பாடம் 87: ஆசை உடன் பிறந்தது
பாடல் 292-298 (III.1.1-7)
ஆசைகள் நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கின்றன. மேலும் அடுத்த பிறவியில் எங்கு எப்படி பிறப்போம் என்பதையும் அவை தீர்மானிக்கின்றன. எனவே ஆசை என்றால் என்ன, ஆசை உருவாவது எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை அறிந்து கொண்டு தவறான ஆசைகளை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.
ஆசை என்றால் என்ன?
‘இது எனக்கு வேண்டும்’ என்ற எண்ணம்தான் ஆசை. அனைத்து ஆசைகளும் அறிவை ஆதாரமாக கொண்டு செயலை தூண்டுபவை. விருப்பமான பொருள்களை அடையவேண்டும் என்ற நினைப்பும் வெறுப்பவற்றை தவிர்க்கவேண்டும் என்ற நினைப்பும் ஆசையில் அடங்கும்.
ஆசை உருவாகும் விதம் – முதல் படி
மெய், வாய், கண், செவி,மூக்கு என்ற ஐந்து புலன்கள் நம்மை சுற்றி உள்ள உலகின் இருப்பை நமக்கு அறிவிக்கின்றன. ‘இது இருக்கிறது’ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுகிறது.
ஐம்புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் இந்த செயல்பாடு வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்று. ஆசை உருவாக இவை முதல் படியாக இருப்பதால் ஆசையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற தவறான போதனையின் அடிப்படையில் ஒரு சிலர் இமயமலையின் அடிவாரத்துக்கு போய் அமைதியை தேடுகிறேன் என்று வாழ்வின் இன்பங்களை துறக்கிறார்கள். ஆசையை பற்றி வேதம் கூறும் கருத்துக்களை அறிந்து கொண்டால் இம்மாதிரி உலக வாழ்விலிருந்து தப்பித்து கண் காணா இடத்துக்கு போகத்தேவையில்லை.
ஆசை உருவாகும் விதம் – இரண்டாம் படி
விருப்பு மற்றும் வெறுப்பு என்பது உடன் பிறந்தவை. எதை நாம் தொடர்ந்து அனுபவிக்கிறோமோ அதில் நமக்கு நம்மையறியாமல் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிடுகிறது. ‘பிடித்தவை-பிடிக்காதவை’ என்று மனிதர்கள் அனைவரும் ஒரு தனிப்பட்ட பட்டியல் வைத்திருக்கிறார்கள். இந்த பட்டியல் பிறவிகள்தோறும் நம்முடன் தொடர்ந்து வந்து நமது பழக்க வழக்கங்களை தீர்மானிக்கின்றது.
நமது மனதில் பதியவைக்கப்பட்டுள்ள ‘பிடித்தவை-பிடிக்காதவை’ என்ற இந்த பட்டியலின் அடிப்படையில், ‘இது இருக்கிறது’ என்ற எண்ணம் ‘இது நன்றாக இருக்கிறது’ என்ற எண்ணமாக மாறுகிறது. இது ஆசையை உருவாக்கும் இரண்டாம் படி.
சாம்பாரில் கத்தரிக்காய் மிகசுவையாக இருக்கிறது என்று ரசித்து சாப்பிட்டு கொண்டிருப்பவருக்கு, பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அதை கவனமாக பொறுக்கி இலையின் ஓரத்தில் ஒதுக்கிவைப்பது ஏன் என்று புரிந்து கொள்ள முடியாது. நன்றாய் இருக்கிறதா இல்லையா என்பதற்கும் கத்தரிக்காய்க்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. நமது மனது மட்டுமே இந்த பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.
கடவுள் படைத்த உலகில் இருப்பது அனைத்தும் நல்லவையே. அனால் நாம் நம் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் நன்றாக இருக்கிறது/ இல்லை என்று தரம் பிரிக்கிறோம். இதை புரிந்து கொண்டபின்கூட தொடர்ந்து நமது மனம் ‘பிடித்தவை-பிடிக்காதவை’ என்று எல்லாவற்றையும் பாகுபாடு செய்யும். இதில் எந்த தவறும் இல்லை. மனதின் இந்த இயல்பை புரிந்து கொண்டால் அதன் போக்கை மாற்ற முயல்வது தேவையற்ற செயல் என்று தெரியும்.
எல்லாவற்றையும் சமமாக பாவிக்கவேண்டும் என்ற உபதேசத்தை தவறாக புரிந்து கொண்டு ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காத பாகற்காயை வாரம் ஒருதடவையாவது விழுங்க முயற்சித்து கொண்டிருப்பார்கள். இது அனாவசியம்.
குழந்தைகளை வளர்க்கும்பொழுது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு பிடிக்காத செயல்களை செய்யச்சொல்லி கட்டாயபடுத்தாமல் இருப்பது பெற்றோரின் கடமை. ஏனெனில் பல பிறவிகள் தோறும் சேர்த்துவைத்த ‘பிடித்தவை-பிடிக்காதவை’ என்ற தனிப்பட்ட பட்டியலுடன் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். கண்டித்து வளர்ப்பதால் குழந்தையின் விருப்பு-வெறுப்புகளை மாற்றிவிட முடியாது.
பள்ளிக்கு செல்ல பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை என்றால் அவர்களை கட்டாயபடுத்தாமல் ஒவ்வொருவரின் தனிபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வழியில் செயல் முறை கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டும்.
பிறந்தது முதல் இறக்கும்வரை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த செயலில் மனம் ஒன்றி ஈடுபடுவதற்கு ஏற்ற வாய்ப்புக்களையும் சூழ்நிலைகளையும் வழங்கும் உலகமே உண்மையான சொர்க்கம்.
ஆசை உருவாகும் விதம் – மூன்றாம் படி
‘இது நன்றாக இருக்கிறது’ என்ற அளவில் நிறுத்திக்கொள்ளாமல் ‘இது எனக்கு வேண்டும்’ என்ற ஆசை நமக்கு தோன்றுவதற்கு காரணம் நமது அறிவு. இது எனக்கு கிடைத்தால் நான் இன்பமாக இருப்பேன் என்று நமது புத்தியில் தோன்றும் எண்ணமே ஆசைகளை உருவாக்குகிறது.
இருப்பதை அறிவது, அவற்றில் சிலவற்றை நல்லவை/கெட்டவை என்று தரம் பிரிப்பது மற்றும் பிடித்தவற்றில் சிலவற்றை ‘எனக்கு இது வேண்டும்’ என்ற எண்ணமாக மாற்றுவது ஆகிய மூன்று படிகளில் ஆசை உருவாகிறது.
ஆசைகளை கட்டுப்படுத்தும் விதம்
ஆசை உருவாவதை முதல் இரண்டு படிகளில் நாம் தடுக்க முயல்வது தவறு என்று அறிந்து கொண்டோம். அழகான ரோஜா மலரை பார்த்து ரசிப்பதில் எந்த தவறும் இல்லை. இந்த இயற்கையை அனுபவிக்கும் எண்ணம் ‘இந்த மலர் எனக்கு வேண்டும்’ என்ற ஆசையாக மாறலாமா கூடாதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு நமது புத்தியை சேர்ந்தது. எனவே நமது புத்தியில் எவ்வித எண்ணங்களை ஆசைகளாக மாற்ற கூடாது என்ற அறிவை வளர்ப்பதன் மூலம் மட்டுமே தவறான ஆசைகளை கட்டுப்படுத்த முடியும்.
ஆசைகளை ஆய்வு செய்யும் விதம்
‘இது நன்றாக இருக்கிறது’ என்பது போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றும்பொழுது அவை சரியானவையா அல்லது தவறானவையா என்று ஆராய்வதன் மூலம் அவற்றை ஆசையாக மாற்றலாமா கூடாதா என்ற முடிவை புத்தி எடுக்க வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்கள் புத்தியின் அனுமதியின்றி ஆசையாக மாறுவதில்லை. எனவே புத்தியை கூர்மையும் வலிவும் உடையதாக வைத்திருந்தால் மனதில் தோன்றும் எண்ணங்கள் ஆசைகளாக மாறி நம்மை ஆட்டுவிக்கவிடாமல் அவற்றை நம் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
தவறான ஆசை என்பது நமக்கோ மற்றவர்களுக்கோ துன்பம் ஏற்படுத்தக்கூடிய செயலை செய்ய நம்மை தூண்டுவது. தானும் தன்னை சார்ந்தவர்களும் இன்பமாக இருப்பதற்காக, மனமறிந்து மற்றவர்களுக்கு துன்பம் அளிக்காதவகையில், நிறய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை மனதில் வளர்த்திக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.
எது தவறான ஆசை, எது சரியான ஆசை என்பது பொதுவாக அனைத்து மக்களுக்கும் தெரியும். தவறான ஆசைகள் ஏற்படும்பொழுது நிச்சயமாக அவர்களது உள்மனது ‘இது தவறு’ என்ற எச்சரிக்கை செய்யும்.
மனம் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கியது. புத்தி நமக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறிந்திருப்பது. மனம் போன போக்கில் போகாமல் ஆசைகளை புத்தியினால் சீர்தூக்கி பார்த்து நல் வழியில் நடப்பது மட்டுமே குறைவில்லா இன்பம் என்ற வாழ்க்கையின் குறிக்கோளுக்கு நம்மை அழைத்துச்செல்லும்.
முடிவுரை :
இலைகளின் மேல் ஊறும் கம்பளிப்பூச்சி அடுத்த இலையை கால்களால் பற்றியபின் முந்திய இலையில் இருக்கும் பிடிப்பினை தளர்த்துவது போல மனிதன் மரணமடையும்பொழுது தனது அடுத்தபிறவிக்கான உடலை தேர்ந்தெடுத்த பின்தான் தற்போதய பருவுடலை உதிர்க்கிறான் என்று வேதம் கூறுகிறது. இதன் பொருள் நமது கடைசி ஆசை நம் அடுத்த பிறவியை தீர்மானிக்கிறது என்பதாகும்.
வாழ்நாள் முழுவதும் மனம் போனபோக்கில் உலக இன்பங்களில் ஆசைபட்டுவிட்டு சாகும் சமயத்தில் சங்கரா சங்கரா என்று கடவுள் மீது ஆசை வைத்தால் முக்தியடைந்துவிடலாம் என்பது பின் வரும் காரணங்களால் நடக்காது.
மனம் எதில் ஊறியிருக்கிறதோ அதைத்தான் ஆசைபடும். நான் இப்பொழுது சாகப்போகிறேன், எனவே ஆண்டவன் மீது ஆசை கொள் என்று நம்மால் நம் விருப்பத்திற்கேற்ப மனதை மாற்றிக்கொள்ள முடியாது. மேலும் எமதர்மன் நம்மிடம் சொல்லிக்கொண்டு வருவதில்லை. அப்படியே தீராத நோய் வந்து மருத்துவர் நாம் போவதற்கு நாள் குறித்துவிட்டாலும் எப்படியாவது பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் கடைசி வரை இருக்கும். எனவே இறைவனிடம் இன்னும் ஒரு சில வருடங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்க தோன்றுமே தவிர மீண்டும் பிறவா வரம் கேட்க வேண்டும் என்ற நினைவு வராது. அதற்குள் நமது தீவிர ஆசைகள் அடுத்த பிறவியில் எந்த சூழ்நிலையில் பிறக்கவேண்டும் என்பதை தீர்மானித்து விடும்.
எனவே இந்தக்கணம் தொடங்கி நமது ஆசைகளை ஆய்வு செய்து தவறான ஆசைகளை இப்பொழுதிலிருந்தே தவிர்க்க பழகிக்கொள்ள வேண்டும்.
பயிற்சிக்காக :
1. ஆசை என்றால் என்ன?
2. ஆசை உண்டாகும் மூன்று படிக்கட்டுக்கள் யாவை?
3. மனம்-புத்தி இவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
4. நாம் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்று இந்த பாடத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள் யாவை?
சுயசிந்தனைக்காக :
1. நல்ல ஆசைகளை வளர்த்துக்கொள்ளலாமா?
2. இனி ஆசைகள் ஏதும் இல்லை என்ற நிலைக்கு வர இயலுமா?
3. நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைக்கு கற்றுகொடுப்பது எப்படி?
4. நல்ல ஆசைகள் மூலம் அடுத்த பிறவி ஏற்பட்டால் அதில் என்ன குறை?