Sunday, September 18, 2011

Lesson 155: Fruits of meditation (Brahmasutram 4.1.3)


பாடம் 155: பரமன் நான் என்று தியானிப்பதன் பலன்
பாடல் 480 (IV.1.3)

ப்ரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் (1.4.10) கூறும் ‘நான் பரமனாக இருக்கிறேன்’ என்ற உண்மையை ஆழ்மனதுக்குள் ஆழ்த்த ‘நான் பரமன்’ என்று தியானம் செய்வது அவசியமென்று கூறுகிறது. இவ்வாறு தியானம் செய்வதால் நிலைபெறும் ஞானத்தின் பலனை இந்தப்பாடம் விளக்குகிறது.

இயற்கையின் சீற்றம், நோய், வயோதிகம் மற்றும் விபத்து போன்ற உடலை பாதிக்கும் நிகழ்வுகளும் நெருங்கியவரின் மரணம், பணநஷ்டம், குடும்பத்தில் குழப்பம் போன்ற மனதை பாதிக்கும் நிகழ்வுகளும் அனைவரது வாழ்விலும் ஏற்படும். ஒருவர் அறிவாளி என்பதால் அவருக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்காது. ஆனால் இவற்றால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறோம் என்பது அவரவரின் அறிவின் ஆழத்தையும் தரத்தையும் பொறுத்தது.

அறிவு என்று இங்கு குறிப்பிடப்படுவது புத்தக அறிவோ தொழில் கல்வி அறிவோ அல்ல. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு, படைப்பின் நோக்கம் என்பது போன்ற என்ற வேதம் கூறும் அறிவைப்பெறாமல் வெறும் பல்கலைகழகத்தில் பெற்ற அறிவு வாழ்வின் சோக நிகழ்வுகளை எதிர்கொள்ள துணை புரிவதில்லை. மேலும் வாழ்க்கை அனுபவங்கள் மனப்பக்குவத்தை மட்டும்தான் கொடுக்குமே தவிர சரியான அறிவை கொடுக்காது. எனவேதான் வயதானவர்களால் தாங்கள் கூறும் அறிவுரைகளுக்கு காரணம் கூற முடிவதில்லை. பெரியவர்கள் சொல்வதை ஏன் கேட்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில் வேதத்தில் மட்டும்தான் இருக்கிறது.

கல்லூரிகளில் பெறும் அறிவும் வயதாகும்பொழுது கிடைக்கும் அனுபவ அறிவும் பொருளாதார அடிப்படையில் முன்னேற பெரிதும் உதவும். ஆனால் எவ்வளவு அறிவை அடைந்தாலும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் பிரச்சனைகளை சமாளிக்க கடவுளை சார்ந்திருப்பது அவசியமாகிறது. நான் வேறு கடவுள் வேறு என்ற அறிவுடன் செயல்படும் பற்றுடையோன், நானும் கடவுளும் ஒன்று என்று அறிந்துகொண்டபின்னும் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் முக்திவிழைவோன், இருப்பது நான் மட்டும்தான் என்றறிந்த முற்றுணர்ந்தோன் ஆகியோரின் செயல்பாட்டை ஆராய்வதன் மூலம் நாம் நமது தற்போதைய நிலையை அறிந்துகொண்டு விரைவில் முன்னேறி முக்தியடைய முயலலாம்.

பற்றுள்ளோர்கள்

நான், உலகம் மற்றும் கடவுள் ஆகிய மூன்றும் வேறுபட்டவை என்ற தவறான அறிவுடன் உலகம் நமக்கு துன்பத்தை தருவதாகவும் அதிலிருந்து விடுபட கடவுள் அவசியம் என்று எண்ணும் பற்றுள்ளோர்களால் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிப்பதை தவிர்க்க முடியாது.

தவறான பக்தி: தன்னுடைய துன்பத்தை நீக்க முயலாமல் தனக்கு துன்பம் ஏற்படுத்தியவர்களை தண்டிப்பதற்காக மாச்சரியம், எரிச்சல், கோபம், பொறாமை, அதிருப்தி ஆகிய உணர்வுகளுடன் கடவுளை பிரார்த்திப்பவர்கள் முக்தியடைய வாய்ப்பேயில்லை. இவர்களுக்கு இன்பத்தைவிட துன்பம்தான் அதிகமிருக்கும்.

பக்தியின்மை: தர்மசிந்தனையுடன் சுயமுயற்சியால் உலகை மாற்றிவிடலாம் என்று முயலுபவர்களுக்கு ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கையில்லாவிட்டாலும் வெகு விரைவில் வேதம் தரும் வாழ்க்கையறிவை பெறும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும்.  

சுயநல பக்தி (முதல் நிலை): மற்றவர்களின் மனதை மாற்றி தன் விருப்பப்படி அவர்களை செயல்படவைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பவர்கள் யாரையும் திருத்தவோ மாற்றவோ முடியாது என்பதை அறியாதவர்கள். நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தனது வினைகளுக்கேற்பதான் நடக்கின்றன என்று இவர்கள் அறிந்துகொள்ளும்பொழுது அடுத்த நிலைக்கு முன்னேறுவார்கள்.

சுயநல பக்தி (முதிர்ந்த நிலை): துன்பம் தரும் நிகழ்வுகளை சரியான வகையில் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பவர்கள் முக்தியடையும் தகுதியை மிகவிரைவில் பெறுவார்கள். தன் ஆளுமையின் தரத்தை உயர்த்துக்கொள்வது தன்னால் மட்டும்தான் முடியும் என்பதை இவர்கள் உணரும் பொழுது படிப்படியாக உயர்ந்து சோக நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கும் சக்தியை பெறுவார்கள்.

பொதுநல பக்தி: செய்த வினைக்கேற்ற அனுபவங்களை பெற்றுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து கடவுள் கூட தன்னை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்தவுடன் சர்வ உயிரினங்களின் நலத்திற்காக மட்டுமே கடவுளை பிரார்த்திப்பவர்கள் விரைவில் சுகதுக்கம் கலந்த அனுபவங்களை அனைவருக்கும் அளிப்பது கடவுள்தான் என்பதை உணர்ந்து கடவுள் யார் என்பதை அறிய வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள். உலகப்பற்றை துறந்து முக்தியை விரும்புவார்கள்.

முக்திவிழைவோர்கள்

வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை இது வேண்டியது அது வேண்டாதது என்று பிரித்து பார்க்காததால் கடவுளிடம் எதையும் பிரார்த்தித்து கேட்கும் அவசியம் இவர்களுக்கு கிடையாது. மேலும் தானும் கடவுளும் உண்மையில் ஒருவரே என்பதை அறிந்திருக்கும் காரணத்தால் இவர்களால் பிரார்த்திக்கவும் முடியாது.

உலக விவகாரங்களில் ஈடுபடும்பொழுது ஏற்படும் சோக நிகழ்வுகளுக்கு காரணத்தை ஆராய்வதில் எவ்வித பயனும் இல்லை என்பதை இவர்கள் அறிந்தவர்கள். சாலைவிபத்தில் அடிபட்டால் உடலளவில் ஏற்பட்ட துன்பங்களை நிவர்த்திசெய்வதில் இவர்கள் முனைவார்களே தவிர விபத்திற்கு யார் காரணம் என்ற சச்சரவில் ஈடுபட்டு மனதளவில் யாருக்கும் துன்பம் ஏற்படுத்த மாட்டார்கள்.

தான் செய்த தீவினை காரணமாகத்தான் தனக்கு இந்த விபத்து ஏற்பட்டது என்று மனதை தேற்றிக்கொள்ளும் கட்டத்தையும் இவர்கள் தாண்டிவிட்டிருப்பார்கள். எனவே நடந்தது யாவையும் நல்லதாகவே நடந்தது என்றும் நடக்கவேண்டியது நல்லதாகவே நடக்கும் என்றும் இவர்கள் உறுதியாக இருப்பார்கள்.

இருப்பது பரமனாகிய நான் மட்டும்தான் என்ற அறிவு ஏற்பட்டபின்னும் உலக நிகழ்வுகள் தன்னை பாதிப்பதாக ஒருவர் நினைத்தால் அவர் தொடர்ந்து வேதத்தின் மையக்கருத்து புரியும்வரை படிக்கவேண்டும். நான் பாதிக்கபடவில்லை என்றாலும் என் மனம் பொய்யான நிகழ்வுகளால் அலைபாய்கிறது என்றால் அவர் தொடர்ந்து நான் பரமன் என்ற தியானம் செய்யவேண்டும்.

பரமன் மட்டும்தான் இருக்கிறான் என்பதை உணர்வதுபோல் உலகம் இருப்பது போல் தோன்றும் மாயை என்பதை மனம் தெளிவாக புரிபடாமல் இருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. உலகம் உண்மையாக இருந்தால்தான் அதை  தெளிவாக விளக்கமுடியும். மாயை என்பதற்கு மனதால் புரிந்துகொள்ள முடியாதது என்று பொருள். மேலும் மனமே மாயை. ஆகவே அதனால் தான் உண்மையில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடிவது சிரமம்தான். எனவேதான் திரும்ப திரும்ப நான் பரமன் என்று தியானம் செய்து நான் மனம் அல்ல என்ற உண்மையை அறிவில் ஆழ்த்தி மனதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். எப்பொழுது ‘நான் பரமன்’ என்ற தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் போகிறதோ அப்பொழுது முக்திவிழைவோன் முற்றுணர்ந்தோனாகிறான்.  

முற்றுணர்ந்தோர்கள்

வாழ்வில் துயரமான சம்பவங்கள் நிகழும் பொழுது கோபம், பயம், வெட்கம், குற்ற உணர்வு, கவலை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் முற்றுணர்ந்தோர்களின் மனதை தாக்குவதில்லை. விபத்து ஏற்பட்டால் உடலில் ஏற்படும் வலியை ஏற்றுக்கொள்வது போல் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் மனதில் ஏற்படும் துயரத்தை இவர்கள் சகித்துக்கொள்வார்கள். இது ஏன் நடந்தது, என்ன காரணம் என்பது போன்றவை அர்த்தமற்ற கேள்விகள் என்பதை இவர்கள் அறிவர்.

செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் செவ்வனே செய்து முடித்த திருப்தி இவர்களிடம் எப்பொழுதும் இருப்பதால் இவர்களது மனம் பொதுவாக அமைதியாகவேயிருக்கும். தனது இயல்பான அமைதியை அனுபவிக்க இவர்கள் அயல்நாடுகளுக்கு பயணம் செய்யவேண்டிய அவசியமோ செயற்கையாக ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி அதை தீர்க்கவேண்டிய கட்டாயமோ இருப்பதில்லை. பிரபஞ்சம் முழுவதற்கும் நான்தான் ஆதாரம் என்ற அறிவு இவர்களிடம் நிலைபெற்று இருப்பதால் யாரையும் இவர்கள் அந்நியர்களாக கருதுவதில்லை. பிரச்சனைகள் தோன்றும் பொழுதும் தீரும்பொழுதும் இவர்களது மனம் ஒரே சீராக செயல்படும்.

நான் பரமன் என்பதை உணர்ந்தபின் கூட நீ முட்டாள் என்று யாரேனும் கூறினால் அவருக்கு சரியான பதில் கொடுக்கவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படலாம். நம் ஆளுமையை பொறுத்து நமது பதில் வெவ்வேறு விதத்தில் அமைந்தாலும் இந்த நிகழ்வு நமது மனதை சலனபடுத்தாமல் இருக்காது. ஆனால் நடப்பது நாடகம் என்ற உண்மை நம் மனதில் திடமாக இருப்பதால் அவருடன் எப்படி உரையாடலை தொடர்வது அல்லது தவிர்ப்பது என்ற அளவில் மட்டும் தான் நம் மனம் சலனப்படும். அவரும் பரமன் என்பதால் அவர் மீது கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சி ஏற்படாது. திரும்ப திரும்ப இதுபோல் உலக நிகழ்வுகளில் நான் பரமன் என்ற அறிவுடன் பங்கேற்கும்பொழுது நமது ஆளுமையின் தரம் தொடர்ந்து அதிகரித்து மனதில் ஏற்படும் சலனம் வெகுவாக குறையும்.

உலகம் உண்மை என்ற தவறான அறிவுடன் பலகாலம் இவ்வுலக நிகழ்வுகளில் பங்கேற்று சேர்த்துவைத்த மனப்பதிவுகளை அழிக்க நான் பரமன் என்ற சரியான அறிவுடன் பல காலம் செயலாற்ற வேண்டியது அவசியமாகலாம். மனதை அமைதி படுத்தவேண்டும் என்ற முயற்சியை முற்றுணர்ந்தோர்கள் மேற்கொள்வதில்லை.  

முடிவுரை :

பூமி சூரியனை சுற்றும் ஒரு கிரகம் என்ற உண்மை அறிவு நமது மனதில் பதிந்திருப்பதால் அது கிழக்கில் தோன்றி மேற்கே மறைவதாக கண் காட்டுவதை நாம் நம்புவதில்லை. அதுபோல நான் பரமன் என்ற உண்மையை தியானத்தின் மூலம் நம் ஆழ்மனதில் அழுத்தியபின் இந்த உலகம் உண்மையில் இருப்பதாக காட்டும் ஐம்புலன்களை நம்பி நாம் ஏமாற மாட்டோம்.

பட்டாம்பூச்சியின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுவை பார்த்தால் அது ஒரு காலத்தில் பட்டாம்பூச்சியாக மாறும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படாது. அது போல எப்பொழுதும் அங்கும் இங்கும் அலைமோதி என்ன தேடுகிறோம் என்பதை கூட யோசிக்க நேரம் இல்லாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டிருக்கும் சாதாரண மனிதனை பார்க்கும்பொழுது அவன், மெள்ள மெள்ள மனப்பக்குவம் பெற்று தான் தேடுவது மன நிறைவை என்று உணர்ந்து அதன் பின் வேதம் படித்து நான் பரமன் என்பதை உணர்ந்து முற்றுணர்வோனாக மாறுவான் என்பதை நம்புவதும் கடினம்.

இந்த மாற்றம் ஏற்பட எவ்வளவு காலமாகும் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருசிலருக்கு முற்றுணர்ந்தோனாக மாறுவதற்கு முன்பேயே எவ்வித தேடலிலும் ஈடுபடாமல் என்றும் அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கலாம். வேறு சிலருக்கு நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்ட பின்னும் பழக்க தோஷத்தால் தொடர்ந்து உலகத்தில் பரபரவென்று செயல்படும் மனப்பதிவு மாறாமல் இருக்கலாம். எது எப்படியிருப்பினும் ஒருவரின் நடவடிக்கையை வைத்து அவரின் முக்திநிலையை தீர்மானம் செய்யமுடியாது. உலக நிகழ்வுகள் மனதில் கோபம், பயம், எரிச்சல், ஏமாற்றம், பொறாமை என்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதை தவிர்ப்பதுதான் நான் பரமன் என்ற ஞானத்தின் இறுதி நோக்கம். இந்த நோக்கம் ஞானம் ஏற்பட்டவுடன் நிறைவேறவில்லையென்றால் அது நிறைவேறும் வரை ‘நான் பரமன்’ என்ற தியானத்தை செய்யவேண்டும்.   

நான் பரமன். உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நானே ஆதாரம் என்ற அறிவு மனதில் ஆழமாக பதிந்துவிட்டால் குன்றாத அமைதியுடன் நிலையான ஆனந்தத்துடன் உடலும் மனதும் ஒத்துழைக்கும்வரை தொடர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். மரணம் என்பது இந்த அனுபவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியே தவிர நான் என்றும் இருப்பவன் என்ற ஞானம் மரணபயத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.

பயிற்சிக்காக :

1. இருவகை அறிவுகளை விவரிக்கவும்.

2. உலக அறிவை எந்த இரு விதங்களில் பெறலாம்?

3. பற்றுள்ளோர்களின் பக்திநிலைகள் யாவை?

4. உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை புரிந்து கொள்வதில் இருக்கும் சிரமத்திற்கு கூறப்பட்ட இரு காரணங்கள் யாவை?

5. நான் பரமன் என்ற ஞானத்தின் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை ஏன் பின்பற்றவேண்டும் என்று ஆராய்க.

2. பொருளாதார அடிப்படையில் வெற்றி பெற வேதம் வழி சொல்கிறதா?

3. வாழ்க்கை அறிவை பெற என்ன செய்ய வேண்டும்?

4. பற்றுள்ளோர்கள் படும் துன்பத்தின் அளவு அவர்களின் கர்மவினைகளை பொறுத்ததா அல்லது அவர்களின் பக்திநிலையை பொறுத்ததா?

5. பற்றுள்ளோர்களைத்தவிர மற்றவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?

6. முற்றுணர்ந்தோர்களின் மனம் சலனப்படுமா?

7. முற்றுணர்ந்தோர்களுக்கும் முக்திவிழைவோர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.