Thursday, November 24, 2011

Lesson 161: Life long effort (Brahmasutram 4.1.12)


பாடம் 161: வாழ்நாள் முழுவதும் தியானம் செய்யவேண்டும்
பாடல் 489 (IV.1.12)

முக்தியடையாதவர்கள் சாகும்வரை தொடர்ந்து தியானம் செய்யவேண்டும் என்ற வேதத்தின் கட்டளையை விளக்கி கடவுளை குறித்து செய்யப்படும் தியானத்தால் ஏற்படும் பலனை ஞானத்தினால் கிடைக்கும் பலனுடன் இந்த பாடம் ஒப்பிடுகிறது.

நான் பரமன் என்ற அறிவு ஏற்படும்வரை தியானம் செய்தால் போதும் என்று முக்திவிழைவோர்களுக்கு கூறும் வேதம் இந்த அறிவை அடையாதவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தியானத்தை தொடரவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

எவ்வித குணமும் இல்லாமல் எதனுடனும் சம்பந்தப்படாமல் என்றும் இருப்பவன் நான் என்று அறியாதவர்கள் ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கலவையான மாயா சக்தியுடன் கூடிய பரமனை தங்கள் மனதுக்கு பிடித்த ஈஸ்வர வடிவத்தில் தியானம் செய்யலாம். ஒளியை பிரதானமாக கொண்ட காக்கும் கடவுளான விஷ்ணு, அவரது துணைவரான செல்வங்களை கொடுக்கும் லக்ஷ்மி, சக்தியை பிரதானமாக கொண்ட படைக்கும் கடவுளான பிரம்மன், அவரது துணைவரான அறிவை கொடுக்கும் சரஸ்வதி, ஜடத்தை பிரதானமாக கொண்ட அழிக்கும் கடவுளான சிவன் மற்றும் அவரது துணைவரான சக்தியை கொடுக்கும் பார்வதி ஆகியோரின் வடிவங்களான எண்ணிலடங்கா கடவுளர்களில் யாரேனும் ஒருவரை தங்கள் இஷ்ட தெய்வமாக தேர்ந்தெடுத்து வாழ்நாள் முழுவதும் அவர் மேல் தொடர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

சாகும்பொழுது கடைசி தருணத்தில் கடவுளைப்பற்றிய எண்ணங்கள் மனதில் இருக்கவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்து தொடர்ந்து தியானம் செய்வது அவசியமாகிறது. ஏனெனில் எப்பொழுது மரணம் ஏற்படும் என்று அறிந்துகொள்ள முடியாது என்பதால் தியானம் செய்வதை ஒத்திவைக்க முடியாது. மேலும் எதன் மீது நமது நாட்டம் இருக்கிறதோ அதைப் பற்றிய எண்ணகள்தான் மனதில்  நிறைந்து இருக்கும் என்பதால் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தாலும் திடீரென்று கடவுளைப்பற்றிய தியானம் செய்யமுடியாது. எனவே மரணத்திற்கு பிறகு முக்தியடைய வேண்டும் என்று விரும்பும் இவர்கள் தங்கள்  வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. மேலும் இவ்வகை தியானம் முக்தியடைவதற்கு ஈடான பலனை இந்தப்பிறவியிலேயே கொடுக்கும்.

இருவகை தியானங்கள்

பற்றுடையோர்கள் முக்தியடைவதேயில்லை. முக்திவிழைபவர்கள் அனைவரும் முக்தியடைவதில்லை. அவர்களில் தகுதி வாய்ந்த ஒரு சிலர் மட்டுமே தீவிர முயற்சிக்குபின் முக்தி வேட்கை அகன்ற முற்றுணர்ந்தோர்களாக மாறுவார்கள். மற்றவர்கள் தங்களுக்கு இந்தப்பிறவியில் முக்திகிடையாது என்று முடிவெடுத்து மறுபிறவியில் நற்கதி கிடைக்கவேண்டும் என்று தங்களுடைய இஷ்டதெய்வத்தை தொழுவதில் திருப்தியடைந்துவிடுவார்கள்.

தீவிர முயற்சியும் ஆர்வமும் உள்ள முக்திவிழைவோர்கள் குணங்களற்ற பரமனை தான் என்று தியானம் செய்து தங்கள் முயற்சியில் வெற்றிபெறுவார்கள். தான் பரமன் அல்ல என்ற உறுதியுடன் இருப்பவர்கள் சர்வ குணங்களுடன் கூடிய இறைவனை தியானம் செய்து மறுபிறவியில் முக்தியடைய முயற்சிப்பார்கள். முதல் வகை தியானம் முக்தியடைந்தபின் முடிவுக்கு வந்துவிடும். இரண்டாம் வகை தியானம் வாழ்நாள் முழுவதும் தொடரப்பட வேண்டும்.

முதல் வகை தியானம்

ஐந்து புலன்களால் அறியப்படும் உலகப்பொருள்கள் அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அவற்றின் மாறாத இருத்தலில் கவனம் செலுத்தி தனது இருத்தல் என்ற தன்மைதான் உலகின் இருப்பிற்கு ஆதாரம் என்ற எண்ணம் முதல் வகை தியானம். வடிவங்கள் மற்றும் பெயர்கள் என்ற ஒளி-ஒலி காட்சியின் மாறாத இருத்தல் நான் என்ற இந்த தியானம் கனவில் காணும் பொருள்கள் எல்லாம் என்னைச்சார்ந்து இருப்பது போல் இவ்வுலகம் முழுவதற்கும் நான் தான் ஆதாரமாக இருக்கிறேன் என்ற உண்மையை ஆழ்மனதில் பதியவைக்கும்.

எதிரில் தெரியும் நாற்காலியாக இருப்பதும் நான் அதன் மீது அமர்ந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் மனிதரும் நான் என்பது போன்ற எண்ணங்களை மனதில் நிலைநிறுத்தினால் என்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது தெளிவாகும்.

ஐந்து புலன்கள் சித்தரிக்கும் உலகத்தை பற்றிய எண்ணங்கள் மனதில் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அவற்றின் மாறாத ஆதாரமான உணர்வின் மீது கவனத்தை செலுத்தி அந்த உணர்வுதான் நான் என்று தியானம் செய்தால் அறியும் சக்தியை மனது என்னிடமிருந்து கடன்வாங்கி புலன்களை இயக்குகிறது என்ற அறிவு நிலைத்து அறிபவனாகிய நான் என்றும் அமைதியானவன் என்பது புரியும்.

அறிபவனான நான் அறியும் பொருளாகவும் தென்படுகிறேன் என்ற உண்மையை தியானிப்பதால் இந்த அறிவு மனதில் நிலைபெற்று ஆனந்தம் வேண்டும் என்று அலைபாயும் தவிப்பு ஒரு முடிவுக்கு வந்துவிடும். வெளியே இருக்கும் உலகமும் உள்ளே தோன்றும் எண்ணமும் மாற்றத்திற்குட்பட்டது என்பதால் மாறாத எனக்கு உலகத்தை மாற்றவேண்டும் என்ற ஆசையோ மனதின் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்ற அவசியமோ கிடையாது. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது என்று அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக இருப்பவர்கள் மேற்கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இரண்டாம் வகை தியானம்

இறந்தபின் மீண்டும் பிறவா வரம் வேண்டும் என்று கேட்கும் முக்திவிழைவோர்கள் நடப்பது அனைத்தும் நாரணன் விளையாட்டு என்று தன்னிலிருந்து வேறுபட்ட ஒரு கடவுளின் மீது அனைத்து பாரங்களையும் போட்டுவிட்டு எனக்கென்ன மனக்கவலை என்று உலகதுன்பங்களிலிருந்து முழுதும் விடுபடுவார்கள்.   

தனது உடல் மனது உட்பட்ட உலகில் உள்ள அனைத்தும் காணும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளின் சொத்து என்றும் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்றும் உறுதியாக நம்புவதால் தினமும் தனது இஷ்ட தெய்வத்தை போற்றி வழிபட்டு இவர்கள் செய்வது இரண்டாம் வகை தியானம்.

வாழ்வில் ஏற்படும் துன்பங்களை தங்கள் முன்னேற்றத்திற்காக கடவுள் வைக்கும் சோதனைகள் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தொடர்ந்து செய்யும் தியானத்தால் இவர்களுக்கு ஏற்படும். முக்தியடைய தகுதியானவனாக தன்னை மாற்றும் பொறுப்பையும் இவர்கள் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டதால் எவ்வித கவலையும் இன்றி இவர்கள் தியானத்தை தொடரலாம். கடவுளின் கருணையை தவிர வேறு ஒன்றும் வேண்டாம் என்று உலகப்பொருள்களின் மேல் இருந்த பற்று அனைத்தையும் துறந்த காரணத்தால் துன்பத்திற்கு காரணமான ஆசை ஏற்படாது. செய்யும் செயல்கள் அனைத்தையும் ஆண்டவன் கட்டளையாக கருதி அவனுக்கு தொண்டு செய்யும் மனப்பாங்குடன்  செய்வதால் பற்றுடையோர்கள் படும் துன்பம் இவர்களுக்கு இருக்காது. கிடைக்கும் பலன் அனைத்தும் அவனது பிரசாதம் என்று வேறு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனவே வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கு நான் பொறுப்பு அல்ல என்று அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு இவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

இருவகை தியானங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்

வெளியுலகில் முயற்சி செய்து துன்பம் கலவா இன்பத்தை பெற முடியாது என்று உணர்ந்த பற்றுடையோர்கள் முக்திவிழைவோர்களாக மாறுவது ஒருவழிப்பயணம். எவ்வளவு முயன்றும் முக்திகிடைக்கவில்லை என்று மீண்டும் உலகின் மேல் பற்று வைத்து இவர்கள் பற்றுடையோர்களாக மாறமாட்டார்கள்.  முக்திவிழைவோர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் முக்தியடைந்துவிடுவார்கள் என்று கூறலாம். ஏனெனில் முக்தியடையாதவர்கள் கூட கடவுள் நிச்சயம் முக்தியளிப்பார் என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாகவும் இன்பதுன்பங்களை சரிசமமாக ஏற்றுக்கொண்டு முக்தியடைந்தவர்களைப்போல் என்றும் இன்பத்துடன் வாழ்வார்கள்.

எதையும் தாங்கும் இதயத்தை கொடுக்கின்றன என்ற நோக்கில் பார்க்கும்பொழுது  இருவகை தியானங்களும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் முதல்வகை தியானம் முக்தியடைந்தபின் முடிவுக்கு வந்துவிடும். இரண்டாம் வகை தியானம் வாழ்நாழ் முழுவதும் செய்யப்படவேண்டும். முதல் வகை தியானம் தான் இவ்வுலகின் ஆதாரம் என்ற ஒரு அறிவை நம் மனதில் ஏற்படுத்துகிறது. இரண்டாம் வகை தியானம் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை மனதில் நிலை நிறுத்துகிறது.

அறிவும் நம்பிக்கையும்

நான் இவ்வுலகின் ஆதாரம் என்ற அறிவு நம் மனதில் ஏற்படுத்தும் மாற்றத்திற்கும் கடவுள் நம்பிக்கை நம் மனதில் ஏற்படுத்தும் மாற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அறிவு மாறாது. நம்பிக்கை மாறாமலிருக்க தியானம் அவசியம்.

மனதில் கடவுள் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணம் நிலைக்க தீவிர ஆசையும் முயற்சியும் தேவை. ஆனால் நான் பரமன் என்ற அறிவு எவ்வித ஆசையும் முயற்சியும் இல்லாமலேயே மனதில் நிலைத்து இருக்கும்.

வேலை கிடைத்து நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையால் மிகுந்த முயற்சி செய்து படிப்பை முடிக்கும்பொழுது தானாக அறிவு ஏற்பட்டிருக்கும். அது போல துன்பங்கள் அகலவேண்டும் குறையாத இன்பத்தைப்பெறவேண்டும் என்ற தீவிர ஆசையுடனும் விடாமுயற்சியுடனும் வேதம் படித்தால் நான் பரமன் என்ற அறிவு மனதில் தானாக ஏற்பட்டு விடும். மனதில் ஏற்பட்ட அறிவை அகற்றத்தான் முயற்சியும் ஆசையும் தேவையே தவிர அறிவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நான் மனிதன் என்ற தவறான அறிவை அகற்றுவது சரியான அறிவால் மட்டுமே முடியும். நான் பரமன் என்ற அறிவு சரியான அறிவு என்பதால் அந்த அறிவை மாற்றவோ அழிக்கவோ முடியவே முடியாது. நான் பரமன் என்ற அறிவைப்பெற இயலாதவர்கள் மட்டுமே தான் கடவுளின் கையில் இருக்கும் ஒரு பொம்மை என்ற நம்பிக்கையை மனதில் நிலைநிறுத்த தொடர்ந்து தியானம் செய்யவேண்டும்.

கல்லை கல்லாக பார்ப்பது அறிவு. கல்லை கடவுளாக பார்ப்பது நம்பிக்கை.

கல்லை கல்லாக பார்ப்பதில் நமக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை. ஏனெனில் கல் கல்தான். அதுபோல நான்தான் இவ்வுலகமாக காட்சியளிக்கிறேன் என்ற அறிவு ஏற்பட்டதும் உலகை வேறாக நம்மால் பார்க்க முடியாது. ஆனால் எந்தக்கல்லை எந்த கடவுளாக பார்ப்பது என்பதில் நமக்கு ஒரு சுதந்திரம் இருப்பதால் கல்லில் கடவுளை பார்க்க தொடர்ந்த தியானம் தேவை.

உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை மனதில் இருத்த தியானம் அவசியம். உலகம் என்னால் என்னிலிருந்து எனக்காக படைக்கப்பட்டது என்பது அறிவு. இந்த அறிவை மனதிலிருந்து அகற்ற முடியாது.

தன்னிலிருந்து வேறுபட்ட இவ்வுலகம்தான் தனது துன்பத்திற்கு காரணம் என்ற தவறான அறிவு பற்றுடையோர்களிடம் நிலைத்து இருக்கும். இதற்கு நேர்மாறாக நீதான் உலகம் என்ற சரியான அறிவை முக்திவிழைவோர்களுக்கு நேரடியாக ஏற்படுத்துவது கடினம் என்பதால் உலகத்தை படைத்தவன் கடவுள் என்ற கருத்தை ஒரு படிக்கட்டாக வேதம் பயன்படுத்தியுள்ளது. படியை பயன்படுத்தி சரியான அறிவை பெற்ற முக்திவிழைவோர்கள் முற்றுணர்ந்தோர்களாகிறார்கள். அவ்வாறு இல்லாமல் அதேபடியில் நின்று கடவுள் நம்பிக்கையுடன் வாழும் மற்றவர்கள் அந்த நம்பிக்கை நிலைக்க தியானம் என்ற செயலை தொடர்ந்து செய்யவேண்டும்.

செயல்களின் பலன்

இல்லாத பொருளை அடைவது அல்லது உருவாக்குவது மற்றும் இருக்கும் பொருளை மாற்றுவது அல்லது தூய்மைபடுத்துவது போன்றவை செயல்கள் செய்வதால் மட்டுமே சாத்தியமாகும். எப்படி சமைப்பது என்ற அறிவு மட்டும் இருந்து அதை செயல்படுத்தாவிட்டால் சாப்பிடமுடியாது. செயல்கள் செய்வதால் மட்டுமே உலகில் உள்ள பொருள்களை அனுபவிக்க முடியும். படிப்பதனால்தான் அறிவு ஏற்படும் என்றாலும் அறிவினால் நேரடியாக பலன் கிடைப்பதில்லை.

செயல்கள் செய்வதால் கிடைக்கும் பலன்கள் எதுவும் நிலையாக இருப்பதில்லை. துடைத்துவைத்த பொருள் மீண்டும் அழுக்காகும். எனவே தொடர்ந்து செயல்களை செய்வது அவசியமாகிறது. அறிவு மட்டும்தான் அழிவதில்லை. ஏற்கனவே ஏற்பட்ட அறிவை தக்கவைத்துக்கொள்ளவோ பாதுகாக்கவோ எந்தவித செயலையும் செய்ய வேண்டாம். அறிவைத்தவிர மற்ற அனைத்தும் அழிந்துவிடும் தன்மையுடையவை என்பதால் உலகை அனுபவிக்க தொடர்ந்து செயல் செய்ய வேண்டியது அவசியம்.

அறிவினால் கிடைக்கும் பலன்

செயல் செய்ய அறிவு வேண்டும். எனவே செயல்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் அறிவினால்தான் எனலாம். பொதுவாக அறிவு நேரடியாக எவ்வித பலனையும் கொடுப்பதில்லை. இந்த விதிக்கு ஒரே ஒரு விதிவிலக்கு உள்ளது. நான்தான் இந்த உலகத்தின் இருப்புக்கு ஆதாரம் என்ற வேதம் கூறும் உண்மையை அறிவதால் மட்டுமே நம்மால் முக்தியடைய முடியும். இதைத்தவிர மற்ற அறிவு எதுவும் செயலாக மாற்றம் பெற்றபின்தான் பலனை அளிக்கும். எனவேதான் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்ற அறிவு தொடர்ந்து தியானம் செய்தல் என்ற செயலாக மாறினால்தான் நமக்கு நிம்மதி என்ற பலனை கொடுக்கும். ஒரு சில காலம் தியானம் செய்த பின் நிறுத்திவிட்டால் மறுபடியும் நமது நிம்மதி குறைந்து மீண்டும் தியானம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்.

பக்கத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் நண்பன் ‘பணம் காணவில்லை’ என்று உளரும்பொழுது ‘காவல் நிலையத்தில் புகார் செய்’ என்று அவனை மேலும் செயல் செய்ய தூண்டுவதைவிட எழுப்பிவிடுவதுதான் சிறந்தது. அதுபோல உலகத்தில் விரும்பும் பொருள்களை அடையவும் வேண்டாதவற்றை தவிர்க்கவும் தொடர்ந்து இங்குமங்கும் அலைந்து திரிந்து செயல் செய்யும் மக்களுக்கு உலகம் இருப்பதாக தோன்றுவது மாயை என்ற உண்மை அறிவை கொடுத்தால் அவர்களது துன்பங்கள் அனைத்தும் ஒரு நொடியில் மறைந்துவிடும்.  

இருக்கும் பொருள்களை காப்பாற்றவும் இல்லாத பொருள்களை சம்பாதிக்கவும் எவ்வித செயல்களும் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை என்ற அறிவு நிரந்தர அமைதியை கொடுக்கும். இந்த அறிவை பெற இயலாத முக்திவிழைவோர்கள் தொடர்ந்து தியானம் என்ற செயலை செய்து அதே பலனை பெறலாம். கனவில் நம்மை குத்தும் கத்தி எண்ணத்தால் உருவானது என்ற அறிவு ஏற்படும் வரை அது இரும்பால் செய்யப்பட்ட ஆயுதம் அல்ல என்ற தியானம் அவசியம்.

இது மாறும்

நிம்மதியாக இருக்கும் நான் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற அறிவு கனவின் நிகழ்வுகளை தொடர்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை நமக்கு கொடுக்கும். நான் என்ற அகங்காரத்தை நாம் ஏற்று நடிக்கும் பாத்திரமாக அறிந்து இந்த உலகம் என்ற நாடகமேடையில் வாழ்வு என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே அதை எவ்வித துன்பமுமில்லாமல் தொடர்ந்து அனுபவிக்கலாம். எவ்வளவு நாட்கள் இந்த நாடகம் நடக்கும் என்பதோ அதில் நிகழும் சுவாரஸ்யமான திருப்புமுனைகள் எந்த வழியில் நம் வாழ்வை திருப்பிவிடும் என்பதோ நமக்கு தெரியாது. ஆனால் ‘இது மாறும்’ என்பது மட்டும் மாறாத உண்மை. வாழ்க்கை நாடகத்தின் சோககட்டம் வெகு விரைவில் மாறி இன்பத்திற்கு வழிவகுக்கும். எல்லாம் நலம் என்ற நிலையும் விரைவில் மாறும். உச்சகட்டம் என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட காட்சி எதுவும் வாழ்வு எனும் நாடகத்தில் கிடையாது. வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அதன் உச்சகட்டம்தான். எந்த நிலையில் நாம் இருந்தாலும் அந்த நிலையும் விரைவில் மாறிவிடும். ‘இது மாறும்’ என்ற ஒரே விதியை மாறாமல் பின்பற்றும் இந்த வாழ்வில் அவனும் அவளும் இணைபிரியாமல் இறுதிவரை இனிதே வாழ்ந்தார்கள் என்பது போன்ற நம்ப முடியாத முடிவு காட்சிகள் செயற்கையாக நாம் உருவாக்கும் கற்பனைகதைகளில் மட்டுமே இடம் பெறும்.

இது மாறும் என்ற நியமத்தை ஒரு பொது அறிவாக வார்த்தையளவில் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அந்த மாற்றம் தான் விரும்பிய மாதிரி நடக்காவிட்டால் என் வாழ்வில் இது எப்படி நிகழலாம் என்று வருத்தப்படுவதை தவிர்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் ‘இது மாறும்’ என்பது அறிவாக மனதில் பதியாததுதான். மேலும் உலகின் தொடர்ந்த மாற்றத்திற்கு ஆதாரமாக மாறாமல் இருப்பது நான் என்பதை புரிந்து கொள்ளாததும் இதுபோல் துக்கப்படுவதற்கு ஒரு காரணம். சாத்தான் என்று மற்ற மதங்களால் வர்ணிக்கப்படும் மாயை தன் கவர்ச்சி நடனத்தை ஆடி நம் மனதை மயக்குவதன் மூலம் தான் வெறும் ஒளி-ஒலி காட்சி என்ற அறிவை நம் மனதில் ஏற்படுவதை தடுக்கிறது. நான்தான் இந்த ஒளி-ஒலி காட்சியின் ஆதாரம் என்ற அறிவு ஏற்பட்டபின் மாயையின் நடனத்தை ஆனந்தமாக அனுபவிக்கலாம். நடனத்தின் ஒரு அங்கமாக நம் உடலும் மனதும் ஆடிக்கொண்டிருப்பதால் ஆட்டம் முடியும்வரை அறிவு ஏற்படாது என்று தவறாக முடிவெடுப்பவர்கள் மாயையின்  தலைவனான இறைவனை சரணடைந்து வாழ்நாள் முழுவதும் தியானம் செய்வதன் மூலம் துன்பமான வாழ்வு மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

முடிவுரை :

கனவில் பணம் தொலைந்ததால் கலவரப்படும் மனம் தான் செயல்பட ஆதாரமாக இருக்கும் மனிதனை தானாக அறிந்துகொள்ள முடியாது. கனவிலிருந்து விழித்தால் மட்டுமே படுக்கையில் படுத்திருப்பவனை அறியமுடியும். அதுபோல இவ்வுலகில் தான் செயல்பட ஆதாரமாக இருக்கும் பரமனை மனம் அறிந்துகொள்ள வேதம் குரு மூலமாக உதவுகிறது. வேறு வழியில் இந்த அறிவை மனம் அடையவே முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தேன் என்ற உண்மை விழித்தபின்தான் விளங்குகிறது. அதுபோல் இந்த மாயையின் நடனத்திலிருந்து விழித்துக்கொள்வது மரணத்திற்கு பின்கூட சாத்தியமில்லை. ஏனெனில் மனம் இல்லாமல் எவ்வித அறிவையும் அடையமுடியாது. மனம் அதில் ஏற்படும் அறிவு ஆகிய இரண்டும் அந்த நடனத்தின் ஒரு பகுதி என்பதால் அந்த அறிவைப்பெற நாம் தயார் நிலையில் இருக்கும்பொழுது குருவின் வாயிலாக உண்மை விளங்கும்.

தான் விழிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உறங்குபவர்களை எழுப்ப முடியாது. அதுபோல அனைத்து முக்திவிழைவோர்களையும்  உண்மையை அறிந்த குருவால் எழுப்பி விட முடியாது. விழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் மெல்ல தொட்டால் கூட உடனே எழுந்துவிடுவார்கள். மாறாத உணர்வுதான்  நான் என்ற வாழ்வின் மிகமுக்கியமான அறிவை அடைய தயாராய் இருப்பவர்கள் குருவின் துணையுடன் மிக எளிதாக முற்றுணர்ந்தோனாக மாறிவிடுவார்கள். மாறும் மாயாநடனத்தில் மூழ்கி உண்மையை அறிய இயலாதவர்கள் மாயையின் தலைவனான இறைவனை துதி செய்து துன்பமில்லா வாழ்வை அடைவார்கள்.

ஆங்கிலேயேர்களின் ஆட்சி முடிந்து அநேக வருடங்கள் ஆன பின்னும் அவர்கள் ஆளப்பிறந்தவர்கள், நாம் அடிமைகள் என்ற தாழ்வு மனப்பான்மை பலருக்கு இருப்பதுபோல் ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனிடம் நான் ஒரு தொழிலாளி என்ற மனப்பக்குவத்துடன் இருப்பவர்களால் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கிரகங்களும் கொண்ட இந்த பரந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குவது நான்தான் என்ற உண்மையை புரிந்து கொள்வது கடினம். எனவே இவர்கள் என்றும் இன்பமாக இருக்கும் வாழ்வை இறந்தபின் கொடுக்கும்படி கடவுளிடம் தொடர்ந்து தியானம் செய்து வேண்டிக்கொள்வதை தவிர்க்க முடியாது.

இது மாறும் என்று புரிந்துகொண்டவர்கள் மாற்றத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. மாறாமல் இருக்கும் ஒன்றை அறிந்தவர்கள் முக்தியடைவார்கள்.

பயிற்சிக்காக :

1. யார் வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டும்?

2. இறக்கும் தருவாயில் கடவுளைப்பற்றிய எண்ணங்கள் மனதில் இருந்தால் போதாதா? எதற்காக வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டும்?

3. இந்தப்பாடத்தில் குறிப்பிடப்பட்ட கடவுளர்கள் யார் யார்?

4. இருவகை தியானங்களை விளக்குக.

5. இருவகை தியானங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன?

6. இருவகை தியானங்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் என்ன?

7. நம்பிக்கைக்கும் அறிவுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் என்ன?

8. கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் பலன் என்ன?

9. நான் பரமன் என்ற அறிவால் ஏற்படும் பலன் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. நான் பரமன் என்று அறிந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டாமா?

2. அனைத்து மதங்களைச்சேர்ந்த உண்மையான பக்தர்கள் அனைவரையும் முக்தியடைந்தவர்கள் என்று கருதமுடியுமா?

3.முக்தியடைந்தவர்களுக்கும் முற்றுணர்ந்தோர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.