Friday, October 12, 2012

Lesson 176:The soul of the knower of Saguna Brahman goes out through the Sushumna Nadi (Brahma Sutra 4.2.17)


பாடம் 176: சுஷும்னா நாடி வழியே உயிர் பிரியும்
பாடல் 513 (IV.2.17)

உபாசகர்கள் மரணமடையும்போது சுஷும்னா நாடி வழியே அவர்களது உயிர் உடலை விட்டுப்பிரியும் என்ற கருத்தை முக்தியடைந்தவர்களின் பார்வையில் ஆராய்ந்து அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை இந்தப்பாடம் எடுத்துரைக்கிறது.

அனைத்து உயிரினங்களும் தனது வெவ்வேறு வடிவங்கள் என்பதை அறிந்தவர்கள், இந்த உண்மையை எல்லோரும் அறியவேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கை. முற்றுணர்ந்தோர்களின் நியாயமான இந்த ஆசையை நிறைவேற்ற, ‘காலம்' என்ற மாயை அனுமதி தருவதில்லை. ‘எதிர்காலத்தில் நிச்சயம் முக்தி அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் மக்களுக்கு காலம் வெறும் கற்பனை என்று முற்றுணர்ந்தோர்கள் கூறுவது புரிவதில்லை.

தண்ணீரில் தெரியும் நிலவை பிடிக்க முயலும் அறியா பாலகனின் தவிப்பை பெற்றோர்களால் இரசிக்க மட்டுமே முடியும். நிலவைப் பிடிக்க அவனுக்கு உதவுவதோ அல்லது அதைப்பிடிக்க முடியாது என்று அவனுக்கு புரியவைக்கவோ இயலாது. வேண்டுமென்றால் நிலவை பிடிக்க அவனுக்கு உதவுவது போல பாவனை செய்யலாம். அப்படிச்செய்தால், சீக்கிரம் நிலவைப் பிடித்துவிடலாம் என்ற குழந்தையின் நம்பிக்கை அதிகமாகி, பின் ஏமாற்றமும் அதிகமாகும்.

சுஷும்னா நாடிவழியே உயிர் பிரியும் என்று எதிர்பார்க்கும் உபாசகர்கள், கூடிய விரைவில் முக்தி கிடைத்துவிடும் என்று நம்பும் முக்திவிழைவோர்கள், நிறைய சம்பாதித்தவுடன் நிம்மதியாக வாழலாம் என கனவு காணும் பற்றுடையோர்கள் ஆகிய அனைவரும் எதிர்காலம் என்ற கற்பனையை நோக்கி ஓடிக்கொண்டு இன்றைய வாழ்வின் இன்பத்தை அனுபவிப்பதில்லை. வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் இவர்களது நிலை பரிதாபத்துக்கு உரியது. எனினும் முற்றுணர்ந்தோர்களால் இவர்களின் தேடலை அன்புடன் இரசிக்க மட்டுமே முடியும். உதவ முடியாது. இவர்களது அறியாமை ஆரம்பம் முதல் ஆழமாக வளர்ந்திருப்பதை முற்றுணர்ந்தோர்கள் அறிவார்கள்.

அறியாமையின் ஆரம்பம்

‘குழந்தை பிறந்திருக்கிறது’ என்ற செய்தியை கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வி ‘ஆணா பெண்ணா?’ என்பதுதான். இதுபோல, பிறந்தது முதல் நிறம், பால், குலம், இனம், மதம், சாதி, மொழி, நாடு, வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அடையாளத்தை இந்த சமூகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. தான் யார் என்பதை அறியாத குழந்தையும் இந்த முத்திரைகளை உண்மை என நம்பி ஏற்றுக்கொள்கிறது.

அறியாமையால் சமூகம் செய்யும் இந்தக் கொடுமையின் தொடர்ச்சியாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை தங்களை அறியாமல் ஏற்படுத்துகிறார்கள். ‘உனக்கு இது போதாது, நீ வாழ்க்கையில் முன்னேற இன்னும் அதிகம் படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்’ என்பது போன்ற தவறான போதனைகளை மூலம் ‘நான் குறையுள்ளவன்’ என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் பதியவைக்கிறார்கள். 

பெரியவர்கள், சாதனையாளர்கள் ஆகியோரை முன்மாதிரியாக வைத்து என்றேனும் ஒருநாள் நான் அவர் போல ஆகிவிடவேண்டும் என்ற ஆசையுடன் அனைத்து குழந்தைகளும் வளருகிறார்கள். பள்ளித்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால்தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் தன்னைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குபவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. மூன்று வயதில் ஆரம்பிக்கும் இந்த ஓட்டப்பந்தயம் மரணம் வரைத் தொடரும் என்று மாணவர்களுக்கு தெரிவதில்லை.

எவ்வளவுதான் முயன்றாலும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்பதை மறைமுகமாக உணர்ந்தவுடன் பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் அவர்களை எதிர்த்துப் பேசும் பருவத்தை அடைகிறார்கள். பருவ உணர்ச்சிகளின் தாக்கம் அதிகமானவுடன், ‘என் வாழ்க்கையை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வாழ முடியாது. எனக்கு ஆத்மதிருப்தியை தரும் வேலைகளை மட்டும்தான் நான் செய்வேன்’ என்ற பாணியில் அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.

தங்களால் பெற முடியாத வெற்றியை தங்களது பிள்ளைகளாவது பெற்றுத் தருவார்கள் என்று காத்திருந்த பெற்றோர்களுக்கு, ‘கிளிக்கு இறக்கை முளைத்து விட்டது. வீட்டைவிட்டு பறந்து போகிறது’, என்று தங்கள் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

மற்றவர்கள் நினைப்பது போல அல்லாமல் தான் மாறுபட்டவன் என்பது மட்டும் இளைஞர்களுக்கு புரியுமே தவிர எந்த விதத்தில் தான் மாறுபட்டவன் என்பதை இவர்கள் அறிவதில்லை. தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை உலகுக்கு காட்ட அரைகுறையாக ஆடைகள் அணிந்து பெரியவர்களுக்கு புரியாத மொழியில் பேச ஆரம்பிப்பார்கள். இந்த நிலையில் ‘நான் யார்? என் ஆத்ம திருப்தி என்றால் என்ன? எதைச்செய்தால் நான் திருப்தியடைவேன்?’ என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்கள் மனதில் தொடரும்.
கற்பனைக்கதை

சிறு வயது முதல் பெற்றோர்களும் மற்றவர்களும் தன் மீது குத்திய முத்திரைகளில் சிலவற்றை ஏற்றும், பலவற்றை மறுத்தும் தான் யார் என்ற கற்பனைக்கதை ஒன்று இவர்கள் மனதில் இவர்களை அறியாமலேயே உருவாகி இருக்கும்பிடித்தவை, பிடிக்காதவை, தெரிந்தவை, தெரியாதவை, இருக்கும் குணங்கள், கிடைத்த பட்டம், பதவி போன்றவைகளை சேர்த்துக்கொண்டு இந்த கற்பனைக் கதை மேலும் வலுவாக வளரும்.

தன்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேரும்போது தன்னை ஒரு தனித்தன்மை உள்ளவராக காட்டிக்கொள்ளவே அனைவரும் முயல்வர். மேலும் தனக்கே திருப்தியில்லாத தன் கதையை எப்படியாவது மெருகேற்றி கேட்பவரை கவர்ந்து விட வேண்டும் என்ற முயற்சியும் தொடர்ந்து நடக்கும். ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் இந்த கற்பனைக்கதையை மற்றவர்கள் அறிய வாய்ப்பு இல்லை. எனவே அனைவரது கதைகளின் தன்மையும் அடிப்படையில் ஒன்றுதான் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

நான் யார்?’ என்ற கற்பனைக்கதையின் தன்மைகள்

முதலாம் தன்மை: ‘கடந்த கால நிகழ்வுகள்என்று மனதில் பதிவான தனிப்பட்ட நினைவுகளின் அடிப்படையில், தான் யார் என்ற கற்பனைக்கதையை அனைத்து மனிதர்களும் தங்கள் மனதில் வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.  இதற்கு விதிவிலக்கே கிடையாது.

பற்றுடையோர்கள் இந்தக் கற்பனைக்கதையை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். முக்திவிழைவோர்களுக்கு இது கற்பனைக்கதை என்று தெரிந்து இருந்தாலும் அதன் பிடியிலிருந்து தப்ப இயலாமல் தவித்துக்கொண்டு இருப்பார்கள். முற்றுணர்ந்தோர்கள் மனதில் கூட இந்தக்கற்பனைக்கதை இருக்கும் என்றாலும் அதை அவர்கள் உலகுடன் உறவாட மட்டும் பயன்படுத்துவார்கள்.

இரண்டாம் தன்மை: புத்தகங்களில் பதிவான கதைகளைப்போல அன்றி தான் யார் என்ற கற்பனைக்கதை அவரவர் மனதில் எண்ணக்குவியல்களாக இருக்கும். எனவே ஒவ்வொரு நொடியும் இந்த எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் நம்மைபற்றி நாம் எழுதிய நாட்குறிப்பை படித்தால் இந்த கற்பனைக்கதை எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை உணரலாம்.

மூன்றாம் தன்மை: இந்தக் கற்பனைக் கதையை உற்றுக்கவனித்தால் அது உருத்தெரியாமல் மறைந்துவிடும். நீர்வீழ்ச்சி, ஒரு பெரிய தூண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அதில் தொடர்ந்து நீர் விழுந்து கொண்டிருக்க வேண்டும். ஆறு வற்றிவிட்டால் நீர்வீழ்ச்சி மறைந்து விடும். அதுபோல நமது எண்ண ஓட்டங்கள் நின்றுவிட்டால் நான்என்ற கற்பனைக்கதை மறைந்துவிடும். எனவே, ‘நான்மடிந்துவிடாமல் இருக்க மனதில் எப்போதும் எதைப்பற்றியாவது சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும். இதனாலேயே யாராலும் சும்மா இருக்க முடிவதில்லை.

நான்காம் தன்மை: நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்டவன் என்ற தவறான அறிவுதான்நான்என்ற கற்பனைக்கதைக்கு ஆதாரம். எனவே நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களைப் பற்றிய கதைகளையும் சித்தரிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தன் ஐந்து புலன்களின் அனுபவத்துக்குள் வரும் அனைத்தையும் தனது சிற்றறிவினால் ஆராய்ந்து, தரம் பிரித்துஇது நல்லது’, ‘அவர் கெட்டவர்என்பது போன்ற முத்திரைகளைப்பதித்து உலகம் என்ற கற்பனைக்கதையையும் தொடர்ந்து வளர்த்து வருவார்கள்.

ஐந்தாம் தன்மை: ‘நான் யார்?’ என்ற அனைவரது கற்பனைக்கதையும் குறையுடன் கூடியதாகவே இருக்கும். விரும்பியவரை மணம் செய்துகொள்ள வாய்த்தால்தான் தன் சுயபுராணம்சுபம்என்று நிறைவு பெறும் என்பது போன்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். ‘சுபம்என்று கதை முடிவது திரைப்படங்களில் மட்டும்தான் என்பதை யாரும் அறிவதில்லை. குறையுடன் கூடிய தன் கற்பனைக் கதை நிச்சயம் எதிர்காலத்தில் நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் வாழ்க்கையில் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பார்கள். இதற்கு விதிவிலக்கு முற்றுணர்ந்தோர்கள் மட்டும்தான்.
நிறைய பணம் கிடைத்தால் தனது கற்பனைக்கதை முற்றுப்பெறும் என்று போராடுபவர்கள் பற்றுடையோர்கள். முக்தி அடைந்தால் இந்தப்போராட்டம் முடியும் என்று தவிப்பவர்கள் முக்திவிழைவோர்.

முற்றுணர்ந்தோர்களின் கற்பனைக்கதை கூட குறையுடன்தான் இருக்கும். மற்றவர்களைப்போல அவர்களும் இந்த குறையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் தான் செயல்படுவார்கள். ஆனால், தன் மாயா சக்தியின் வெளிப்பாடுதான் இந்தக்கதை என்பதையும் அது எப்போதும் நிறைவு அடையாது என்பதையும் அறிந்த காரணத்தால் அவர்களது வாழ்வு ஒரு போராட்டமாக இல்லாமல் விளையாட்டாக இருக்கும்.


நான் யார்?’ என்ற கற்பனைக்கதையின் செயல்கள்

முதலாம் செயல்: நிகழ்காலத்தை மறுத்தல்

நான் முழுமையானவனாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்கள் செய்வதால் நிகழ்காலம் என்பது எதிர்காலத்துக்கு செல்ல உதவும் ஒரு படிக்கட்டாக மட்டுமே அனைவராலும் கருதப்படுகிறது.

அனுபவங்களை அனுபவிக்காமல் அவை எவ்வளவு தூரம் தனது கற்பனைக் கதையை மெருகேற்றும் என்பதை மட்டும் கவனிப்பதால் பெரும்பாலும் நிகழ்காலத்தில் யாரும் வாழ்வதில்லை. தேடியது கிடைத்தபின் ஏற்படும் மகிழ்ச்சி ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். அதற்குள், இந்த வெற்றி எவ்வளவு தூரம் தன் கதையின் சுப முடிவை நோக்கிச் செல்ல உதவுகிறது, இதை ஆதாராமாகக் கொண்டு எந்த விதத்தில் நாம் இன்னும் முன்னேறலாம், இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற எண்ணங்கள் நிகழ்கால இன்பத்தை தடை செய்துவிடும்.

இரண்டாம் செயல்: காலப்பயணம் (Time Travel)

நேற்று கோபமாக பேசியவன் இன்று ஏன் புன்னகைக்கிறான், ஒருவேளை நமக்கு எதிராக ஏதாவது செய்யப்போகிறானோ?’ என்பது போன்ற எண்ணங்கள் நம்மை தொடர்ந்து கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே பயணம் செய்ய வைக்கும்.  எதை வெட்டலாம் அல்லது எதை ஒட்டலாம் என்று ஆராய்வதிலேயே கவனம் இருப்பதால், திரைப்படத் தொகுப்பாளர்கள் படத்தில் வரும் காட்சிகளை அனுபவிப்பதில்லை. அதுபோல நமது மனம் நிகழ்வுகளை தொடர்ந்து விமரிசனம் மட்டுமே செய்துவரும். தன்னை மறந்து நிகழ்வுகளுடன் ஒன்றுவது எப்போதாவது நடக்கும். அதுவும் வெகுநேரம் தொடர்வதில்லை.

மூன்றாம் செயல்: ஆட்சேபம்

உலகம் என்ற கற்பனைக்கதை நான் யார் என்ற கற்பனையின் முழுமைக்கு உதவும் வகையில் அமையவில்லை என்றால் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

நான்காம் செயல்: எதிர்காலத்தை நோக்கிய ஓட்டம்

நிகழ்காலத்தில் திருப்தியடையாமல் எதிர்காலத்தில் முழுமை அடையலாம் என்று ஏங்கும் மக்கள், எதையும் நிறுத்தி நிதானமாகச் செய்வதில்லை. காலம் போனால் வராது என்ற எண்ணத்துடன் எப்போதும் ஏதையாவது வேகமாக செய்து கொண்டு இருப்பார்கள். பயணம் செய்யும்போது தொலைபேசியில் பேசுவது, கணிணியில் வேலை செய்வது அல்லது குறைந்தபட்சம் செய்தித்தாள்களை வாசிப்பது என்று எப்படியாவது குறைந்த நேரத்தில் நிறைய வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவார்கள்.

ஐந்தாம் செயல்: தவறான அறிவு

உள்ளதை உள்ளபடி பார்க்கும் சக்தி பெரும்பாலான மக்களுக்கு இருப்பதில்லை. இதனால் தனக்கு எந்த வகையில் நன்மை ஏற்படும் என்ற குறுகிய நோக்கில்தான் உலகை இவர்கள் பார்ப்பார்கள். செடியில் பூத்திருக்கும் மலர் அழகாக இருப்பதை பொதுவாக கவனிப்பதில்லை. அப்படியே கவனித்தாலும் அதை பறித்து வீட்டை அலங்கரிக்கலாம் என்ற எண்ணம் உடனே ஏற்படும். எனவே ஒவ்வொருவர்க்கு உள்ளும் இருக்கும் இந்த கற்பனைக்கதை உலகை சரியான பார்வையுடன் பார்க்கும் சக்தியை மறைத்துவிடுகிறது.


நான் யார்?’ என்ற கற்பனைக்கதையின் விளைவுகள்

முதலாம் விளைவு: ஆசை

தனது திருப்தியின்மையை அகற்ற உலகில் உள்ள பொருள்கள் கிடைக்க வேண்டும் என்றோ அல்லது இறைவனின் கருணை வேண்டும் என்றோ ஏதோ ஒரு ஆசை எல்லோருக்கும் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விட்டால் பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசை நமது கற்பனைக்கதையின் விளைவு.  

குறை நிறையவே நிறையாது என்பதால் ஆசைகள் அடங்குவதே இல்லை. இதனால் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கி ஓடும் ஓட்டப்பந்தயம் வாழ்வின் இறுதிவரை தொடரும்.

இரண்டாம் விளைவு: பயம்

ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயமும் நிறைவேறிய பின் ஏற்படும் திருப்தி நிலைக்க வேண்டுமே என்ற ஏக்கமும் வாழ்வில் இருந்து கொண்டே இருக்கும். ஆசைகள் முடிவதில்லை என்பதால் அதனால் ஏற்படும் பயமும் ஒரு நாளும் முடிவுக்கு வராது.

மூன்றாம் விளைவு: துக்கம்

ஆசையும் பயமும் தொடர்ந்து மக்களை துன்பக்கடலில் ஆழ்த்திவிடும். நான் என்ற கற்பனைக்கதை மக்களின் வாழ்வுக்கு பொறுப்பு ஏற்று நடத்தும் வரை துன்பத்தை தவிர்க்க முடியாது.

நான்காம் விளைவு: இன்பமின்மை

இன்பம் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே இருப்பது. மனதில் தோன்றும் எண்ணங்கள் மக்களை இன்பமாக இருக்கவிடுவதில்லை.

ஐந்தாம் விளைவு: உலகின் மேல் நம்பிக்கையின்மை

தன் முன்னேற்றத்துக்கு தன்னை சுற்றியிருப்பவர்கள் தடையாய் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் அனைவரும் செயல்படுவார்கள். இதனாலேயே வாழ்க்கையை ஒரு போரட்டமாக தெரியும். உலகத்தை மாற்றினால்தான் தன் கதை சுபமாக முடியும் என்ற எண்ணத்துடன் நிகழ்காலத்தில் இருக்கும் நிலையை எப்படியாவது மாற்றிவிட இவர்கள் தொடர்ந்து முயல்வார்கள். இந்த முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை என்ற காரணத்தால் இவர்களுக்கு உலகின் மேல் இருக்கும் நம்பிக்கை வயதாக வயதாக குறைந்து, கடைசிகாலத்தில் இந்த உலகை விட்டு சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்ற ஏக்கம் ஏற்படும்.

முடிவுரை :

‘நான் பரமன்’, என்பதை அறியாத காரணத்தால் ஒவ்வொருவர் மனதிலும் நான்’ என்பதன் விளக்கமாக ஒரு கற்பனைக்கதை உருவாகி இருக்கும். கற்பனைகள் ஆளுக்குஆள் வேறுபட்டாலும் அடிப்படையில் யாருடைய கதையும் திருப்திகரமாக இருப்பதில்லை. தனது குறையை நிறைக்கும் பொருள் வெளி உலகில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்பார்கள். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளின் போது  அனுபவிக்கும் இன்பம் உலகிலிருந்து கிடைப்பதாக நினைத்து மேலும் வேகமாக நிலையான இன்பத்தை தேடி ஓடுவார்கள். இவ்வாறு வாழ்நாள் முழுவதும் தேடிவிட்டு வாழ்வின் இறுதி கட்டத்தில் சுஷும்னா நாடி வழியே தங்கள் உயிர்பிரியவேண்டும் என்று இறைவனை உபாசிப்பார்கள்.

ஓய்வைத்தேடி வேகமாக ஓடுபவனைப்போல நிகழ்காலத்தில் இருக்கும் இன்பத்தை தேடி எதிர்காலத்துக்கு ஓடும் மனிதர்களின் வாழ்க்கையை முற்றுணர்ந்தோர்களால் பார்த்து இரசிக்க முடியுமே தவிர உதவ முடியாது. ஓடுவதை நிறுத்தினாலே தேடுவதை பெற்று விடலாம் என்று அவர்கள் உபதேசம் கூறினாலும், ஓடுவதை நிறுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும்என்ற பாணியில் மக்களின் தேடல் தொடரும்.

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயன்று ஏமாறுவதைப் போல நிம்மதியும் மகிழ்வும் பொங்கித்ததும்பும் நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலம் என்ற கற்பனையை நோக்கி ஓடுவதே பெரும்பாலோரின் வாழ்க்கையாக அமைகிறது.

அனைவரும் முக்தி பெற்று இன்பமாக வாழும் உலகம் ஒன்றை ஏற்படுத்த முடியாது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள், நடக்கும் நாடகத்தில் தங்கள் பங்கை இன்பமாகச் செய்வார்கள்.


பயிற்சிக்காக :

1. கற்பனைக்கதை என்று குறிப்பிடப்படுவது எது?

2. இந்தக் கற்பனைக்கதை உருவாக காரணம் என்ன?

3. அதன் தன்மைகள் யாவை?

4. அதன் செயல்கள் யாவை?

5. அதன் விளைவுகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கற்பனைக்கதையை உருவாக்காமல் இருக்க முடியுமா?

2.உண்மையல்ல, வெறும் கற்பனைஎன்று தெரிந்த பின்னும் ஏன் துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ முடியவில்லை?

3. முக்திவிழைவோர்கள் முற்றுணர்ந்தோர்களாக மாற காலம் தேவையில்லையா?