பாடம் 178:
பயணம் நிச்சயம்
பாடல்
516-517
(IV.2.20-21)
உலகம் என்ற
விளையாட்டுத்திடலில் மாயையால் வடிவமைக்கப்பட்ட புதையல் வேட்டையே (Tresure
Hunt) வாழ்க்கை. அனைத்து மக்களும் பிறந்தது முதல்
இறக்கும் வரை பங்குபெறும் இந்தப் போட்டியில் மாயையால் மறைத்து வைக்கப்பட்ட புதையலை
கண்டுபிடித்தவர்களே வெற்றிபெற்றவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும்
தனிப்பட்ட ஒரு புதையல் இருக்கும் காரணத்தால் அனைவரும் வெற்றியடைவது சாத்தியமே.
எனினும் பெரும்பாலோர் வாழ்வு முழுவதும் தேடிவிட்டு மரணத்துக்கு பிறகாவது
புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கடைசி காலத்தை கழிக்கிறார்கள்.
போட்டியில் வெற்றிபெற்ற முற்றுணர்ந்தோர்கள், ‘நான்
பலவாக ஆகுவேனாக’ என்ற பரமனின் சங்கல்பத்தின் விளைவான இந்த விளையாட்டை
இன்பமாக விளையாடுவார்கள். மற்றவர்கள் புதையலை கண்டுபிடிக்க முடியாமல்
இருப்பதன் காரணங்களை இந்தப்பாடம் விவரிக்கிறது.
விளையாட்டின்
அமைப்பு
வெளிப்பார்வைக்கு
மிகவும் சிக்கலானதாகத் தெரியும் இந்த விளையாட்டு உண்மையில் மிக எளிமையானது.
ஏழுகடலைத்தாண்டி எரிமைலைக்குள் புகுந்து பாதாள பைரவியுடன் போராடும் சிந்துபாதின்
சாகசங்களை நாம் செய்யத் தேவையில்லை. அவரவர்களின் முதுகில் கட்டப்பட்டிருக்கும்
புதையலை எடுத்துக் கொள்வதுதான் விளையாட்டின் நோக்கம். இவ்வளவு எளிதானது என்பதை
அறியாமல் புதையலைத் தேடி மற்றவர்களின்
பின்னால் மக்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
வாழ்க்கையை
ஒரு போராட்டமாக பார்க்கும் மக்கள் இது இவ்வளவு எளிதான விளையாட்டாக இருக்கும் என்று
எதிர்பார்ப்பதில்லை. எனவே இந்த எளிமையான அமைப்பே விளையாட்டின் வெற்றிக்கு தடையாக
இருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்ல
அனாவசியமாக போராடியதை நினைத்து முற்றுணர்ந்தோர்கள் வெட்கப் படுவார்களே தவிர அதை
அவர்கள் ஒரு சாதனையாக கருதுவதில்லை.
விளையாட்டின்
நோக்கம்
‘எது
புதையல்?’, ‘அந்த புதையலை அடைவதால் என்ன பலன்?’, ‘புதையலை கண்டுபிடிக்காவிட்டால் என்ன ஆகும்? என்பது போன்ற
கேள்விகளுக்கான பதில் மக்களிடம் இருந்து மறைத்து வைக்கப்படவில்லை. அனைவருக்கும் புதையல் என்பது இன்பம் என்று சந்தேகம் இல்லாமல் தெரியும்.
மேலும் இன்பம் என்பது என்ன என்று தெரியாதவர்கள் யாரும் இல்லை.
அனைவரும் அவ்வப்போது இன்பமாக இருந்து அதன் அருமையை அறிந்தவர்களே.
ஆனால் விளையாட்டுப்போட்டியின்
ஆரம்பத்தில் விசில் சத்தம் கேட்டதும் ஓட ஆரம்பித்த காரணத்தால் நடப்பது ஓட்டப்பந்தையம்
அல்ல என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. சுற்றி
இருப்பவர்கள் அனைவரும் ஓடுவதால், இது என்ன விளையாட்டு என்று விசாரித்து
அறிய யாருக்கும் நேரம் இருப்பதில்லை.
எனவே புதையல்
வேட்டை என்ற விளையாட்டுக்குப் பதில் ஓட்டப்பந்தையம் என்ற விளையாட்டை எல்லோரும் விளையாடிக்கொண்டு
இருக்கிறார்கள். பந்தையத்தில் வெற்றி பெற்றுவிட்டால்
புதையல் கிடைத்துவிடும் என்ற அனுமானத்துடன் ஓடுபவர்களுக்கு மைதானத்தில் வெற்றிக்கோடு
வரையப்படவே இல்லை என்று தெரிவதில்லை. எனவே பெரும்பாலோர் சோர்வு
அடையும் வரை ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே சிறிது
காலம் ஓடிவிட்டு இதன் வெற்றிக்கோடு எங்கே இருக்கிறது?, வெற்றி
பெற்றால் புதையலை பரிசாக பெறலாம் என்ற அனுமானம் உண்மையா? என்பது
போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பிப்பார்கள்.
புதையலை கண்டுபிடிக்கத்
தேவையான புத்திக்கூர்மையும் விடாமுயற்சியும் உள்ளவர்கள் மட்டுமே ஓட்டப்பந்தையத்திற்கு
பதில் புதையல் வேட்டை என்ற விளையாட்டை விளையாட ஆரம்பிப்பார்கள்.
சரியான விளையாட்டை விளையாடாத காரணத்தால் பெரும்பாலோர் விளையாட்டில் வெற்றி
பெறுவதில்லை.
விளையாட்டில்
உதவி
ஒவ்வொருவருக்கும்
தனியாக ஒரு புதையல் இருப்பது உண்மை என்றாலும் அதை அடைய போட்டியில் வெற்றிபெற்றவருடைய
உதவி அனைவருக்கும் தேவை. ஆனால் பெரும்பான்மையானவர்கள் யாருடைய உதவியையும் கோருவதில்லை.
வாழ்வில் அனைவரும் வெற்றியடையலாம் என்பதை அறியாத காரணத்தால் இவர்கள் மற்றவர்களை சகபோட்டியாளர்களாக
கருதுவார்கள். மேலும் வெற்றி பெற்றவர்களை அடையாளம் காண்பதும் கடினம். எனவே
முற்றுணர்ந்தோர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உதவியை பெற்று வாழ்வில் வெற்றியை
நோக்கி முன்னேறுபவர்கள் மிகச்சிலரே.
கருத்தரங்குகளில்
பங்கேற்று தனது அறிவை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மனிதனின் துணைக்குறிக்கோள்களை
நிறைவேற்ற மட்டுமே உதவும். எப்போதும் இன்பமாக இருப்பது
எப்படி என்று முற்றுணர்ந்தோர்கள் காட்டும் வழிமுறைகளை நன்றாகப் படித்து அறிவை அதிகப்படுத்திக்கொள்வதால்
வாழ்வின் முதன்மை குறிக்கோளை அடைந்துவிட முடியாது. அடுத்த வருடம்
முக்தி அடைந்து விடலாம் என்ற எண்ணம் இப்போது அடைய வேண்டிய வெற்றியை தடை செய்து விடுகிறது.
எனவே முற்றுணர்ந்தோர்களும் தீர்க்கதரிசிகளும் செய்யும் உதவி பெரும்பான்மையான
மக்களுக்கு பயன் அளிப்பதில்லை.
விளையாட்டில்
எதிரி
போட்டியில்
வெற்றி அடைவதை தடுக்கும் ஒரே எதிரி அவரவர்கள் மனதில் உருவாகியிருக்கும் ‘நான்’
என்ற கற்பனைக்கதையே. தங்களின் துன்பத்துக்கு காரணம் வெளி உலகில் இருக்கிறது
என்றும் உலகை மாற்றி அமைத்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்ற கட்டுக்கதை இந்த
கற்பனையில் அடக்கம்.
தனது எதிரி
தனக்குள்ளேயே இருப்பதை அறியாத காரணத்தால் பலர் தொடர்ந்து வெளி உலகில் போராடிக்
கொண்டு இருக்கிறார்கள். இந்த எதிரியை அடையாளம்
காட்டுவதற்க்குத்தான் வாழ்வில் வெற்றிபெற்றவரின் உதவி தேவை. ஆனால் அனைத்து
பிரச்சனைகளையும் கூடிய விரைவில் தீர்த்து இன்பத்தை பெற்றுத்தருவேன் என்ற எதிரியின்
உறுதிமொழியை நம்பி பலர் வாழ்வு முழுவதும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வெற்றிக்குத்
தடை
‘இன்பம்
வேண்டும்’ என்ற முயற்சிதான் வெற்றிக்குத் தடை. இருப்பது இன்பம் மட்டும்தான். அது அடையப்பட வேண்டிய ஒன்று என்பது நமது கற்பனை. நாம் நம்மையே தேடிக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற இந்த போட்டியில் அங்கும் இங்கும்
ஓடி உலகப் பொருள்களில் இன்பத்தை தேடுவதில் பயன் இருக்காது. வேதங்களைப்படித்து
அதன் உபதேசங்களை பின்பற்றுவதாலும் பயன் இல்லை. எப்போது தேட வேண்டிய
அவசியம் இல்லை என்பதை உணருகிறோமோ அப்போதுதான் புதையல் நமக்கு கிடைக்கும்.
தான் இன்பமாக
இல்லை என்ற கற்பனை நான் என்ற உணர்வின் அடிப்படையில் இயங்க நம்மை அனுமதிப்பதில்லை.
நான் ஆனந்த மயமான பரமன் என்ற உண்மையை அறியவிடாமல் நான் என்ற கற்பனைக்
கதை மனதில் நிறைந்து இருப்பதால் இந்த விளையாட்டு பலகாலம் தொடர்ந்து நடக்கிறது.
வாழ்வில்
பிரச்சனைகளை தீர்த்துவிட்டால் இன்பம் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்புடன்
அனைவரும் போராடிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பிரச்சனை தீர்ந்தால் மற்றொரு பிரச்சனை
உருவாகும் காரணத்தால் இவர்களின் போராட்டம் முடிவதில்லை.
நிகழ்காலத்தில்
பிரச்சனைகள் என்று எதுவும் கிடையாது. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற
கற்பனையும் கடந்த காலத்தில் நினைத்தது நடக்கவில்லையே என்ற ஏக்கமும்தான்
பிரச்சனைகள். காலம் என்பதே கற்பனை என்பதால் வாழ்வில் பிரச்சனைகள் ஏதும் கிடையாது.
எல்லோரும் எல்லாமும் பெற்று இன்பமுடன் வாழ்வதற்கு தடையாய் இருப்பது மக்களின் மனமே.
பிரச்சனைகளை
உருவாக்குவதே ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் நான் என்ற கற்பனைக்கதைதான். பிரச்சனைகள்
ஏதும் இல்லாவிட்டால் அது மறைந்து விடும்.
உதாரணமாக
காதல்
வயப்பட்டு ஈருடல் ஓர் உயிராக வாழும் இருவர், தன்னை மறந்து எப்போதும் இன்பமாக இருப்பார்கள். ஆனால் இது வெகுநாட்களுக்கு தொடர்வது இல்லை. இதற்கு காரணம் அவர்களின்
மனம்.
உலகையே
மறந்து காதலில் மூழ்கி இருப்பவர்கள்கூட அலுவலகம் செல்வது, தினசரி வேலைகளை செய்வது
போன்ற செயல்களை ஒழுங்காகச் செய்வார்கள்.
வாழ்வு முழுவதும் இதுபோல் இன்பமாக இயங்குவது அனைவருக்கும் சாத்தியமே. போட்டியில்
பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்வதை தடை செய்வது அவர்கள் மனதில்
வளர்ந்திருக்கும் நான் என்ற கற்பனைக்கதை.
காதலர்களின்
இன்பத்துக்கு காரணம் அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதுதான். மனதால் நிகழ்காலத்துக்குள்
நுழையவே முடியாது. இன்பமாக இருக்கும் வரை
‘இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்ற
எண்ணம் மனதில் தோன்றாது. இன்பம் நீடித்தால் நான் என்ற
கற்பனைக்கதை வெறும் கற்பனை என்பது தெரிந்துவிடும். எனவே இன்ப அனுபவம் ஏற்படுத்திய மாறுதல்களை
மட்டுமே அறியும் மனம் தன் இருப்பை நிலை நாட்ட பிரச்சனைகளை உருவாக்குகிறது.
இன்ப
அனுபவத்தை கொடுக்கும் காதலரைத் தன்னுடன் வாழ்நாள்
முழுவதும் இருத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்ற பிரச்சனையை உருவாக்கி இன்ப அனுபவத்துக்கு
ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நான் என்ற கற்பனைக் கதை.
கனவில் ஏற்படும்
துன்ப அனுபவங்கள் சுகமாக மெத்தையில் தூங்கும் இன்ப அனுபவத்தை மறைத்துவிடுகின்றன.
அதேபோல ‘இன்று என்னுடன் இனிமையாக இருப்பவரை
என்றும் இப்படியே என்னுடன் இருத்திக்கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம்,
இன்று இருக்கும் இன்பத்தை தடுத்துவிடுகிறது.
மனிதர்கள்
நீடித்த இன்ப அனுபவம் பெறுவது காதலில் மூழ்கி இருக்கும் காலத்தில் மட்டும்தான்.
தேடியது கிடைத்தவுடன் ஏற்படும் மற்ற இன்ப அனுபவங்களை வெகு சீக்கிரம் நான் என்ற
கற்பனைக்கதை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
இப்போது
கிடைத்த இன்பத்தை எப்போதும் கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று பிரச்சனைகளை
உருவாக்கி, நிகழ்காலத்தை மறுத்து இல்லாத எதிர்காலத்துக்கு நம்மை இழுத்துச் செல்வது
நான் என்ற கற்பனைக்கதையே.
பிரச்சனைகள்
எதுவும் இல்லாவிட்டால், ‘போர் அடிக்கிறது’
என்ற வடிவில் ஒரு பிரச்சனையை உருவாக்கி நிகழ் காலத்தில் இன்பமாக வாழ்வதை இந்த கற்பனைக்
கதை தடை செய்துவிடும். பிரச்சனைகள்தான் நான் என்ற கற்பனைக்கதையின்
உயிர்நாடி. பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் நிகழ்காலத்தில் நிம்மதியாக
வாழ ஆரம்பித்துவிட்டால் நான் என்ற கற்பனைக்கதை முடிவுக்கு வந்துவிடும். எனவேதான் தன்னிடம் இருக்கும் குறையை சுற்றியிருக்கும் உலகத்தின் மீது ஏற்றி
வைத்து உலகத்தை மாற்றி அமைத்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்று இது நம்மை ஏமாற்றுகிறது.
உலகத்தை மாற்ற
வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கமும் அந்த ஆசை நிறைவேறினால் நான் உலகத்தில் இருந்து வேறுபட்டவன்
அல்ல என்பது தெரிந்துவிடும் என்ற பயம் மறுபக்கமும் தொடர்ந்து மனிதர்களை துன்பத்தில்
ஆழ்த்துகின்றன.
முற்றுணர்ந்தோர்கள்
இந்த எதிரியிடம் இருந்து நம்மை காப்பாற்ற வழி கூறினால் அதையும் ஒரு பிரச்சனையாக மாற்றி
எதிர்காலத்தில் தான் நிச்சயம் முக்தி அடைந்து விடுவேன் என்று நம்
கவனத்தை திசை திருப்பி நான் என்பதன் உண்மைப்பொருளை உணரவிடாமல் தடுப்பது இந்தக் கற்பனைக்
கதைதான்.
தான் வேறு உலகம்
வேறு என்ற பொய்யை உண்மை என்று நம்மை நம்பவைக்க இப்போது இருக்கும் அனைத்தையும் மறுத்து
இல்லாத எதிர்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதாக தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கும்
இந்தக் கற்பனைக் கதைதான் இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதை தடுக்கும் ஒரே தடை.
வெற்றிக்கு
வழி
துன்பத்துக்கு
காரணம் அறியாமை என்பதை விட அறியாமைதான் துன்பம் என்று நாம் உணர்ந்து கொண்டால் வெற்றி
நிச்சயம்.
நான் என்ற கற்பனைக்கதை, ‘நான் குறை உள்ளவன்’
என்ற பொய்யை கூறி, குறையை நிறை செய்ய நேரம் வேண்டும்
என்று எதிர்கால கற்பனையை உருவாக்கி, நாம் நிகழ்காலத்தில் அனுபவிக்கும்
இன்பத்திலிருந்து நமது கவனத்தை திசைத் திருப்புகிறது.
நாம் நாமாக
இருக்க எதுவும் செய்யத்தேவையில்லை. மாறாமல்
காலத்தைக் கடந்து எப்போதும் இருப்பதை எதிர்காலத்தில் தேடினால் கிடைக்காது. தேடுவதை நிறுத்தினாலே இப்போது இன்பமாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்வோம்.
ஆனால் அப்படி
நிகழ்ந்துவிடாமல் நம்மை தடுப்பது நான் என்ற கற்பனைக்கதை.
இப்போது அது குறையுடன் இருப்பதால் நாம் உடனே எதிர்காலத்துக்கு விரைந்து
செல்ல வேண்டும் என்று அது நம்மை வற்புறுத்தும். இந்த வற்புறுத்தலுக்கு
எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் நிம்மதியாக நாம் இருக்கலாம்.
இருப்பதை ஏற்றுக்கொள்வதை
கற்பனைக்கதை அனுமதிப்பதில்லை. எவ்வித முயற்சியும்
இல்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது தோல்வியில் முடியும் என்று அது கதை கட்டிவிடும்.
எனவே பல துணைக்குறிக்கோள்களை முன்வைத்து அவற்றை அடைய நாம் விரைந்து செயல்பட வேண்டும்
என்று அறிவுருத்தும்.
ஆனால் நிகழ்வுகள்
நிகழ மனம் அவசியமில்லை. இந்த பிரபஞ்சத்தின்
இயக்கத்தில் நமது மனதில் ஏற்படும் எண்ணங்களும் உடல் அளவில் செய்யப்படும் செயல்களும்
ஒரு பகுதியாகும். நான் செய்கிறேன் என்ற கற்பனையை கற்பனை என்று
உணர்ந்தவுடன் விளையாட்டில் வெற்றி கிடைத்துவிடும்.
இந்த விளையாட்டின்
அமைப்பு,
நோக்கம், எதிரி ஆகியவற்றை பற்றிய அறிவை பெறுவதுடன்
இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதே வெற்றிக்கு வழி. உணர்வது என்பது ‘இது வேண்டும், அது வேண்டாம்’ என்று பாகுபாடு செய்யாமல் இருக்கும் அனைத்தையும்
அப்படியே ஏற்றுக்கொள்வது. ‘இது தவறு. இன்பத்தை
அடைய நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்’ என்று நான் என்னும்
கற்பனைக் கதை உரத்த குரலில் கூவினாலும் அதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வெற்றியின்
ரகசியம். மனதில் நடமாடும் அனைத்து எண்ணங்களையும் உலகில் நடக்கும்
அனைத்து இயக்கங்களையும் இது இப்படி இருக்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
ஏற்றுக்கொள்பவர்களே இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.
பார்வை ஒன்றே
போதும்
விருப்பு வெறுப்பற்ற
பார்வை என்பது நான் பரமன் என்ற நிலையில் இருந்து ஏற்படுவது.
இந்தப்பார்வையை எப்படிப்பெறுவது என்ற கேள்வியை நான் என்ற கற்பனைக்கதை
எழுப்பி நமது கவனத்தை திசைத்திருப்ப முயலும். ஆனால் அந்த எண்ணத்தையும்
அப்படியே ஏற்றுக்கொண்டு அதை மாற்ற முயலாமல் இருந்தால் புதையல் நமக்கு கிடைத்துவிடும்.
புதையல் கிடைப்பது
என்பது மற்ற விளையாட்டுகளில் கிடைக்கும் வெற்றியைப் போலத்தான் நமக்கு இன்பத்தைத் தரும்.
ஆனால் எப்போதும் ஆனந்தமாக இருக்கும் வழி புதையல் கிடைத்தவுடன் நமக்கு
புரிபட்டுவிடும். நான்
என்ற கற்பனைக்கதையின் ஆரவாரத்துக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுக்காமல் அதை அப்படியே
ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்வோம். அடிப்படையில் எவ்வித மாற்றமும்
இல்லாத நாம் மேலெழுந்தவாரியாகத் தெரியும் மாற்றங்களை வேண்டும் வேண்டாம் என்று இனம்
பிரிக்காமல் ஏற்றுக்கொள்வதும் அவற்றுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இன்பமாக இருப்பவன்
நான் என்பதை உணர்வதும்தான் வாழ்க்கைப்போட்டியில் நாம் பெறும் வெற்றி.
வெற்றி பெற்றவுடன்
இயக்கங்கள் நின்றுவிடாது.
அனைத்தையும்
அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது முயற்சியின்மை அல்லது சோம்பேறித்தனத்தை குறிக்காது.
வாழ்வில் துணைக்குறிக்கோள்கள் எப்போதும்
இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவாரம் அமைச்சரை
சந்திக்க வேண்டும் என்று திட்டம் இடுவதும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் தொடர்ந்து
நடக்கும். ஆனால் நினைத்தது நடந்தால்தான் இன்பம் கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்பு இருக்காது. ஏனெனில் என்றும் இருக்கும் இன்பம் தான் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரம் என்ற அறிவு
மனதில் நிலைத்து இருக்கும். மேலும் மனதில் அவ்வப்போது நடமாடும்
நான் என்ற கற்பனைக்கதை காணாமல் போய்விடாது. ஆனால் அதன் ஆதிக்கத்தில்
இருந்து நாம் விடுதலைப்பெற்று இருப்போம்.
நான் ஆனந்தமான
பரமன் என்ற உணர்வுடன் நாம் செயலாற்றும்போது நான் என்ற கற்பனைக்கதையின்
‘நான் குறையுள்ளவன்’ என்ற கூப்பாடு எடுபடாது.
முடிவுரை
:
உலகம் என்ற விளையாட்டுத்திடலில்
இன்பம் என்ற புதையலை விரைவில் அடைந்து வாழ்வு முழுவதும் மக்கள் இன்பமாக இருக்க வேண்டும்
என்பதுதான் அனைத்து சமையங்களின் நோக்கம். மனதை சமைத்து மக்கள் உண்மையை உணர ஒவ்வொரு
மதமும் வெவ்வேறு வழிமுறைகளை வகுத்து இருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவை அனைத்தும்
நான் என்ற கற்பனைக்கதை உலகத்தின் இயக்கத்திற்கு காரணம் இல்லை என்பதைத்தான் போதிக்கின்றன.
வெளியுலகில் வேகமாக
தேடலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் மனதில் அலைபாயும் எண்ணங்களின் வேகத்தை குறைத்து
அமைதிப்படுத்துவதே அனைத்து வழிபாட்டு முறைகளின் அடிப்படை நோக்கம். தியானம் என்ற பயிற்சி
மூலம் நான் என்ற கற்பனைக்கதை மனதில் வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்ட அவை முயன்ற போதும்
பெரும்பான்மை மக்கள் மந்திரங்களின் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்து மந்திரங்களுக்கு
நடுவே இருக்கும் அமைதியை கவனிப்பதில்லை.
இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுப்பது,
நான் என்ற கற்பனைக்கதையின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே என்பதை அறியாமல் அந்த
கற்பனையை மேலும் மக்கள் வளர்த்திக்கொள்கிறார்கள். என்றும் இருக்கும் இறைவனின் அருளைப்
பெற்று மரணத்துக்குப்பின் அவனது சாம்ராஜ்ஜியத்தில் நுழைய வேண்டும் என்ற கற்பனை அவர்களை
ஆட்கொள்ளுகிறது.
எனவே, முக்தியை இப்போதே
அடையாமல் அதை நோக்கிப் பயணம் செய்வதுதான் இவர்களின் வாழ்க்கையாக அமையும். இந்த விளையாட்டை அதில் வெற்றிபெற்றவர்கள் மட்டும்
இன்பமாக அனுபவிப்பார்கள்.
பிரம்ம சூத்திரம்
நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தின் இயக்கத்தை பரமனின் லீலையாகப்
பார்த்து முற்றுணர்ந்தோர்கள் அனுபவிக்கும் இன்பத்தை விவரித்த நான்காவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி, இத்துடன் முற்று பெறுகிறது.
பயிற்சிக்காக
:
1. புதையல்
வேட்டை உவமை மூலம் இந்தப்பாடம் கூறிய கருத்து என்ன?
2. விளையாட்டின்
அமைப்பு யாது?
3. விளையாட்டின்
நோக்கம் எது?
4. விளையாட்டில்
உதவி அவசியமா?
5. விளையாட்டின்
எதிரி யார்?
6. வெற்றிக்குத்
தடையாய் இருப்பது எது?
7. வெற்றி
பெறும் வழி யாது?
8. வெற்றி
பெற்றபின் விளையாட்டு தொடருமா?
சுயசிந்தனைக்காக
:
1. முக்திவேண்டும்
என்று தீவிர ஆசை உள்ளவர்கள் முக்தி அடைவார்களா?
2. அறிவை
அடையாமல் முக்தி பெற முடியுமா?