Thursday, November 24, 2011

Lesson 161: Life long effort (Brahmasutram 4.1.12)


பாடம் 161: வாழ்நாள் முழுவதும் தியானம் செய்யவேண்டும்
பாடல் 489 (IV.1.12)

முக்தியடையாதவர்கள் சாகும்வரை தொடர்ந்து தியானம் செய்யவேண்டும் என்ற வேதத்தின் கட்டளையை விளக்கி கடவுளை குறித்து செய்யப்படும் தியானத்தால் ஏற்படும் பலனை ஞானத்தினால் கிடைக்கும் பலனுடன் இந்த பாடம் ஒப்பிடுகிறது.

நான் பரமன் என்ற அறிவு ஏற்படும்வரை தியானம் செய்தால் போதும் என்று முக்திவிழைவோர்களுக்கு கூறும் வேதம் இந்த அறிவை அடையாதவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தியானத்தை தொடரவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

எவ்வித குணமும் இல்லாமல் எதனுடனும் சம்பந்தப்படாமல் என்றும் இருப்பவன் நான் என்று அறியாதவர்கள் ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கலவையான மாயா சக்தியுடன் கூடிய பரமனை தங்கள் மனதுக்கு பிடித்த ஈஸ்வர வடிவத்தில் தியானம் செய்யலாம். ஒளியை பிரதானமாக கொண்ட காக்கும் கடவுளான விஷ்ணு, அவரது துணைவரான செல்வங்களை கொடுக்கும் லக்ஷ்மி, சக்தியை பிரதானமாக கொண்ட படைக்கும் கடவுளான பிரம்மன், அவரது துணைவரான அறிவை கொடுக்கும் சரஸ்வதி, ஜடத்தை பிரதானமாக கொண்ட அழிக்கும் கடவுளான சிவன் மற்றும் அவரது துணைவரான சக்தியை கொடுக்கும் பார்வதி ஆகியோரின் வடிவங்களான எண்ணிலடங்கா கடவுளர்களில் யாரேனும் ஒருவரை தங்கள் இஷ்ட தெய்வமாக தேர்ந்தெடுத்து வாழ்நாள் முழுவதும் அவர் மேல் தொடர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

சாகும்பொழுது கடைசி தருணத்தில் கடவுளைப்பற்றிய எண்ணங்கள் மனதில் இருக்கவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்து தொடர்ந்து தியானம் செய்வது அவசியமாகிறது. ஏனெனில் எப்பொழுது மரணம் ஏற்படும் என்று அறிந்துகொள்ள முடியாது என்பதால் தியானம் செய்வதை ஒத்திவைக்க முடியாது. மேலும் எதன் மீது நமது நாட்டம் இருக்கிறதோ அதைப் பற்றிய எண்ணகள்தான் மனதில்  நிறைந்து இருக்கும் என்பதால் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தாலும் திடீரென்று கடவுளைப்பற்றிய தியானம் செய்யமுடியாது. எனவே மரணத்திற்கு பிறகு முக்தியடைய வேண்டும் என்று விரும்பும் இவர்கள் தங்கள்  வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. மேலும் இவ்வகை தியானம் முக்தியடைவதற்கு ஈடான பலனை இந்தப்பிறவியிலேயே கொடுக்கும்.

இருவகை தியானங்கள்

பற்றுடையோர்கள் முக்தியடைவதேயில்லை. முக்திவிழைபவர்கள் அனைவரும் முக்தியடைவதில்லை. அவர்களில் தகுதி வாய்ந்த ஒரு சிலர் மட்டுமே தீவிர முயற்சிக்குபின் முக்தி வேட்கை அகன்ற முற்றுணர்ந்தோர்களாக மாறுவார்கள். மற்றவர்கள் தங்களுக்கு இந்தப்பிறவியில் முக்திகிடையாது என்று முடிவெடுத்து மறுபிறவியில் நற்கதி கிடைக்கவேண்டும் என்று தங்களுடைய இஷ்டதெய்வத்தை தொழுவதில் திருப்தியடைந்துவிடுவார்கள்.

தீவிர முயற்சியும் ஆர்வமும் உள்ள முக்திவிழைவோர்கள் குணங்களற்ற பரமனை தான் என்று தியானம் செய்து தங்கள் முயற்சியில் வெற்றிபெறுவார்கள். தான் பரமன் அல்ல என்ற உறுதியுடன் இருப்பவர்கள் சர்வ குணங்களுடன் கூடிய இறைவனை தியானம் செய்து மறுபிறவியில் முக்தியடைய முயற்சிப்பார்கள். முதல் வகை தியானம் முக்தியடைந்தபின் முடிவுக்கு வந்துவிடும். இரண்டாம் வகை தியானம் வாழ்நாள் முழுவதும் தொடரப்பட வேண்டும்.

முதல் வகை தியானம்

ஐந்து புலன்களால் அறியப்படும் உலகப்பொருள்கள் அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அவற்றின் மாறாத இருத்தலில் கவனம் செலுத்தி தனது இருத்தல் என்ற தன்மைதான் உலகின் இருப்பிற்கு ஆதாரம் என்ற எண்ணம் முதல் வகை தியானம். வடிவங்கள் மற்றும் பெயர்கள் என்ற ஒளி-ஒலி காட்சியின் மாறாத இருத்தல் நான் என்ற இந்த தியானம் கனவில் காணும் பொருள்கள் எல்லாம் என்னைச்சார்ந்து இருப்பது போல் இவ்வுலகம் முழுவதற்கும் நான் தான் ஆதாரமாக இருக்கிறேன் என்ற உண்மையை ஆழ்மனதில் பதியவைக்கும்.

எதிரில் தெரியும் நாற்காலியாக இருப்பதும் நான் அதன் மீது அமர்ந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் மனிதரும் நான் என்பது போன்ற எண்ணங்களை மனதில் நிலைநிறுத்தினால் என்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது தெளிவாகும்.

ஐந்து புலன்கள் சித்தரிக்கும் உலகத்தை பற்றிய எண்ணங்கள் மனதில் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அவற்றின் மாறாத ஆதாரமான உணர்வின் மீது கவனத்தை செலுத்தி அந்த உணர்வுதான் நான் என்று தியானம் செய்தால் அறியும் சக்தியை மனது என்னிடமிருந்து கடன்வாங்கி புலன்களை இயக்குகிறது என்ற அறிவு நிலைத்து அறிபவனாகிய நான் என்றும் அமைதியானவன் என்பது புரியும்.

அறிபவனான நான் அறியும் பொருளாகவும் தென்படுகிறேன் என்ற உண்மையை தியானிப்பதால் இந்த அறிவு மனதில் நிலைபெற்று ஆனந்தம் வேண்டும் என்று அலைபாயும் தவிப்பு ஒரு முடிவுக்கு வந்துவிடும். வெளியே இருக்கும் உலகமும் உள்ளே தோன்றும் எண்ணமும் மாற்றத்திற்குட்பட்டது என்பதால் மாறாத எனக்கு உலகத்தை மாற்றவேண்டும் என்ற ஆசையோ மனதின் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்ற அவசியமோ கிடையாது. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது என்று அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக இருப்பவர்கள் மேற்கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இரண்டாம் வகை தியானம்

இறந்தபின் மீண்டும் பிறவா வரம் வேண்டும் என்று கேட்கும் முக்திவிழைவோர்கள் நடப்பது அனைத்தும் நாரணன் விளையாட்டு என்று தன்னிலிருந்து வேறுபட்ட ஒரு கடவுளின் மீது அனைத்து பாரங்களையும் போட்டுவிட்டு எனக்கென்ன மனக்கவலை என்று உலகதுன்பங்களிலிருந்து முழுதும் விடுபடுவார்கள்.   

தனது உடல் மனது உட்பட்ட உலகில் உள்ள அனைத்தும் காணும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளின் சொத்து என்றும் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்றும் உறுதியாக நம்புவதால் தினமும் தனது இஷ்ட தெய்வத்தை போற்றி வழிபட்டு இவர்கள் செய்வது இரண்டாம் வகை தியானம்.

வாழ்வில் ஏற்படும் துன்பங்களை தங்கள் முன்னேற்றத்திற்காக கடவுள் வைக்கும் சோதனைகள் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தொடர்ந்து செய்யும் தியானத்தால் இவர்களுக்கு ஏற்படும். முக்தியடைய தகுதியானவனாக தன்னை மாற்றும் பொறுப்பையும் இவர்கள் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டதால் எவ்வித கவலையும் இன்றி இவர்கள் தியானத்தை தொடரலாம். கடவுளின் கருணையை தவிர வேறு ஒன்றும் வேண்டாம் என்று உலகப்பொருள்களின் மேல் இருந்த பற்று அனைத்தையும் துறந்த காரணத்தால் துன்பத்திற்கு காரணமான ஆசை ஏற்படாது. செய்யும் செயல்கள் அனைத்தையும் ஆண்டவன் கட்டளையாக கருதி அவனுக்கு தொண்டு செய்யும் மனப்பாங்குடன்  செய்வதால் பற்றுடையோர்கள் படும் துன்பம் இவர்களுக்கு இருக்காது. கிடைக்கும் பலன் அனைத்தும் அவனது பிரசாதம் என்று வேறு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனவே வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கு நான் பொறுப்பு அல்ல என்று அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு இவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

இருவகை தியானங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்

வெளியுலகில் முயற்சி செய்து துன்பம் கலவா இன்பத்தை பெற முடியாது என்று உணர்ந்த பற்றுடையோர்கள் முக்திவிழைவோர்களாக மாறுவது ஒருவழிப்பயணம். எவ்வளவு முயன்றும் முக்திகிடைக்கவில்லை என்று மீண்டும் உலகின் மேல் பற்று வைத்து இவர்கள் பற்றுடையோர்களாக மாறமாட்டார்கள்.  முக்திவிழைவோர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் முக்தியடைந்துவிடுவார்கள் என்று கூறலாம். ஏனெனில் முக்தியடையாதவர்கள் கூட கடவுள் நிச்சயம் முக்தியளிப்பார் என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாகவும் இன்பதுன்பங்களை சரிசமமாக ஏற்றுக்கொண்டு முக்தியடைந்தவர்களைப்போல் என்றும் இன்பத்துடன் வாழ்வார்கள்.

எதையும் தாங்கும் இதயத்தை கொடுக்கின்றன என்ற நோக்கில் பார்க்கும்பொழுது  இருவகை தியானங்களும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் முதல்வகை தியானம் முக்தியடைந்தபின் முடிவுக்கு வந்துவிடும். இரண்டாம் வகை தியானம் வாழ்நாழ் முழுவதும் செய்யப்படவேண்டும். முதல் வகை தியானம் தான் இவ்வுலகின் ஆதாரம் என்ற ஒரு அறிவை நம் மனதில் ஏற்படுத்துகிறது. இரண்டாம் வகை தியானம் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை மனதில் நிலை நிறுத்துகிறது.

அறிவும் நம்பிக்கையும்

நான் இவ்வுலகின் ஆதாரம் என்ற அறிவு நம் மனதில் ஏற்படுத்தும் மாற்றத்திற்கும் கடவுள் நம்பிக்கை நம் மனதில் ஏற்படுத்தும் மாற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அறிவு மாறாது. நம்பிக்கை மாறாமலிருக்க தியானம் அவசியம்.

மனதில் கடவுள் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணம் நிலைக்க தீவிர ஆசையும் முயற்சியும் தேவை. ஆனால் நான் பரமன் என்ற அறிவு எவ்வித ஆசையும் முயற்சியும் இல்லாமலேயே மனதில் நிலைத்து இருக்கும்.

வேலை கிடைத்து நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையால் மிகுந்த முயற்சி செய்து படிப்பை முடிக்கும்பொழுது தானாக அறிவு ஏற்பட்டிருக்கும். அது போல துன்பங்கள் அகலவேண்டும் குறையாத இன்பத்தைப்பெறவேண்டும் என்ற தீவிர ஆசையுடனும் விடாமுயற்சியுடனும் வேதம் படித்தால் நான் பரமன் என்ற அறிவு மனதில் தானாக ஏற்பட்டு விடும். மனதில் ஏற்பட்ட அறிவை அகற்றத்தான் முயற்சியும் ஆசையும் தேவையே தவிர அறிவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நான் மனிதன் என்ற தவறான அறிவை அகற்றுவது சரியான அறிவால் மட்டுமே முடியும். நான் பரமன் என்ற அறிவு சரியான அறிவு என்பதால் அந்த அறிவை மாற்றவோ அழிக்கவோ முடியவே முடியாது. நான் பரமன் என்ற அறிவைப்பெற இயலாதவர்கள் மட்டுமே தான் கடவுளின் கையில் இருக்கும் ஒரு பொம்மை என்ற நம்பிக்கையை மனதில் நிலைநிறுத்த தொடர்ந்து தியானம் செய்யவேண்டும்.

கல்லை கல்லாக பார்ப்பது அறிவு. கல்லை கடவுளாக பார்ப்பது நம்பிக்கை.

கல்லை கல்லாக பார்ப்பதில் நமக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை. ஏனெனில் கல் கல்தான். அதுபோல நான்தான் இவ்வுலகமாக காட்சியளிக்கிறேன் என்ற அறிவு ஏற்பட்டதும் உலகை வேறாக நம்மால் பார்க்க முடியாது. ஆனால் எந்தக்கல்லை எந்த கடவுளாக பார்ப்பது என்பதில் நமக்கு ஒரு சுதந்திரம் இருப்பதால் கல்லில் கடவுளை பார்க்க தொடர்ந்த தியானம் தேவை.

உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை மனதில் இருத்த தியானம் அவசியம். உலகம் என்னால் என்னிலிருந்து எனக்காக படைக்கப்பட்டது என்பது அறிவு. இந்த அறிவை மனதிலிருந்து அகற்ற முடியாது.

தன்னிலிருந்து வேறுபட்ட இவ்வுலகம்தான் தனது துன்பத்திற்கு காரணம் என்ற தவறான அறிவு பற்றுடையோர்களிடம் நிலைத்து இருக்கும். இதற்கு நேர்மாறாக நீதான் உலகம் என்ற சரியான அறிவை முக்திவிழைவோர்களுக்கு நேரடியாக ஏற்படுத்துவது கடினம் என்பதால் உலகத்தை படைத்தவன் கடவுள் என்ற கருத்தை ஒரு படிக்கட்டாக வேதம் பயன்படுத்தியுள்ளது. படியை பயன்படுத்தி சரியான அறிவை பெற்ற முக்திவிழைவோர்கள் முற்றுணர்ந்தோர்களாகிறார்கள். அவ்வாறு இல்லாமல் அதேபடியில் நின்று கடவுள் நம்பிக்கையுடன் வாழும் மற்றவர்கள் அந்த நம்பிக்கை நிலைக்க தியானம் என்ற செயலை தொடர்ந்து செய்யவேண்டும்.

செயல்களின் பலன்

இல்லாத பொருளை அடைவது அல்லது உருவாக்குவது மற்றும் இருக்கும் பொருளை மாற்றுவது அல்லது தூய்மைபடுத்துவது போன்றவை செயல்கள் செய்வதால் மட்டுமே சாத்தியமாகும். எப்படி சமைப்பது என்ற அறிவு மட்டும் இருந்து அதை செயல்படுத்தாவிட்டால் சாப்பிடமுடியாது. செயல்கள் செய்வதால் மட்டுமே உலகில் உள்ள பொருள்களை அனுபவிக்க முடியும். படிப்பதனால்தான் அறிவு ஏற்படும் என்றாலும் அறிவினால் நேரடியாக பலன் கிடைப்பதில்லை.

செயல்கள் செய்வதால் கிடைக்கும் பலன்கள் எதுவும் நிலையாக இருப்பதில்லை. துடைத்துவைத்த பொருள் மீண்டும் அழுக்காகும். எனவே தொடர்ந்து செயல்களை செய்வது அவசியமாகிறது. அறிவு மட்டும்தான் அழிவதில்லை. ஏற்கனவே ஏற்பட்ட அறிவை தக்கவைத்துக்கொள்ளவோ பாதுகாக்கவோ எந்தவித செயலையும் செய்ய வேண்டாம். அறிவைத்தவிர மற்ற அனைத்தும் அழிந்துவிடும் தன்மையுடையவை என்பதால் உலகை அனுபவிக்க தொடர்ந்து செயல் செய்ய வேண்டியது அவசியம்.

அறிவினால் கிடைக்கும் பலன்

செயல் செய்ய அறிவு வேண்டும். எனவே செயல்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் அறிவினால்தான் எனலாம். பொதுவாக அறிவு நேரடியாக எவ்வித பலனையும் கொடுப்பதில்லை. இந்த விதிக்கு ஒரே ஒரு விதிவிலக்கு உள்ளது. நான்தான் இந்த உலகத்தின் இருப்புக்கு ஆதாரம் என்ற வேதம் கூறும் உண்மையை அறிவதால் மட்டுமே நம்மால் முக்தியடைய முடியும். இதைத்தவிர மற்ற அறிவு எதுவும் செயலாக மாற்றம் பெற்றபின்தான் பலனை அளிக்கும். எனவேதான் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்ற அறிவு தொடர்ந்து தியானம் செய்தல் என்ற செயலாக மாறினால்தான் நமக்கு நிம்மதி என்ற பலனை கொடுக்கும். ஒரு சில காலம் தியானம் செய்த பின் நிறுத்திவிட்டால் மறுபடியும் நமது நிம்மதி குறைந்து மீண்டும் தியானம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்.

பக்கத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் நண்பன் ‘பணம் காணவில்லை’ என்று உளரும்பொழுது ‘காவல் நிலையத்தில் புகார் செய்’ என்று அவனை மேலும் செயல் செய்ய தூண்டுவதைவிட எழுப்பிவிடுவதுதான் சிறந்தது. அதுபோல உலகத்தில் விரும்பும் பொருள்களை அடையவும் வேண்டாதவற்றை தவிர்க்கவும் தொடர்ந்து இங்குமங்கும் அலைந்து திரிந்து செயல் செய்யும் மக்களுக்கு உலகம் இருப்பதாக தோன்றுவது மாயை என்ற உண்மை அறிவை கொடுத்தால் அவர்களது துன்பங்கள் அனைத்தும் ஒரு நொடியில் மறைந்துவிடும்.  

இருக்கும் பொருள்களை காப்பாற்றவும் இல்லாத பொருள்களை சம்பாதிக்கவும் எவ்வித செயல்களும் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை என்ற அறிவு நிரந்தர அமைதியை கொடுக்கும். இந்த அறிவை பெற இயலாத முக்திவிழைவோர்கள் தொடர்ந்து தியானம் என்ற செயலை செய்து அதே பலனை பெறலாம். கனவில் நம்மை குத்தும் கத்தி எண்ணத்தால் உருவானது என்ற அறிவு ஏற்படும் வரை அது இரும்பால் செய்யப்பட்ட ஆயுதம் அல்ல என்ற தியானம் அவசியம்.

இது மாறும்

நிம்மதியாக இருக்கும் நான் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற அறிவு கனவின் நிகழ்வுகளை தொடர்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை நமக்கு கொடுக்கும். நான் என்ற அகங்காரத்தை நாம் ஏற்று நடிக்கும் பாத்திரமாக அறிந்து இந்த உலகம் என்ற நாடகமேடையில் வாழ்வு என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே அதை எவ்வித துன்பமுமில்லாமல் தொடர்ந்து அனுபவிக்கலாம். எவ்வளவு நாட்கள் இந்த நாடகம் நடக்கும் என்பதோ அதில் நிகழும் சுவாரஸ்யமான திருப்புமுனைகள் எந்த வழியில் நம் வாழ்வை திருப்பிவிடும் என்பதோ நமக்கு தெரியாது. ஆனால் ‘இது மாறும்’ என்பது மட்டும் மாறாத உண்மை. வாழ்க்கை நாடகத்தின் சோககட்டம் வெகு விரைவில் மாறி இன்பத்திற்கு வழிவகுக்கும். எல்லாம் நலம் என்ற நிலையும் விரைவில் மாறும். உச்சகட்டம் என்று பெயரிடப்பட்ட தனிப்பட்ட காட்சி எதுவும் வாழ்வு எனும் நாடகத்தில் கிடையாது. வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அதன் உச்சகட்டம்தான். எந்த நிலையில் நாம் இருந்தாலும் அந்த நிலையும் விரைவில் மாறிவிடும். ‘இது மாறும்’ என்ற ஒரே விதியை மாறாமல் பின்பற்றும் இந்த வாழ்வில் அவனும் அவளும் இணைபிரியாமல் இறுதிவரை இனிதே வாழ்ந்தார்கள் என்பது போன்ற நம்ப முடியாத முடிவு காட்சிகள் செயற்கையாக நாம் உருவாக்கும் கற்பனைகதைகளில் மட்டுமே இடம் பெறும்.

இது மாறும் என்ற நியமத்தை ஒரு பொது அறிவாக வார்த்தையளவில் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அந்த மாற்றம் தான் விரும்பிய மாதிரி நடக்காவிட்டால் என் வாழ்வில் இது எப்படி நிகழலாம் என்று வருத்தப்படுவதை தவிர்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் ‘இது மாறும்’ என்பது அறிவாக மனதில் பதியாததுதான். மேலும் உலகின் தொடர்ந்த மாற்றத்திற்கு ஆதாரமாக மாறாமல் இருப்பது நான் என்பதை புரிந்து கொள்ளாததும் இதுபோல் துக்கப்படுவதற்கு ஒரு காரணம். சாத்தான் என்று மற்ற மதங்களால் வர்ணிக்கப்படும் மாயை தன் கவர்ச்சி நடனத்தை ஆடி நம் மனதை மயக்குவதன் மூலம் தான் வெறும் ஒளி-ஒலி காட்சி என்ற அறிவை நம் மனதில் ஏற்படுவதை தடுக்கிறது. நான்தான் இந்த ஒளி-ஒலி காட்சியின் ஆதாரம் என்ற அறிவு ஏற்பட்டபின் மாயையின் நடனத்தை ஆனந்தமாக அனுபவிக்கலாம். நடனத்தின் ஒரு அங்கமாக நம் உடலும் மனதும் ஆடிக்கொண்டிருப்பதால் ஆட்டம் முடியும்வரை அறிவு ஏற்படாது என்று தவறாக முடிவெடுப்பவர்கள் மாயையின்  தலைவனான இறைவனை சரணடைந்து வாழ்நாள் முழுவதும் தியானம் செய்வதன் மூலம் துன்பமான வாழ்வு மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

முடிவுரை :

கனவில் பணம் தொலைந்ததால் கலவரப்படும் மனம் தான் செயல்பட ஆதாரமாக இருக்கும் மனிதனை தானாக அறிந்துகொள்ள முடியாது. கனவிலிருந்து விழித்தால் மட்டுமே படுக்கையில் படுத்திருப்பவனை அறியமுடியும். அதுபோல இவ்வுலகில் தான் செயல்பட ஆதாரமாக இருக்கும் பரமனை மனம் அறிந்துகொள்ள வேதம் குரு மூலமாக உதவுகிறது. வேறு வழியில் இந்த அறிவை மனம் அடையவே முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தேன் என்ற உண்மை விழித்தபின்தான் விளங்குகிறது. அதுபோல் இந்த மாயையின் நடனத்திலிருந்து விழித்துக்கொள்வது மரணத்திற்கு பின்கூட சாத்தியமில்லை. ஏனெனில் மனம் இல்லாமல் எவ்வித அறிவையும் அடையமுடியாது. மனம் அதில் ஏற்படும் அறிவு ஆகிய இரண்டும் அந்த நடனத்தின் ஒரு பகுதி என்பதால் அந்த அறிவைப்பெற நாம் தயார் நிலையில் இருக்கும்பொழுது குருவின் வாயிலாக உண்மை விளங்கும்.

தான் விழிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உறங்குபவர்களை எழுப்ப முடியாது. அதுபோல அனைத்து முக்திவிழைவோர்களையும்  உண்மையை அறிந்த குருவால் எழுப்பி விட முடியாது. விழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் மெல்ல தொட்டால் கூட உடனே எழுந்துவிடுவார்கள். மாறாத உணர்வுதான்  நான் என்ற வாழ்வின் மிகமுக்கியமான அறிவை அடைய தயாராய் இருப்பவர்கள் குருவின் துணையுடன் மிக எளிதாக முற்றுணர்ந்தோனாக மாறிவிடுவார்கள். மாறும் மாயாநடனத்தில் மூழ்கி உண்மையை அறிய இயலாதவர்கள் மாயையின் தலைவனான இறைவனை துதி செய்து துன்பமில்லா வாழ்வை அடைவார்கள்.

ஆங்கிலேயேர்களின் ஆட்சி முடிந்து அநேக வருடங்கள் ஆன பின்னும் அவர்கள் ஆளப்பிறந்தவர்கள், நாம் அடிமைகள் என்ற தாழ்வு மனப்பான்மை பலருக்கு இருப்பதுபோல் ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனிடம் நான் ஒரு தொழிலாளி என்ற மனப்பக்குவத்துடன் இருப்பவர்களால் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கிரகங்களும் கொண்ட இந்த பரந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குவது நான்தான் என்ற உண்மையை புரிந்து கொள்வது கடினம். எனவே இவர்கள் என்றும் இன்பமாக இருக்கும் வாழ்வை இறந்தபின் கொடுக்கும்படி கடவுளிடம் தொடர்ந்து தியானம் செய்து வேண்டிக்கொள்வதை தவிர்க்க முடியாது.

இது மாறும் என்று புரிந்துகொண்டவர்கள் மாற்றத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. மாறாமல் இருக்கும் ஒன்றை அறிந்தவர்கள் முக்தியடைவார்கள்.

பயிற்சிக்காக :

1. யார் வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டும்?

2. இறக்கும் தருவாயில் கடவுளைப்பற்றிய எண்ணங்கள் மனதில் இருந்தால் போதாதா? எதற்காக வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டும்?

3. இந்தப்பாடத்தில் குறிப்பிடப்பட்ட கடவுளர்கள் யார் யார்?

4. இருவகை தியானங்களை விளக்குக.

5. இருவகை தியானங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன?

6. இருவகை தியானங்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் என்ன?

7. நம்பிக்கைக்கும் அறிவுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் என்ன?

8. கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் பலன் என்ன?

9. நான் பரமன் என்ற அறிவால் ஏற்படும் பலன் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. நான் பரமன் என்று அறிந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் தியானம் செய்ய வேண்டாமா?

2. அனைத்து மதங்களைச்சேர்ந்த உண்மையான பக்தர்கள் அனைவரையும் முக்தியடைந்தவர்கள் என்று கருதமுடியுமா?

3.முக்தியடைந்தவர்களுக்கும் முற்றுணர்ந்தோர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

Tuesday, November 15, 2011

Lesson 160: Time and place does not matter (Brahmasutram 1.4.11)


பாடம் 160: இடமும் காலமும் அமைதிக்கு தடையல்ல
பாடல் 488 (IV.1.11)

தியானம் செய்ய எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி அமரவேண்டும் மற்றும் எந்த நேரத்தில் தியானம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு இடம், திசை, நேரம் ஆகியவற்றால் நம் அமைதியை பாதிக்கமுடியாது என்றும் ஏனெனில் இவை அனைத்தும் மாயை என்றும் இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.

உலகில் இன்பம் இல்லை என்று அதை ஒதுக்கிவிட்டு வேதம் படித்து இந்த உலகம் என்னால் எனக்காக படைக்கப்பட்டு என்னை ஆதாரமாக கொண்டு இயங்குவது என்று அறிந்து கொண்டதும் உலகை தவிர்க்கவேண்டிய அவசியம் இருப்பதில்லை. மன அமைதிக்காக எதையும் நாடி ஓட வேண்டாம். எதைக்கண்டும் அஞ்சி அகல வேண்டாம்.

நண்பர்களைத்தேடி அவர்கள் வீட்டுக்கு செல்லமாட்டோம் என்றோ அங்கு நமக்கு பிடிக்காதவர்கள் இருந்தால் வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றோ இதற்கு பொருள் அல்ல. கனவில் தோன்றும் அனைத்துக்காட்சிகளும் தானாக நடப்பவை. அதுபோல இவ்வுலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தானாக நிகழ்பவை. கனவில் என் செயல்பாடுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியாதோ அதேபோல் இவ்வாழ்விலும் நான் எதையும் செய்வதில்லை. நாடி ஓடுவதோ அஞ்சி அகலுவதோ வெறும் காட்சிப்பிழைகள். இவற்றுடன் எவ்வித உறவும் இல்லாமல் என்றும் அமைதியுடனும் ஆனந்தத்துடனும் இருப்பவன் நான்.

என்னால் எவ்வித செயலையும் செய்யமுடியாது. என் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை என்னால் எப்படி தீர்மானிக்கமுடியாதோ அதே போல் அவற்றில் எந்த எண்ணம் செயலாக மாறப்போகிறது என்பதுவும் என் கையில் இல்லை.   ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா அல்லது எப்படி செய்வது என்பது போன்ற எண்ணங்கள் எவ்வளவு காலம் என் மனதில் அலைபாயும் என்று என்னால் தீர்மானிக்க முடியாது. அதேபோல் எப்பொழுது ஒரு தீர்மானத்திற்கு வந்து என்ன செயலை எப்படி செய்வேன் என்றும் எனக்குத்தெரியாது.

உன்னால் முடியும் என்று பற்றுடையோர்களை ஊக்குவிக்கும் வேதம் நான் என்ற அகங்காரம் நம் மனதில் தோன்றும் வெறும் எண்ணம் என்பதால் நாம் எந்த செயலையும் செய்யமுடியாது என்று முக்திவிழைவோர்களுக்கு போதிக்கிறது.

நான் எதையும் செய்வதில்லை

நம் கனவில் ஒருவர் முட்டாள்தனமாக நடந்துகொண்டால் அதற்கு நாம் எப்படி பொறுப்பேற்றுக்கொள்வதில்லையோ அது போல நிஜவாழ்வில் நம் செயல்களுக்கு நாம் காரணமல்ல. ஏனெனில் நம்மால் எதையும் செய்யமுடியாது. செய்வதாக நினைத்துக்கொள்ளும் அகங்காரம் நம் மனதில் தோன்றும் ஒரு எண்ணம்.

அகங்காரம் என்ற எண்ணம் இல்லாமல் எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் இயங்கி வருகின்றன. மனிதன் மட்டும்தான் தான் இயற்கையிலிருந்து வேறுபட்டு இருப்பதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறான். இல்லாத உலகத்தை இருப்பது போல் காட்டும் ஒரு ஒளி-ஒலிகாட்சியில் நமது எண்ணங்கள் வெறும் ஒலிவடிவம். எனவே அகங்காரம் தான் செயல் செய்வதாக நினைப்பது அறிவீனம்.

கனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு நொடியில் செல்லமுடிவதற்கு காரணம் இடமும் காலமும் நமது கற்பனை என்பதுதான். இதே உண்மையை அறிவியலின் அடிப்படையில் ஐன்ஸ்டீன் நிரூபித்துள்ளார். எனவே இவ்வுலகில் நாம் காண்பதாக நினைக்கும் இடமும் காலமும் உண்மையில் இல்லை என்பதை உணர்ந்தால் நம்மால் எதையும் செய்யமுடியாது என்பது தெளிவாகும். கனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றது எப்படி உண்மையில்லையோ அதுபோல் இந்த உலகமும் நமது மாயாசக்தியால் உருவான கனவு என்பதால் நாம் அதில் எவ்வித செயலையும் செய்ய முடியாது.


நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றபின்தான் என்னால் கவலைப்படாமல் இருக்க முடியும் என்பது தவறு. ஏனெனில் எதையுமே செய்ய இயலாத என்னால் அறிவை நிலைபெறச்செய்ய முயற்சிக்க முடியாது. இறந்துபோன ஒருவரை கனவில் சந்தித்து அவரிடம் நீங்கள் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால் அவர் நான் உன் மனதினால் உருவாக்கப்பட்ட கற்பனை உருவம் என்று பதில் சொல்வதுபோல் நான் யார் என்பதை நமக்கு அறிவிக்கும் நமது குருவும் நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வடிவமே. இதனாலேயே உலகம் உருவானபொழுதே வேதமும் உடன் தோன்றியது என்று கூறப்படுகிறது. என்னால் படைக்கப்பட்ட பல்வேறு மனிதர்களுடன் உறவாடும்பொழுது நான் அவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் எப்படி தானாக நம் மனதில் தோன்றியதோ அது போல மனம் பண்பட்டபின் என் எதிரில் குரு தோன்றி நான் யார் என்று எனக்கு அறிவித்தபின் தானாக அந்த எண்ணம் மனதில் நிலைபெறும். 

முக்தி என்பதன் பொருள்

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உலகில் உள்ள பொருள்களை நாடி ஓடுபவன் பற்றுடையோன். அது முடியாது என்பதை புரிந்துகொண்டதும் வேதம் படித்து ஆனந்த மயமான பரமன் நான் என்ற அறிவில் நிலைபெற முயற்சி செய்பவன் முக்திவிழைவோன். யாரும் எதையும் செய்வதில்லை என்று அறிந்துகொண்டதால்  அந்த ஆசையே மனதிலிருந்து அகன்று முக்தியடைந்தவன் முற்றுணர்ந்தோன்.

இயற்கையும் செயற்கையும்

கனவில் தென்படும் ஆறு இயற்கையென்றும் அதன்மேல் கட்டப்பட்டிருக்கும் பாலம் செயற்கையென்றும் தரம் பிரிக்க முடியாது. ஏனெனில் அனைத்தையும் உருவாக்கியது நமது எண்ணங்கள். அதேபோல் ஒளிகதிர்களால் உருவான பொருள்களை மட்டுமே கொண்டது இவ்வுலகம். காடு இயற்கை நாடு செயற்கை என்பது தவறு. மனிதனால் எதையும் செய்யமுடியாது என்பதால் அவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அனைத்தும் இயற்கையை சேர்ந்தவை.

மனிதனால் மட்டும்தான் முக்தியடையமுடியும் என்று வேதம் சொல்வதற்கு காரணம் மனிதனுக்கு மட்டுமே முக்தியடையவேண்டிய தேவை இருப்பதால்தான். மற்ற உயிரினங்களோ ஜடப்பொருள்களோ  தங்களுக்கு செயல்படும் சுதந்திரம் இருப்பதாகவோ செயல்படுவதாகவோ தவறாக எண்ணிக்கொள்வதில்லை. எனவே மாறும் உலகின் மாற்றத்தின் ஒருபகுதியாக மனதில் ஏற்படும் மாற்றங்களை வேண்டியது வேண்டாதது என்று வகைபிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு   நடக்கும் ஒலி-ஒளி காட்சியை நிம்மதியாக பார்ப்பவன் முக்தியடைகிறான். அவன் மனதில் எவ்வித தேடலும் இல்லாததால் துன்பம் கலவா இன்பத்துடன் இருப்பான்.

சரியும் தவறும்

கனவில் நிகழும் நிகழ்வுகளை சரி தவறு என்று பாகுபடுத்தமுடியாது. அதுபோல இவ்வுலகத்தின் இயக்கம் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இணைந்த ஒன்றுபட்ட நடனம். இந்த ஒளி-ஒலி காட்சியில் எதுவும் தவறாக நடக்க வாய்ப்பேயில்லை என்பதால் எதையும் போற்றவோ இகழவோ தேவையில்லை. முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சை பருந்து தன் அலகால் குத்தி கொல்வது தவறு அல்ல.

பள்ளி செல்லும் அப்பாவிகுழந்தையை ஒருவன் கடத்திச்சென்று கொன்றுவிட்டான் என்பதும் இயற்கையாக நிகழும் நிகழ்வு. அந்த குற்றவாளியை தூக்கில் போட்டு தண்டிப்பது அந்த காட்சியின் தொடர்ச்சி. இந்த குற்றத்திற்கு தூக்குதண்டனை சரியா தவறா என்று நம் மனதில் நிகழும் பட்டிமன்றம் அந்த காட்சியின் வர்ணனை.

செயல்களில் அகங்காரத்தின் பங்கு

நாம் செய்யும் அனைத்து செயல்களும் இயற்கையில் நிகழ்பவை. செயல்கள் செய்யாமல் நம்மால் இருக்கவே முடியாது. எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் பொழுதும் உடலுக்கு வயதாகிக்கொண்டிருப்பது போல மனதிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாறும் எண்ண ஓட்டங்களில் நம் மனதில் தோன்றும் அகங்காரமும் ஒன்று. மாற்றங்களுக்கு நிகழ்வுகள் என்று பெயரிட்டு ‘நான் சும்மா இருக்கிறேன்’ என்று வர்ணனை செய்வதன் மூலம் ஏதோ செயல் செய்துவிட்டதாக அகங்காரம் கற்பனை செய்துகொள்கிறது.

கால்பந்தாட்டத்தில் பந்தின்பின் ஓடும் விளையாட்டுவீரனின் மனதில் அகங்காரம் முழுவதுமாக ஒடுங்கியிருக்கும். இயற்கையோடு முழுவதும் ஒன்றி பந்தை அடித்து அது கோலில் விழுந்தவுடன் வர்ணணையாளர் அந்த காட்சியை விவரிப்பதுபோல் அகங்காரம் தான் ஏதோ சாதித்துவிட்டது போன்று உணர்வதும் உடல் துள்ளி குதித்து அங்குமிங்கும் ஆடி கொண்டாடுவதும் இயற்கைகாட்சியின் ஒரு பகுதியே.

கோல்போடுவதற்குமுன் நான் இப்படி நினைத்தேன் என்று கடந்தகாலத்தையும் இதுபோல் விளையாடி அடுத்த கோலைப்போடப்போவதாக எதிர்காலத்தையும் கற்பனையில் உருவாக்கிகொள்ளும் அகங்காரத்திற்கு நிகழ்காலத்திற்குள் எட்டிப் பார்க்கும் சக்திகிடையாது. கோல் போடும் தருணத்தில் காணாமல் போயிருந்த அகங்காரம் தான்தான்  கோல்போட்டவன் என்று தவறாக நம்பிவிடுகிறது.

அதுபோல் நாம் செய்யும் வேலைகளில் ஒன்றி செயல்படும்பொழுது நான் இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன் என்று அகங்காரம் வர்ணனை செய்யாது. ஒரு செயலை செய்வதற்கு முன்னும் பின்னும் இருக்கும் ஓய்வு நேரங்களில் மனதில் எண்ணங்கள் தோன்றுவது இயற்கையானது. பொம்மையில் உள்ள விசைவில்லை சாவிகொடுத்து முறுக்கேற்றியபின்தான் அதை இயங்கவைக்க இயலுவதைப்போல் உயிரினங்கள் இயங்க அவற்றின் மனதில் எண்ணங்கள் உருவாவது அவசியம். எனவே அகங்காரத்தை அகற்ற வேண்டும் என்ற முயற்சி வெற்றிபெறாது.          

அகங்காரம் தரும் நேர்முக வர்ணனை

இடமும் காலமும் நமது மாயாசக்தியின் கற்பனையான வெளிப்பாடு. கடந்த காலம் என்பது நிகழ்காலத்தில் தொடர்ந்து நடக்கும் நாட்டியத்தை மனம் வர்ணிப்பதால் கற்பனையாக உருவாக்கப்பட்டது. கற்பனைக்கதைகளுக்கும் சரித்திரத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. ஏனெனில் இருப்பது நிகழ்காலம் மட்டும்தான்.

மாயா சக்தியின் ஒளி-ஒலி காட்சியில் ஒளியில் ஏற்படும் மாறுதல்கள் பிரபஞ்சத்தின் தோற்றமாக தெரிகிறது. தனிப்பட்ட பொருள்கள் என்று எதுவும் இல்லாமல் அதே சமயத்தில் அவை இருப்பதுபோல் காட்டும் ஒளி காட்சியை நம் மனம் ஒலி வடிவில் வர்ணனையாக பதிவுசெய்துகொள்கிறது. ஒலி ஒளியை விட மெதுவாகத்தான் பயணம் செய்யும் என்பதால் ஒலிவடிவான எண்ணங்களால் நிகழ்காலத்தில் செயல்பட முடியாது. நேற்று இரவில் நிலவைப்பார்த்தேன் என்பது நிகழ்காலத்தில் மனதினுள் ஏற்படும் ஒலி வர்ணனை. இது போன்ற ஒலிவர்ணனைகள் அனைவரது மனதிலும் ஏற்படுவதால் அதற்கு ஒரு உண்மைத்துவம் வந்துவிடுகிறது.

கனவில் நமக்கு எதிரே வரும் அழகான பெண்ணை எல்லோரும் கவனிப்பதால் அவள் உண்மையில் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணாக மாறிவிடமாட்டாள். பிறந்த தேதி, வளர்ந்த இடம் என்பதுபோன்ற சரித்திரம் கனவில் வரும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். ஆனாலும் அவை யாவும் கற்பனையே. அது போல வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையும் சந்திக்கும் மனிதர்களையும் உண்மையற்றவை என்று அறிபவன் முற்றுணர்ந்தோன்.

ஞானம் நிலைபெற்ற பின் தான் இதுபோன்ற உறுதியான எண்ணம் ஏற்படும் என்று நினைத்து ‘நான் பரமன்’ என்ற தியானத்தில் மூழ்கி உலகை தவிர்ப்பதனால் எவ்விதபயனும் ஏற்படாது. நடந்தால் பூதம் போல் தென்படும் நிழல் நம்மை துரத்தி பயமுறுத்துகிறது என்பதற்காக எங்கும் செல்லாமல் வீட்டில் படுத்துக்கொண்டு நிழலை அழிக்க வேண்டிய அவசியமில்லை. நிழல் பூதமல்ல என்ற அறிந்து கொண்டால் மட்டும்போதும். அதுபோல் துன்பம் தரும் எண்ணங்கள் மனதில் ஏற்படுவதை தவிர்க்க செயல்களை தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. துன்பம் தரும் நிகழ்வுகளை படம் பிடித்துக்காட்டும் எண்ணங்கள் மனதில் ஏற்பட்டாலும் காலம் என்பதே நமது கற்பனை என்பதால் நிம்மதியாக இருக்கலாம். எண்ணங்கள் என்னும் ஒலிவடிவமான சக்தி நிகழ்கால மாற்றங்களை கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்று இரண்டு கூறுபோடுகிறது. நிகழ்காலம் துன்பம் கலவா இன்பம்.

காலம் நமது கற்பனை

மாறும் உலகை மாயை என்று புரிந்து கொள்ளாமல் மாற்றங்களை முன் பின்  என்று வரிசைப்படுத்தி மூன்று காலங்களை கற்பனை செய்ததன் மூலம் அதற்கு ஒரு உண்மைத்துவத்தை ஏற்படுத்திகொடுத்திருப்பது நமது மனம். நாம் அறியாத ஒன்று நம் கனவில் இருக்க முடியாது. இருத்தல் என்பதற்கு அறிதல்தான் ஆதாரம் என்று வேதம் கூறும் உண்மையை அணுவை ஆராயும் அறிவியல் அறிஞர்கள் நிரூபணம் செய்துள்ளார்கள். எனவே கனவை உருவாக்குவதுபோல்தான் இந்த உலகத்தையும் நாம் பார்ப்பதனாலேயே உருவாக்கியுள்ளோம். இல்லாத இவ்வுலகத்திற்கு இடம், பொருள், காலம் என்ற பரிமாணங்களை கொடுத்து உண்மையாக இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு அதில் சிக்கிதவிப்பது நமது அகங்காரம்.

ஒருபொருளுக்கும் மற்றொருபொருளுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக நாம் நினைப்பதும் ஒரு கற்பனையே. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் ஒரு எலக்டரான் கூட உலகில் இல்லை என்று அறிவியலின் அடிப்படையில் நாம் அறியும் உண்மை நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒலிவர்ணனையுடன் கூடிய மாயாசக்தியின் ஒளிநடனத்திற்கு உலகம் என்று பெயரிட்டு அதன் மாற்றங்களுக்கு கற்பனையான காலத்தால் இடம் கொடுத்து கனவை நனவாக நம்பி துன்பப்படுவது நமது அகங்காரம்.

துன்பத்தை தவிர்க்க உலகத்தை மாற்றியமைக்க முயலுபவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்க்க தன் மனதை மாற்ற முயற்சிப்பவன் முக்திவிழைவோன். துன்பம் வெறும் கற்பனை என்பதால் அதை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன். இன்பத்தை பெறுவதற்காக துன்பத்தை அனுபவிப்பவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்ப்பதற்காக இன்பத்தை துறக்க தயாராய் இருப்பவன் முக்திவிழைவோன். இன்ப அனுபவமும் துன்ப அனுபவமும் தனது மாயாசக்தியால் உருவான கனவு என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் இது வேண்டும் அது வேண்டாம் என்ற பாகுபாடு எதையும் செய்யாமல் நடக்கும் ஒளி நடனத்தையும் ஒலி வர்ணணையையும் ஒருங்கே அனுபவிப்பான்.

இப்படி இருந்தால்தான் சரி என்ற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததால் ஒளி நடனத்தின் வடிவமாற்றங்களையும் அவற்றிற்கு அகங்காரம் கற்பிக்கும் பெயர் மாற்றங்களையும் எவ்வித மறுப்போ தடங்கலோ இல்லாமல் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் முற்றுணர்ந்தோன்  நிரந்தரமான அமைதியை அனுபவிப்பான்.   

காரண காரியம் நமது கற்பனை

அஜீரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து தரம் குறைந்த சாலையோர உணவகத்தில் உணவு உண்டது என்று கண்டுபிடித்துவிட்டோமானால் ஒரு குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். எந்த ஒரு காரணமும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் நாம் நம்மை  நிரபராதி என்று எண்ணிக்கொண்டு செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பதுபோல் உடல்நிலைக்குறைவை ஏற்றுக்கொள்வோம். அஜீரணம் என்பது எல்லோருக்கும் எப்பொழுதாவது ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து மாறும் உடலில் இது போன்ற துன்பங்கள் ஏற்படுவது இயற்கை. தினம் உண்ணும் உணவை செரிப்பதற்கு நாம் காரணம் இல்லை. அதுபோல் அவ்வப்பொழுது ஏற்படும் அஜீரணத்திற்கும் நாம் காரணம் அல்ல.

உடலைப்போல் மனதும் தொடர்ந்த மாறுதலுக்கு உட்பட்டது. மனதில் ஏற்படும் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் நிச்சயம். உலகில் ஏற்படும் மாறுதலுக்கு ஏட்ப மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு நாம் பொறுப்பு அல்ல. கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் திடீரென ஏற்பட்டால் அதற்கு காரணத்தை ஆராய்ந்து தான்தான் குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. கோல் போட தவறியதை வர்ணிக்கும் வர்ணனையாளர் மீது கோபப்படுவது நியாயமல்ல. உலக ஒளி நடனத்தை ஒலியாக வர்ணனை செய்யும் மனதின் இயல்பை மாற்ற முடியாது என்பதால் அகங்காரம் தன்னைத்தானே நொந்துகொள்வதில் பயன் இல்லை.

முடிவுரை :

இங்கிருந்து அங்கே போகவேண்டுமானால் காலமும் முயற்சியும் அவசியம். இங்கு அங்கு என்பதெல்லாம் வெறும் கற்பனை என்று அறிவியல் நமக்கு அறிவிக்கிறது. எனவே இந்த மாய உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நாம் எவ்வித முயற்சியும் செய்ய வேண்டாம். செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இப்படி இருக்கும் நான் அப்படி ஆகவேண்டும் என்பது இல்லாததை இருப்பதாக நினைக்கும் அகங்காரத்தின் ஆசை. இடம், பொருள், காலம் மற்றும் காரணகாரியம் போன்றவற்றை உண்மை என்று நம்பும் அறியாமை உள்ளவரை படிப்பறிவில்லாத ஏழைமக்களை ஏமாற்றும் அரசியல்வாதி போல் அகங்காரம் மனதை ஆட்டுவிக்கும்.  

எப்பொழுதுமே எவ்வித வேலையும் செய்யாமல் அனைத்தையும் சாதித்தது நான் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் அகங்காரத்தின் பிடியிலிருந்து விடுபட இடம், பொருள், காலம் போன்ற அனைத்தும் நம் கற்பனை என்ற உறுதியான அறிவு நமக்கு ஏற்படவேண்டும். அகங்காரத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மனம் விடுதலையடைந்தபின் அதை நாடுகடத்தவேண்டிய அவசியமில்லை.

முப்பரிமாணத்தை காட்டும் கண்ணாடியை அணிந்து திரைப்படத்தை பார்த்தால் அதில் தோன்றும் புலி நம் அருகில் வந்து பயமுறுத்துகிறது என்று கண்ணாடியை கழற்றவேண்டிய அவசியமில்லை. அகங்காரம் அனைத்து வேலைகளையும் செய்வது போல் தோன்றுவது வெறும் காட்சிபிழை என்பதை புரிந்துகொண்ட பின் அதன் விருப்பத்திற்கு ஆடவிட்டு அதன் ஆட்டத்தை ரசிக்கலாம்.

பற்றுடையோர்கள் மனம் பண்படாத மனம் என்பதால் அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் செய்யக்கூடாத செயல்களையும் பட்டியலிட்டு கொடுக்கும் வேதம் மனம் பண்பட்டபின் அறிவை அடையும் முக்திவிழைவோர்களுக்கு உண்மை எது பொய் எது என்று விளக்குகிறது. அகங்காரம் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் மனம் போனபடி வாழ்வார்கள்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

3. ஒளி எது, ஒலி எது?

4. செயல்களில் அகங்காரத்தின் பங்கு என்ன?

5. அகங்காரத்தால் ஏன் நிகழ்காலத்திற்குள் வரமுடியாது?

சுயசிந்தனைக்காக :

1. முக்திவிழைவோருக்கும் பற்றுடையோருக்கும் வேதம் கற்றுதரும் ஏன் வேறுபடுகிறது?

2. ஒளி-ஒலி யைத்தவிர உலகில் வேறு எதுவுமேயில்லையா?

Ref: The Quantum Apocalypse of The Holographic Universe at http://www.youtube.com/watch?v=4dpRPTwsKJs

Friday, November 4, 2011

Lesson 159: Restful among restless (Brahma Sutram 4.1.7-10)


பாடம் 159: அலைபாயும் அமைதி
பாடல் 484 – 487 (IV.1.7-10)

தியானம் என்பது மனதை அமைதிப்படுத்த மனதால் மட்டுமே செய்யப்படும் வேலை என்பதால் உடல் ஓய்வுநிலையில் இருப்பது அவசியமா என்ற கேள்விக்கு பதில் நம் நோக்கத்தைப்பொறுத்து மாறும் என்று இந்த பாடம் பதிலளிக்கிறது.

உடல் இயங்கிக்கொண்டிருக்கும்பொழுது மனதை அமைதிப்படுத்த முடியாது. நடப்பது, ஓடுவது, ஆடுவது போன்ற காரியங்களை செய்யும்பொழுது மனம் அமைதியில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. எனவே செயல்கள் எதையும் செய்யாமல் உடலை அமைதிப்படுத்தினால்தான் மனதை அடக்க முயற்சிச்செய்ய முடியும். அதே சமயம் எவ்வித வேலையும் செய்யாமல் உயிர் வாழவோ உலகவாழ்வை அனுபவிக்கவோ முடியாது.

பணம் சம்பாதிப்பது முக்கியமா செலவழிப்பது முக்கியமா என்ற கேள்விக்கு பதில் செலவழிப்பதற்காகத்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்வது போல் ஞானம் பெறும் வரை உடலை கட்டுப்படுத்தி தியானம் செய்யவேண்டும் என்றும் ஞானம் பெறுவது உலக சுகங்களை துன்பம் கலக்காமல் அனுபவிப்பதற்காகத்தான் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஊர் சுற்றி உலக இன்பங்களை அனுபவிக்கத்துடிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தங்கள் மனதின் தேடல்களை கட்டுப்படுத்தி பாடத்தில் கவனம் செலுத்துவதன் ஒரே நோக்கம் நல்ல மதிப்பெண்களுடன் தேறினால்தான் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். மாணவப்பருவம் முடிந்து வேலை பார்க்கத்துவங்கியவுடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் இளைஞர்கள் போல மனதை கட்டுப்படுத்தி வேதம் படிப்பதன் ஒரே நோக்கம் ஞானம் பெற்றதும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இன்பமாக வாழலாம் என்பதுதான்.

பணம் உலக சுகங்களையும் ஞானம் குறையாத இன்பத்தையும் தரவல்லவை. பெற்ற ஞானம் அழியாது. உலகப்பொருள்களை அனுபவிக்க ஒரு எல்லையில்லை. எனவே ஞானம் பெற்றபின் உடல் மற்றும் மனதில் திறமை இருக்கும்வரை தொடர்ந்து முயற்சி செய்து நிறைய பணம் சேர்த்து வாழ்க்கைத்தரத்தை அதிகரித்துக்கொள்ளுவதன் மூலம் மனம் விரும்பியபடி வாழ்வை அனுபவிக்கலாம்.

உலகப்பொருள்கள் செய்யும் மூன்று செயல்கள்

அறியாத பொருள் மேல் ஆசை வைக்க முடியாது. இன்பம் என்றால் என்ன என்று அறியாதவர்களால் எப்பொழுதும் இன்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைபட முடியாது. இந்த ஆசை எல்லோருக்கும் இருப்பதால் அனைவரும் தங்கள் வாழ்வில் இன்பத்தை அவ்வப்பொழுது அனுபவிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. உலகில் உள்ள பொருள்கள்தான் மக்களுக்கு இன்ப அனுபவத்தை பெறும் வாய்ப்பை கொடுத்துள்ளன. உலகப்பொருள்கள் இல்லாவிட்டால் இன்பம் என்பது என்ன என்பதை அறியாதவர்களாகத்தான் எல்லோரும் இருந்திருப்பார்கள்.

சிறுவயதில் முதன் முதலாக விளையாட்டுப்பொம்மைகள் மூலம் இன்பத்தை அனுபவித்ததால் பொருள்களில்தான் இன்பம் இருக்கிறது என்ற தவறான அறிவு அனைத்து மனிதர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும் இன்பம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதைவிட தவறான அறிவுடன் இன்பத்தை அனுபவிப்பது மேல்.

தாஜ்மஹாலைப்பார்க்க ஆக்ரா செல்லவேண்டும் என்று சரியான அறிவுரை சொல்பவர் தவறான பாதையை காண்பிப்பதுபோல வாழ்வின் குறிக்கோள் இன்பமாக இருப்பதுதான் என்று சரியாக சொல்லிக்கொடுத்த உலகப்பொருள்கள் இன்பத்தை அடைய தவறான பாதையை காட்டிக்கொடுக்கின்றன. எனவேதான் இன்பமாக இருக்க பணம் தேவை என்ற தவறான அறிவுடன் இன்பத்தை தியாகம் செய்து பணம் சம்பாதிக்கும் செயல்களில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இருப்பது நான் மட்டும்தான். என் மனமும் இவ்வுலகப்பொருள்களைப்போல் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை அறியாத பற்றுடையோர்கள் பிரியம், மோதம் மற்றும் பிரமோதம் ஆகிய இன்பங்களை அனுபவிக்கும்பொழுது அவை உலகத்திலிருந்து கிடைக்கின்றன என்று நினைப்பார்கள். இது தவறான அறிவு என்று உணரும்பொழுது அவர்கள் முக்திவிழைவோர்களாகிறார்கள். இதுபோல் அவர்களின் முன்னேற்றத்திற்கும் வழி வகுப்பதும் உலகத்தில் உள்ள பொருள்களே. எனவே இன்பம்தான் வாழ்வின் குறிக்கோள் என்று மனிதர்களுக்கு உணர்த்தி அவர்களை இன்பத்தை பெற பொருள்களை நாடும்படி செய்து அந்த தேடலில் அவர்கள் தோற்கும்பொழுது ஏற்படும் மனப்பக்குவத்தின் காரணமாக இன்பத்தின் சரியான இருப்பிடத்தை தேட அவர்களை வேதத்தை படிக்க வைப்பது ஆகிய மூன்று செயல்களையும் உலகப்பொருள்கள் செய்கின்றன.

உலகப்பொருள்கள் படைக்கப்பட்டதன் நோக்கம்

எல்லையில்லா ஆனந்தங்களை உள்ளடக்கிய இந்த உலகம் படைக்கப்பட்டதன் ஒரே நோக்கம் நாம் அதில் எல்லா சுகங்களையும் அனுபவித்து துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழவேண்டும் என்பதுதான்.

முதன்முதலில் சைக்கிள் ஓட்டும்பொழுது கீழே விழுந்து முட்டியில் காயம் படும் என்பதால் சைக்கிள் வாங்க கூடாது என்று முடிவெடுப்பது முட்டாள்தனம். காயம் படாமல் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும். அது போல் துன்பங்களுக்கு காரணம் உலகத்தில் உள்ள பொருள்கள் என்று நினைப்பது அறியாமை. இன்பமாக வாழ தேவையான அறிவை பெற்றால் துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழலாம்.

சைக்கிள் ஓட்டுவதை கற்றுக்கோள்ள சைக்கிளின் உதவி தேவை. அதுபோல் இன்பமாக வாழ தேவையான அறிவைப்பெற மேற்குறிப்பிட்ட மூன்று செயல்கள் மூலம் உலகப்பொருள்கள் நமக்கு உதவுகின்றன. எனவேதான் இவ்வுலகம் கர்மபூமி என்றும் முக்தியடைய வழிவகுக்கும் ஒரே இடம் என்றும் வேதம் கூறுகிறது. சுவர்க்கம் முதலிய பல உலகங்களை வேதம் வர்ணித்தாலும் அவை தற்காலிகமானவை என்ற காரணத்தால் நிரந்தரமான இன்பத்தை தரக்கூடிய ஒரே வழி பூமியில் மனிதனாகப்பிறப்பது மட்டுமே என்றும் அரிதாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்றும் வேதம் எடுத்துரைக்கிறது.

சைக்கிள் ஓட்டத்தெரிந்தவுடன் நடந்து செல்வது நின்றுவிடும். சைக்கிள் இல்லாமல் எங்கும் செல்வது முடியாதகாரியம் என்று தோன்ற ஆரம்பித்துவிடும். சிறிது காலத்தில் சைக்கிளை விட்டுவிட்டு மோட்டர் சைக்கிள் வாங்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். அதன் பின் உடன் செல்ல ஒரு துணை மீது நாட்டம் ஏற்படும். இது போல் ஒரு முடிவேயில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக உலக சுகங்களை அனுபவிக்கும் ஆசையையும் வாய்ப்பையும் தரும் வண்ணம் எண்ணற்ற பொருள்கள் இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை நியாயமானது. முற்றுணர்ந்தோர்கள் இது போன்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்யும்பொழுதும் இன்பமாக செயல்படுவார்கள். மேலும் முயற்சி செய்த பின்னும் இந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால் அதைகுறித்து வருத்தமடைய மாட்டார்கள். துன்பம் கலவா இன்பத்துடன் மென்மேலும் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவே உலகில் உள்ள அனைத்து பொருள்களும் படைக்கப்பட்டுள்ளன.

உலகப்பொருள்களை படைத்தவன்

உலகைப்படைத்தவன் ஆண்டவன் என்று நம்புபவன் பற்றுடையோன். பரமனின் மாயாசக்தி உலகமாக பரிணமித்துள்ளது என்று நினைப்பவன் முக்திவிழைவோன். இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவன் தான் தான் என்ற உண்மையை அறிந்தவன் முற்றுணர்ந்தோன்.

இது என்று சுட்டிக்காட்டகூடிய உடல் மனம் உள்ளடங்கிய உலகப்பொருள்கள் அனைத்தையும் அறிபவன் அவற்றை படைத்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை தர்க்கத்தின் துணையுடன் நிருபிக்கலாம். இதுவும் அதுவும் ஒன்று என்பது உண்மையாக இருக்கவேண்டுமானால் இது அது என இருபொருள்கள் இருக்கவே முடியாது. ஒரே மனிதரை வேறு ஒருவர் என்று தவறாக நினைக்கும்பொழுதுதான் அவர்தான் இவர் என்ற சரியான அறிவைப்பெற முடியும். அதுபோல் இவ்வுலகம் உண்மை என்ற தவறான அறிவை சரிசெய்தால் உண்மையில் இருக்கும் ஒரே பொருளான நான்தான் இவ்வுலகை படைத்தவன் என்பது தெளிவாகும்.  

இடம், பொருள், காலம் ஆகிய மூன்றும் இருப்பது போல் தோன்றும் மாயை என்பதால் இவற்றின் ஆதாரமாக இருக்கும் உண்மை என்னைத்தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. ஏனெனில் எவ்வித மாற்றமுமில்லாமல் எப்பொழுதும் இருக்கும் என்னைத்தவிர வேறு எதுவும் கிடையாது என்பதால் இவ்வுலகை படைத்தவன் நானே. மேலும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டது என்று முடிவு செய்ய   இரண்டிற்கும் இடையே இடம், வடிவம், காலம் என்ற அடிப்படையில் ஏதேனும் வேற்றுமை இருக்கவேண்டும். எதனுடனும் சம்பந்தப்படாமல் எவ்வித குணங்களும் இல்லாமல் என்றும் இருக்கும் நான், ஒருவனே என்பதால் என்னால் அறியப்படும் உலகை படைத்தவன் நான்தான் என்பது உறுதியாகிறது. 

என்னால் படைக்கப்பட்ட உலகில் நான் எப்படி துன்பப்பட முடியும் என்ற கேள்விக்கு நாம் காணும் கனவுலகை நனவுலகுடன் ஒப்பிட்டு விடைகாணலாம்.

முதல் கட்டம்: படைத்தல்

கனவில் தோன்றும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்துப்பொருள்கள், பொருள்களை அனுபவிக்கும் உடல் மற்றும் அந்த உடலில் அமர்ந்து செயல்படும் மனம் ஆகிய மூன்றும் என்னால் என்னை ஆதாரமாக கொண்டு எனக்குள் உருவாக்கப்பட்டவை. எனக்கு அந்நியமான எதுவும் கனவுலகில் இல்லை.  

இரண்டாம் கட்டம்: கனவினுள் புகுதல்

கனவுலக காட்சிகளை காணும் நான் என்னால் உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலுக்குள் புகுந்து அந்த மனதுடன் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு கனவை அனுபவிக்க ஆரம்பிக்கிறேன்.

மூன்றாம் கட்டம்: உண்மையை மறத்தல்

கனவுலகை படைத்தவன் என்ற நிலையில் இருந்து இறங்கி படைக்கப்பட்ட ஒரு பாத்திரம்தான் நான் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறேன். கனவுலகம் இருப்பதற்கே நான்தான் ஆதாரம் என்பது கனவு ஆரம்பித்தவுடன் மறந்துவிடுகிறது. அனைத்து பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் ஓரங்க நாடகத்தின் நாயகனாக இல்லாமல் ஒரு பாத்திரத்தோடு ஒன்றி நடித்து அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறேன்.

நான்காம் கட்டம்: பொய்யை உண்மை என்று நினைத்தல்

இல்லாத உலகம் இருப்பதுபோல் தோன்றி அதில் கிடைக்கும் அனுபவங்களை பெற ஆரம்பித்ததும் அதை உண்மை உலகமாக  பார்க்கத்தொடங்கிவிடுகிறேன். கனவு காணும்பொழுது அது கனவு என்று தெரியாமல் உண்மை என்று நம்பி அதில் நிகழும் நிகழ்வுகள் நிஜமாக நடப்பவை என்று ஏற்றுக்கொள்கிறேன்.

இதற்குப்பிறகு நான் படைத்த கனவுலகிற்கு என்னை துன்புறுத்தும் சக்தி கிடைத்து விடுகிறது. கனவுலகில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப நான் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே அலைக்களிக்கப்படுகிறேன். இருப்பது நான் மட்டும்தான் என்பதை மறந்து இல்லாத கனவுலகத்தை உண்மையில் இருப்பதாக நினைப்பதால் துன்பத்திலிருந்து விடுதலையடைய பற்பல செயல்களை கனவுலகில் செய்ய முயன்று தோல்வியை சந்திக்கிறோம். விழித்துக்கொள்வது மட்டுமே கனவுலக துன்பங்களிலிருந்து விடுதலைபெற நாம் செய்யவேண்டிய ஒரே செயல் என்பது விழித்த பிறகே தெளிவாகிறது.

கனவுலகைப்படைத்து அதில் இன்ப துன்பங்களை அனுபவிப்பதுபோல்தான் நனவுலகை படைத்து அதில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். கனவில் தோன்றும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியானவர்கள் என்பது எப்படி உண்மையில்லையோ அதுபோல நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களும் என்னால் உருவாக்கப்பட்டு எனக்குள் செயல்படுபவர்கள் என்பதை அறிந்தவன் முற்றுணர்ந்தோன்.

விபத்தில் அடிபட்டு வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு நாம் உதவி செய்வதுபோல் கனவு காணும்பொழுது அவனுடைய வலியை நாம் அனுபவிப்பது இல்லை. அவன் நம் கற்பனையில் உருவானவன் என்பதால் அவனுக்கு உதவாமல் அவனை சாகடிப்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்த மனிதன் நம்முடைய நெருங்கிய நண்பன் என்றாலும் அவனுக்கு உதவ வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவனை அப்படியே விட்டுவிட்டு நம் வேலையை நாம் கவனித்தால் அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் நம் மனம் பதறி எப்படியாவது அவனை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவதற்கு காண்பது கனவு என்ற அறிவு இல்லாதது மட்டுமே காரணம்.  விபத்து, அந்த மனிதன், அவனது வலி ஆகிய அனைத்தும் நமது கற்பனை என்பது கனவு முடிந்து விழித்தபிறகே நமக்கு புரிகிறது. கனவுகாணும்பொழுதே இவை பொய்யான தோற்றம் என்பது தெரிந்திருந்தால் நம்மால் முடிந்தவரை அவனுக்கு உதவி செய்ய முற்பட்டாலும் மனம் அளவுக்கு மீறி பதற்றமடையாது.

இந்த உலக அனுபவங்களும் இது போன்ற ஒரு கனவுதான் என்பது பின்வரும் மூன்று உண்மைகளை ஆராய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. காலம் நமது கற்பனை: நடக்கும் நிகழ்வுகளை மனதில் பதித்துவைத்து அதில் ஒரு கோர்வையை கண்டுபிடுத்து நேற்று, இன்று, நாளை ஆகியவற்றை கற்பனை செய்வதால் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டு இருப்பதாக தோன்றுகிறது.

2.காரண காரியம் நமது கற்பனை: இதனால்தான் இது நடந்தது என்று ஓரிரு படிகளை மட்டும் ஆராய்ந்து எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருப்பதாக தவறான முடிவெடுக்கிறோம். நான் எப்படி இந்த உலகிற்குள் வந்தேன் என்ற கேள்விக்கு விடையை கண்டுபிடிக்க முடியாது என்பதால் இது ஒரு கனவு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

3.மாற்றமடையாதது எதுவுமில்லை: கனவில் யானை தீடீரென்று பூனையாக மாறிவிடுவதைப்போல்தான் உலகில் உள்ள அனைத்து பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டு வருகின்றன. அறிவியல் சோதனைகள் மூலம் திடப்பொருள்கள் என்று எதுவுமில்லை என்றும் எல்லாம் மாயா சக்தியின் நடனம் என்றும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் நம் மனம் இன்றிருப்பார் நாளையிங்கே இருப்பதென்ன உண்மை என்பதை வாயளவில் ஏற்றுக்கொண்டு உண்மையில் நிலையான உலகில் வாழ்வதாகவே நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இடம்,பொருள், காலம் ஆகிய மூன்றுமே மாயை என்பதால் இவை உலகம் உண்மையில் இருப்பதாக கூறும் சாட்சி பொய்சாட்சியாகும். கனவை உண்மையென நம்பி இவ்வுலகில் வாழ்பவர்கள் பற்றுடையோர்கள். இந்த வாழ்வு வெறும் கனவு என்று வேதம் கூறுவதை அறிந்தபின்னும் உலகின் பிடியிலிருந்து விடுபட முயன்றுகொண்டிருப்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகம் தன்னை ஆதாரமாக கொண்டு படைக்கப்பட்டு தன்னுள் இயங்கும் ஒரு கனவு என்பதை உணர்ந்து விழித்துக்கொண்டவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

உலகப்பொருள்களின் தன்மை

நம்முடைய ஜடசக்தியால் கனவுகளைப்படைப்பதுபோல் நம் மாயா சக்தியால் உலகை படைத்துள்ளோம். இருத்தல், அறிதல் மற்றும் ஆனந்தம் என்ற மூன்றும் நம் இயல்பு. இந்த இயல்பை ஆதாரமாக கொண்டு உருவான மாயா சக்தியால் இந்த உலகை உருவாக்கியுள்ளோம்.

நெருப்பின் சூடும் தன்மையை மட்டுமே தண்ணீரால் ஏற்றுக்கொள்ளமுடியும். அது போல இருத்தல் என்ற நம் ஒரு தன்மையை மட்டும் பிரதிபலிக்கும் பொருள்கள் ஜடப்பொருள்கள். சுடும் தன்மை மற்றும் ஒளிரும் தன்மை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கும் இரும்புகுண்டைப்போல் இருத்தல் மற்றும் உணர்தல் ஆகிய இரு தன்மைகளையும் பிரதிபலிப்பவை உயிரினங்களாக காட்சியளிக்கின்றன. நெருப்புடன் ஒன்றாக கலந்து தன்னைமட்டுமல்லாமல் மற்ற பொருள்களையும் ஒளிரவைக்கும் சக்தி மரக்குச்சிக்கு மட்டும் இருப்பது போல்  இன்பம் என்ற நம் மூன்றாவது தன்மையையும் ஏற்கும் சக்தியுள்ளவர்கள் மனிதர்களாக தென்படுகிறார்கள்.

மனிதர்களின் மனம், உடல் உள்ளிட்ட அனைத்து உலகப்பொருள்களும் இதுபோல் நம் மாயாசக்தியான ஜடம், சக்தி மற்றும் ஒளி என்ற மூன்று தனிமங்களின் கலவை என்பதால் அவை தோற்றம், மாற்றம், மறைவு என்ற விதிக்கு கட்டுப்பட்டுவை. நிலையாக மாறாமல் இருக்கும் என்னை ஆதாரமாக கொண்டு தொடர்ந்த மாற்றங்களுக்குட்பட்ட உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை நம் மனதிற்கு புரியும்பொழுது நாம் இந்த கனவிலிருந்து விழித்துக்கொள்கிறோம்.

இதுபோல் விழிப்படைய நம் மனம் பண்பட வேண்டும். எனவே உலகப்பொருள்களுள் ஒன்றான நம் மனம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

மனதின் தன்மை

ஈரமான மரக்குச்சியால் முழுவதும் எரிந்து நெருப்புடன் ஒன்றாக முடியாது. அது போல் உலகப்பொருள்களிலிருந்து இன்பம் கிடைப்பதாக நினைக்கும்வரை துன்பம் கலக்காத இன்பத்தை அனுபவிக்க முடியாது. மரக்குச்சியை வெயிலில் உலர்த்தி காயவைப்பது போல் மனிதர்கள் சில காலம் உலக இன்பத்திலிருந்து பெறும் இன்பத்தை தவிர்த்து மனதை குவிக்கும் சக்திபெற்றவுடன் வேதத்தை படித்து தான் நிலையானவன் என்றும் மாறும் மனம் உலகப்பொருள்களில் ஒன்று என்றும் அறிந்து கொள்ள முடியும்.

தண்ணீர் திடம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளில் இருப்பதுபோல் மனதும் ஆழ்ந்த உறக்கம், கனவு, நினைவு என்ற மூன்று நிலைகளில் அனுபவங்களை பெறுகிறது. நீராவி கட்டுக்கடங்காமல் எல்லா இடங்களிலும் வியாபிப்பதுபோல் மனம் வெளியுலகில் சஞ்சரித்து இவ்வுலக அனுபவங்களையும், திரவநிலையில் தண்ணீர் தான் இருக்குமிடத்திற்குள் அலைபாய்வதுபோல் மனம் தன்னில் அடங்கி கனவுலக அனுபவங்களையும், முழுவதும் உறைந்த பனிக்கட்டியின் நிலை போல தான் முழுவதும் அடங்கிய அனுபவத்தை ஆழ்ந்தஉறக்கத்திலும் மனம் பெறுகிறது. மனம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளிலும் அனுபவங்களின் ஆதாரமாக இருப்பவன் நான் என்று முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே அறிவார்கள்.

உலகம் என்று ஒன்று இருக்கிறது என்று நமக்கு காட்டிக்கொடுப்பவை நமது ஐந்து புலன்கள் மட்டுமே. இவை இல்லாவிட்டால் உலகம் அந்தக்கணமே மறைந்து விடும். உறங்கும்பொழுது உலகம் மறைந்துவிடுகிறது. நமது புலன்களுக்கு உலகை அறியும் திறனைக்கொடுப்பது மனம். வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்கும்பொழுது மனம் ஊர்சுற்றிக்கொண்டிருந்தால் ஆசிரியர் பேசுவது காதில் விழாது. மனம் ஒரு ஜடப்பொருள். ஐந்து புலன்களுக்கு உலகை உணரும் சக்தியை கொடுக்க அது என்னைச்சார்ந்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் கடன் வாங்கிய இந்த சக்தியை அது இழந்து விடுவதால் உலகம் இல்லாமல் போய்விடுகிறது.

உலகம் பார்க்கப்படும் பொருள். ஐந்து புலன்களும் மனமும் உலகைப்பார்க்க உபயோகப்படும் கருவிகள். பார்ப்பவன் நான். என்னால் மனதின் துணையின்றி உலகை அனுபவிக்கமுடியாது. தான் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு பொய்யான ஜடப்பொருள் என்பதையும் தான் செயல்பட ஆதாரமாக இருக்கும் உணர்வு மாறாமல் என்றும் இருக்கும் உண்மை என்பதையும் மனம் அறிவதில்லை.

முடிவுரை :

உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. இருத்தல் என்பது மாறாத நான். மாறுகின்ற பொருள்களுக்கு தனித்தனிப்பெயரிட்டு நிலையான உலகை கற்பனை செய்து அதை உண்மை என்று நினைப்புடன் வாழ்வது அறியாமை. இந்த அறியாமையை அகற்ற மனதின் கவனத்தை மாறும் உலகிலிருந்து திருப்பி மாறாத இருத்தலின் மேல் செலுத்தவேண்டும்.

அலை மேல் தோன்றும் நீர் குமிழிபோன்ற கனவையும் வந்துபோகும் அலைகள் போன்ற வாழ்வையும் அறியும் நான் இவ்விரண்டிற்கும் ஆதாரமான நீர் போன்று நிலையானவன்.

நிலையாக இருக்கும் நான் தான் மாறும் உலகமாக தோற்றமளிக்கிறேன் என்ற அறிவு நம் மனதில் ஏற்பட்டதும் ஆனந்தத்தைத்தேடி அலையும் ஏக்கம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசை முடிவுக்கு வருவதுதான் முக்தி. 

நான் அறிவுருவாக என்றும் இருப்பவன் என்ற ஞானம் மனதில் நிலைபெறும்வரை உலகுடன் உறவாடுவதை கட்டுப்படுத்தி மனதை அமைதி படுத்தவேண்டும். அதற்குப்பின் எவ்வளவு செயல்கள் செய்து கொண்டிருந்தாலும் அலைபாயும் மனதின் ஆதாரம் ஆனந்தமயமான நான் என்ற அறிவு நிலையான அமைதியை கொடுக்கும். தொடர்ந்து ஆட்டம் போடும் அலைகளால் ஆழ்கடலின் அமைதியை கெடுக்கமுடியாது. அதுபோல இவ்வுலகின் நிரந்தர மாற்றங்கள் மனதில் ஏற்படுத்தும் ஏற்ற இறக்கங்கள் முற்றுணர்ந்தோனின் நிம்மதியை பாதிக்கும் சக்தியற்றவை.

தூங்கப்போகும்பொழுது கனவு ஏற்படலாம் என்று நாம் அறிந்திருந்தாலும் கனவு காணும்பொழுது விழித்தெழுவோம் என்று எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் கனவு நிஜமாக காட்சியளிப்பதால் விழிக்கவேண்டும் என்று முயற்சி செய்வதில்லை. அது போல இந்த வாழ்க்கை என்பது வெறும் கனவு என்பதை நம்பாமல் இருப்பதால் வேதம் நம்மை விழிக்கவைக்க செய்யும் முயற்சிகள் எளிதாக பலிப்பதில்லை. இந்த வாழ்வு ஒரு கனவு அல்ல என்பதை நிரூபிக்கவே முடியாது என்ற உண்மையை ஆராயும் மனப்பக்குவம் ஏற்பட்டதும் முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. உலகப்பொருள்கள் செய்யும் மூன்று செயல்கள் யாவை?

3. உலகம் படைக்கப்பட்டதன் காரணம் என்ன?

4. அறிபவன் படைத்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை தர்க்கம் மூலம் நிரூபிக்கவும்.

5. கனவு பற்றி விளக்கப்பட்ட நான்கு கட்டங்கள் யாவை?

6. உலகம் உண்மையாக இருக்கிறது என்று நாம் நம்ப எவை காரணம்?

7. உலகப்பொருள்களின் தன்மை என்ன?

8. மனம் எந்த மூன்று நிலைகளில் அனுபவங்களைப்பெறுகிறது?

9.  நீர்க்குமிழி, அலை, நீர் ஆகிய மூன்றினால் விளக்கப்பட்டவை யாவை?

சுயசிந்தனைக்காக :

1. மனதை அமைதிப்படுத்த உடலை ஓய்வு நிலையில் வைத்திருப்பது அவசியமா?

2. முக்தி அடைவது எப்படி என்ற கேள்விக்கு சென்ற பாடத்தில் கூறப்பட்ட பதிலுக்கும் இந்தப்பாடத்தில் இடம் பெற்ற பதிலுக்கும் உள்ள வேறுபாட்டை ஆய்க.

3. உலகத்தை படைத்தது யார்?

4. மற்ற மனிதர்கள் என்னை அறிவதனால் நான் எப்படி இந்த உலகை படைத்தவனாக இருக்க முடியும்?

5. மனதின் தன்மை எப்படியிருந்தால் முக்தியடைய முடியும்?

6. மனதின் தன்மையை மாற்ற என்ன செய்யவேண்டும்?

7. பார்ப்பவை, பார்க்கப்படுபவை பற்றி குறிப்பிட்ட நான்கு பொருள்களை முறைப்படி வரிசைப்படுத்தவும். (திருக்-திருஷ்ய விவேகம் என்ற நூலை படிக்கவும்)