Tuesday, December 25, 2012

Lesson 181: World is God (Brahma Sutra 4.3.3)


பாடம் 181: ஞானியின் பார்வை ஓஷோ ரஜனீஷ்.
பாடல்: 520 (IV.3.3)

தத்துவ இயலில் முதுகலை பட்டம் பெற்று, கல்லூரியில் பேராசிரியராக வாழ்வைத் துவங்கிய ஓஷோ ரஜனீஷ் அவர்களின் பார்வையில் மனித வாழ்வைச் சித்தரிக்கும் வண்ணம் இந்தப் பாடம் அமைந்துள்ளது.

உலகம் ஒரு கண்ணாடி. கண்ணாடி முன் நின்று பார்த்தால் அவரவரின் முகம்தான் தெரியும். அது அழகாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்ணாடி தீர்மானம் செய்வதில்லை. வெளி உலகம் மனிதனுக்கு இன்பத்தையோ துன்பத்தையோ தருவதில்லை. மனிதனின் மனம் எப்படி இருக்கிறதோ அதைத்தான் உலகம் பிரதிபலிக்கும். உதாரணமாக கோபமாக இருப்பவனின் கண்ணுக்கு அழகான மலர் தென்படாது. ஆனால் அவன் காதலில் மூழ்கி இருந்தால் கள்ளிச்செடிக் கூட கவர்ச்சியாக காட்சி அளிக்கும். பார்க்கப்படும் பொருளை விட பார்ப்பவனின் மனநிலை முக்கியமானது. துன்பங்களுக்குத் தீர்வு வெளி உலகில் இல்லை. உள்ளே இருப்பதை வெளியே காட்டும் கண்ணாடியை மாற்ற முயற்சிப்பது வீண்.

தன்னைத்தானே மாற்றிக்கொள்வதும் முடியாது. இடது கைக்கும் வலது கைக்கும் நடக்கும் போராட்டம் முழுமையான வெற்றி அல்லது முழுமையான தோல்வியில் முடிவதில்லை. ஏனெனில் இருப்பது ஒரே ஆள். தன்னுடன் தானே சண்டை செய்தால் மனக்கொதிப்பு, கோபம், சோகம், களைப்பு போன்ற வேண்டாத விளைவுகள் மட்டுமே ஏற்படும். வெற்றி கிடைக்காது. மனதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்வது யார்? இப்படி இருக்கும் நான் அப்படி ஆக வேண்டும் என்று முயற்சி செய்வது இரண்டு கைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் போன்றது.

சரியான அறிவை அடைவதன் மூலம் நாம் நம் மனதை சரி செய்து கொள்ளலாம். அதன் பின் வாழ்வே ஒரு கொண்டாட்டமாக மாறிவிடும். புத்தர், மாகாவீரர் போன்ற மகான்கள் காட்டும் வழி இதுவே.

அறிவும் துன்பமும்

வாழ்வில் துன்பத்தை அகற்றி இன்பமாக இருக்க சரியான அறிவை அடைய வேண்டும். ஆனால் அறிவு அதிகமாக அதிகமாக துன்பங்கள் அதிகமாவதைத்தான் நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்.

பையில் வைத்திருந்த பணம் காணாமல் போனால் வருத்தம் ஏற்படுவது இயற்கை. பணம் ஏன் தொலைந்து போனது என்ற ஆராய்ச்சியால் ஏற்படும் துன்பம் செயற்கை. பணத்தை தேடித் திரும்பப்பெற முயற்சி செய்வதில் தவறு இல்லை. ஆனால் அது கிடைக்குமா என்ற தவிப்பு அனாவசியம். பணம் தொலைந்து போனதற்கு எப்படி எவ்வித காரணமும் கிடையாதோ அது போல் அதை திரும்பப் பெறுவதற்கும் நமது முயற்சி காரணமாக இருக்காது. ‘என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படிச் செய்ய வேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவாளி அதிக பதில்களை கொடுப்பான். எனவே அவனது துன்பமும் அதிகமாக இருக்கும். அவ்வளவு தூரம் யோசிக்காதவர்கள் ஏதோ என் விதிஎன்று இயற்கையாக ஏற்படும் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பார்கள். ‘இது ஏன் நடந்தது?’, ‘நான் இதைச் செய்து இருக்க கூடாதுஎன்பது போன்ற செயற்கைத் துன்பங்கள் இவர்களை பாதிக்காது. மேலும் உலக அறிவு அதிகமாக இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது. எதிர்காலம் பற்றி ஏதாவது அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.

இது போல், அதிக அறிவு அதிக கலக்கத்தையே கொடுக்கும். நிம்மதியைக் கொடுக்காது. நான் வேறு. இந்த உலகம் வேறுஎன்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பதுதான் இதற்குக் காரணம். எல்லாவற்றையும் ஆராய்ந்து, காரண காரியங்களை கண்டுபிடுத்து, எல்லைக்கோட்டை வரையும் இந்த அரைகுறை அறிவு துன்பத்தை மட்டுமே தரும். அனைத்தும் ஒன்றுதான் என்பது முழுமையான அறிவு. இந்த அறிவை பெற்றவர்களை செயற்கைத் துன்பம் அணுகாது. உலகின் தன்மையைப் பற்றிய இந்தச் சரியான அறிவுதான் இன்ப வாழ்வுக்கு வழிவகுக்கும்.

இருமைகள் இயற்கையானவை

இயற்கையாக ஏற்படும் துன்பங்கள் வாழ்வில் அவசியமானவை. இன்பம் என்ற வார்த்தைக்கு துன்பம் என்ற வார்த்தைதான் பொருளைத்தருகிறது. அதுபோல் இந்த உலகில் உள்ள அனைத்தும் எதிர்ப்பதங்களுடன் கூடிய வார்த்தைகளால் மட்டுமே உருவாகியுள்ளன. மேடு இல்லாவிட்டால் பள்ளம் இல்லை. இதுதான் படைப்பின் இரகசியம்.

கடிகாரத்தின் பெண்டுலம் இடது பக்கம் சென்றால்தான் வலது பக்கம் செல்ல முடியும். வலது பக்கம் செல்வதும் இடது பக்கத்திற்குத் திரும்புவதற்காகவே. இரண்டும் ஒன்றுதான். இதுபோல் வாழ்க்கையில் இருக்கும் இன்பம்-துன்பம், புகழ்-இகழ், வறுமை-வளமை ஆகிய அனைத்து இருமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. ஒன்று இல்லாவிட்டால் மற்றது இல்லை. இது புரிந்துவிட்டால், ‘இது வேண்டும் அது வேண்டாம்என்று தேர்வு செய்வது அனாவசியம் என்ற அறிவு ஏற்படும். வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அதில் பங்கேற்காத சாட்சியாக பார்த்து அனுபவிக்க முடியும்.

இந்த அறிவு ஏற்படும் வரை, மனிதன் செயற்கையான துன்பத்தை தொடர்ந்து அனுபவிப்பான். இன்பத்தை மட்டும் தரும் இடமாக உலகை மாற்றிவிடலாம் என்று அவன் செய்யும் முயற்சிகள், இரு கைகளின் போராட்டத்தைப் போல் தோல்வியிலேயே முடியும். இதனால் இயற்கையாக ஏற்படும் துன்பத்தைவிட பன்மடங்கு செயற்கைத் துன்பத்தை மனிதன் அனுபவிக்கிறான்.

தானும் மற்றவர்களும் ஒன்றுதான் என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைவர் மீதும் இயற்கையாக அன்பு ஏற்பட்டுவிடும். யாரையும் வெறுக்க முடியாது. யார் மீதும் பொறாமை கொள்ள முடியாது. போராட்டம் ஏதும் இன்றி வாழ்வில் வெற்றி அடையும் வழி இது ஒன்றுதான்.

இன்பத்தை அடையும் வழி

கைகள் நிரம்ப வைத்திருக்கும் கற்களை கீழே போட்டால்தான் வைரங்களை எடுக்க முடியும். துன்பத்தை துறந்தால்தான் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

தூணைக் கட்டிபிடுத்துக்கொண்டு என்னை அவிழ்த்து விடுங்கள் என்று கூப்பாடு போடுபவனைப்போல பிரச்சனைகளை பிடித்து வைத்துக்கொண்டு அவதிப் படும் மனிதர்களால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

துன்பம் வெளியே இருப்பது. இன்பம் நமக்குள் இருப்பது. துன்பத்தை அடக்கி வைத்தால் அதிகமாகும். வெளிப்படுத்தினால் குறையும். இன்பத்தை அடக்கி வைத்தால் குறையும். வெளிப்படுத்தினால் அதிகரிக்கும். துன்பத்தை வெளிப்படுத்த தனிமை அவசியம். இன்பத்தை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். துன்பம் நம்முடன் தொடர்பற்றது என்பதை அறிந்தால் அவை தானாக நம்மைவிட்டுப் போய்விடும்.

ஒவ்வொரு மனிதனிடமும் முக்தி அடையும் திறன் ஒளிந்து உள்ளது. வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புதான் முக்தியை தடை செய்கிறது. இதை அறியாமல், எவ்வளவு முயன்றாலும் வெற்றியை தரக்கூடிய சரியான பாதையை மனிதனால் கண்டுபிடிக்க முடியாது. தான் யார் என்பதை அறிந்தவர்கள் எந்தப் பாதையில் பயணம் செய்தாலும் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

தான் யார் என்பது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதையும் தன் உலக அறிவு, முட்டாள்தனத்தின் மற்றொரு பெயர் என்பதையும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். துன்ப கலப்பற்ற இன்பத்தைப் பெற கடவுளை நாடி கோவிலுக்குச் செல்லாமல் கடவுளை நேரடியாக அறிந்த ஞானிகளின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

புகழ் பெற்ற மனிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு தானும் அவர்களைப்போல் ஆகவேண்டும் என்பது தவறான ஆசை. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். உன்னைப்போல் ஒருவன் இதுவரை இந்த உலகில் பிறந்ததும் இல்லை; இனிப் பிறக்கப் போவதும் இல்லை. பூத்துக்குலுங்கும் நந்தவனத்தில் ஒரு மலரைப்போல இன்னொரு மலர் இருப்பதில்லை. ஒவ்வொரு மலரும் முழுமையாக பூத்து இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர, சம்பங்கிப்பூ ரோஜா மலரைப்போல மாற வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல நான் நானாக முழுமை அடைய, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியை கைவிட வேண்டும். மற்றவர்களை ஒப்பிடுவதனால் மட்டுமே முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு பொருள் கிடைக்கும். முழுமை அடைய தன்னை யாருடனும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வேறு யாரைப்போலவும் இல்லாமல் தனித் தன்மையுடன் கூடிய தன் உடலையும் மனதையும் போற்றி ஏற்றுக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெற்று விடலாம்.
வானவெளியில் தென்படும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவு ஒளியைச் சிந்தி அதனதன் பாதையில் வலம் வருகின்றன. முன்-பின், உயர்வு-தாழ்வு, வேகமானது-மெதுவானது என்பது போன்ற பாகுபாடுகளைச் செய்யாமல் அனைத்து நட்சத்திரங்களையும் அப்படியே நாம் ஏற்றுக்கொள்வது போல் நம்மையும் மற்றவர்களையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிழலிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஓடாமல், நிழல் வெறும் தோற்றம் என்பதை அறிந்து கொள்வதால் மட்டுமே நிம்மதி கிடைக்கும். அதுபோல வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பை நிறுத்தினால் மட்டுமே துன்பம் கலப்பில்லாத இன்பம் நமக்கு கிடைக்கும்.

பிச்சைபாத்திரத்தை கையில் ஏந்தி தெருத்தெருவாய் அலைந்து கொண்டிருந்த புத்தர்தான் உண்மையில் சக்ரவர்த்தி. ஏனெனில் அவருக்கு வேண்டியது என்று எதுவுமில்லை. மேலும், துன்பத்தைப் போக்கும் வழியை நாடி, மக்கள் அவரிடம் யாசித்துக் கொண்டு இருந்தார்கள். இன்னும் வேண்டும் என்று அலையும் மக்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்கள் ஏழைகளே.

துன்பங்களுக்குக் காரணம் ஆசை. ஆசைப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இந்த உலகமும் நானும் ஒன்றுதான் என்ற அறிவும் உலகில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையன என்ற அறிவும் ஏற்பட்டால் செயற்கையான துன்பத்தைத் தரும் ஆசைகள் ஏற்படாது. பிடித்துக்கொண்டிருக்கும் தூணை விட்டுவிட்டு துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம்.

பொதுவாக துன்பத்திலிருந்து விடுதலைப் பெற்றவுடன் இன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்து விடலாம். ஆனால், நம்முள் இருக்கும் இன்பத்தை அனுபவிக்கத் தேவையான  ‘புலன்களின் கூர்ந்து உணரும் திறனை’ (sensitivity) அதிகப்படுத்திக் கொள்ள சில காலம் ஆகும்.
   
கடவுளைச் சுவைக்க வேண்டும்.

உலகை அனுபவிப்பதைவிட அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் மக்களிடம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் நம் நாட்டை பார்த்து அனுபவிக்க இங்கே வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அவர்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இருப்பதை அனுபவிக்காமல் இல்லாததை அடையவேண்டும் என்ற ஆர்வம்தான் இதற்குக் காரணம்.

பொருள்களுக்கும் நமது ஐந்து புலன்களுக்கும் ஏற்படும் தொடர்பால் விளைவது அனுபவம். இன்னும் வேண்டும் என்ற ஆர்வம் நமது புலன்களை மரத்துப்போக வைக்கின்றது. இதனால் சுற்றி இருக்கும் உலகை அனுபவிக்க முடியாமல் புதிதாக ஏதேனும் வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

கடவுள்தான் உலகம். நமது ஐந்து புலன்களால் அனுபவிக்கும் அனைத்தும் கடவுளைத் தவிர வேறு எதுவும் இல்லை. தண்ணீர் குடிக்கும்போது கடவுளைத்தான்  சுவைக்கிறோம். ஆனல் பழச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை பருகி பழகிப்போன நாக்கு, வெறும் தண்ணீரின் சுவையை அறிவதில்லை. உலகில் உயிர்வாழ ஒரு கைபிடியளவு அரிசியும் குடிக்கத் தண்ணீர் மட்டும் போதும். இந்த நிறைவோடு நீரைக் குடித்தால் கடவுளின் சுவைத் தெரியும்.

கடலில் வாழும் மீன் கடல் நீரை அனுபவிப்பது இல்லை. அதை பிடித்து மணலில் போட்டு சிறிது நேரம் தவிக்கவிட்டு அதன்பின் கடலில் விட்டால் அது கடல் நீரை அனுபவிக்க ஆரம்பிக்கும். முக்தி அடைவது இதுபோல்தான். பரமன் என்ற வார்த்தைக்கு எங்கும் பரவியிருக்கும் அளவற்ற பெருமாள் என்று பொருள். இங்கே இப்போது நாம் அனுபவிப்பதுதான் கடவுள் என்பதை அறிய நமது புலன்கள் உணர்ச்சி உள்ளதாக இருக்கவேண்டும். ஆர்வமுடன் தேடி அலைவதைவிட அனுபவிப்பதுதான் முக்கியம் என்று உணர ஆரம்பித்தால் புலன்களின் கூர்ந்து உணரும் திறன் அதிகமாகும். அதன்பின், சுவாசிப்பது, நடப்பது, சுற்றியிருப்பதை பார்ப்பது என்பது போன்ற செயல்களிலேயே நாம் முழுமையான திருப்தியை அடைவோம். இன்பத்தைத் தேடி நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முக்தி என்பது முயற்சி செய்து எதிர்காலத்தில் அடைய வேண்டிய ஒன்று அல்ல. இங்கே, இப்போதே நாம் பெறும் அனுபவங்கள்தான் முடிவான ஆனந்தம் என்பதை அறிந்துக்கொள்வதுதான் முக்தி.

அறிவும் அனுபவமும்

சரியான அறிவுதான் நீடித்த இன்பத்திற்கு காரணம் என்றாலும் அறிவு நேரடியாக இன்பத்தைக் கொடுத்துவிடாது. சரியான அறிவுடன் புலன்களின் மூலம் உலகப்பொருள்களை அனுபவிப்பதாலேயே இன்பம் கிடைக்கும்.

உலக அறிவு இன்பத்தைக் கொடுக்காது என்பதால் வேதம் கூறும் அறிவை அடைய முயலும் முக்திவிழைவோர்களில் பலர் முக்தி அடைவதில்லை. வேதம் தரும் அறிவு கூட உலக அறிவைப்போல மனதளவில் ஏற்படுவதுதான். வாழ்வைப்பற்றிய வர்ணனையை மட்டுமே மனம் செய்து வருகிறது. முக்தி அடைய இந்த வர்ணனைதான் தடையாய் இருக்கிறது.

கணக்கை முறையாகப் போடாமல் புத்தகத்தின் இறுதியில் இருக்கும் விடைகளைப் பார்த்து எழுதுபவர்களைப் போல உலகை அனுபவிக்காமல், ‘நான் பரமன் என்று வேதம் கூறுகிறது’ என்று புத்தக அறிவைப் பெறுபவர்கள் இன்பம் அடைவது இல்லை. கைகளால் தொடும் அனைத்துப் பொருள்களையும் கடவுளாக அனுபவிப்பவர்கள்தான் வாழ்க்கை என்ற புதிரின் விடையை கண்டு பிடித்தவர்கள். இவர்களின் விடையை சரிபார்க்க மட்டுமே வேதங்களின் இறுதிக் கருத்து உதவும்.

முடிவுரை :

வாழ்வு என்பது ஒரு புதிர் அல்ல. அது ஒரு ஆத்ம அனுபவம். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு மதகுருமார்கள், தத்துவ ஞானிகள், அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுனர்கள் போன்றவர்கள் பலவிதமான பதில்களை கொடுத்து இருக்கிறார்கள். மனித இனத்தின் வரலாற்றைப் பார்த்தால் இந்த பதில்கள் ஒவ்வொன்றும் பல கேள்விகளை உருவாக்கி, மனித வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றியிருப்பது தெரியவரும்.

வாழ்க்கை மனம் சம்பந்தப்பட்டது அன்று. அது மனதிற்கு அப்பாற்பட்டது. வாழ்வு என்றால் என்ன என்பதை மனதால் புரிந்து கொள்ளவே முடியாது. புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் இன்பமாக வாழ்வதற்கு மனம் நமக்குத் தேவையில்லை.

ஞானம் (wisdom) என்பது புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்வது அல்ல. அது எந்தக் கேள்விக்கான பதிலும் இல்லை. கேள்விகள் எதுவும் இல்லாமல் ஆனந்தமாக இருக்கும் நிலையே ஞானம். வாழ்வில் அது ஒரு நிகழ்வு அல்ல. வாழ்வு முழுவதும் தொடரும் ஒரு ஆனந்த அனுபவம் அது.

இதைச்செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பது போன்று எந்த வித கட்டாயமும் இல்லாமல் சுதந்திரமாக இந்தக் கணம் நமக்கு ஏற்படுத்தும் அனைத்து அனுபவங்களையும் இனிமையாக அனுபவிப்பது மட்டுமே வாழ்வின் நோக்கம்.

மனிதன் நன்றிகெட்டவன். அவனது இனிய அனுபவத்திற்காக மட்டுமே இந்த பரந்த பிரபஞ்சம் காத்திருக்கிறது. உதிக்கும் சூரியனையோ, மலரும் மலரையோ, பறக்கும் பறவைகளையோ அவன் கவனிப்பதே கிடையாது. எங்கோ இருக்கும் சுவர்க்கத்திற்கு போகவேண்டும் என்ற ஆசை, எதிரே இருக்கும் உலகை அவன் கண்களில் இருந்து மறைத்து விடுகிறது. இந்த பிரம்மாண்டமான கனவு உலகில் இன்பமாக வாழ முதலில் விழிப்பு ஏற்படவேண்டும். இந்தக் கணத்தில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை முழுமையாக ஏற்று மகிழ்வதைத்தவிர வாழ்வில் வேறு நோக்கம் எதுவும் இல்லை. இந்த அறிவு மனதில் நிலைபெற்றபின்தான் அவனுக்கு நன்றியுணர்வு ஏற்படும்.

பறக்கும் பட்டாம்பூச்சியைத் துரத்தி ஓடும் குழந்தையைப் பார்த்து ‘நீ எதற்காக ஓடுகிறாய்?’ என்று கேட்டால் அது நம்மை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் பார்க்குமே தவிர பதில் சொல்லாது. வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்று நினைப்பவர்கள் பைத்தியக்காரர்கள்தான்.

நீ என்னை எதற்காக காதலிக்கிறாய் என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடிந்தால் அது காதல் அல்ல. அதுபோல் ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்பவர்கள் வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். காதலிப்பதுதான் குறிக்கோள். இந்தப் படைப்பு முழுவதையும் காதலிப்பதுதான் வாழ்க்கை.

ஆனந்தம் என்பது அடையப்பட வேண்டிய ஒன்று அல்ல. வாழ்வே ஆனந்தம். ஒவ்வொருக் கணமும் நமக்கு அளிக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கவிடாமல் தடை செய்வது நமது குறிக்கோள்கள். இறைவனின் ஆனந்தத் தாண்டவம் நம்மைச் சுற்றி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அந்த ஆனந்த மழையில் நனைய நாம் குழந்தையைப் போல எவ்வித குறிக்கோளும் இல்லாமல் விளையாட்டுத் தனமாய் இருக்க வேண்டும்.


பயிற்சிக்காக :

1.உலகம் துன்பம் தருவதாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

2. இயற்கைத் துன்பம் செயற்கைத் துன்பத்திலிருந்து எந்த வகையில் வேறு படுகிறது?

3.இன்பத்தை அடையும் வழி யாது?

4.கடவுளைச் சுவைக்க முடியுமா?

5. செயற்க்கையான துன்பத்தைத் தரும் ஆசையைத் தவிர்க்க நாம் பெற வேண்டிய இரு அறிவுகள் எவை?

சுயசிந்தனைக்காக :

1. “Vedanta: Seven steps to Samadhi”, “The voice of silence” என்ற ஓஷோவின் புத்தகங்களைப் படிக்கவும்.

2.இரு கைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் என்ற உதாரணத்தின் மூலம் கூறப்பட்ட இரண்டு கருத்துக்கள் யாவை?

3.குறிக்கோள்கள் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் எப்படி ஏற்படும்?

4. பெருமாள் என்ற பெயரின் பெயற்காரணத்தை ஆராய்க.