Wednesday, June 12, 2013

Lesson 191: Fulfillment of an enlightened soul (Brahmasutra 14.4.17-22)

பாடம் 191: ஞானியின் நிறைவு
பாடல்: 550-555 (IV.4.17-22)

தன்னுடைய இராஜ்யத்துக்கு அவனே கடவுளாகி விடுகிறான்என்ற தைத்ரீய உபநிஷத்தின் வாக்கியத்தை (1.6) மேற்கோள் காட்டி, ஞானம் பெற்றவுடன் ஞானி முழு நிறைவை அடைந்து விடுகிறான் என்ற கருத்தை, ஆதி சங்கரரின் உபதேச சாஹஸ்ரீ நூலில் இருந்து சில பகுதிகளை தருவதன் மூலம் இந்தப்பாடம் நிறைவு செய்கிறது.

17.1 வேறு எதுவுமே இல்லாத காரணத்தால் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அந்தப் பரமனை அறியவேண்டும்.

17.4 வேதங்களின் கர்மகாண்டம், வேதாந்தம் மற்றும் வேதங்களைச் சார்ந்த அனைத்து நூல்களின் ஒரே நோக்கம் நமக்கு பரமனை அறிவிப்பதுதான். பரமனை அறிந்து கொள்வதைவிட மேலானதான சாதனை எதுவும் இல்லை.

18.1 எதிலிருந்து அனைத்தும் உருவானதோ, எதில் அனைத்தும் அடங்குமோ, எது எனது புத்தியின் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமானதோ அந்த உணர்வு மயமான பரமனுக்கு நான் எனது தலையை வணங்குகிறேன்.

18.2 தவறான கருத்தை போதிக்கும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வேதத்தின் உட்பொருளை சிதைவுறாமல் காப்பாற்றி, கூர்மையான கத்தி போன்ற வார்த்தைகளாலும் பிளக்க முடியாத மின்னல் போன்ற தர்க்கங்களாலும் அதை எனக்குப் புரியும் படி உபதேசம் செய்த மிகச் சிறந்த அறிவாளியான எனது குருவுக்கும் அவரது குருப்பரம்பரைக்கும் நான் தலை வணங்குகிறேன்.

18.3 ‘இருத்தலை மட்டுமே இயல்பாக கொண்ட நான் எப்போதும் முக்தி அடைந்தவனாகத்தான் இருக்கிறேன்என்ற அறிவில் நாம் நிலைபெற முடியாது என்பது உண்மையானால், தாயின் கருணையுடன் வேதம் ஏன் இந்த அறிவை நமக்கு போதிக்க வேண்டும்?

18.4 கயிறு என்ற சரியான அறிவை அடைந்ததும் பாம்பு என்ற தவறான அறிவு மறைந்துவிடுவதைப்போல, ‘எப்போதும் இருக்கும் பரமனே நீஎன்று போதிக்கும் வேத மந்திரங்களை தர்க்கம் மூலம் சோதித்து அறிந்தவுடன் இந்தப் பிரபஞ்சம் மாயையாக மறைந்துவிடும்.

18.233 மலர்களில் இருந்து சிறந்த தேனைச் சேகரித்துத் தரும் தேனியைப்போல வேதங்களில் இருந்து அவற்றின் சாரத்தை எடுத்து எனக்கு அளித்த எனது ஆசிரியருக்கு நான் தலை வணங்குகிறேன்.

எனக்கும் மனதுக்கும் இடையே நடக்கும் உரையாடல்

8.1 உலக சுகங்களை அனுபவிப்பவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு உனது கற்பனையில் உருவானது, ஓ மனமே! குணங்கள் எதுவும் இல்லாமல் உணர்வு மயமாக இருக்கும் பரமனாகிய எனக்கு உலக சுகங்களில் மூலம் எந்தப் பயனும் கிடையாது. எனவே, உனது முயற்சிகள் அனைத்தும் வீண்.

8.2 வீணாக வேலை செய்துகொண்டு இருக்காமல், பிறப்பு-இறப்புக்கு அப்பாற்பட்டு, இரண்டற்று, பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருக்கும் என்னைச் சேர்ந்து அமைதியாக இரு.

8.4-5 செயலுக்கும் விளைவுக்கும் காரண-காரிய உறவு இருப்பதாக நம்பும் மனமே, நீ எதையும் செய்வதில்லை, அனுபவிப்பதும் இல்லை. நீ என்னில் இருந்து வேறு பட்டவன் அல்ல. இதை நீ அறிந்துகொண்டால் அனைத்து துன்பங்களில் இருந்தும் உனக்கு விடுதலை கிடைக்கும்.

19.1 மனம்: ஆசைகளே எனது துன்பத்துக்கு காரணம். ஆசையை அகற்ற விவேகமும் வைராக்கியமும் எனக்குத் தேவை.

19.2 ஓ மனமே!  ‘நான்’, ‘எனதுஎன்பது போன்ற பயன் இல்லாத கற்பனைகளில் நீ உழன்று கொண்டு இருக்கிறாய். நீ செயல்படுவது உனக்காக இல்லை, எனக்காக. நீ எதையும் அறியமாட்டாய். எனக்கு எந்த ஆசைகளும் கிடையாது. எனவே, நீ சும்மா இருந்தாலே நலம்.

19.3 நானே பரமன் என்பதால் நான் எப்போதும் நிறைவு டையவனுமாய் ஆசைகள் அற்றவனுமாய் இருக்கிறேன். எப்போதும் நிறைவுடைய எனது நலத்துக்காக நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் நீ நலமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஓ மனமே, அமைதியாக இரு.

19.4 பசியும் தாகமும் பிராணனுக்கு. துக்கமும் அறியாமையும் மனமாகிய உனக்கு. மூப்பும் மரணமும் உடலுக்கு. இவை எதனாலும் பாதிக்கப்படாதவன் நான். எனவே எனக்கு நிறைவைத் தர நீ செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீணே!

19.5 ஆழ்ந்த உறக்கத்தில் நீ எதையுமே அறியாமல் அமைதியாக இருக்கிறாய். விழித்தவுடன் அனைத்தையும் தவறாக அறிவதால் அலைபாய்கிறாய். ஐந்து புலன்களால் நீ அறிவது எதுவுமே உண்மை அல்ல என்பதை நீ அறிந்தால் உன்னால் எப்போதும் அமைதியாக இருக்க முடியும்.

19.6 உனது முயற்சிகள் என்னை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. எந்த பந்தமும் மாற்றமும் இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும் அறிவு உருவானவன் நான். நான் எப்போதுமே நிறைவானவன் என்பதால், நீ சரியான ஞானத்தை பெறுவதற்கு முன்பும் பெற்ற பின்பும் எனது நிலை மாறுபடுவதில்லை. எனவே, ஓ மனமே உனது முயற்சிகள் அனைத்தும் வீண்.

19.7 நான் என்றும் மாற்றம் எதுவும் இல்லாமல் நிறைவாக இருப்பவன். உன்னால் உருவாக்கப்பட்ட உலகம்தான் எப்போதும் மாறிக்கொண்டு இருப்பது. நான் இரண்டற்ற ஒன்றானவன் என்று வேதங்கள் சொல்வதால் உன்னால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வெறும் கற்பனையே.

19.8 தர்க்கத்தின் மூலம் ஆராய்ந்து பார்த்தால், உண்மை எப்போதும் அழிவதும் இல்லை, பொய் எப்போதும் தோன்றுவதும் இல்லை என்பது தெரியவரும். எனவே, ஓ மனமே, உனக்கு தோற்றமும் மறைவும் இருப்பதால் நீ உண்மையில் இருப்பவன் அல்ல.

19.9-10 என்னைத்தவிர வேறு எதுவும் இல்லை என்ற காரணத்தால் பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றுமே உன்னால் என் மீது ஏற்றி வைக்கப்பட்ட பொய்கள். இது இப்படி இருக்க, நான் ஆழ்ந்த உறக்கம், கனவு, விழிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் மாறாமல் நிறைவாக இருக்கிறேன். மேலும் அனைத்து மனிதர்களுக்கு உள்ளும் இருப்பது ஒன்றான நான் மட்டுமே. ஓ மனமே, நீதான் ஒன்றான என்னை வேறுபடுத்திப் பார்க்கிறாய்.

19.11 நீ நினைப்பதுபோல் அனைத்தும் வேறானால் அவை தோற்றம், மாற்றம், மறைவு என்ற விதிக்கு கட்டுப்பட்டவை. இந்த உலகமும் ஒரு நாள் அழிந்து போகும்.

19.12 யாரும் எனக்குச் சொந்தம் இல்லை. நான் யாருக்கும் சொந்தமானவன் இல்லை. ஏனெனில் நான் இரண்டற்றவன். எப்போதும் இருக்கும் என் மீது பொய்யான இந்த உலகத்தை நீ ஏற்றிவைத்துள்ளாய்.

19.28 பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த செயலுக்கு ஈடான செயலாக வேதங்களை ஆராய்ந்து இந்த உண்மையை எடுத்துக் கூறிய அனைத்து ஆசிரியர்களையும் நான் வணங்குகிறேன்.


முடிவுரை :

ஆசை என்பது அனைத்து மக்களுக்கும் இயற்கையாகவே இருக்கிறது. ஆசை பட்ட பொருளை அடைந்தபின்னும் ஆசைகள் குறைவதில்லை. அவை வாழ்வின் கடைசி நாள் வரை தொடர்ந்து அதிகரிக்கவும் செய்கிறது. எனவேதான் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவை காண்பதில்லை.

வேதம், மக்களின் இந்தக் குறையை தீர்த்து அவர்கள் நிறைவு அடையும் வழியைக் காண்பிக்கிறது.

முதல் படி: பட்டம், பதவி, பணம், உறவு என்பது போன்ற வெளி உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசைப்பட்டு அவற்றை பெற முயற்சி செய்பவர்கள் பற்றுடையோர்கள். எதற்காக பொருள்கள் மேல் ஆசைப்படுகிறோம் என்று ஆராயாமல் இருக்கும் வரை இவர்கள் அடுத்தப்படிக்கு முன்னேறுவதில்லை.

அனைத்து மக்களுக்கும் இயற்கையாக இருக்கும் ஆசை, அவர்களை மேலும் மேலும் செயல்களில் தூண்டி ஆசையை நிறைவு செய்யத் தூண்டுகிறது. செயல் செய்வதன் மூலம் அறிவும் வளர்வதால், கூடிய விரைவில் அவர்கள் தங்கள் முயற்சி எப்போதும் நிறைவைத் தராது என்ற மனப்பக்குவத்தைப் பெறுவார்கள்.

இரண்டாம் படி: சுகம் கிடைக்கும்வரைதான் நமக்கு பொருள்கள் மேல் ஆசை இருக்கிறது என்பதை உணர்ந்து, பொருள்கள் மூலம் அல்லாது கடவுளை நாடுவதன் மூலம் சுகம் பெற வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் முக்திவிழைவோர்கள்.

புராணகதைகளை படிப்பது, கோவில்களில் உபன்யாசம் கேட்பது போன்ற முயற்சிகளை அவர்கள் செய்யும் போது சுகம் இருக்கும் ஒரே இடம் தான் மட்டுமே என்பதை அவர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படும்

மூன்றாம் படி: பொருள்களில் சுகம் இல்லை என்றும் சுகம் தரும் ஒரே பொருள் ஆத்மா என்பதையும் அறியும் முக்திவிழைவோர்கள் ஆத்மாவை அறிய முயற்சி செய்வார்கள்.

ஆத்மா உள்ளே இருப்பது. அதை அடைய வெளியே முயற்சி செய்யக் கூடாது என்ற தவறான போதனைகளை கேட்டு சிலர், தியானம் செய்வதன் மூலம் ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெற முயற்சி செய்வார்கள்.

வெளியே இருக்கும் கண்ணாடியை சரியாகப் பார்த்தால் அதன் உள்ளே இருக்கும் தன் முகத்தை பார்க்க முடியும். அதுபோல வெளியே இருக்கும் வேதங்களை சரியாகப் படித்தால் தன்னை அறிய முடியும்.

முகத்தைப் பார்க்க கண்ணாடியைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அது போல தன்னை அறிய வேதம் படிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. தியானம் செய்வதால் ஆத்மாவைப்பற்றிய அறிவு ஏற்படாது என்பதை இவர்கள் அனுபவத்தில் உணர்ந்த பின் வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள்.

கண்ணாடி எவ்வளவு விலை என்று அதில் எழுதி இருப்பதை கவனித்தால் அதில் முகத்தைப் பார்க்க முடியாது. அதுபோல வேதம் கூறும் பல்வேறு கருத்துக்களில் கவனம் சென்று விட்டால் ஆத்மாவை அறிய முடியாது.  

நான்காம் படி: ஆத்மா அறிய ஆசிரியர் அவசியம் என்பதை அறிந்த பின் அவரிடம் முறையாக வேதம் படிப்பவர்கள் முற்றுணர்ந்த ஞானிகளாக மாறுவார்கள்.

உலகைப் பற்றி நாம் கற்ற எந்த அறிவும் நமக்கு பலன் அளிக்க வேண்டும் என்றால் அந்த அறிவைப் பயன்படுத்தி நாம் செயல் புரியவேண்டும். ஆனால், ‘நான் பரமன்’ என்ற ஞானம் பெற்றவுடனேயே அதன் பலன் நமக்கு கிடைக்க ஆரம்பித்துவிடும்.

ஐந்தாம் படி: ஆத்மாவைப் பற்றிய அறிவு ஏற்படும் இடம் மனம். எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் இருக்கும் ஆத்மாவே பரமன் என்ற அறிவு மனதில் நிலைபெற்ற ஞானிகளின் மனதில் ஆசைகள் அனைத்தும் அகன்று நிறைவு பெற்றவர்களாக வாழ்கிறார்கள்.

நிறைவு பெற்ற ஞானிகள், ‘நான் ஆனந்தமயமானவன்என்பதையும் ‘நான் மட்டுமே இன்பத்தின் ஒரே ஊற்றுஎன்பதையும் அறிந்து இன்பமடைவார்கள். உலகம் முழுவதும் இன்பத்தின் பிரதிபலிப்பே என்பதை அறிவதால், கிடைக்கும் பொருள்களை அனுபவித்து ஆனந்தமாக இருப்பார்கள். மேலும், மற்றவர்களைப் போல் இன்பத்தைத் தேடி அலையும் அவசியம் தங்களுக்கு இல்லை என்பதை நினைத்து ஞானிகள் மகிழ்வடைவார்கள்.

மாற்றமடையும் உலகில் மாறாமல் இருப்பது நான் மட்டுமே என்ற அறிவான அமிர்தத்தை அருந்திய ஞானிகள் மரணத்தை வென்று நிறைவுடன் வாழ்வார்கள்.

இடம், பொருள், காலம் இவற்றால் கட்டுப்படாத நான் அனந்தமானவன் என்பதை அறிந்த ஞானிகள் நிறைவுடன் வாழ்வார்கள்.

அளவற்ற செல்வம் படைத்தவன் செலவு செய்வது பற்றி கவலைப் படுவதில்லை. அதுபோல, அகில உலகமும் தன்னை ஆதாரமாகக்கொண்டுதான் இயங்குகிறது என்பதை அறிந்த ஞானிகள் எவ்வித கவலையும் இல்லாமல் நிறைவுடன் வாழ்வார்கள்.

எந்தச் செயலையும் செய்யவேண்டிய கட்டாயமோ எந்தப் பொருளை அடைய வேண்டிய தேவையோ இல்லாமல் ஞானிகள் எப்போதும் நிறைவுடன் வாழ்வார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. ஞானியின் நிறைவை விவரித்த நான்காவது அத்தியாயத்தின் இந்த நான்காவது பகுதியுடன் பிரம்ம சூத்திரம் முற்றுப் பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஞானியின் நிறைவை விளக்குக?

சுயசிந்தனைக்காக :

1. சுவாமி ஜகதானந்தாவால் பொழிபெயர்க்கப்பட்டு இராமகிருஷ்ண மடத்தின் வெளிடான உபதேச சாஹஸ்ரீ என்ற புத்தகத்தைப் படிக்கவும்.

Monday, June 10, 2013

Lesson 190: Power of the enlightened soul (Brahmasutra 4.4.15-16)

பாடம் 190: ஞானியின் சக்தி
பாடல்: 548-549 (IV.4.15-16)

ஞானம் பெற்றவுடன் ஞானிக்கு தெய்வீக சக்திகள் ஏதும் கிடைக்காது என்றாலும், மற்றவர்களை ஒப்பிட்டால், உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வதில், அவனுக்கு மிகப்பெரிய சக்தி கிடைக்கும் என்ற கருத்தை தத்தாத்ரேயர் எழுதிய அவதூத கீதையின் வரிகள் மூலம் இந்தப்பாடம் தருகிறது.

1.1 கடவுளின் அருள் மூலம்நான் பரமன்என்ற ஞானத்தைப் பெறும் ஞானிகள் எதற்கும் பயப்பட மாட்டார்கள்.

1.6 அனைவரது ஆத்மாவாக விளங்கும் அந்தக் கடவுள்தான் நான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. நான் புனிதமானவன்; கறை படியாத வானத்தைப் போல நான் இயற்கையாகவே குற்றமற்றவன்.

1.7 இன்ப துன்பங்கள் யாருக்கு எப்படி ஏற்படுகின்றன என்பது பிளக்க முடியாத, அழிக்கமுடியாத, அளவற்ற அறிவு உருவான எனக்குத் தெரியவில்லை.

1.8 மனம், மொழி, மெய்யால் நான் எதுவும் செய்வது கிடையாது. எனவே, அவை  நல்ல செயல்களா தீய செயல்களா என்ற கேள்விக்கே இடம் இல்லை. புலன்களுக்கு புலப்படாத புனிதமான அறிவின் அமிர்தம் நான்.

1.11 , சக்தி வாய்ந்தவனே, எப்போதும் ஒளிமயமாக இருக்கும் உன்னை காலமும் இடமும் எப்படி கட்டுப்படுத்த முடியும்?

1.15 பிரிவதும் சேர்வதும் யாருக்கும் கிடையாது. நீ, நான், இந்தப் பிரபஞ்சம் ஆகிய அனைத்தும் உண்மையில் ஒன்றான பரமன் மட்டுமே.

1.51 தண்ணீரை தண்ணீருடன் கலந்தபின் எப்படி எந்த வித்தியாசமும் தெரியாதோ அதுபோல எனக்கும் இந்த உலகத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

2.5 பிறப்பு-இறப்பு ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு எதிலிருந்தும் வேறுபடாமல் எப்போதும் அமைதியாக இருக்கும் நான்தான் அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமானவன்.

2.39 தன்னை அறிந்த ஞானி எதையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவனை எந்த வித சட்ட திட்டங்களும் பாதிப்பது இல்லை.

3.9 கர்ம பலன்கள் அனைத்தையும் அழிக்கும் நெருப்பு நான். வாழ்வின் துயரங்கள் அனைத்தையும் அழிக்கும் நெருப்பு நான். வினைகளுக்கும் துயரங்களுக்கும் அப்பாற்பட்ட எனக்கு உடல் கிடையாது. வானத்தைப்போன்ற வடிவமற்ற அறிவு உருவானவன் நான்.

3.10 பாவங்களை எரிக்கும் நெருப்பு நான். குணங்களை எரிக்கும் நெருப்பு நான். பாவங்களுக்கும் குணங்களுக்கும் அப்பாற்பட்ட எனக்கு பந்தங்கள் எதும் கிடையாது. வானத்தைப்போன்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒருமித்த அறிவு உருவானவன் நான்.

3.14 உலகில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுவது நான் அல்ல. துயரங்கள் ஏற்படுத்தும் மனச்சோர்வால் பாதிக்கப்படுவது நான் அல்ல. புண்ணியத்தின் விளைவாக ஏற்படும் மன அமைதியும் என்னைச் சேர்ந்தது அல்ல. வானத்தைப் போன்று எதனுடனும் சம்பந்தப்படாமல் என்றும் இருக்கும் அறிவு உருவானவன் நான்.

3.26 எதுவுமே செய்யாமல் அனைத்தையும் செய்யும் திறன் படைத்தவன் நான். பந்தத்துக்கும் துறவுக்கும் அப்பாற்பட்ட ஆனந்தமயமானவன் நான். பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டு நிரந்தரமாக இருக்கும் அளவற்றவன் நான். வானத்தைப் போன்று முழுமையாக இருக்கும் அறிவு உருவானவன் நான்.

4.20 நான் அறியாதவனும் அல்ல. அறிந்தவனும் அல்ல. நான் மௌனமாக இருப்பதில்லை. பேசிக்கொண்டும் இருப்பதில்லை. என்னால் எப்படி விவாதங்களில் பங்கேற்க முடியும். அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுபட்ட எனக்கு உருவம் கிடையாது.

5.31 இந்தப் பிரபஞ்சம் ஒரு கானல் நீரைப்போன்ற மாயை என்று வேதங்கள் கூறுகின்றன. நான் உண்மையில் இருக்கிறேன் என்று நாம் அனைவரும் உணர்கிறோம். எனவே இருத்தலை இயல்பாகக்கொண்ட நானே இந்த பிரபஞ்சத்துக்கு ஆதாரம்.

6.22 நீ, நான் என்ற பிரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை. இனம், மொழி, குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பது தவறு. இருப்பதெல்லாம் நான் மட்டுமே. எனவே என்னால் உன்னை என்ன சொல்லி அழைக்க முடியும்.?

7.2 வாழ்வில் எதையும் அடைய வேண்டும் என்ற இலட்சியமோ, அடையக் கூடாது என்ற பிடிவாதமோ இல்லாதவன் ஞானி. சரி-தவறு என்ற இருமைக்கு அப்பாற்பட்ட திறமைசாலி அவன். அவனால் எந்த உரையாடல்களிலோ அபிப்ராயபேதங்களிலோ பங்கேற்க முடியாது.

8.1 பல வேறு திவ்யஸ்தலங்களுக்கு புனித யாத்திரை சென்று எங்கும் நிறைந்து இருக்கும் உன்னை அவமரியாதை செய்தேன். தியானம் செய்வதன் மூலம் அமைதியைத் தேடி மனதின் ஆதாரமாக எப்போதும் இருக்கும் உணர்வுமயமான உன்னை அவமரியாதை செய்தேன். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உன்னை துதிப்பாடல்கள் பாடி அவமரியாதை செய்தேன். இந்த மூன்று பாவங்கள் செய்த என்னை நீ மன்னித்துவிடு.

8.10. இந்தப்பாடல் வரிகளைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. தன்னை அறிந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

முடிவுரை :

ஞானி மிகுந்த சக்திமான். வாழ்வு என்ற புயல்காற்றினால் பாதிக்கப்படாத இமயமலை அவன். உலகத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க அவனுக்கு மட்டுமே தெரியும். எனவே மற்றவர்களை விட அவனால் சிறப்பாக வாழ முடியும்.

கனவில் நமது வீடு குடிசையாக மாறிவிட்டால் அது குறித்து நாம் வருத்தப்படப் போவதில்லை. அது போல சூரியனின் கதிர்கள் குளிர்ந்து விட்டாலோ, சந்திரன் சுட ஆரம்பித்துவிட்டாலோ, நெருப்பு கீழ்நோக்கி எரிந்தாலோ, தண்ணீர் மேல்நோக்கி பாய்ந்தாலோ அனைத்தும் மாயை என்று அறிந்த ஞானி ஆச்சரியப்படமாட்டான்.

ஓடும் நீரில் பிரதிபலிக்கும் சூரியன் நகர்வது போல் தெரியும். அதேபோல் மாறும் உலகில் மாறாத பரமன் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் சிக்கிகொண்டது போல் தோற்றம் அளிக்கும். இதை அறிந்த ஞானி தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்ற அறிவுடன் செயலாற்றிக் கொண்டு இருப்பான்.

ஐந்து புலன்கள் அனுபவிக்கும் மாயையான உலகம் தனது ஆனந்தமயமான உருவத்தின் பிரதிபலிப்பு என்பதை ஞானி அறிவான்.  பார்ப்பவை அனைத்தும் பரமன் என்ற அறிவு அவனிடம் இருப்பதால் அவனுக்கு யார் மீதும் வெறுப்பு ஏற்படாது. அனைத்து நிகழ்வுகளும் பரமனின் மாயாசக்தியின் விளைவு என்றும் அவன் அறிவதால் எது எப்படி ஆனாலும் அதனால் பாதிப்பு அடையாமல் இன்பமாக இருக்கும் சக்தி உடையவன் ஞானி.

பயிற்சிக்காக :

1. ஞானியின் சக்திக்கு காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. தத்தாத்ரேயர் எழுதிய அவதூத கீதையை படிக்கவும்.


Thursday, June 6, 2013

Lesson 189: Knowledge of the liberated soul (Brahmasutra 4.4.10-14)

பாடம் 189: ஞானியின் ஞானம்
பாடல்: 543-547 (IV.4.10-14)

நான் பரமன்என்ற ஞானத்தின் தன்மை, பெருமை, பயன்கள் ஆகியவற்றை அஷ்டவக்ர கீதையின் மூலம் இந்தப்பாடம் விளக்குகிறது.
அஷ்டவக்ரர் கூறுகிறார்:

1.4 உனது உடலில் இருந்து நீ வேறுபட்டவன். உணர்வுதான் நீ. இந்த அறிவில் நீ நிலைபெற்று இருந்தால் எப்போதும் அமைதியாகவும் இன்பமாகவும், பந்தங்களில் இருந்து விடுபட்டவனாகவும் உன்னால் இருக்க முடியும்.

1.6 சரி-தவறு, இன்பம்-துன்பம் போன்ற இருமைகள் உனது மனதை மட்டுமே சேர்ந்தவை. உனக்கும் அவற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நீ எதையும் செய்பவனும் இல்லை; பலனை அனுபவிப்பவனும் இல்லை. நீ எப்போதும் விடுதலைப் பெற்றவன்.

1.7 அனைத்து நிகழ்வுகளுக்கும் நீ வெறும் சாட்சி மட்டுமே என்ற உண்மையை மறப்பதுதான் உன் துன்பங்களுக்கு காரணம்.

1.11 ஒருவன் தன்னை துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்தவன் என்று எண்ணினால் அதுவே உண்மை. அதை விடுத்து தன்னை பந்தப்பட்டவன் என்று கருதினால் அதுதான் உண்மை. ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்என்ற வாசகம் உண்மையானது.

1.15. நீ ஏற்கனவே அமைதியின் உருவானவன். ‘மனதை அமைதிப்படுத்த வேண்டும்என்று நீ நினைப்பதுதான் உன் துன்பங்களுக்குக் காரணம்.

1.19 பிரதிபலிக்கப்படும் உருவத்தை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டிருக்கும் கண்ணாடியைப் போல உயிருடன் இருக்கும் உடலை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டவன் பரமன்.

ஜனகர் கூறுகிறார்:

2.2 நானே இந்த உடலுக்கு உணர்வாகவும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாகவும் இருக்கிறேன். எனவே, இந்த உலகம் முழுவதும் என்னுடையது. அல்லது, எதுவுமே என்னுடையது அல்ல.

2.6 கரும்புச் சாற்றின் சுவை எப்படி அதில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரைக்கும் இருக்கிறதோ அது போல ஆனந்தமயமான என்னில் இருந்து உருவான உலகம் முழுவதும் இன்ப மயமானது.

2.11 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? பிரம்மன்னில் தொடங்கி கடைசிப் புல் வரை அனைத்தும் அழிந்தாலும் அழியாமல் இருக்கும் எனக்கு பெருமை உண்டாவதாக.

2.12 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? உடலுடன் இருந்தாலும் நான் எங்கும் போவதும் இல்லை. வருவதும் இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய எனக்கு பெருமை உண்டாவதாக.

2.13 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? என்னைப்போல் புத்திசாலி யாரும் இருக்க முடியாது. என் உடலால்தொடாமலேயே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் பெற்றெடுத்த எனக்கு பெருமை உண்டாவதாக.

2.14 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? எதனுடனும் தொடர்பு உடையவனாக இல்லாவிட்டாலும் வாக்காலும் மனதாலும் எட்டக்கூடிய அனைத்தையும் படைத்த எனக்கு பெருமை உண்டாவதாக.

2.15 கறைபடியாத துணியான என்மேல் அறியாமையால் சித்தரிக்கப் பட்ட அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றுமே உண்மையில் இல்லை.

2.20 இந்த உடல், சுவர்க்கம், நரகம், பந்தம், விடுதலை, பயம் போன்றவை மனதின் கற்பனைகள். உணர்வு மயமான எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.

2.22 நான் இந்த உடல் அல்ல. இந்த உடல் என்னுடையது அல்ல. நான் உயிரோடு இருப்பவன் அல்ல. நான் உணர்வுமயமானவன். உயிர்வாழவேண்டும் என்ற மனதின் ஆசைதான் துன்பங்களுக்கு காரணம்.

அஷ்டவக்ரர் கேட்கிறார்:

3.1 ‘நான் அழியாத பரமன்என்ற ஞானத்தை அடைந்த உன் போன்ற ஞானிகளுக்கு சொத்து சேர்ப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்?

3.2 முத்தின் உயர்வை அறியாதவனே வெயிலில் பளபளக்கும் கிளிஞ்சலுக்கு ஆசைப்படுவான். அதுபோல, ‘நான் யார்?’ என்ற ஞானம் இல்லாதவர்கள் மட்டுமே பொய்யாக காட்சி அளிக்கும் பொருள்களுக்காக ஆசைப்படுவர்.

3.9 விழா எடுக்கப்பட்டாலும் துன்புறுத்தப்பட்டாலும்நானே பரமன்என்ற அறிவுள்ள ஞானி காத்திருக்கவும் மாட்டான்; ஏமாற்றம் அடையவும் மாட்டான்.

3.10 தன்னுடைய உடலையே மற்றவருடையது என்ற எண்ணத்தில் பார்க்கும் ஞானி எவ்வாறு புகழாலும் இகழாலும் பாதிக்கப்படுவான்?

அஷ்டவக்ரர் கூறுகிறார்:

4.1 வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடும் தன்னை அறிந்த ஞானி, துன்பத்தில் உழலும் குழப்பமடைந்த ஜீவன்களைப் போல இருக்கமாட்டான்.

4.2 இந்திரன் முதலான தேவர்களும் அடைய ஏங்கும் ஞானத்தை அடைந்தவர்கள் தங்கள் சாதனையை நினைத்துக்கூட பரவசப்படுவதில்லை.

4.4 தானே இந்த உலகம் என்று அறிந்தவர்கள் மனம் போல வாழ்வதை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

6.3 எல்லா உயிரினங்களிலும் நான் இருக்கிறேன். எல்லா உயிரினங்களும் என்னுள் இருக்கின்றன. இந்த உயர்ந்த ஞானத்தை அடைந்தவனுக்கு துறவு, ஏற்றல், மறுத்தல் ஆகிய எதுவும் இல்லை.

ஜனகர் கூறுகிறார்:

7.2 அளவுகடந்த கடலான என்னில், ‘உலகம்என்னும் அலை எழட்டும், விழட்டும். அதனால் எனது அளவு கூடுவதும் இல்லை. குறைவதும் இல்லை.

7.5 உணர்வுமயமான எனக்கு மாயாஜாலத்தால் செய்யப்பட்ட இந்த உலகத்தில் வேண்டிய, வேண்டாத பொருள்கள் இருப்பதாக எப்படி என்னால் கற்பனை செய்துகொள்ள முடியும்.

அஷ்டவக்ரர் கூறுகிறார்:

8.1 மனதில் எதற்காகவாவது ஏங்குவது, எதை நினைத்தாவது வருத்தப்படுவது, எதையாவது மறுப்பது, எதையாவது பற்றிக்கொண்டு இருப்பது, எதை நினைத்தாவது திருப்தி அடைவது, எதை நினைத்தாவது அதிருப்தி அடைவது ஆகியவையே பந்தம்.

8.2 இவை இல்லாமல் இருப்பது விடுதலை.

9.2 வாழ வேண்டும் என்ற துடிப்போ, இன்பம் வேண்டும் என்ற ஏக்கமோ, அறிய வேண்டும் என்ற ஆவலோ இல்லாதவர்கள் ஞானிகள்.

10.7 எவ்வளவுதான் செல்வம், புலன் இன்பங்கள் கிடைத்தாலும் மனம் திருப்தி அடையவே அடையாது.

ஜனகர் கூறுகிறார்:

12.5 உலகத்துடன் ஒன்றி வாழ்தல் அதன் பின் துறவுபூண்டு தியானம் செய்தல் ஆகிய இரண்டு தவறுகளையும் செய்துவிட்டு இப்போது நான் சரியான ஞானத்தில் நிலைத்து நிற்கிறேன்.

12.6 எப்படி வேலைகள் செய்வது அறியாமையின் விளைவோ அதுபோலவே வேலைகளை துறப்பதும் அறியாமையின் விளைவே. இந்த உண்மையை உணர்ந்த நான் இப்போது சரியான ஞானத்தில் நிலைத்து நிற்கிறேன்.

12.7 எண்ணத்துக்கு அப்பாற்பட்ட பரமனைப் பற்றி எண்ண முயற்சி செய்வதன் தவறை உணர்ந்து இந்தப்பயிற்சியை கைவிட்டுவிட்டேன்.

12.8 இந்த ஞானத்தை அடைந்தவர்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்தவர்கள். அவர்கள் செய்ய வேண்டிய அனைத்து செயல்களையும் செய்து முடித்தவர்கள்.

13.2 சிலவேளைகளில் உடல் உபாதை ஏற்படலாம். சில வேளைகளில் நமது பேச்சு நமக்கு துன்பத்தைத் தரலாம். சில வேளைகளில் மனம் அலைபாயலாம். இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நான் எனது விருப்பப்படி வாழுகிறேன்.

13.3 உண்மையில் நான் எதையும் செய்வதில்லை என்பதை உணர்ந்த நான் தினசரி வாழ்வில் நிகழும் சூழல்களை தக்கபடி எதிர்கொள்கிறேன்.

13.5 நான் நின்றாலோ, நடந்தாலோ அல்லது படுத்துக்கொண்டு இருந்தாலோ எனக்கு எந்த விதமான லாபமோ நஷ்டமோ இல்லை. எனவே, நான் எனது விருப்பப்படி நின்றோ, நடந்தோ, தூங்கியோ வாழ்நாட்களைக் களிக்கிறேன்.

14.1 தூக்கத்தில் இருந்து விழித்தபின் கனவுகளை நினைவு கூறும் அவசியம் இல்லை. அதுபோல காலியான மனதை உடைய ஞானிகளுக்கு தானாக ஏற்படும் எண்ணங்களைத்தவிர எதையாவது ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அஷ்டவக்ரர் கூறுகிறார்:

15.1 அறிவுக் கூர்மை படைத்த ஒருசிலர் ஆசிரியருடன் நடத்தும் சாதாரண உரையாடல் மூலம் கூட ஞானத்தைப் பெறலாம். வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் ஆசிரியரிடம் முறையாகப் பாடம் கற்றாலும் திக்குத்தெரியாமல் திண்டாடலாம்.

15.2 புலன் இன்பத்தில் விருப்பப்படுவது துன்பத்தைத் தரும். புலன் இன்பத்தை வெறுப்பதும் துன்பத்தைத் தரும். புலன் இன்பத்தில் அக்கறையின்மை விடுதலை. இந்த உண்மையை அறிந்தபின் நீ விரும்பியபடி வாழலாம்.

15.3 இந்த அறிவு, அறியத்துடிக்கும் ஆவல், அடையத் துடிக்கும் சுறுசுறுப்பு ஆகியவற்றை அடக்கிவிடும். எனவே புகழையும் பொருளையும் விரும்புவர்கள் இந்த ஞானத்தை தவிர்த்துவிடுவார்கள்.

16.1 நீ கணக்கற்ற வேதங்களை படிக்கலாம், ஒப்பிக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் மறக்கும் வரை  உன்னால் ஞானத்தில் நிலைபெற முடியாது.

16.3 மக்கள் தாங்கள் முயற்சி செய்வதால்தான் துன்பம் ஏற்படுகிறது என்பதை அறிவதில்லை. ஒரு சிலர் இந்த வாக்கியத்தைக் கேட்டதாலேயே நிம்மதி அடைவார்கள்.

16.4 கண்களை மூடித் திறப்பது கூட ஒரு பெரிய வேலை என்று நினைக்கும் முழுச்சோம்பேறிக்கு மட்டும்தான் இன்பம் சொந்தமானது.

16.11 சிவா, விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவருமே உனது ஆசிரியர்களாக இருந்தாலும் அனைத்தையும் மறக்கும் வரை உன்னால் ஞானத்தில் நிலைபெற முடியாது.

17.4 அனுபவித்த பொருட்களின் மேல் பற்று இல்லாமலும் அனுபவிக்காத பொருள்களை அடைய ஏங்காமலும் இருப்பவனை காண்பது அரிது.

17.5 உலக இன்பத்துக்கு ஆசைப்படும் பற்றுடையோர்களும் விடுதலைப் பெற ஆசைப்படும் முக்திவிழைவோர்களும் துன்பப்படுபவர்களே.  இந்த இரண்டையும் அடைய ஆசைப்படாதவர்களை காண்பது அரிது.

17.7 தன் வாழ்வில் இருந்து உலகப் பொருட்களை அகற்றிவிட வேண்டும் என்ற ஆசையோ அவை தொடர்வதால் கோபமோ இல்லாமல் வாழ்வு தரும் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்பவன் எப்போதும் இன்பமாக இருப்பான்.

17.8 கிடைத்த ஞானத்தில் நிலைபெற்று, அலைபாயும் மனதை காலிசெய்துவிட்டு பார்க்கக்கிடைப்பதை பார்த்து, கேட்கக்கிடைப்பதை கேட்டு, முகரக்கிடைப்பதை முகர்ந்து, சுவைகக்கிடைப்பதை சுவைத்து, ஞானி இன்பமாக வாழ்வான்.

17.16 எதையாவது தேடி அலைந்துகொண்டிருந்த நாட்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டவனுக்கு வலுச்சண்டைக்குப் போவதோ, கருணை புரிவதோ, கர்வமோ, பணிவோ, ஆச்சரியமோ, குழப்பமோ எதுவும் இருக்காது.

17.17 புலன் இன்பங்களில் தனக்கு அக்கறை இல்லை என்பதை ஞானி வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். எந்தச் சாதனைகளைச் செய்ய நேர்ந்தாலும் அல்லது தோல்விகளை சந்திக்க நேர்ந்தாலும் பற்றுதல் இல்லாத மனதுடன் அவன் தொடர்ந்து புலன் இன்பங்களை அனுபவிப்பான்.

17.19 ‘நான்’, ‘எனதுஎன்ற எண்ணங்களில் இருந்து விடுதலை அடைந்தவன், எந்த வித பொறுப்பு உணர்வும் இல்லாதவன், உலகே மாயை என்று உணர்ந்தவன், ஆசைகளை அகன்ற மனதை உடையவன், வேலைகள் செய்யும்பொழுதும் சும்மா இருப்பவனாவான்.

18.16 நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் இல்லாதவன், ‘நான் பரமன்என்ற எண்ணமும் இல்லாதவன்.

18.18 ஞானி சாதாரண மனிதனைப் போலவே வாழ்ந்தாலும் மற்றவர்களைப் போல மன அமைதிக்கும் அலைபாயுதலுக்கும்  உள்ள வித்தியாசத்தைக் கவனிப்பதில்லை.

18.21 காற்றினால் தூக்கிச்செல்லப்படும்  காய்ந்த இலைச் சருகைப் போல் வாழ்வின் நிகழ்வுகளில் ஞானி செயல்படுவான்.

18.33 சாதாரண மக்களைப்போல் இல்லாமல், ஞானி எண்ணங்களின் ஒருங்கிணைப்பு, மனக் குவிதல், எண்ணங்கள் இல்லாமல் இருத்தல் போன்றவற்றுக்காக எந்த முயற்சியையும் செய்யாமல் உறக்கத்தில் நடப்பதுபோல செயல்படுவான்.

ஜனகர் கூறுகிறார்:

19.3 எனது பெருமையில் நிலைத்து இருக்கும் எனக்கு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய எதுவுமே கிடையாது. முடிவற்ற காலமும் வெளியும் கூட கிடையாது.

20.8 எப்போதும் குற்றம் ற்று, நிலைத்து இருக்கும் என்னை யாராலும் பரிட்சித்துப் பார்க்க முடியாது. எந்தச் சோதனைகளும், நியமங்களும் என்னைக் கட்டுப்படுத்தாது.

20.14 இருத்தல்-சூனியம், இருமை-இரண்டற்றத் தன்மை ஆகிய எதுவுமே இல்லாதபோது வேறு என்ன சொல்வது? எனக்கு வார்த்தைகள் எதுவும் இல்லை.

முடிவுரை :

இடைவெளியால் உருவான பானை, பொருள்களால் நிரப்பப்படுகிறது. அதுபோல, உணர்வினால் உருவான மனம், எண்ணங்களால் நிரப்பப்படுகிறது. பொருள்களை சேமிப்பதற்காகத்தான் பானை. எண்ணங்கள் உலாவுவதற்குத்தான் மனம்.

எவ்வளவுதான் முயன்றாலும் பானையில் இருக்கும் வெற்றிடத்தை அதிலிருந்து வெளியேற்ற முடியாது. பானையை உடைத்துவிட்டாலும் வெற்றிடம் தொடர்ந்து இருக்கும். அதுபோல, எவ்வளவுதான் முயன்றாலும் மனதில் இருந்து உணர்வை வெளியேற்றிவிட முடியாது. மரணத்துக்குப்பின்னும் உணர்வு தொடர்ந்து இருக்கும்.

அமைதியான ஆனந்தமான அந்த உணர்வுதான் நான் என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள். இதை அறியாதவர்கள், மன அமைதியைத் தேடிகொண்டு இருக்கிறார்கள்.  

பானையில் சேமிப்பது, பாலா கள்ளா என்பதை பானை தீர்மானிப்பதில்லை. இது வேண்டும் அது வேண்டாம் என்ற விருப்பு வெருப்பும் பானைக்குக் கிடையாது. அதுபோல ஞானிகளுக்கு தங்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் இருக்கவேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. மனதில் ஏற்படும் அனைத்து எண்ணங்களும் வெறும் கற்பனையே என்பதை அறிந்த ஞானி அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.

அனைத்தும் நானே என்ற ஞானம், எப்போதும் இன்பமாக வாழ வழி வகுக்கிறது.    

பயிற்சிக்காக :

1. ஞானத்தின் தன்மைகள், பலன்கள் ஆகியவற்றை ஆராய்க.

சுயசிந்தனைக்காக :


1. அஷ்டவக்ர கீதையைப் படிக்கவும்.