பாடம் 162:
பாவபுண்ணியங்களிலிருந்து முழுவிடுதலை
பாடல்
490
(IV.1.13)
தாமரையிலையில்
தண்ணீர் ஒட்டாததைப்போல நான் பரமன் என்று அறிந்தவனை பாவம் ஒட்டாது என்று
சாந்தோக்கிய மந்திரம் (IV.14.3)
கூறுவதன் உள்ளர்த்தத்தை இந்த பாடம் ஆழமாக ஆராய்கிறது.
வேதம்
தரும் அறிவு
அறிவு
மற்றும் செயல்படும் திறன் ஆகிய இரண்டின் அடிப்படையில் உலகமக்கள் பெரிதும்
வேறுபடுகிறார்கள் என்றாலும் துன்பம் கலவா இன்பத்தை அடைவது என்ற ஒரே
குறிக்கோளுடன்தான் அனைவரும் செயல்படுகிறார்கள். இந்த ஒரே குறிக்கோளை அடைய அவரவரின்
நிலைக்கு ஏற்ப வேதம் வழிகாட்டுகிறது.
உலகம்தான்
தன் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்ற அறிவுடன் துன்பத்தை தவிர்க்க செயல்படுபவர்கள்
பற்றுடையோர். எவ்வளவோ முயன்றும் துன்பத்தை தவிர்க்கமுடியாததற்கு காரணம் சென்ற
பிறவிகளில் செய்த பாவம் என்று வேதம் சமாதானம் சொல்கிறது. மற்ற உயிரினங்களுக்கு
துன்பம் கொடுப்பது பாவம் என்றும் உதவி செய்வது புண்ணியம் என்றும் பாவபுண்ணியங்களுக்கு
வேதம் தரும் விளக்கங்களை எவ்வித கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்பவர்கள் பாவங்களை
தவிர்த்து நல்வழியில் செயல்பட்டு அடுத்து வரும் பிறவிகளில் முக்தியடைவது நிச்சயம் என்ற
நம்பிக்கையுடன் நிம்மதியாக வாழ்வார்கள்.
வேதம்
கூறும் பாவம் புண்ணியம் போன்ற கருத்துக்களை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில்
ஏற்றுக்கொள்ளாமல் அறிவினால் ஆராய ஆரம்பிப்பவர்கள் முக்திவிழைவோர்கள். தனது
துன்பத்திற்கு மற்றவர்கள் காரணம் என்ற தவறான அறிவை நீக்க சஞ்சித கர்மம், ஆகாமி
கர்மம் போன்ற கருத்துக்களை வேதம் அவர்களுக்கு விளக்கி தனது துன்பத்திற்கு தான்
மட்டும்தான் காரணம் என்று அவர்களை உணரவைக்கிறது. நான்தான் என் துன்பத்திற்கு
காரணம் என்றால் துன்பங்களிலிருந்து முழுமையாக என்னால் விடுதலை பெறமுடியும் என்ற
முயற்சி அவர்களை படிப்படியாக முற்றுணர்ந்தோர்களாக மாற்றும். அதன்பின் அவர்களை பாவபுண்ணியங்கள் பற்றாது. அதுவரை சேர்த்துவைத்த
சஞ்சித கர்மம் முழுவதும் அழிவதுடன் ஆகாமி கர்மமும் அவர்களை பாதிக்காது என்று வேதம்
கூறுகிறது. எனவே அவர்கள் பிறவிச்சுழலிலிருந்து விடுபட்டு முக்தியடைவார்கள்.
வேதம்
தரும் விளக்கம்
உலகம் ஒரு
புரியாத புதிர் என்பதை உணராதவர்கள் அனைத்து காரியங்களுக்கும் ஒரு காரணம்
இருக்கிறது என்ற நம்பிக்கையில் செயல்படுவார்கள். இது இதனால் நடந்தது என்ற விளக்கம்
கொடுக்கமுடியாதபொழுது கர்மபலன், மறுபிறவி என்ற கருத்துக்களை வேதம்
அறிமுகப்படுத்துகிறது. பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு இருந்தாலும்
அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இக்கருத்துக்களை
உண்மையாக்குகிறது. எந்த முரண்பாடும் இல்லாமல் தர்க்க அறிவிற்கு பொருந்திய
இக்கருத்துக்கள் மக்களை முக்தியை நோக்கிய சரியான பாதையில் பயணிக்கவைக்கிறது.
உலகை
புரிந்துகொள்ள முடியாது என்று எடுத்த எடுப்பிலேயே சொல்வதற்குபதில் எந்த செயல்
எப்பொழுது பலன் அளிக்கும் என்பதை மட்டும் மனிதனால் உணர்ந்து கொள்ள முடியாது என்று வேதம்
கூறுகிறது. இதை ஏற்றுக்கொண்டால் கடவுள், எண்ணிலடங்கா பிறவிகள், பாவபுண்ணியம்,
சுவர்க்கம், நரகம் போன்ற வேதம் கூறும் காரண காரியங்கள் உலகை புரிந்துகொண்டது போல்
ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. தர்க்கத்தின் அடிப்படையில் யாராலும் தகர்க்க
முடியாத இந்த விளக்கங்கள் புத்திகூர்மையுள்ள மனிதர்களையும் கடவுள் நம்பிக்கையுடன்
செயல் படவைக்கின்றன.
உலகை
புரிந்துகொள்ள முடியாது என்றும் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் எதுவும் எல்லை
என்றும் புரிந்துகொள்பவர்கள் முற்றுணர்ந்தோர்கள். கனவில் நாம் எதிர்கொள்ளும்
குடிகாரன் ஏன் அந்தப்பழக்கத்துக்கு அடிமையானான் என்றோ அவன் முக்தியடைய வாய்ப்பு
இருக்கிறதா என்றோ நாம் கவலைப்படுவதில்லை. அதுபோல விருப்பு வெறுப்புகள் பிறவிதோறும்
நம்மை தொடர்கின்றன, செய்த பாவபுண்ணியங்களின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்
என்பது போன்ற விளக்கங்கள் அனாவசியம் என்று அறிபவர்கள் முற்றுணர்ந்தோர். துன்பம்
என்பதே கற்பனை என்பதால் முக்தியென்பதும் கற்பனையே என்பதை இவர்கள் அறிந்திருப்பதால்
பாவபுண்ணியங்கள் இவர்களை சிறிதும் பாதிக்காது. ஒரு சிறு படகு பெரிய கடலை கடக்க
உதவுவது போல நான்தான் இந்த உலகின் ஆதாரம் என்ற அறிவு எண்ணிலடங்கா பிறவிகளில் சேர்த்து
வைத்த பாவங்களின் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து இவர்களை விடிவிக்கும்.
மேலும் இந்த பிறவியில் செய்த மற்றும் செய்யும் பாவங்களும் இவர்களை பாதிக்காது.
அனுபவித்து
தீர்க்கமுடியாது
எண்ணற்ற
பிறவிகளில் சேர்த்து வைத்த அளவற்ற பாவபுண்ணியங்களை நம்மால் அனுபவித்து தீர்க்கவே
முடியாது. மேலும் அவற்றை அனுபவிக்கும்பொழுது புதிய செயல்கள் செய்து மேலும்
பாவபுண்ணியங்களை சேர்த்துக்கொள்வதையும் தவிர்க்க முடியாது. எனவே ஞானத்தினால்
மட்டுமே முக்தியடைய முடியும்.
மறுபிறவி,
பாவபுண்ணியங்கள் ஆகியவை உள்ளன என்று நமக்கு தெரிவித்த அதே வேதம் ஞானம் பெற்ற மறுகணம் இவற்றிலிருந்து
விடுதலையடையலாம் என்று கூறுவதால் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். செய்த
பாவங்களுக்கு தண்டனை பெறாமல் தப்பிப்பது எப்படி நியாயம் என்பது போன்ற தர்க்க
விவாதம் இங்கு உதவாது. எவ்வளவுதான் பாவ காரியங்கள் செய்து இருந்தாலும் ஞானம்
பெற்றவுடன் முக்தியடைவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
செய்பவனின்
முடிவு
செயல்
செய்தவன் செயலின் பலனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று வேதம் கூறுவது செயல்
செய்து உலகை மாற்ற முயலும் பற்றுணர்ந்தோர்கள் அல்லது செயல்கள் மூலம் மனதை மாற்ற
முயலும் முக்திவிழைவோர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும். தான் செயல் செய்பவன்
அல்ல என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களை பாவம் பற்றாது. மனிதனைத்தவிர மற்ற
உயிரினங்கள் எதுவும் நான் செயல்களை செய்பவன் என்ற அகங்காரம் இல்லாமல்
செயல்படுவதால் அவை பாவபுண்ணியங்களை சேர்த்துகொள்வதில்லை என்று வேதம் கூறுகிறது. அதுபோல
இவ்வுலகிலிருந்து வேறுபட்டு தனியாக இயங்கும் மனிதனாக தன்னை கருதாதவர்கள் பாவபுண்ணியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
செயல்களின்
முடிவு
பதினான்கு
உலகங்களில் இங்குமட்டும்தான் செயல்கள் செய்யப்படுவதாக மக்கள் நினைப்பதால் இதுமட்டும்தான்
கர்ம பூமியென்றும் வேதம் கூறுகிறது. தொடர்ந்து நடக்கும் ஒலி-ஒளி காட்சியில்
ஏற்படும் மாற்றங்களை செயல்கள் என்று தவறாக நினைப்பவர்களுக்கு மட்டுமே கர்மபலன்
என்ற காரண காரிய விளக்கம் அவசியமாகிறது. செயல்களே இல்லை என்று உணர்ந்தவுடன் அவற்றின்
பலன்கள் மறைந்துவிடும். கர்மபலன்கள் மறைந்துவிட்ட காரணத்தால் மறுபடி பிறக்க
வேண்டிய அவசியமும் கிடையாது.
காலத்தின்
முடிவு
காலம் நமது
கற்பனை என்பதால் சென்ற காலத்தில் செய்த செயல்களின் பலனை வருங்காலத்தில்
அனுபவிக்கவேண்டும் என்ற சட்டம் நமக்கு பொருந்தாது. யார் மூன்று காலங்கள் இருப்பது
உண்மை என்று நம்புகிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி உண்மை. இந்தப்பிறவியே பொய்
என்பதை அறிந்தவர்களுக்கு நிச்சயம் மறுபிறவி கிடையாது.
இடைவெளியின்
முடிவு
வெண்திரையில்
காட்டப்படும் வண்டி எவ்வளவு வேகமாக போனாலும் திரைக்கு வெளியே செல்ல முடியாது. முருகன்
மூன்றுமுறை உலகை சுற்றிவருவதற்குள் அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்
என்ற உண்மையை கூறி ஞானப்பழத்தை வென்ற விநாயகனைப்போல இவ்வுலகம் இருப்பது எனது
எண்ணத்தில் மட்டும்தான் என்றுணர்ந்தவர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை.
கற்பனை
கதை
செய்த
குற்றத்திற்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பை கேட்டவுடன் தூக்கத்திலிருந்து
விழித்துக்கொண்டால் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல உலகம்
என்ற மாயையின் பிடியிலிருந்து விழித்துக்கொண்ட முற்றுணர்ந்தோர்கள் எவ்வித
தண்டனையையும் அனுபவிப்பதில்லை.
முடிவுரை
:
நான்
உருவாக்கிய உலகில் உலாவரும் அற்பமான மனிதர்களில் ஒருவரை நான் என்று தவறாக நம்பும்வரை
செயல்கள் செய்வதாகவும் அவற்றின் பலன்களை அனுபவிப்பதாகவும் ஏற்படும் தோற்றத்தை தவிர்க்கமுடியாது.
இருப்பது நான் மட்டுமே. பல்வேறு உயிரினங்களை தோற்றுவித்த எனது மாயா சக்தி அவை ஒரு இடத்தில் பிறந்து சில காலம் வளர்ந்து
பிறகு மறைவதாகவும் சித்தரித்துள்ளது. எண்ணிலடங்கா இவ்வுயிரினங்கள் பிறப்பு-இறப்பு
என்ற சக்கரத்தில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறந்து இவ்வுலகில் இன்ப துன்பங்களை
அனுபவிப்பதாக காட்டப்படும் இந்த நாடகத்தின் சூத்திரதாரி நான் என்ற அறிவைப்பெறும்
மனிதர்கள் பாவபுண்ணியங்களிலிருந்து விடுதலையடைகிறார்கள்.
பயிற்சிக்காக
:
1. பற்றுடையோரின்
பார்வையில் பாவபுண்ணியங்களை விவரிக்கவும்.
2. முக்திவிழைவோர்கள்
பாவபுண்ணியங்களை ஏற்றுக்கொள்ளும் விதம் யாது?
3. முற்றுணர்ந்தோர்களை
பாவபுண்ணியங்கள் ஏன் பாதிப்பதில்லை?
சுயசிந்தனைக்காக
:
1. நான் தூங்கும்பொழுது
உலகம் இருப்பதில்லையா?
2.
முற்றுணர்ந்தோர்கள் பாவம் செய்வார்களா?
3. அம்மையப்பனை
சுற்றிவந்தால் உலகை சுற்றிவந்ததற்கு சமம் என்று விநாயகன் கூறுவதை ஏற்று நாம் நம்
தாய் தந்தையரை சுற்றிவந்தால் ஞானப்பழம் கிடைக்குமா?