேதம் தரும் ஞானத்தின் பலனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க அவர்களைப்போல்
உலகவாழ்வில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக ஞானிகள் வாழ்வது அவசியம்.
4.
ஞானியின் மனதில் தோன்றும் ஆசைகள் துன்பத்திற்கு வழிவகுக்காது எனினும்
அவன் தொடர்ந்து கடமைகளை செய்ய அவை தூண்டுகோலாய் அமையும்.
5.
மேற்படிப்புக்காக வேலையை விடுவதைப்போல ஞானம் பெறுவதற்காக ஒரு சிலகாலம்
உலக வாழ்விலிருந்து ஒதுங்கி துறவறம் மேற்கொள்வது தவறு அல்ல. ஆனால்
படித்துமுடித்ததும் மறுபடி வேலைசெய்யத்துவங்குவது போல ஞானம் பெற்றதும் மறுபடி கடமைகளை
தொடரவேண்டும்.
6.
உடலும் மனமும் தொடர்ந்த மாற்றத்திற்குட்பட்டவை என்றறிந்த ஞானிகள் கடமைகளை
செய்யாமலிருக்க இயலாது என்று அறிவர். ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய தனிமங்களின் சேர்க்கை விகிதப்படி மனமும் உடலும் செயல்படுவது
அவசியம் என்பதால் ஞானிகள் தொடர்ந்து தங்கள் கடமைகளை செய்வார்கள்.
7.
உயிருடன் இருக்கும் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள
தொடர்ந்து கடமைகளை செய்வது அவசியம்.
கடமைகளை
செய்யும் விதம்
1.
பற்றுடையோர்கள் பலனை எதிர்பார்த்து கடமைகளை செய்வார்கள். முக்திவிழைவோர்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமைகளை செய்வதனால் மனம் பக்குவமடையும்
என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளை செய்வார்கள். ஞானிகள் எவ்வித பலனையும்
எதிர்பார்க்காமல் கடமைகளை செய்வார்கள்.
2.
திறமையுடனும் சுறுசுறுப்பாகவும் கடமைகளை செய்வதன் மூலம் பலன்களை விரைவில்
அடைந்துவிடலாம் என்று மற்றவர்களைப்போல் அவசரப்படாமல் தன் இயல்புக்கு ஏற்ற விதத்தில்
மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனோபாவத்துடன் ஞானிகள் தங்கள் கடமைகளை செய்வார்கள்.
3.
கடமைகளை சரிவரச்செய்ய முயல்வது மட்டுமே கடமை செய்வதன் பலன் என்று அறிந்த
ஞானிகள் செய்த செயல்களை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமே என்று வருந்த மாட்டார்கள்.
4.
எவ்வித பலனையும் எதிர்பார்த்து ஞானி செயல்செய்வதில்லை என்பதால் யாருக்கும்
எவ்விதத்திலும் துன்பம் தரும் செயல்களை ஞானி செய்யமாட்டான்.
5.
தன் கடமைகளை செய்வதால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும் என்றாலும் அவர்களது
துன்பத்தை குறைக்க அவன் முயல்வானே தவிர தன் கடமைகளை ஞானி சரியாகச்செய்யாமல் விட்டுவிடமாட்டான்.
6.
வாழ்க்கை வெறும் கனவு என்றாலும் மரணம்வரை இந்த கனவு தொடரும் என்று உணர்ந்த
ஞானி சமூகத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு சாதாரண மனிதன் போல் தன் கடமைகளை
செய்வான்.
7.
தன் முயற்சியில் தோல்வியுற்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற
அச்சம் ஞானிக்கு இருக்காது என்பதால் மிகப்பெரிய சமூகநலத்திட்டங்களை ஏற்று நடத்த அவன்
தயங்குவதில்லை.
கடமைகளை
செய்வதன் பலன்
1.
ஞானியின் பார்வையில் செயல்கள், கடமைகள் மற்றும்
பலன்கள் ஆகியவை வெறும் கற்பனைகளே. ஆயினும் அவன் தன் கடமைகளை சரியாக
செய்வதாக காட்டிக்கொள்வதனால் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள அங்கத்தினனாக மற்றவர்களால்
ஏற்றுக்கொள்ளப்படுகிறான்.
2.
ஞானம் பெற்றபின் ஞானி தொடர்ந்து கடமைகளை செய்து பணம் சேர்ப்பது சமூக
நலனுக்கு பெரிதும் பயன்படும். கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் போன்ற சமூகத்தேவைகளை பூர்த்திசெய்யும் விதத்திலேயே ஞானியின்
செல்வம் பெரும்பாலும் செலவழிக்கப்படும்.
3.
உலகப்பொருள்களை துன்பம் கலவாத இன்பத்துடன் அனுபவிக்க உதவுவதே ஞானத்தின்
நோக்கம். கடமைகளை செய்வதன் மூலம்தான் உலக இன்பங்களை பெறமுடியும்
என்பதால் ஞானத்தின் பலனை முழுவதும் அனுபவிக்க பெரிய குடும்பம், நண்பர்கள் மற்றும் செல்வசெழிப்பு ஆகியவை மிகவும் அவசியம்.
4.
மற்றவர்களை சார்ந்திராமல் தன் திறமைகளை கடமைகளாக வெளிப்படுத்தி ஞானி
தன் உடல் மற்றும் மனதின் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளுவான்.
5.
பலனில் பற்றில்லாததால் இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும்
துணிவுடன் செயல்படும் ஞானியைப்போல் தாங்களும் மாறவேண்டும் என்ற முயற்சி பற்றுடையோர்களை
நல்வழிப்படுத்த உதவும்.
6.
கடமையுணர்வுடன் ஞானி செயல்படுவதை பார்க்கும் முக்திவிழைவோர்கள் உலக வாழ்விலிருந்து
ஒதுங்காமலேயே ஞானம் பெறமுடியும் என்ற நம்பிக்கையை பெறுவார்கள்.
7.
ஞானி குருவாக தனது கடமைகளை செய்தால் மட்டுமே துன்பத்தை அகற்றி இன்பமாய்
வாழ வேதம் தரும் வழிமுறைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
முடிவுரை
:
காண்பது கனவு
என்று தெரிந்தாலும் கனவு முடியும்வரை கடமைகளை செய்யாமல் இருக்க முடியாது என்பதை ஞானி
அறிந்திருப்பதால் ஞானம் பெற்றபின்னும் அவன் தொடர்ந்து தன் கடமைகளை செய்வான்.
உலகில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் ஆதாரம் எது என தெளிவாக அறிந்துள்ள
ஞானி இவ்வுலகம் படைக்கபட்டதன் நோக்கத்தை பூர்த்திசெய்யும் விதத்தில் தன் கடமைகளை முறையாக
செய்வான். தான் உறவாடும் ஒவ்வொரு மனிதரும் அடிப்படையில் தன்னிடமிருந்து
வேறுபட்டவரல்ல என்பதை அறிந்த ஞானி இந்த உண்மையை மற்றவர்களுக்கும் உணர்த்தும் விதத்தில்
தன் கடமைகளை செய்வான்.
வண்டுகளை ஈர்த்து
மகரந்தசேர்க்கை மூலம் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் மலர்
மணம் வீசுகிறது என்று முடிவுசெய்வது அறியாமை. மணம்
தருவது மல்லிகையின் இயற்கை. மலர்வதற்கு முன்பேயே செடியிலிருந்து
அதை பிரித்துவிட்டாலும் அது தன் மணம் தரும் கடமையை செய்யாமல் விடுவதில்லை. அதுபோல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் தன்மைகேற்ற செயல்படுவது அவற்றின்
இயற்கை. உலகமே மாயை என்ற உண்மையை உணர்ந்து விட்டால்கூட இந்த இயற்கை
நியதி மாறிவிடாது. எனவே ஞானி தன் கடமைகளை செய்வது தடைபடாது.
ஞானம் பெற்றுவிட்டால் கடமைகளை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்ற
அஞ்ஞானிகளின் கருத்தை மாற்றவே வேதம் ஞானிகள் ஞானம் பெற்றபின்னும் தங்கள் கடமைகளை தொடர்ந்து
செய்யவேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தான் செயல்களை
செய்வதாக நினைப்பவன் பற்றுடையோன். செயல்கள் பரமனின்
மாயாசக்தியின் வெளிப்பாடு என்று எண்ணுபவன் முக்திவிழைவோன். இதுபோன்ற
எவ்வித குழப்பமும் இல்லாமல் தனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கடமைகளை தொடர்ந்து
செய்பவன் முற்றுணர்ந்தோன்.
பயிற்சிக்காக
:
1. இன்பமாகவும்
வசதியாகவும் வாழ தேவையானவை என்னென்ன?
2. ஞானி கடமைகளை
செய்ய காரணங்கள் யாவை?
3. ஞானி
கடமைகளை செய்யும் விதம் எவ்வாறு இருக்கும்?
4. ஞானி
கடமைகளை செய்வதால் விளையும் பயன்கள் யாவை?
5. மலரின்
மணம் பற்றிய உதாரணத்தால் விளக்கப்பட்ட கருத்து என்ன?
சுயசிந்தனைக்காக
:
1. துறவு மேற்கொண்ட
பின் ஞானம் பெற்றால் மறுபடியும் இல்வாழ்பருவத்திற்கு திரும்பலாமா?
2. அதிகமான
பணம் சம்பாதிக்க செய்யும் முயற்சி நிம்மதியான வாழ்வுக்கு தடையாக இருக்குமா?