Sunday, June 2, 2013

Lesson 187: Teachings of the liberated soul (Brahmasutras 4.4.5-7)

பாடம் 187: ஞானியின் போதனைகள்
பாடல்: 538-540 (IV.4.5-7)

உலக இன்பங்களை துன்பக் கலப்பு இல்லாமல் தான் அனுபவிப்பது போல மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அவர்களுக்கு போதனைகள் செய்து அதன் மூலம் ஞானிகள் அடையும் இன்பத்தை இந்தப்பாடம் விளக்குகிறது.

பிரஹதாரண்ய உபநிஷத மந்திரம் (4.5.13) “ஆத்மா உள்ளேயும் இல்லை. வெளியேயும் இல்லை. அது வெறும் ஒரு அறிவு உருவமேஎன்று கூறுகிறது. தானே அந்த அறிவு என்பதை உணர்ந்த ஞானிகள் தங்கள் ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்பம் அடைவார்கள்.

இந்த ஞானத்தை எப்படி, யாருக்கு, எப்போது சொல்லித்தர வேண்டும் என்ற அறிவும் ஞானிக்கு இருப்பதால் பெரும்பாலான மக்களுக்குத் தன்னால் உதவ முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருக்காது.  

எப்படி சொல்லித்தருவது?

நான் பரமன்என்ற ஞானத்தை கேள்வி-பதில் மூலமோ, விவாதங்களின் மூலமோ ஆலோசனைகள் சொல்வது மூலமோ கற்றுத்தர முடியாது. பகவத் கீதை, உபநிஷதங்கள் போன்ற நூல்களை முதல் வரியில் இருந்து ஆரம்பித்து கடைசி வரி வரை படிப்படியாக வெகுகாலம் இடைவிடாமல் சொல்லித்தர வேண்டும்.

வேதம் படிக்கத் தேவையான நேரத்தை ஒதுக்கத் தயாராக இருக்கும் மாணவர்கள் கிடைப்பது அரிது. எனவே, சரியான ஆசிரியர் தனக்கு கிடைத்தது குறித்து மாணவர் அடையும் மகிழ்ச்சியைப் போல, சரியான மாணவர் கிடைத்ததை எண்ணி ஆசிரியரும் மகிழ்ச்சி அடைவார். அதே நேரத்தில் ஒரு சிலர், பாதியிலேயே படிப்பதை நிறுத்திவிட்டால் அது குறித்து ஞானி வருத்தப்படவும் மாட்டார்.  

யாருக்கு சொல்லித்தருவது?

அனைத்து மக்களும் துன்பம் அகன்று இன்பமாக வாழ வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் அனைவராலும் ஞானம் பெற்றுவிட முடியாது. மலையின் சிகரத்தை ஏறி முடித்தவர் மற்றவர்கள் ஏற உதவுவது போல, ஞானி, மற்றவர்கள் இருக்கும் நிலையை அறிந்து அதற்கேற்ப வழிகாட்டுவார். பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களால் கல்லூரிகளில் சேரமுடியாது. அதுபோல பற்றுடையோர்களால் முக்தி அடைய முடியாது. இதை அறிந்த ஞானிகள், அவர்களுக்கு கோவிலுக்குச் செல்லுதல், பிரார்த்தனைகள் செய்தல் போன்ற மதச்சடங்குகளை மட்டுமே போதிப்பார்கள். போதிய அறிவுத்திறன் உடைய முக்திவிழைவோர்களுக்குத்தான் நான் பரமன்என்ற உண்மையை முறைப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள்.

எப்போது சொல்லித்தருவது?

மாணவனின் தலையில் நெருப்பை பற்றவைத்து அதன்பின் அதை அணைக்க உதவுவது ஆசிரியரின் வேலை இல்லை. மீண்டும் மீண்டும் வாழ்வில் அடிபட்டு, எனக்குத் துன்பங்களில் இருந்து முழுமையான விடுதலை வேண்டும் என்ற தீவிர ஆவலுடன் மாணவர்கள் தன்னை அணுகினால் மட்டுமே ஞானி அவர்களுக்குப் பாடங்களைச் சொல்லித்தர ஆரம்பிப்பார்கள்.

வேண்டிய மனப்பக்குவுமும் தீவிர ஆவலும் இல்லாமல் ஒரு சிலமாணவர்கள் வேதம் படிக்கத்துவங்கினாலும் வெகு விரைவில் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். இவர்கள் தொடர்ந்து படித்தாலும் ஞானம் பெற மாட்டார்கள் என்பதை ஞானிகள் அறிவார்கள். எனவே, மாணவர்களை தொடர்ந்து படிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படாது. கேட்பவர்களுக்கு சொல்லித்தர தயாராக இருக்கும் ஞானிகள், கேளாதவர்களை கேட்க வைக்க எவ்வித முயற்சியும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.  

என்ன சொல்லித்தருவது?

பின்வரும் பதினாறுக் கருத்துக்களை சொல்லிக்கொடுப்பதன் மூலம் வேதப்பாடங்களை முறையாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை தன்னை நாடிவரும் மக்களுக்கு ஞானிகள் எடுத்துரைப்பர்.

முதல் கருத்து: சுயநலமே சிறந்தது

மற்றவர்களின் நலம் தனது நலத்தைவிட முக்கியமானது என்ற எண்ணம் தவறானது. உண்மையில் தனக்கும் மற்றவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. ஆனால் இந்த உண்மையை வேதம் படிக்காமல் அறிந்துக் கொள்ள முடியாது. எனவே, முதல் படியாக மற்றவர்களை விட தானே முக்கியமானவன் என்பதை மாணவன் ஒத்துக்கொள்ள வேண்டும். தான் மற்றவரை விரும்புவது தனக்காகத்தான் என்றும் மற்றவருக்காக அல்ல என்பதையும் பின்வரும் உதாரணங்கள் மூலம் ஞானிகள் விளக்குவார்கள்.

1. தாடியுடன் தகப்பன் தன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது தனது சுகத்துக்காகத் தானே தவிர குழந்தையின் நலத்துக்காக அல்ல.

2. பணம், நகை போன்ற சொத்துக்களை பாதுகாப்பது அவற்றால் தனக்கு கிடைக்கும் பயனின் காரணமாகத்தான்.

3. விவசாயி மாடுகளை போற்றி வளர்ப்பதற்கு, அவை வயலில் வேலை செய்யும் காரணமாகத்தானே தவிர அவற்றின் மீதுள்ள கருணையால் அல்ல.

4. கடவுளை தொழுவது கடவுளின் நலத்துக்காக அல்ல.

5. தனக்குக் கிடைக்கும் மனநிறைவு  கருதியே பொதுநலச் சேவைகூட செய்யப்படுகிறது.

இதுபோல, வாழ்வில் மனிதன் செய்யும் அனைத்துச் செயல்களும் சுயநலத்துக்காக மட்டுமே செய்யப்படுகின்றன. எனவே மற்றவர்களைவிட தான்தான் முக்கியமானவன் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு முழுமனதுடன் ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே ஞானிகள் அடுத்த கருத்தை உபதேசம் செய்வார்கள். ஏனெனில் தானே முக்கியமானவன் என்று அறியும்வரை தன்னை அறிய யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

இரண்டாம் கருத்து: மற்றவர்களை விட தன்னைத்தான் அனைவரும் விரும்புவர்

யாரேனும் நம்மை இகழ்ந்து பேசினால் நமக்குப் பிடிப்பதில்லை. மாறாக அவர்கள் நம்மை புகழ்ந்து பேசினால், அந்தப் புகழ்ச்சிக்கு நாம் அருகதை உடையவர்கள் அல்ல என்பதை அறிந்து இருந்தாலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதிலிருந்து நமக்கு நம்மை மிகவும் பிடிக்கும் என்பதை அறியலாம்.

தன்னை அறிந்து கொள்வது மற்றவர்களை அறிந்து கொள்வது போல் அல்ல. அறிபவனை அறிவது சிரமானச் செயல். எனவே, முதல்படியாக தன்னைத் தான் விரும்புவது மற்றவர்களை விரும்புவதில் இருந்து வேறுபட்டது என்ற உண்மையை பின்வரும் உதாரணங்கள் மூலம் ஞானிகள் சுட்டிக்காட்டுவர்

1. மற்றவர்களின் மேல் உள்ள விருப்பத்துடன் பாசம், காதல் போன்ற உணர்வுகள் கலந்திருக்கும். தன் மேல் உள்ள விருப்பத்தில் உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை.

2. மற்றவர்களின் மேல் உள்ள விருப்பம் அவர்களின் செயல்களின் அடிப்படையில் அதிகமாகும் அல்லது குறையும். தன் மீதுள்ள விருப்பம் என்றும் மாறாது.

3. மற்றவர்களின் மேல் உள்ள விருப்பம் நம்மை பந்தப்படுத்தும். தன் மேல் உள்ள விருப்பம் எவ்வித கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துவதில்லை.

4. மற்றவர்களின் மேல் உள்ள விருப்பம் அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுவது. தன் மீது விருப்பம்கொள்ள நம்பிக்கை எதுவும் அவசியம் இல்லை.

5. மற்றவர்களின் மேல் உள்ள விருப்பத்தினால் தியாகங்கள் செய்வதற்கு நாம் தயங்குவதில்லை. தன் மீது விருப்பம் கொள்வதனால் எவ்வித தியாகமும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

6. மற்றவர்களின் மேல் உள்ள விருப்பம் துன்பத்துக்கு வழிகோலும். தன் மீதுள்ள விருப்பத்தால் எவ்வித துன்பமும் ஏற்படாது.

7. மற்றவர்களின் மேல் உள்ள விருப்பம், வெறுப்பாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு. தற்கொலை செய்து கொள்பவர்களும் தன் மீதுள்ள விருப்பத்தால் தான் அந்த முடிவுக்கு வருகிறார்கள். தன்னை யாரும் எப்போதும் வெறுப்பதில்லை.

8. தனது இன்பத்துக்காகவே மற்றவர்களின் மேல் விருப்பம் கொள்கிறோம். தன் மீது விருப்பம் கொள்ள எவ்வித காரணமும் இல்லை.

9. மற்றவர்களால் நமக்கு இன்பம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் மேல் நாம் விருப்பம் கொள்வோம். தன் மீது விருப்பம் கொள்ள எந்தவித முன் நிர்ப்பந்தமும் (pre-condition) இருக்காது.

இந்த உதாரணங்களைப் புரிந்துகொண்டபின் மாணவர்கள் தான் யார் என்று அறிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த ஆசை தீவிர ஆசையாக மாறாது. ஏனெனில் பொருளின் மீதுள்ள ஆசையால் வேதம் படிக்கத் தேவையான நேரத்தை அவர்கள் ஒதுக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். எனவே, இந்த ஆசை தீவிரம் அடையும் வரை, ஆசிரியர் அவர்களுக்கு பின்வரும் கருத்துக்களைப் படிப்படியாகப் போதனை செய்வார்கள். இவற்றை மனதில் உள்வாங்கி, ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் வெகு விரைவில் முறையாக வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள்.

மூன்றாம் கருத்து: பொருள்களில் இன்பம் இல்லை

பொருள்களில் இன்பம் இருக்கிறது என்ற மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற தர்க்கத்தின் துணையினால் ஞானி அவர்களுக்கு உதவுவார். எல்லாக் காலங்களிலும் சமமான இன்பம் அளிக்கக் கூடிய ஒரு பொருளோ எல்லோருக்கும் இன்பம் அளிக்கக் கூடிய ஒரு பொருளோ இந்த உலகத்தில் இல்லவே இல்லை. இதிலிருந்து பொருள்களில் இன்பம் இல்லை என்பது தெளிவாகிறது.

நான்காம் கருத்து: இன்பத்தின் ஒரே ஊற்று தான் மட்டுமே.

காய்ந்துபோன எலும்பை கடிக்கும் நாய் தனது இரத்தத்தை எலும்பில் இருந்து வருவதாக நினைத்துக்கொள்ளும் என்பது போன்ற உதாரணங்கள் மூலம் நாம் நமது சுய உருவான இன்பத்தை பொருள்களில் இருந்து பெறுவதாக தவறாக நினைக்கிறோம் என்று ஞானி எடுத்துரைப்பார்.

ஐந்தாம் கருத்து: மாற்றம் என்பது படைப்பின் இலக்கணம்.

தோற்றம், மாற்றம், மறைதல் என்பது படைப்பின் இலக்கணம் என்பதை புரிந்துக் கொண்டால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறி ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும் என்ற உண்மை தெளிவாகும்.

ஆறாம் கருத்து: மனமும் உலகம்போல் மாறிக்கொண்டே இருக்கும்.

ஐந்து புலன்கள் மூலம் உலகை உணர்வது மனதின் சுபாவம். எனவே உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மனமும் மாறுபடும். வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்களுக்கு ஏற்ப மனதில் இன்ப துன்பங்கள் ஏற்படும்.

மனதின் விருப்பத்தின் படி உலகத்தை மாற்றி அமைத்து அதன் மூலம் இன்பமாக இருக்க விழைவது நடக்காத காரியம். உலகில் ஏற்படும் மாற்றங்களை சரியான கண்ணொட்டத்தில் பார்ப்பதால் மட்டுமே இன்பமாக இருக்க முடியும்.

ஏழாம் கருத்து: துன்பக் கலப்பு இல்லாமல் இன்பமாக இருப்பது சாத்தியமே.

வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் நமது இன்ப துன்பங்களை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்பத்தின் ஒரே ஊற்று நாம் மட்டுமே என்பதாலும், மாறும் உலகை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை தீர்மானிப்பது நாம் மட்டுமே என்பதாலும் நம்மால் துன்பத்தை முழுவதும் தவிர்த்து எப்போதும் இன்பமாக இருக்க முடியும். மாறும் உலகத்தால் நமக்கு இன்பத்தையோ துன்பத்தையோ கொடுக்க முடியாது.

எட்டாம் கருத்து: நாம் துன்பப்படுவதற்கு காரணம் அறியாமை

மனதில் அறியாமை இருக்கும்வரை உலகின் மாற்றங்களை நம்மால் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எனவே, வேதங்களை முறையாகப் படித்துஉலகே மாயைஎன்ற உண்மையான அறிவைப் பெற்றால் மட்டுமே நம்மால் துன்பத்தை தவிர்த்து இன்பமாக இருக்க முடியும்.

ஒன்பதாம் கருத்து: உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை.

புலன்கள் உலகம் இருக்கிறது என்று சொல்வதில்லை. ஐந்து புலன்கள் நமக்கு கொடுக்கும் தகவலின் அடிப்படையில் நாம் இந்த உலகம் இருப்பதாக நாம்தான் தவறாக நம்பிக்கொண்டு இருக்கிறோம்.  உண்மையில் இந்த உலகம் இருப்பது போல் தோற்றம் அளிக்கும் ஒரு மாயை.   

பத்தாம் கருத்து: விஞ்ஞானிகள்உலகே மாயைஎன்று நிரூபித்துள்ளனர்.

அணு என்பது யாது என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் உலகம் மாயா சக்தியால் உருவானது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

பதின்னொன்றாம் கருத்து: காலம் நமது கற்பனை

கடந்த காலம் என்பதும் எதிர்காலம் என்பதும் நமது மனதுக்குள் மட்டுமே இருக்கும் கற்பனை என்பதை அறிவியல் அறிஞர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து இருக்கிறார்கள். இடமும் காலமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத தத்துவங்கள் என்பதால் பிரபஞ்சம் மாயையாக இருக்கும்பொழுது காலம் கற்பனையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தர்க்க பூர்வமாகவும் அறியலாம்.

பதின்ரெண்டாம் கருத்து:  விஞ்ஞானிகள் ஞானிகள் அல்ல.

உலகம் மாயை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பின்னும், ‘இந்த உலகத்துக்கு ஆதாரமாக இருப்பது யார்?’ என்பதை அறியாத காரணத்தால் அவர்கள் அஞ்ஞானிகளே.  ‘இந்த உலகத்தைப் படைத்த கடவுள் யார்?’ என்ற கேள்விக்கான பதில் வேதம் படித்தால் மட்டுமே விளங்கும்

பதின்மூன்றாம் கருத்து: காரண-காரிய அறிவு நமது கற்பனை

இது இதனால் நடந்ததுஎன்ற காரண காரிய ஆராய்ச்சியை அஞ்ஞானிகள் மட்டுமே செய்வார்கள். காரண-காரியம் என்பது உலகை உண்மை என மக்களை நம்பவைக்கும் மாயையின் செயல்பாடு என்பதை ஞானிகள் அறிவார்கள்.

பதின்நான்காம் கருத்து: வெற்றியின் இரகசியத்தை கண்டுபிடிக்கவே முடியாது.

காரண-காரியம் என்பதே பொய் என்ற காரணத்தால் வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடையாது. வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்படும் அனுபவத்தை ஆராய்ந்தவர்கள் வெற்றிக்கோ தோல்விக்கோ தனது செயல்கள் காரணம் இல்லை என்பதை அனுபவப் பூர்வமாக அறிவார்கள்.

பதினைந்தாம் கருத்து: எதுவும் நிலையானது அல்ல

மனித உறவுகள், உடல் ஆரோக்கியம், பொருளாதார நிலை, தட்பவெப்பநிலை போன்ற எதுவுமே நிலையானது அல்ல. இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரியாக மாறலாம். எதிரிகள் நண்பர்களாகமாறலாம். எந்தவித மாற்றமும் நம்முடைய கட்டுப்பாடில் இல்லை. மாயையான உலகத்தின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும்.

பதினாறாம் கருத்து: மாறும் உலகில் மாறாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான்

நான்என்ற ஒன்றே ஒன்றுதான் எப்போதும் மாறாமல் இருப்பது. ‘நான் யார்?’ என்ற அறிவைப் பெற்றால் மட்டுமே இந்த உலகத்தைச் சரியான பார்வையில் பார்க்க முடியும். எனவே முறையாக வேதம் படித்தால் மட்டுமே நிலையான அமைதியையும் துன்பம் கலவா இன்பத்தையும் அடைய முடியும்.

முடிவுரை :

எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை அறிந்த காரணத்தால் ஞானிகள் எப்போதும் ஆனந்தமாக இருப்பார்கள். இந்த உலகமும் தன் மனமும் தொடர்ந்து மாறுவதற்கு காரணத்தை இவர்கள் அறிவார்கள். எனவே எது எப்படி இருப்பினும் இவர்கள் தனது சுய உருவில் நிலைத்து இருப்பார்கள்.

மற்ற அனைத்து மனிதர்களும் தனது பிரதிபிம்பங்கள் என்றாலும் அவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டு காட்சியளிப்பதற்கான காரணத்தை ஞானிகள் அறிவார்கள். மேலும் தங்கள் வாழ்வுப் பயணத்தில் எந்த கட்டத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஞானியால் வெகு எளிதில் அறிந்து கொள்ள முடியும். எனவே, ஞானிகள் மற்றவர்களுடன் உறவாடும்பொழுது அவர்களுக்கு ஏற்புடைய விதத்தில் நடந்து கொள்ளமுடியும்.

தங்களுக்கு வழிகாட்டவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தன்னை அணுகுபவர்களுக்கு உதவுவதில் ஞானி மகிழ்ச்சி அடைவார். ஒரு மனிதனை பரமனாக மாற்ற அவன் எப்போதுமே பரமனாகத்தான் இருக்கிறான் என்ற அறிவை படிப்படியாக அவனுக்கு உணர்த்தினால் மட்டுமே போதும்இதற்கு சிறிது காலம் ஆகும் என்றாலும் இது எளிதில் செய்து முடிக்கக்கூடிய செயல்தான் என்பதை ஞானிகள் அறிவார்கள். பலர் இந்த அறிவைப் பெற முயற்சிக்க மாட்டார்கள் என்பதையும் ஞானிகள் அறிவார்கள். எனவே எந்த வித கவலையோ வருத்தமோ இன்றி அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.

உலகே மாயை என்பதால் ஞானம் அடைவதும் மற்றவர்களுக்கு வழிகாட்டுதலும் தன் வசமின்றி தானே நடக்கும் ஒளி-ஒலி காட்சியாகும். எனவே, ஞானிகள் இந்த நாடகத்தை தொடர்ந்து ஆனந்தமாக அனுபவிப்பார்கள்.    

பயிற்சிக்காக :

1. ஞானிகள் யாருக்கு போதனைகள் செய்வார்கள்?
2. ஞானிகள் எப்போது போதனை செய்வார்கள்?
3. ஞானிகள் எப்படி போதனை செய்வார்கள்?
4. முறையாக வேதம் படிக்க மாணவர்களை தயார் செய்யும் வகையில் அவர் விளக்கும் பதினாறுக் கருத்துக்கள் யாவை?
5. விஞ்ஞானிகள் அஞ்ஞானிகளாக இருக்க காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. தீர்க்கதரிசிகளின் போதனைகளுக்கும் முறையாக வேதம் படித்த ஞானிகளின் போதனைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை ஆராயவும்.
2. அஞ்ஞானத்தை அகற்றுவது விஞ்ஞானம். ஆனால் விஞ்ஞானிகளே அஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். எனவே நடைமுறையில்விஞ்ஞானம்என்ற வார்த்தைக்கு பொருள் என்ன?

3. தற்கொலைகள் நடப்பது தன் மீது உள்ள விருப்பத்தாலா அல்லது வெறுப்பாலா?