Tuesday, February 16, 2010

Lesson 93: Lessons from dreams ( பிரம்ம சூத்திரம் 3.2.1-6 )

பாடம் 93: கனவு உலக ஆசைகள்
பாடல் 319-324 (III.2.1-6)

உணர்ச்சிகள் உண்மையாக இருந்தாலும் அவற்றிற்கு அடிப்படையான உறவுகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை கனவு உலகில் நாம் சிருஷ்டிக்கும் பொருள்கள் மற்றும் நபர்கள் மூலம் நாம் பெறும் அனுபவங்களை ஆதாரமாக காட்டி நிலையாதவை மீது ஆசையை தவிர்க்க வேண்டும் என்று இந்த பாடம் வலியுறுத்துகிறது.

ஆசைகளும் அனுபவங்களும்

நாம் நமது ஐந்து புலன்களின் மூலம் இவ்வுலகில் உள்ள பொருள்களுடனும் மனிதர்களுடனும் தொடர்பு கொள்வதனால் பல்வேறுபட்ட அனுபவங்களை பெறுகிறோம். அனுபவங்களிலிருந்துதான் இன்பத்தை பெறுவதாக நாம் நினைத்துக்கொண்டிருப்பதால் சுகமான அனுபவங்களை நாடி செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். தேடியது கிடைத்துவிட்டால் இனிமையான அனுபவமும் கிடைக்காவிட்டால் ஏமாற்றம், சோகம், வருத்தம் போன்ற கசப்பான அனுபவங்களும் ஏற்படுகின்றன.

அனுபவங்கள் மேலும் ஆசையை வளர்க்கின்றன. எனவே ஆசை பட்ட பொருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாம் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டு அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

கனவுகள் ஏற்படுவதன் காரணம்

அன்றாடம் காலையிலிருந்து இரவுவரை ஆசைபடுதல், செயல்படுதல், அனுபவங்களை பெறுதல் என்று தொடர்ந்து வேலை செய்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக மனம் உறக்கத்தில் ஆழ்கிறது. விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வதற்கு முன்னும் பிறகு மறுபடியும் விழிப்பதற்கு முன்னும் கனவுகள் ஏற்படுகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுவதுமாக செயல்படுவதில்லை.

மின்னோட்டத்தை நிறுத்திய பின் வேகமாக சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி, படிப்படியாக வேகம் குறைந்து முழுவதும் நிற்பது போல வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்த மனது முழுவதும் நிற்பதற்கு முன்னால் ஏற்படுவது கனவு. அதேபோல் விழித்து முழு வேகத்தில் செயல் படுவதற்கு முன் கனவில் மெதுவாக மனம் செயல் பட ஆரம்பிக்கிறது. இதுதான் கனவு ஏற்படும் காரணம் பற்றிய அறிவியல் உலகத்தின் கணிப்பு. கனவுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதற்குத்தான் இது பதில். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்ற கேள்விக்கு அறிவியலால் எப்பொழுதும் பதில் சொல்லமுடியாது.

மின்னோட்டத்தை நிறுத்தியவுடன் மின்விளக்கு அணைந்து போவது போல் ஏன் தூங்க சென்றவுடன் மனம் கனவுகள் ஏதுமில்லாமல் நேரடியாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல கூடாது? கனவுகளின் அவசியமென்ன?

வாழ்வின் உண்மை தன்மையை பற்றி மக்கள் சரியான அறிவை பெற கனவு அனுபவம் மிக அவசியம். இதுவே கனவுகள் ஏற்படுவதற்கான ஒரே காரணம். கனவுகள் மூலம் நாம் பின்வரும் மூன்று உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.

கனவு தரும் உண்மை1: அனுபவங்களின் தன்மை

பெரும்பாலும் நமது வாழ்வில் நிகழ்வது போன்ற நிகழ்வுகளே கனவிலும் ஏற்படுகின்றன. நமது விருப்பு-வெறுப்புகள் கனவுலகிலும் நம்மை ஆட்டுவிக்கின்றன. அதே போல் கனவு எப்பொழுதும் இனிமையான அனுபவங்களை மட்டும் தருவதில்லை. நிஜ வாழ்வில் நிகழ்வது போல பல கசப்பான அனுபவங்களும் கனவுகளில் ஏற்படுகின்றன.

நிஜ வாழ்வில் ஏற்படும் அனுபவங்களுக்கும் கனவில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கும் இடையே அனுபவம் என்ற அடிப்படையில் எவ்வித வேற்றுமையும் இல்லை.

உதாரணமாக பதவி உயர்வு வேண்டும் என்று நிஜ வாழ்வில் ஆசை பட்டுகொண்டிருந்தால் மேலாளர் நமது வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது போலவும் அதனால் பதவி உயர்வுக்கு பதில் வேலையிலிருந்து நீக்கப்படுவது போலவும் கனவு வரலாம். உண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டால் எப்படி வருத்தம் ஏற்படுமோ அதில் இம்மியளவும் குறையாத அளவு நாம் கனவில் துன்பப்படுவோம். ஆனால் கனவிலிருந்து விழித்தபின், அப்பாடி கனவுதான், நிஜமாக ஒன்றும் நடக்கவில்லை என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொண்டு நிம்மதியடைவோம். மேலும் பதவி உயர்வு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து வேலை போகாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம் கூட ஏற்படலாம்.

இதிலிருந்து கனவில் ஏற்படும் அனுபவம் கூட எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கிறது என்றும் அனுபவங்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தருணங்களில் நம்முடைய உணர்ச்சிகளும் எண்ண ஓட்டங்களும் கனவு என்பதால் வேறு விதமாக இருப்பதில்லை என்றும் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் அனுபவங்கள் ஏற்பட நிகழ்வுகள் உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.

நிஜமான அனுபவங்களுக்கு அனாவசியமாக ஒரு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை கனவுலக அனுபவங்களிலிருந்து வேறுபடுத்துவது நாம்தான். இது தவறு.
 
கனவு தரும் உண்மை2: செயல்களின் தன்மை

கனவில் இது போன்ற வேண்டாத நிகழ்வுகள் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடிவதில்லை. கனவு காண்பது நாம்தானே. அப்படியிருக்க சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நிறய லாபத்துடன் வாழ்க்கையை அனுபவிப்பது போல் ஏன் கனவு காணக்கூடாது? ஏனெனில் நாம் நிஜவாழ்வில் செய்யும் செயல்களின் பலன்தான் நமது நிஜமான அனுபவங்களை மட்டுமின்றி கனவுலக அனுபவங்களையும் தீர்மானிக்கின்றன. எனவேதான் கத்தியுடன் துரத்தும் கொலைகாரனிடமிருந்து தப்பிக்க எவ்வளவு வேகமாக ஓடினாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகர முடிவதில்லை.

கனவில் மட்டும்தான் இதுபோன்ற கையாலாகாத்தானம் நமக்கு ஏற்படும் என்பது தவறான எண்ணம். நிஜவாழ்வில் நமக்கு ஏற்படும் நிகழ்வுகளைக்கூட நம்மால் மாற்றமுடியாது. நமது கடந்த கால செயல்களின் விளைவாக ஏற்படும் பலனை நாம் அனுபவிக்காமல் தவிர்க்க முடியாது.
    
கனவு தரும் உண்மை3: அனுபவிப்பவனின் தன்மை

நம் அனுபவங்களை அனுபவிப்பது யார் என்ற கேள்விக்குநான்என்ற தவறான பதிலை தயங்காமல் சொல்வோம். நம் கனவு உலகை சிறிது ஆராய்ந்தால் இந்த பதில் ஏன் தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுவையான பச்சைபருப்பு பாயசத்தைஆஹா, தேவாமிர்தமாக இருக்கிறதுஎன்று ரசித்து சாப்பிட்டது கனவில் இருந்த என்னைப்போல் ஒருவன். அவனை நான் என்று கனவு காணும்பொழுது தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன். விழித்தவுடன்தான் இந்த தவறு எனக்கு புரிந்தது. இதே தவறை நாம் வாழ்விலும் செய்து கொண்டிருக்கிறோம். தட்டில் வைக்கப்பட்டிருக்கும் தோசையும் என் உடலும் ஒரே ஜடப்பொருளால் ஆனவை. தோசை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் சென்று மறைந்து விட்டது. இப்பொழுது நான் சாப்பிட்டேன்என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுகிறது. இது கனவில் பாயசம் சாப்பிட்ட அனுபவத்திலிருந்து வேறுபட்டதல்ல.

தோசை சாப்பிட்டதால் பசி நீங்கியது, எனவே இது கனவில் பாயசம் சாப்பிட்டதை விட நிஜமானது என்பதும் தவறான எண்ணம். கனவில் சாப்பிட்டது கனவு பசியை நீக்கியது. இப்பொழுது சாப்பிட்டாலும் இன்னும் சில நேரத்தில் மீண்டும் பசிக்கும். எனவே அனுபவங்கள் தொடரும். எனவே இது நிஜம் என்று நாம் எதை எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதுவும் கனவுதான். நிரந்தரமான நான் அனுபவிப்பவன் அல்ல என்ற உண்மையை வேதம் நமக்கு சொல்லித்தருகிறது.

முடிவுரை :

ஆசைகள், செயல்கள் மற்றும் அவற்றின் விளைவான அனுபவங்கள் ஆகிய மூன்றின் மொத்த தொகுப்புதான் வாழ்க்கை. இவற்றிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்வின் தரம் அமைகிறது.

பொருளாதார தேக்கத்தினால் ஏற்றுமதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிற வீட்டை விற்று வாடகை வீட்டுக்கு குடிபோன விஷயத்தை ஒரு கதை சொல்வது போல சொல்வதோ இல்லை குடிமுழுகி போய்விட்டது என்று தூக்கில் தொங்குவதோ உலக அனுபவங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்தது.

அனுபவங்களை கனவு போல எண்ணி அவ்வப்பொழுது மறந்துபோய் இன்று புதிதாய் பிறந்தோம் என்று வாழத்துவங்கினால் என்றும் இன்பம் நம் வாழ்வில் நிறைந்திருக்கும்.

நாம் படைத்த கனவு உலகம் தொடர்ந்து மாறுவதைப்போல கடவுள் அமைத்த உலகிலும் நிரந்தரமின்மை மட்டும்தான் உண்மை. கனவிலும் நினைவிலும் மாறாமல் நிரந்தரமாக இருக்கும் ஒரே உண்மை நான் மட்டும்தான்.

உலக சம்பந்தமான ஆசை நம்மை தொடர்ந்து செயலில் ஈடுபடுத்தும். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை எப்பொழுது புரிந்து கொள்கிறோமோ அப்பொழுது கடவுள் யார், அவன் ஏன் இது போன்ற மாறும் உலகை படைத்தான், மாறாமல் இருக்கும் நான் யார் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை வரும்.

நிலையாதவற்றின் மீது ஆசை வைக்காமல் நிலையானவை மீது ஆசைவைத்தால் மட்டுமே நாம் முக்தியடைவோம். நிலையானவன் பரமன். பரமன் யார் என்று அறிந்து கொண்டால் நம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.


பயிற்சிக்காக :

1. ஆசைகளுக்கும் அனுபவங்களுக்கும் உள்ள உறவு என்ன?

2. கனவுகள் எப்படி ஏற்படுகின்றன?

3. கனவுகள் ஏன் ஏற்படுகின்றன?

4. கனவுகள் நமக்கு காட்டும் மூன்று உண்மைகள் யாவை?

5. இந்த பாடத்தின் மைய கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா?

2. கெட்ட அனுபவங்களை மட்டும்தானே மறக்கவேண்டும். நல்ல அனுபவங்களை மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பதுதானே மகிழ்ச்சி?

3. அன்றாட அனுபவங்களை கனவுபோல மறந்துவிட்டால் மன வளர்ச்சி அடையாமல் பின்தங்கி விடமாட்டோமா?