Monday, October 24, 2011

Lesson 158: Joyful Living as a result of knowledge (Brahmasutram 4.1.6)


பாடம் 158: ஞானத்தினால் விளையும் முக்தியனுபவம்
பாடல் 483 (IV.1.6)

தன்னை பரமன் என்று அறிந்து கொள்வதற்காக மட்டுமே தியானத்தினால் மனதை பண்படுத்தவேண்டும் என்ற கருத்தை வலியுருத்தும் வகையில் முக்தியனுபவம் பெற ஞானம் மட்டும்போதும் என்ற விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசை நிறைவேறுவதுதான் முக்தி. கர்மகாண்டம் மற்றும் ஞான காண்டம் என்ற இருபிரிவுகளின் மூலம் முக்தியடைய இருக்கும் ஒரே வழியை வேதம் காட்டுகிறது.

கர்மகாண்டம்

முக்தியடையும் தகுதியை பெற மனிதன் உடலாலும் மனதாலும் செய்யவேண்டிய செயல்களை வேதத்தின் கர்மகாண்டம் முதலில் விவரிக்கிறது. மேலும் மனதில் வளர்த்திக்கொள்ளவேண்டிய நற்சிந்தனைகளையும் சரியான பாவனைகளையும் இது போதிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் அவர்களது ஆளுமையின் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரித்து மேலும் அவர்கள் வாழ்வையும் நான்கு கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு கட்டத்தில் செய்யவேண்டிய செயல்களை தர்மம் என்றும் செய்யக்கூடாத செயல்களை அதர்மம் என்றும் வேதத்தின் கர்மகாண்டம் விளக்கியுள்ளது.

தெரிந்தோ தெரியாமலோ அதர்மத்தை தவிர்த்து தர்மமாக வாழ்பவர்களுக்கு இவ்வுலக சுகத்தையும் மரணத்திற்குபின் சொர்க்கம் செல்லும் வாய்ப்பையும் வழங்குவதாக வேதம் உறுதிமொழி அளிக்கிறது. மேலும் ஞானகாண்டத்திற்கு செல்ல தேவையான மனப்பக்குவத்தையும் புத்திகூர்மையையும் தர்மப்படி வாழ்பவர்கள் மட்டுமே பெறுவார்கள் என்ற உண்மையையும் கூறுகிறது.

ஞானகாண்டம்

செயல்கள் செய்வதால் முக்தியடைய முடியாது என்று அறிந்தவர்களுக்கு நான் பரமன் என்ற உண்மையை ஞானகாண்டம் போதிக்கிறது. இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள் முக்தியடைகிறார்கள். அதன்பின் அவர்களை கர்மகாண்டம் கட்டுப்படுத்தாது என்றாலும் அவர்கள் தொடர்ந்து தர்மமாகவே வாழ்வார்கள்.

வேதம் காட்டும் பாதை

முக்தி என்பதன் பொருள் பலகோடி வருடங்கள் கழிந்தாலும் மாறாது என்பதால் முக்தியடைய இருக்கும் ஒரேவழியை காட்டும் வேதம் நித்தியமானது. மேலும் அறிவு மற்றும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு குழந்தையின் மழலை சொற்களின் பொருளை அதன் தாய் புரிந்துகொள்வதுபோல மனிதர்களின் திக்கற்ற தேடலின் நோக்கத்தை அறிந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேதம் உதவுகிறது. எவ்வளவுதான் உதவினாலும் அந்த உதவியை ஏற்றுக்கொள்ளும் தகுதி தர்க்கத்தின் துணையுடன் வேதத்தின் சாரத்தை ஜீரணிக்கும் திறன்படைத்த ஒருசிலருக்கே வாய்க்கிறது. மற்றவர்கள் நான் பரமன் என்ற ஞானம் எனக்கு முக்தியை கொடுக்கவில்லை என்றும் விருப்புவெறுப்புகளை அகற்றி மனதின் எண்ணங்களை அழித்து சமாதி நிலையில் கிடைப்பதுதான் உண்மையான முக்தியனுபவம் என்றும் தேடலில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

ஞானத்தினால் ஏற்படும் முக்தியனுபவத்தின் தரம் மனதின் தன்மையைபொறுத்து மாறுபடுமென்றாலும் ஞானம் ஏற்பட்டவுடன் முக்தியடைந்துவிடுவதால் அதன்பின் மனதை ஒடுக்கவோ விருப்புவெறுப்புகளை அகற்றவோ அவசியமில்லை. உடலில் வயிற்று வலி இல்லை என்று அனைத்து மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளும் காட்டினாலும் வயிற்றுவலியால் துடிப்பவன் நிம்மதியடையமாட்டான். அதுபோல நான் ஆனந்தமயமான பரமன் என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்தாலும் மனதின் அலைபாயும்தன்மை மாறாத காரணத்தால் பலர் முக்தியடைந்தபின்னும் தங்கள் தேடலை நிறுத்திக்கொள்வதில்லை. இதுபோன்றவர்களுக்கும் உதவிசெய்யும் நோக்குடன் வேதம் பின்வரும் கருத்துக்களை உபதேசித்துள்ளது.

1. சுற்றியுள்ள பொருள்களை கண்ணாடி பிரதிபலிப்பது போல் உலகைப்பற்றிய எண்ணங்கள் மனதில் ஏற்படுவது அதன் இயற்கை. எண்ணங்களின் சேர்க்கை உணர்வுகள். அறிவின் அடிப்படையில் நாம் உணர்வுகளை வேண்டியது மற்றும் வேண்டாதது என்று பாகுபாடு செய்கிறோம். வேண்டாத உணர்வுகளுக்கு துன்பம் என்று பெயர். நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டதும் துன்பங்கள் முழுமையாக மறைந்துவிடும். ஏனெனில் முற்றுணர்ந்தோன் வேண்டாத உணர்வுகள் என்று எதற்கும் பெயரிடுவதில்லை. கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் சிலசமயம் அவர்கள் மனதில் தோன்றினாலும் அவை வந்தசுவடு தெரியாமல் மறைந்துவிடும். எனவே அவை ஞானியின் மனதில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

2. சாப்பிடும்பொழுது நாக்கை கடித்துவிட்டதால் ஏற்படும் வலியில் நம்மை மறந்து பற்களை கண்டிப்பதோ அல்லது நீ ஏன் பற்களின் நடுவே சென்றாய் என்று நாக்கை திட்டுவதோ தவறில்லை. நம்முடன் பழகும் அனைத்து மனிதர்களும் நான் என்று அறிந்திருந்தாலும் அவர்களில் சிலர் மேல் கோபபடுவதில் தவறில்லை. ஆனால் அவர்களை வருத்தப்படவைக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது. பல் செய்த தவறுக்கு அதை சுத்தியலால் அடிக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை.

3. யாருக்கும் எவ்வித துன்பமும் கொடுக்கும் எண்ணத்தை தவிர்த்து தர்மமாக வாழ மனக்கட்டுப்பாடு மிக அவசியம். தர்மமாக வாழ வேண்டும் என்று கர்மகாண்டம் விதித்திருப்பதற்கு ஒரே காரணம் இந்த மனக்கட்டுப்பாட்டை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதுதான். தர்மமாக வாழ தேவையான அளவு மனக்கட்டுப்பாட்டை கடவுள் பக்தி கொடுக்கும். அதன் பின்தான் அவர்கள் ஞானம் பெற தகுதியடைவார்கள். எனவே நான் பரமன் என்ற ஞானத்தை பெற்ற அனைவருக்கும் தேவையான மன கட்டுப்பாடு ஏற்கனவே இருக்கும் காரணத்தால் கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளை தவிர்க்க எவ்வித முயற்சியும் செய்யவேண்டிய அவசியமில்லை.

4. வாகனத்தை சுத்தமாக நல்ல நிலையில் பராமரிப்பது அவசியம் என்றாலும் எந்த இடத்திற்கும் போகாமல் அதை கொட்டகையில் அடைத்து வைத்திருக்க கூடாது. வெளியில் எடுத்துச்சென்றால் அது அழுக்காவதையும் பழுதடைவதையும் தவிர்க்க முடியாது. அதுபோல கோபம், எரிச்சல், ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க யாருடனும் பேசாமல் கண்ணை மூடி தவம் செய்து வாழ்நாட்களை வீணடிக்க கூடாது. நான் பரமன் என்பதை புரிந்துகொள்வது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எல்லா உலக இன்பங்களையும் அனுபவிப்பதற்காக மட்டுமே என்பதை மறக்க கூடாது.

5. கால்பந்தாட்டத்தில் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை ஒரே அணி தொடர்ந்து கோல் போட்டுக்கொண்டிருந்தால் எவ்வித சுவாரசியமும் இருக்காது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்பட்டு நம்முடைய அணி வெற்றிபெறவேண்டுமே என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் நம் மனதில் ஏற்பட்டால்தான் முடிவில் கிடைக்கும் வெற்றி சுவையாய் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் நம் அணி தோற்றால் ஏற்படும் ஏமாற்றத்தையும்  வருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராய் இருக்க வேண்டும். வெற்றி தோல்வி மாறிமாறி ஏற்பட்டால்தான் வாழ்வு சுவைக்கும். தோல்விக்கு பயந்து எந்த அணியின் கட்சியிலும் சேராமல் இருப்பதுபோல் கோபம் எரிச்சல் போன்ற உணர்வுகளுக்கு பயந்து வாழ்க்கையை தவறவிட்டுவிடக்கூடாது.  

6. கால்பந்தாட்ட ரசிகர்களில் பலர் அதை ஒரு விளையாட்டு என்று அறியாமல் தவறாக ஆடியவனை கொலை செய்யும் வெறியுடன் இருப்பார்கள். இதனால் அணிகளின் வெற்றிதோல்வி ரசிகர்களிடையே மோதல்கள் மற்றும் உயிர்சேதம் ஏற்பட காரணமாய் அமையும். வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்றும் அதில் வெற்றி தோல்வி ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளவை என்றும் உணர்ந்த முற்றுணந்தோர்கள் துன்பம் கலவா இன்பத்தை எப்பொழுதும் அனுபவிப்பார்கள்.

7. வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்வி, வரவு-செலவு போன்ற இருமைகள் மனதில் ஏற்படுத்தும் ஏற்றஇறக்கங்கள் அனைத்தையும் துன்பம்கலவா இன்பம் என்று அறிபவன் முற்றுணர்ந்தோன். வாழ்வில் தோல்வியே ஏற்படக்கூடாது என்று எதிர்பார்க்கும் பற்றுடையோர்கள் தொடர்ந்து தர்மமாக வாழ்ந்து மனதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். வேதம் படிக்கும் முக்திவிழைவோர்கள் இருமை கலந்த உலகம், அதை பிரதிபலிக்கும் மனது, இன்பம், துன்பம் போன்றவற்றின் சரியான பொருளை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

8. அதர்மமாக வாழ்ந்தால் அதற்கான தண்டனயை நிச்சயம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று ஆரம்பகாலத்தில் வேதத்திலிருந்து பெற்ற அறிவின் உண்மைப்பொருளை உணரவேண்டும். நாம் நம் கடமையை சரியாக செய்யாமல் இருப்பது, மற்றவர்களுக்கு துன்பம் தர ஆசைப்படுவது போன்ற செயல்கள் நம் மனதின் நிம்மதிக்கு தடைகற்கள். நமக்கு எதிரிகள் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் எப்பொழுது நம்மைத்தாக்குவார்கள் என்ற பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். நாம் யாரையாவது ஏமாற்றினால் அந்த உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் நம்மை தொடர்ந்து வாட்டும். எனவேதான் தர்மமாக வாழ வேதம் கட்டளையிட்டுள்ளது. இதையறிந்த முற்றுணர்ந்தோர்கள் பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே அவர்கள் தங்கள் செயல்களால் மற்றவர்கள் துன்பம் அடைய நேரிட்டது குறித்து  கவலைப்படமாட்டார்கள்.        

9. உலகத்துடன் உறவாடுவதால் மட்டுமே நம்முடைய இயல்பான இன்பத்தை அனுபவிக்கமுடியும். மேலும் ஒரே எண்ணம் தொடர்ந்து நம் மனதில் இருக்கவும் முடியாது. எனவே வாழ்வில் ஏற்படும் அனைத்து அனுபவங்களையும் இன்பம் துன்பம் என்று வகைப்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் முக்திக்காக உலகை நாடி ஓடவோ அதிலிருந்து விலகியிருக்க முயல்வதோ தேவையில்லை.

10. உலகத்தின் மீது பற்றுடையோர்கள் மட்டுமே துன்பத்தை அனுபவிப்பார்கள். எதன் மீதும் பற்றுவைக்காததால் ஒரு சுவர் எவ்வித துன்பத்தையும் அனுபவிப்பது கிடையாது. ஆனால் சுவராக இருப்பதைக்காட்டிலும் பற்றுடன் துன்பபடுவது மேல் என்று சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டுகிறார். துன்பத்தை தவிர்க்க நான் மட்டுமே இன்பத்தின் ஒரே இருப்பிடம் என்ற அறிவு அவசியம். இந்த அறிவு ஏற்பட்டவுடன் பற்றுவைத்தபொருள் கிடைக்காமல் போனால் இன்பம் பறிபோய் விட்டது என்று பதறவேண்டிய நிலை ஏற்படாது. வேறு ஒருபொருள் மேல் பற்று கொண்டு நம்மிலிருந்து கிடைக்கும் இன்பத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம்.

11. பற்றிலிருந்து விடுதலையடையும் சக்தியில்லாதவர்கள் பற்றுடையோர்கள். உலகப்பொருள்களின் மேல் உள்ள பற்றை தற்காலிகமாக குறைத்துக்கொண்டு வேதம் படிப்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகப்பொருள்களுக்கு நம்மை பாதிக்கும் சக்தியில்லை என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் உலகத்துடன் கொள்ளும் பற்றிலிருந்து வேண்டும்பொழுது விடுதலைபெறும் சக்தியுள்ளவர்கள்.

12. நான் ஆனந்தமயமான பரமன் என்ற அறிவு எவ்வித ஆனந்தத்தையும் கொடுக்காது. உலகுடன் உறவாடுவதால் மட்டுமே ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். மனதில் பல எண்ணங்கள் மாறிமாறி ஏற்பட்டுக்கொண்டிருந்தால் அது இல்லாத உலகத்திற்கு ஒரு இருப்பை கற்பித்து இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க விடுவதில்லை. நாம் விரும்பும் ஒரு பொருளைப்பார்த்ததும் அதைப்பற்றிய எண்ணம் மட்டும் மனதை ஆக்ரமிக்கும்பொழுது பிரியம் என்ற முதல்நிலை இன்பம் நமக்கு கிடைக்கிறது. அந்தப்பொருளை நாம் அடைந்தபின் அடுத்த நிலையான மோதம் பிறக்கிறது. அதை அனுபவிக்கும்பொழுது அதனுடன் ஐக்கியமாகி உலகை மறந்து பிரமோதம் என்ற உயர்ந்த நிலை இன்பத்தை அனுபவிக்கிறோம்.

13. பிரியம், மோதம், பிரமோதம் ஆகிய மூன்று வகை இன்பங்களும் உலக பொருள்களிலிருந்து கிடைப்பதாக நினைப்பவன் பற்றுடையோன். இது தவறு என்ற அறிவுடன் உலக உறவை குறைத்துக்கொண்டு பரமனை நாடுபவன் முக்திவிழைவோன். பரமன்தான் உலகமாக காட்சியளிக்கிறான் என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் எவ்வித தடையுமில்லாமல் உலகுடன் உறவாடுவான்.

14. மனதில் தோன்றும் எந்த ஒரு எண்ணமும் நிலைத்து நிற்காது. மாறுவது  மனம். காதலில் மூழ்கி காலம் முழுவதையும் கழித்துவிடமுடியாது. மோதல் கலந்த காதல், உடல் கலந்த கூடல் என்பது போன்ற மாற்றங்கள்தான் தடைபடாத இன்பம்.  

15.  இருமைகளிடையே ஊசலாடும் மனதின் நிலைக்கேற்ப இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே ஊசலாடுபவன் பற்றுடையோன். வெளியுலக தொடர்பை தவிர்த்து பரமனை அறிவதன் மூலம் துன்பம் கலக்காத இன்பத்தை பெறலாம் என்று நினைப்பவன் முக்திவிழைவோன். தன் உண்மை இயல்பான இன்பத்தை மனதில் தோன்றும் எண்ணங்களால் மாற்ற முடியாது என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் உலகில் கிடைக்கும் பிரிய, மோத, பிரமோத சுகங்களை தடையில்லாமல் அனுபவிப்பான்.

16. விடுமுறை நாட்களில் வெகு வேகமாக பணம், நேரம், முயற்சி ஆகியவற்றை செலவிட்டு எங்காவது சுற்றுப்பயணம் செய்து இன்பத்தை தேடுபவர்கள் பற்றுடையோர்கள். கோவிலுக்கு சென்று உபன்யாசம் கேட்டல் அல்லது புத்தங்கள் படித்தல் போன்ற செயல்களினால் நிம்மதியை தேடுபவர்கள் முக்திவிழைவோர்கள்.  இன்பமும் நிம்மதியும் தன்னிடம் எப்பொழுதும் இருப்பவை என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் தங்களது ஆளுமைக்கும் பணவசதிக்கும் ஏற்றபடி உலகை வலம் வந்து தன் இயல்பான இன்பத்தை உலக சுகங்களாக அனுபவிப்பார்கள்.

17. கயிற்றின் மீது ஏறி மலையின் சிகரத்தை எட்டிப்பிடித்ததும் ஏற்படும் இன்பம் எவ்வளவு சிரமத்துக்கு ஆளானோம் என்பதை பொறுத்து மாறுபடும். இது போன்ற சாதனைகளை செய்வதால் மனதின் எண்ணங்கள் அகன்று நமது இயல்பான இன்பத்தை வெளிக்காட்டுகிறது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் உலக மக்களுக்கு நன்மையேற்படும் செயல்களில் இன்பமடைவார்களே தவிர தனது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்களை செய்யமாட்டார்கள். தங்கள் சக்திக்கு மீறிய சமூகப்பணிகளை ஏற்றுக்கொண்டு அவற்றை வெற்றிகரமாக நடத்த முயல்வதால் கிடைக்கும் வெற்றி தோல்விகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.  

18. பிரியம், மோதம், பிரமோதம் ஆகிய இன்ப அனுபவங்கள் நிலையானவை அல்ல. மனதின் எண்ணங்கள் ஒடுங்கிய நிலையில் தன் உண்மை உருவான ஆனந்தம் வெளிப்படுவதை அறியாதவர்கள் இன்னும் இன்னும் என்ற வெறியுடன் அதிகப்படியான புலன் இன்பங்களை தேடுவதிலும் புதிய புதிய பொருள்களையும் உறவுகளையும் அடைவதிலும் தங்கள் கவனத்தை செலுத்தி துன்புறுவார்கள். இன்பத்தின் வற்றாத ஊற்று தன்னிடம் உள்ளதை அறிந்தவர்கள் புதிய பிரிய, மோத, பிரமோதங்களை பெற எவ்வித துன்பத்தையும் அனுபவிப்பதில்லை.  

19. இன்பத்தைத்தேடி உல்லாசப்பயணம் செல்பவனின் வாகனம் பாதிவழியில் பழுதடைந்து வேறுவழியில்லாமல் மாட்டுவண்டியில் பயணம் செய்ய நேரிட்டால் மிகுந்த வருத்தமடைவான். தன் சுய இன்பத்தை பிரிய,மோத, பிரமோதங்களாக அனுபவிக்க உல்லாசப்பயணம் செல்பவன் மாட்டுவண்டியில் செல்லும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்வான்.

20. தான் குறைவுள்ளவன் என்றும் தன் குறையை நிறைக்கும் சக்தி இந்த உலகத்திற்கு இருக்கிறது என்றும் எண்ணுபவன் பற்றுடையோன். தன் குறையை நிறைக்க வேதம் பயிலவேண்டும் என்று முயலுபவன் முக்திவிழைவோன். தான் நிறைவுடையவன் என்றும் இந்த உலகமே தன்னை ஆதாரமாகக்கொண்டுதான் சுழல்கிறது என்றும் உணர்ந்த முற்றுணர்ந்தோன் தன் உடலையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொண்டு உலக இன்பங்களை அனுபவிப்பான்.   

21. தான் உடல் அல்ல என்று தெரிந்திருந்தாலும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்திருப்பது போல தியானம் செய்து மனதை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைக்க தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். கத்தியை தீட்டுவதற்கு எவ்வளவு முயற்சி செய்யவேண்டுமென்பது அதை எப்படி பயன்படுத்தபோகிறோம் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படவேண்டும். அது போல் உடலையும் மனதையும் எப்படி உபயோகப்படுத்தப்போகிறோம் என்பதை பொறுத்து அவற்றை சரியாக பராமரிக்கவேண்டும். யாருடனும் பேசாமல் தனியே வாழ்வைக்கழிப்பதாயிருந்தால் தியானம் செய்யவேண்டிய அவசியமேயில்லை.

22.  தர்மமாக வாழ்வதன் மூலம் ஞானம் பெறத்தேவையான மன உறுதியையும் மனப்பக்குவத்தையும் பற்றுள்ளோர்கள் பெறவேண்டும். தியானம் செய்வதன் மூலம் முக்திவிழைவோன் நான் பரமன் என்ற அறிவை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். முற்றுணர்ந்தோன் தன் வாழ்நாள் முழுவதும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான பயிற்சிகளை மட்டும் செய்வான்.

23. எவ்வளவுதான் முயன்றாலும் உடலின் எடை குறையவில்லையென்றால் அதை குறித்து கவலைப்பட்டு பயன் இல்லை. அதுபோல் எவ்வளவுதான் முயன்றாலும் அவ்வப்பொழுது மனதில் கோபம் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கமுடியவில்லை என்று முற்றுணர்ந்தோன் வருத்தப்படமாட்டான். மேலும் எடை கூடாமல் இருக்க முயற்சி செய்வது போல் அவ்வப்பொழுது ஏற்படும் கோபம் அதிகரிக்காமல் இருக்க அவன் முயற்சிப்பான். அவ்வாறு செய்யாவிடிலும் அவன் முற்றுணர்ந்தோனே.

24. தேவைகளும் போகங்களும் அவரவரரின் அறிவுக்கேற்றபடி மாறும். அனைத்து போகங்களையும் தேவைகளாக மாற்றுபவன் பற்றுடையோன். தேவைகளை குறைத்துக்கொண்டு போகங்களை தவிர்த்து வேதம் பயில நேரம் ஒதுக்குபவன் முக்திவிழைவோன். அனைத்து தேவைகளையும் போகங்கள் என்றுணர்ந்த முற்றுணர்ந்தோன் எத்தனை கோடி இன்பம் தந்தாய் என்ற மனப்பாங்குடன் கைகால்கள் சரிவர இயங்குவதற்கும் சூரியன் கிழேக்கே உதித்து மேற்கே மறைவதற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துவான். அதே சமயம் தன் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும்பொருட்டு செய்யும் வேலைகளின் உபபயனாக கிடைக்கும் வசதிகளையும் அவன் அனுபவிப்பான்.  

25. ஞானிகள் தாங்களறிந்த முக்திநிலையை எடுத்துக்கூறினால் அனைவராலும் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் புரியாமல் பேசினால்தான் ஞானி என்று பொருள்ளல்ல. கனவில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி பேசுவது போல் ஞானி உலக நிகழ்வுகளை பற்றி மற்றவர்களுடன் உரையாடலாம். இதுபோன்ற சமயங்களில் அவரது பேச்சு பற்றுடையோர்களைப்போல் இருப்பதைவைத்து அவர் முற்றுணர்ந்தோன் அல்ல என்று முடிவெடுப்பது தவறு. முற்றுணர்ந்தோன் என்பதற்கு மூன்று காலங்களையும் அறிந்தவன் என்றோ தூரதேசத்தில் நடப்பதை பார்க்கும் சக்தி கொண்டவன் என்றோ பொருள் அல்ல. வாழ்வில் நடப்பது அனைத்தும் தான் காணும் கனவு என்பதை அறிந்தவர்கள் மட்டுமே முற்றுணர்ந்த ஞானிகள்.   

26. வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல் வெளி உலகில் இன்பத்தை தேடுபவன் பற்றுடையோன். வெண்ணைக்குள் நெய்யை தேடுவது போல் பக்தி மற்றும் தியானம் மூலம் அகவுலகில் இன்பத்தைத்தேடுபவன் முக்திவிழைவோன். வெண்ணையை உருக்கி நெய்யை பெறுவதுபோல் ஞானத்தை உருக்கி மனதுக்குள் கரைத்த முற்றுணர்ந்தோன் தானே இன்பமயமானவன் என்றும் தன்னை ஆதாரமாகக்கொண்டு உருவான இவ்வுலகும் மனமும் இன்பத்தை அனுபவிக்க கிடைத்துள்ள கருவிகள் என்றும் அறிவான்.

27.  இவ்வுலக அனுபவம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். கனவுகள் தொடர்வதோ முடிவதோ நம் வாழ்வை பாதிக்காது. அது போல நித்தியமாய் இருப்பவன் நான் என்று உணர்ந்த  முற்றுணர்ந்தோன் தன் உடல் மற்றும் மனதின் மூலம் அனுபவிக்கும் இந்த வாழ்வு தொடரவோ முடியவோ ஆசைப்படுவதில்லை.

முடிவுரை :

உலகின் இருமைகளுக்கிடையே ஊசலாடும் மனது வேதம் படிக்க தயார் நிலையில் இருக்காது. சூழ்நிலையை கட்டுப்படுத்தி துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழலாம் என்ற முயற்சி தொடர்ந்து தோல்வியை மட்டுமே தருகிறது என்று புரிய ஆரம்பிக்கும்பொழுது வெளியுலகுடன் நடக்கும் போராட்டம் குறையும். வேதம் கூறும் கருத்துக்கள் புரிய ஆரம்பிக்கும். பின் தீவிரமான தியானத்தால் மனதை செம்மைப்படுத்தி நான் பரமன் என்ற உண்மையை ஆழ்மனதில் புதைத்தபின் மேற்கொண்டு மனதை அடக்க எவ்வித செயலையும் செய்யவேண்டியதில்லை.

தன் மனமும் உலகின் இருமைகளின் பிரதிபலிப்பாக அதில் தெரியும் ஏற்ற இறக்கங்களும் தன்னுடைய இயல்பான இன்பத்தை இம்மியளவும் குறைக்க முடியாது என்பதை உணர்ந்தபின் வாழ்வில் துன்பம் கலவா இன்பம் பிறக்கும்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. முக்தியடைய கர்மகாண்டம் எவ்வாறு உதவுகிறது?

3. பிரியம், மோதம் மற்றும் பிரமோதம் என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. குணம் எனும் குன்றேறி நின்றார் கோபம் கணமேனும் காத்தல் அரிது என்ற திருக்குறளின் பொருளை ஆய்க.

2. முக்தியடைந்தபின் மனதின் அலைபாயும் தன்மை மாறிவிடுமா?

3. பேசும் சொற்கள் மற்றும் செய்யும் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை முக்தியடைந்தவர் என்று அடையாளம் காண முடியுமா?