Friday, September 23, 2011

Lesson 156: Three types of meditation (Brahmasutram 4.1.4)


பாடம் 156: மூன்று வகை தியானங்கள்
பாடல் 481 (IV.1.4)

மனம்தான் பரமன் என்று சாந்தோக்கிய உபநிஷத் மந்திரம் (3.18.1) கூறுவதால் நான் மனம் என்று தியானம் செய்யவேண்டும் என்று நினைப்பது தவறு என்ற கருத்தை விளக்கும் வகையில் மூன்று வகை தியானங்களை விவரித்து இவ்வகை தியானங்களை செய்பவன் அடையும் பலன்களையும் இந்தப்பாடம் கூறுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் அனைத்து செயல்பாடுகளும் படிப்படியாக மக்களின் மனதைப்பண்படுத்தி யாரும் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற உண்மையையும் இருப்பது பரமன் மட்டும்தான் என்ற உண்மையையும் மக்களுக்கு உணர்த்தி அனைவரையும் துன்பத்திலிருந்து முழுமையாக விடுவிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆரம்பகட்டத்தில் இதற்காகத்தான் செயல்களை செய்கிறோம் என்று உணராமல் மக்கள் பற்றுடையோர்களாக இருந்தாலும் நாளடைவில் மெதுவாக உண்மை புரிபட முக்திவிழைவோர்களாக மாறி வேதம் படித்து முழு அறிவையும் பெற்று முற்றுணர்ந்தோர்களாகி முக்தியடைகிறார்கள்.

தியானம் என்ற பெயரில் ஓரிடத்தில் அமர்ந்து பயிற்சி செய்யாவிடினும் மனதில் ஓடும் எண்ணங்களின் அடிப்படையில் அனைவரும் எப்பொழுதும் தியானம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறலாம். படிப்பில் நாட்டமுள்ள பள்ளி மாணவர்கள் பண்டிகைகளை கொண்டாடும் பொழுதும் பரிட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற கலையாத கவனத்துடன் இருப்பதும் ஒரு தியானம்தான். அதுபோல் பதவி உயர்வு அல்லது வியாபரத்தில் அதிக லாபம் என்பது போன்ற குறிக்கோள்களில் மனதை குவித்து வேலை செய்வதும் தியானம்தான். எதில் தியானம் செய்கிறார்கள் என்பது அவரவர்களின் அறிவை பொறுத்து மாறும். நிரந்தர அமைதியும் குறையாத இன்பமும்தான் அனைவரது இறுதி குறிக்கோள் என்றாலும் பணம் அதைத்தரும் என்ற நம்பிக்கையில் வேலை செய்வதும் நல்ல வேலை கிடைக்க படிக்க வேண்டும் என்ற நினைப்பில் படிப்பதும் இதுபோன்ற தியானங்களுக்கு காரணம்.

தியானங்களை பற்றுடையோர்கள் செய்யும் இருமை தியானம், முக்தி விழைவோர்கள் செய்யும் ஒருமை தியானம் மற்றும் முற்றுணர்ந்தோர்கள் செய்யும் இரண்டற்ற தியானம் என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

இருமை தியானம்

நான் வேறு நான் இன்பமாயிருக்க அடையவேண்டிய பொருள்கள் வேறு என்ற அறிவுடன் படிப்பு, நல்ல வேலை, பணம், குடும்பம் என படிப்படியாக வெவ்வேறு பொருள்களை நாடி அவை கிடைக்க தன்னிடமிறுந்து வேறுபட்ட கடவுளை பிரார்த்திக்கும் பற்றுள்ளோர்கள் செய்வது இருமை தியானம்.

இருமை தியானத்தின் ஒரே பலன் தான் வேண்டுவது உலகத்திலிருந்து தனக்கு கிடைக்காது என்ற மனப்பக்குவம். தொடர்ந்து வெவ்வேறு பொருள்களை நாடி அவை கிடைத்தபின்னும் மனம் நிம்மதியடையாமல் மேலும் இருமை தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப்பட்டதும் பற்றுடையோர்கள் வேதம் படிக்க ஆரம்பித்து முக்திவிழைவோர்களாக மாறுகிறார்கள். எனவே ஒருமை தியானம் செய்ய தேவையான முதல் படிக்கட்டு இருமை தியானம் ஆகும். அதன் பின் இரண்டற்ற தியானம் செய்து முற்றுணர்ந்தோர்களாக மாறுவார்கள். இந்தப்பயணத்தை மக்களுக்கு இருக்கும் அறிவின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம்.

முதல் கட்டம்: மாறும் உலகில் மாறாத பரமன் இல்லை

காணும் உலகம் முழுதும் தொடர்ந்து மாறுகிறது. மாற்றமடையாத எதையும் நாம் அறிவதில்லை. அனைத்து உயிரினங்களும் பிறந்து, வளர்ந்து முடிவில் மரணம் அடைவதால்  என்றும் இருக்கும் ஒருபொருள் என்று எதுவும் இருக்க முடியாது. இது போன்ற அறிவுடன் இருக்கும் வரை என்றும் மாறாமல் நிலையாக இருக்கும் பரமன் இருக்கிறான் என்று வேதம் கூறும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மக்களுக்கு வருவதில்லை.

இரண்டாம் கட்டம்: பரமன் ஒருவன் இருக்கலாம்

உலகில் இருந்து இன்பம் கிடைக்கும் என்று தீவிரமாக இருமை தியானம் செய்த பின்னும் பலன் கிடைக்காததால் வேறு வழியின்றி வேதம் படிக்க ஆரம்பித்தவுடன் மாறாத பரமன் இருப்பது சாத்தியம் என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றுகிறது.

இவ்விருகட்டங்களை தாண்டும் வரை மக்களின் தியானம் இருமை தியானமாகவே அமையும். வேதம் கூறும் கருத்துக்களை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் தேவையான மனப்பக்குவம் எற்பட்டபின் இருமைதியானம் குறையத்துவங்கும்.

மூன்றாம் கட்டம்: பரமன் நிச்சயமாக இருக்கிறான்

வேதங்களை முறைப்படி பலகாலம் தொடர்ந்து இடைவிடாமல் தகுந்த ஆசிரியரின் அருளுடன் படித்ததன் பயனாக மாறாத பரமன் ஒருவன் நிலையாக இருக்கிறான் என்ற அறிவு ஏற்பட்டபின் மக்கள் ஒருமை தியானம் செய்யத்துவங்குவர்.

நான்காம் கட்டம்: நான் பரமன்

எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் என்றும் நிலையாக இருக்கும் பரமன் நான் என்ற அறிவு நிலைபெற இரண்டற்ற தியானம் உதவும். இந்த நான்கு கட்ட அறிவையும் மூன்று வகை தியானங்களையும் கடந்தவர்கள் முக்தியடைகிறார்கள்.

இந்த நான்கு கட்டங்களில் ஏற்படும் அறிவு தியானத்தினால் நேரடியாக ஏற்படாது. தியானத்திற்கு மனதை பக்குவப்படுத்தும் சக்தி மட்டுமே உள்ளது. வேதத்தை முறையாக ஆசிரியரிடம் படிப்பதால் மட்டுமே அறிவு வரும். வேதம் படிக்காமல் அனுபவத்தின் மூலமோ புத்தகங்கள் படிப்பதனாலோ சரியான அறிவு ஏற்படாது.  

ஒருமை தியானம்

கடவுளின் நற்குணங்களின் மேல் கவனம் செலுத்தி இருமை தியானம் பலகாலம் செய்ததால் ஏற்பட்ட மனப்பக்குவத்தின் உதவியால் வேதம் கூறிய ‘நான் பரமன்’  என்ற உண்மை புரியும். அதன் பின் நானும் பரமனும் ஒன்றே, இவ்வுலகம் முழுதும் என்னை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்ட மாயத்தோற்றம் என்ற அறிவுடன் செய்யப்படும் தியானம் ஒருமை தியானம்.

நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டவுடனேயே முக்தியடைய வேண்டும். ஆனால் பெரும்பாலோருக்கு இது நடப்பதில்லை. எனவேதான் ஒருமை தியானம் அவசியமாகிறது. இருப்பது பரமன் மட்டும்தான் என்றால் ‘நான் பரமன்’ என்று தியானம் செய்வது யார் அல்லது பரமன் எதற்காக ‘நான் பரமன்’ என்று தியானம் செய்யவேண்டும் என்பது போன்ற கேள்விகள் நியாயமானவை.

பள்ளியில் கணித ஆசிரியர் சொல்வது தெளிவாக புரிவது போல் இருந்தாலும் வீட்டுப்பாடத்தை செய்யும் பொழுது விடை தெரிகிறதே தவிர அந்த விடை எப்படி வரும் என்று தெரியாதபொழுது ஆசிரியர் கொடுத்த உதாரணத்தை பலமுறை எழுதி மனப்பாடம் செய்வதன்மூலம் விடை கண்டுபிடிக்கும் வழியை புரிந்துகொள்ளலாம்.

கணிதம் புரிந்து விட்டால் விடைகாணும் வழி முறைகளை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் மனப்பாடம் செய்வது புரிந்துகொள்ள உதவும் காரணத்தால் மனப்பாடம் செய்வது தவறில்லை. அதுபோல நான் பரமன் என்ற ஒருமை தியானம் தான் தியானம் செய்யத்தேவையில்லாத பரமன் என்பதை முடிவில் உணர்த்துவதால் அதை தவறான தியானம் என்று தடை செய்யக்கூடாது.

‘இது முல்லை மலர்’ என்ற அறிவு ஏற்பட்டவுடன் அதற்குமுன் இருந்த ‘இது மலர்’ என்ற அறிவை தவறான அறிவு என்று கூறமுடியாது. ‘இது மலர்’ என்ற சாதாரண அறிவு ‘இது முல்லை மலர்’ என்ற விசேஷ அறிவைப்பெற ஒரு படிக்கட்டாக உதவுவது போல ‘நான் பரமன்’ என்ற உண்மையை உணர ‘நான் பரமன்’ என்று ஒருமை தியானம் செய்வது உதவும். எனவே ஒருமை தியானம் தவறில்லை.

தன்னை ஒரு எலி என்று நினைத்துக்கொண்டிருக்கும் மனநோயாளியை குணபடுத்த அவரது மருத்துவர் அவனிடம், ‘நான் மனிதன்’ என்று தியானம் செய்யும்படி கூறலாம். அவன் மனிதன்தானே, அவன் ஏன் நான் மனிதன் என்று தியானம் செய்யவேண்டும் என்ற கேள்வி நியாயமானது என்றாலும் அவனை குணபடுத்த வைத்தியருக்கு இருக்கும் சரியான வழி அது ஒன்றுதான்.

தன்னை ஒரு மனிதன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் முக்திவிழைவோனை முற்றுணர்ந்தோனாக மாற்ற ‘நான் பரமன்’ என்ற ஒருமை தியானம் மட்டுமே உதவும். எனவே ஒருமை தியானத்தை தொடர்ந்து செய்வது அவசியம்.

பரமன் மாறாதவன், என்றும் இருப்பவன், அறிவுருவானவன், ஆனந்தமயமானவன் என்பது போன்ற வர்ணனைகளை கேட்டவுடன் ஏற்படும் ‘பரமன் இருக்கிறான்’ என்ற அறிவு ‘நான் பரமன்’ என்ற அறிவாக மாறாவிட்டால் மக்கள் கடவுளை போற்றி புகழ்ந்து பக்தி செய்வது மட்டும்தான் தங்கள் கடமை  என்ற அளவில் வேதம் படிப்பதை நிறுத்திக்கொள்வார்கள். நீதான் பரமன் என்று பல முறை கூறி அந்த அறிவை மக்கள் பெற ஒருமை தியானம் செய்வதை வேதம் வலியுறுத்துகிறது.

கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவை வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது உண்மையல்ல என்றாலும் இளைஞர்களுக்கு இவற்றை போதிப்பது முடிவில் அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதுபோல நான் பரமன் என்று ஒருமை தியானம் செய்வது தவறு என்றாலும் இறுதியில் அது முக்தியடைய உதவுவதால் வேதம் அதை மக்களுக்கு போதிக்கிறது.

கண்ணுக்கு தெரியும் ஒளிக்கதிரை வெறும் ஒளிக்கதிராக பார்க்காமல் வைரமாக பார்ப்பவன் அந்த ஒளிக்கதிரின் ஆதாரத்தை தேடி வைரத்தை கண்டுபிடிப்பான். ஒளிக்கதிரை வெறும் கண்ணாடியென்று உதாசீனபடுத்தியவன் ஏழையாகவே இருப்பான். அதுபோல் தன்னில் இருக்கும் உயிர்சக்தியை வெறும் மனிதன் என்று நினைப்பவன் என்றும் பற்றுள்ளவனாக இருந்து துன்பப்படுவான். அவ்வாறின்றி அதை பரமன் என்று தியானிப்பவன் பரமனாகவே ஆகிவிடுவான்.

கற்சிலையை கடவுள் என்று வழிபடுவன் கடவுள் வெறும் கல் என்று எப்படி நினைப்பதில்லையோ அதுபோல நான் பரமன் என்று ஒருமை தியானம் செய்பவன் பரமனாக ஆகாமல் போனாலும் பரமன் தன்னிடமிருந்து வேறுபட்டவன் என்ற தவறான முடிவுக்கு வரவேமாட்டான்.

ஒருமை தியானம் செய்யும் முறை

சில காலம் மட்டுமே இருக்கும் உடலாலும் மாறும் மனதாலும் கட்டுப்பட்டிருக்கும் நான் உண்மையில்  எல்லாவற்றிற்கும் ஆதாரமாக என்றும் இருப்பவன், அறிவுருவானவன், ஆனந்தமயமானவன் என்றோ அல்லது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவன், எவ்வித உருவமோ பெயரோ இல்லாதவன், எதனுடனும் தொடர்பில்லாதவன் நான் என்றோ தொடர்ந்து நினைப்பது ஒருமை தியானம்.

ஒருமை தியானம் வெற்றிபெற  தடைகள்

கல்லை கடவுளாக கும்பிட்டாலும் கடவுள் கல் அல்ல என்று அறியும் அறிவு பரவலாக  பொது மக்களிடையே இருந்தாலும் கடவுளும் நானும் ஒன்று என்பதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் அறிவுகூர்மை பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. கடவுளுக்கு ஆறு முகங்களும் பன்னிரு கைகளும் இருக்கின்றன என்பதை எளிதாக ஏற்றுக்கொள்ளும் மனதிற்கு உருவமில்லா பரமனை கற்பனை செய்து பார்க்கும் திறன் இல்லாததால் புத்தியின் முடிவுக்கு அது கட்டுப்படுவதில்லை. நீயே அது என்ற வேத வாக்கியத்திற்கு நீ பரமனைப்போன்றவன் என்று அர்த்தம் சொல்லும் ஆசிரியரிடம் படிப்பவர்களுக்கு ஒருமை தியானம் பயன் தருவதில்லை.

சரியான ஆசிரியர், தீர ஆராய்ந்து உண்மையை அறியும் புத்திகூர்மை, புத்தியின் முடிவுக்கு கட்டுபட்டு உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனம் ஆகியவை மூன்றும் இல்லாமல் ‘நான் பரமன்’ என்ற நம்பிக்கையுடன் எவ்வளவு காலம் ஒருமை தியானம் செய்தாலும் அது பலனளிக்காது.

இரண்டற்ற தியானம்

நான் பரமன் என்ற நம்பிக்கையுடனும் நான் பரமனாக மாறவேண்டும் என்ற ஆசையுடனும் முக்திவிழைவோர்களால் செய்யப்படும் தியானம் ஒருமை தியானம். நான் பரமன் என்ற உண்மையை எவ்வித சந்தேகமும் இல்லாமல் தெரிந்துகொண்ட பின் அந்த அறிவை தங்கள் ஆழ்மனதிற்குள் ஆழ்த்தவும் ஐம்புலன்கள் மூலம் நான் இருக்கிறேன் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் உலகம் மாயை என்று மனதிற்கு அவ்வப்பொழுது ஞாபகபடுத்தவும் முற்றுணர்ந்தோர்கள் செய்யும் தியானம் இரண்டற்ற தியானம் ஆகும்.

உடல் நிலையானது அல்ல என்ற அறிவு இருப்பினும் உடற்பயிற்சி செய்து அதை நலமாக வைத்துக்கொள்வது போல மனதின் சலனங்கள் என்னை பாதிக்காது என்ற அறிவு இருப்பினும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இரண்டற்ற தியானத்தை முற்றுணர்ந்தோர்கள் செய்வார்கள். நான் பரமன் என்று கற்பனை செய்துகொண்டு அது உண்மையாக இருக்க வேண்டுமே என்ற ஏக்கத்துடன் செய்யப்படுவது ஒருமை தியானம். நான் பரமன் என்ற உண்மையை உணர்ந்தபின் அது உள்ளத்தில் உறுதிப்பட செய்யப்படுவது இரண்டற்ற தியானம்.

அயல்நாட்டிற்கு முதல் முறையாக உல்லாசப்பயணம் செய்வதற்குமுன் அந்த நாட்டைப்பற்றிய புத்தகங்களை படித்து, படங்களைப்பார்த்து, அங்கு சென்று வந்தவர்களுடன் உரையாடி தான் பெறப்போகும் அனுபவத்தை கற்பனை செய்து பார்ப்பது போன்றது ஒருமை தியானம். அந்த அயல் நாட்டில் உல்லாசப்பயணம் செய்யும்பொழுது இரவு படுப்பதற்கு முன் தான் பெற்ற அனுபவங்களை அசை போடுவதும் மறுநாள் எழுந்ததும் நான் இப்பொழுது வேறு நாட்டில் இருக்கிறேன் என்று ஞாபகபடுத்திக்கொள்வதும் இரண்டற்ற தியானம்.

அயல் நாடு செல்லும்வரைதான் அதைப்பற்றிய கற்பனைகள் இருக்கும். சென்றபின் கற்பனை செய்வது நின்றுவிடும். அதுபோல நான் பரமன் என்பதை உணரும் வரைதான் ஒருமை தியானம். உணர்ந்தபின் அது நின்றுவிடும்.

அயல் நாடு செல்வது சிலநாட்கள் நீடிக்க கூடிய உல்லாசப்பயணம் என்றால்தான் அங்கு சென்றதும் அனுபவங்களை அசைபோடுவதும் அயல் நாட்டில் இருக்கிறேன் என்று ஞாபகபடுத்திக்கொள்வதும் நடக்கும். அந்த நாட்டுக்கு குடிமாற்றம் செய்து விட்டு நிரந்தரமாக சென்றவர்கள் இவற்றை தொடர்ந்து செய்வதில்லை.     

நான் பரமன் என்பதை உணர்ந்தபின் சிலகாலம் மட்டுமே இரண்டற்ற தியானம் நடக்கும். நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றபின் மாறும் உலகை தொடர்ந்து அனுபவித்தாலும் இரண்டற்ற தியானத்தை செய்யவேண்டிய அவசியம் இருக்காது.

இரண்டற்ற தியானம் செய்யும் முறை

அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை கேட்டவுடன் மனம் சலனப்படும்பொழுது தனக்கு தானே இது நான் காணும் கனவில் ஒரு காட்சி என்று ஞாபகபடுத்திக்கொள்வது இரண்டற்ற தியானம். இந்த தியானம் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட வழி முறைகள் கிடையாது. வீட்டுச்சாவி பையில் இருக்கிறதா என்று தொடர்ந்து தொட்டுப்பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது போல் இரண்டற்ற தியானத்தை தொடர்ந்து செய்யவேண்டிய அவசியமில்லை.

சொத்தின் அளவு, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எண்ணிக்கை, வகிக்கும் பொறுப்புகளின் தன்மை ஆகியவற்றை பொறுத்து ஒருவர் உலகுடன் உறவாடும் அளவு தீர்மானிக்கப்படும். இவை அனைத்தும் அதிக அளவில் இருந்தால் அவர் இரண்டற்ற தியானத்தை அதிக நாட்கள் செய்யவேண்டியிருக்கும்.

இரண்டற்ற தியானம் வெற்றி பெற தடை

ஆசிரியர் சொல்லிகொடுத்தது சரியாக புரிந்திருந்தாலும் வகுப்பு முடிந்ததும் செல்லவிருக்கும் திரைப்படம் பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்ரமித்துகொண்டு  இருக்கும் காரணத்தால் ஆசிரியர் கேள்வி கேட்கும்பொழுது சரியான பதிலை சொல்ல முடியாமல் போகலாம். மறுநாள் மனம் தெளிவான பின் எவ்விதமான முயற்சியும் செய்யாமல் பதிலை தெளிவாக சொல்ல முடியும். அதுபோல நான் பரமன் என்ற அறிவில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் இருந்தாலும் மனம் வேறு நினைவுகளில் ஆழ்ந்திருக்கும்பொழுது நான் பரமன் என்பதை மறந்து விடலாம்.

ஏதாவது ஒரு மனிதரையோ தொழிலையோ அளவுக்கு மீறிய ஈடுபாடுடன் விரும்பி பலகாலம் செயல்பட்டிருந்தால் அதன்பின் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டாலும் பழைய நினைவுகள் அடிக்கடி மனதை அலைகளிக்கும். உதாரணமாக உளமாற காதலித்த வாழ்க்கைத்துணைவரின் முதல் நினைவு நாளன்று நான் பரமன் என்பது மறந்து போகலாம். கிணற்றிற்கு செல்ல பலபேர் பலகாலம் தொடர்ந்து நடந்ததால் ஏற்பட்ட ஒத்தையடிப்பாதை கிணறு மூடப்பட்டவுடன் மறைந்துவிடாது. நான் பரமன் என்ற அறிவு நிலைபெற வாழ்க்கையில் உள்ள பிடிப்பு மறைய வேண்டும்.

நான் பரமன் என்ற அனுபவமும் அறிவும்

தங்கப்புதையல் இருக்கும் நிலத்தின்மேல் குடிசைபோட்டு வசிக்கும் ஏழைக்கு தன் நிலத்தின் மதிப்பு தெரியாது. புதையல் இருக்கிறது என்ற அறிவு அவனுக்கு ஏற்பட்டபின் அவன் தேவையான முயற்சிகள் செய்து அந்த தங்கத்தை தோண்டி எடுத்தால்தான் அவன் ஏழ்மை நீங்கும். அதுபோல நான் பரமன் என்ற அனுபவம் அனைத்து மனிதர்களுக்கும் இருந்தாலும் நான் பரமன் என்ற அறிவு பொதுவாக யாருக்கும் இருப்பதில்லை. அந்த அறிவு ஏற்பட்டவுடன் தொடர்ந்து முயற்சி செய்து தியானம் மூலம் நான் பரமன் என்ற அறிவை மனதிற்குள் ஆழ்த்தினால்தான் முக்தியடைந்து துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ முடியும்.

சாதாரண மனிதன் பரமனாக மாற கடக்கவேண்டிய படிகட்டுகளை இந்த ஏழை பணக்காரனாக மாறும் உதாரணத்தின் அடிப்படையில் ஆராயலாம்.

1. துன்பப்படுவதை உணர்தல் : ஏழை தான் ஏழை என்பதை உணராதவரை பணம் சம்பாதிக்க ஆசைப்படமாட்டான். பற்றுடையோன் தன் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறிவருகிறது என்றும் ஒவ்வொரு இன்பமும் பின்வரும் துன்பத்திற்கு வித்து என்றும் உணராதவரை முக்தியடைய ஆசைப்பட மாட்டான்.

2. துன்பம் இயற்கை என்று ஏற்றுக்கொள்ளுதல்: கடவுள் தனக்கு படியளந்தது அவ்வளவுதான் என்று வாழ்க்கைத்துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஏழை, பணம் வேண்டும் என்று ஏங்க மாட்டான். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்று நினைக்கும் பற்றுள்ளவன் துன்பத்தை அகற்ற முயலமாட்டான்.

3. துன்பத்தை முற்றிலும் அழிக்ககூடிய சாதனம்: ஏழைக்கு தன் நிலத்தின் கீழ் தங்கம் இருக்கிறது என்றும் அது தன் வறுமையை மாற்றக்கூடிய சாதனம் என்றும் தெரியும் வரை அதைப்பெற முயற்சி செய்யமாட்டான். மாறாத பரமன் ஒருவன் தன் மனதின் எண்ணங்களுக்கு அடியில் புதைந்துள்ளான் என்றும் அது தன் துன்பத்தை அழிக்ககூடிய சாதனம் என்றும் தெரியும்வரை பற்றுடையோன் அதை அடைய முயலுவதில்லை.

4. இருக்கிறது என்ற உண்மை துன்பத்தை மாற்றாது: வீட்டில் கிடைத்த கொள்ளு தாத்தாவின் உயில் நிலத்தினடியே தங்கம் இருக்கிறது என்ற உண்மையை அவனுக்கு கூறினாலும் பூமியை தோண்டி தங்கத்தை எடுக்காதவரை அவனது ஏழ்மை மாறாது.
பற்றுடையோன் முறையாக வேதத்தை படித்து நான் பரமன் என்பதை அறிந்தாலும் கூட தியானம் செய்வதன் மூலம் மனதை தூய்மைப்படுத்தினால்தான் புத்தி கூர்மையடைந்து முக்தியடையும் வாய்ப்புகிடைக்கும்.

5. தேடுதல் மட்டும்தான் துன்பத்தை மாற்றும்: மண்ணைத்தோண்டி தேடாதவரை தங்கம் கிடைக்காது. நான் பரமன் என்ற உண்மையை தீர ஆராயாத வரை துன்பம் தீராது.

6. கூரிய ஆயுதம் இல்லாமல் தேட முடியாது: கடப்பாரை போன்ற கூரிய ஆயுதம் இல்லாமல் தங்கத்தை தோண்டி எடுக்கமுடியாது. புத்திகூர்மை இல்லாதவர்களால் நான் பரமன் என்பதை புரிந்து கொள்ள முடியாது.

7. மேலாகத்தேடினால் துன்பம் மாறாது: மேல் மண்ணை நீக்கினால் தங்கம் கிடைத்துவிடாது. நான் உடல் அல்ல என்று ஆராய்ந்து அறிவதனால் மட்டும் பயன் கிடைக்காது.

8. சிறிது ஆழமாக தேடினாலும் போதாது: கட்டிப்போயிருக்கும் நிலத்தை சிறிது வெட்டியதும் தங்கம் கிடைக்காது. நான் மனம் அல்ல என்று அறிந்து கொள்வதனால் மட்டும் முக்திகிடைக்காது

9. பற்றை நீக்குவது அவசியம்: தங்கத்தை சுற்றி இருக்கமாக பற்றிக்கொண்டிருக்கும் மண்ணை நீக்கினால்தான் தங்கம் வெளிப்படும். உலகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றை நீக்கினால்தான் மனதினால் பரமனை அறிந்து கொள்ள முடியும்.

10. தொடர்ந்த முயற்சி அவசியம்: ஒருமுறை கடப்பாரையால் நிலத்தை குத்தினால் தங்கம் கிடைத்துவிடாது. தங்கம் கைக்கு கிடைக்கும்வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நான் பரமன் என்று கேட்டதும் முக்தியடைய முடியாது. அது தெளிவாக புரியும் வரை தொடர்ந்து வேதத்தை படிக்க வேண்டும்.

11. முயற்சி வீண்போகாது: ஒருநாள் முழுவதும் தொடர்ந்து உழைத்துவிட்டு இரவில் ஒய்வெடுத்துக்கொண்டாலும் அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து குழி தோண்ட முடிவது போல நான் பரமன் என்பதை புரிந்து கொள்ள செய்யும் முயற்சியின் பலன் பிறவிதோறும் நம்மை பின் தொடரும். எனவேதான் மனம் பக்குவமடைந்த ஒரு சிலர் சிறிதளவு முயற்சி செய்தவுடன் முக்தியடைகிறார்கள்.

12. வெற்றி துன்பத்தை போக்கும்: தங்க காசுகள் கிடைத்த மறுகணம் ஏழை பணக்காரானாக மாறிவிடுவது போல நான் பரமன் என்பது புரிந்தவுடன் வாழ்வின் துன்பங்கள் மறைந்துவிடும்.

13. அனுபவம் மாறுபடும்: தங்க காசுகள் என் தாத்தாவினுடையது. அவற்றை செலவு செய்யாமல் அவர் ஞாபகமாக பத்திரமாக வைத்துக்கொள்வேன் என்று முரண்டுபிடிப்பவன் தொடர்ந்து ஏழையாகத்தான் இருப்பான். நான் பரமன் என்பது உண்மையென்றாலும் வாழ்க்கையில் வெற்றிபெற்றால்தான் எனக்கு இன்பம் கிடைக்கும் என்று போராடுபவர்களால் துன்பத்தை தவிர்க்க முடியாது.

முக்தி அனுபவம்

அனைத்து அனுபவங்களும் உடலையும் மனதையும் சார்ந்தவை. பரமனால் எவ்வித அனுபவத்தையும் பெறமுடியாது. தான் பரமன் என்று உணர்ந்ததும் தன் உடலையும் மனதையும் எந்த அளவுக்கு உலக விவகாரங்களில் ஈடுபடுத்துவது என்பதை பொறுத்துதான் முக்தி அனுபவம் ஒருவனுக்கு அமையும். எவ்வளவு தங்க காசுகளை செலவளிக்கிறான் என்பதை பொறுத்துதான் ஏழைக்கு பணக்கார அனுபவம் கிடைக்கும்.

எவ்வித வேலையும் செய்யாமல் எந்த மனிதர்களுடனும் உறவாடமல் காட்டில் கிடைப்பதை உண்டு உயிர் வாழும் முற்றுணர்ந்தோனின் மனம் பெரும்பாலும் அமைதியாயிருக்கும். வழிப்போக்கன் பரிதாபப்பட்டு கொடுத்துவிட்டுபோன இட்டிலியை சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது பறவையின் எச்சம் அதில் விழுந்து விட்டால் அவன் மனம் சலனப்படத்தான் செய்யும். இந்த சலனத்தையும் தவிர்க்க வேண்டுமென்றால் தொடர்ந்து சமாதி நிலையில்தான் இருக்கவேண்டும்.

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் பொறுப்புக்களை வகிக்கும்பொழுது தொடர்ந்து மனம் அலைபாய்வதை எவ்வித கவலையும் இன்றி ஏற்றுக்கொண்டு என்னாளும் இன்பமாக வாழ தொடர்ந்து தியானம் எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை. அரண்மனையில் இது போல் வாழும் முற்றுணர்ந்தோன் மீது வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தாலும் எவ்வித அவமானமோ, குற்ற உணர்வோ இன்றி அவன் இனிதாக வாழ்வான்.

முக்தி என்பது அவரவரின் தனிப்பட்ட அனுபவம். முக்தியடைந்தவனாக தன்னை பாவித்துக்கொள்வதன் மூலம்தான் ஒருவனால் முக்தி அனுபவத்தை பெற முடியும்.

முடிவுரை :

மனதுக்கு பிடித்த சிறுகதையை எழுதிய எழுத்தாளரை சந்திக்க ஆவல் இருக்கலாம். நம் நெருங்கிய நண்பர்தான் அந்த கதையை எழுதியவர் என்று தெரிந்தவுடன் எழுத்தாளரை சந்திக்கும் ஆவல் அடங்கிவிடும். ஏனெனில் அவர் நமக்கு ஏற்கனவே பழக்கமானவர். அதுபோல நான் பரமன் என்பதை அறிந்தவுடன் பரமனாக மாற வேண்டும் என்ற ஆசை அடங்கவேண்டும். இல்லையெனில் நான் பரமன் என்ற உண்மை நமக்கு இன்னும் சரியாக புரியவில்லை என்று பொருள்.

ஆனால் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டபின்கூட முக்தி அனுபவம் ஏற்படாமல் இருக்கலாம். முக்தி அனுபவம் என்பது ஒருவருக்கு படிப்படியாகத்தான் ஏற்படும். பட்டதாரியான அன்றே பணக்காரனாக முடியாது. வேலை செய்து சிறிது சிறிதாக பணம் சேர்ப்பதுபோல நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டவுடன் எந்த அளவு இரண்டற்ற தியானம் செய்கிறோமோ அந்த அளவு முக்தியனுபவம் அதிகரிக்கும். எவ்வளவு பணம் போதுமானது என்பதற்கு ஒரு அளவே கிடையாது. அது போல எவ்வளவு முக்தி அனுபவம் வேண்டும் என்பதற்கும் அளவு கிடையாது. வாழ் நாள் முழுவதும் வேலை செய்து பணம் சேர்க்கலாம். அல்லது போதும் என்று ஒரு அளவில் நிறுத்திக்கொண்டு இருப்பதற்குள் வாழலாம். அதுபோல வாழ்நாள் முழுவதும் இரண்டற்ற தியானம் செய்து மனதை செம்மைபடுத்தலாம். அல்லது இருக்கும் முக்தி அனுபவம் போதும் என்று இரண்டற்ற தியானம் செய்வதை நிறுத்திக்கொள்ளலாம்.  

நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளவும் முக்தி அனுபவத்தை பெறுவதற்கும் நமது முயற்சி தேவை. பரமனின் அனுபவம் எவ்வித முயற்சியும் இல்லாமல் அனைவருக்கும் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

வேதம் படிக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை இருமை தியானம் கொடுக்கும். நான் பரமன் என்ற வேதத்தின் மையக்கருத்தை புரிந்துகொள்ள தேவையான மன ஒருமைப்பாட்டை ஒருமை தியானம் கொடுக்கும். முக்தி அனுபவத்தின் அளவையும் தரத்தையும் உயர்த்த இரண்டற்ற தியானம் உதவும்.

பயிற்சிக்காக :

1. மக்களின் செயல்பாடுகளின் நோக்கம் என்ன?

2. மக்களின் செயல்பாடுகளை தியானம் என்று எந்த அடிப்படையில் கூறப்பட்டது?

3. எதன் அடிப்படையில் தியானங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

4. இருமை தியானம் என்றால் என்ன?

5. இருமைதியானத்தின் ஒரே பலன் என்ன?

6. மக்களின் அறிவின் அடிப்படையில் அவர்கள் முக்தியடைய செய்யும் பயணம் எந்த நான்கு கட்டங்களாக பிரிக்கபட்டது?

7. ஒருமை தியானம் செய்யவேண்டிய அவசியம் என்ன?

8. ஒருமை தியானம் வெற்றி பெற தடையாய் இருக்கும் மூன்று என்னென்ன?

9. ஒருமை தியானம் மற்றும் இரண்டற்ற தியானம் இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

10. இரண்டற்ற தியானம் வெற்றி பெற தடையாயிருப்பது எது?

11. பற்றுடையோன் முக்தியடைய கடக்க வேண்டிய பதின்மூன்று படிகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. முக்தியடைந்த மகான்களின் வாழ்க்கை சரிதங்களை படிக்கவும்.

2. நான் பரமன் என்ற அனுபவத்திற்கும் நான் பரமன் என்ற அறிவிற்கும் உள்ள தொடர்பை ஆராய்க.

3. நான் பரமன் என்ற அறிவிற்கும் முக்தி அனுபவத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்க.

4. முக்தியடைந்தவர்கள் இரண்டற்ற தியானம் என்ற முயற்சியை மேற்கொள்வதால் அவர்களை முக்தியடைந்தவர்களாக கருத முடியாது என்ற கருத்தை ஆராய்க.

5. முக்தி அனுபவம் என்றால் என்ன?

6. வாழ்வில் வரும் ஒவ்வொரு இன்பமும் பின்வரும் துன்பத்திற்கு வித்து என்று எந்த அடிப்படையில் கூறலாம்?

Sunday, September 18, 2011

Lesson 155: Fruits of meditation (Brahmasutram 4.1.3)


பாடம் 155: பரமன் நான் என்று தியானிப்பதன் பலன்
பாடல் 480 (IV.1.3)

ப்ரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் (1.4.10) கூறும் ‘நான் பரமனாக இருக்கிறேன்’ என்ற உண்மையை ஆழ்மனதுக்குள் ஆழ்த்த ‘நான் பரமன்’ என்று தியானம் செய்வது அவசியமென்று கூறுகிறது. இவ்வாறு தியானம் செய்வதால் நிலைபெறும் ஞானத்தின் பலனை இந்தப்பாடம் விளக்குகிறது.

இயற்கையின் சீற்றம், நோய், வயோதிகம் மற்றும் விபத்து போன்ற உடலை பாதிக்கும் நிகழ்வுகளும் நெருங்கியவரின் மரணம், பணநஷ்டம், குடும்பத்தில் குழப்பம் போன்ற மனதை பாதிக்கும் நிகழ்வுகளும் அனைவரது வாழ்விலும் ஏற்படும். ஒருவர் அறிவாளி என்பதால் அவருக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்காது. ஆனால் இவற்றால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறோம் என்பது அவரவரின் அறிவின் ஆழத்தையும் தரத்தையும் பொறுத்தது.

அறிவு என்று இங்கு குறிப்பிடப்படுவது புத்தக அறிவோ தொழில் கல்வி அறிவோ அல்ல. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு, படைப்பின் நோக்கம் என்பது போன்ற என்ற வேதம் கூறும் அறிவைப்பெறாமல் வெறும் பல்கலைகழகத்தில் பெற்ற அறிவு வாழ்வின் சோக நிகழ்வுகளை எதிர்கொள்ள துணை புரிவதில்லை. மேலும் வாழ்க்கை அனுபவங்கள் மனப்பக்குவத்தை மட்டும்தான் கொடுக்குமே தவிர சரியான அறிவை கொடுக்காது. எனவேதான் வயதானவர்களால் தாங்கள் கூறும் அறிவுரைகளுக்கு காரணம் கூற முடிவதில்லை. பெரியவர்கள் சொல்வதை ஏன் கேட்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில் வேதத்தில் மட்டும்தான் இருக்கிறது.

கல்லூரிகளில் பெறும் அறிவும் வயதாகும்பொழுது கிடைக்கும் அனுபவ அறிவும் பொருளாதார அடிப்படையில் முன்னேற பெரிதும் உதவும். ஆனால் எவ்வளவு அறிவை அடைந்தாலும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் பிரச்சனைகளை சமாளிக்க கடவுளை சார்ந்திருப்பது அவசியமாகிறது. நான் வேறு கடவுள் வேறு என்ற அறிவுடன் செயல்படும் பற்றுடையோன், நானும் கடவுளும் ஒன்று என்று அறிந்துகொண்டபின்னும் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் முக்திவிழைவோன், இருப்பது நான் மட்டும்தான் என்றறிந்த முற்றுணர்ந்தோன் ஆகியோரின் செயல்பாட்டை ஆராய்வதன் மூலம் நாம் நமது தற்போதைய நிலையை அறிந்துகொண்டு விரைவில் முன்னேறி முக்தியடைய முயலலாம்.

பற்றுள்ளோர்கள்

நான், உலகம் மற்றும் கடவுள் ஆகிய மூன்றும் வேறுபட்டவை என்ற தவறான அறிவுடன் உலகம் நமக்கு துன்பத்தை தருவதாகவும் அதிலிருந்து விடுபட கடவுள் அவசியம் என்று எண்ணும் பற்றுள்ளோர்களால் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிப்பதை தவிர்க்க முடியாது.

தவறான பக்தி: தன்னுடைய துன்பத்தை நீக்க முயலாமல் தனக்கு துன்பம் ஏற்படுத்தியவர்களை தண்டிப்பதற்காக மாச்சரியம், எரிச்சல், கோபம், பொறாமை, அதிருப்தி ஆகிய உணர்வுகளுடன் கடவுளை பிரார்த்திப்பவர்கள் முக்தியடைய வாய்ப்பேயில்லை. இவர்களுக்கு இன்பத்தைவிட துன்பம்தான் அதிகமிருக்கும்.

பக்தியின்மை: தர்மசிந்தனையுடன் சுயமுயற்சியால் உலகை மாற்றிவிடலாம் என்று முயலுபவர்களுக்கு ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கையில்லாவிட்டாலும் வெகு விரைவில் வேதம் தரும் வாழ்க்கையறிவை பெறும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும்.  

சுயநல பக்தி (முதல் நிலை): மற்றவர்களின் மனதை மாற்றி தன் விருப்பப்படி அவர்களை செயல்படவைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பவர்கள் யாரையும் திருத்தவோ மாற்றவோ முடியாது என்பதை அறியாதவர்கள். நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தனது வினைகளுக்கேற்பதான் நடக்கின்றன என்று இவர்கள் அறிந்துகொள்ளும்பொழுது அடுத்த நிலைக்கு முன்னேறுவார்கள்.

சுயநல பக்தி (முதிர்ந்த நிலை): துன்பம் தரும் நிகழ்வுகளை சரியான வகையில் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பவர்கள் முக்தியடையும் தகுதியை மிகவிரைவில் பெறுவார்கள். தன் ஆளுமையின் தரத்தை உயர்த்துக்கொள்வது தன்னால் மட்டும்தான் முடியும் என்பதை இவர்கள் உணரும் பொழுது படிப்படியாக உயர்ந்து சோக நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கும் சக்தியை பெறுவார்கள்.

பொதுநல பக்தி: செய்த வினைக்கேற்ற அனுபவங்களை பெற்றுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து கடவுள் கூட தன்னை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்தவுடன் சர்வ உயிரினங்களின் நலத்திற்காக மட்டுமே கடவுளை பிரார்த்திப்பவர்கள் விரைவில் சுகதுக்கம் கலந்த அனுபவங்களை அனைவருக்கும் அளிப்பது கடவுள்தான் என்பதை உணர்ந்து கடவுள் யார் என்பதை அறிய வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள். உலகப்பற்றை துறந்து முக்தியை விரும்புவார்கள்.

முக்திவிழைவோர்கள்

வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை இது வேண்டியது அது வேண்டாதது என்று பிரித்து பார்க்காததால் கடவுளிடம் எதையும் பிரார்த்தித்து கேட்கும் அவசியம் இவர்களுக்கு கிடையாது. மேலும் தானும் கடவுளும் உண்மையில் ஒருவரே என்பதை அறிந்திருக்கும் காரணத்தால் இவர்களால் பிரார்த்திக்கவும் முடியாது.

உலக விவகாரங்களில் ஈடுபடும்பொழுது ஏற்படும் சோக நிகழ்வுகளுக்கு காரணத்தை ஆராய்வதில் எவ்வித பயனும் இல்லை என்பதை இவர்கள் அறிந்தவர்கள். சாலைவிபத்தில் அடிபட்டால் உடலளவில் ஏற்பட்ட துன்பங்களை நிவர்த்திசெய்வதில் இவர்கள் முனைவார்களே தவிர விபத்திற்கு யார் காரணம் என்ற சச்சரவில் ஈடுபட்டு மனதளவில் யாருக்கும் துன்பம் ஏற்படுத்த மாட்டார்கள்.

தான் செய்த தீவினை காரணமாகத்தான் தனக்கு இந்த விபத்து ஏற்பட்டது என்று மனதை தேற்றிக்கொள்ளும் கட்டத்தையும் இவர்கள் தாண்டிவிட்டிருப்பார்கள். எனவே நடந்தது யாவையும் நல்லதாகவே நடந்தது என்றும் நடக்கவேண்டியது நல்லதாகவே நடக்கும் என்றும் இவர்கள் உறுதியாக இருப்பார்கள்.

இருப்பது பரமனாகிய நான் மட்டும்தான் என்ற அறிவு ஏற்பட்டபின்னும் உலக நிகழ்வுகள் தன்னை பாதிப்பதாக ஒருவர் நினைத்தால் அவர் தொடர்ந்து வேதத்தின் மையக்கருத்து புரியும்வரை படிக்கவேண்டும். நான் பாதிக்கபடவில்லை என்றாலும் என் மனம் பொய்யான நிகழ்வுகளால் அலைபாய்கிறது என்றால் அவர் தொடர்ந்து நான் பரமன் என்ற தியானம் செய்யவேண்டும்.

பரமன் மட்டும்தான் இருக்கிறான் என்பதை உணர்வதுபோல் உலகம் இருப்பது போல் தோன்றும் மாயை என்பதை மனம் தெளிவாக புரிபடாமல் இருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. உலகம் உண்மையாக இருந்தால்தான் அதை  தெளிவாக விளக்கமுடியும். மாயை என்பதற்கு மனதால் புரிந்துகொள்ள முடியாதது என்று பொருள். மேலும் மனமே மாயை. ஆகவே அதனால் தான் உண்மையில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடிவது சிரமம்தான். எனவேதான் திரும்ப திரும்ப நான் பரமன் என்று தியானம் செய்து நான் மனம் அல்ல என்ற உண்மையை அறிவில் ஆழ்த்தி மனதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். எப்பொழுது ‘நான் பரமன்’ என்ற தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் போகிறதோ அப்பொழுது முக்திவிழைவோன் முற்றுணர்ந்தோனாகிறான்.  

முற்றுணர்ந்தோர்கள்

வாழ்வில் துயரமான சம்பவங்கள் நிகழும் பொழுது கோபம், பயம், வெட்கம், குற்ற உணர்வு, கவலை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் முற்றுணர்ந்தோர்களின் மனதை தாக்குவதில்லை. விபத்து ஏற்பட்டால் உடலில் ஏற்படும் வலியை ஏற்றுக்கொள்வது போல் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் மனதில் ஏற்படும் துயரத்தை இவர்கள் சகித்துக்கொள்வார்கள். இது ஏன் நடந்தது, என்ன காரணம் என்பது போன்றவை அர்த்தமற்ற கேள்விகள் என்பதை இவர்கள் அறிவர்.

செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் செவ்வனே செய்து முடித்த திருப்தி இவர்களிடம் எப்பொழுதும் இருப்பதால் இவர்களது மனம் பொதுவாக அமைதியாகவேயிருக்கும். தனது இயல்பான அமைதியை அனுபவிக்க இவர்கள் அயல்நாடுகளுக்கு பயணம் செய்யவேண்டிய அவசியமோ செயற்கையாக ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி அதை தீர்க்கவேண்டிய கட்டாயமோ இருப்பதில்லை. பிரபஞ்சம் முழுவதற்கும் நான்தான் ஆதாரம் என்ற அறிவு இவர்களிடம் நிலைபெற்று இருப்பதால் யாரையும் இவர்கள் அந்நியர்களாக கருதுவதில்லை. பிரச்சனைகள் தோன்றும் பொழுதும் தீரும்பொழுதும் இவர்களது மனம் ஒரே சீராக செயல்படும்.

நான் பரமன் என்பதை உணர்ந்தபின் கூட நீ முட்டாள் என்று யாரேனும் கூறினால் அவருக்கு சரியான பதில் கொடுக்கவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படலாம். நம் ஆளுமையை பொறுத்து நமது பதில் வெவ்வேறு விதத்தில் அமைந்தாலும் இந்த நிகழ்வு நமது மனதை சலனபடுத்தாமல் இருக்காது. ஆனால் நடப்பது நாடகம் என்ற உண்மை நம் மனதில் திடமாக இருப்பதால் அவருடன் எப்படி உரையாடலை தொடர்வது அல்லது தவிர்ப்பது என்ற அளவில் மட்டும் தான் நம் மனம் சலனப்படும். அவரும் பரமன் என்பதால் அவர் மீது கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சி ஏற்படாது. திரும்ப திரும்ப இதுபோல் உலக நிகழ்வுகளில் நான் பரமன் என்ற அறிவுடன் பங்கேற்கும்பொழுது நமது ஆளுமையின் தரம் தொடர்ந்து அதிகரித்து மனதில் ஏற்படும் சலனம் வெகுவாக குறையும்.

உலகம் உண்மை என்ற தவறான அறிவுடன் பலகாலம் இவ்வுலக நிகழ்வுகளில் பங்கேற்று சேர்த்துவைத்த மனப்பதிவுகளை அழிக்க நான் பரமன் என்ற சரியான அறிவுடன் பல காலம் செயலாற்ற வேண்டியது அவசியமாகலாம். மனதை அமைதி படுத்தவேண்டும் என்ற முயற்சியை முற்றுணர்ந்தோர்கள் மேற்கொள்வதில்லை.  

முடிவுரை :

பூமி சூரியனை சுற்றும் ஒரு கிரகம் என்ற உண்மை அறிவு நமது மனதில் பதிந்திருப்பதால் அது கிழக்கில் தோன்றி மேற்கே மறைவதாக கண் காட்டுவதை நாம் நம்புவதில்லை. அதுபோல நான் பரமன் என்ற உண்மையை தியானத்தின் மூலம் நம் ஆழ்மனதில் அழுத்தியபின் இந்த உலகம் உண்மையில் இருப்பதாக காட்டும் ஐம்புலன்களை நம்பி நாம் ஏமாற மாட்டோம்.

பட்டாம்பூச்சியின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுவை பார்த்தால் அது ஒரு காலத்தில் பட்டாம்பூச்சியாக மாறும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படாது. அது போல எப்பொழுதும் அங்கும் இங்கும் அலைமோதி என்ன தேடுகிறோம் என்பதை கூட யோசிக்க நேரம் இல்லாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டிருக்கும் சாதாரண மனிதனை பார்க்கும்பொழுது அவன், மெள்ள மெள்ள மனப்பக்குவம் பெற்று தான் தேடுவது மன நிறைவை என்று உணர்ந்து அதன் பின் வேதம் படித்து நான் பரமன் என்பதை உணர்ந்து முற்றுணர்வோனாக மாறுவான் என்பதை நம்புவதும் கடினம்.

இந்த மாற்றம் ஏற்பட எவ்வளவு காலமாகும் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருசிலருக்கு முற்றுணர்ந்தோனாக மாறுவதற்கு முன்பேயே எவ்வித தேடலிலும் ஈடுபடாமல் என்றும் அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கலாம். வேறு சிலருக்கு நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்ட பின்னும் பழக்க தோஷத்தால் தொடர்ந்து உலகத்தில் பரபரவென்று செயல்படும் மனப்பதிவு மாறாமல் இருக்கலாம். எது எப்படியிருப்பினும் ஒருவரின் நடவடிக்கையை வைத்து அவரின் முக்திநிலையை தீர்மானம் செய்யமுடியாது. உலக நிகழ்வுகள் மனதில் கோபம், பயம், எரிச்சல், ஏமாற்றம், பொறாமை என்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதை தவிர்ப்பதுதான் நான் பரமன் என்ற ஞானத்தின் இறுதி நோக்கம். இந்த நோக்கம் ஞானம் ஏற்பட்டவுடன் நிறைவேறவில்லையென்றால் அது நிறைவேறும் வரை ‘நான் பரமன்’ என்ற தியானத்தை செய்யவேண்டும்.   

நான் பரமன். உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நானே ஆதாரம் என்ற அறிவு மனதில் ஆழமாக பதிந்துவிட்டால் குன்றாத அமைதியுடன் நிலையான ஆனந்தத்துடன் உடலும் மனதும் ஒத்துழைக்கும்வரை தொடர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். மரணம் என்பது இந்த அனுபவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியே தவிர நான் என்றும் இருப்பவன் என்ற ஞானம் மரணபயத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.

பயிற்சிக்காக :

1. இருவகை அறிவுகளை விவரிக்கவும்.

2. உலக அறிவை எந்த இரு விதங்களில் பெறலாம்?

3. பற்றுள்ளோர்களின் பக்திநிலைகள் யாவை?

4. உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை புரிந்து கொள்வதில் இருக்கும் சிரமத்திற்கு கூறப்பட்ட இரு காரணங்கள் யாவை?

5. நான் பரமன் என்ற ஞானத்தின் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை ஏன் பின்பற்றவேண்டும் என்று ஆராய்க.

2. பொருளாதார அடிப்படையில் வெற்றி பெற வேதம் வழி சொல்கிறதா?

3. வாழ்க்கை அறிவை பெற என்ன செய்ய வேண்டும்?

4. பற்றுள்ளோர்கள் படும் துன்பத்தின் அளவு அவர்களின் கர்மவினைகளை பொறுத்ததா அல்லது அவர்களின் பக்திநிலையை பொறுத்ததா?

5. பற்றுள்ளோர்களைத்தவிர மற்றவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?

6. முற்றுணர்ந்தோர்களின் மனம் சலனப்படுமா?

7. முற்றுணர்ந்தோர்களுக்கும் முக்திவிழைவோர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

Wednesday, September 7, 2011

Lesson 154: Fruits of knowledge (Brahmasutram 4.1.1-2)


பாடம் 154: ஞானத்தின் பலன்
பாடல் 478 – 479 (IV.1.1-2)

பரமனின் மாயாசக்தியின் தொடர்ந்த மாற்றம்தான் உலகில் நடக்கும் வெவ்வேறு நிகழ்வுகளாகவும் மனிதர்களின் செயல்பாடுகளாகவும் தோற்றமளிக்கிறது என்ற உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை என்றும் பரமரகசியத்தை அறியமுயலும் முக்திவிழைவோர்கள் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்யாவிடில் பற்றுடையோர்கள் போல  துன்பப்படுவதை அவர்களால் தவிர்க்க முடியாது என்றும் இந்தப்பாடம் விளக்குகிறது.

வாழ்வின் நிகழ்வுகள்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இருவரும் மணம் புரிந்து கொண்டு இனிதே வாழ்ந்தார்கள் என்பதுதான் கதை என்றால் இராமாயணம் எழுதப்பட்ட அன்றே மறக்கப்பட்டிருக்கும். இளவரச பட்டாபிஷேகம், கைகேயின் வரம், மரவுரியுடன் காட்டுக்குப்பயணம், பரதன், சூர்ப்பனகை, மாரீசன், ஜடாயு, இராவணன், விபீஷணன் ஆகியோரின் வருகை என்பது போன்ற ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வாழ்க்கைச்சித்திரமாக வரையப்பட்டதாலேயே அது எல்லோரும் சுவைக்கும் ஒரு காவியமாக இன்றுவரை திகழ்கிறது.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் இராமாயணத்தைப்போன்ற ஒரு சுவையான கதையே. இதனாலேயே இன்றளவும் பக்கத்துவீட்டுநிகழ்வுகளை அக்கறையுடன் அனைவரும் கவனிக்கிறோம். யார் யாரை காதலிக்கிறார்கள், யாருடைய பெண் வீட்டைவிட்டு ஓடினாள், எதற்காக விவாகரத்து நடந்தது என்பதுபோன்ற ஊர் கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் அதே நிகழ்வு நம் வீட்டில் நடப்பதை எதிர்கொள்ள பெரும்பாலோர் தயாராய் இருப்பதில்லை. பதவி உயர்வு, புதிய கார் வாங்குதல் என்பது போன்ற நிகழ்வுகள் ஒருபோதும் தனித்து நடப்பதில்லை. பகல் வந்தால் தொடர்ந்து இரவு வருவதைப்போல அனைவரது வாழ்வும் ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாகவே இருக்கும். இது வாழ்வின் நியதி.

மேலும் இது படைப்பின் இரகசியம். இவ்வுலகம் இராவணனையும் இராமனையும் உள்ளடக்கிய இராமாயணமாக இல்லாவிட்டால் துன்பம் கலவா இன்பமாகவும் எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாமல் என்றும் இருக்கும் பரமன், ‘நான் பலவாக மாறுவேன்’ என்று சங்கல்பம் செய்ததற்கு பொருள் இல்லாமல் போய்விடும்.

மனித மனங்களில் வேறுபாடுகள்

ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதுதான் படைப்பு. எல்லாவிதத்திலும் ஒன்றுபோல் இருக்கும் இருபொருள்கள் இவ்வுலகில் கிடையாது. மாமர இலைகள் மற்ற மரத்தின் இலைகளிலிருந்து வேறுபடுவதுமட்டுமில்லாமல் ஒரே மரத்தின் இலைகள் கூட ஒன்றுபோல் ஒன்று அமைவதில்லை. ஒரே வீட்டில் வளரும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டே இருப்பார்கள். பொதுவாக பார்த்தால் இருக்கும் ஒற்றுமைகளை கூர்ந்து கவனித்தால் வேற்றுமைகள் வெளிப்படும்.

உலக நிகழ்வுகளில் உள்ள ஒற்றுமை

இடம், பெயர், தேதி ஆகிய மூன்றையும் கவனிக்காவிட்டால் செய்தித்தாள்களில் புதிதாக எவ்வித செய்தியும் வருவதேயில்லை என்பது தெரியவரும். பூமியில் மனிதன் தோன்றிய நாள் முதல் இன்றுவரை ஒவ்வொருவர் வாழ்வின் நிகழ்வுகளும் எவ்வித மாற்றமுமின்றி அதே ஏற்ற இறக்கங்களுடன்தான் அமைந்து வருகிறது.

மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம்

உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் மனித மனங்கள் மாறுபடுவதால் நிகழ்வுகள் அவற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வேறுபடுகின்றன. கற்பத்தில் தோன்றுதல், பிறத்தல், வளர்தல், முதிர்தல், மங்குதல், மறைதல் என்ற ஆறு நிகழ்வுகளும் மனித வாழ்வில் தொடர்ந்து நடந்தாலும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ தனக்கு மட்டும்தான் நிகழ்வதாக மனித மனம் கற்பனை செய்து கொள்கிறது. பல காலம் கழித்து பிறந்த குழந்தைக்கு ஜுரம் ஏற்பட்டு உயிர் பிழைக்குமோ என்ற நிலையில், பிறப்பவர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்ற தத்துவத்தை கூறி அதன் பெற்றோர்களின் கவலையை போக்க முடியாது. குழந்தை எப்படியாவது பிழைக்க வேண்டும் என்று அவர்கள் மனம் தவித்துக்கொண்டுதான் இருக்கும். குழந்தை இறந்துவிட்டால் துக்கம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.

ஆனால் மனதில் ஏற்படும் தவிப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் அவர்களையும் அவர்களை சுற்றியுள்ளவர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது அவரவரின் ஆளுமையை சார்ந்து மாறுபடும். இனி நான் இருக்க மாட்டேன் என்று தற்கொலை செய்து கொள்ள முயலும் தாய், குழந்தையை காப்பாற்றாத மருத்துவரை தாக்கும் தந்தை, நடந்தது நடந்துவிட்டது இனி நடக்க வேண்டியதை கவனிக்கலாம் என்று அமைதியாய் இருக்கும் பெற்றோர் என மனிதர்கள் பல வகைப்படுகிறார்கள்.

மனிதனின் ஆளுமை

நகையின் தன்மை அதில் அடங்கியுள்ள உலோககலப்பின் தன்மையை சார்ந்து இருப்பது போல ஒரு தனி மனிதனின் ஆளுமை அவன் மனம் செய்யப்பட்ட விதத்தை பொறுத்து மாறுபடும். ஒளி, சக்தி, ஜடம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ள விகிதம் மனிதனின் ஆளுமையை நிர்ணயிக்கிறது.

அனைவரிடமும் கலகலப்பாக பேசுபவன், அமைதியாயிருப்பவன், தீர்க்கமாக யோசித்தபின் செயல்படுபவன், உடனுக்குடன் செயல்செய்து முடிப்பவன், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், ஜாக்கிரதையாக இருப்பவன், விரும்பியதை செய்பவன்,  புலன்களை அடக்கியாளுபவன் என ஆளுமைகளில் பல வகைகள் உண்டு. இவற்றில் எது சரி எது சரியில்லை என்ற விவாதம் தவறு. ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து வேறுபட்டுதான் இருக்க வேண்டும் என்பது படைப்பின் நியதி என்பதால் அனைத்து வகையான ஆளுமைகளும் சரியானவையே. ஆளுமையை மாற்றியமைக்கவேண்டும் என்பது தவறான முயற்சி. இதுதான் சரியான குணம் என்று வரையறுத்து அனைவரையும் இயந்திரங்களைப்போல மாற்ற முயல்வது அறிவீனம். மேலும் மனித ஆளுமைகளை யாராலும் மாற்றவே முடியாது. பேசுபவனை மௌனமாக இருக்கச்செய்வதோ, பேசாதவனை கட்டாயபடுத்தி பேசவைப்பதோ முடியாது. ஏனெனில் ஆளுமை உடன் பிறந்தது. மாறாதது.

ஆளுமையின் வகை மாறாது என்றாலும் ஆளுமையின் தரம் தொடர்ந்து வளரும். பாவ புண்ணியங்கள் தரும் சூழ்நிலைகேற்பவாறு வாழ்வில் நிகழும் நிகழ்வுகள், அவரவரின் விருப்பு வெறுப்புகளையும் அறிவுத்திறனை தொடர்ந்து வளர்க்க உதவுகின்றன. அறிவு வளர வளர அதற்கேற்ப ஆளுமையும் வளர்ச்சியடையும்.

ஒவ்வொரு மனிதனும் செயல்களை செய்பவன், பலன்களை அனுபவிப்பவன், அறிவை வளர்த்துக்கொள்பவன் என்ற மூன்று விதங்களில் வாழ்கிறான். இவற்றில் அறிவை பெற தனியாக செய்யும் முயற்சியைத்தவிர அனைத்து செயல்களை செய்யும்பொழுதும் அவற்றின் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்பவனின் ஆளுமை வேகமாக வளரும்.

ஆளுமை வளர்வதால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை ஏதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும். இன்பத்தில் துள்ளுவதும் துன்பத்தில் துவளுவதும் படிப்படியாக குறைந்து இறுதியில் முக்தியடையும் வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள்.
பற்றுடையோன்

நான் பரமன் என்ற பரமரகசியத்தை அறியாத பாமரர்கள் அனைவரும் பற்றுடன் செயலாற்றுபவர்கள். நான் இந்த பலனுக்காக இந்த செயலைச்செய்கிறேன் என்று ஒவ்வொரு செயலைச்செய்யும்பொழுதும் இவர்கள் தெளிவாக இருப்பார்கள். எதிர் பார்த்த பலன் கிடைத்தால், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்று பெரிமிதம் கொள்வார்கள். இந்த நிலை யார் வாழ்விலும் தொடராது. ஏமாற்றம் தடங்கல், தோல்வி, போன்றவற்றை தவிர்க்கமுடியாதபொழுது தன்னம்பிக்கை குறைந்து கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

உண்மை உழைப்புடன் செயல்களைத்திறன்பட செய்து அதனுடன் ஆண்டவன் அருளின் அவசியத்தை அறிந்து அவனிடம் மன்றாடி பிரார்த்தித்த பின்னும் தோல்வியை சந்திக்க நேரும்பொழுது மனிதன் ஏன், எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். கடமையைச்செய், பலனை எதிர்பார்க்காதே என்ற பகவானின் அறிவுரைக்கு அர்த்தம் தெரியத்தொடங்குகிறது. வாழ்வில் செயலை செய்வதற்கு மட்டுமே தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் பலனை பெறும் உரிமையில்லை என்றும் உணர ஆரம்பிப்பார்கள்.

பலனுக்காக அல்லாமல் செயலை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே தன் குறிக்கோள் என்ற அணுகுமுறையுடன் தொடர்ந்து செயலாற்றிவருபவர்களின் மனம் பக்குவபட்டு அவர்களின் ஆளுமை மேலும் வளர்ச்சியடையும்.

தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, கர்மயோகம் எனப்படிப்படியாக உயர்ந்து முக்திவிழைவோனாக மாறாதவர்கள் தொடர்ந்து பற்றுடையோர்களாகவே இருப்பார்கள். காகித ஓடம் கடலலை மேலே ஓடுவது போல இவர்கள் வாழ்வில் நிகழும் ஏற்ற இறக்கங்களினால் அலைக்களிக்கப்பட்டு இவர்கள் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாவார்கள். எலிப்பொறியில் வைக்கப்பட்டுள்ள வடையை கண்டதும் எலிக்கு உண்டாகும் ஆனந்தம் வெகு விரைவில் துன்பமாக மாறுவது போல் வாழ்வின் இனிமையான நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் மேல் கொண்டுள்ள பற்று தொடர்ந்து இவர்களை துன்பத்தில் ஆழ்த்தும்.

இன்பத்திற்காக செயல் செய்தால் துன்பத்தை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்ற அறிவு ஏற்படும்பொழுது ஆளுமை வளர்ந்து துன்பம் கலவா இன்பம் பெற முக்திவிழைவோனாக மாறவேண்டிய அவசியத்தை இவர்கள் உணர்வார்கள்.
முக்திவிழைவோன்

துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ உலகை மாற்றியமைத்து எப்பொழுதும் எல்லாமும் தங்கள் எதிர்பார்ப்பின்படியே நடக்க வைக்கவேண்டும் என்ற தவறான அறிவை மாற்றிக்கொண்டு வாழ்வில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்கவே முடியாது என்றும் அமைதியாக வாழ ஒரே வழி முக்தியடைவதுதான் என்றும் அறிந்தவர்கள் முக்திவிழைவோர்கள்.

மற்றவர்களைப்போல் தொடர்ந்து பல்வேறு வேலைகள் செய்து பணம் ஈட்டி குடும்பப்பொறுப்புகளை நிர்வகித்தாலும் இவர்களின் ஒரே குறிக்கோள் முக்தி என்பது மட்டுமே. முறைப்படி வேதத்தை ஆசிரியரிடம் பயின்று பரம ரகசியத்தை அறிந்துகொண்டிருந்தாலும் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி இவர்களையும் உலுக்கவே செய்யும். இவர்களது ஆளுமை பற்றுடையோர்களை ஒப்பிடும்பொழுது பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கும் காரணத்தால் இதுபோன்ற சோக நிகழ்வுகளை இவர்கள் எதிர்கொள்ளும் விதம் பண்பட்டிருக்கும்.

நான் பரமன், இருப்பதுபோல் தோன்றும் இவ்வுலகம் என்னால் உண்டாக்கப்பட்ட கனவு என்று தொடர்ந்து தியானம் செய்வதால்மட்டுமே இவர்களால் தங்கள் ஞானத்தில் நிலைபெற முடியும். கணவன் மேல் தீரா காதல் கொண்டிருக்கும் மனைவி அவன் வெளியூர் சென்றால் அவன் திரும்பிவருவரை வெவ்வேறு வீட்டுவேலைகள் செய்துகொண்டிருந்தாலும் சதா சர்வகாலமும் மனதினுள் அவனையே நினைத்துக்கொண்டிருப்பதுபோல முக்திவிழைவோன் பரமன் மேல் தியானம் செய்யவேண்டும். எவ்வளவுதரம் அல்லது எவ்வளவுநேரம் அரிசியை உலக்கையால் குத்தவேண்டும் என்ற கேள்விக்கு உமி அரிசியிலிருந்து பிரியும்வரை என்பதுதான் சரியான பதில். அதுபோல எவ்வளவுதரம் அல்லது எவ்வளவு நேரம் பரமன் மேல் தியானம் செய்யவேண்டுமென்பதற்கு உடல் மற்றும் மனம்தான் தான் என்னும் எண்ணம் உதிர்ந்து நான் பரமன் என்பதை உணரும்வரை என்று பிரஹதாரண்யக உபநிடத மந்திரம் ஒன்று (2.4.5) பதில் கூறுகிறது.

நான் முக்தியடையவேண்டும் என்ற  ஆசை நான் பணக்காரானாக வேண்டும் என்ற தீவிர ஆசையைபோல இருந்தால் அது நிறைவேற வாய்ப்பில்லை. எப்பொழுது ‘நான்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘பரமன்’ மேல் மட்டும் தியானம் செய்யமுடிகிறதோ அப்பொழுதுதான் அகங்காரம் தொலைந்து நான் பரமன் என்ற ஞானம் உதிக்கும். முக்தியடைவது தானாக நடக்கும்.
முற்றுணர்ந்தோன்

நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெற்ற முற்றுணர்ந்தோர்களுக்கு உலகம் இருப்பதுபோல் தெரியும் ஒரு மாயை என்பது தெளிவாகத்தெரிந்திருப்பதால் உலக நிகழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது என்ற செய்தி அவர்கள் மனதையும் ஆட்டுவிக்கும். ஆனால் மனம் தான் அல்ல என்ற அறிவு உறுதியாக இருப்பதால் இவர்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள். தன் குழந்தை இறந்துவிட்டது என்பதை அறிந்தபின் இவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது அவரவர்களின் ஆளுமையை பொறுத்து மாறுபடும். செயல்பாட்டின் அடிப்படையில் ஒருவரை முற்றுணர்ந்தோன் அல்லது முக்திவிழைவோன் என்று வகைபிரிக்கமுடியாது.

கயிற்றை பாம்பாக பார்த்து பயப்படுபவன் பற்றுடையோன். அது பாம்பல்ல வெறும் கயிறுதான் என்பதை அறிந்திருந்தாலும் சுற்றியிருக்கும் எல்லோரும் அதற்கு பயப்படுவதால் மனம் குழம்பியிருப்பவன் முக்திவிழைவோன். கயிற்றை மட்டும் பார்ப்பதால் தெளிவாக இருப்பவன் முற்றுணர்ந்தோன்.

உலக நிகழ்வுகளும் மற்ற மனிதர்களின் செயல்பாடுகளும்தான் தங்களது சோகத்திற்கு காரணம் என்று பற்றுடையோர்கள் துன்பமடைவர். அதே நிகழ்வுகள் முக்திவிழைவோன் வாழ்வில் ஏற்படும்பொழுது அவன் தன் துன்பத்திற்கு ஒரே காரணம் முக்தியடையாதது மட்டுமே என்று அறிவான். நிகழ்வுகளும் அவை மனதில் ஏற்படுத்தும் சலனங்களும் பிரிக்கமுடியாதவை என்றும் இவ்விரண்டிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன்.   

தான் செயல் செய்பவன் என்றும் பலனை அனுபவிப்பவன் என்றும் நினைப்பவன் பற்றுடையோன். செயல் மட்டும் செய்பவன் நான் என்று பலனைத்தியாகம் செய்பவன் முக்திவிழைவோன். தான் எவ்வித செயலையும் செய்வது கிடையாது என்று உணர்ந்துகொண்டிருப்பவன் முற்றுணர்ந்தோன். எனவே நடந்த நிகழ்வுகள் வேறு விதமாக நடந்திருக்கலாமென்றோ அல்லது தான் வேறுமாதிரி செயல்பட்டிருந்தால் சோகநிகழ்வை தவிர்த்திருக்கலாமென்றோ அவன் நினைத்து துயரப்படமாட்டான். தன் விதி என்று தன்னை சமாதானபடுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் அவனுக்கில்லை. ஏனெனில் தான் இது வரை பாவம் எதையும் செய்யவில்லை என்று அவனுக்கு தெளிவாகத்தெரியும். தான் எதனுடனும் சம்பந்தமில்லாதவன் என்றுணர்ந்ததால் அவன் எதனாலும் பாதிக்கபடுவதில்லை.


முடிவுரை :

மனித ஆளுமைகளை பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்துபவர்கள் ஆளுமை உடன் பிறந்தது என்பதால் அதன் தனித்தன்மையை மாற்றவேமுடியாது என்று உணர்வது அவசியம். அப்பொழுதுதான் ஆளுமையின் தரத்தை  உயர்த்த தேவையான அறிவை அடைவதில் முழுமுயற்சியுடன் ஈடுபடமுடியும்.

செயல்செய்வதன் மூலமாகவும் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை அதிகப்படுத்திக்கொள்பவனால் மட்டுமே ஒருவர் தனது ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இன்பத்தையும் துன்பத்தையும் தரக்கூடிய நிகழ்வுகளை மாற்றி மாற்றி வழங்கும் வகையில் தான் இந்த உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்ற இறக்கங்களை சரியாக எதிர்கொள்ள ஆளுமையின் தரத்தை உயர்த்திக்கொள்ளுவது அவசியம். 

ஞானத்தின் பலன் துன்பத்திலிருந்து விடுதலை. பாவபுண்ணியங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு காரணமாக மட்டுமே அமைகின்றனவேயன்றி நம்மை இன்பத்திலோ துன்பத்திலோ ஆழ்த்தும் சக்தி அவற்றுக்கு கிடையாது. அறிவு அதிகமாக அதிகமாக நம்மால் துன்பபடுவதை படிப்படியாக குறைத்து இன்பமாக வாழலாம். எப்பொழுது பரமனைப்பற்றிய முழுமையான அறிவை அடைகிறோமோ அப்பொழுது துன்பத்திலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறோம்.

பற்றுடையோன் நிகழ்வுகள் எப்பொழுதும் நல்லதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தபடி இருப்பான். முக்திவிழைவோன் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் படைப்பு இருக்கமுடியாது என்றும், அனைவரும் பாவபுண்ணியங்கள் செய்திருப்பதால் வாழ்வின் இருமைகள் மாறிமாறிதான் வரும் என்றும் அறிந்து இருந்தாலும் முற்றுணர்ந்தோன் போல வாழ்வின் தொடர்ந்த மாற்றங்களை ஏற்ற இறக்கங்கள் என்று பாகுபாடு செய்யாமல் ஏற்றுக்கொள்ள பரமன் மேல் தியானம் செய்வது அவசியம்.

உலகம் உண்மையானது என்ற தவறான எண்ணம் முக்திவிழைவோன் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்வது அவசியம். உலகம் நாம் காணும் கனவு என்று உறுதியாக உணரும்வரை தியானம் செய்தால்தான் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாற்றமடைவதுதான் மனதின் வேலை என்றும் மாறும் மனம் தான் அல்ல என்றும் அவன் உணர்வான்.


பயிற்சிக்காக :

1. வாழ்வின் நியதி மற்றும் படைப்பின் இரகசியம் என்று குறிப்பிடப்பட்ட கருத்து என்ன?

2. மனிதர்கள் வாழ்வில் பொதுவாக ஏற்படும் ஆறு நிகழ்வுகள் என்னென்ன?

3. மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம் மாறுபடுவதற்கு காரணம் என்ன?

4. மனித ஆளுமையை நிர்ணயிப்பது எது?

5. மனித ஆளுமையை மாற்றியமைக்க முடியுமா?

6. ஆளுமையின் வளர்ச்சிக்கு எது அவசியம்?

7. மூன்று வாழ்க்கை விதங்கள் என்று பிரித்து ஆராய காரணம் என்ன?

8. பற்றுடையோன் முக்திவிழைவோனாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

9. முக்திவிழைவோன் முற்றுணர்ந்தோனாக மாற செய்யவேண்டிய ஒரே செயல் என்ன?

10. ஞானத்தின் பலன் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான காரணங்களை ஆராய்க.

2. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்ற கூற்றின் உண்மையை ஆராய்க.

3. மனித ஆளுமைகளின் வகைகளை ஆய்க.

4. மனிதர்களை ஆளுமை வகைகளாக பிரிப்பதன் பயன் என்ன?

5. முற்றுணந்தோர்களின் மனம் சோக நிகழ்வினால் கலக்கமடையுமா?