Tuesday, March 8, 2011

Lesson 150: Child-like state and Scholarship (Brahmasutra 3.4.47-49)

பாடம் 150: ஞானி குழந்தையை போன்றவன்
பாடல் 472 – 474 (III.4.47-49)

போட்டி பொறாமை போன்ற உணர்வுகளை நீக்கி கள்ளங்கபடமற்ற குழந்தையாய் மாறவேண்டுமென்ற ஆசை நிறைவேற முடியாத ஒன்று அல்ல. நிர்மலமான மனதுடன் வாழ்வை இன்பமாக கழிக்கும் குழந்தையின் மனதை போல் நம் மனதை மாற்ற நாம் அறிந்துகொள்ளவேண்டிய கருத்துக்களை இந்த பாடம் விளக்குகிறது.

அறிந்தும் அறியாமலும்

பிறந்தது முதல் தொடர்ந்து ஐம்புலன்கள் வழியே தகவல்களை சேகரித்து அவற்றை அறிவாக மனதில் பதியவைத்துக்கொள்கிறோம். தற்போதைய கல்வித்திட்டம் மற்றும் சமூக சூழ்நிலைகள் இதுபோன்ற அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர ஐம்புலன்களை உபயோகித்து அறிவை பெறுபவன் யார் என்ற அறிவை பெற நமக்கு உதவுவதில்லை.

குழந்தையின் மகிழ்வுக்கும் அமைதிக்கும் அறியாமைதான் அடிப்படை. அறியாமை முழுமையான அறிவாக மாறினால் நம்மால் வளர்ந்தபின்னும் குழந்தையைப்போல் எவ்விதபிரச்சனைகளும் இல்லாமல் வாழ்வை இனிமையாக கழிக்க முடியும். நான் யார், கடவுள் யார், எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு என்பது போன்ற கேள்விகளின் சரியான பதில்களை தெளிவாக அறிந்து கொண்டால் நம் அரைகுறை அறிவை முழுமையான அறிவாக மாற்றிக்கொள்ளலாம். உலகத்தை ஒரு சித்திரத்திற்கு ஒப்பிட்டு வித்யாரண்ய சுவாமிகள் இந்த அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை கொடுக்கிறார்.

உலகம் ஒரு வரைபடம்

கஞ்சி போட்டு நேர்செய்யப்பட்ட வெள்ளை துணியில் வண்ணக்கலவைகள் மூலம் மலை, ஆறு, மரம், செடி,கொடிகள் மற்றும் ஒரு சில மனிதர்கள் சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை உலகத்துடன் ஒப்பிடலாம். வெள்ளைத்துணியாகிய பரமனை மாயா சக்தியாகிய கஞ்சி படைப்புக்கு ஆதாரமாக மாற்றுகிறது. பஞ்சபூதங்கள் என்னும் வண்ணக்கலவைகளைக்கொண்டு சித்திரத்தை உருவாக்க முதலில் மெல்லிய கறுப்புக்கோட்டினால் மலை ஆறு போன்றவற்றின் எல்லைகளை வரைவது போல நுண்ணிய உடல்களை உருவாக்கி பின் இந்த உலகம் உருவாக்கப்பட்டது.    

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

எப்படி வாழவேண்டும் என்ற கேள்விக்கு சரியான பதிலை அறிய முதலில் எதற்காக வாழ்கிறோம் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.

துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வது மட்டுமே மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களின் ஒரே நோக்கம். உலகம் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்ற முழுமையான அறிவைப்பெறாமல் வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிடையே வெள்ளத்தில் சிக்கிய ஓடம்போல் அலைகளிக்கப்பட்டு இளைஞர்களைப்பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் முதியவர்களாகத்தான் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறோம். உலகச்சூழல் எப்படியிருந்தாலும் எப்பொழுதும் துன்பம் கலவாமல் வாழ தேவையான அறிவை பெற்றுவிட்டால் அதன்பின் எப்படி வாழவேண்டும் என்ற கேள்வியே மறைந்துவிடும். இப்படித்தான் வாழவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் எதற்கும் கட்டுப்படாமல் ஒரு குழந்தையைப்போல் மகிழ்வான வாழ்வை மரணம்வரை அனுபவிக்கலாம்.

படைப்பின் காரணம் என்ன?

வெள்ளைத்துணியை யாரும் வீட்டில் அலங்காரமாக சுவற்றில் மாட்டுவதில்லை. அந்த வெள்ளைத்துணிமேல் நேர்த்தியான படம் வரைந்தபின்தான் அதன் மதிப்பு கூடுகிறது. அதுபோல பரமன் சுவாரசியமற்ற ஒன்று. ஒன்றான பரமன் மலை, ஆறு மற்றும் பல்வேறுபட்ட உயிரினங்களாக காட்சியளிக்கும் இவ்வுலகமாக உருவான காரணத்தால்தான் என்றும் இன்பமாக வாழ உடல், இடம், காலம் ஆகிய மூன்றும் நமக்கு கிடைத்துள்ளது.

எதையும் அறியாமல் ஆனந்தமாக உறங்கும் உறக்கத்தில் சுவாரசியமில்லாததால் ஒரு கனவுலகத்தை உருவாக்கி அதில் ஒரு உடலுக்குள் புகுந்து சிலநேரம் வாழ்வது போல பரமனாகிய நான் எனது சுயஉருவான ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு வரையருக்கப்பட்ட உடல், இடம் மற்றும் காலகட்டத்தை என் மாயா சக்தியால் உண்டாக்கிக்கொண்டதன் விளைவுதான் இவ்வுலகம். எனவே நாம் இன்பமாக வாழத்தேவையான ஒரு இடத்தை கொடுப்பதுதான் படைப்பின் காரணம். பரமனால் எவ்வித அனுபவங்களையும் தரவோ பெறவோ முடியாது. அனைத்துவித அனுபவங்களையும் பெற்று துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வதற்காகவே  காட்சிப்பிழையான இந்தப்பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் யார்?

வெள்ளை துணியைக்காட்டி என்ன தெரிகின்றது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்ற பதில்தான் கிடைக்கும். அந்தத்துணியில் சித்திரம் வரையப்பட்டவுடன் அதே கேள்விக்கு மலை, நதி, மனிதர்கள் என பலவிடைகள் கிடைக்கும். சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிப்பது கிடையாது. அதுபோல் இவ்வுலகத்தின் இருப்புக்கு ஆதாரமான பரமனை யாரும் அறிவதில்லை. பரமனின் மாயா சக்தியால் அது உலகமாக மாறும்பொழுது அனைவரின் கவனத்தையும் அது கவருகிறது.  மாயையுடன் கூடிய பரமன்தான் கடவுள். கடவுள் இந்த பிரபஞ்சமாக நம் கண்முன்னே எப்பொழுதும் தெரிந்துகொண்டிருக்கிறான்.

பிரபஞ்சம் உருவானது எப்படி?

துணிச்சித்திரம் நான்கு கட்டங்களில் உருவாகும் விதத்தை ஆராய்வதன் மூலம் உலகத்தின் உண்மையான தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

முதல் கட்டம்: சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி. எவ்வித குணங்களோ உருவமோ இல்லாததால் நம் புலன்களுக்குத்தென்படாத பரமன்தான் படைப்புக்கு ஆதாரம். சித்திரத்தில் காட்டப்பட்ட கற்பனை பொருள்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதால் அவற்றின் ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிக்க மாட்டார்கள். அதுபோல தொடர்ந்து மாறும் உலகின் ஆதாரமான மாறாத பரமனின் இருப்பை யாரும் அறிவதில்லை. வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதில் வண்ணங்களால் சித்தரிக்கப்பட்ட மலை, மரம், செடி போன்றவை இருப்பது போல தோற்றமளிக்கும் கற்பனை பொருள்கள். பரமன் மட்டும்தான் உண்மை. இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை.  

இரண்டாம் கட்டம்:  வெள்ளைத்துணியுடன் கஞ்சி சேர்த்து அதை நேர்படுத்தி சித்திரம் வரைய தயார் செய்தல். பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. மாயா சக்தியுடன் கலந்த பரமன்தான் இறைவன். இறைவன் சர்வசக்திமான். ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்றுசெயல்களை செய்யவல்லவன். வானத்தை மேலேயும் பூமியை கீழேயும் வரையவேண்டும் என்றறிந்த ஓவியன் போல அனைத்தையும் அறிபவன் அவன். ஓவியன், கஞ்சி, வண்ணக்கலவைகள் போன்றவை  ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. ஆனால் பிரபஞ்சத்தின் உபாதான காரணம், நிமித்த காரணம் ஆகிய அனைத்தும் இறைவன் ஒருவனே.

மூன்றாம் கட்டம்: வண்ணங்களை பூச ஆரம்பிக்குமுன் வரைபடத்தில் வரையப்பட வேண்டிய பொருள்களின் எல்லைக்கோடுகளை வரைதல். வெள்ளைத்துணியில் தெளிவாகத்தெரியும் இந்த கறுப்புகோடுகள் சித்திரம் வரைந்து முடித்தவுடன் பார்வையிலிருந்து மறைந்துவிடும். எவ்வளவு தூரம் என்ன வண்ணங்களை வரைய வேண்டுமென்று வரையருக்கும் இந்தகோடுகளைப்போல உலகில் வெவ்வேறு பொருள்களை வடிவமைக்க உதவியாக இவ்வுலகம் முதலில் நுண்ணிய வடிவில் தோன்றும். இந்த நுண்ணிய உலகம் பரிணாம வளர்ச்சி பெற்று பருவுலகமாகும்.

நான்காம் கட்டம்: சரியான வண்ணக்கலவைகளை எல்லைக்கோட்டிற்குள் பூசுதல். வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் கலவையால் நிரப்பி நுண்ணிய பொருளுக்கேற்ற பருவுடலாக நாம் பார்த்து அனுபவிக்கும் இவ்வுலகம் தோற்றுவிக்கப்பட்டது. ஓவியனின் கையில் உள்ள தூரிகையில் உள்ள நிறத்தை நீலம் என்று கண்டுகொள்பவர்கள் அதே நிறத்தை சித்திரத்தில் பார்க்கும்பொழுது வானம் அல்லது ஆறு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆடு, மாடு, கல், மரம் என்று பொருள்களின் வடிவத்தை மட்டும் பார்த்து அவற்றை அடையாளம் காட்டுபவர்கள் அவற்றின் மூலப்பொருள்களான பஞ்சபூதங்களை காண்பதில்லை.

ஆறு மற்றும் சாக்கடை ஆகிய இரண்டும் ஒரே நிற வண்ணக்கலவையால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஆறு அழகாக இருக்கிறதென்றும் சாக்கடை அருவருப்பைத்தருவதாகவும் பார்ப்பவர்கள் முடிவுசெய்வதிலிருந்து இல்லாத பொருள்களுக்கு அவர்கள் உண்மைத்துவம் கொடுப்பது தெளிவாகிறது. அதே போல் ஒரே பஞ்சபூதக்கலவையால் உண்டாக்கப்பட்டவர்களென்றாலும் ஒருவரை நல்லவரென்றும் மற்றவரை கெட்டவரென்றும் பிரிப்பதற்கு அறியாமைதான் காரணம். வண்ணக்கலவைகளைத்தவிர வெள்ளைத்துணியின் மேல் வேறொன்றும் இல்லை. அதுபோல பஞ்சபூதங்களின் கலவைகளைத்தவிர இப்பிரபஞ்சத்தில் வேறொன்றுமில்லை. மேலோட்டமாக ஆறு, மலை என்று சித்திரத்தில் உள்ள பொருள்களை குறிப்பிட்டாலும் அவையனைத்தும் வண்ணக்கலவைகளால் வரையப்பட்டவைகளே தவிர உண்மையான ஆறோ, மலையோ அல்ல என்ற அறிவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் உலகத்தில் உள்ள பொருள்களை பஞ்சபூதங்களின் கலவையாலான மாயை என்று உணராமல் அவையனைத்தையும் உண்மையான பொருட்கள் என்று பெரும்பாலோர் நம்பிக்கொண்டிருப்பதற்கு அவர்களின் அறியாமையே காரணம். உலகம் என்பது நமது கற்பனையே தவிர உண்மையான இருக்கும் பொருளல்ல. உண்மையில் உள்ளது பரமன் மட்டுமே.

கற்சிலைக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

இந்தக்கேள்விக்கு சரியான விடை ஒன்றுமில்லை என்பதுதான். சித்திரத்தில் இருக்கும் மனிதனும் கற்சிலையும் துணிமேல் வரையப்பட்ட வண்ணக்கலவைகள் என்ற அடிப்படையில் எவ்விதவேறுபாடுமற்றவை. அதுபோல இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்து பொருட்களும் பஞ்சபூதங்களின் கலவையால் மட்டுமே உருவாக்கப்பட்டன என்ற நோக்கில் பார்க்கும்பொழுது அவற்றை உயிருள்ளவை மற்றும் ஜடப்பொருள்கள் எனப்பிரிக்கமுடியாது. எனவே கற்சிலைக்கும் மனிதனுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை.

சித்திரத்தில் வரையப்பட்ட மனிதன் உடுத்தியிருக்கும் வேட்டி சட்டை எவ்வித வண்ணங்களும் பூசப்படாத வெள்ளைத்துணிதான் என்றாலும் அவற்றை வேட்டி, சட்டை என்று சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியிலிருந்து வேறுபடுத்தி பார்க்கிறார்கள். படைப்பிற்கு ஆதாரமான பரமன்தான் பஞ்சபூதக்கலவையான மனிதனின் உடலை உயிற்பிக்கிறான். வெள்ளைத்துணியை பார்ப்பதற்குபதில் வேட்டியை பார்ப்பதுபோல் பரமனை பார்ப்பதற்குபதில் மனிதனை பார்க்கிறோம்.

துணியை தொடும் போட்டியில் வெல்ல சித்திரத்தின் எந்தப்பகுதியை தொட்டாலும்  போதும் என்பதை அறியாமல் மலை ஆறு ஆகியவற்றை கடந்து மனிதனைத்தேடி அவன் அணிந்துள்ள வேட்டியை தொடுவது போல எங்கும் நிறைந்திருக்கும் பரமனை அடையாளம் கண்டுகொள்ளாமல் உயிருடன் கூடியவற்றின் உணர்வு மட்டும்தான் பரமன் என்று நினைப்பதும் அறியாமை.

சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதை எடுத்து நாம் உடுத்திக்கொள்ளலாம். அதில் வரையப்பட்ட வேட்டி சட்டைகள் எதற்கும் பயன்படாத கற்பனைத்தோற்றங்கள். இருக்கும் ஒரே துணியை கவனிக்காமல் இல்லாத பல துணிகளை கற்பனைசெய்துகொண்டு அவை வெள்ளைத்துணியிலிருந்து வேறுபட்டவை என்றும் சட்டை வேட்டியிலிருந்து வேறுபட்டது என்றும் மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பது பரமன் மட்டும்தான். அனைத்து உயிரினங்ளுக்குமட்டுமில்லாமல் ஜடப்பொருள்களுக்கும் ஆதாரமானவன் பரமன் மட்டுமே. பரமனைத்தொடும் போட்டியில் இவ்வுண்மைகளை அறியாதவன் ஒன்றும் செய்யாமல் பரமன் எங்கே என்று யோசித்துக்கொண்டிருப்பான். அனைத்தையும் அறிந்தவனும் ஒன்றும் செய்யாமல் பரமனாகவேயிருப்பான்.

எனக்கும் பரமனுக்கும் என்ன உறவு?

நான் பரமன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் முக்தியடைந்துவிட மாட்டோம். தண்ணீரில் பிரதிபலிக்கும் ஆகாயத்தை உதாரணமாக கொண்டு மனிதனுக்கும் பரமனுக்கும் உள்ள உறவை வித்யாரண்ய சுவாமிகள் விளக்குகிறார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் இடமளிக்கும் வெளி என்கிற ஆகாயத்தைப்போல் அனைத்துக்கும் ஆதாரமாயிருப்பவன் பரமன். இரண்டும் அளவுக்கு உட்படாதவை. புதியபொருளொன்றுக்கு இடம் கொடுப்பதால் ஆகாயத்தின் அளவு குறைந்துவிடாது. பிரபஞ்சம் இருந்தாலும் அழிந்தாலும் பரமன் எவ்விதமாற்றமும் அடைவதில்லை. அனைத்தையும் தன்னுள் அடக்கிய  ஆகாயம் எதனாலும் கட்டுப்படுத்தபடுவதில்லை. பிரபஞ்சத்தின் மாற்றம் பரமனை பாதிப்பதில்லை. எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது ஆகாயம். ஆகாயம் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் இருப்பும் பரமனைச்சார்ந்தது. ஆகாயம் போல் பரமன் எவ்வித பகுதிகள் அல்லது பாகங்கள் இல்லாதவன்.

இவ்விரண்டினிடையே மூன்று வேற்றுமைகள் உள்ளன. ஆகாயம் சப்தம் என்ற ஓரு குணத்துடன் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் பரமன் தோற்றம்-மறைவு என்ற சுழற்சிக்கு உட்படாமல் என்றும் இருப்பவன். ஆகாயம் உணர்வற்ற ஜடப்பொருள். பரமன் என்றும் இருக்கும் ஆனந்தமயமான உணர்வு. ஆகாயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் பலபொருள்கள் உள்ளன. பரமன் இரண்டற்ற ஒருவன்.

நமது பருவுடலை ஒரு பானைக்கு ஒப்பிடலாம். இரண்டும் பஞ்சபூதங்களால் செய்யப்பட்ட ஜடப்பொருள்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சுழற்சிக்கும் காலம், இடம், பொருள் ஆகிய மூன்று கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவை. நாம் இவ்விரண்டிலிருந்தும் வேறுபட்டவர்கள். பானை தண்ணீர் சேமிக்க உபயோகப்படுவதுபோல் அனுபவங்களைப்பெற உடல் பயன்படுகிறது.

பானையில் உள்ள தண்ணீரை நம் மனம் என்னும் நுண்ணிய உடலுக்கு ஒப்பிடலாம். தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலிப்பதுபோல மனம் பரமனை பிரதிபலிக்கிறது. ஜடப்பொருள்களான இவ்விரண்டும் அளவுக்கு உட்பட்டவை. அளவுகடந்த ஆகாயத்தை பிரதிபலிப்பதால் தண்ணீர் அதிக ஆழம் உள்ளதாக தோற்றமளிக்கிறது. பரமனை பிரதிபலிப்பதால் மனம் உணர்வுடன் கூடியதாக காட்சியளிக்கிறது. நான் பரமன். பிரதிபிம்பம் அல்ல.

நான் யார்?

தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலித்து  அளவுக்குட்பட்ட பானையிடமிருந்து நமது கவனத்தை திசைதிருப்புகிறது. உணர்வுள்ள பரமனை பிரதிபலித்து மனம் நம் உடலுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுப்பதால் நாம் பரமனை அறிவதில்லை.

நான் என்பதன் உண்மைப்பொருள் பானைக்குள் இருக்கும் இடைவெளி. பானைக்குள் இருக்கும் வெளி பானைக்கு வெளியே இருக்கும் வெளியிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. பானையே ஆகாயத்திற்குள் இருப்பதால் பானை உடைந்தபின் அதனுள் இருந்த ஆகாயம் வெளியே இருக்கும் ஆகாயத்துடன் கலந்து ஆகாயத்தின் அளவு அதிகமாகிவிடாது. பானையை இங்கும் அங்கும் எடுத்துச்செல்லும்பொழுது அதனுள் இருக்கும் இடைவெளி அசைவதில்லை. உண்மையில் ஆகாயத்தினுள் இருக்கும் பானை இங்குமங்கும் நகர்த்தப்படுவதால் ஆகாயம் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட உடலுக்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக தோற்றமளிக்கும் நான் உண்மையில் எவ்வித மாற்றமுமில்லாத பரமன். பானைக்கு வெளியே இருக்கும் ஆகாயத்தை நாம் எவ்விதத்திலும் பயன்படுத்தமுடியாது. ஆனால் பானைக்குள் இருக்கும் வெளியை தண்ணீர் வைக்கபயன்படுத்தலாம். அதுபோல பரமன் எவ்வித செயலையும் செய்ய இயலாதவன். ஆனால் பரமனாகிய நான் இவ்வுடலுக்குள் இருக்கும்வரை என் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி ஐம்புலன்கள் மூலம் உலகை உணர்ந்து என் இயல்பான ஆனந்தத்தை என் மனம் மூலம் அனுபவிக்கலாம். பானை மற்றும் அதிலுள்ள தண்ணீர் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானது ஆகாயம். அதுபோல என் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானவன் நான் என்கிற பரமன்.

எங்குமிருக்கும் ஆகாயம் பானைக்கு இடம் கொடுத்து அதற்குள்ளும் வெளியேயும் வியாபித்திருக்கிறது. பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்து அதன் தொடக்கத்திற்கும் மறைவிற்கும் சாட்சியாக இருக்கும் பரமன்தான் என் உடலுக்குள்ளும் இருப்பவன்.

பானை ஆகாயத்தின் ஒரு சிறிய பகுதியை ஆக்ரமித்து அளவுக்குட்பட்ட கொள்ளளவை உபயோகபடுத்த உதவுகிறது. என் உடல் பரமனை அரவணைத்து ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனும் பெயருடனும் இவ்வுலகில் இயங்க எனக்கு உதவுகிறது. தண்ணீர் வைக்க பானை பயன்படுவதுபோல நம் நுண்ணிய உடல் இயங்க பருவுடல் ஒரு வாகனமாக பயன்படுகிறது.

நான் யார் அல்ல?

பானையால் ஆகாயத்தை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தமுடியாது. ஆனால் ஒரு சிறு இடைவெளியை வளைத்துப்போட்டு ஆகாயத்தை கட்டுபடுத்துவதுபோன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. அதுபோல என் உடல் என்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நான் என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன். ஆனாலும் என் உடல் என்னை ஒரு உருவத்திற்குள் அடைத்து தோற்றம், மாற்றம் மற்றும் மறைவுக்கு உட்பட்டவனாக என்னை காட்டுகிறது. கனவு முடிந்தாலும் நான் தொடர்ந்து இருப்பதுபோல மரணமடைந்தாலும் நான் தொடர்ந்து இருப்பேன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. பானைக்குள் இருக்கும் இடைவெளிதான் நான் என்பதை உணராமல் தண்ணீரில் தோன்றும் ஆகாயத்தின் பிரதிபிம்பத்தை நான் என்று நினைத்துக்கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

பானையின் குறைந்த கொள்ளளவை நம் கண்களுக்கு மறைத்து மேலேயுள்ள மேகம், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளடங்கிய பரந்த ஆகாயத்ததை பானைக்குள் இருப்பதுபோல் காட்டுவது தண்ணீரின் செயல். இதனால் பானைக்குள் உள்ள வெற்றிடத்தை கவனிப்பதில்லை. அதுபோல் நம் மனமானது பரமனைபிரதிபலித்து நான்தான் பரமன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. உணர்வு மயமான பரமனை பிரதிபலிப்பதால் மனம் தன்னை ஒரு உயிருள்ள பொருளாக காட்டிக்கொள்கிறது. பானையினுள் சந்திரனும் சூரியனும் இருக்கமுடியாது. அது போல ஜடப்பொருளான மனம்  உணர்வுக்கு சொந்தம் கொண்டாட முடியாது.

இதையறியாமல் பரமனின் பிரதிபலிப்பாக மனதில் தோன்றும் அகம்பாவத்தை நான் என்ற சொல்லுக்கு பொருளாக நினைத்து உடலின் பொருள், இடம், காலம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டவர்களாக நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறோம். பானையின் உள்ளே இருக்கும் ஆகாயம் வெளியேயிருக்கும் ஆகாயத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. பானை ஆகாயத்தைகட்டுப்படுத்தும் சக்தியற்றது. அதுபோல நம் உடலுக்கு ஆதாரமாயிருக்கும் பரமனை உடலின் இருப்பும் இல்லாமையும் எவ்விதத்திலும் பாதிக்காது. மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பு நான் அல்ல. எல்லாப்பொருள்களுக்கும் ஆதாரமான பரமன் நான்.

மாறாத ஆகாயம் சூரியன், சந்திரன், பானை, தண்ணீர் மற்றும் அதில் தெரியும் பிம்பங்கள் ஆகிய அனைத்துக்கும் ஆதாரம். அதுபோல உடல் மனம் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதாரமான நான் மனதில் தெரியும் பரமனின் பிம்பம் நான் அல்ல.

நான் யார் என்று புரியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

பொதுவாக குழந்தைகள் செய்யும் தவறுகளை பெரியவர்கள் திருத்திவிடுவதால் பிறக்கும்பொழுது இருந்த அறியாமை வளர்ந்தவுடன் பெரும்பாலும் நீங்கிவிடும். ஆனால் எப்பொழுதும் உடலும் மனமும் நம்முடன் இருப்பதால் அவைதான் நாம் என்ற நமது தவறான அறிவை திருத்தும் தகுதியுள்ளவர்கள் அதிகமில்லாத காரணத்தால் பலருக்கு இந்த அறியாமை மட்டும் மரணம் வரை தொடர்கிறது. எப்பொழுதாவது உடலும் மனமும் நாம் அல்ல என்றும் அவை நம்முடையவை என்று யாரேனும் சுட்டிக்காட்டினால் சிறுது ஆலோசனைக்குப்பிறகு மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பை நான் என்று நினைத்துக்கொள்கிறோம். நீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பும் நிலவும் ஒன்றுபோல் இருப்பதால் பானைக்குள் நிலவைப்பார்க்கிறேன் என்று ஒருவன் கூறினால் சிறிய பானைக்குள் எப்படி பெரிய நிலவு நுழையும் என்று யாரும் அவனுக்கு மறுப்பு சொல்வதில்லை. உண்மையில் அவன் பார்ப்பது நிலவின் பிரதிபிம்பத்தை என்றும் நிலவைப்பார்க்க நிமிர்ந்து வானத்தைப்பார்க்க வேண்டும் என்றும் யாரும் சொல்லித்தருவதில்லை.  அதுபோல எனக்கு உணர்வு இருப்பதால் நான் உயிரோடு இருக்கும் மனிதன் என்ற நினைப்பு தவறு என்றும் என் உணர்வு என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பது பரமனின் பிரதிபிம்பம் என்றும் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. பிரதிபிம்பத்தை ஒதுக்கிவிட்டு அதற்கு சொந்தக்காரனான பரமன் நான் என்ற அறிவைப்பெற  தகுந்த ஆசிரியரின் உதவி வேண்டும். நிலவு பானைக்குள்தான் இருக்கிறது என்று பிடிவாதம் பிடிப்பதைப்போல என் மனம் உணர்வுடன் கூடியது என்ற தவறான அறிவில் உறுதியாக இருப்பதால் நாம் ஆசிரியரின் துணையை நாடுவதில்லை. எனவே நான் யார் என்ற சரியான அறிவு ஏற்படுவதில்லை.

மேலும் உண்மையான ஆகாயமும் பிரதிபலிக்கும் ஆகாயமும் பானைக்குள் ஒரே இடத்தில் இருப்பதால் உண்மையை விட்டுவிட்டு பிரதிபலிக்கும் ஆகாயத்தில் மட்டும் கவனம் செல்லும். அது போல மனம் என்னும் ஒரே இடத்தில் இருந்து பரமனும் அதன் பிரதிபிம்பமும் செயல்படுவதால் நான் பரமன் என்று உணர்வதில்லை. சித்திரமும் அது வரையப்பட்ட வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் அனைவரும் வண்ண வண்ண பொருள்களால் கவரப்பட்டு வெள்ளைத்துணியை கவனிப்பதில்லை. அனைத்துக்கும் ஆதாரமான பரமனின் இருப்பை உலகத்தில் உள்ள பொருள்களை பார்த்து நம்மை அறியவிடாமல் அவை நம் கவனத்தை கவருவதால் நம் அறியாமை தொடர்கிறது.

துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் என்ன?

நான் யார் என்பதில் ஒரு தெளிவு ஏற்படாததுதான் நம் அனைத்து துன்பங்களுக்கும் காரணம். ‘நான் பரமன் என்று தெளிவாக புரிந்துவிட்டது. ஆனால் பணகஷ்டம் குறையவில்லையே..’ என்றால் தான் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம். சித்திரத்தில் வரையப்பட்ட மனிதனின் கசங்கிய அழுக்கு வேட்டியும் வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் ஒன்றின் தன்மையை மற்றதன்மேல் ஏற்றிவைத்து சலவை செய்த வெள்ளை துணியை கவனிக்காமல் கசங்கிய அழுக்கு வேட்டியை பார்ப்பது போல உலகத்தின் மாறுதல்களை பரமன் மேல் ஏற்றிவைத்து எனக்கு பணகஷ்டம் என்று தவறாக முடிவு செய்கிறோம்.

பொய் எப்பொழுதும் உண்மையை விட கவர்ச்சியானது. பானைக்குள் இருக்கும் வெற்றிடத்தை விட நிலவு, நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தின் பிரதிபிம்பம் அழகாகத்தெரிவது போல பரமனின் பிரதிபிம்பம் பரமனை நம்மிடமிருந்து மறைத்துவிடுகிறது. புதியதாக தோன்றும் எந்த பொருளும் பழையதாக மாறும். மாறாமல் இருக்கும் பரமன் என்றும் புதியதாக இருப்பதை நாம் கவனிப்பதில்லை.

நீரில் தெரியும் ஆகாயத்தின் அளவைப்பார்த்து பானையின் கொள்ளளவை தீர்மானித்தால் ஏமாற்றமடைவோம். அதுபோல ஜடமான மனதை உணர்வுடன் கூடியதாக நினைத்து பல சாதனைகளை செய்ய முயல்கிறோம். உண்மையில் நான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவன் என்பதை மறந்து அற்பமான உடலையும் மனதையும் சக்தியுடன் கூடியதாக நினைத்து ஏமாறுகிறோம்.

பானையை நகர்த்தினால் உள்ளிருக்கும் ஆகாயம் நகருகிறது என்று தவறாக நினைப்பதுபோல ஆகாய விமானத்திலேறி அமெரிக்கா சென்றால் நான் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாக நம்புகிறோம். நான் எங்குமிருப்பவன். ஒரு சமயத்தில் ஒரு இடத்தில்தான் பானை இருக்கும். ஆகாயம் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருக்கும். நான் அதுபோல இடம், காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பதை மறந்து கண்ணை திறந்து மூடுவதற்குள் நினைத்த இடத்திற்கு போகவேண்டும் என்று முயற்சி செய்து தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம்.  

பானை உடைந்தால் ஆகாயம் மறைந்துவிடாது. அதுதெரியாமல் மரணமடைந்தால் நான் மறைந்துவிடுவேன் என்று பயப்படுவதுதான் நம் துன்பத்திற்கு காரணம்.

கடவுள் எப்படிப்பட்டவன்?

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் பருவுடல்கள் உட்பட்ட அனைத்து ஜடப்பொருள்களின் தொகுப்பு கடவுளின் பருவுடல். உயிரினங்களின் நுண்ணிய உடல்கள் மற்றும் காரண உடல்களின் சேர்க்கை கடவுளின் நுண்ணிய மற்றும் காரண உடலாகும். எனவே நான் வேறு கடவுள் வேறு அல்ல. நான் மட்டும் கடவுள் அல்ல. நானும் கடவுள். அவனும் கடவுள். அதுவும் கடவுள். எல்லாம் கடவுள். கடவுளைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் எதுவுமில்லை.

பல்வேறு செல்கள் ஒன்றாக செயல்படுவதால் நம் உடல் இயங்குவது போல பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அணுக்கூட்டங்களின் மொத்த செயல்பாடுதான் இறைவனின் இயக்கம். செல்களின் வாழ்நாள் மிகவும் குறைவு. தற்பொழுது நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒருசிலவருடங்களுக்குள் மடிந்துவிடும் என்றாலும் நாம் மடிவதில்லை. அதுபோல அனைத்து உயிரினங்களும் மடிந்தாலும் கடவுள் மறைவதில்லை. செல்களுக்கு அப்பாற்பட்டு என் உடல் இல்லை. மேலும் எந்த செல்லும் என் உடலுக்கு வெளியே இல்லை. அதுபோல பிரபஞ்சத்திற்கு வெளியே கடவுள் இல்லை. கடவுள் இல்லாமல் எதுவும் இல்லை.

கடவுளின் தன்மைகள் யாவை?

கடந்துஉள்ளிருப்பவன் (Omniprevelant): சித்திரத்தில் உள்ள அனைத்தையும் கடந்து அதே சமயத்தில் அனைத்துக்குள்ளும் இருப்பவன் கடவுள்.

அனைத்தையும் அறிபவன் (Omniscient): எந்த பொருளை எப்படி வரையலாம் என்பதை போன்ற அனைத்து அறிவையும் உடைய சித்திரக்காரன் இறைவன்.

சர்வசக்தியுடையவன் (Omnipotent): பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் ஆளவும் சக்தி கொண்டவன் ஆண்டவன்.

எங்கும் நிறைந்திருப்பவன் (Omnipresent): பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் எல்லாக்காலங்களிலும் எல்லாப்பொருள்களிலும் நிறைந்து இருப்பது தெய்வம்.

வயது, உயரம், அறிவு போன்ற தன்மைகள் நமது உடலையும் மனதையும் சேர்ந்தவை. அதுபோல மேலே விளக்கப்பட்ட நான்கு தன்மைகளும் கடவுளின் உடலான பிரபஞ்சத்தை சேர்ந்தவை. பிரபஞ்சம் அழிக்கப்பட்டபின் கடவுள் காரண உருவில் ஒடுங்கிய நிலையில் பரமனின் மாயாசக்தியாக தொடர்ந்து இருப்பான்.

எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு?

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நமக்கும் நம் உடலின் பாகங்களுக்கும் உள்ள உறவைப்போன்றது. கால்கள் நடப்பதால் நாம் நகருகிறோமா அல்லது நாம் நகர கால்களை நடக்கவைக்கிறோமா என்று கேட்டால் கால்கள் தானாக நடப்பதில்லை என்றும் அவற்றை நாம்தான் செயல்படுத்துகிறோம் என்றும் பதில் அளிப்போம். அதுபோல நாம் தானாக எதையும் செய்வதில்லை. கடவுள்தான் நம் அனைத்து இயக்கத்திற்கும் காரணம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாப்பொருள்கள் அனைத்தையும் ஆட்டுவிப்பது ஆண்டவன் மட்டுமே. சூரியன், சந்திரன் போன்ற ஜடப்பொருள்களை மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களையும் ஆளுபவன் ஆண்டவன்தான். நமது மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படுவதுபோல இந்த பிரபஞ்சம் முழுவதையும் செயல்படுத்துபவன்  இறைவன்.

கடவுளுக்கும் எனக்கும் உள்ள உறவை சரியாக புரிந்துகொண்டால் எனக்கு சுயமாக செயல்படும் திறன் உள்ளதா அல்லது அனைத்தும் கடவுள் செயலா என்ற கேள்வி மனதில் எழாது. ஒரு வணிக நிறுவனத்தின் அலுவல்களை செய்ய பல கணிணிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்று வரவு செலவு கணக்கையும் மற்றது சரக்குகளின் போக்குவரத்தையும் பதிவுசெய்யும். ஒவ்வொரு கணிணியிலும் அதற்கு தேவையான தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது போல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரனங்களின் மனதிலும் அவற்றின் செயல்பாட்டிற்கு தேவையான விருப்பு வெறுப்புகள் மற்றும் அறிவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் அவை செயல்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் ஒவ்வொரு உயிரனத்தின் செயல்பாடுகளும் அடங்கும்.

என் மனதில் தோன்றியதை நான் செய்தேன் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஏன் அந்த எண்ணம் தோன்றியது என்பதை ஆராய்ந்தால் நாம் நம் சுய புத்தியை உபயோகித்து செய்யும் செயல் கூட கடவுளின் செயல்பாடுதான் என்பது தெரியவரும். உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் அவரவர் மனதில் உள்ள விருப்பு, வெறுப்பு, அறிவு ஆகியவற்றிற்கேற்ப செயல்படும் சிறைக்கைதிகள்தான்.

ஜனநாயக அமைப்பில் அனைத்து அதிகாரங்களுடன் ஆட்சி செய்வது பிரதம மந்திரி. உலக அரங்கில் அவர் தன் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதி. அதுபோல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஆள்வது ஆண்டவன். 

பிரதம மந்திரியால் அரசாங்கத்தின் மற்ற அலுவலர்களின் துணையில்லாமல் செயல்பட முடியாது. அதுபோல கடவுளால் மக்களின் துணையின்றி செயல்பட முடியாது. பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்ட மற்ற மந்திரிகள் நிதி, வெளியுறவு, உள்ளாட்சி என பல துறைகளில் செயல்பட்டாலும் அனைவரது செயல்களுக்கும் பிரதமமந்திரி மட்டுமே பொறுப்பு. அதுபோல அனைத்து மக்களது செயல்களுக்கும் கடவுள் மட்டுமே பொறுப்பு. கடவுளின் சக்தி என்பது அனைத்து உயிரினங்களின் சக்தியின் கூட்டுத்தொகையாகும். ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளேயிருந்து செயல்களை செய்வது கடவுள்தான் என்பதால் நான் வேறு கடவுள் வேறு அல்ல.

கடவுள் என்பவர் பிரபஞ்சமாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். நான் என் உடலாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். உண்மையில் இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயாசக்தி பிரபஞ்சமாக காட்சியளிப்பது நம் இன்பத்திற்காக.

ஊசிபட்டாசுசரம் வெடிப்பதைப்பார்த்து ஆனந்தமடையும் சிறுவர்கள் வெடிப்பது ஒரே வெடியா அல்லது சரமாக கோர்க்கப்பட்ட தனிப்பட்ட வெடிகளா என்று ஆராய்வதில்லை. தனிப்பட்ட வெடிகளை நீக்கிவிட்டால் ஊசிபட்டாசு மறைந்து விடும். அனைத்து உயிரனங்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தை நீக்கிவிட்டால் இறைவன் ஒடுங்கிவிடுவான். எனவே என் செயலா இறைவன் செயலா என்று கேள்வி அனாவசியம். இரண்டும் ஒன்றுதான்.

வீட்டில் வெண்ணைமட்டுமிருக்கும்பொழுது யாரேனும் நெய்யிருக்கிறதா என்று கேட்டால் நம் பதில் சந்தர்ப்பத்தை பொறுத்து மாறும். நெய் வெண்ணைக்கு அப்பாற்பட்ட பொருள் இல்லை. இருந்தாலும் நெய் மற்றும் வெண்ணை என்று இரு பெயர்கள் இருப்பது போல என் செயல்கள் கடவுளின் செயல்களில் அடக்கம் என்றாலும் செயல்கள் செய்வது நான் என்றும் பலன்களை கொடுப்பது கடவுள் என்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் பாகுபாடு செய்வது வழக்கில் உள்ளது.

அனைத்துசெயல்களையும் இறைவனின் ஆணைப்படி நான் செய்கிறேன் என்றும் செயல்களின் பலன்களை கொடுப்பது இறைவனின் கருணையென்றும் கூறுவது வேதத்தின் ஆரம்பப்பாடம். வேதம் படித்து நான் எந்த செயலையும் செய்ய இயலாத பரமன் என்பது புரிந்தவுடன் செயல் செய்வது இறைவனா அல்லது நானா என்ற கேள்வி மறைந்துவிடும்.

நீர் அலைகளாகவும் கடலாகவும் காட்சியளிப்பது போல பரமன் பல்வேறு உயிரினங்களாகவும் கடவுளாகவும் காட்சியளிக்கிறான்.  

முடிவுரை :

நான் பரமன் என்பது புரிந்து விட்டால் நம் உடல் மற்றும் மனதின் செயல்களை என் செயல்கள் என்று சொந்தம் கொண்டாட மாட்டோம். நடப்பது நடராஜனின் நடனம். உடலும் மனமும் என்வசம் இருக்கும்வரை அந்த நாட்டியத்தில் பங்கு பெற வாய்ப்புகிடைத்தது குறித்த மகிழ்வுடன் மற்றவர்களுக்கு அந்த மகிழ்வை பங்கிடும் நோக்குடன் நமது அனைத்து செயல்களும் அமையும். நம்மை நாடிவரும் வேலைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நம்மால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்வது என்கிற குழந்தையின் மனப்பக்குவும் நமக்கு வந்துவிடும்.

கடவுள் உள்ளிருந்து செயல்படும் சர்வசக்திமான் என்ற கருத்து நமது அனைத்து செயல்களுக்கும் கடவுள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான் என்பதை குறிக்கிறது. குழந்தை தன் செயல்களின் விளைவைப்பற்றி கவலைப்படாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் இருப்பது போல நம் செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஆண்டவனை அறிந்தவுடன் நாமும் எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்கலாம்.

குழந்தை தன் செயல்கள் எதையும் தவறு என்று கருதுவது கிடையாது. யாரேனும் தன்னை திட்டினாலும் அடித்தாலும் அதை விரைவில் மறந்துவிட்டு அவர்களுடன் எப்பொழுதும் போல் சாதாரணமாக பழகும். எதிர்காலத்தை பற்றிய கவலை அதற்கு சிறிதும் கிடையாது. இதை செய்ய வேண்டும், அதை செய்யக்கூடாது என்ற சட்டதிட்டங்கள் குழந்தையை கட்டுப்படுத்தாது. எதையும் சாதிக்க வேண்டிய கட்டாயம் குழந்தைக்கு கிடையாது. எனவே திட்டங்கள் தீட்டி தனக்குத்தானே சட்டங்கள் வகுத்து அடிமையாக வாழ அதற்கு அவசியம் கிடையாது.

வேதம் விதிக்கும் விதிகளும் முற்றுணர்ந்தோர்களை கட்டுப்படுத்தாது. எனவே அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை குழந்தையின் மனப்பாங்குடன் எதிர்கொண்டு இனிதே வாழ்வார்கள்.

பயிற்சிக்காக :

1. தற்போதைய மாணவர்கள் பள்ளியில் பயிலும் கல்வியின் தன்மை என்ன? அவர்களுக்கு அங்கு எதைப்பற்றி கற்றுக்கொடுக்கப்படுவதில்லை?
2. குழந்தைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு காரணம் என்ன? வளர்ந்தவர்கள் அதே போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருக்க என்ன செய்ய வேண்டும்?
3. வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?
4. பிரபஞ்சத்தின் படைப்புக்கு காரணம் என்ன?
5. நான்கு கட்டங்களாக பிரபஞ்சம் உருவான வகையை விளக்குக.
6. கடவுள் யார்?
7. கற்சிலைக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
8. சித்திரத்தில் துணியைத்தொடும் போட்டி என்ற விளக்கம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?
9. பரமனுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.
10. நான் யார் என்பதில் தெளிவு ஏற்படாமல் அறியாமையுடன் இருப்பதற்கு காரணம் என்ன?
11. நமது துன்பங்களுக்கு காரணம் என்ன?
12. கடவுள் எப்படிப்பட்டவன்?
13. கடவுளின் நான்கு தன்மைகள் யாவை?
14. கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன உறவு?

சுயசிந்தனைக்காக :

1. பரமனால் எவ்வித அனுபவங்களையும் பெற முடியாது என்றால் ஏன் உலகம் படைக்கப்பட்டுள்ளது?
2. நான் யார்?
3. கடவுள், இறைவன், ஆண்டவன் மற்றும் தெய்வம் என்ற நான்கு வார்த்தைகளின் பொருட்காரணத்தை ஆராய்க.