பாடம் 153: ஞானம் ஒன்றுதான்
பாடல் 477 (III.4.52)
மனித மனங்கள் மாறுபடுவதால் தீவிர முயற்சி செய்தால்கூட ஞானம் பெற ஆகும் காலத்தை அறுதியிட்டு கூறமுடியாது என்பதை விளக்கியபின் ஞானம் ஏற்பட்டால் உடனே முக்தியடைவோம் என்ற முக்கியமான கருத்தை இந்தப்பாடம் தருகிறது.
காரண காரியம்
விதை விதைத்தவுடன் பழம் கிடைக்காது. வேதம் படித்து முடித்தபின் அதன் பலனான ஞானத்தைப்பெற சிறிது காலமாகலாம். ஆனால் ஞானம் பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் இடையே எவ்வித காலதாமதமும் கிடையாது. மின்சாரம் தடைபட்டதால் முழு இருளில் மூழ்கியிருக்கும்பொழுது தீக்குச்சியை உரசி தீயை பற்றவைக்க நேரமாகலாம். ஆனால் குச்சியில் நெருப்பு தோன்றிய அதே நொடியில் இருள் அகன்று அறையில் ஒளியேற்படும். அதுபோல அறியாமை என்ற இருளை நீக்கி ஞானத்தைப்பெற செய்யும் முயற்சிகள் பலன் தர சில காலமாகலாம். ஆனால் ஞானம் ஏற்பட்டவுடனேயே அனைத்து துன்பங்களும் அகன்று முக்தியடைவோம்.
ஞானமும் முக்தியும்
ஞானத்தால் மட்டுமே முக்தியடைய முடியும் என்பது வேதாந்தத்தின் ஆரம்ப பாடம். ஞானமே முக்தியென்பதுதான் உண்மை. நான் மனிதன் என்ற அறியாமைதான் நம் துன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படைக்காரணம். நான் பரமன் என்னும் ஞானம் ஏற்பட்ட அதே நொடியில் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ஏனெனில் ஆனந்தமயமான பரமன் துன்பப்படுவதற்கு வாய்ப்பேயில்லை.
இப்பொழுது மனிதனாக இருக்கும் நான் முயற்சி செய்தால் பரமனாக மாறலாம் என்பது வேதத்தின் மையக்கருத்தாக இருக்குமானால் இந்த அறிவு ஏற்பட்டவுடன் அதை செயல்படுத்தி பரமனாக மாற வெகுகாலம் ஆகலாம். என்றுமிருக்கும் பரமன் நீதான் என்ற அறிவு ஏற்படுவதற்கும் முக்தியடைவதற்கும் காலதாமதம் இருக்க முடியாது. ஏனெனில் முக்தியடைவது ஒரு நிகழ்வு அல்ல. உண்மை நிலையை உணர்தலே முக்தியடைவது. எனவேதான் நான் பரமன் என்ற பரமரகசியத்தை கேட்டபின் அதை புரிந்துகொள்ள பல காலம் முயற்சி செய்ததன் பலனாக ஞானம் ஏற்படும். ஞானம் ஏற்பட்ட அதேகணத்தில் முக்தியடைவோம்.
ஞானம் ஒன்றே
பரமன் ஒருவனே. எனவே நான் பரமன் என்கிற ஞானமும் ஒன்றுதான். மனங்கள் வேறுபடுவதால் ஞானம் பெற செய்யவேண்டிய முயற்சி மற்றும் ஆக வேண்டிய காலம் ஆகியவை வேறுபடலாமேதவிர ஞானத்தில் வேறுபாடு ஏதுவும் இருக்க முடியாது. கணிதம், அறிவியல் போன்ற துறைகளில் ஒருவரின் அறிவு மற்றவரின் அறிவை விட உயர்ந்தோ தாழ்ந்தோ இருக்கலாம். அது போல் வேதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை போன்ற ஆன்மீக நூல்களை பற்றிய அறிவு கூட வேறுபடும். ஆனால் சொல்லுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட பரமன் நான் என்பது சாதாரண புத்தகஅறிவு அல்ல. வேதம் முழுவதையும் அர்த்தம் புரிந்து மனப்பாடம் செய்தால் கூட ஞானம் ஏற்படாமல் இருக்கலாம். ஞானம் என்பது திடீரென உதிப்பது. அது பலருக்கு முறையாக வேதத்தை படிக்கும்பொழுது ஏற்படும். ஒரு சிலருக்கு எவ்வித முயற்சியுமின்றி தானாக ஞானம் ஏற்படலாம். பரமன் எவ்வித குணங்களும் அற்றவன் என்பதால் நான் பரமன் என்று உணர்ந்து கொண்ட இருவரின் ஞானத்தில் எவ்வித வித்தியாசமும் இருக்க முடியாது. இடம், காலம், காரணம், பொருள், கர்மம், கர்மபலன், பிறவிச்சுழல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட பரமன் ஒருவனே. எனவே நான் பரமன் என்ற ஞானம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
முக்தி ஒன்றே
இவ்வுலகம் மாயை என்ற ஞானம் அனைத்து துன்பங்களையும் ஒரே கணத்தில் பொய்யாக்கிவிடுவதால் முக்தியும் ஒன்றே. நான் பரமன் என்பதை அறிந்தாலும் எனது வைரமோதிரம் தொலைந்தால் துக்கப்படாமல் இருக்க முடியாது என்பவர் ஞானம் பெற இன்னும் பல காலம் ஆகலாம். இந்த உலகம் இயங்குவதற்கே நான்தான் ஆதாரம் என்று உணர்ந்த ஞானி ஒரு மனதின் மாறுதல்களை குறித்து வருத்தப்படுவதில்லை. நான் பரமன் என்பது ஏதோ ஒரு மாதிரி புரிந்திருப்பதால் துக்கம் சிறிது குறைவாக இருக்கிறது என்றோ போகப்போக நான் பரமன் என்பதை முழுமையாக புரிந்துகொண்டவுடன் துக்கம் முழுவதும் மறைந்துவிடும் என்றோ கூறுவது தவறு. நான் பரமன் என்பது புரிந்தவர்கள் ஞானிகள். புரியாதவர்கள் அஞ்ஞானிகள். அரைகுறை ஞானிகள் என்று யாரும் கிடையாது. ஞானிகள் அனைவரும் முழுமையாக துன்பத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள்.
படிப்படியாக அதிகமாகும் அறிவு ஞானமாக மலரும் அதே கணத்தில் முழுமையான முக்தி ஏற்படும். எனவே ஞானத்திலும் முக்தியிலும் எவ்வித பாகுபாடும் கிடையாது.
ஞானிகளில் வேறுபாடு
ஞானம் ஒன்று என்பதால் ஞானத்தின் அடிப்படையில் ஞானிகளுக்கிடையே எந்த வேறுபாடும் கிடையாது. மனித மனங்கள் வேறுபடும் என்பதால் அறிவுத்திறன் மற்றும் செயல்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஞானிகளிடையே வேறுபாடு இருக்கலாம். ஏசு கிருஸ்து, சத்யசாய்பாபா, இரமண மஹரிஷி, ஓஷோ, நிசார்கதத்த மஹராஜ், இராமகிருஷ்ணர், கிருஷணமூர்த்தி ஆகிய அனைவரும் ஞானிகளே. புகழ், பணம், அறிவுத்திறன் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட சிறந்தவரா என்ற ஆராய்ச்சியில் எவ்வித அர்த்தமும் இல்லை.
பொதுவாக நம்மிடையே வாழ்ந்துவரும் மனிதர்களை ஞானிகளாக அடையாளம் கண்டுகொள்வதில்லை. மரணமடைந்த பின்தான் ஒருசில ஞானிகள் சரித்திரபாட புத்தகத்தில் இடம்பிடிக்கிறார்கள். புத்தர், விவேகானந்தர், இரமணமஹரிஷி போன்றவர்களுக்கு இணையான ஞானிகள் இன்றுபலர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். ஞானத்தில் வேறுபாடு ஏதும் இல்லை என்பதால் வேதம் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் தினமும் ஒருசிலராவது ஞானம் பெற வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மையை பொதுமக்கள் புரிந்து கொள்வதில்லை.
அதிசய சம்பவங்கள் நிகழ்வது அல்லது நிகழ்த்துவது, அசாதாரணமான முறையில் பிறப்பது, மந்திரத்தால் நோய்களை குணப்படுத்துவது ஆகியவற்றிற்கும் ஞானம் பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஞானி என்ற பட்டத்தை பெற குறைந்தது தியானம் செய்ய தெரிந்தவராய் இருக்கவேண்டும் என்ற அவசியம் கூடகிடையாது. மந்திர தந்திரங்கள் செய்பவர்கள் எல்லோரும் ஞானிகள் அல்ல. ஞானிகள் எல்லோரும் அசாதாரண மனிதர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. நான் பரமன் என்ற ஞானத்தை பெற்று வாழ்வின் அனைத்து துன்பத்திலிருந்தும் விடுதலை பெற்ற அனைவரும் ஞானிகளே.
ஒருவர் உண்மையில் ஞானியா என்று மற்றவர்களை பற்றி ஆராய்பவர் ஞானியாக வாய்ப்பு மிகவும் குறைவு. தவறாகவே இருந்தாலும் உயிருடன் இருப்பவர்களை ஞானிகள் என்று சுட்டிக்காட்டினால் நாமும் ஞானம் பெறலாம் என்று நம்பிக்கை வளரும். புத்தருக்கு சமமான பத்து ஞானிகள் ஒவ்வொரு ஊரிலும் தற்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பது சாத்தியம் என்ற உண்மையை உணர்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள். உல்லாசப்பயணம் செல்பவர், திரைப்படம் பார்ப்பவர் போன்றவர்கள் ஞானிகளாக இருக்க முடியாது என்பது தவறான கருத்து.
ஞானியும் மற்ற அறிஞர்களும்
கணிதம், அறிவியல் போன்ற மற்ற துறையினைச்சேர்ந்த அறிஞர்களைப்போல வேதத்தின் சாரத்தை அறிந்து தெளிந்த ஞானியும் ஒரு சாதாரண மனிதனே. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கறுப்பு உடையும் சதுரதொப்பியும் அணிந்து கொண்டதால் மனிதர்கள் மாறிவிடமாட்டார்கள். அது போல நான் பரமன் என்பது புரிந்தவுடன் ஞானியின் தலையின் பின் ஒரு ஒளிவட்டம் தோன்றிவிடாது. தீவிர சிந்தனையால் அவர் மனம் பண்பட்டிருந்த காரணத்தாலேயே குளியலறையில் திடீரென்று ஆர்க்கிமிடீஸ் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். பலகாலம் தொடர்ந்து முயற்சிசெய்ததாலேயே திடீரென்று புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் உதித்தது. நான் பரமன் என்பதன் பொருளை தீவிரமாக ஆய்ந்தால் யார் வேண்டுமானாலும் ஞானிகளாகி முக்தியடையலாம்.
எவனொருவன் பரமனை அறிகிறானோ அவன் பரமனாகவே மாறிவிடுகிறான் என்றும் பந்தப்படுத்தும் இருதையமுடிச்சுக்கள் அவனுக்கு கழன்றுவிடுவதால் அவனுக்கு சாகாவரம் கிடைக்கிறது என்றும் முண்டக உபநிஷத் மந்திரம் (3.2.9) கூறுகிறது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்பது தவறான அறிவு. உணர்வு என்னும் ஒரே பரமன் பல உடல்களுடன் இருக்கிறான் என்பதே சரியான ஞானம். உடல் அமைப்பின் அடிப்படையில் உயிரினங்களை பறவை, மிருகம் என்று பிரிக்கலாம். மனிதன் என்ற உயிரினம் ஒன்றுக்குத்தான் தான் பரமன் என்பதை அறிந்துகொள்ளும் திறன் உள்ளது. அனைத்து மக்களுக்கும் இந்த திறன் இருப்பினும் ஒருசிலர் மட்டுமே அந்த ஞானத்தை அடைகிறார்கள். நான் பரமன் என்னும் இந்த பரமரகசியம் புதிதாக எதையும் உண்டாக்குவதோ அல்லது எதையும் மாற்றுவதோ கிடையாது. அனைத்து உயிரினங்களும் பரமனே என்பதால் எவன் இந்த உண்மையை அறிந்துகொள்கிறானோ அவன் ஞானி.
இராமன், கிருஷ்ணன், புத்தர், ஏசு, இரமணர் ஆகியோர் சாதாரண மனிதர்களே. மிருகம் போல் இருக்கும் மனிதன் கடவுளாக மாறவேண்டும் என்பது வேதத்தின் ஆரம்பபாடம். மிருகம் உட்பட அனைத்தும் கடவுளே. ஒன்றாக இருக்கும் பரமன் பலவாக தோன்றும் இந்த உண்மையை அறிந்து கொண்டால் யாரும் யாராகவும் மாற வேண்டிய அவசியமில்லை என்று புரியும். என் உடலும் மனதும் மாயையின் ஒரு பகுதி என்றும் நான் பரமன் என்றும் உணர்ந்த ஞானிகள் முக்தியடைந்தவர்கள்.
ஜடமான உடல் நான் அல்ல என்பது வேதாந்தத்தின் ஆரம்ப பாடம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் நான்தான் என்று அறிந்துகொள்வது இறுதிப்பாடம். பார்ப்பவனும் பார்க்கப்படுபவையும் ஒன்றே. நான் பரமன் என்பது உண்மையில் புரியும் பொழுது என்னைத்தவிர வேறு எதுவுமில்லை என்பதும் புரிந்துவிடும். நான் அனந்தமானவன், ஆனந்தமானவன், உணர்வு மயமானவன், இவ்வுலகம் என்னும் மாயா நாடகம் நடைபெற ஆதாரமாக இருப்பவன் என்ற ஞானம் பெற்றவர்கள் முக்தியடைந்தவர்கள்.
ஜடமான உடல் நான் அல்ல என்பது வேதாந்தத்தின் ஆரம்ப பாடம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் நான்தான் என்று அறிந்துகொள்வது இறுதிப்பாடம். பார்ப்பவனும் பார்க்கப்படுபவையும் ஒன்றே. நான் பரமன் என்பது உண்மையில் புரியும் பொழுது என்னைத்தவிர வேறு எதுவுமில்லை என்பதும் புரிந்துவிடும். நான் அனந்தமானவன், ஆனந்தமானவன், உணர்வு மயமானவன், இவ்வுலகம் என்னும் மாயா நாடகம் நடைபெற ஆதாரமாக இருப்பவன் என்ற ஞானம் பெற்றவர்கள் முக்தியடைந்தவர்கள்.
முடிவுரை :
ஆனந்தம் உலகில் இருக்கிறது என்ற அஞ்ஞானத்துடன் பணம், பதவி, பொருள், புகழ் போன்றவற்றை அடையும் ஆசைகளினால் உந்தப்பட்டு செயல்படும் மனிதன் புதை மணலில் சிக்கியவன் போல தொடர்ந்து வாழ்வில் போராடுகிறான். அவனை திசைத்திருப்பி துன்பகரமான வாழ்விலிருந்து விடுதலைபெற்று இன்பமுடன் வாழ இறைவனை சரணடைய வேண்டும் என்று வேதம் முதலில் உபதேசிக்கிறது. முக்தி வேண்டும் என்று கடவுளின் துணையை நாடும் மனிதனுக்கு படிப்படியாக வேதம் உண்மையை போதிக்கிறது. கடைசியில் நாம் என்றும் இருக்கும் ஆனந்த மயமான பரமன் என்றும் நம்மை மனிதன் என்று நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டி பிறவிச்சுழலிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது. கயிற்றால் கை கட்டப்பட்டிருப்பது போல கனவுகண்டு அழும் குழந்தையின் துன்பத்தை தீர்க்க கயிறை அவிழ்ப்பதுபோல பாவனை செய்யும் தாய் போல உலக பந்தங்களில் கட்டுப்பட்டு துன்பமடைவதாக நினைக்கும் மனிதனுக்கு பிரார்த்தனை செய்வதன் மூலம் துன்பத்தை முழுவதுமாக அகற்றலாம் என்று வேதம் வழிகாட்டுகிறது. வேதம் காட்டிய வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு படிப்படியாக மனம் செம்மையடைகிறது. அதன் பின் ஆனந்தமயமான பரமனை உடலின் மரணம் பாதிக்காது என்ற அறிவை கொடுத்து வேதம் துன்பங்களிலிருந்து நமக்கு முக்தி கொடுக்கிறது.
உலகில் வாழும் அனைத்து மக்களும் முக்தியடைந்தவர்களே என்றாலும் அவர்களில் ஒரு சிலருக்குத்தான் இந்த இரகசியம் தெரியும். நான் பரமன் என்ற பரமரகசியத்தை அறிந்தவர்கள் ஞானிகள். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் எவ்வித பந்தத்திலும் கட்டுப்படாது முக்தியடைந்தவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் இந்த உண்மையை அறிந்துகொள்ளாமல் இந்த உலகம் துன்பத்தைத்தருவது என்ற தவறான எண்ணத்துடன் எனக்கு பிறவா வரம் வேண்டும் என்று ஆண்டவனிடம் மன்றாடி கொண்டிருக்கிறார்கள். இந்த அறியாமை ஞானம் பெற்றால்தான் நீங்கும். பலகாலம் முயன்றாலும் இந்த ஞானத்தை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நான் பரமன் என்ற ஞானம் இல்லாவிட்டாலும் அனைத்து மக்களும் என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற உண்மை மாறிவிடாது. எனவே இந்த உண்மையை உணர்ந்த அனைவரும் உடனே முக்தியடைகிறார்கள்.
பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. அறிவின் முடிவான வேதாந்தம் தரும் ஞானம் பற்றிய இறுதிக்கருத்துக்களை விளக்கிய இந்தப்பாடத்துடன் மூன்றாம் அத்தியாயம் முற்றுப்பெறுகிறது.
பயிற்சிக்காக :
1. ஞானம் பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் என்ன வித்தியாசம்?
2. ஞானத்திற்கும் முக்திக்கும் என்ன வித்தியாசம்?
3. ஞானம் ஒன்றே என்பதை நிரூபிக்கவும்.
4. முக்தி ஒன்றே என்பதை நிரூபிக்கவும்.
சுயசிந்தனைக்காக :
1. முக்தியடைந்த மக்கள் எல்லோரும் ஞானம் பெற்றவர்களா?
2. நான் ஞானம் பெற்றால் விவேகானந்தருக்கு சமமானவன் ஆகிவிடுவேனா?
3. எனக்கு பரமரகசியம் தெரியும். ஆனாலும் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாவதற்கு காரணம் என்ன?
4. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பரமனை மனதின் துணையின்றி எப்படி அறிந்து கொள்ள முடியும்?
5. நான் மாணவன் என்று சொல்வதற்கும் நான் பரமன் என்பதற்கும் என்ன வேறுபாடு?