Friday, October 14, 2011

Lesson 157: Benefits of seeing God in the stone (Brahmasutram 4.1.5)


பாடம் 157: கல்லை கடவுளாக காண்பதன் பலன்
பாடல் 482 (IV.1.5)

கல்லை கடவுளாக வழிபடுதல் மனிதர்கள் முக்தியடைய உதவும் என்றும் கடவுளை கல் என்று எண்ணுபவர்கள் வாழ்வில் துன்பத்தை தவிர்க்க இயலாது என்றும் விளக்கும் வகையில் படிப்படியாக துன்பத்தை குறைத்து முழுமையான இன்பத்தை அடையும் பாதையை இந்தப்பாடம் விவரிக்கிறது.

ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறவேண்டுமானால் தனக்கு முன் ஓடுபவனை முன் மாதிரியாகக்கொண்டு அவனைவிட வேகமாக ஓட பிரயத்தனம் செய்யவேண்டும். தனக்கு பின்னால் வருபவர்களைவிட்டுவிட்டு போக மனமில்லாமல் அவர்களுடன் அவர்களுடைய வேகத்தில் ஓடினால் தோல்வி நிச்சயம். மேலும் பந்தயத்தில் முன்னே ஓடுபவர்களைவிட பின்தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அதுபோல வாழ்விலும் மேல்படியில் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட கீழ்படியில் மிகப்பலர் இருப்பார்கள்.முக்திவிழைவோர்களின் எண்ணிக்கையைவிட பற்றுடையோர்களின் எண்ணிக்கை மிக அதிகம். முற்றுணர்ந்தோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நம் போல் இருக்கும் பலருடன் பின்தங்கிவிடாமல் நமக்கு முன்இருக்கும் சிலரின் நிலைக்கு நாமும் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். இந்த முயற்சியின் முதல் கட்டம் அடுத்த படியில் இருக்கும் சிலரை இனம் கண்டுபிடித்து அவர்கள் போல் நாமும் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக அவர்களைப் போல் நாமும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அவர்களைப்போல் செயலாற்ற முயலவேண்டும். மூன்றாவதாக முடிந்தவரை மேல்படியில் இருப்பவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் பேசும் சொற்களும் கேட்கும் சொற்களும் நம் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் நம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் தொடர்ந்து பண்படுத்துவதன் மூலம் விரைவில் படிப்படியாக முன்னேறி துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழலாம்.    தனக்கு பின் இருப்பவர்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டுமானால் முதலில் தான் முன்னேற வேண்டும். பிச்சைக்காரர்கள்மேல் பரிதாபப்பட்டு அவர்களுடன் தானும் அமர்ந்து பிச்சையெடுப்பதில் அர்த்தமில்லை. நம் வாழ்வில் துன்பத்தை முழுவதும் அகற்றியபின்தான் மற்றவர்களின் துன்பத்தை துடைக்கும் தகுதி நமக்கு ஏற்படும்.

முதல் படி – நல்லவன்

மதுபானம் அருந்துதல், புகைபிடித்தல், சூதாடுதல் போன்ற தீயபழக்கங்கள் மூலம் இன்பத்தை தேடுபவர்கள் தங்களுக்கு எது நல்லது என்பதை தீர்மானிக்கும் சக்தியை இழந்துவிடுவார்கள். எனவே தர்மம் தவறாமல் வாழ்வதன் அவசியத்தை உணராமல் எப்படிவேண்டுமானாலும் பணம் சம்பாதித்து இன்பத்தை அடையலாம் என்ற தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இறை நம்பிக்கை, சுற்றுச்சூழலை மதிப்பது, மற்றவர்களுக்கு துன்பம் ஏற்பட நாம் காரணமாக இருக்க கூடாது என்ற எண்ணம் ஆகியவை இவர்களுக்கு ஏற்படும்பொழுது சரியான பாதையின் முதல் படியில் ஏறும் தகுதியை இவர்கள் பெறுவார்கள்.

தவறுகளை திருத்தி நல்லவனாக வாழவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்த மறுகணமே மனம் நிம்மதியடைய ஆரம்பித்துவிடும்.

இரண்டாம் படி – வல்லவன்

வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று முயல்பவர்களைவிட அது நம்மால் முடியாது என்ற முடிவுடன் யாரையும் படிக்கவிடகூடாது என்று செயல்படும் மாணவர்கள்தான் அதிகம். கல்விதிட்டம் தவறு, ஆசிரியருக்கு ஒன்றும் தெரியாது, கல்விகட்டணம் அதிகம் என்று ஏதாவது காரணம் சொல்லி அரசியலில் ஈடுபட்டு தங்கள் அறியாமையை சமூகபொறுப்பு என்ற போர்வைக்குள் புதைக்க முயல்பவர்களால் துன்பத்தை தவிர்க்க முடியாதது. படிப்பதே தவறு என்று முழக்கமிட்டு தங்களால் படிக்க இயலாது என்ற உண்மையை மறைக்க முயலும் இவர்களுடன் சேர்ந்து பின் தங்கிவிடாமல் கிடைக்கும் வாய்ப்புகளை முழுதும் பயன்படுத்தி முன்னேறுவதில் கவனம் செலுத்தவேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களுக்குள் மறைந்துள்ள தனித்திறமையை வளர்த்துக்கொண்டு நல்லவனாக மட்டுமில்லாமல் வல்லவனாகவும் வளர கடுமையான உழைப்பு அவசியம். இந்த சம்பளத்திற்கு இவ்வளவு உழைப்பு போதும் என்று கூலிக்கு மாரடிக்காமல் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் தன் முழு திறமையை பயன்படுத்தி செவ்வனே செய்வதால் மட்டுமே மனதிட்பமும் அறிவுகூர்மையும் அதிகரிக்கும். இதன் பயனாக வாழ்வில் ஏற்படும் துன்பங்களை ஓரளவு குறைத்து பெரும்பாலும் இன்பமாக வாழலாம். மேலும் அடுத்த படிக்கு செல்ல உலகை மாற்ற வல்ல திறமைசாலிகளால் மட்டுமே முடியும்.

மூன்றாம் படி – அறிவாளி

உலகத்தை மாற்ற முயற்சிசெய்து தன் செயல் திறனை அதிகரித்துக்கொள்பவன் வல்லவன். எவ்வளவு முயன்றாலும் உலகம் நம் விருப்பத்திற்கேற்ப மாறுவதில்லை என்ற உண்மையை புரிந்துகொள்ளும் பொழுது அவன் அறிவாளியாகிறான். சாலையில் செல்லும் எல்லா வாகனங்களும் நாம் எதிர்பார்க்கும்படிதான் செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் ஏமாற்றமடைவான். யார் எப்படி ஓட்டினாலும் தன் வண்டியை திறமையாக செலுத்துபவனே புத்திசாலி. அதுபோல் உலகத்தை மாற்ற முயலாமல் நம் மனதை மாற்ற முற்படுபவனே இந்தப்படியை கடப்பான்.

தன் முயற்சியாலும் பணபலத்தாலும் தன்னை சுற்றியுள்ள மனிதர்களையும் நிகழ்வுகளையும் முற்றிலுமாக கட்டுப்படுத்தி நம் எதிர்பார்ப்புகளுக்கிணங்க இயங்கவைத்தாலும் இன்று போல் என்றும் இருப்போமா என்ற பயம் மனதை ஆக்ரமிப்பதை தவிர்க்கமுடியாது. எனவே மனதின் குறைகளை நிவர்த்தி செய்து அதை நிறைக்கும் போராட்டம் உலகை மாற்றுவதால் முடிவுக்கு வராது.

மனதில் தோன்றும் ஆசைகளை மூன்றுவிதங்களில் தீர்த்துக்கொள்ளலாம். உலகில் உள்ள பொருள்களை அடைவதன் மூலம் ஆசைகளை தீர்த்துக்கொள்வது முதல் விதம். ஆனால் இந்தவிதத்தால் ஆசை முழுவதுமாக தீர்வதில்லை. புதிய ஆசைகள் மனதில் தோன்றி மீண்டும் நம்மை தேடலில் தள்ளிவிடுகின்றன. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற அறிவு ஏற்பட்டதும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று மனதை அடக்கி ஆசையை அகற்றுவது இரண்டாவது வழி.

கயிற்றை அறுத்துவிட்டு ஓடும் கன்றுகுட்டியை குச்சியால் அடித்தோ துரத்தி பிடித்தோ மீண்டும் கட்டிப்போடும் முயற்சிக்கு பதிலாக அன்பான வார்த்தை பேசி பச்சைபுல்லை சாப்பிடகொடுத்து அதை அரவணைத்து கட்டில் கொண்டு வருவது புத்திசாலித்தனம். அதுபோல மனதுடன் போராடி அதிலுள்ள ஆசைகளை அகற்றுவதற்கு பதில் சரியான ஞானத்தால் மனதை அமைதிபடுத்துவதுதான் ஆசைகளை நிரந்தரமாக தீர்க்கும் மூன்றாவது விதம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கால்களை குணபடுத்த அவற்றை நல்ல கால்களை போல் உபயோகித்து பழகவேண்டும். அதுபோல் உலக அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனதை ஞானத்தின்பால் திருப்ப ஞானிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களைப்போல் தானும் நடந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

நான்காம் படி – ஞானி

மனதின் நிறைவின்மையும் இன்பம் வேண்டும் என்ற தேடலும் மறையும்வரை வேதம் படிக்கவேண்டும். வேதத்தின் மையக்கருத்தான நான் பரமன் என்பது புரிந்த பின்கூட மனதின் அலைபாயும் தன்மை உடனடியாக நின்றுவிடாது. புத்திக்கு புரிந்த அறிவு மனதில் மாற்றத்தை ஏற்படுத்த சிலகாலம் ஆகும். பின்வரும் மூன்று பயிற்சிகள் ஞானியின் முக்தி அனுபவத்தின் தரத்தை உயர்த்தும்.

முதல் பயிற்சி: நான் பரமன் என்ற அறிவிற்கும் நம் மனதில் ஏற்படும் பொறாமை, எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராயவேண்டும். உதாரணமாக எதையாவது எதிர்பார்த்திருக்கும் ஏக்கம் மனதில் இருந்தால் எதிர்காலம் என்று ஒன்று உண்மையில் இல்லை என்றும் இருப்பது நிகழ்காலம் மட்டும்தான் என்றும் நமக்கு நாமே ஞாபகபடுத்திக்கொள்ளவேண்டும்.

இரண்டாம் பயிற்சி: சிறுவர்களுக்கு மனதில் பக்தி இல்லாவிட்டாலும் அவர்களை கடவுளின் சிலைமுன் விழுந்து வணங்குவதுபோல் பாவனைசெய்ய வைத்தால் அவர்களுக்கு நாளடைவில் உண்மையான பக்தி ஏற்பட்டுவிடும். அது போல ஞானம் பெற்றபின் முக்தியனுபவம் அதிகம் இருப்பதுபோல் பாவனை செய்துவந்தால் முக்தியனுபவம் அதிகமாகும். உதாரணமாக ஒரு பொருள் மிக நன்றாக இருக்கிறது என்று கேள்விபட்டால் அதை அனுபவிக்கவேண்டும் என்று மனதில் தோன்றும் ஆவலை சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தக்கூடாது.

மூன்றாம் பயிற்சி: உலகமெனும் நாடகமேடையில் நாமேற்றுக்கொண்டிருக்கும் மகன், சகோதரன், கணவன், தந்தை, பொருள் சம்பாதிக்கும் தொழிலாளி போன்ற அனைத்து பாத்திரங்களையும் செவ்வனே செய்வது அவசியம். ஆனால் அதே சமயம் நம் மனம் இவையனைத்தும் உண்மையென்றும் நான் செயல் செய்கிறேன் என்றும் தவறாக நம்பிவிடாமல் இருக்க தேவைக்கு அதிகமாக இந்த செயல்களில் ஈடுபடுவதோ, அவற்றை பற்றி சிந்திப்பதோ, மற்றவர்களுடன் பேசுவதோ கூடாது. இதனால் இது நடக்கும் என்ற காரண காரிய தொடர்பு இல்லவேயில்லை. அது இருப்பது போல் தோன்றும் மாயை என்பதை மனதுக்கு நினைவுபடுத்தும் வகையில் வேதாந்தகருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும்.

முக்தியனுபவம் தீடீரென்று ஏற்படுவதல்ல. படிப்படியாக நம் பயிற்சியின் தரத்திற்கு ஏற்ப நம் முக்தியனுபவத்தின் தரமும் தொடர்ந்து அதிகரிக்கும்.  

முடிவுரை :

மாறுவது மனம். மாறாதவன் நான். இந்த உண்மை புரியும்வரை அமைதியாய் இருக்க மனதின் சலனங்கள் அடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். கடல் அலைகள் ஓயாது என்று அறிந்தவர்கள் அவற்றின்மேல் சருக்கிவிளையாட கற்றுக்கொள்வார்கள். அதுபோல் மனம் அடங்காது என்று அறிந்தவர்கள் வாழ்வில் எவ்வித பயமோ எதிர்பார்ப்போ இல்லாமல் பல்வேறு சாகசங்களை செய்வார்கள்.

நிம்மதியாக இருக்க பணம் வேண்டும் என்று அதர்மமான முறையில் வாழ்பவர்கள் பணம் நிம்மதியை கொடுக்காது என்று உணர்ந்தபின் நல்லவர்களாக மாறுவார்கள். அதன்பின் அவ்வப்பொழுது அமைதியடையும் மனதில் நீடித்த அமைதியை ஏற்படுத்த நல்லவர்கள் வல்லவர்களாக மாறி உலகில் பல சாதனைகளை செய்ய தொடங்குவர். அதன்பின்னும் மனம் முழு அமைதியை பெறாததால் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றுணர்ந்து உலகை மாற்றும் முயற்சியை கைவிட்டு மனதை மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள். இவர்களில் தீர்க்கமான அறிவுடையவர்கள் மனதை அடக்கும் முயற்சி அதன் இயற்கைக்கு மாறானது என்றும் மனம் உலகை அனுபவிக்க நமக்கு கிடைத்துள்ள உன்னதமான கருவி என்பதையும் உணர்ந்து வேதத்தின் உட்கருத்தான அமைதி எனது உண்மை வடிவம் என்பதை புரிந்து கொள்வார்கள். சத்தம் ஏற்பட முயற்சி செய்யவேண்டும். அமைதியாய் இருக்க ஒன்றும் செய்ய தேவையில்லை என்ற உண்மை புலப்பட்டவுடன் மனதின் சலனங்களை பொருட்படுத்தாமல் வாழ்வை அனுபவிக்க ஆரம்பிப்பார்கள்.

நல்லவன், வல்லவன், அறிவாளி, ஞானி என்ற ஒவ்வொரு படியில் இருப்பவர்களும் தொடர்ந்து முன்னேற தங்களுடன் இருக்கும் பெரும்பாலோரின் தொடர்பை தவிர்த்து அடுத்தபடியில் இருக்கும் சிறுபான்மையினரின் உறவை நாடவேண்டும். அமைதியையும் ஆனந்தத்தையும் அனைவரும் தேடினாலும் பெரும்பாலோர் தவறான இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விரைவில் உணர்ந்து வெகுசிலரே உணர்ந்த பரமரகசியத்தை அறிய வேதம் காட்டும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

பரமரகசியத்தை அறிந்தபின் நம்மிடம் இருக்கும் மனம் என்னும் அற்புதமான கருவியை முழுமையாக உபயோகபடுத்தி வாழ்வின் ஒவ்வொருகணத்தையும் அமைதியாகவும் ஆனந்தத்துடனும் களிக்கலாம்.   

பயிற்சிக்காக :

1. இந்த பாடத்தில் விளக்கப்பட்ட நான்கு படிகள் யாவை?

2. ஓவ்வொருபடிக்கட்டிலிருந்தும் அடுத்த படிக்கட்டுக்கு பயணிக்க செய்யவேண்டிய மூன்று செயல்கள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. நாம் இருக்கும் படிக்கட்டு எது என்றும் அடுத்து செய்யவேண்டிய செயல் என்ன என்பதையும் ஆராய்க.

2. ஞானம் பெற்றபின் நிரந்தரமான அமைதியும் குறையாத இன்பமும் ஏற்படுமா?