Friday, February 19, 2010

Lesson 94: Deep sleep experience ( பிரம்ம சூத்திரம் 3.2.7-8 )

பாடம் 94: ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தம்
பாடல் 325-326 (III.2.7-8)

ஆசைகளுக்கும் ஆனந்தத்திற்கும் உள்ள உறவை விளக்க ஆழ்ந்த உறக்க அனுபவத்தின் தனித்தன்மையை உதாரணமாக கொடுத்து உலகத்தில் உள்ள உறவுகளில் நமக்கு இருக்கும் ஆசையை படிப்படியாக குறைத்து நிலையான ஆனந்தத்தை தரும் பரமனை அறியும் ஆசையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேதம் இந்த பாடத்தில் கூறுகிறது.

ஆழ்ந்த உறக்கம் என்றால் என்ன?

தினசரி வாழ்வில் எப்பொழுதெல்லாம் இந்த உடலையும் மனதையும் நம்மிடமிருந்து அகற்றி வைக்கிறோமோ அந்த சமயங்களில் நாம் ஆழ்ந்த உறக்கம் என்ற நிலையில் இருக்கிறோம்.  ஆழ்ந்த உறக்கத்திற்கும் இறத்தலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மறுபடி விழிக்கும்பொழுது வயதான உடலில் இருக்கிறோமா அல்லது மீண்டும் பிறந்திருக்கிறோமா என்பது மட்டும்தான்.

அலுவலகம் சென்று திரும்பியவுடன் ஒவ்வொன்றாக உடைகளை களைவது போல படுக்க சென்றதும் ஒவ்வொரு கோசமாக களைய ஆரம்பிக்கிறோம். முதலில் அன்னமய கோசமான பருவுடலுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை துறக்கிறோம். கனவு உலகத்தை உருவாக்கியபின் நுண்ணிய உடலை நேரடையாக உபயோகித்து நிஜ உலகத்தில் செயலாற்றியது போலவே கனவிலும் வாழ்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சமயங்களில் நமது பிராண மயகோசமும் விஞ்ஞானமய கோசமும் ஒன்றன் பின் ஒன்றாக கழன்று விடுகின்றன. புத்திக்கு மனதின் மீதுள்ள கட்டுப்பாடு படிப்படியாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது. அதே போல் கனவு நிலை முடியும் நேரத்தில் மனோன்மய கோசமும் கழன்று விடுகிறது. இந்த நான்கு கோசங்களையும் அகற்றி ஆனந்தமயக்கோசத்தில் மட்டும் இருக்கும் காலத்தை ஆழ்ந்த உறக்கம் என்கிறோம்.

ஆழ்ந்த உறக்கத்தில் இயற்கை எய்துகிறோம்

பருவுடல் மற்றும் நுண்ணிய உடல் ஆகிய இரண்டையும் அகற்றிவிட்டு காரண உடலில் மட்டும் ஒன்றியிருக்கும் மரண அனுபவம் நமக்கு தினம் தினம் இரவில் தூங்கும்பொழுது கிடைக்கிறது.

இருத்தல், ஆனந்தம் மற்றும் உணர்வு ஆகிய மூன்று மட்டும்தான் நம் இயற்கை தன்மைகள். காரண உடலில் மட்டும் குடியிருக்கும் பொழுது நாம் ஆனந்தமாக அறிவுருவாக காலத்தை கடந்து நித்தியமாய் இருக்கிறோம் என்பதை நம் அனுபவத்தில் நிரூபிப்பதன் மூலம் வேதம் நமது இயல்பை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மேலும் நமது உண்மை நிலையை தினந்தோறும் நமக்கு நினைவுபடுத்துவதன் மூலம் எப்பொழுதும் இன்பமாக இருப்பது என்ற வாழ்வின் முடிவான நோக்கத்தை அடைய நம்மை தூண்டுகிறது. இதை அடையும் வரை எல்லோருக்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். 

மூன்று நிரூபணங்கள்

உடலளவிலும் மனதளவிலும் நமக்கு ஏற்படும் அனைத்து துன்பங்களும் ஆழ்ந்த உறக்கத்தில் முழுதும் மறைந்து நாம் இன்பமாக தூங்குவது என்பது ஆனந்தம் நமது இயற்கை நிலையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஆழ்ந்த உறக்கத்தில் நம் மனம் முற்றிலும் செயல்படுவதில்லை. அப்படியிருக்கும் பொழுது விழித்தபின்நான் நன்றாக தூங்கினேன்என்று எவ்வாறு கூறமுடிகிறது? அறிவு (awareness) என்பது நமது இயற்கை நிலையாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

உறங்கி எழுந்தவுடன் எவ்வளவு நேரம் உறங்கினோம் என்பது கடிகாரத்தை பார்த்து கூட்டி கழித்தால் மட்டுமே நமக்கு தெரியவரும். ஏனெனில் ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் நேரம், காலம், இடம் என்ற வரைமுறைகளுக்கு கட்டுப்படாமல் அனந்தமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

மூன்று ஆசைகள்

எப்பொழுதும் இருக்க வேண்டும். எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இவை மூன்றும் மனிதனின் அடிப்படை ஆசைகள். ஆனால் இம்மூன்றும் இயற்கையிலேயே நமது உண்மை சொரூபம் என்பதை யாரும் அறிவதில்லை. அனைத்து மனிதர்களுக்கும் எல்லா காலங்களிலும் தோன்றும் அனைத்து ஆசைகளையும் ஆராய்ந்தால் அவற்றின் அடிப்படை இந்த மூன்று ஆசைகள் மட்டுமே என்பது தெரியவரும். இந்த மூன்று ஆசைகளைத்தவிர வேறு ஒரு ஆசையும் மனிதனுக்கு இருக்கவே முடியாது.

ஆசைகளும் ஆனந்தமும்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்தம் விழித்தவுடன் நம்மை விட்டு சென்றுவிடுவதற்கு நமது ஆசைகளே காரணம். ஆசை என்பது நம் மனதில் தோன்றும் எண்ணம். எனவே மனம் இல்லாதபொழுது இருந்த ஆனந்தம் மனம் வந்தவுடன் இல்லாமல் போய்விட்டது. இதிலிருந்து நம் மனம்தான் நமது துன்பங்களுக்கு காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தலைவலி போகவேண்டுமென்பதற்காக தலையை வெட்டிக்கொள்ள கூடாது. அதுபோல மனதை ஒடுக்கி இன்பம் அடையலாம் என்று பின்வரும் முயற்சிகளில் இறங்க கூடாது.

1.தூங்குவது:  விழித்திருந்தால்தானே நமது இயற்கை நிலையான ஆனந்தத்தை இழக்க நேரிடுகிறது என்று கும்பகர்ணன் போல் தூங்கிகொண்டே இருக்க கூடாது. எவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் செலவிடுகிறோம் என்பது நம் கர்ம வினைகளின் பலன்களால் தீர்மானிக்கபடுகின்றன என்பதால் நம்மால் தூங்கிகொண்டே இருக்க முடியாது. மேலும் இன்பமாய் இருந்தேன் என்பது தூங்கி விழித்தபின்தான் நமக்கு தெரிகிறதே தவிர தூங்கும்பொழுது தெரிவதில்லை.

2.குழந்தையாய் இருப்பது: பிறந்த குழந்தைக்கு பசி தீரவேண்டும் என்ற ஆசையை தவிர வேறு ஆசைகள் கிடையாது. எனவே அந்த ஆசை நிறைவேறியவுடன் ஆனந்த மயமாக இருக்கிறது என்பதை குழந்தையின் முகத்தை பார்த்தே நாம் அறிந்து கொள்ளலாம். அதற்காக வளராமல் குழந்தையாகவே இருப்பதும் முடியாது. உடலளவில் வளர்ந்து மனதளவில் வளராமல் இருப்பதும் முடியாது. ஏனெனில்அறிந்து கொள்ள வேண்டும்என்ற அடிப்படை ஆசை ஐந்து புலன்களையும் செயல்படுத்தி குழந்தை பருவத்திலிருந்து தொடர்ந்து நம் அறிவை அதிகப்படுத்துகிறது. முதுமை வந்தவுடன் இந்த அறிய வேண்டும் என்ற ஆசை குறைந்துவிடும். இதற்கு காரணம் அறிந்தவற்றையே அடைய முடியவில்லை என்ற இயலாமை. மேலும் அறிந்துகொண்டால் அனாவசியமாக ஆசை மட்டும் அதிகரித்து அனுபவிக்கும் திறன் இல்லாமல் துன்பபட வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் தெரிந்து கொள்ளும் ஆசையை துறக்கிறார்கள்.

3.சன்யாசம் பெறுவது: உலக வாழ்வில் உழன்றால் மட்டுமே ஆசைகள் அதிகமாகி பரமானந்தத்தை அனுபவிக்க முடியாது என்று நினைத்து சன்யாசம் பெறுவது தவறு. உயிர்வாழ நிச்சயம் நாம் உலகை சார்ந்திருக்க வேண்டும். எனவே ஆசைகளை தவிர்க்க முடியாது. காட்டுக்குள் தனியாக வாழ்ந்தாலும் உணவு கிடைக்க வேண்டுமே என்ற ஆவலும் பாம்பு கடித்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயமும் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.

4.போதை பொருள்களை உபயோகிப்பது: மதுபானங்களை அருந்தியோ, போதை பொருள்களை உட்கொண்டோ மனதை உலகத்தின் பிடியிலிருந்து மீட்டு ஆசைகள் ஏற்படாமல் ஆனந்தமாய் இருக்கலாம் என்பது தவறான முடிவு. இது போன்ற செயல்களின் பக்க விளைவுகள் நம் உடலையும் மனதையும் அழித்துவிடும் என்பதால் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

5.தற்காலிக ஓய்வெடுப்பது: ஆசைகள் தொடர்ந்து மனதை ஆக்ரமித்து நம்மை ஆனந்தமாக இருக்க அனுமதிப்பதில்லை என்ற காரணத்தால் அவ்வப்பொழுது ஆசைகளை மறந்து இன்பத்தை அனுபவிப்பது முற்றிலும் தவறல்ல என்றாலும் இது போன்ற செயல்கள் குறையாத ஆனந்தம் என்ற இலக்கை நாம் அடைய எடுத்துக்கொள்ளும் காலத்தை அதிகப்படுத்தும்.

உதாரணமாக வாரம் முழுவதும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உழைத்துவிட்டு வார இறுதியில் சினிமா, நாடகம், நாட்டியம், உபன்யாசம், பஜன் போன்றவற்றில் தன்னை மறந்து ஈடுபடுவதால் இதுதான் ஆனந்தமான வாழ்க்கை என்ற ஒரு பிரமையை நம்மிடம் ஏற்படுத்திவிடும். ஐந்து நாட்கள் கஷ்டபட்டுவிட்டு உழைப்பதன் பலனாக ஒரு நாள் ஓய்வெடுக்கமுடிகிறது, மற்றும் ஒரு நாள் உல்லாசமாக ஆசைகளை மறந்துவிட்டு ஆனந்தமாக இருக்கமுடிகிறது, இது போதும் என்ற மனப்பான்மையை நம்மிடம் ஏற்படுத்திவிடும். எப்பொழுதும் ஆனந்தமாயிருக்க வேண்டும் என்ற நம் அடிப்படை ஆசையை நிறைவேற்றிக்கொள்ள செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யவிடாமல் இது போன்ற பொழுதுபோக்குகள் நம் கவனத்தை திசைதிருப்பிவிடுகின்றன.

இருப்பது எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரம். அதிலிருந்து பிச்சையெடுத்து சாப்பிடுவது போல் 24/7 அலுவலகங்களில் உழைக்கும் பலர் தம் இயல்பான ஆனந்தத்தை மறுத்துவிட்டு அதே ஆனந்தத்தின் ஒரு பகுதியை பணம் கொடுத்து வாரக்கடைசியில் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆசைகள் நிறைவேற பணம் வேண்டும் என்று அறியாமை காரணமாக நினைப்பது தவறில்லை. ஆனால் அந்த பணத்தை பெற நமக்கு பிடிக்காத வேலைகளை செய்வதுதான் தவறு. எந்த வேலை நம் இயல்புக்கு பொருந்தி அதை செய்யும் பொழுது சிறிதளவும் மனதளர்ச்சியோ சோர்வோ ஏற்படாமல் இருக்கிறதோ அது போன்ற வேலைகளை மட்டுமே செய்து பணம் சம்பாதிக்க வேண்டும். அதை விடுத்து பணம் கிடைக்கிறதே என்ற நினைப்பில் கூலிக்கு மாரடித்தால் அனாவசியமாக நம் உடல் நலத்தையும் மன நலத்தையும் துறந்து கண்களை விற்று சித்திரம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்போம்.

முடிவுரை :

எல்லோரும் எல்லா சமயங்களிலும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருப்பதால் ஆனந்தம் என்பது நம் இயற்கையான தன்மை. ஆனால் இந்த அறிவு யாருக்கும் இயற்கையாக இருப்பதில்லை. எனவே ஆனந்தமாக இருப்பதற்கு பணம் வேண்டும் புகழ் வேண்டும் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் அனைவரும் வெவ்வேறு குறிக்கோள்களை அடைய செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இந்த ஆசைகளே நம் இயற்கையான ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு தடையாக இருக்கிறது.

உடலும் மனமும் ஜடப்பொருள்கள். உடலைப்போலன்றி மனம் பரமனின் அறிவு, ஆனந்தம் மற்றும் தூய இருத்தல் ஆகிய மூன்று இயல்புகளையும் பிரதிபலிக்கும் சக்தி கொண்டது. மனம் ஆசைகள் ஏதுமின்றி நிர்மலமாக இருக்கும்பொழுது இந்த பிரதிபலிப்பு நம் இயற்கையான ஆனந்தத்தை முழுமையாக பிரதிபலிப்பதால் நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாலும் நிறைந்த மனதுடன் ஆனந்தமாக இருப்போம். ஆனால் வாழ்வின் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற ஆசை மனதை ஆக்ரமித்துக்கொண்டு ஆனந்தத்தின்  பிரதிபலிப்பை தடை செய்வதால் ஆசைகள் நிறைவேறும்பொழுதோ அல்லது தற்காலிகமாக அவை மறக்கப்பட்ட சமயங்களிலோ மட்டும் மனம் நிர்மலம் அடைந்து நமது இயல்பான ஆனந்தத்தை நமக்கு தருகிறது. இதனால் ஆசைகள்தான் ஆனந்தத்தை தருகின்றன என்ற அஞ்ஞானம் அதிகமாகி அதன் விளைவாக ஆசைகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றை நிறைவேற்ற மற்றும் மறக்க வைக்கும் முயற்சிகளும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.

இயற்கையான இன்பத்துடன் செய்யும் செயல்களை அனுபவிப்பதை விடுத்து துன்பத்துடன் செயல்களை செய்து நிலையில்லாத ஆனந்தத்தை அவ்வப்பொழுது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

மனதை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மயங்கவைக்கும் முயற்சி அது பக்குவபடும் காலத்தை அதிகரிக்கிறது. நான் பரமன் என்ற உண்மையை அறிந்து கொண்டு நம் இயல்பான குறையில்லா ஆனந்தத்தை அனுபவிக்க நமக்கு புத்திக்கூர்மையும் மனமுதிர்ச்சியும் அவசியம். எனவே நாம் ஆசைகளை மறக்க முயலாமல் மனதுக்கு பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். உதாரணமாக அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஓவியம் வரைவது இசைக்கருவிகளை வாசிப்பது புத்தியை தீட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டுமே தவிர தொலைகாட்சியை பார்ப்பது போன்றவற்றின் மூலம் மனதை அமைதிபடுத்த முயலக்கூடாது.  

பயிற்சிக்காக :

1. ஆழ்ந்த உறக்கம் என்றால் என்ன?

2. ஆழ்ந்த உறக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

3. ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் எந்த மூன்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன?

4. மனிதனின் ஆசைகளுக்கு அடிப்படை காரணம் என்ன?

5.மனதை அமைதிப்படுத்த உதவாத ஐந்து செயல்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஆசைகள் துன்பத்திற்கு காரணமா?

2. வாழ்க்கையில் குறிக்கோள்களுக்கு அவசியமென்ன?

3.ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்யவேண்டுமா?