Wednesday, February 10, 2010

Lesson 91: It takes only a short time ( பிரம்ம சூத்திரம் 3.1.23 )

பாடம் 90: பரமனுடன் ஒன்றாக ஆகும் காலம் 
பாடல் 314 (III.1.23)

தங்களுடைய இயல்பு நிலையான ஆனந்தத்தை அடைவதே அனைத்து மக்களின் முடிவான குறிக்கோள். இந்த குறிக்கோளை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது நாம் எவ்வளவு வேகமாக இந்த பாதையில் பயணிக்கிறோம் என்பதை பொறுத்தே அமையும். இந்த பாதையில் அடங்கியுள்ள படிக்கட்டுகளை விவரிப்பதன் மூலம் வேதம் நாம் எந்த படியில் இருக்கிறோம், இன்னும் எவ்வளவு தூரம் சென்றால் நம் இலக்கை அடையலாம் என்பதை அறிய உதவுகிறது.

முதல் படிஅடிப்படை சக்திகளை வலுப்படுத்திக்கொள்வது

நம் வாழ்க்கையின் தரம் நமது இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகியவற்றின் வலுவை பொறுத்து அமைகிறது. ஒரு சராசரி மனிதனால் வீடுபேறை அடைய முடியாது. இந்த மூன்று சக்திகளையும் தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ள நமக்கு வாழ்வில் முன்னேறும் துடிப்பு இருக்கவேண்டும். கார், வீடு, சமூகத்தில் ஒரு மதிப்பு போன்றவற்றை தொடர்ந்து ஒன்றுக்குபின் ஒன்றாக அடைய முயற்சிப்பதன் மூலம் நாம் இந்த மூன்று சக்திகளையும் தேவையான அளவு வலுப்படுத்திக்கொள்ளலாம். கடின உழைப்பு, விடா முயற்சி, கிடைத்ததில் திருப்தியின்மை, ஆரோக்கியமான போட்டி ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு மிக அவசியம்.

ஆனால் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மமாக இருக்க வேண்டும். குறுக்கு வழி, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற செயல்களால் மற்றவர்களை இம்மியளவும் துன்பத்தில் ஆழ்த்த கூடாது. யாருக்கும் எந்த தீமையையும் மனதறிந்து செய்யக்கூடாது.
பணம், புகழ், பதவி போன்றவற்றை அடைய நாம் செய்யும் தர்மமான முயற்சி முக்கியமே தவிர இவற்றை அடைவது முக்கியமல்ல. அதர்மமான வழிகளில் இவற்றை அடைந்தால் நாம் பாதையில் பின்னோக்கி பயணிக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த முதல் படியின் குறிக்கோள் நமது இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை வலுப்படுத்திக்கொள்வதே தவிர பொருளாதார முன்னேற்றம் அடைவதல்ல. ஆனால் இந்த மூன்று சக்திகளை வலுபடுத்திக்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி பணம், புகழ், பதவி போன்றவற்றை தேடுவதுதான். தேடல் மட்டும்தான் முக்கியமே தவிர அடைதல் முக்கியமல்ல.

இரண்டாம் படி மனப்பக்குவம் (செயலும் பலனும் தொடர்பற்றவை) பெறுதல்

வாழ்வின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். நம்முடைய கடும் உழைப்பு, ஊக்கம், விடாமுயற்சி, சாமர்த்தியம் போன்றவற்றிக்கும் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை புரிந்து கொள்வது மிகக்கடினம். இதை புரிந்து கொண்டால்  நமக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று அர்த்தம். 

செய்யும் செயலுக்கும் அதன் விளைவுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது. எல்லாம் சரியாக செய்தும் நாம் எதிர்பார்த்த விளைவு ஏற்படாமல் போவதையும் எதுவுமே செய்யாமல் இருந்தபோதும் நாம் எதிர்பாராத ஒரு விளைவு ஏற்படுவதையும் நாம் எல்லோரும் அனுபவித்து இருக்கிறோம். ஆனால் இவை விதிவிலக்கு என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதுதான் விதி என்று நமக்கு தெரிந்து விட்டால் நமக்கு மனப்பக்குவம் வந்து விட்டது என்று அர்த்தம்.

அடுத்த வருடம் ஒரு கோடி ரூபாய் நிகர லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதை நிறைவேற்ற தேவையான அனைத்து செயல்களையும் முறையாகவும் திறமையாகவும் செய்தாலும் எவ்வளவு லாபம் வருகிறது என்பது நமது பாவ புண்ணியங்களை மட்டுமே பொறுத்து அமையும். அதனால் திட்டமிடுவதோ, அதை அடைவதற்காக முழுத்திறமையை உபயோகித்து கடின உழைப்பில் ஈடுபடுவதோ அவசியமில்லை என்று அர்த்தமில்லை. நாம் கடமையை சரியாக முழுத்திறமையுடன் செய்வது மிக அவசியம். இதனால் நம்முடைய இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவை மிக வலுவடைகின்றன. மேலும் நாம் இதுபோல தொடர்ந்து முயற்சித்தால்தான் முயற்சிக்கும் பலனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற மனப்பக்குவம் ஏற்படும்.

மூன்றாம் படிமனப்பக்குவம் (உலகத்தில் இன்பம் இல்லை) பெறுதல்

நமது ஆசை ஒரு பொருளை பெற வேண்டும் என்பது. அந்த ஆசைக்கு காரணம் அந்த பொருள் கிடைத்தால் இன்பம் கிடைக்கும் என்பது. உலகத்தில் உள்ள எந்த பொருளுக்கும்/ எந்த மனிதருக்கும் நமக்கு இன்பத்தை கொடுக்கும் சக்தி கிடையாது. இதை புரிந்து கொள்வது மிகக்கடினம். இதை புரிந்து கொண்டால்  நமக்கு மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.

இன்பம் தரும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நாம் ஆசை கொள்கிறோம். ஆசைப்பட்டதை அடைந்த பின் ஏற்படும் இன்பம் நிலைப்பதில்லை. வேறொரு ஆசை ஏற்பட்டு அது நிறைவேறினால் போதும் என்று தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுகிறோம். எப்பொழுது நாம் எதை அடைந்தாலும் நிலைத்த இன்பம் ஏற்படுவதில்லை என்ற உண்மையை  அறிந்து கொள்கிறோமோ அப்பொழுது நமக்கு மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.

தொடர்ந்து செயலாற்றுவதன் மூலம் நமக்கு தேவையான மனப்பக்குவம் ஏற்படும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் மிக வலுபெற்றுவிடும். இந்த நிலையில் நாம் அடுத்த படிக்கு தயாராவோம்.


நான்காம் படி: வேதத்தை படித்தல்

நம்முடைய ஆசை நிரந்தரமான ஆனந்தம். இதை வெளி உலகில் தேடி பெற முடியாது. வேதம் ஆனந்தம் நமது இயல்பு, அதை தேடிப்பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறது. இது எப்படி என்பதை அறிந்து கொள்ள நாம் நம்மிடம் உள்ள இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்றையும் பயன் படுத்தி வேதத்தை குருவிடமிருந்து கற்க வேண்டும்.

நாம் செய்த புண்ணியத்தின் விளைவாக அடிக்கடி நாம் நமக்கு தகுந்த குருவுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நாம் சீடனாக தயாராக இருப்பதில்லை. எல்லாம் எனக்குத்தெரியும். தெரியாததை நானே படித்து தெரிந்து கொள்வேன் என்ற நினைப்பில் புத்தக கண்காட்சிக்கு சென்று ஆன்மீக புத்தகங்களை வாங்குவதனால் நாம் வேதத்தை புரிந்து கொள்ள முடியாது.

எப்பொழுது நாம் ஒரு குருவிடம் சரணடைகிறோமோ அப்பொழுதுதான் நமது ஆன்மீகப்பயணம் தொடங்குகிறது.

வேதத்தை படிப்பது ஒரு முழுநேர வேலை அல்ல. நாம் நம் குடும்பவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டே வேதத்தை ஒரு பகுதி நேர அடிப்படையில் படிக்கலாம். நாம் நம் அனைத்து கடமைகளையும் செவ்வனே செய்த பிறகு எஞ்சிய நேரத்தை வேதம் படிக்க ஒதுக்கினால் போதும். வேதம் எவ்வாறு இந்த உலகத்தில் இன்பமாக வாழ்வது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. காரை விற்றுவிட்டு கார் கற்றுக்கொள்ள முயல்வது புத்திசாலித்தனம் ஆகாது. அதுபோல உற்றார், உறவினர், நண்பர்கள், குடும்பம், சமூகம் ஆகியவற்றின் நடுவே எப்பொழுதும் இன்பமாக இருப்பது எப்படி என்பதை வேதத்தை படித்து கற்றுக்கொண்ட பின் காட்டில் சந்நியாசியாக உலவ முடிவு செய்வது புத்திசாலித்தனம் அல்ல.
  

முடிவுரை :

வீடு பேறு அடைய எவ்வளவு காலமாகும் என்பது நாம் எப்பொழுது ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்கிறோம், எவ்வளவு நேரம் வேதத்தை படிக்க ஒதுக்குகிறோம்  என்பதை பொறுத்து இருக்கிறது.  ஆனால் ஆன்மீகபயணத்தை ஆரம்பித்துவிட்டால் வீடுபேறு அடைவது உறுதி. பெரும்பான்மையான மக்களுக்கு ஆன்மீகபயணத்தை ஆரம்பிக்க அவசியமான மனப்பக்குவமோ தீவிர இச்சா சக்தியோ இருப்பதில்லை.

எனவேதான் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த மனிதன் இன்னும் வெளி உலகில் நிலையான இன்பத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

பயிற்சிக்காக :

1. நிலையான ஆனந்தத்தை அடையும் பயணத்தில் உள்ள நான்கு படிக்கட்டுக்கள் யாவை?

2. ஆன்மீகப்பயணம் ஆரம்பமானதா இல்லையா என்பதை எது தீர்மானிக்கிறது ?

3. இரு மனப்பக்குவங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. யார் சரியான குரு? எந்த குருவிடம் படித்தாலும் முக்தியடைந்து விடலாமா?


2. இச்சா சக்தி மற்ற இரு சக்திகளை காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. – இது சரியா ?