Wednesday, June 5, 2013

Lesson 188: Life of the liberated soul

பாடம் 188: ஞானியின் வாழ்வு
பாடல்: 541-542 (IV.4.8-9)

ஞானியும் சாதாரண மனிதன்தான் என்றாலும் அவனது வாழ்வு சிறப்பாக அமையும் என்ற கருத்தை யோக வசிஷ்ட சாரம் என்ற நூலின் துணையுடன் இந்தப்பாடம் எடுத்துக்காட்டுகிறது.

சாந்தோகிய உபநிஷத மந்திரம் (8.1.6) ‘ அவன் அனைத்து உலகங்களில் இருந்தும் விடுதலை பெற்றவன்என்று கூறுகிறது. இதே கருத்தைத்தான் வசிஷ்டர் ஸ்ரீ ராமனுக்கு செய்த உபதேசங்களில் விளக்குகிறார்.

1.18 பல வருட வாழ்க்கையின் அனுபவங்களை சில நிமிடங்கள் நீடிக்கும் கனவில் அனுபவிப்பது போலத்தான் மாயையின் விளையாட்டாக இந்த வாழ்வு அமைந்துள்ளது.

1.19 இந்த வாழ்வை அனுபவிப்பவனாக இல்லாமல் வெறும் பார்வையாளானாக இருக்கும் ஞானியின் மனம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். அவன் பந்தங்களில் இருந்து முழுதும் விடுதலை அடைந்தவன்.

1.20 ஏற்பது மறுப்பது ஆகிய இரண்டையும் துறந்து, ‘நான் உணர்வுமயமானவன்என்பதை உணர்ந்த ஞானியின் வாழ்வு சிறப்பாக அமையும்.

1.23 எந்த இடத்திலும் எதுவும் எப்போதும் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. பரமன் மட்டுமே அனைத்து உருவங்களாகவும் காட்சி அளிக்கிறான்.

2.11 துன்பத்தை தருவதாகத் தோன்றும் பிரபஞ்சம் பரமனின் விளையாட்டு. கயிற்றில் பாம்பு தோன்றுவதுபோல் உருவாக்கப்பட்ட இந்த உலகம் சரியான ஞானம் கிடைத்ததும் மறைந்து விடும்.

2.12 உலகத்துக்கு நம்மை பந்தப்படுத்தும் சக்தி இல்லாவிட்டாலும் கூட, ஆசைகள் நம்மை பந்தப்படுத்திவிடுகின்றன. ஆசைகள் அற்றவன், பந்தங்களில் இருந்து விடுதலை பெற்றவனாவான்.

2.15 சிறுவனின் கற்பனையில் உருவான பேய் அவனையே பயமுறுத்துவது போல அறியாமையால் உருவான உலகம், ஞானம் இல்லாதவர்களை துன்புறுத்துகிறது.

2.18 குருடனுக்கு இருளாக இருக்கும் உலகம், கண் இருப்பவனுக்கு ஒளியுடன் காட்சி தருவது போல அஞ்ஞானிகளுக்கு துன்பம் தரும் உலகம், ஞானியின் பார்வையில் இன்பம் நிறைந்ததாக காட்சி அளிக்கும்.

2.19   உலகத் துன்பங்களை மனதின் கற்பனையாக அறிந்த ஞானியின் ஆனந்தம் தொடர்ந்து அதிகரிக்கும்.

2.21 சூரியக்கதிர்கள் சூரியனிடம் இருந்து வேறுபட்டவை அல்ல என்பதை அறிந்தவர்கள் போல மனதில் தோன்றும் எண்ணங்கள் பரமனிடம் இருந்து வேறுபட்டவை அல்ல என்று அறிந்த ஞானிகள் எப்போதும் மகிழ்ந்திருப்பார்கள்.

2.22 துணியை ஆராய்ந்தவர்கள் அது நூலில் இருந்து தோன்றியது என்பதை அறிவார்கள். அதுபோல இந்த உலகம் பரமனிடம் இருந்து தோன்றியது என்பதை ஞானிகள் அறிவார்கள்.

2.24 நுரை, அலை, நீர்த்திவிலைகள், நீர்க்குமிழிகள் ஆகிய அனைத்தும் கடலில் அடங்குமோ அதுபோல பரமனிடம் இருந்து வெளியான இந்தப் பிரபஞ்சம் தன்னில் அடக்கம் என்பதை ஞானிகள் அறிவார்கள்.

3.1 காய்ந்த புல்லை நெருப்பு எரிப்பதுபோல இந்த ஞானத்தை அடைந்தவர்களின் அறிவு, அவர்களின் ஆசைகளை அகற்றிவிடும்இதுதான் உண்மையான சமாதி; கண்களை மூடி தியானம் செய்வது அல்ல.

3.3 அனைத்தையும் கடந்த நிலையை அடைந்த ஞானியின் மனம், முழு நிலவைப்போல்  எப்போதும் குளிர்ந்து இருக்கும்.

3.5 பறவைகளும் மிருகங்களும் தீப்பற்றி எரியும் காட்டுக்குள் சரணடைவதில்லை. அது போல பரமனை அறிந்த ஞானியின் மனதினுள் தீய எண்ணங்கள் புகுவதில்லை.

3.8 சுற்றியுள்ள பொருள்களின் நிறம், ஸ்படிகக்கல் மேல் பட்டுப் பிரதிபலித்தாலும் அதன் மேல் கறை படிவதில்லை. அது போல உலகில் ஞானி செயல்பட்டாலும் தான் செய்த செயல்களால் அவன் பாதிக்கப்படுவதில்லை.

3.9 வெளி உலகில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாலும் ஞானியின் உள்மனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் அமைதியாக இருக்கும்.

3.10 இருப்பது பரமன் மட்டுமே என்ற அறிவில் நிலைபெற்ற ஞானி, வெளி உலகில் தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்தாலும் அது வெறும் கனவு உலகம் என்பதை அறிவார்கள்.

3.11 சேற்றில் புதைந்து இருந்தாலும் தங்கத்தின் பளபளப்புக் குறைவதில்லை. அது போல மரணம் எப்போது ஏற்பட்டாலும் ஞானி அதனால் பாதிக்கப்படுவதில்லை.

3.12 ஞானம் பெற்ற அன்றே அவன் முக்தி அடைந்துவிட்டக் காரணத்தால், ஞானி காசியில் மடிந்தாலும் அல்லது ஒரு புலையனின் வீட்டில் மடிந்தாலும் வித்தியாசம் ஏதும் இல்லை.

3.14 காலிப் பாத்திரம் கடலினுள் நிரம்பியும், வெளியே காலியாகவும் இருப்பது போல சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கேற்ப ஞானி வெளித்தோற்றத்தில் மாற்றம் அடைந்தாலும் அவன் ஆழ்மனதில் எந்த மாற்றமும் இருக்காது.

3.16 இருதயத்தில் இருந்த ஆசைகளின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டபின், மனதில் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டபின் முக்தி அடைந்த ஞானி வெளிப்பார்வைக்கு பந்தப்பட்டவன் போல காட்சி அளித்தாலும் உண்மையில் அவன் விடுதலைபெற்றவனே.

3.24 முக்தி என்பது வானத்துக்கு மறுபுறம் இருப்பதல்ல.     மனதில் உள்ள ஆசைகள் சரியான ஞானத்தால் சுட்டெரிக்கப்பட்ட நிலையே முக்தி.

4.1 இரண்டற்ற உணர்வு தன் கற்பனையில் ஆசைப்படுபவனாகவும் ஆசைப்படும் பொருளாகவும் பிரிந்து ஒன்றை ஒன்று தேடி அலையும்பொழுது அதற்கு மனம் என்று பெயர்.

4.3 நெருப்பு எரிவதற்கு காரணமான காற்றே அதை அணைக்கவும் உதவுவது போல் கற்பனையில் உருவான துன்பங்கள் கற்பனையாலேயே நீக்கப்பட வேண்டும்.

4.7 இது வேண்டும், அது வேண்டாம் என்று பிரிப்பதுதான் பந்தமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

4.9 பார்க்கப்படும் பொருள்கள் உண்மையில் இருப்பதாகத் தோன்றுவதற்கு மனதின் கற்பனை மட்டுமே காரணம். உலகம் உண்மையில் இல்லை.

4.23 நான் பரமன் அல்ல என்ற எண்ணம் துன்பங்களுக்குக் காரணம். நான் பரமன் என்ற எண்ணம் முக்திக்குக் காரணம்.  

5.2 படத்தில் வரையப்பட்ட கொடிகளை காற்றினால் அசைக்க முடியாது. அதுபோல் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் சரியான ஞானத்தில் நிலைபெற்றவனின் மனதை பாதிக்க முடியாது.

5.3 ‘நான் யார்?’ என்ற ஆராய்ச்சி செய்தால் அறிய வேண்டியது அனைத்தையும் அறிந்து விடலாம்.

8.6 அறிவு உன்னில் இருந்து வேறுபட்டதல்ல. அறியப்படும் பொருள்கள் அறிவில் இருந்து வேறுபட்டவை அல்ல. அதாவது, உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில் இல்லை.

8.7 பிரம்மா, விஷ்ணு, சிவா, இந்திரன் போன்றவர்கள் செய்யும் செயல்கள் யாவும் பரமனான உன்னால் செய்யப்படுபவை.

8.8 ‘நானே இந்தப் பிரபஞ்சம். நான் மாறாத பரமன். எனக்கு அப்பாற்பட்ட கடந்த காலமோ எதிர்காலமோ கிடையாதுஎன்று அறிந்தவன் ஞானி.

9.5 யானை பொம்மையை உண்மையான யானையாக மனதினுள் நம்பி அதை வைத்து விளையாடும் குழந்தைகளைப் போல தனது உடல் உண்மையாக இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் வாழ்பவன் அஞ்ஞானி.

9.11 தூசு, புகை, மேகம் ஆகியவற்றால் ஆகாயம் பாதிக்கப்படுவது போல மாயையின் விளைவான உலகத்தால் பரமன் பாதிக்கப்படுவான்.

9.12 நெருப்புடன் தொடர்பு கொண்ட உலோகம் சுடுவது போல் பரமனுடன் தொடர்பு கொண்ட புலன்கள் உணர்வுடன் கூடியவையாக செயல்படுகின்றன.

9.13 கண்ணுக்குத் தெரியாத ராகு, நிலவுடன் சேர்ந்தவுடன் கண்ணுக்குத் தென்படுவதுபோல் அறியமுடியாத பரமனை, பொருள்களை அனுபவிக்கும்போது அறிந்து கொள்ள முடிகிறது.

9.14 தண்ணீரும் நெருப்பும் ஒன்றுடன் ஒன்று சேரும்பொழுது ஒன்றின் குணங்கள் மற்றதன் மேல் ஏற்றிவைக்கப்படுகிறது. அதேபோல, பரமனும் ஜடமான உடலும் ஒன்று சேரும்பொழுது உடல் நானாகவும், நான் உடலாகவும் தென்படுகின்றன.

9.16 முயற்சி செய்தால்தான் கரும்பில் இருந்து சர்க்கரையை எடுப்பது, எள்ளில் இருந்து எண்ணையை எடுப்பது, மரக்கட்டையில் நெருப்பை ஏற்படுத்துவது, மாட்டில் இருந்து வெண்ணையை எடுப்பது, மண்ணில் இருந்து உலோகத்தை பிரிப்பது போன்றவை நடக்கும். அதேபோல் உடலில் இருந்து பரமனைப் பிரித்து அறிவதற்கும் முயற்சி தேவை.

9.18 விலைமதிப்பற்ற கற்களால் செய்யப்பட்ட பாத்திரத்தினுள் வைக்கப்பட்ட விளக்கு அதன் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் ஒளிர்விப்பது போல அனைத்தையும் ஒளிர்விப்பது பரமன்.

9.29 உணர்வே பரமன். உலகே பரமன். பஞ்சபூதங்களும் பரமன். நான் பரமன். எனது எதிரிகளும் பரமன். எனது நண்பர்களும் உறவினர்களும் பரமன்.

9.30 உணர்வும் உணரப்படும் பொருள்களும் வேறுபட்டவை என்ற எண்ணம், அறிவு நம்மை பந்தத்தில் ஆழ்த்தி துன்பத்தைக் கொடுக்கும். இந்த எண்ணத்தில் இருந்து விடுதலை பெறுவது முக்தி.

10.5 அறிபவன் அறிவால் பந்தப்பட்டுள்ளான். அறிந்துகொள்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில்தான் அவன் விடுதலை பெறுகிறான்.

10.25 ‘நான் பரமன்என்ற எண்ணம் தியானம். இந்த தியானமும் மறைவதுதான் சமாதி.

10.32 நன்மை தீமை ஆகிய இரண்டையும் கடந்த ஞானி, ஒரு குழந்தையைப் போன்றவன். அவன் தடைசெய்யப்பட்ட செயல்களை அவை பாவகரமானவை என்ற எண்ணத்துடன் செய்யாமல் இருப்பதில்லை. தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை அவை புண்ணியம் தருபவை என்ற எண்ணத்துடன் செய்வதுமில்லை.

10.35 நீரில் சிற்றலைகள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம். அதுபோல பரமனில் உலகம் இருகின்றது என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம். பரமன் இரண்டிற்கும் அப்பாற்பட்டவன்.

முடிவுரை :

ஞானியின் வாழ்வு நிறைவானது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்தால் வாழ்க்கை நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மற்றவர்களது வாழ்க்கை அமைந்திருக்கும். மனதில் தோன்றும் ஆசைகள் நிறைவேறினாலும் நிறைவேறா விட்டாலும் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதை ஞானி அறிவான். ஏனெனில், ஒரு ஆசை நிறைவேறிய மறுகணமே அடுத்த ஆசை அதன் இடத்தைப் பிடித்துக்கொள்வதால் வாழ்வு தொடர்ந்து நிறைவற்றதாகவே இருக்கும்.

திருடன் பிடிபட்டான்என்ற செய்தியை செய்தித்தாளில் வாசிக்கும்பொழுது நாம் திருடனுக்காக வருத்தப் படுவதில்லை. அதுபோல ஞானி, உடலும் மனமும் நான் அல்ல என்பதை உணர்ந்திருக்கும் காரணத்தால் இவற்றின் குறைகளை நினைத்து அவன் வருந்துவதில்லை.  

ஞானத்துக்காக உலகத்தைத் துறந்தவன் முக்திவிழைவோன். ஞானத்துடன் கூடிய தன்னையே துறந்தவன் முற்றுணர்ந்தோன். மனதில் அனுபவிக்கப்படும் இன்பம், மனதில் புதைந்திருக்கும் அறிவு ஆகியவை எப்போதுமே அளவுக்கு உட்பட்டவை. அனைவரது மனங்களின் உணர்வுக்கு ஆதாரமான பரமனுக்கும் ஒரு குறிப்பிட்ட மனதுக்கும் எவ்வித உறவும் இல்லை என்ற அறிவு, ஞானியின் மனதில் இருப்பதால் அவன் இன்பமயமாக இருப்பான்.

பயிற்சிக்காக :

1. ஞானியின் வாழ்வு எந்த வகையில் சிறந்திருக்கும்?

சுயசிந்தனைக்காக :


1. யோக வசிஷ்ட சாரம் (Essence of Yoga Vasishta) என்ற இரமண ஆசிரம புத்தகத்தை படிக்கவும்