Friday, October 19, 2012

Lesson 177: The soul of the one who knows Saguna Brahman follows the rays of the sun and goes to Brahmaloka (Brahma Sutram - 4.2.18-19)


பாடம் 177: பிரம்மலோகத்துக்கு பயணம்
பாடல் 514-515 (IV.2.18-19)

இவ்வுலகில் இப்போது இன்பமாக இருக்க செய்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால், மரணத்துக்கு பின் பிரம்மலோகம் சென்று, அங்கேயாவது முக்தி அடையலாம் என்று நினைப்பவர்கள் உபாசகர்கள். இந்த நிலமைக்கு காரணம் என்ன என்பதை முற்றுணர்ந்தோர்களின் பார்வையில் இந்தப்பாடம் ஆராய்கிறது.

முதன்மை குறிக்கோளும் துணை குறிக்கோள்களும்

நடனக் காட்சியில் கதாநாயகியுடன் ஏராளமான துணை நடிகையர்கள் இருப்பது போல ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு முதன்மை குறிக்கோளும் பற்பல துணை குறிக்கோள்களும் இருக்கும். துணை நடிகைகள் கதாநாயகியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில்தான் நடனமிடுவார்கள். ஆனால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் துணை குறிக்கோள்களின் ஆதிக்கம் முதன்மை குறிக்கோளின் இருப்பையே மறைத்து விடுகிறது.

இன்பம் என்பதே வாழ்வின் முதன்மை குறிக்கோள். வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும், உலகில் யுத்தங்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தப்படவேண்டும் என்பது போன்ற ஏராளமான துணைக் குறிக்கோள்கள் மக்களின் வாழ்வில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த துணைக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற முயற்சியில் பெரும்பான்மையான மனிதர்கள் தங்கள் முதன்மை குறிக்கோளையே மறந்து விடுகிறார்கள்.

துணைக் குறிக்கோள்கள் முக்கியமானவை அல்ல என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்களை அறிந்து கொள்ள அவகாசம் இல்லாமல் வாழ்வு முழுவதும் துணைக் குறிக்கோள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அடைய போராடிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு முக்தி கிடைப்பதில்லை.

முதலாம் காரணம்: முகமற்ற உருவங்கள்

துணை நடிகையர்களில் ஒரு சிலர் கதாநாயகியின் அருகில் நடனமாடினாலும் அவர்களும் மற்றவர்களைப்போல் முகமற்ற உருவங்களே. அதுபோல வெவ்வேறு துணைக் குறிக்கோள்களில் ஒரு சில அவ்வப்போது நமக்கு இன்பத்தை தருவது போல தோன்றினாலும் அவை அனைத்தும் முக்கியமற்றவையே.

துணை நடிகையர்கள் இல்லாமல் கதாநாயகியால் தனித்து இயங்க முடியும். ஆனால் கதாநாயகி இல்லாமல் துணை நடிகைகளுக்கு திரைப்படத்தில் இடம் இல்லை. அதுபோல இன்பத்தைக்காரணம் காட்டியே அனைத்து துணை குறிக்கோள்களும் இருக்கின்றன.

துணைக் குறிக்கோள்கள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று முக்கியமானதாக தோன்றும் குறிக்கோள் நாளை மறக்கப்பட்டுவிடும். வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும் ஒரே குறிக்கோள் இன்பம் மட்டுமே. எனவே மற்றவை அனைத்தும் எவ்வித முக்கியத்துவமும் அற்றவை.  

இரண்டாம் காரணம்: எதிர்காலக் கனவு

துணைக்குறிக்கோள்கள் அனைத்தும் எதிர்காலத்தில் அடையப்படவேண்டியவை. ஆனால் எதிர்காலம் என்பது நமது கற்பனை. எனவே நிகழ்காலத்தில் இந்த குறிக்கோள்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடையாது. துணை நடிகையாய் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் என்றாவது கதாநாயகியாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல் உலகத்தை சொர்க்கமாக மாற்றிவிட்டால் அனைவரும் எப்போதும் இன்பமாக இருக்கலாம் என்பது போன்ற எதாவது ஒரு கனவு எல்லோர் மனதிலும் இருக்கும்.

சேர்ந்து நடனம் ஆடும் பல நடிகைகளில் ஒருவருக்கு கூட திரைக்கதையில் கதாநாயகியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இருக்கவே இருக்காது. அது போல துணைக் குறிக்கோள்களுக்கும் முதன்மை குறிக்கோளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

மூன்றாம் காரணம்: அவசியமற்ற அலங்காரம்

துணை நடிகையர் நிறைய பேர் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் திரைக்கதைக்கு இருப்பதில்லை. ஆனாலும் மக்கள் மனதில் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்த இது போன்ற பாடல் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறும். அது போல உலகில் தொடர்ந்து நிகழும் மாற்றங்களுக்கு துணைக்குறிக்கோள்கள் அவசியம் இல்லை. எனினும் மக்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க மாயை அவற்றை மக்கள் மனதில் உண்டாக்குகிறது.

ஒர் வீடு கட்டப்படுவதற்கு முன் அந்த வீட்டைப்பற்றிய நினைவு அலைகள் மனதில் தோன்றும். மனிதனால் உருவாக்கப்படும் அனைத்துப்பொருள்களும் பௌதீக உலகில் நுழைவதற்கு முன் மனித மனத்தினுள் எண்ணங்களாக தோன்றுகின்றன. இது, இந்த உலகம் என்னும் ஒளி-ஒலிக்காட்சி செயல்படும் விதம். எண்ணங்கள் தோன்றியபின் பொருள்கள் தோன்றுவதால் ‘செய்ய வேண்டும்’ என்பது போன்ற துணைக் குறிக்கோள்கள் மிக முக்கியமானதாக தோற்றம் அளிக்கின்றன.

நடக்கும் நாடகத்தை உண்மை என நம்ப வைப்பதற்காகவே, வெளி உலகில் நடக்கும் செயல்களுக்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் இது போன்ற ஒரு காரண காரிய உறவு இருப்பது போல தோன்றுகிறது. துணைக் குறிக்கோள்கள் இல்லாமலேயே நடக்க வேண்டியவை நடந்து கொண்டே இருக்கும்.

வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு தோன்றினாலும் ஒரு சிலரின் எண்ணங்கள் மட்டுமே செயலாக மாறுகின்றன. மேலும் வீடு கட்டுவேன் என்று நினைக்கவே இல்லை. எப்படியோ எல்லாம் கூடி வந்து,  இது நடந்து விட்டது.’ என்பது போன்ற அனுபவங்கள் ஒரு சிலருக்கு ஏற்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகளை ஆராய்ந்தால், தான் திட்டமிட்டு செயல் செய்வதால்தான் உலகம் இயங்குகிறது என்று மனிதன் நினைப்பது வெறும் பிரம்மை என்பது புரியும். வாழ்வில் குறிக்கோள்கள் அவசியமற்ற அலங்காரங்கள். மனிதர்கள் இந்த அலங்காரத்தில் மயங்கி முதன்மை குறிக்கோளை மறந்து விடுகிறார்கள். எதிர்கால குறிக்கோளுக்காக நிகழ்கால இன்பத்தை இவர்கள் தியாகம் செய்து விடுகிறார்கள்.

நான்காம் காரணம்: தொடர் ஓட்டப்பந்தையம்

தண்ணீர் குடிக்கும் செயல் தாகத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செய்யப்படுகிறது. இதுபோல மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் ஏதாவது ஒரு குறிக்கோளை அடைவதற்காகவே செய்கிறார்கள். எனவே வாழ்வில் குறிக்கோள்கள் முக்கியமானவையாக தோன்றுகின்றன.  

குறிக்கோள் என்பது எதிர்காலத்தில் அடையப்பட வேண்டியது. எதிர்காலம் நமது கற்பனை. வாழ்வு நிகழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே. நிகழ்காலமாக என்றும் இருப்பது இன்பம். குறிக்கோள்கள் மனிதனின் கவனத்தை எதிர்காலத்துக்கு திருப்பி நிகழ்கால இன்பத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன.

இந்த தொடர் ஓட்டத்திலிருந்து மக்களை விடுவிக்கவேபலனில் பற்று வைக்காதேஎன்று பகவான் கிருஷ்ணன் கீதையில் உபதேசம் செய்தான். இதை பின்பற்றினால் குறிக்கோள்களின் அவசியம் குறையும். ‘பலனில் பற்று வைக்காமல் செயல்களை ஒழுங்காகச் செய்கிறேன்’ என்ற எண்ணமும் பலனைக் கொடுக்காது.

தாகம் தீர வேண்டும் என்ற நோக்கத்தில் கவனம் செலுத்தாமல் தண்ணீர் குடிக்கும் செயலைச் செய்தாலும் நான் இப்போது தண்ணீரை எடுக்கிறேன்என்பது போன்ற வர்ணனைகள் நம்மை நிகழ்காலத்துக்குள் நுழையவிடுவதில்லை.

சிகரத்தின் மீது கொடியை ஏற்ற மலை மீது ஏறுபவர்கள், தொடர்ந்து ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வார்கள். சரியாக காலை கயிற்றின் மீது வைக்காவிட்டால் கீழே விழுந்து உயிர் போய்விடும் என்ற எண்ணம் கூட அவர்கள் மனதில் ஏற்படாது. மலை ஏறும் செயல் மட்டும் நடக்கும்.

நிகழ்காலத்தில் மட்டுமே இருந்த இன்ப அனுபவத்தை சிகரத்தை அடைந்ததும் மனம் அசைபோடுகிறது. இந்த இன்ப அனுபவம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று இன்னும் அதிக ஆபத்தான மலை மேல் ஏற ஆசை ஏற்படுகிறது. ஒரு சிறிய குன்றின் மேல் ஏறுவது எளிதாக இருக்கும் காரணத்தால் அதில் ஏறும்போது மனதில் வெவ்வேறு எண்ணங்கள் தோன்றும். எனவே மனம் நிகழ்காலத்தின் இன்பத்தை அனுபவிப்பதில்லை.

இதுபோல வாழ்விலும் முந்தையதை விட அதிக சிரமமான குறிக்கோளை கற்பித்துக் கொண்டு அதை அடைய வேண்டும் என்று மக்கள் தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

கேமராவின் முன் நடனமாடும் துணை நடிகைகள் சிறிது விலகும்போது கதாநாயகியின் முகம் சில நொடிகள் தென்படுவதைப்போல குறிக்கோள்கள் ஏற்படுத்தும் நெருக்கடி நம்மை சிறிது காலத்துக்கு நிகழ்கால இன்ப அனுபவத்தைப் பெற்றுத் தருகின்றன. எனவே குறிக்கோள்கள் முக்கியமானவை என்று நாம் தவறாக எண்ணிவிடுகிறோம். கேமராவை மறைக்கும் துணை நடிகைகள் இல்லாவிட்டால் கதாநாயகியின் முகம் மறையாது. அது போல் குறிக்கோள்கள் எதுவும் இல்லாவிட்டால் நாம் நிகழ்காலத்தில் தொடர்ந்து நாம் இன்பமாக இருக்கலாம்.

அனைவரும் தொடர்ந்து நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால் அவசியமில்லாத குறிக்கோள்கள் இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைத்து விட்டு அவ்வப்போது இன்ப அனுபவங்களை மக்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது. இன்னும் அதிக இன்பம் வேண்டும் என்று மேலும் கடினமான குறிக்கோளை முன்வைத்து அனைத்து மக்களும் தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.  

ஐந்தாம் காரணம்: போதை மருந்து

திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகளில் மனதை பறிக்கொடுப்பதன் மூலம் தங்கள் கவலைகளை மறந்து மக்கள் சிறிது நேரம் இன்பமாக இருக்கிறார்கள். இன்பம் எப்போதும் இருப்பது என்பதை அறியாமல் வாழ்க்கையில் அவ்வப்போது அதை அனுபவிக்கிறார்கள்.

வாழ்வின் முதன்மை குறிக்கோளான இன்பத்தை அடைய நாம் நிகழ்காலத்தில் மட்டும் வாழ்ந்தால் போதும். நிகழ்காலத்தில் வாழ்வது என்பது கடினமான காரியம் அல்ல. நம்மைச்சுற்றி நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் நமது உடலும் மனமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். அந்த இயக்கம் மாயா சக்தியின் இயக்கத்தில் ஒரு சிறிய பகுதி. எனவே, ‘இவை என் செயல்கள் அல்லது என் எண்ணங்கள்’ என்று சொந்தம் கொண்டாடி அவை எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானம் செய்யாமல் இருந்தாலே போதும்.

சுருக்கமாக சொல்வதென்றால் குறிக்கோள்கள் முக்கியமற்றவை என்பதை புரிந்து கொண்டாலே என்றும் நிகழ்காலத்தில் இருக்கலாம்.

இப்போது இருப்பதை மாற்றி அனைத்தும் நமக்கு விருப்பமான விதத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் குறிக்கோள்கள் இருக்கும். இவற்றில் சில அவ்வப்போது நிறைவேறும்போது சிறிது நேரம் இன்பம் ஏற்படும். போதை மருந்துக்கு அடிமை ஆவதைப்போல மக்கள் அனைவரும் தொடர்ந்து துணைக் குறிக்கோள்களை அடைய முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள்.

நிலையான இன்பத்தின் இருப்பை நிகழ்காலத்தில் அறியாமல் ‘எனக்கு மிட்டாய் வேண்டும்’ என்பதுபோன்ற குழந்தைத்தனமான குறிக்கோள்களை மனதில் வளர்த்துக்கொண்டு, அவை நிறைவேறும்போதுமட்டும் இன்ப அனுபவத்தை மக்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக இன்பம் வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை.

குறிக்கோள்கள் என்ற போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்றவர்களுக்கு மட்டுமே நிலையான இன்பம் கிடைக்கும்.

ஆறாம் காரணம்: துணை செய்வது

துணைக் குறிக்கோள்களை முதன்மை குறிக்கோளாக நினைப்பது மட்டுமே தவறு. வாழ்வில் துணைக்குறிக்கோள்களின் பங்கை அறிந்து அவற்றை உபயோகம் செய்ய வேண்டும். எதிர்காலம் என்பது கற்பனை என்பதால் அடுத்த வருடம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிடுவது தவறு அல்ல. தொடர்ந்து நிகழும் மாற்றங்களின் ஒரு பகுதியாக நமது மனதிலும் பற்பல குறிக்கோள்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அவற்றை துணைக் குறிக்கோள்கள் என்பதையும் அவற்றால் நமக்கு எவ்வித இன்பத்தையோ மன நிம்மதியையோ பெற்றுத்தர முடியாது என்பதையும் நாம் அறிந்து கொண்டால் போதும். இது போன்ற குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டாலும் அடைய முடியாவிட்டால் எவ்வித துக்கமோ ஏமாற்றமோ ஏற்படாது. ஒரு துணை நடிகை வேலைக்கு வரவில்லை என்பதால் இயக்குனர் வருத்தப்படப் போவதில்லை. ஒரு துணைக் குறிக்கோள் தோல்வி அடைந்துவிட்டால் மற்றொரு குறிக்கோளை முன் வைத்து செயல்களை தொடர்ந்து செய்யலாம். வெற்றி அடைந்தால் கூட வேறு ஒரு குறிக்கோளுக்காக வேலை செய்வது நின்று விடப் போவதில்லை. வாழ்நாள் முழுவதும் ஏதாவது செயல்கள் செய்து கொண்டுதான் இருப்போம். அந்த செயல்களை செய்வதற்கு ஏதாவது குறிக்கோள்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை எந்த வித முக்கியத்துவமும் அற்றவை.

ஏழாம் காரணம்: இருந்துவிட்டு போகட்டும்

திரைக்கதையை புரிந்து கொள்ள பாடல் காட்சிகளை மறக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. அதுபோல இன்பமாக நிகழ்காலத்தில் வாழ துணைக் குறிக்கோள்களை மறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. துணைக் குறிக்கோள்கள் முக்கியமற்றவை என்பதையும் அவற்றால் நம் இன்பம் பாதிக்கப் படுவதில்லை என்பதையும் புரிந்து கொண்டால் போதும்.

மாணவப்பருவம் முடியும்போது பற்பல கனவுகளுடன் வாழ்வைத் துவங்கினோம். நிறைவேறாத கனவுகளை நினைத்து ஏங்குவதில் பயனில்லை. ஏனெனில் அவை நிறைவேறியிருந்தாலும் நமது தற்போதைய நிலையில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஏனெனில் மனம் என்பது முழுமை அடைய வாய்ப்பே இல்லை. மரணம் வரை உடலும் மனமும் தொடர்ந்து மாறிக்கொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களில் குறிக்கோள்கள் என்பவை இயற்கையாக இணைந்து இருப்பவை. அவை நமது இன்பத்திற்கு காரணம் என்று நினைப்பது மட்டும்தான் தவறு.

எட்டாம் காரணம்: சமத்துவம்

துணைக் குறிக்கோள்களுக்குள் ஏற்றத் தாழ்வு கிடையாது. பொது நலத்துக்காக உழைப்பது சுயநலத்துக்காக உழைப்பதை விட மேலானது அல்ல. வெளி உலகை மாற்ற வேண்டும் என்று நினைப்பது மனதை மாற்ற வேண்டும் என்று முயல்வதை விட தாழ்ந்தது அல்ல. பணம் வேண்டும் என்று பாடுபடுவதும் பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்று உபாசனை செய்வதும் ஒன்றுதான்.

நிகழ்காலத்தில் மாறாமல் இருப்பது இன்பம். இப்போது இருக்கும் இருப்புக்கு மாற்றாக வேறு ஏதோ ஒன்று வேண்டும் என்று அனைத்து குறிக்கோள்களும் தவறாக அறிவுறுத்துவதால் அவை அனைத்தும் தவறானவை. அவற்றுள் ஏற்றத் தாழ்வு எதுவும் கிடையாது. ‘குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் நிகழ்காலத்தில் இருக்க முயற்சி செய்ய வேண்டும்என்ற குறிக்கோளும் முக்கியமற்றதே.  

ஒன்பதாம் காரணம்: இயற்கையின் செயல்பாடு

மொட்டு மலர்ந்து காய் தோன்றி பிறகு கனியாக மாறுவது இயற்கை. கனியாக மாறவேண்டும் என்ற குறிக்கோளோடு மொட்டு மலர்வதில்லை. பற்றுடையோன் முக்திவிழைவோனாக மாறி முற்றுணர்ந்தோனாக மாறுவதும் இயற்கை. சிலர் உபாசகர்களாக பிரம்மலோகம் செல்லவேண்டும் என்று ஆசைப்படுவதும் வேறு சிலர் இப்போதே இங்கேயே முக்தி அடைய வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்வதும் இயற்கையான மாற்றங்களில் அடங்கும். என்றும் மாறாமல் இருக்கும் இன்பம் இந்த மாற்றங்களின் ஆதாரம்.

பத்தாம் காரணம்: பொழுதுபோக்கு சாதனம்

திரைக்கதைக்கு அவசியம் இல்லாவிட்டாலும் ஒரு இனிமையான பொழுதுபோக்கு அம்சமாக துணை நடிகையர் சேர்ந்து நடனமாடும் ஒரு பாடல் படத்தில் சேர்க்கப் படும். அதுபோல வாழ்க்கைக்கு குறிக்கோள்கள் அவசியமில்லை என்றாலும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வாழ்க்கை சுவையாக இருக்க குறிக்கோள்கள் உதவுகின்றன. இதைச்செய்யப்போகிறேன் என்று தீர்மானம் செய்து செயல் செய்வது இன்றைய இன்பத்தை அனுபவிக்க நமக்கு உதவுகிறது.

முடிவுரை :

‘நான் யார்?’ என்ற கேள்விக்கான பதிலாக ஒரு கற்பனைக்கதை அனைவரது மனதிலும் இருக்கும். இந்த கதை முழுமை அடையவே அடையாது. கூடிய விரைவில் விரும்பியதை அடைந்து திருப்தியுடன் வாழலாம் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரது வாழ்வும் மரணம் வரை துன்பத்துடன் கூடியதாகவே இருக்கும். இந்த துன்பத்தில் இருந்து விடுதலை பெற பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் மனிதர்களின் எதிர்பார்ப்பு தொடரும்.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்போதும் இன்பமாக முற்றுணர்ந்தோர்கள் வாழ்வார்கள். இவர்கள் மனதில் இருக்கும் கற்பனைக்கதையும் முழுமை அடையாது. எனவே துணைக் குறிக்கோள்களை முன் வைத்து எதிர்காலத்தை நோக்கிய பயணமாகத்தான் முற்றுணர்ந்தோர்களின் வாழ்வும் அமையும். ஆனால் மற்றவர்களைப்போல் அல்லாமல் முற்றுணர்ந்தோர்கள் என்றும் இன்பமாக வாழ்வர். இதற்கு காரணம் மாயை செயல்படும் முறையை இவர்கள் அறிந்து இருப்பதுதான். ‘நான் பரமன்என்பதை அறிந்த இவர்கள் தங்கள் மனமும் உடலும் மாயை என்பதையும் அறிவார்கள். எனவே மனதில் தோன்றும் குறையுடன் கூடிய கற்பனைக்கதை, அதை நிறைவு செய்ய முயலும் துணைக் குறிக்கோள்கள், குறிக்கோள்களை அடைய செய்யப்படும் செயல்கள் ஆகியவை நடத்தும் நாடகத்தை மாறாத இன்பத்துடன் இவர்கள் அனுபவிப்பார்கள்.

பயிற்சிக்காக :

1. முதன்மை குறிக்கோள் எது?

2. துணைக் குறிக்கோள்கள் ஏன் முக்கியத்துவம் அற்றவை?

3. துணைக் குறிக்கோள்கள் முக்கியம் அற்றவை என்பதை அறிந்து கொள்வதால் என்ன பயன்?

சுயசிந்தனைக்காக :

1. குறிக்கோள்கள் இல்லாவிட்டால் செயல்கள் நின்றுவிடாதா?

2. மலை ஏறுபவர்கள் சில மணி நேரம் நிகழ்காலத்தில் இருந்து அனுபவிக்கும் இன்பமும் முற்றுணர்ந்தோர்கள் வாழ்வு முழுவதும் அனுபவிக்கும் இன்பமும் ஒன்றா?