பாடம் 169:
ஞானியின் மனம் அடங்கிவிடும்
பாடல்
499
(IV.2.3)
நான் பூரணமானவன்
என்ற அறிவு மனதின் நிறைவின்மையை மாற்றிவிடுவதால் ஞானியின் மனம் தேடல்களில் ஈடுபடாமல்
நமது அடிப்படை தன்மையான ஆனந்தத்தில் திளைத்து அடங்கியிருக்கும் என்ற கருத்தை இந்த பாடம்
தருகிறது.
உணர்வுடன் கூடிய
மனதை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்ற தவறான
அறிவுடன் வெளியுலகில் உழைக்கும் பற்றுடையோர்களின் முயற்சி தோல்வியில்தான் முடியும்.
சரிபாதியாக பிரித்து தருகிறேன் என்று இதில் ஒரு கடி அதில் ஒரு கடி என்று
அப்பம் முழுவதையும் குரங்கு சாப்பிட்டுவிட்டதால் ஏமாந்த பூனைகளைப்போல ஆனந்தமாக இருக்க
அமைதியை தொலைப்பதும் அமைதியாக இருந்தால் ஆனந்தத்தை தேட முயல்வதுமாக தொடர்ந்து போராடி
இவர்கள் வாழ்வில் ஏமாற்றமடைவார்கள்.
மனது உணர்வுடன்
கூடியதல்ல என்றும் அது வெறும் ஜடப்பொருள் என்றும் அறிபவர் முக்திவிழைவோர்கள்.
ஆனந்தத்தையும் அமைதியையும் வெளிஉலகில் தேடுவதை நிறுத்திவிட்டு தான் உணர்வு
மயமான பரமன் என்பதை அறிந்தால் மனதில் இன்பவெள்ளம் கரைபுரண்டோடும் என்ற எதிர்பார்ப்புடன்
வேதத்தை இவர்கள் தொடர்ந்து படிப்பார்கள். ஒரு சிலர் நான் பரமன்
என்ற அறிவை மனதில் நிலை நிறுத்துவதால் குறையாத மகிழ்ச்சியும் தடையில்லாத நிம்மதியும்
ஏற்படும் என்று தியானம் செய்வார்கள். உணர்வுமயமான நான் வேறு ஜடமான
மனம் வேறு என்ற அறிவு மனதில் நிலைபெறும்வரை இவர்களது தேடல் தொடரும்.
புறவுலகில்
அமைதியை தேடும் பற்றுடையோர்களும் அகவுலகில் ஆனந்தத்தை தேடும் முக்திவிழைவோர்களும் மனதின்
தன்மையை அறிவதில்லை. மாறும் உலகின் மாற்றங்களை
பிரதிபலிக்கும் மனம் மாறித்தான் ஆகவேண்டுமென்றும் மனதின் மாற்றம் மாறாத தன்னை பாதிப்பதில்லையென்றும்
முற்றுணர்ந்தோர்கள் அறிவதால் தங்கள் மனதின் நிலையைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
எனவே இவர்களது மனம் தனது மாற்றங்களை இயல்பாக ஏற்று அமைதியடையும்.
வேற்றுமையில்
ஒற்றுமை
பத்து வருடங்களுக்கு
முன் தன்னிடம் பயின்று பட்டம் பெற்ற பழைய மாணவர்கள் சிலரை பேராசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு
அழைத்திருந்தார். வந்த மாணவர்கள் அனைவருக்கும்
பொதுவாக ஒரு பெரிய குவளையில் தேனீரும் வெள்ளி, பீங்கான்,
கண்ணாடி என்று பலவகைப்பட்ட கோப்பைகளையும் கொண்டுவந்து தங்களுக்கு தேவையான
தேனீரை அவரவர் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
விலையுயர்ந்த
கோப்பைகளும் பார்வைக்கு அழகான கோப்பைகளும் முதலில் எடுக்கப்பட்டுவிட்டதால் கைப்பிடி
உடைந்தும் பழையதாகவும் காணப்பட்ட சில கோப்பைகள் கடைசிவரை எஞ்சியிருந்தன.
ஒவ்வொருவரின் கவனமும் மற்றவர் கையில் இருக்கும் கோப்பைகள் மீது இருந்தனவே
தவிர தான் பருகும் தேனீரில் இல்லை. கோப்பைகள்தான் வேறுபட்டவையே
தவிர பருகும் தேனீரில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை உணராதவர்கள் தன்னுடைய கோப்பையை
விட மற்றவரது கோப்பை நன்றாக இருப்பதை கண்டு பொறாமைகொண்டார்கள். ஒரு சிலர் சிறந்த கோப்பையை தேர்ந்தெடுத்த பெருமையுடன் மற்றவர்களை ஏளனத்துடன்
பார்த்து தேனீரை சுவைக்கத்தவறினார்கள்.
கோப்பையின்
உதவியில்லாமல் தேனீரை பருக முடியாது. ஆனால்
தேனீரைவிட கோப்பைதான் முக்கியமானது என்ற மனப்பக்குவமின்மை மாணவர்களிடம் பரவலாக காணப்படுவதை
அவர்களின் உரையாடல் சுட்டிக்காட்டியது. படித்த படிப்பு ஒன்றாக இருந்தாலும்
தங்களது பதவி, வருமானம், குடும்பம்,
செல்வாக்கு போன்றவற்றை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு தான் இன்னும் கொஞ்சம்
அதிகமாக வளர்ந்திருக்கலாம் என்ற ஏக்கம் அனைவரையும் பாதித்தது. தேனீரை உற்பத்தி செய்யும் திறன் கோப்பைக்கு கிடையாது. அது போல இன்பத்தை தரும் தகுதி வாழ்வின் வசதிகளுக்கு கிடையாது என்பதை யாரும்
உணரவில்லை.
நெய்தான் தொன்னைக்கு
ஆதாரம்.
வேறுபட்ட மனங்களுக்கு ஒன்றான உணர்வே ஆதாரம் என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களின்
மனம் அமைதியாயிருக்கும்.
ஒற்றுமையில்
வேற்றுமை
பேராசிரியர்
மாணவர்களுக்கு வழங்கியது தேனீர் மட்டுமே. குடித்துமுடித்தவுடன்
கீழேவைத்துவிட்டுதான் வீட்டுக்கு போகப்போகிறோம் என்பதை மறந்து கோப்பை தன்னுடையது என்று
சொந்தம் கொண்டாடும் அறியாமைதான் மாணவர்களின் துன்பத்திற்கு காரணம்.
அனைவரது தேனீரும்
ஒரே தன்மை வாய்ந்தது. அதுபோல் ஒவ்வொருவருக்கும்
சொந்தமானது ஒரே தன்மைவாய்ந்த இன்பம் மட்டுமே. கோப்பையின் தன்மையை
பொறுத்து தேனீரின் தரம் மாறாது. வாழ்க்கையின் தரம் இன்பத்தின்
அளவை நிர்ணயிக்காது.
அனைவருக்கும்
பொதுவான தேனீரை பருக அவரவருக்கு தனித்தனியே கோப்பை தேவை.
அதுபோல அனைவருக்கும் பொதுவான இன்பத்தை அனுபவிக்க மனமும் உடலும் ஒவ்வொருவருக்கும்
தனித்தனியாக தற்காலிகமாக கிடைக்கப்பட்டவை. கோப்பையின் மீது கவனம்
செலுத்தி பருகும் தேனீரின் சுவையை அனுபவிக்க தவறும் மாணவர்கள் போல பணம், பதவி, சுற்றம், நட்பு போன்றவற்றை
நாடி இன்பத்தை அனுபவிக்க பற்றுடையோர்கள் தவறிவிடுகிறார்கள். ஆளுக்கு
ஆள் வேறுபடுவது மட்டுமின்றி ஒருவரின் மனமே காலையில் இருப்பதுபோல் மாலையில் இல்லாமல்
தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். மாறுவது மனம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல்
அது நிலையான அமைதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாறுபவர்கள் முக்திவிழைவோர்கள்.
தன்னை மற்றவர்களுடன்
ஒப்பிட்டுக்கொள்ளாமல் இன்பமாக இருக்கும்பொழுது இருந்த அதே மனநிலை எப்பொழுதும் இருக்கவேண்டும்
என்றும் எதிர்பார்க்காமல் வாழும் முற்றுணர்ந்தோன் கோப்பையின் மீது கவனம் செலுத்தாமல்
தேனீரை அனுபவிப்பவனைப்போல தனது இயல்பான இன்பத்தில் திளைத்து மனதின் மாற்றங்களை மறுக்காமல்
ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வான். ஒன்றான உணர்வு
வேறான பொருள்களாகவும் மாறும் மனமாகவும் தோன்றுவதால்தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது
என்பதை இவன் அறிவான்.
படைப்பின்
இரகசியம்
உலகிலிருந்து
வேறுபட்ட தனிமனிதன் நான் என்று எண்ணும் பற்றுடையோர்கள் வாழ்வை ஒரு போராட்டமாகவும் மற்றவர்களை
சகபோட்டியாளர்களுமாகவும்
கருதுவதால்தான் அவர்களால் நிம்மதியாக வாழ முடிவதில்லை.
ஒன்றான பரமனே
பலவாக காட்சியளிக்கிறான் என்று அறிந்த முக்திவிழைவோன் படைப்பின் ஒருபகுதியான தனது மனம்
மட்டும் மாறாமல் இன்பமாக இருக்க வேண்டும் என்று போராடுவதால் அமைதியை அடைய முடிவதில்லை.
உலகில் படைக்கப்பட்ட
அனைத்து பொருள்களும் ஒன்றிலிருந்து ஒன்று வெகுவாக வேறுபட்டவை.
நமக்கு கிடைத்தது போன்ற ஒரு மனமும் உடலும் வேறு யாருக்கும் எப்பொழுதும்
கிடைக்காது. கிடைத்தற்கரிய இவ்விருபொருள்களை தற்காலிகமாக பெற்ற
நாம் அவற்றை வேறு மாதிரி மாற்றியமைக்க முயற்சி செய்து நேரத்தை வீணடிக்காமல் அவற்றில்
ஏற்படும் மாற்றங்களை அனுபவிப்பது புத்திசாலித்தனம்.
வெள்ளிகோப்பை
பார்க்க நன்றாக இருக்கிறது என்று மண்கோப்பையை வைத்திருப்பவனும் மண்கோப்பையில் தேனீர்
அதிக சுவையாய் இருக்கும் என்று தன் கையை சுடும் வெள்ளிக்கோப்பையை வைத்திருப்பவனும்
நினைப்பது போல மற்றவர்களிடம் இருப்பது தன்னிடம் இல்லாததுதான் தன் நிறைவின்மைக்கு காரணம்
என்று எண்ணி வருந்துபவர்கள், அனைவரிடமும் இருப்பது
ஒரே தேனீர் என்பதை அறிவதில்லை. அனைவரும் அனுபவிப்பது அவரவர்களின் உண்மை இயல்பான இன்பத்தைமட்டுமே என்பதை உணர்ந்த
முற்றுணர்ந்தோர்களின் மனம் வெளியுலக தோற்றங்களையும் மாற்றங்களையும் கண்டு மயங்காது.
மாறாத பரமன்
மாற்றங்களுடனும் ஏற்ற இறக்கங்களுடனும் காட்சியளிப்பது படைப்பின் இரகசியம்.
இந்த இரகசியத்தை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும்
ஏற்ற இறக்கங்களையும் அதை அனுபவிக்கும் மனதின் தொடர்ந்த மாற்றங்களையும் மாற்ற முயலாமல்
ஏற்றுக்கொண்டு வாழ்வை தொடர்ந்து அனுபவிப்பார்கள். உலகில் உள்ள
ஏற்றத்தாழ்வுகள் நீங்கி எல்லோரும் எல்லாமும் பெற்று என்றும் இன்பமுடன் வாழ்வார்கள்
என்ற எதிர்பார்ப்பு தவறு.
நிலையானதும்
நிலையற்றதும்
மரணத்தில் உணர்வுடன்
கூடிய மனம் உடலைவிட்டுபிரிவதால் உடல் நான் அல்ல என்றும் மனம் தான் நான் என்றும் நினைப்பவர்கள்
பற்றுடையோர்கள். ஜடமான மனம் பரமனை பிரதிபலிப்பதால்
உணர்வுடன் கூடியதாக தெரிகிறது என்று அறியும் முக்திவிழைவோர்கள் நிலையற்ற மனம் பரமனின்
நிலையான தன்மையை அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிலையான
உணர்வு மட்டுமே உண்மையில் இருக்கிறது என்றும் மனம் இருப்பதுபோல் தோன்றும் உலகின் ஒரு
பகுதி என்றும் அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் இன்பத்தில் ஆழ்ந்திருக்கும்.
கோப்பைக்கு
முக்கியத்துவம் கொடுத்து அனைவருக்கும் பொதுவான தேனீர் ஒன்றுதான் என்பதை உணராததைப்போல
வேறுபட்ட தோற்றங்களை கவனித்து ஒன்றான உணர்வுதான் பலவாக காணப்படுகிறது என்பதை கவனிக்க
தவறுவதால் மாற்றங்களை மற்றவர்களால் அனுபவிக்கமுடிவதில்லை.
ஒளிபரப்பு எதுவும்
இல்லாதபொழுது தொலைக்காட்சியில் தெரியும் கருப்பு வெள்ளை கலந்த புள்ளிகளின் நடனத்தில்
ஒரு உருவத்தை கற்பனை செய்து கொள்வதைப்போல் அணுத்துகள்களின் ஆட்டத்தில் உலகத்தின் இயக்கத்தை
பார்ப்பவர்கள் அறியாத மனிதர்கள். தினமும் அரை மணிநேரம்
பார்க்கும் தொலைக்காட்சி நாடகத்தின் பாத்திரங்கள் நாள்முழுவதும் வாழ்வதாக நம்பும் இவர்களுக்கு
நிஜவாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் கற்பனை வடிவங்கள்
என்பதை நம்புவது கடினம்.
மனப்பக்குவம்
ஏற்பட்டபின் ஆசிரியரின் துணையுடன் தன் அறிவுகூர்மையால் வேதத்தை ஆய்ந்து அறியும் முக்திவிழைவோர்கள்
கூட நான் பரமன் என்பதை வெறும் புத்தக அறிவாக ஏற்றுக்கொண்டிருப்பதால் தங்கள் மனம் கலக்கமடையும்
தருணங்களில் நிலையான நிம்மதி எப்பொழுது ஏற்படும் என்ற ஏக்கத்துடன் வாழ்நாளை கழிப்பார்கள்.
வார்த்தைக்கும்
மனதுக்கும் எட்டாத உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் தான் மாறும் மாயை என்பதை
உணர்ந்து அடங்கிவிடும்.
முடிவுரை
:
தான்
உடலும் மனதும் கொண்ட மனிதன் என்ற அறிவுடன் செயல்படும் வரை நிறைவின்மையை தவிர்க்க முடியாது. பரந்த உலகில் ஒரு சிலகாலம் வாழும் அற்பனாக தன்னை கருதும்
மக்கள் தங்களின் குறையை நிறைவு செய்ய எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறமாட்டார்கள்.
இவர்களின் உடலும் மனமும் இருப்பதாக தோன்றும் மாயையின் ஒருபகுதி என்பதால்
வெளியுலக மாற்றங்கள் மற்றும் மனதின் மாற்றங்கள் இவர்களுக்கு நிறைவைத்தராது.
நிறைவைபெற செய்யும் முயற்சி இவர்களின் அறியாமையை அகற்றாது. ஆசிரியரின் அடிபணிந்து வேதம்
படிப்பதன் மூலம் அறியாமையை முழுவதும் அகற்றிய முற்றுணர்ந்தோர்கள் மற்ற
மனிதர்களைப்போல பின்வரும் ஐந்து தவறுகளை செய்வதில்லை.
முதல்
தவறு: மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் இயல்பான ஆனந்தத்தை
அனுபவிக்க தவறுவது.
இரண்டாம்
தவறு: மனதை மாற்றி அதை என்றும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள
முயற்சி செய்வது.
மூன்றாம்
தவறு: மனம் எவ்வளவுதான் மாறினாலும் போதும் என்ற நிறைவு மனதிற்கு
ஏற்படாது என்பதை உணராதிருத்தல்.
நான்காம்
தவறு: மாறுதல்தான் படைப்பின் இரகசியம் என்பதை அறியாமல் மாறாத
இன்பத்தை மாறும் மனதில் எதிர்பார்ப்பது.
ஐந்தாம்
தவறு: மனது நம் விருப்பபடி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்
உலகையோ மனதையோ மாற்ற முயற்சி செய்வது.
அறிவுருவாகவும்
ஆனந்தமயமாகவும் மாறாமல் என்றும் இருப்பவன் நான் என்ற ஞானத்தில் நிலைத்து நிற்பதால்
ஞானியின் மனம் நிலத்தை சந்திக்கும் இடத்தில் அலைகளாக ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலைப்போல்
அமைதியுடன் அடங்கியிருக்கும்.
பயிற்சிக்காக
:
1. குரங்கு
அப்பத்தை பிரித்த கதையின் மூலம் ஆனந்தத்திற்கும் அமைதிக்கும் உள்ள உறவு எப்படி விளக்கப்பட்டது?
2. பற்றுடையோனின்
தேடலுக்கும் முற்றுணர்ந்தோனின் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
3. ஒற்றுமையில்
வேற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?
4. வேற்றுமையில்
ஒற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?
5. படைப்பின்
இரகசியம் என்ன?
6. ஞானியைத்தவிர
மற்றவர்கள் செய்யும் ஐந்து தவறுகள் யாவை?
சுயசிந்தனைக்காக
:
1. ஞானியின்
மனம் அடங்கிவிடுவதால் அவனை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?
2.தேடல்கள்
நின்றுவிடுவதால் ஞானியின் வாழ்வின் குறிக்கோள் எதுவாக இருக்கும்?
3.அலைகளின்
ஆரவாரத்துடன் கூடிய கடலை அமைதியானது என்று எப்படி வர்ணிக்க முடியும்?