Friday, February 12, 2010

Lesson 92: Not to cling on to the world ( பிரம்ம சூத்திரம் 3.1.24-27 )

பாடம் 92: தாமரை இலை மேல் தண்ணீர் போல
பாடல் 315-318 (III.1.24-27)

நான் ஆனந்தமயமானவன் என்ற உண்மையை அறியாமல் உலகத்தில் இன்பத்தை தேடியலையும் மனிதன் எப்பொழுது தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல பட்டும் படாமலும் இவ்வுலகில் வாழத்தொடங்குகிறானோ அப்பொழுதுதான் அவனுக்கு வேதம் கூறும் உண்மையை அறியும் ஆர்வம் ஏற்படும் என்ற கருத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.

ஆசையின் தன்மை

ஆசை தொடர்ந்து வளரும் தன்மை உள்ளது. நெய் உற்றி நெருப்பை அணைக்க முடியாது. அது போல ஆசை பட்ட பொருளை அடைவதால் ஆசை அதிகமாகுமே தவிர குறையாது.
எட்டா கனிதான் இனிக்கும். எது நமக்கு சுலபமாக கிடைக்கிறதோ அதில் அவ்வளவு இன்பம் இருப்பதில்லை என்பதை நாம் அனுபவத்தில் உணர்வோம். உண்மை என்னவெனில் எது மிகவும் பிரயத்தனபட்டபின் கிடைக்கிறதோ அதிலும் இன்பம் இருக்காது. ஆனால் அது கிடைத்தால் இன்பம் அடைவோம் என்ற நினைப்பு நம்மை விட்டு அகலுவதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தொடர்ந்து நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளை  விரும்புவதை எல்லா மனிதர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது ஒரு அவசியமான பயிற்சி. பிறந்த குழந்தை தொடர்ந்து கையையும் காலையும் அசைக்கத்துவங்குவது மிக அவசியமான உடற்பயிற்சி என்று அதற்கு தெரியாவிட்டாலும் அது அவ்வாறு தொடர்ந்து செய்கிறது. அதே போல் ஆசை பட்டதை அடைந்த பின் இன்பம் கிடைக்காதபோதும் தொடர்ந்து மென்மேலும் ஆசையை வளர்த்திக்கொள்வது நமது இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகளை வலுபடுத்திக்கொள்ள தேவையான ஒரு பயிற்சி.

வேதத்தை முறையாக பயின்று குறைவில்லாத இன்பத்தை அடைய நமக்கு இம்மூன்று சக்திகளும் மிக அதிக அளவில் தேவை. எனவே உலக வாழ்வில் வெற்றிபெறும் திறன் இல்லாதவர்கள் காவியுடை உடுத்திக்கொண்டால் கோவில் முன் அமர்ந்து பிச்சை எடுத்து சாப்பிடலாமே தவிர முக்தி கிடைக்காது.

உலகம் பற்றிய உண்மை

பெற்றோர்களும் ஆசிரியர்களும்நன்றாக படி. அப்பொழுதுதான் நன்றாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ முடியும்என்று அறிவுரை வழங்கும்பொழுது நாம் கற்கும் கல்விக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த அறிவுரைகளை உண்மை என்று நம்பி கல்லூரிப்படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்தபின் தொடர்ந்து இன்பத்தை தேடி எல்லோரும் ஓட ஆரம்பிக்கிறோம். இந்த ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடுபவன் வெற்றிபெறுவான் என்கிற உத்தரவாதம் கிடையாது. யார் ஓடும்பொழுது தனக்கு முன்னால் ஓடுபவர்களை கவனித்து பின் வரும் உண்மைகளை முதலில் அறிந்து கொள்கிறானோ அவனுக்குத்தான் வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகம்.

முதல் உண்மை : துன்பம் கலந்த இன்பம்

வாழ்க்கையில் நாம் பெறும் எந்த இன்பமும் துன்பத்துடன் கலந்தே நமக்கு கிடைக்கிறது. அயராது உழைத்ததால் பதவி உயர்வு கிடைக்க, அது மேலும் உழைப்பை அதிகரிக்கும் அவசியத்தை ஏற்படுத்திவிடும்.

இரண்டாம் உண்மை: குறையும் இன்பம்

வாழ்வில் நாம் அடையும் எந்த இன்பமும் படிப்படியாக குறையும் தன்மை உடையது. (Law of diminishing returns).  வேண்டிய பொருளை அடைந்தவுடன் ஏற்படும் அளவுகடந்த ஆனந்தம் ஒரு சிலநாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.  

மூன்றாம் உண்மை: நிலையா இன்பம்

ஒரு நல்ல ஆடையை அதிக விலை கொடுத்து வாங்கி முதல் முறையாக அணியும்பொழுது நண்பர் ஒருவர் இது உனக்கு கொஞ்சம்கூட பொருத்தமாயில்லை என்று கூறிவிட்டால் அதுவரை இருந்த இன்பம் சுவடு தெரியாமல் உடனே மறைந்து விடும்.

நான்காம் உண்மை: ஆடம்பரமான தேவைகள்

நம்மிடம் இருக்கும் பொருள்கள் அனைத்தும் நம் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய அவசியமானவை. இல்லாத பொருள்கள் அனைத்தும்இருந்தால் நன்றாக இருக்கும்என்ற வகையை சேர்ந்தவை. இது அனைத்து தர மக்களுக்கும் பொருத்தமான உண்மை. மேலும் எப்பொழுது இல்லாத பொருள்மேல் ஆசை பட்டு அதை இருக்கும் பொருளாக மாற்றிக்கொள்வோமோ அப்பொழுதிலிருந்து அந்த பொருள் நமது அடிப்படைத்தேவை என்ற பட்டியலில் சேர்ந்து விடும்.

எனவே அடிப்படைத்தேவைகள் என்ற பட்டியலை மிக நீளமாய் வைத்திருப்பவர்களுக்கு இன்பத்தை விட துன்பம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஐந்தாம் உண்மை: நிறைவு தரா இன்பம்

எவ்வளவுதான் பணம் சம்பாதித்திருந்தாலும், நல்ல குடும்பம் அமைந்திருந்தாலும், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் தெரியாத குறை நம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கும். (இந்த குறையை வேதத்தை படித்து புரிந்து கொள்ளாமல் நிறைவு செய்ய முடியாது.)  எதையாவது தேடி, இனிமேல் தேட உடலில் வலு இல்லை என்ற காரணத்தால் மட்டும் தேடலை நிறுத்தி இளைஞர்களை பொறாமையுடன் பார்க்கும் முதியோர்கள் நிறயபேர் உண்டு.

இன்பத்தை பற்றிய இந்த ஐந்து உண்மைகளை யார் முதலில் அறிந்து கொள்கிறார்களோ அவர்களே இல்லாத இடம் தேடி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகி இன்பத்தை சரியான இடத்தில் தேட தகுதியானவர்கள்.

பொருளாதார ஓட்டப்பந்தயத்தில் இன்பம் எனும் வெற்றி கிடைக்காது என்பதால் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ளவே கூடாது என்பது தவறான முடிவு. அதில் கலந்து கொண்டு சில காலம் ஓடினால் மட்டுமே மேற்கூறிய ஐந்து உண்மைகளை அனுபவபூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் வேதத்தை படிக்க தேவையான மனப்பக்குவமும் இந்த பந்தயத்தில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

சுகமும் இன்பமும்

வாழ்க்கை தரம் (standard of living) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மக்களின் இடைவிடாத உழைப்பு மட்டுமே காரணம். நன்றாக படித்து நல்ல வேலை செய்தால் நிறய பணம் கிடைக்கும். நல்ல கார், வீடு ஆகியவற்றை வாங்கலாம். குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுத்து அவர்களுக்கும் நிறய பணம் சம்பாதிக்கும் தகுதியை ஏற்படுத்தி கொடுக்கலாம். இந்த எண்ணப்போக்கில் எந்த தவறும் இல்லை. இதை அனைத்தையும் நாம் அனைவரும் செய்தால் மட்டுமே உலகம் தொடர்ந்து முன்னேறி எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்என்ற கனவு நினைவாவது சாத்தியம்.

ஆனால் இதற்கும் இன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டும்தான் நாம் உணர வேண்டும். ஏழையாக குடிசையில் குறைவில்லா இன்பத்துடன் வாழ வேண்டுமா அல்லது அனைத்து வசதிகளுடன் கூடிய அரண்மனையில் இன்னும் வேண்டுமென்கிற குறைவுடன் கூடிய இன்பத்துடன் வாழ வேண்டுமா என்று கேட்டால், நாம் புத்திசாலியாக இருந்தால் அரண்மணையில் குறைவில்லா இன்பத்துடன் வாழ வேண்டும் என்று பதில் சொல்வோம்.

பணமும் இன்பமும்

பணமும் இன்பமும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்பது உண்மையென்றாலும் இரண்டும் நமக்கு மிகவும் அவசியமானவை. இன்பமாயிருப்பதால் மட்டும் நமக்கு வாழ்வில் சுகம் கிடைத்துவிடாது.  சுகமாயிருக்க நிச்சயம் பணம் வேண்டும்.

நமக்கு மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்க முடிந்த அளவுக்கு நாம் பணக்காரர்களாய் இருப்பது நன்று. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிப்பது நமது கடமை. பணத்தை உபயோகபடுத்தி இன்பத்தை பெற முடியாது என்பது மட்டும் நமக்கு புரிந்தால் போதும். பொருள் ஈட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

ஆசையே இன்பத்திற்கு காரணம்

உலகத்தில் இன்பம் இருக்கிறது என்ற அறியாமையின் அடிப்படையில் தோன்றும் ஆசை நம்மை செயலில் ஈடுபடுத்துகிறது. தொடர்ந்து உழைப்பதால் நாம் நம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்கிறோம். அதே சமயத்தில் உலகில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவமும் நமக்கு ஏற்படுகிறது. எனவே வேதம் படிக்க ஆரம்பிக்கிறோம். நானே ஆனந்த மயமான பரமன் என்பதை அறிந்து கொள்கிறோம். இன்பத்திற்காகவன்றி இன்பமாக இருப்பதால் தொடர்ந்து உழைக்கிறோம். மேலும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திகொண்டு குறைவற்ற இன்பத்துடன் சிறப்பாக வாழ்கிறோம். எனவே ஆசையே இன்பத்திற்கு மட்டுமில்லாமல் சுகத்திற்கும் காரணம்.

முடிவுரை :

வைராக்யம் உள்ளவர்கள் உலக சுகங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்பது தவறான கருத்து. உலகத்தில் உள்ள அனைத்தையும் உள்ளதை உள்ளவாறு பார்க்கும் திறமை படைத்தவர்களே வைராக்யம் உள்ளவர்கள். இவர்கள் பொருள்களில் இல்லாத இன்பத்தை இருப்பதாக நினைத்து அவற்றிற்கு ஏங்க மாட்டார்கள்.

உலகம் படைக்கப்பட்டது நமது அனுபவத்திற்காக. இதில் வைராக்யம் உள்ளவர்களால் மட்டுமே அனைத்து பொருள்களையும் துன்பம் கலக்காத இன்பத்துடன் தொடர்ந்து அனுபவிக முடியும். உலக சுகங்களின் மேல் ஆசைபட்டு அவற்றை அடையும் முயற்சியில் என்று நாம் வைராக்கியத்தை அடைகிறோமோ அன்றிலிருந்து நமக்கு கிடைக்கும் அனைத்து பொருள்களையும் அளவுகட்டுப்பாடு ஏதுமின்றி அனுபவிக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வைராக்யம் வருவதற்குள் முதுமை வந்துவிடுகிறது. எனவே வைராக்யம் வந்தபின்கூட இயலாமை காரணமாக அனுபவங்களை இழக்க நேரிடுகிறது.

பொருளாதார வாழ்வில் முன்னேறி வாழ்வில் சுகங்களை பெற அவசியமான கல்வியை இளம் வயதில் கற்பது போல குறைவில்லா இன்பத்தை அடைய தேவையான வேதத்தையும் முதுமை அடைவதற்குள் பயின்று தேர்ந்தால் வாழ்வில் சுகமாகவும் இன்பமாகவும் இருக்கலாம்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தில் உள்ள பொருள்களை தடையின்றி அனுபவிக்க  அவற்றின் மீது வைராக்யம் அவசியம் என்ற கருத்துடன் மூன்றாவது அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஆசையின் தன்மை என்ன?

2. பொருள்களில் உள்ள இன்பத்தை பற்றி கூறப்பட்ட ஐந்து உண்மைகள் யாவை?

3. ஆசை எப்படி இன்பத்திற்கு காரணமாயிருக்க முடியும்?

சுயசிந்தனைக்காக :

1. ஞானிகள் சுகபோகிகளாக வாழலாமா?

2. உலகத்தில் உள்ள பொருள்கள் எவற்றையும் அனுபவிக்காமல் இன்பமாக இருக்க முடியுமா?