Wednesday, March 16, 2011

Lesson 151: Child-like does not mean childish (Brahmasutra 3.4.50)

பாடம் 151: குழந்தையை போல என்றால் குழந்தைத்தனம் அல்ல
பாடல் 475 (III.4.50)

ஞானி குழந்தையைப்போல எப்பொழுதும் இன்பமாக வாழ்வான் என்பதற்கு அவன் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் குழந்தைத்தனமாய் நடந்துகொள்வான் என்பது பொருள் அல்ல என்ற கருத்தை விளக்கி ஞானியின் பார்வையில் உலகம், ஏற்றத்தாழ்வுகளை இருந்தாலும் அவன் துன்பம் கலவா இன்பத்துடன் வாழும் விதம் என்பது போன்ற விளக்கங்களை இந்த பாடம் தருகிறது.

ஞானியின் பார்வையில் உலகம்

வானத்தில் உயரே பறந்துகொண்டிருக்கும் விமானம் அளவில் மிகப்பெரியது என்று அறிந்துகொண்டபின்னும் அது மிகச்சிறியதாகத்தான் கண்ணுக்குத்தெரியும். அணுக்கூட்டங்களின் தொடர்ந்த அதிர்வே திடப்பொருள்ளாக காட்சியளிக்கிறது என்ற அறிவியல் அறிவு ஏற்பட்டபின்கூட வாசல் வழியாகத்தான் வீட்டை விட்டு போகமுடியுமேதவிர சுவர்வழியே வெளியே போக முடியாது. சுவர் உண்மையில் ஒரு திடப்பொருள் இல்லை என்ற அறிவு நமது அனுபவத்தை மாற்றிவிடாது.

அதுபோல உலகே மாயை என்று தெரிந்தவுடன் இந்த உலகம் நம் கண்ணில் இருந்து மறைந்துவிடாது.  உலகம் உண்மை என்று எண்ணிக்கொண்டிருக்கும் மற்றவர்களைப்போலவே ஞானியும் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து எதிர்கொள்வான். முக்தியடைந்தபின் உலகம் சுவர்க்கமாக மாறிவிடாது.

திரைப்படத்தில் காட்டப்படும் நிகழ்வுகள் உண்மையல்ல என்று தெரிந்திருந்தாலும் பார்வையாளர்கள் சோககாட்சிகளில் கண்ணீர்சிந்துவதைப்போல நடப்பது நாடகம் என்று அறிந்திருந்தாலும் ஞானிகள் தங்கள் வாழ்வில் நடக்கும் சோக நிகழ்வுகளின் பொழுது அழுவதில் தவறில்லை. சாவுவீட்டில் அறியாபாலகன் சிரிப்பது போல ஞானி குழந்தைத்தனமாக ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற தத்துவத்தை பேசிக்கொண்டிருக்க மாட்டான். மற்றவர்களுடன் சேர்ந்து அவர்களது துன்பத்தில் பங்கேற்பான். ஞானி குழந்தைப்போல எப்பொழுதும் இன்பமாக இருப்பான் என்பதற்கு சாவு வீட்டில் சிரிப்பான் என்று பொருள்ளல்ல. சோகமான படத்தில் அழுதாலும் அது நல்ல படம் என்று இரசிப்பதுபோல சிரிப்பு அழுகை என மாறிமாறி வருவதுதான் வாழ்க்கையென அறிந்த ஞானி தான் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கேற்ப செயலாற்றி என்றும் இன்பமாக வாழ்வான்.

மற்றவர்கள் உண்மை என்று நினைக்கும் வாழ்வை மாயை என்று அறிந்த ஞானி முறையாக வேதம் படித்தால் மட்டுமே இந்த அறிவை பெற முடியும் என்றும் அறிந்திருப்பதால் தான் அறிந்த உண்மைகளை தன்னை குருவாக ஏற்று கேட்பவர்களைத்தவிர மற்றவர்களுக்கு எடுத்துகூறமாட்டான். அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவர்களில் ஒருவனாகவே வாழ்வான்.

அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிபவர் ஒரு பள்ளிச்சிறுவனுடன் அளவளாவ நேரிட்டால் தனது வேலையை பற்றி பேசாமல் பள்ளிப்பாடங்களைப்பற்றி பேசுவார். இதற்கு காரணம் சிறுவனுக்கு அலுவலக வேலை நுட்பங்கள் புரியாது என்று அவருக்கு தெரியும். அதேபோல் இரண்டு வயது சிறுமியுடன் விளையாடும் பெரியவர்கள் அவளது நிலைக்கு இறங்கிவந்து அவளின் பொம்மையை தனக்கு வேண்டுமென்று கேட்டு அவள் தராவிட்டால் சோகமாக முகத்தை வைத்துக் கொள்வார்கள். அதைபார்க்கும் சிறுமி அவர்கள் உண்மையிலேயே அழுகிறார்கள் என்று நினைத்தாலும் பெரியவர்களை பொறுத்தவரை அது வெறும் விளையாட்டு. ஆனால் பெரியவர்கள் சிறுமியிடம் நடித்து அவளை ஏமாற்றுகிறார்கள் என்று கூறமுடியாது. ஏனெனில் அதிக அறிவு உடையவர்கள் மற்றவர்களின் நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே அவர்களுடன் உறவாடமுடியும். வேலைக்காரனை திட்டுபவர் ஆசிரியரிடம் பணிவாக நடந்துகொள்வது நடிப்பல்ல. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செயலாற்றுவதுதான் வாழ்க்கை. ஞானி இந்த வழக்கத்திற்கு விதிவிலக்கல்ல. நான் பரமன் என்பதை உணர்ந்த ஞானி மற்றவர்களின் நிலைக்கு இறங்கிவந்து ஒரு சராசரி மனிதனாகவே வாழ்வான். எனவே சாவு வீட்டில் அவன் அழுவது நடிப்பல்ல.

மற்றவர்களைப்போல் ஞானியும் துக்க நிகழ்வுகளில் உண்மையான சோகத்துடன் இருப்பான் என்றால் ஞானத்தால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். கனவில் ஏற்படும் நிகழ்வுகளுக்கேற்றாற்போல் இன்பதுன்பங்களுக்கிடையே அலை பாயும் மனம் கனவிலிருந்து விழித்தவுடன் நிம்மதியடையும். கனவு காணும்பொழுதே காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் சோகநிகழ்வுகளின்பொழுது அழுதாலும் ஆழ்மனதில் இது வெறும் கனவுதான் என்ற நிம்மதியிருப்பதுபோல ஞானியின் வாழ்வில் அவன் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும்பொழுது அவனது மனம் அலைபாய்ந்தாலும் ஆழ்மனதில் இது மாயை என்ற அறிவு இருப்பதால் அவனால் தொடர்ந்து தடைபடாத இன்பத்துடன் இருக்கமுடியும். எனவே வாழ்வின் நிகழ்வுகள் எப்படி அமைந்தாலும் ஞானி தொடர்ந்து அமைதியாகவே இருப்பான்.

துன்பம் கலவா இன்பம்

நான் பரமன் என்ற அறிவை அடைந்தால் துன்பம் கலவா இன்ப வாழ்வை என்றும் வாழலாம் என்று வேதம் கூறுவது பொய்யல்ல. பரமன் ஆனந்தமயமாக என்றும் இருப்பவன். மனம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் மாயையின் ஒரு சிறு பகுதி. நான் மனம் என்ற அறியாமையுடன் இருக்கும்வரை துன்பத்தை தவிர்க்கமுடியாது. நான் பரமன் என்பதை உணர்ந்த ஞானி தன் மனதின் நிலையை தன் நிலையாக கருத மாட்டான் என்பதால் அவனால் துன்பம் கலவா இன்பத்துடன் வாழமுடியும்.

ஞானி மட்டும்தான் துன்பம் கலவா இன்பவாழ்வை பெறமுடியுமென்றாலும் ஞானம் அடைந்தால் மட்டும்தான் துன்பத்தை தவிர்க்க முடியும் என்று வேதம் கூறவில்லை. அவரவர்களின் அறிவுத்திறனுக்கும் முயற்சிக்கும் ஏற்ற விகிதத்தில் வாழ்வில் துன்பங்களை குறைத்து இன்பங்களை அதிகரித்துக்கொள்ளலாம்.

முதல் படி: தர்மமான வாழ்க்கை

துன்பம் தரும் சூழ்நிலைகள் தாம் செய்த பாவங்களின் விளைவு என்பதை உணர்ந்தவர்கள் தங்கள் துன்பங்களுக்கு மற்றவர்கள் காரணம் என்று நினைக்க மாட்டார்கள். எனவே இவர்கள் மனதில் சந்தேகம், சஞ்சலம், கவலை, கலக்கம், பகைமை, பழிவாங்கும் உணர்வு, விரோதம், வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படாது.  

இரண்டாம்படி: ஆசைகளை குறைத்துக்கொண்டவர்கள்

ஆசைதான் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தவர்கள் அதிருப்தி, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, பேராசை, விரக்தி போன்ற உணர்வுகளால் துன்பபடுவதில்லை.   

மூன்றாம் படி: இறைவனிடம் சரணடைந்தவர்கள்

அனைத்தும் ஆண்டவனின் ஆணைப்படிதான் நடக்கிறது என்று நம்புபவர்கள் அசூயை, அகந்தை, ஆணவம், ஆத்திரம், இறுமாப்பு, கர்வம்,  தற்பெருமை, குரோதம், வெட்கம், விரக்தி போன்றவற்றால் வருந்துவதில்லை.

ஞானிகள் இந்த மூன்றுபடிகளையும் கடந்தவர்கள் என்பதால் ஞானம் பெறுவதற்கு முன்பேயே இதுபோன்ற தீய உணர்வுகளிலிருந்து விடுதலையடைந்திருப்பார்கள்.

நான்காம் படி: குழந்தைகள் மற்றும் ஞானம் பெற்றவர்கள்

குழந்தை எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருப்பதில்லை. பசித்தால் அழும். எனவே குழந்தையைப்போல ஞானியும் துன்பம் கலவா இன்ப வாழ்வை வாழ்வான் என்றால் அவன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருப்பான் என்று பொருள் அல்ல. அது முடியவும் முடியாது. நகைச்சுவைகாட்சி ஒன்றை பார்த்து வாய்விட்டு சிரிப்பவர்கள் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு மேல் சிரித்துக்கொண்டேயிருக்க முடியாது. போதும், இனிமேல் சிரிக்க முடியாது என்று வேறு வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதுபோல் எந்த ஒரு உணர்ச்சியாலும் தொடர்ந்து நமது மனதை ஆக்ரமிக்க முடியாது. சாவுவீட்டில் கூட விட்டுவிட்டுத்தான் அழுவார்கள். இதற்கு காரணம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மாறிக்கொண்டேயிருக்கும் என்பதுதான். இதுபோல் மனம் மாறுவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும் ஒரே மாதிரி எண்ணங்கள் ஒன்றுமாற்றி ஒன்று வந்தால்கூட போர் அடித்துவிடும். எனவேதான் மக்கள் ஏதாவது ஒரு பொருள்மேல் ஆசைப்பட்டு அது நிறைவேறும் வரை ஏக்கம் என்ற உணர்ச்சியுடன் இருந்து அது நிறைவேறியபின் ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். இதில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் எவ்வளவு இன்பம் அனுபவிக்கிறோம் என்பது எவ்வளவு துன்பத்தை அனுபவித்தோம் என்பதை பொறுத்து மாறும். அதிககாலம் ஏக்கத்தோடு காத்திருந்த பொருள் கிடைத்தால் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனவே கூட்டி கழித்தால் இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாகவேயிருக்கிறது என்று தெரியவரும்.

இன்பமும் இன்பஉணர்வும்

நான் பரமன் என்பதால் என் இயற்கையான நிலை ஆனந்தம். நான் ஆனந்தமாய் இருக்கிறேன் என்பது ஒரு எண்ணம். நான் ஒரு மனிதன் என்ற எண்ணம்  மனதில் தோன்ற சாதாரண மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை. அதுபோல நான் ஆனந்தமயமானவன் என்ற எண்ணம் ஞானிக்கு தோன்ற அவசியமேயில்லை. மற்றவர்கள் தான் மரணத்திற்குட்பட்ட மனிதன் என்பதில் உறுதியாய் இருப்பது போல் ஞானி தான் பரமன் என்பதில் தெளிவாய் இருப்பதால் நான் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று தனக்குத்தானே நினைவுபடுத்திகொள்ள தேவையில்லை. தன்னை மறந்த நிலையில் மட்டும்தான் மற்றவர்கள் தங்களது இயல்பு நிலையான ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். தன்னை மறக்கச்செய்த நகைச்சுவைபடம் கொடுத்தது இன்ப உணர்வு. இன்ப உணர்வு வந்து போகும் தன்மையுடையது.

இன்பம் என்றுமிருப்பது. இதையறிந்த ஞானிகள் வந்து போகும் உணர்வுகளை தரம் பிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இன்ப உணர்வை தேடி  துன்பப்படுவதில்லை. சூழலுக்கு ஏற்ப வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து உணர்வுகளையும் அனுபவித்து தன்னை மறந்து இருப்பதால் குழந்தையைப்போல ஞானிகளும் துன்பம் கலவா இன்பத்துடன் எப்பொழுதும் இருப்பார்கள்.

நான் யார் என்று தெரியாத அறியாமையுடன் இருக்கும்வரை கிடைத்ததில் திருப்தியடைந்து வாழ்ந்த குழந்தை வளர வளர விரும்பும் பொருள் வேண்டுமென்று ஆசைபட ஆரம்பிக்கும். இதற்கு காரணம் தன்னை பற்றிய அரைகுறை அறிவு. தான் யார் என்ற முழுமையான அறிவை பெறாதவர்கள் வாழ்வு முழுவதும் குழந்தைத்தனமாக புலன்கள் தரும் இன்ப உணர்வுகளின் பின் அலைவார்கள். தான் பரமன் என்பதை உணர்ந்தபின் மறுபடியும் குழந்தைபோல கிடைத்ததில் திருப்தியடைந்து வாழமுடியும்.

நிகழ்காலத்தில் வாழ்தல்

நாளை என்ன நடக்குமோ என்ற பயம், எனக்கு ஏன் இதுபோல் நடந்தது என்ற வருத்தம், நான் ஏன் இப்படி செய்தேன் என்ற குற்றவுணர்வு, எனக்கு வேண்டியது கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஆகிய உணர்வுகள் இல்லாமல் குழந்தைகளும் ஞானிகளும் நிகழ்காலத்தில் வாழ்வார்கள். அவ்வப்பொழுது நிகழும் ஏற்றஇறக்கங்களுடன் கூடிய மாறுதல்களை அப்படியே ஏற்றுக்கொள்வதால் பயம், வருத்தம், குற்றவுணர்வு, கவலை ஆகிய நான்கு தீயவுணர்வுகள் ஏற்படுவதில்லை. குழந்தை முழு அறியாமையுடன் இருப்பதால் இவ்வாறு கவலையில்லாமல் இருக்கிறது. ஞானி படைப்பு என்றால் மாறும் ஏற்ற இறக்கங்கள் என்பதை புரிந்து கொண்டதால் நிகழ்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.
காரண காரியங்களை ஆராய்தல்

ஏதோ உள்நோக்கம் இருப்பதால்தான் இவர் என்னை புகழ்கிறார் என்று எந்த குழந்தையும் நினைப்பதில்லை. மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையும் குழந்தைக்கு இருப்பதில்லை. எது நடந்தாலும் இதற்கு காரணம் என்னவாயிருக்கும் ஆராய்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சியை முழுவதும் செய்யாமல் கிடைத்த நொண்டிச்சமாதனத்தை ஏற்றுக்கொள்வதுதான் தவறு. நிகழ்வுகளுக்கு எவ்வித காரணமும் கிடையாது என்பதை ஞானி உணர்வார்.

பரமன் பற்றிய உண்மைகள்

பரமன் ஆனந்தமயமானவன் என்று வேதம் கூறினாலும் நான் பரமன் என்று தெரிந்தவுடன் ஆனந்தத்தில் திளைப்பது போன்ற அனுபவம் ஏற்படுவதில்லை. எனவே தியானம் செய்து மனதை நிர்மலமாக்கி சமாதி அடைதல் அல்லது கண்களை மூடி வண்ணகலவைகளை பார்த்தல் என்பது போன்ற அசாதாரணமான முயற்சிகள் மூலம் கிடைப்பதுதான் முக்தியா என்ற சந்தேகம் தவறு. பரமன் ஆனந்தமானவன் என்ற வேதம் கூறும் உண்மையை அறிவுபூர்வமாக அறிந்துகொள்வதை தவிர அனுபவத்தின் மூலமாகவும் நாம் அறிந்திருக்கிறோம்.

பரமன் ஆனந்த மயமானவன் என்பதை ஆழ்ந்த உறக்க அனுபவத்தை ஆராய்வதன் மூலம் அறியலாம். உடல் மற்றும் மனம் துன்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் அவையனைத்தையும் மறந்து இன்பமாக தூங்க முடிகிறது. துன்பபடுபவர்கள் மட்டுமின்றி இன்பமாக இருப்பவர்கள் கூட நிம்மதியாக உறங்க ஆசைப்படுகிறார்கள். மேலும் உறக்கம் ஆனந்தமாக அமைய வேண்டுமானால் தூங்கப்போகுமுன் இனிமையான அனுபவங்களை நினைவுகூரவேண்டும் என்று எவ்வித கட்டாயமுமில்லை. இந்த மூன்று காரணங்களால் ஆனந்தம் நம் இயல்பான அனுபவம் என்பது தெளிவாகிறது.

நம் இயல்பான  ஆனந்தத்தை ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை உணர மனம் இருப்பதில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் அடங்கியிருக்கும் மனதில் எண்ணங்கள் தோன்றும்பொழுது முதலில் அதை கனவு என்றும் பின் நனவு என்றும் குறிப்பிடுகிறோம். எரிச்சல், ஏக்கம் போன்ற எண்ணங்கள் தோன்றினால் அதை கெட்ட கனவு அல்லது நிகழ்வு என்று வகைபடுத்தும் நாம் நமக்கு பிடித்தமான எண்ணங்கள் தோன்றினால்தான் இன்பம் என்று நினைக்கிறோம். இதுபோன்ற உணர்வுகளை அனுபவிக்க மனம், அது இருந்து செயல்பட ஐம்புலன்களோடு கூடிய உடல் மற்றும் புலன்களால் அறியப்படும் உலகம் ஆகிய மூன்றும் தேவை. இம்மூன்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துதான் ஆகவேண்டும். இதுதான் ஆனந்தமான பரமனின் விளையாட்டு.

படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்த ஞானிகள் இன்ப உணர்வு மட்டும்தான் எப்பொழுதும் மாறாமல் இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. இசைக்கு ஏற்றபடி ஏறிஇறங்கியாடும் நீரூற்றைப்போல் (musical fountain) உலகநிகழ்வுகளுக்கேற்ப மாறும் உணர்வுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.  

மனம் பற்றிய உண்மைகள்

ஞானம் பெற்றபின் அதன் பலனான முக்தியை முழுமையாக அனுபவிக்க மனதின் தன்மைகள் பற்றிய தெளிவான அறிவு அவசியம். 

முதலாம் உண்மை – மனம் ஒரு கண்ணாடி

சுற்றியிருக்கும் பொருள்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போல சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுவதுதான் மனதின் இயல்பு. போற்றலையும் தூற்றலையும் ஞானி ஒரேமாதிரி ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இவ்விரண்டும் வேறுபட்டது என்பதை அவன் அறியமாட்டான் என்று பொருளல்ல. நல்ல வார்த்தைகளை கேட்டால் மகிழ்வதும் தீய வார்த்தைகள் காதில் விழுந்தால் கலங்குவதும் மனம் என்கிற கண்ணாடியின் இயல்பு. தன்னை ஒருவர்  திட்டினால் அதைகேட்டு சந்தோஷபட வேண்டும் என்ற கட்டாயம் ஞானிக்கு கிடையாது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உணர்ந்த ஞானி தான் திட்டு வாங்குவதும் இறைவனின் விளையாட்டு என்று அறிந்திருப்பதால் சூழ்நிலைக்குத்தக்கவாறு செயல்படுவான்.

வாழ்க்கை எப்பொழுதும் வெற்றி-தோல்வி, உயர்வு-தாழ்வு என்பது போன்ற இருமைகளிடையே ஊசலாடிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் மனம் அதற்கேற்றாற்போல் சலனப்பட்டுக்கொண்டு இருப்பதை தவிர்க்கவே முடியாது.  

இரண்டாம் உண்மை – மனம் தண்ணீர் போன்றது

பாத்திரத்தை ஆட்டிவிட்டுவிட்டு அதனுள் இருக்கும் தண்ணீர் ஆடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். உலக நிகழ்வுகள் ஐந்து புலன்கள் மூலம் மனதை சென்றடைந்தபின் நிகழ்வுகளுக்கேற்ற மாற்றம் மனதில் ஏற்படத்தான் செய்யும். பாத்திரத்தின் ஆட்டம் நின்றபின்னும் தண்ணீர் ஆடாமல் அமைதியடைய சிறிதுகாலமாகும். அதுபோல விரும்பத்தகாத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட ஞானியின் மனம் அமைதியடைய சிறிதுகாலம் ஆகும். சிறிது காலம் என்பது ஓரிரு மணித்துளிகளா அல்லது ஒரு சில நாட்களா என்பது ஞானத்தின் உறுதியைப்பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும்.

நாவினால் சுட்ட வடு மறையாது என்பது ஞானிகளுக்கு பொருந்தாது. மற்றவர்கள் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்து வாழ்நாழ் முழுவதும் துன்பபடுவதுபோல் ஞானி துன்பபடமாட்டான்.

மூன்றாம் உண்மை – மனம் ஒரு உபயோகிக்கப்பட்ட குடுவை

வெகுகாலம் ஊறுகாய் வைத்திருந்த குடுவையை காலிசெய்தாலும் அதன் வாசனை அகல பல காலமாகும். பல்வேறு பிறவிகள்தோறும் சேர்த்துவைத்த விருப்பு வெறுப்புகள் ஞானம் ஏற்பட்டவுடன் மறைந்துவிடுவதில்லை. முன்கோபம், எதிர்காலத்தைப்பற்றிய பயம் போன்றவை பலகாலம் மனதை ஆட்டுவித்த காரணத்தால் ஞானம் பெற்றபின் கூட இவை அவ்வப்பொழுது வெளிப்படலாம். படிப்படியாகத்தான் இவற்றிலிருந்து ஞானிக்கு முழு விடுதலை கிடைக்கும். 

நான்காம் உண்மை – மனம் ஒரு ஊசிப்பட்டாசு

படபடவென்று தொடர்ந்து வெடிக்கும் ஊசிப்பட்டாசு வெடித்து முடித்தபின்னும் திடீரென்று ஓரிரு வெடிகள் வெடிப்பதுபோல ஞானியின் மனதில் கோபம், பயம் போன்ற உணர்வுகள் படிப்படியாக குறைந்து முழுவதும் தீர்ந்துவிட்டது என்று தோன்றினாலும் திடீரென்று ஒரு நாள் முன்போல கோபம் வெடித்து சிதறலாம்.  

ஐந்தாம் உண்மை – மனம் வெய்யிலுடன் சேர்ந்த மழை

பொதுவாக மழை பெய்யும்பொழுது வெய்யில் இருக்காது. ஆனால் ஒரு சில நாட்களில் இவை இரண்டும் சேர்ந்து வருவதுபோல ஞானியின் மனதில் அமைதி மற்றும் கலக்கம் ஆகிய இரண்டும் சேர்ந்து வரலாம். நான் பரமன் என்ற அறிவு ஒருபக்கம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் எனக்கு இம்மாதிரி நேர்ந்துவிட்டதே என்ற கலக்கமும் மனதை வாட்டலாம்.

ஞானத்தின் நோக்கம்

ஞானம் பெற முயலும் மாணவர்களின் மனம் படிப்படியாக அமைதியை அடைந்து துன்பம் தரும் உணர்வுகளால் பாதிக்கப்படாது என்பது உண்மையென்றாலும் மனதை அமைதிபடுத்துவது ஞானத்தின் நோக்கமல்ல. உண்மையில் நான் யார் என்ற சரியான அறிவை நமக்கு கொடுப்பதுதான் வேதத்தின் நோக்கம். நான் பரமன் என்று தெரிந்து கொண்டால் நான் மனம் அல்ல என்பதும் புரிந்துவிடும். எனவே மனதின் மாறுதல்களை ஞானி அப்படியே ஏற்றுக்கொள்வான். நாடகத்தின் சூத்திரதாரி தன்னை உள்ளேயிருந்து இயக்குகிறான் என்று அறிந்த ஞானி ‘நான் ஏன் கோபப்பட்டேன்’ என்று அவன் தன்னைத்தானே நொந்துகொள்ள மாட்டான். கோபப்பட்டதால் தான் உண்மையிலேயே ஞானியா என்று சந்தேகப்படமாட்டான்.

ஞானத்தின் முடிவு

முழுமையான ஞானம் பெற்றவன் தன் மனதில் நிலைபெற்றிருக்கும் உண்மைகளை பின்வருமாறு வெளியிடுவதாக ஆதி சங்கரரின் நிர்வாண சதகம் அமைந்துள்ளது.

மனம், புத்தி, அகங்காரம், சித்தம் நான் அல்ல. எனக்கு கண், காது, மூக்கு, நாக்கு என்று எதுவும் கிடையாது. நான் பஞ்சபூதங்களால் செய்யப்பட்டவன் அல்ல.

பிராணன் நான் அல்ல. எனக்கு உயிரோட்டம் கிடையாது. மூன்று உடல்கள் நான் அல்ல. பஞ்ச கோசங்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கை, கால், வாய் என்று எனக்கு எவ்வித உறுப்புகளும் கிடையாது.

எனக்கு விருப்பு வெறுப்புகள் கிடையாது. கோபம், மோகம், லோபம், போட்டி, பொறாமை ஆகிய எதுவும் எனக்கில்லை. தர்மம், அர்த்தம், காமம், முக்தி ஆகிய நோக்கங்கள் எதுவும் எனக்கு இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.

பாவபுண்ணியங்களுக்கு என்னை பாதிக்கும் சக்திகிடையாது. சுக துக்கங்கள் என்னை மாசுபடுத்தாது. எனக்கு மந்திரங்கள் எதுவும் தெரியாது. புனித யாத்திரைகள் செல்லவேண்டிய கட்டாயம் எனக்கில்லை. நான் வேதம் படிப்பதில்லை. யாகம், தவம், மதச்சடங்குகளை செய்தல் ஆகியவற்றால் எனக்கு எவ்வித பிரயோஜனமும் கிடையாது. நான் அனுபவிப்பவனோ அனுபவிக்கப்படும் பொருளோ அல்லது அனுபவமோ அல்ல.

எனக்கு மரணம் கிடையாது. ஜாதி, இனம், மதம் போன்ற பாகுபாடுகள் எதுவும் எனக்கில்லை. எனக்கு தாயோ தந்தையோ கிடையாது, ஏனெனில் நான் பிறக்கவேயில்லை. எனக்கு சொந்த பந்தங்கள் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. எனக்கு ஆசிரியர் கிடையாது. நான் யாரிடமும் பாடம் கற்கும் மாணவனாக இருந்ததில்லை.

எவ்வித எண்ணங்களும் இல்லாத எனக்கு உருவமற்ற உருவம் உள்ளது. இவ்வுலகில் உள்ள அனைவரது உயிர்த்துடிப்பதற்கும் அவர்களது ஐம்புலன்கள் வேலைசெய்வதற்கும் நான்தான் காரணம் என்றாலும் எனக்கு யார் மீதும் எவ்வித பற்றும் கிடையாது. எதனாலும் நான் கட்டுண்டவனல்ல என்பதால் எனக்கு விடுதலை என்பதும் கிடையாது. எதனுடனும் சம்பந்தப்படாமல் அனைத்தையும் உள்ளடக்கிய நான் என்றும் அமைதியுடன் இருக்கும் அறிவுருவானவன்.     

முடிவுரை :

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பிறக்கும்பொழுது முழுமையான ஆனந்தத்தின் வடிவாகவே இருக்கிறார்கள். வளரும்பொழுது அவர்கள் பெறும் அறிவு அவர்களை குறையுடன் கூடியவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அறியாத குழந்தை அறிவுடன் கூடிய மனிதனாக மாறும்பொழுது தன்னிடம் இல்லாத குறையை நிறை செய்ய உலகில் இன்பத்தை தேட ஆரம்பிக்கிறான்.

இந்ததேடல் மட்டுமே தனிமனிதனின் அனைத்து துன்பங்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் நிலவும் சண்டை, தீவிரவாதம், ஊழல், புரட்சி போன்ற அனைத்து சமூக கொடுமைகளுக்கும் அடிப்படைக்காரணமாக அமைகிறது.

நாடோடிகளாக இருந்த வரை இன்பமாகவும் அமைதியாகவும் வாழ அதிக முயற்சி தேவைப்படவில்லை. இருபது வருடங்கள் கல்வி பயின்று அதன் பின் நாளுக்கு பத்து மணிநேரம் உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்ற அளவுக்கு தற்பொழுது வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. நின்ற இடத்திலேயே இருப்பதற்கு கூட தொடர்ந்து ஓடவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி குழந்தை பருவத்தில் இருந்த இன்பம் முதுமையில் தொலைய காரணமாக இருப்பது போதவில்லை என்ற தேடல்தான்.  

பணம், பதவி, புகழ் போன்றவை கொடுக்கும் இன்ப உணர்வை நிலையானது என்று நம்பி இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையினால் பயம், பொறாமை போன்ற துன்பம் தரும் உணர்வுகளை அதிகபடுத்திக்கொள்கிறார்கள். மாறும் உலகில் எவ்வளவுதான் முயன்றாலும் துன்பம் கலவா நிரந்தர இன்பத்தை அடைய முடியாது என்ற அறிவு இவர்களுக்கு ஏற்படும்பொழுது வேதம் தரும் பாடங்களை குருவின் துணையுடன் படித்து மாறாத ஆனந்தமயமான பரமன் தான்தான் என்ற முழுமையான அறிவைப்பெற்று ஞானிகளாகிறார்கள்.

ஞானிகளானபின் மீண்டும் குழந்தைகளைப்போல முழுமையான இன்பத்துடன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப செயல்புரிந்து மனதில் ஏற்படும் அனைத்து உணர்வுகளையும் அனுபவிப்பார்கள். ஞானிகள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வதில்லை என்பதால் மற்றவர்களின் பார்வைக்கு அவர் ஒரு சாதாரண அறிவாளியாக மட்டும் தென்படுவார்.

பயிற்சிக்காக :

1. துன்பத்தை குறைக்க மனிதன் பயணிக்க வேண்டிய நான்கு படிகள் யாவை?

2. ஞானம் பெறுவதனால் எந்த நான்கு தீய உணர்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்?

3. குழந்தைகளின் வாழ்வுக்கும் ஞானியின் வாழ்வுக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?

4. இன்பத்திற்கும் இன்ப உணர்வுக்கும் என்ன வித்தியாசம்?

5. பரமனின் விளையாட்டு என்று குறிப்பிடப்பட்டது எது?

6. பரமன் ஆனந்தமயமானவன் என்பதை நிரூபிக்க கூறப்பட்ட மூன்று காரணங்கள் யாவை?

7. மனதை பற்றிய ஐந்து உண்மைகளை விளக்குக.

8. ஞானத்தின் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஞானியின் பார்வையில் உலகம் சுவர்க்கமாக தோன்றும் என்பது உண்மையா?

2. அனுபவத்திற்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை ஆயக

3. துன்பநிகழ்வு ஞானியை பாதிக்குமா?

4. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நாளை என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி திட்டமிடகூடாதா?

5. காரண காரியங்களை ஆராயாமல் எவ்வாறு மனித குலத்தில் முன்னேற்றம் ஏற்படும்?

6. ஞானத்தின் முடிவு என்பதற்கும் வேதாந்தம் என்பதற்கும் உள்ள உறவை ஆய்க.

7. கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் வேறுபாடு இல்லை என்பது உண்மையா?