பாடம் 152: ஞானம் பெற தேவையான காலம்
பாடல் 476 (III.4.51)
ஞானம் பெற இருக்க வேண்டிய தகுதி, செய்ய வேண்டிய முயற்சிகள், நீக்க வேண்டிய தடைகள் ஆகியவற்றை விளக்கி ஞானம் பெற எவ்வளவு காலம் ஆகும் என்ற தகவலை இந்தப்பாடம் கொடுக்கிறது.
ஞானம் பெறுவது என்றால் என்ன?
வரைபடத்தில் தென்படும் மூதாட்டியின் முகத்தை வேறு ஒரு கோணத்தில் இளம் பெண்ணாக பார்க்கலாம் என்று கூறிய நண்பனின் வார்த்தையை நம்பி முயற்சி செய்தபின்கூட மூதாட்டி மறைந்து இளம்பெண் தென்படவில்லை என்பவரின் நிலைதான் நீ உன்னை பரமனாக அறியவேண்டும் என்ற குருவின் உபதேசத்தை ஏற்று ஞானம் பெற முயல்பவரின் நிலையும். மூதாட்டியின் கண்ணை இளம் பெண்ணின் காதாக நினைத்து படத்தைப்பார் என்ற நண்பனின் யோசனையை ஏற்று படத்தை ஆராய்வது போல் ஆசிரியரின் அறிவுரைகளின் படி நான் யார் என்று ஆராய்ந்தால் எந்த தருணத்திலும் பரமனாக மாறிவிடலாம்.
மூதாட்டி ஒரு இளம்பெண் என்ற தகவலை அறிந்த பின் படத்தில் இளம்பெண்ணை பார்க்க முடிவதுபோல் நீ பரமன் என்ற ஆசிரியரின் உபதேசத்தை ஆராய்ந்து நம்மை நாம் பரமன் என்று உணர்வதுதான் ஞானம் பெறுவதாகும்.
இளம்பெண்ணை பார்த்தபின் கூட மறுபடியும் அவள் மறைந்து மூதாட்டி மட்டுமே நம் கண்களுக்கு தென்படலாம். அதுபோல நான் பரமன் என்ற ஞானத்தைப்பெற்ற பின் கூட நம்மை நாம் ஒரு அற்பமனிதனாக பார்க்க நேரலாம். அதில் தவறில்லை. பெற்ற ஞானம் மறைந்துவிடாது. ஒருமுறை இளம்பெண்ணை பார்த்தபின் மூதாட்டியின் முகத்தை இளம்பெண்ணாக மாற்றிப்பார்க்க வெகுநேரம் ஆகாது. அது போல மனிதன் என்ற நிலையிலிருந்து பரமனாக மாற வெகுநேரம் ஆகாது. ஆனால் ஒருமுறையாவது இவ்வுலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும் உண்மையில் இருப்பது உணர்வாகிய நான்மட்டும்தான் என்றும் உணர்வதுதான் ஞானம் பெறுவது. ஞானம் பெற்றபின் அனைத்து கேள்விகளும் மறைந்துவிடும். இளம்பெண்ணின் கழுத்து எங்கேயிருக்கிறது என்று கேட்டால் நண்பனைத்தேடி ஓடாமல் நம்மாலேயே காட்டிக்கொடுக்க முடிவது போல் கடவுளை காட்ட முடியுமா என்று யாரேனும் கேட்டால் குருவை தேட வேண்டிய அவசியம் இருக்காது.
ஞானம் பெறுவது எளிது
வேண்டிய தகுதிகளுடன் முறையாக வேதத்தைப்படித்தால் ஞானம் பெறாமல் இருக்க முடியாது. ஞானம் பெற்றபின் இதைப்புரிந்துகொள்வதற்கு இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டோமே என்ற வெட்கம் ஏற்படும். இவ்வளவுதானா இல்லை இதற்குமேல் ஏதாவது செய்யவேண்டுமோ என்ற சந்தேகம்கூட ஏற்படலாம். ஞானம் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்பது ஞானத்தைப்பெற்ற பின்தான் தெரியவரும். ஆகவே ஞானத்தை பெற முயல்பவர்களின் பார்வையில் அது பல பிறவிகளில் முயற்சி செய்யவேண்டிய கடினமான காரியம் என்றுதான் தோன்றும்.
பரமனைப்பற்றி கேள்விப்படவே பலருக்கு வாய்ப்பதில்லை. கேள்விப்பட்டாலும் புரிந்துகொள்ள மிகப்பலரால் முடிவதில்லை. தானும் புரிந்துகொண்டு மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி திறமையுடன் சொல்லிக்கொடுக்ககூடிய ஆசிரியன் வெகு அபூர்வம். சொல்வதை கேட்டு பரமனாகவே மாறிவிடும் மாணவனும் அபூர்வம் என்று கதாஉபநிஷத் மந்திரம் ஒன்று (1.2.7) கூறுகிறது.
எனவே ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா என்பது மாணவன் மற்றும் அவனது ஆசிரியர் ஆகிய இருவரது திறமையை பொறுத்து தீர்மானிக்கப்படும். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பட்டபடிப்பை முடிப்பது கடினம். மழலையர் பள்ளியில் வேலைசெய்யும் தகுதி மட்டும் இருக்கும் ஆசிரியர் அவனுக்கு அமைந்தால் அவனால் பத்தாம் வகுப்பையே தாண்ட முடியாமல் போகலாம்.
கணிதம், பௌதீகம் போன்ற உலகவியல் தொடர்பான அறிவைப்பெறுவதில் கூட மாணவன் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரின் தகுதிகள் முக்கியம் என்றாலும் வேதம் கூறும் ஞானம் இவற்றிலிருந்து வேறுபட்டது. உலகில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்தை மாணவர்களுக்கு அறிவிக்க உதவும் கருவிகள் மட்டுமே. அறிவை ஆசிரியர்களோ புத்தகங்களோ புதிதாக உற்பத்தி செய்வதில்லை. புவியீர்ப்பு சக்தியை பற்றிய அனைத்து அறிவும் அழிந்து விட்டாலும் கூட நாளை மீண்டும் ஒரு மாம்பழம் கீழே விழ ஒரு மாதவன் அதைப்பார்த்து அதே அறிவை மீண்டும் உலகுக்கு அளிக்கலாம். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தரும் வேதமும் அதை சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களும் இல்லையென்றால் யாராலும் ஞானத்தை அடைந்து முக்தியடைய முடியாது. எனவே வேதம் பயின்ற ஆசிரியரின் உதவி ஞானம் பெற மிக அவசியம்.
உலகில் உள்ள பொருள்களை ஆய்ந்து அறிவதை அறிவு என்றும் அறிபவனை அறிந்துகொள்வதை ஞானம் என்றும் வகைப்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அறிவு முடிவில்லாதது. எந்த ஒரு துறையிலும் அறியவேண்டிய அனைத்தையும் அறிந்து இனி அறியவேண்டியது எதுவுமில்லை என்ற நிலைக்கு யாராலும் வரமுடியாது. ஆனால் ஞானம் என்பது இறுதியானது. பரமனை முழுவதும் அறிந்தவர்கள் இனி அறியவேண்டியது எதுவும் இல்லை. எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை அறியவேண்டும் என்று சாந்தோகிய மந்திரம் 6.1 கூறுகிறது. அப்படிப்பட்ட முடிவான அறிவை ஞானம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஒரு சிறப்பைத்தவிர ஞானத்திற்கும் அறிவிற்கும் வேறு எந்த வேற்றுமையும் கிடையாது. ஞானம் என்றால் தியானம் செய்வதன் மூலம் வரும் அல்லது குருவின் அருள்பார்வை நம் மீது விழுந்தால் வரும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் மாணவனை திசைதிருப்பக்கூடும். வார்த்தைகளால் விளக்கப்படமுடியாத பரமனை அறிந்துகொள்வது ஆசிரியர் விளக்கிய எளிதான கணக்கின் அடிப்படையில் கடினமான வீட்டுப்பாடத்தை செய்வதுபோல்தான். வகுப்பில் நடத்தும் பாடம் புரியவில்லையென்றால் தனியாக ஆசிரியரின் வீட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சியின் மூலம் புரிந்து கொள்ள முயலலாமே தவிர பூஜை அறையில் அமர்ந்து தியானம் செய்வதால் அறிவு ஏற்பட்டுவிடாது. பரமன் யார் என்கிற ஞானமும் மற்ற அறிவைப்போல நமது ஐம்புலன்கள் மூலம் தகவல்களை திரட்டி மனதுக்குள் அவற்றை ஆராய்வதன் மூலம் மட்டுமே ஏற்படும்.
மற்றபாடங்களையாவது ஆசிரியரின் துணையில்லாமல் தானே படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் நான் யார் என்ற ஞானத்தை சுயமுயற்சியால் மட்டும் அடையவே முடியாது. காட்டுப்பாதையில் பறவைகளின் இனிமையான கானத்தை கேட்டபடி பயணம் செய்யும்பொழுது யாரேனும் நைட்டிங்கேல் பறவையின் குரலை கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் அது எப்படி கத்தும் என்பது நமக்குத்தெரியாத காரணத்தால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். அந்தப்பறவை கத்தும்பொழுது இதுதான் நைட்டிங்கேலின் ஒலி என்று சொல்லி கொடுத்தால்மட்டுமே அதை நாம் ஏற்கனவே கேட்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். அதுபோல நான் பரமன் என்ற அனுபவம் எப்பொழுதும் நம்முடன் இருந்தாலும் அதுதான் பரமன் என்று காட்டிக்கொடுக்க ஒரு ஆசிரியரின் துணை நிச்சயம் தேவை. எனவே ஆசிரியரின் துணையுடன் ஞானம் ஏற்படும் விதம் பற்றி அறிந்தவர்கள் தீவிர முயற்சி செய்தால் ஞானம் எளிதில் ஏற்படும்.
மூன்று வகை ஆசிரியர்கள்
தன் ஆசிரியர்களிடமிருந்து முறையாக வேதத்தை பயின்றதன் மூலம் ஞானத்தை பெற்றவர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு சரியான வழியை காட்டமுடியும். இந்த உயர்வகை ஆசிரியரை அடைந்தவர்கள் விரைவில் ஞானம் பெற்றுவிடுவார்கள்.
வேதத்தை சரியாக கற்றபின்னும் ஞானம் அடையாமல் தான் கற்றதை சரியாக மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத்தெரிந்த ஆசிரியர்கள் இரண்டாவது வகை. இவர்களிடம் பயிலும் மாணவர்கள் ஞானத்தை அடைவது சிறிது கடினம் என்றாலும் முடியாத காரியமல்ல.
ஒரு மன்னன் காட்டுக்கு வேட்டையாட சென்றபொழுது சுவையான உணவை உண்டு இனிமையாக அரண்மனையில் வாழும் தன் கூண்டுக்கிளியை பற்றி அவன் அங்கிருந்த கிளிகளுக்கு பெருமையுடன் விளக்கினான். அதைக்கேட்டவுடன் மரத்தில் அமர்ந்திருந்த கிளிகளில் ஒன்று இறந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அரண்மணைக்குத்திரும்பிய அரசன் தன் கூண்டுக்கிளியிடம் நடந்ததை நடந்தபடி கூறினான். அதைக்கேட்டவுடன் அந்தக்கிளியும் செத்து கீழே விழுந்தது. மன்னன் மிகுந்த சோகத்துடன் கூண்டைத்திறந்து கிளியை வெளியே எடுத்தவுடன் அது பறந்து விட்டது. மன்னனுக்கு புரியாவிட்டாலும் துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழியை தெளிவாக அவன் வாயால் கேட்ட புத்திசாலியான கிளி விடுதலை அடைந்தது போல வாழ்க்கைத்துன்பத்திலிருந்து விடுதலைபெறும் விதம் வேதத்தில் கூறப்பட்டபடி ஆசிரியரிடம் கேட்கும் புத்திசாலி மாணவனால் முக்திபெறமுடியும். ஆனால் ஏதேனும் சந்தேகம் கேட்டால் தப்பிப்பது கடினம்தான். எனவே இந்த வகை ஆசிரியர்கள் தன்னால் வெல்ல முடியாத பரிசுகோப்பையை தன் மகனை பயிற்றுவித்து அவனை வெற்றிபெற வைக்க முயலும் தந்தையைப்போன்றவர்கள்.
முன்பிறவியில் செய்த முயற்சியால் ஆசிரியரிடம் வேதத்தைப்படிக்காமலேயே முக்திபெற்ற ஞானிகள் வழிதெரியாமல் பாதைகளில் தடுமாறும் அனுபவமில்லாமல் விமானம் மூலம் வீடுபோய் சேர்ந்தவர்கள். இவர்களை நாடுபவர்களுக்கு இவர் ஆசீர்வாதம் செய்யலாமேதவிர அறிவை வழங்கமுடியாது. அவர் வாயிலிருந்து வரும் அத்தனை வாக்கியங்களும் முழுமையான ஞானத்துடன் முக்தியடைந்தவர் என்பதை காட்டிக்கொடுத்தாலும் அவற்றைக்கேட்டு யாராலும் ஞானம் பெற முடியாது. எனவே இந்த மூன்றாவது வகை ஆசிரியரின் உபதேசங்கள் பெற்ற ஞானத்தில் நிலைபெற உதவுமேதவிர ஞானம் பெற உதவாது.
ஆசிரியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் மரணமடைந்தபின் அவரால் யாருக்கும் ஞானம் வழங்கமுடியாது. மேலும் மற்ற பாடங்களில் வகுப்பில் இருக்கும் முப்பது மாணவர்களும் ஒரே சமயத்தில் ஆசிரியரிடமிருந்து அறிவைப்பெறுவது போல் ஞானத்தைப்பெற முடியாது. தனியாக ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை கேட்டு அவர் தனக்குமட்டும் கேட்கும்படி சொல்லும் பதில் மூலம்தான் ஞானம் பெற முடியும். ஏனெனில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்கள் ஒரே மாதிரி இருக்காது. ஒருவருக்கு தரும் பதில் மற்றவரின் முயற்சிக்கு தடையாய் இருக்கும் என்பதால் ஆசிரியரை தனிமையில் அணுகினால்தான் சரியான பதில் கிடைக்கும்.
திறமையான ஆசிரியரால் கூட தன் சொந்த புத்தியை மட்டும் உபயோகித்து யாருக்கும் முக்தியளிக்க முடியாது. வேதத்தை முறையாக படிப்பது மிக அவசியம். விளம்பரத்தில் நடிக்கும் நடிகை பார்வையாளர்களின் கவனத்தை விற்கவேண்டிய பொருளின் பக்கம் திருப்பாமல் தன்னிடம் ஈர்ப்பது போல் தவறான குரு சீடர்களின் கவனத்தை வேதத்தின் பக்கம் திருப்பாமல் அவர்களை தன்னை பின்பற்றும்படி செய்வார். சரியான ஆசிரியர்கள் இந்த தவறை செய்யாவிட்டாலும் அவர்களின் சீடர்கள் வேதத்தை படிக்காமல் குருவின் புகழை பரப்புவதில் நேரத்தை வீணடித்தால் அவர்கள் முக்தியடையும் வாய்ப்பு மிகவும் குறையும்.
இறுதித்தேர்வில் தோல்வியடைந்து மறுபடியும் அதே வகுப்பில் படிக்க வரும் மாணவர்களின் கூட்டம் அதிகமானால் ஆசிரியரின் திறமையை சந்தேகிக்க நேரும். அதுபோல் பல வருடங்கள் தொடர்ந்து சீடர்களாய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குருவின் போதனை பயனளிக்கவில்லை என்று பொருள். அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தங்கள் பள்ளி ஆசிரியரிடம் நன்றியுணர்வுடன் இருந்தாலும் தங்கள் வேலையை விட்டுவிட்டு தினமும் ஆசிரியரிடம் போய் ஆசீர்வாதம் பெறுவதில்லை. ஞானம் பெற்றவுடன் குருவை சந்திக்கவேண்டிய அவசியமேயில்லை.
அறிவை கொடுத்து அறியாமை இருளை நீக்காமல் ஆசிர்வாதம் மட்டும் அளிப்பவர் குரு அல்ல. வாழ்வில் துன்பத்தை முழுவதுமாக அகற்றுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் செலவு செய்வதில் பயனில்லை. எனவே ஞானம் கிடைக்க தான் செய்யும் முயற்சிகள் சரியானவையா என்பதை குருவிடம் கலந்தாலோசனை செய்தும் தன் குருவின் சகமாணவர்களின் உபதேசங்களை கேட்டும் விரைவில் ஞானம் பெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
ஞானம் பெற தேவையான தகுதிகள்
விதையின் தரம் நன்றாக இருந்தாலும் அது தரிசு நிலத்தில் விளையாது. அதுபோல வேதத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் தகுதியில்லாத மாணவனுக்கு அறிவை கொடுக்க முடியாது.
ஆசிரியர் முழுதுமாக ஒரு கருத்தை சொல்லித்தரும் வரை அவரிடம் கேள்விகள் எதையும் கேட்ககூடாது. கேட்ட கருத்தை மனதில் ஆய்ந்து அது புரியவில்லை என்றால் அதற்கு காரணம் தன் அறிவின் குறைபாடே தவிர ஆசிரியர் அல்ல என்ற பாவத்துடன் அவரை அணுகி கேள்வி கேட்கவேண்டும். ஆசிரியர் கூறுவது தவறு என்று நிரூபிக்கும் நோக்குடன் கேள்விகேட்பவர்கள் ஞானம் பெறமாட்டார்கள். பொழுதுபோக்கிற்காகவோ புகழுக்காகவோ வேதம் பயின்றால் பயனிருக்காது. துன்பத்தை அகற்றி முக்தியடைய வேண்டும் என்ற தாகத்துடன் ஆசிரியரை அணுகி தனக்கு சொல்லித்தருமாறு கேட்டு அவரிடம் முறையாக பயில்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள்.
அரசன் காட்டுக்குசென்ற தன் நெருங்கிய நண்பரான மந்திரி திரும்பவில்லை என்று சோகத்தில் ஆழ்ந்திருந்தான். அவருக்கு வேண்டாதவர்கள் மந்திரி காட்டில் இறந்து விட்டதாகவும் பேயாக அங்கு உலாவுவதாகவும் கதைக்கட்டி விட்டார்கள். இதை முழுவதுமாக நம்பிவிட்ட அரசனின் முன் மந்திரி எதிர்பட்டால் பேயை கண்ட பயம் ஏற்படுமே தவிர நண்பரை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படாது. அது போல தனக்கு ஞானம் கிடைக்காது என்று உறுதியாக நம்புபவர்களுக்கு ஞானம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.
ஞானம் படிப்படியாக ஏற்படாது. அறிவு படிப்படியாக வளந்து ஞானமாக மலரும். நான் பரமன் மற்றும் உலகே மாயை என்ற தொடர்களை வேதம் படிக்கத்துவங்கிய காலத்திலிருந்து கேட்டுகொண்டிருந்தாலும் அதன் உண்மையான பொருள் ஒரு நொடியில் தெரியவரும். மூதாட்டியின் முகத்தில் இளம்பெண்ணின் உருவத்தை தேடும்பொழுது அது கண், காது, கழுத்து என படிப்படியாக நம் கண்களில் தென்படுவதில்லை. பல நேரம் முயற்சிசெய்தவுடன் திடீரென்று அது தெரிவது போல ஞானம் திடீரென்றுதான் உதயமாகும். அந்த ஞானப்பார்வையுடன் உலகை பார்க்கும்பொழுது வேதம் கூறிய அனைத்து கருத்துக்களின் உண்மைத்துவத்தை நேரடியாக அறிவோம். உதாரணமாக ஞானம் பெற்றபின் மறுபிறவியில்லை என்று நமக்கே உறுதியாக தெரிந்து விடும். அதன்பின் வேதம் நமக்கு அவசியமில்லை.
ஞானம் பெற தடைகளாய் இருப்பவை
இவ்வுலகில் இன்பமாக வாழ்வது எப்படி என்பதன் வழிமுறைகளை கடவுள் நமக்கு வேதத்தின் மூலம் தந்திருக்கிறார் என்பதை நம்பாமல் மற்ற புத்தகங்களைப்போல் அதுவும் ஒரு கருத்தை நமக்குத்தருகிறது என்று நினைப்பது ஞானம் பெறுவதற்கு தடை. வேதம் உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் அன்று. ஃபிலாசபி என்ற ஆங்கில வார்த்தையை தத்துவம் என்று மொழிபெயர்ப்பது தவறு. ஏனெனில் தத்துவம் என்ற வார்த்தைக்கு உண்மை என்று பொருள். எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிமனிதன் தனக்கு தோன்றிய எண்ணங்களை கோர்வையாக வெளியிடும் கருத்துதான் ஃபிலாசபி. கருத்துக்கள் வேறுபடும் தன்மை உடையன என்பதால் காலம் என்றால் என்ன, அன்பு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் இதுதான் என்று அறுதியிட்டு தத்துவஞானிகளால் கூறவே முடியாது. வேதம் இதுபோல கருத்துக்களை கொண்டது அல்ல. அதில் கூறப்பட்ட அனைத்தும் உண்மைகள் என்பதை உணராமல் நான் பரமன் என்பது வேதத்தின் கருத்து என்ற நோக்கில் படிப்பவர்கள் ஞானம் பெற மாட்டார்கள்.
நான் யார் என்பதை அறிய உள்நோக்கி பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தியானம், உள்ளுணர்வு ஆகியவற்றின் மூலம் ஞானம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். கண்களால் நம் முகத்தை நேரடியாக பார்க்க கண்ணாடி அவசியம். கண்ணாடியை பார்க்கும்பொழுது கண்கள் நம்முடைய முகத்தைத்தான் பார்க்கின்றனவே தவிர கண்ணாடியை பார்ப்பதில்லை. அதுபோல் வேதம் நான் யார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் கண்ணாடி. அதை படிக்கும்பொழுது நாம் யார் என்பதைத்தான் ஆராய்ந்து அறிய முயல்கிறோம் என்பதை அறியாமல் வேதம் படிப்பவர்கள் ஞானம் பெறுவதில்லை.
வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரு தனி மனிதனுக்கு தேவையான பகுதிகளை சுட்டிக்காட்ட ஆசிரியரின் உதவி தேவை. வேதத்தை முறையாக பயின்ற ஆசிரியரால் கூட மாணவனின் நிலையை அறிந்து கொள்ளாமல் அவனுக்கு உதவி செய்ய முடியாது. மாணவன் கேட்கும் கேள்விகள் மூலமாகத்தான் ஆசிரியர் அவனைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். எனவே ஏகலைவன் போல ஆசிரியரிடம் நேரடியாக கேள்விகேட்காமல் படித்தால் ஞானம் பெறமுடியாது. தேவைப்படும்பொழுதெல்லாம் ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை தெளிவு செய்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்களால் முக்தியடைய முடியாது.
நமது ஐந்து புலன்கள் நம்மைச்சுற்றி ஒரு உலகம் உண்மையில் இருப்பதாக நமக்கு தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருப்பதால் அது மாயை என்ற ஞானம் ஏற்படுவது தடைபடுகிறது. உலகம் இருப்பதுபோல் காட்சியளிக்கும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் அறிஞர்கள் நிரூபித்தபின்னும் அனைவரும் உலகம் உண்மை என்ற அடிப்படையில்தான் அனுபவங்களைப்பெறுகிறார்கள்.
தடைகளை நீக்கும் விதம்
உலகம் மாயை என்றும் ஆனந்தமயமான நான் மட்டுமே உண்மை என்றும் வேதம் கூறும் கருத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். புலன்கள் அறிவிக்கும் செய்திகளை வேதம் கூறும் உண்மையுடன் ஒப்பிட்டு இது பொய் என்று நமக்கு நாமே கூறிக்கொள்வது அவசியம். முடிந்தவரை நம்முடைய செயல்கள், உறவுகள், உடைமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை குறைத்துக்கொண்டால் உலகம் உண்மை என்ற தவறான அறிவு மறைந்து ஞானம் தோன்ற வாய்ப்பு அதிகமாகும்.
முடிவுரை :
பசியை தீர்க்க உணவு உண்ண ஆரம்பித்தபின் எப்பொழுது பசி தீரும் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. உண்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம். அதுபோல் ஞானத்தைப்பெற வேதம் படிக்க ஆரம்பித்தவர்கள் எப்பொழுது ஞானம் வரும் என்ற கேள்வியை பொதுவாக கேட்க மாட்டார்கள். வேதம் படிப்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம்.
உணவு சுவையாக இருக்கிறது என்று பசி தீர்ந்தபின்னும் தொடர்ந்து சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். அதுபோல இனிமையான அனுபவம் என்று வேதத்தை படித்துக்கொண்டே இருக்ககூடாது. ஆனந்தமயமான பரமன் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்ற வேதத்தில் கூறப்பட்ட ஒரே கருத்தை திரும்பத்திரும்ப படிப்பதில் பயனில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வேதத்தின் அடிப்படையில் உபதேசிக்கும் உண்மைகளை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டு கூடிய விரைவில் ஞானம் பெற முயல வேண்டும்.
நூற்றியெட்டு உபநிடதங்களை உள்ளடக்கிய நான்கு வேதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை மற்றும் இவற்றை ஆதாராமாக கொண்டு எழுதப்பட்ட நூல்கள் என ஆன்மீக நூல்கள் ஏராளமாக உள்ளன. இவையனைத்தையும் படித்து முடிப்பது நமது குறிக்கோள் அல்ல. ஞானம் பெறுவது மட்டும்தான் நம் நோக்கம்.
வித்யாரண்ய சுவாமிகள் ஞானம் பெற ஐந்து கோசங்களை ஆராயச்சொல்கிறார். தேங்காயின் மட்டை, ஒடு ஆகியவற்றை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது போல் உடல், மனம், பிராணன் என்று ஒவ்வொரு கோசத்தையும் ஆராய்ந்து இது நான் அல்ல என்று ஒதுக்கித்தள்ளி நான் பரமன் என்ற ஞானத்தைப்பெறவேண்டும். இதை செய்துமுடித்த பின்கூட என்னைக்கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுபவன் எனக்கு நாக்கு இல்லை என்று உரக்க கத்துபவனை போன்று பரிதாபத்துக்குரியவன் என்கிறார் வித்யாரண்யர்.
வேதத்தை படித்து தேற ஓரிரு வருடங்கள் ஓயாமல் உழைத்தபின்னும் ஞானம் ஏற்படவில்லையென்றால் தொடர்ந்து தர்ம காரியங்கள் செய்வது, கடவுளை பிரார்த்திப்பது, வேதம் படித்து படித்ததை ஆராய்வது என்பது போன்ற ஆன்மீக செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்ககூடாது. மாணவப்பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் முயற்சியை பகுதிநேர வேலையாக மாற்றிக்கொண்டு இல்வாழ்வை துவங்க வேண்டும். இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்ய அதிக நேரம் செலவிட்டு ஞானம் பெற செய்யும் செயல்களை குறைத்துக்கொள்ள வேண்டும். மனம் பக்குவப்பட்டபின் ஏற்கனவே செய்த முயற்சிகளின் பலனாக விரைவில் ஞானம் ஏற்படும்.
பயிற்சிக்காக :
1. ஞானம் பெறுவது என்றால் என்ன?
2. ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா?
3. மற்ற புத்தகங்களுக்கும் வேதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
4. ஞானத்திற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?
5. ஞானம் பெற ஆசிரியரின் உதவி தேவை என்பதை விளக்குக.
6. மூன்று வகை ஆசிரியர்கள் யார்?
7. ஞானம் பெற ஆசிரியரை தனியாக அணுக வேண்டிய காரணம் என்ன?
8. விரைவில் ஞானம் பெறுன் வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய இரு செயல்கள் என்ன?
9. ஞானம் பெற தேவையான தகுதிகள் யாவை?
10. ஞானம் பெற தடைகளாக இருப்பவை எவை?
11. தடைகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?
சுயசிந்தனைக்காக :
1. ஆசிரியர் மற்றும் வேதம், இவ்விரண்டில் எது மிகவும் முக்கியம்?
2. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இருக்க வேண்டிய உறவை ஆராய்க.
3. மாணவன் ஆசிரியரிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தையும் கேள்வி கேட்கவேண்டிய விதத்தையும் ஆராய்க.
4. ஞானம் பெற்றுவிட்டோம் என்று நமக்கு எப்படித்தெரியும்?
5. அத்வைதம், துவைதம் போன்றவை ஃபிலாசபிகளா?
6. மற்ற துறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் வேதம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.