Friday, November 4, 2011

Lesson 159: Restful among restless (Brahma Sutram 4.1.7-10)


பாடம் 159: அலைபாயும் அமைதி
பாடல் 484 – 487 (IV.1.7-10)

தியானம் என்பது மனதை அமைதிப்படுத்த மனதால் மட்டுமே செய்யப்படும் வேலை என்பதால் உடல் ஓய்வுநிலையில் இருப்பது அவசியமா என்ற கேள்விக்கு பதில் நம் நோக்கத்தைப்பொறுத்து மாறும் என்று இந்த பாடம் பதிலளிக்கிறது.

உடல் இயங்கிக்கொண்டிருக்கும்பொழுது மனதை அமைதிப்படுத்த முடியாது. நடப்பது, ஓடுவது, ஆடுவது போன்ற காரியங்களை செய்யும்பொழுது மனம் அமைதியில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. எனவே செயல்கள் எதையும் செய்யாமல் உடலை அமைதிப்படுத்தினால்தான் மனதை அடக்க முயற்சிச்செய்ய முடியும். அதே சமயம் எவ்வித வேலையும் செய்யாமல் உயிர் வாழவோ உலகவாழ்வை அனுபவிக்கவோ முடியாது.

பணம் சம்பாதிப்பது முக்கியமா செலவழிப்பது முக்கியமா என்ற கேள்விக்கு பதில் செலவழிப்பதற்காகத்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்வது போல் ஞானம் பெறும் வரை உடலை கட்டுப்படுத்தி தியானம் செய்யவேண்டும் என்றும் ஞானம் பெறுவது உலக சுகங்களை துன்பம் கலக்காமல் அனுபவிப்பதற்காகத்தான் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஊர் சுற்றி உலக இன்பங்களை அனுபவிக்கத்துடிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தங்கள் மனதின் தேடல்களை கட்டுப்படுத்தி பாடத்தில் கவனம் செலுத்துவதன் ஒரே நோக்கம் நல்ல மதிப்பெண்களுடன் தேறினால்தான் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். மாணவப்பருவம் முடிந்து வேலை பார்க்கத்துவங்கியவுடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் இளைஞர்கள் போல மனதை கட்டுப்படுத்தி வேதம் படிப்பதன் ஒரே நோக்கம் ஞானம் பெற்றதும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இன்பமாக வாழலாம் என்பதுதான்.

பணம் உலக சுகங்களையும் ஞானம் குறையாத இன்பத்தையும் தரவல்லவை. பெற்ற ஞானம் அழியாது. உலகப்பொருள்களை அனுபவிக்க ஒரு எல்லையில்லை. எனவே ஞானம் பெற்றபின் உடல் மற்றும் மனதில் திறமை இருக்கும்வரை தொடர்ந்து முயற்சி செய்து நிறைய பணம் சேர்த்து வாழ்க்கைத்தரத்தை அதிகரித்துக்கொள்ளுவதன் மூலம் மனம் விரும்பியபடி வாழ்வை அனுபவிக்கலாம்.

உலகப்பொருள்கள் செய்யும் மூன்று செயல்கள்

அறியாத பொருள் மேல் ஆசை வைக்க முடியாது. இன்பம் என்றால் என்ன என்று அறியாதவர்களால் எப்பொழுதும் இன்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைபட முடியாது. இந்த ஆசை எல்லோருக்கும் இருப்பதால் அனைவரும் தங்கள் வாழ்வில் இன்பத்தை அவ்வப்பொழுது அனுபவிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. உலகில் உள்ள பொருள்கள்தான் மக்களுக்கு இன்ப அனுபவத்தை பெறும் வாய்ப்பை கொடுத்துள்ளன. உலகப்பொருள்கள் இல்லாவிட்டால் இன்பம் என்பது என்ன என்பதை அறியாதவர்களாகத்தான் எல்லோரும் இருந்திருப்பார்கள்.

சிறுவயதில் முதன் முதலாக விளையாட்டுப்பொம்மைகள் மூலம் இன்பத்தை அனுபவித்ததால் பொருள்களில்தான் இன்பம் இருக்கிறது என்ற தவறான அறிவு அனைத்து மனிதர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும் இன்பம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதைவிட தவறான அறிவுடன் இன்பத்தை அனுபவிப்பது மேல்.

தாஜ்மஹாலைப்பார்க்க ஆக்ரா செல்லவேண்டும் என்று சரியான அறிவுரை சொல்பவர் தவறான பாதையை காண்பிப்பதுபோல வாழ்வின் குறிக்கோள் இன்பமாக இருப்பதுதான் என்று சரியாக சொல்லிக்கொடுத்த உலகப்பொருள்கள் இன்பத்தை அடைய தவறான பாதையை காட்டிக்கொடுக்கின்றன. எனவேதான் இன்பமாக இருக்க பணம் தேவை என்ற தவறான அறிவுடன் இன்பத்தை தியாகம் செய்து பணம் சம்பாதிக்கும் செயல்களில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இருப்பது நான் மட்டும்தான். என் மனமும் இவ்வுலகப்பொருள்களைப்போல் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை அறியாத பற்றுடையோர்கள் பிரியம், மோதம் மற்றும் பிரமோதம் ஆகிய இன்பங்களை அனுபவிக்கும்பொழுது அவை உலகத்திலிருந்து கிடைக்கின்றன என்று நினைப்பார்கள். இது தவறான அறிவு என்று உணரும்பொழுது அவர்கள் முக்திவிழைவோர்களாகிறார்கள். இதுபோல் அவர்களின் முன்னேற்றத்திற்கும் வழி வகுப்பதும் உலகத்தில் உள்ள பொருள்களே. எனவே இன்பம்தான் வாழ்வின் குறிக்கோள் என்று மனிதர்களுக்கு உணர்த்தி அவர்களை இன்பத்தை பெற பொருள்களை நாடும்படி செய்து அந்த தேடலில் அவர்கள் தோற்கும்பொழுது ஏற்படும் மனப்பக்குவத்தின் காரணமாக இன்பத்தின் சரியான இருப்பிடத்தை தேட அவர்களை வேதத்தை படிக்க வைப்பது ஆகிய மூன்று செயல்களையும் உலகப்பொருள்கள் செய்கின்றன.

உலகப்பொருள்கள் படைக்கப்பட்டதன் நோக்கம்

எல்லையில்லா ஆனந்தங்களை உள்ளடக்கிய இந்த உலகம் படைக்கப்பட்டதன் ஒரே நோக்கம் நாம் அதில் எல்லா சுகங்களையும் அனுபவித்து துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழவேண்டும் என்பதுதான்.

முதன்முதலில் சைக்கிள் ஓட்டும்பொழுது கீழே விழுந்து முட்டியில் காயம் படும் என்பதால் சைக்கிள் வாங்க கூடாது என்று முடிவெடுப்பது முட்டாள்தனம். காயம் படாமல் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும். அது போல் துன்பங்களுக்கு காரணம் உலகத்தில் உள்ள பொருள்கள் என்று நினைப்பது அறியாமை. இன்பமாக வாழ தேவையான அறிவை பெற்றால் துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழலாம்.

சைக்கிள் ஓட்டுவதை கற்றுக்கோள்ள சைக்கிளின் உதவி தேவை. அதுபோல் இன்பமாக வாழ தேவையான அறிவைப்பெற மேற்குறிப்பிட்ட மூன்று செயல்கள் மூலம் உலகப்பொருள்கள் நமக்கு உதவுகின்றன. எனவேதான் இவ்வுலகம் கர்மபூமி என்றும் முக்தியடைய வழிவகுக்கும் ஒரே இடம் என்றும் வேதம் கூறுகிறது. சுவர்க்கம் முதலிய பல உலகங்களை வேதம் வர்ணித்தாலும் அவை தற்காலிகமானவை என்ற காரணத்தால் நிரந்தரமான இன்பத்தை தரக்கூடிய ஒரே வழி பூமியில் மனிதனாகப்பிறப்பது மட்டுமே என்றும் அரிதாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்றும் வேதம் எடுத்துரைக்கிறது.

சைக்கிள் ஓட்டத்தெரிந்தவுடன் நடந்து செல்வது நின்றுவிடும். சைக்கிள் இல்லாமல் எங்கும் செல்வது முடியாதகாரியம் என்று தோன்ற ஆரம்பித்துவிடும். சிறிது காலத்தில் சைக்கிளை விட்டுவிட்டு மோட்டர் சைக்கிள் வாங்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். அதன் பின் உடன் செல்ல ஒரு துணை மீது நாட்டம் ஏற்படும். இது போல் ஒரு முடிவேயில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக உலக சுகங்களை அனுபவிக்கும் ஆசையையும் வாய்ப்பையும் தரும் வண்ணம் எண்ணற்ற பொருள்கள் இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை நியாயமானது. முற்றுணர்ந்தோர்கள் இது போன்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்யும்பொழுதும் இன்பமாக செயல்படுவார்கள். மேலும் முயற்சி செய்த பின்னும் இந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால் அதைகுறித்து வருத்தமடைய மாட்டார்கள். துன்பம் கலவா இன்பத்துடன் மென்மேலும் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவே உலகில் உள்ள அனைத்து பொருள்களும் படைக்கப்பட்டுள்ளன.

உலகப்பொருள்களை படைத்தவன்

உலகைப்படைத்தவன் ஆண்டவன் என்று நம்புபவன் பற்றுடையோன். பரமனின் மாயாசக்தி உலகமாக பரிணமித்துள்ளது என்று நினைப்பவன் முக்திவிழைவோன். இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவன் தான் தான் என்ற உண்மையை அறிந்தவன் முற்றுணர்ந்தோன்.

இது என்று சுட்டிக்காட்டகூடிய உடல் மனம் உள்ளடங்கிய உலகப்பொருள்கள் அனைத்தையும் அறிபவன் அவற்றை படைத்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை தர்க்கத்தின் துணையுடன் நிருபிக்கலாம். இதுவும் அதுவும் ஒன்று என்பது உண்மையாக இருக்கவேண்டுமானால் இது அது என இருபொருள்கள் இருக்கவே முடியாது. ஒரே மனிதரை வேறு ஒருவர் என்று தவறாக நினைக்கும்பொழுதுதான் அவர்தான் இவர் என்ற சரியான அறிவைப்பெற முடியும். அதுபோல் இவ்வுலகம் உண்மை என்ற தவறான அறிவை சரிசெய்தால் உண்மையில் இருக்கும் ஒரே பொருளான நான்தான் இவ்வுலகை படைத்தவன் என்பது தெளிவாகும்.  

இடம், பொருள், காலம் ஆகிய மூன்றும் இருப்பது போல் தோன்றும் மாயை என்பதால் இவற்றின் ஆதாரமாக இருக்கும் உண்மை என்னைத்தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. ஏனெனில் எவ்வித மாற்றமுமில்லாமல் எப்பொழுதும் இருக்கும் என்னைத்தவிர வேறு எதுவும் கிடையாது என்பதால் இவ்வுலகை படைத்தவன் நானே. மேலும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டது என்று முடிவு செய்ய   இரண்டிற்கும் இடையே இடம், வடிவம், காலம் என்ற அடிப்படையில் ஏதேனும் வேற்றுமை இருக்கவேண்டும். எதனுடனும் சம்பந்தப்படாமல் எவ்வித குணங்களும் இல்லாமல் என்றும் இருக்கும் நான், ஒருவனே என்பதால் என்னால் அறியப்படும் உலகை படைத்தவன் நான்தான் என்பது உறுதியாகிறது. 

என்னால் படைக்கப்பட்ட உலகில் நான் எப்படி துன்பப்பட முடியும் என்ற கேள்விக்கு நாம் காணும் கனவுலகை நனவுலகுடன் ஒப்பிட்டு விடைகாணலாம்.

முதல் கட்டம்: படைத்தல்

கனவில் தோன்றும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்துப்பொருள்கள், பொருள்களை அனுபவிக்கும் உடல் மற்றும் அந்த உடலில் அமர்ந்து செயல்படும் மனம் ஆகிய மூன்றும் என்னால் என்னை ஆதாரமாக கொண்டு எனக்குள் உருவாக்கப்பட்டவை. எனக்கு அந்நியமான எதுவும் கனவுலகில் இல்லை.  

இரண்டாம் கட்டம்: கனவினுள் புகுதல்

கனவுலக காட்சிகளை காணும் நான் என்னால் உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலுக்குள் புகுந்து அந்த மனதுடன் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு கனவை அனுபவிக்க ஆரம்பிக்கிறேன்.

மூன்றாம் கட்டம்: உண்மையை மறத்தல்

கனவுலகை படைத்தவன் என்ற நிலையில் இருந்து இறங்கி படைக்கப்பட்ட ஒரு பாத்திரம்தான் நான் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறேன். கனவுலகம் இருப்பதற்கே நான்தான் ஆதாரம் என்பது கனவு ஆரம்பித்தவுடன் மறந்துவிடுகிறது. அனைத்து பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் ஓரங்க நாடகத்தின் நாயகனாக இல்லாமல் ஒரு பாத்திரத்தோடு ஒன்றி நடித்து அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறேன்.

நான்காம் கட்டம்: பொய்யை உண்மை என்று நினைத்தல்

இல்லாத உலகம் இருப்பதுபோல் தோன்றி அதில் கிடைக்கும் அனுபவங்களை பெற ஆரம்பித்ததும் அதை உண்மை உலகமாக  பார்க்கத்தொடங்கிவிடுகிறேன். கனவு காணும்பொழுது அது கனவு என்று தெரியாமல் உண்மை என்று நம்பி அதில் நிகழும் நிகழ்வுகள் நிஜமாக நடப்பவை என்று ஏற்றுக்கொள்கிறேன்.

இதற்குப்பிறகு நான் படைத்த கனவுலகிற்கு என்னை துன்புறுத்தும் சக்தி கிடைத்து விடுகிறது. கனவுலகில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப நான் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே அலைக்களிக்கப்படுகிறேன். இருப்பது நான் மட்டும்தான் என்பதை மறந்து இல்லாத கனவுலகத்தை உண்மையில் இருப்பதாக நினைப்பதால் துன்பத்திலிருந்து விடுதலையடைய பற்பல செயல்களை கனவுலகில் செய்ய முயன்று தோல்வியை சந்திக்கிறோம். விழித்துக்கொள்வது மட்டுமே கனவுலக துன்பங்களிலிருந்து விடுதலைபெற நாம் செய்யவேண்டிய ஒரே செயல் என்பது விழித்த பிறகே தெளிவாகிறது.

கனவுலகைப்படைத்து அதில் இன்ப துன்பங்களை அனுபவிப்பதுபோல்தான் நனவுலகை படைத்து அதில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். கனவில் தோன்றும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியானவர்கள் என்பது எப்படி உண்மையில்லையோ அதுபோல நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களும் என்னால் உருவாக்கப்பட்டு எனக்குள் செயல்படுபவர்கள் என்பதை அறிந்தவன் முற்றுணர்ந்தோன்.

விபத்தில் அடிபட்டு வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு நாம் உதவி செய்வதுபோல் கனவு காணும்பொழுது அவனுடைய வலியை நாம் அனுபவிப்பது இல்லை. அவன் நம் கற்பனையில் உருவானவன் என்பதால் அவனுக்கு உதவாமல் அவனை சாகடிப்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்த மனிதன் நம்முடைய நெருங்கிய நண்பன் என்றாலும் அவனுக்கு உதவ வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவனை அப்படியே விட்டுவிட்டு நம் வேலையை நாம் கவனித்தால் அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் நம் மனம் பதறி எப்படியாவது அவனை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவதற்கு காண்பது கனவு என்ற அறிவு இல்லாதது மட்டுமே காரணம்.  விபத்து, அந்த மனிதன், அவனது வலி ஆகிய அனைத்தும் நமது கற்பனை என்பது கனவு முடிந்து விழித்தபிறகே நமக்கு புரிகிறது. கனவுகாணும்பொழுதே இவை பொய்யான தோற்றம் என்பது தெரிந்திருந்தால் நம்மால் முடிந்தவரை அவனுக்கு உதவி செய்ய முற்பட்டாலும் மனம் அளவுக்கு மீறி பதற்றமடையாது.

இந்த உலக அனுபவங்களும் இது போன்ற ஒரு கனவுதான் என்பது பின்வரும் மூன்று உண்மைகளை ஆராய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. காலம் நமது கற்பனை: நடக்கும் நிகழ்வுகளை மனதில் பதித்துவைத்து அதில் ஒரு கோர்வையை கண்டுபிடுத்து நேற்று, இன்று, நாளை ஆகியவற்றை கற்பனை செய்வதால் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டு இருப்பதாக தோன்றுகிறது.

2.காரண காரியம் நமது கற்பனை: இதனால்தான் இது நடந்தது என்று ஓரிரு படிகளை மட்டும் ஆராய்ந்து எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருப்பதாக தவறான முடிவெடுக்கிறோம். நான் எப்படி இந்த உலகிற்குள் வந்தேன் என்ற கேள்விக்கு விடையை கண்டுபிடிக்க முடியாது என்பதால் இது ஒரு கனவு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

3.மாற்றமடையாதது எதுவுமில்லை: கனவில் யானை தீடீரென்று பூனையாக மாறிவிடுவதைப்போல்தான் உலகில் உள்ள அனைத்து பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டு வருகின்றன. அறிவியல் சோதனைகள் மூலம் திடப்பொருள்கள் என்று எதுவுமில்லை என்றும் எல்லாம் மாயா சக்தியின் நடனம் என்றும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் நம் மனம் இன்றிருப்பார் நாளையிங்கே இருப்பதென்ன உண்மை என்பதை வாயளவில் ஏற்றுக்கொண்டு உண்மையில் நிலையான உலகில் வாழ்வதாகவே நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இடம்,பொருள், காலம் ஆகிய மூன்றுமே மாயை என்பதால் இவை உலகம் உண்மையில் இருப்பதாக கூறும் சாட்சி பொய்சாட்சியாகும். கனவை உண்மையென நம்பி இவ்வுலகில் வாழ்பவர்கள் பற்றுடையோர்கள். இந்த வாழ்வு வெறும் கனவு என்று வேதம் கூறுவதை அறிந்தபின்னும் உலகின் பிடியிலிருந்து விடுபட முயன்றுகொண்டிருப்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகம் தன்னை ஆதாரமாக கொண்டு படைக்கப்பட்டு தன்னுள் இயங்கும் ஒரு கனவு என்பதை உணர்ந்து விழித்துக்கொண்டவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

உலகப்பொருள்களின் தன்மை

நம்முடைய ஜடசக்தியால் கனவுகளைப்படைப்பதுபோல் நம் மாயா சக்தியால் உலகை படைத்துள்ளோம். இருத்தல், அறிதல் மற்றும் ஆனந்தம் என்ற மூன்றும் நம் இயல்பு. இந்த இயல்பை ஆதாரமாக கொண்டு உருவான மாயா சக்தியால் இந்த உலகை உருவாக்கியுள்ளோம்.

நெருப்பின் சூடும் தன்மையை மட்டுமே தண்ணீரால் ஏற்றுக்கொள்ளமுடியும். அது போல இருத்தல் என்ற நம் ஒரு தன்மையை மட்டும் பிரதிபலிக்கும் பொருள்கள் ஜடப்பொருள்கள். சுடும் தன்மை மற்றும் ஒளிரும் தன்மை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கும் இரும்புகுண்டைப்போல் இருத்தல் மற்றும் உணர்தல் ஆகிய இரு தன்மைகளையும் பிரதிபலிப்பவை உயிரினங்களாக காட்சியளிக்கின்றன. நெருப்புடன் ஒன்றாக கலந்து தன்னைமட்டுமல்லாமல் மற்ற பொருள்களையும் ஒளிரவைக்கும் சக்தி மரக்குச்சிக்கு மட்டும் இருப்பது போல்  இன்பம் என்ற நம் மூன்றாவது தன்மையையும் ஏற்கும் சக்தியுள்ளவர்கள் மனிதர்களாக தென்படுகிறார்கள்.

மனிதர்களின் மனம், உடல் உள்ளிட்ட அனைத்து உலகப்பொருள்களும் இதுபோல் நம் மாயாசக்தியான ஜடம், சக்தி மற்றும் ஒளி என்ற மூன்று தனிமங்களின் கலவை என்பதால் அவை தோற்றம், மாற்றம், மறைவு என்ற விதிக்கு கட்டுப்பட்டுவை. நிலையாக மாறாமல் இருக்கும் என்னை ஆதாரமாக கொண்டு தொடர்ந்த மாற்றங்களுக்குட்பட்ட உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை நம் மனதிற்கு புரியும்பொழுது நாம் இந்த கனவிலிருந்து விழித்துக்கொள்கிறோம்.

இதுபோல் விழிப்படைய நம் மனம் பண்பட வேண்டும். எனவே உலகப்பொருள்களுள் ஒன்றான நம் மனம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

மனதின் தன்மை

ஈரமான மரக்குச்சியால் முழுவதும் எரிந்து நெருப்புடன் ஒன்றாக முடியாது. அது போல் உலகப்பொருள்களிலிருந்து இன்பம் கிடைப்பதாக நினைக்கும்வரை துன்பம் கலக்காத இன்பத்தை அனுபவிக்க முடியாது. மரக்குச்சியை வெயிலில் உலர்த்தி காயவைப்பது போல் மனிதர்கள் சில காலம் உலக இன்பத்திலிருந்து பெறும் இன்பத்தை தவிர்த்து மனதை குவிக்கும் சக்திபெற்றவுடன் வேதத்தை படித்து தான் நிலையானவன் என்றும் மாறும் மனம் உலகப்பொருள்களில் ஒன்று என்றும் அறிந்து கொள்ள முடியும்.

தண்ணீர் திடம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளில் இருப்பதுபோல் மனதும் ஆழ்ந்த உறக்கம், கனவு, நினைவு என்ற மூன்று நிலைகளில் அனுபவங்களை பெறுகிறது. நீராவி கட்டுக்கடங்காமல் எல்லா இடங்களிலும் வியாபிப்பதுபோல் மனம் வெளியுலகில் சஞ்சரித்து இவ்வுலக அனுபவங்களையும், திரவநிலையில் தண்ணீர் தான் இருக்குமிடத்திற்குள் அலைபாய்வதுபோல் மனம் தன்னில் அடங்கி கனவுலக அனுபவங்களையும், முழுவதும் உறைந்த பனிக்கட்டியின் நிலை போல தான் முழுவதும் அடங்கிய அனுபவத்தை ஆழ்ந்தஉறக்கத்திலும் மனம் பெறுகிறது. மனம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளிலும் அனுபவங்களின் ஆதாரமாக இருப்பவன் நான் என்று முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே அறிவார்கள்.

உலகம் என்று ஒன்று இருக்கிறது என்று நமக்கு காட்டிக்கொடுப்பவை நமது ஐந்து புலன்கள் மட்டுமே. இவை இல்லாவிட்டால் உலகம் அந்தக்கணமே மறைந்து விடும். உறங்கும்பொழுது உலகம் மறைந்துவிடுகிறது. நமது புலன்களுக்கு உலகை அறியும் திறனைக்கொடுப்பது மனம். வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்கும்பொழுது மனம் ஊர்சுற்றிக்கொண்டிருந்தால் ஆசிரியர் பேசுவது காதில் விழாது. மனம் ஒரு ஜடப்பொருள். ஐந்து புலன்களுக்கு உலகை உணரும் சக்தியை கொடுக்க அது என்னைச்சார்ந்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் கடன் வாங்கிய இந்த சக்தியை அது இழந்து விடுவதால் உலகம் இல்லாமல் போய்விடுகிறது.

உலகம் பார்க்கப்படும் பொருள். ஐந்து புலன்களும் மனமும் உலகைப்பார்க்க உபயோகப்படும் கருவிகள். பார்ப்பவன் நான். என்னால் மனதின் துணையின்றி உலகை அனுபவிக்கமுடியாது. தான் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு பொய்யான ஜடப்பொருள் என்பதையும் தான் செயல்பட ஆதாரமாக இருக்கும் உணர்வு மாறாமல் என்றும் இருக்கும் உண்மை என்பதையும் மனம் அறிவதில்லை.

முடிவுரை :

உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. இருத்தல் என்பது மாறாத நான். மாறுகின்ற பொருள்களுக்கு தனித்தனிப்பெயரிட்டு நிலையான உலகை கற்பனை செய்து அதை உண்மை என்று நினைப்புடன் வாழ்வது அறியாமை. இந்த அறியாமையை அகற்ற மனதின் கவனத்தை மாறும் உலகிலிருந்து திருப்பி மாறாத இருத்தலின் மேல் செலுத்தவேண்டும்.

அலை மேல் தோன்றும் நீர் குமிழிபோன்ற கனவையும் வந்துபோகும் அலைகள் போன்ற வாழ்வையும் அறியும் நான் இவ்விரண்டிற்கும் ஆதாரமான நீர் போன்று நிலையானவன்.

நிலையாக இருக்கும் நான் தான் மாறும் உலகமாக தோற்றமளிக்கிறேன் என்ற அறிவு நம் மனதில் ஏற்பட்டதும் ஆனந்தத்தைத்தேடி அலையும் ஏக்கம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசை முடிவுக்கு வருவதுதான் முக்தி. 

நான் அறிவுருவாக என்றும் இருப்பவன் என்ற ஞானம் மனதில் நிலைபெறும்வரை உலகுடன் உறவாடுவதை கட்டுப்படுத்தி மனதை அமைதி படுத்தவேண்டும். அதற்குப்பின் எவ்வளவு செயல்கள் செய்து கொண்டிருந்தாலும் அலைபாயும் மனதின் ஆதாரம் ஆனந்தமயமான நான் என்ற அறிவு நிலையான அமைதியை கொடுக்கும். தொடர்ந்து ஆட்டம் போடும் அலைகளால் ஆழ்கடலின் அமைதியை கெடுக்கமுடியாது. அதுபோல இவ்வுலகின் நிரந்தர மாற்றங்கள் மனதில் ஏற்படுத்தும் ஏற்ற இறக்கங்கள் முற்றுணர்ந்தோனின் நிம்மதியை பாதிக்கும் சக்தியற்றவை.

தூங்கப்போகும்பொழுது கனவு ஏற்படலாம் என்று நாம் அறிந்திருந்தாலும் கனவு காணும்பொழுது விழித்தெழுவோம் என்று எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் கனவு நிஜமாக காட்சியளிப்பதால் விழிக்கவேண்டும் என்று முயற்சி செய்வதில்லை. அது போல இந்த வாழ்க்கை என்பது வெறும் கனவு என்பதை நம்பாமல் இருப்பதால் வேதம் நம்மை விழிக்கவைக்க செய்யும் முயற்சிகள் எளிதாக பலிப்பதில்லை. இந்த வாழ்வு ஒரு கனவு அல்ல என்பதை நிரூபிக்கவே முடியாது என்ற உண்மையை ஆராயும் மனப்பக்குவம் ஏற்பட்டதும் முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. உலகப்பொருள்கள் செய்யும் மூன்று செயல்கள் யாவை?

3. உலகம் படைக்கப்பட்டதன் காரணம் என்ன?

4. அறிபவன் படைத்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை தர்க்கம் மூலம் நிரூபிக்கவும்.

5. கனவு பற்றி விளக்கப்பட்ட நான்கு கட்டங்கள் யாவை?

6. உலகம் உண்மையாக இருக்கிறது என்று நாம் நம்ப எவை காரணம்?

7. உலகப்பொருள்களின் தன்மை என்ன?

8. மனம் எந்த மூன்று நிலைகளில் அனுபவங்களைப்பெறுகிறது?

9.  நீர்க்குமிழி, அலை, நீர் ஆகிய மூன்றினால் விளக்கப்பட்டவை யாவை?

சுயசிந்தனைக்காக :

1. மனதை அமைதிப்படுத்த உடலை ஓய்வு நிலையில் வைத்திருப்பது அவசியமா?

2. முக்தி அடைவது எப்படி என்ற கேள்விக்கு சென்ற பாடத்தில் கூறப்பட்ட பதிலுக்கும் இந்தப்பாடத்தில் இடம் பெற்ற பதிலுக்கும் உள்ள வேறுபாட்டை ஆய்க.

3. உலகத்தை படைத்தது யார்?

4. மற்ற மனிதர்கள் என்னை அறிவதனால் நான் எப்படி இந்த உலகை படைத்தவனாக இருக்க முடியும்?

5. மனதின் தன்மை எப்படியிருந்தால் முக்தியடைய முடியும்?

6. மனதின் தன்மையை மாற்ற என்ன செய்யவேண்டும்?

7. பார்ப்பவை, பார்க்கப்படுபவை பற்றி குறிப்பிட்ட நான்கு பொருள்களை முறைப்படி வரிசைப்படுத்தவும். (திருக்-திருஷ்ய விவேகம் என்ற நூலை படிக்கவும்)