Thursday, February 25, 2010

Lesson 96: The nature of Swoon ( பிரம்ம சூத்திரம் 3.2.10 )

பாடம் 96: மயக்கமா கலக்கமா?
பாடல் 328 (III.2.10)

மனதில் உள்ள குழப்பங்களுக்கு காரணம் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகள் என்று நாம் நினைப்பது தவறு என்றும் நமது எண்ணங்களை சரியாக புரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம் என்றும் இந்த பாடம் விளக்கம் தருகிறது.

மறைந்திருக்கும் மர்மம்

வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையை நாம் எதிர்கொண்டாலும் அந்த பிரச்சனையை திறம்பட சமாளிக்க நமது மனதினுள் மறைந்திருக்கும் ஒரு எதிரியை நாம் அடையாளம் கண்டு அழிப்பது அவசியம். எல்லாமும் எப்பொழுதும் நம் விருப்பபடிதான் நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இந்த எதிரி.

பத்து வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு பெரிய வீட்டிற்கு குடிபெயர்ந்தால் முதல் சில நாட்களுக்கு நிறைய சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆறுமாதம் ஆனபின் கூட பழைய வீட்டில் இருந்த ஏதோ ஒரு வசதி இங்கு குறைவாய் இருப்பது போல தோன்றிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மனதின் பழகிப்போகும் தன்மைதான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி முதலில் மிகவும் கஷ்டப்பட்டாலும் நாளடைவில் சிறை வாழ்க்கைக்கு  பழகிவிடுவான். பல வருடங்கள் சிறையில் இருந்தபின் விடுதலை பெற்று வீடு திரும்பினால் சிறையிலேயே இருந்திருக்கலாமா என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இருக்காது.

நாம் எல்லோரும் அவரவரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பழக்கங்களை வளர்த்து கொள்கிறோம். அதனுடன் நில்லாமல் நம்மை சுற்றியுள்ள பழக்கமான உலகம் மாறாமல் நமக்கு சாதகமாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்  எல்லோரிடமும் உள்ளது. இந்த எதிர்பார்ப்புதான் நம் மனதில் ஏற்படும் மயக்கங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமே தவிர வெளியுலகில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அல்ல.

எதிர்பார்ப்பினால் ஏற்படும் பிரச்சனைகள்

வெளியுலகில் நடக்கும் நிகழ்வுகளையும், ஏற்படும் சூழ்நிலைகளையும், மற்ற மனிதர்களின் செயல்பாடுகளையும் பிரச்சனைகளாக மாற்றுவதே நம் தவறான எதிர்பார்ப்புகள்தான்.

விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும்பொழுது ஒலிபெருக்கியில் இரண்டு மணிநேரம் தாமதம்என்ற அறிவுப்பை கேட்கிறோம். இது ஒரு நிகழ்வா அல்லது பிரச்சனையா? நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விமானத்தை பற்றிய அறிவுப்பு என்றால் அது தினமும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் அதுவே நாம் பயணம் செய்ய வேண்டிய விமானம் என்றால் மிகப்பெரிய பிரச்சனை. அது எப்படி எப்பொழுதும் சரியான நேரத்தில் பயணிக்கும் விமானம் இன்று தாமதாமாக கூடும், இருக்காது. நம்ப முடியவில்லை. இது உண்மையாக இருக்க கூடாது. இவ்வாறு ஒரு நிகழ்வை பிரச்சனையாக உருமாற்றும் வேலையை செய்வது நமது எதிர்பார்ப்பு மட்டுமே.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 1- பூதக்கண்ணாடி

விமான நிலையத்திற்கு வந்தபின் முடிக்கவேண்டிய பாதுகாப்பு சோதனை போன்ற கடமைகளை செய்துவிட்டு விமானத்திற்குள் ஏறும் அழைப்பை எதிர்பார்த்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் பொழுது அது இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமாக கிளம்பும் என்றால் அந்த இரண்டு மணிநேரத்தை எப்படி உபயோகமாக செலவிடலாம் என்று சாவகாசமாக ஒரு இடத்தில் அமர்ந்து யோசிக்க துவங்கலாம். அதை விடுத்து ஏன் இவ்வாறு நடக்கிறது, இரண்டு மணிநேரம் என்பது நான்கு மணிநேரமாக மாறினால் என்ன செய்வது, இன்று நிச்சயம் விமானம் இங்கிருந்து கிளம்புமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது போன்ற எண்ணங்கள் இரண்டு மணி நேரம் தாமதம் என்ற உண்மை நிகழ்வை பெரிதாக்கி இல்லாத பிரச்சனையை இருப்பது போல் காட்டும். விமானம் தாமதமாக கிளம்புவதால் நமது வாழ்நாழில் இரண்டு மணிநேரம் குறைந்து விடாது.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 2- தடை

நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நம் விருப்பப்படிதான் எப்பொழுதும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரச்சனையை சரியான முறையில் எதிர்கொள்ளும் நமது திறமையை பெரிதளவும் குறைத்து விடும். உதாரணமாக விமானம் தாமதமாக கிளம்ப வாய்ப்புக்கள் உள்ளன என்ற உண்மையை மறுக்காமல் இருந்தோமானால் அது தாமதமாக கிளம்பும் என்ற அறிவுப்பு நம் நிதானத்தை குறைக்காது. அமைதியாக இப்பொழுது இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்க்கமாக யோசித்து அவற்றை பதட்டமில்லாமல் செயல்படுத்தலாம். அப்படியில்லாமல் ஏன் விமானம் தாமதமாகிறது என்பது போன்ற தேவையற்ற எண்ணங்கள் நம் இரத்த கொதிப்பை அதிகபடுத்தி  கவலையையும் எரிச்சலையும் உண்டாக்கி நமது சிந்திக்கும் திறனை பெருமளவு குறைத்து செய்ய வேண்டிய செயல்களை முறையாக செய்யவிடாமல் தடுக்கும்.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 3- துன்பம்

தானே வரவழைத்து கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதேனும் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்கொள்ளும்பொழுது நம்மை மிகவும் துன்புறுத்தும். ஏற்கனவே நாம் செய்த செயல்கள் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து இந்த விமானத்தில் டிக்கெட் வாங்கியிருக்க கூடாது, நேற்றிரவே ரயிலில் பயணித்திருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அனாவசியமான குற்றச்சாட்டுக்களை நம்மீது சாற்றி நாம் ஒரு கடைந்தெடுத்த முட்டாள் என்ற எண்ணத்தை நமக்குத்தரும். மேலும் நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நாம்செய்ததவறுக்கு காரணகர்த்தாக்களாக குற்றவாளி கூண்டில் ஏற்றிஎல்லாம் உன்னால்தான் இப்படி நடந்ததுஎன்று சண்டை போட வைத்து இருக்கும் உறவை கெடுத்து  மேலும் பல பிரச்சனைகளை நாம் உருவாக்கும்.

இரண்டு மணிநேர தாமதத்தினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை கற்பனை செய்துகொண்டு எதுவும் நடக்காதபோதே அவை நடந்துவிட்டது போன்ற அனுபவங்களை நமக்கு கொடுத்து நம்மை வாட்டி எடுக்கும். மேலும் இல்லாத பிரச்சனைகள் பலவற்றை உருவாக்கி புதை மணலில் மாட்டிக்கொண்டவன் போல் பிரச்சனையிலிருந்து வெளிவர நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் இன்னும் அழமாக துன்பத்திற்குள் நம்மை ஆழ்த்தும்.

இதுபோன்ற தவறான எதிர்பார்ப்பு ஏதுமில்லாதவர்கள் நடப்பது நல்லதாகவே நடக்கிறது என்று வெகு நாட்களாக ஒத்திப்போட்டுக்கொண்டிருந்த ஒரு காரியத்தை செய்யத்துவங்குவார்கள். உதாரணமாக  படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை படிக்க கிடைத்த அவகாசத்தை பயன்படுத்தி இன்பமாக இருப்பார்கள்.

அறியும் ஆவல்

விமானம் தாமதம் என்றால் ஏன் தாமதம் என்று அறிந்து கொள்ள பெரும்பாலானவர்கள் ஆவலாய் இருப்பார்கள். தாமத அறிவிப்பு தாமதத்திற்கான காரணத்தை சொல்லாவிடில் அலுவலகத்திற்கு சென்று விசாரித்து காரணத்தை அறிந்து கொள்ள துடிப்பார்கள். இன்ஜினில் கோளாறு என்றோ பைலட் இன்னும் வரவில்லை என்றோ ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். விமானத்தை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்பது விமான நிறுவனத்தின் பொறுப்பு. காரணத்தை நாம் தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன லாபம். அதிகமான விஷயங்களை தெரிந்து கொள்வதால் நமது கவலை அதிகரிக்குமே தவிர குறையாது.

எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எதையும் அறிந்து கொள்வது அவசியமில்லை என்பது இதன் கருத்தல்ல. நாம் நம் கடமைகளை சரிவர செய்ய தேவையானவற்றை மட்டும் தெரிந்துகொண்டு அதிகப்படியான தகவல்களை தவிர்க்க வேண்டும்.

ஏன், எதற்காக, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இறுதியான பதிலை யாராலும் சொல்ல முடியாது. நம் வாழ்வில் நடந்த எந்த ஒரு நிகழ்வையும் எடுத்துக்கொண்டு அது ஏன் அவ்விதம் நடந்தது என்று தொடர் கேள்விகள் கேட்டுக்கொண்டே சென்றோமானால் முடிவில்அது அப்படி நடக்க வேண்டும் என்பது விதிஎன்ற பதில்தான் கிடைக்கும். எனவே அந்த பதிலை முதலிலேயே ஏற்றுக்கொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிகழ்வுகளை எதிர்கொள்வது புத்திசாலித்தனம்.

கடவுள் பக்தி

மனதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க கடவுள் பக்தி மிக அவசியம். இவ்வுலகை படைத்த கடவுள் முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. அதே போல் உலகை படைத்துவிட்டு ஏதோ ஒரு லோகத்தில் கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கவில்லை. நமது அனைத்து செயல்களையும் சூழ்நிலைகளையும் கட்டுபடுத்தி நம்மை வழிநடத்தி செல்பவன் இறைவன். எனவே பின்வரும் இரண்டு உண்மைகளை ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியம்.

1. கடவுள்தான் அனைத்துக்கும் காரணம் : நம் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள்தான் காரணம். எனவே பிரச்சனை என்று நாம் நினைக்கும் நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவன் சித்தம். எனவே ஏன், எதற்கு என்று கேளாமல் அந்த சூழலில் நாம் என்ன செய்யமுடியுமோ அதை மட்டும் செய்துவிட்டு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்.

2. உலகத்தை மாற்ற முயல்வதை விட மனதை திருத்திக்கொள்வது அவசியம்: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற மனபக்குவம் நமக்கு தேவை. இல்லையெனில் காலுக்கு செருப்பு போட்டுகொள்ளலாம். அதை விடுத்து பாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரிக்க முயற்சிப்பது அறியாமை.

வெட்ட வெட்ட மீண்டும் எழும் ஜராசந்தன் போல் வாழ்வில் பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். இதுபோல் தொடர்ந்து பிரச்சனைகளை கடவுள் நமக்கு அளிப்பதன் ஒரே நோக்கம் நாம் நம் மனதை பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. மனதிற்கு சரியான அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதை ஒத்திப்போட்டுவிட்டு வெளி உலகை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பது அலைகள் ஓய்ந்த பின் குளிப்பதற்கு காத்திருப்பது போலாகும்.

முடிவுரை :

குழப்பம் நம் இயற்கையான சுபாவம் அல்ல. என்றும் நிம்மதியாக இருப்பதுதான் நமது இயற்கைத்தன்மை. எனவேதான் நம் மனதில் கலக்கமோ குழப்பமோ ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட துடிக்கிறோம்.
 
நிறைய பணம் சம்பாதித்து சமூகத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற பெயர் பெற்றுவிட்டால் நமக்கு வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்துவிடலாம் என்பது பகல் கனவு. ஏழைக்கு ஏற்படும் பிரச்சனைகளை விட பணக்காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளே அதிகம். எனவே பொருளாதார ரீதியில் வளர வளர நமக்கு ஏற்படும் பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டே வரும்.

பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கு வெளி உலகில் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அதே அளவு நமது மனதை தீட்டிக்கொள்ளவும் நாம் முயற்சி செய்யவேண்டும். எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கும் வரத்தை தா என்று கடவுளிடம் பிரார்த்திப்பதை தவிர்த்து எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் மன உறுதியை தருமாறு கேட்டுகொள்ள வேண்டும். வேதத்தை முறையாக ஆசிரியரின் கீழ் படித்து மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும்.

மனம் செம்மையானால் வாழ்வில் பிரச்சனைகளே ஏற்படாது. ஏனெனில் எதுவும் பிரச்சனைகளாகவே தெரியாது. விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் என்பது நல்ல செய்தியாக மாறிவிடும்.  

பயிற்சிக்காக :

1. மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன?

2.எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

3.எதிர்பார்த்தலின் மூன்று விளைவுகள் என்னென்ன?

4.மன குழப்பத்தை தவிர்க்க கடவுள் பக்தி எவ்விதத்தில் உதவுகிறது?

5.எப்பொழுதும் நிம்மதியாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. அனைத்தையும் அறிந்து கொண்டால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்காதா?

2. எல்லா மனிதர்களும் அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

3.உலகத்தை திருத்தவே முடியாதா?